மஹாராஜா
மஹாராஜா

மஹாராஜாவின் நெருடல்!

சென்ற மாத இறுதியில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஆர்.வி.உதயகுமார் உட்பட பலரின் நடிப்பில் வெளியானது கருடன்.

ஆதரவற்ற சூரியை சிறுவயதில் நட்பாகி, உடனேயே வைத்துப் பார்த்துக்கொள்கிறார்  உன்னி முகுந்தன். உன்னி முகுந்தனும் சசி குமாரும் டிகிரி தோஸ்த்கள். உன்னி முகுந்தனுக்கு அத்தனை விசுவாசமாக இருக்கும் சூரிக்கு ஒரு கட்டத்தில் நியாயமா விசுவாசமா, இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வருகிறது. எதனால் அந்தக் குழப்பம் என்ன செய்தார் சூரி என்பதே கருடன் படத்தின் கதை.

சூரிக்கு சொல்லிக்கொள்ளும்படியான இன்னொரு படம்.  முதலாளி விசுவாசத்தை தேனிக்கார உடல்மொழியில் அசலாகப் பிரதிபலித்திருக்கிறார். உன்னி முகுந்தன்,   சசிகுமார், சமுத்திரக்கனி என எல்லாருக்கும் சம வாய்ப்பிருக்கும்படியாக வெற்றிமாறன் கதைக்கு திரைக்கதை வடித்திருக்கிறார் துரை.செந்தில்குமார். யுவனின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம்.

முதல் வாரத்தில் வெப்பன் என்ற ஒரு படம் வெளியானது. சத்யராஜ், ராஜிவ்மேனன்லாம் இருக்கிறார்களே என்று போய்ப் பார்த்தால்...

சூப்பர் ஹ்யூமன்களைத் தேடி காட்சிப்படுத்த விழைகிறார் யூட்யூபர் வசந்த் ரவி. இன்னொரு குழுவும் சூப்பர் ஹ்யூமன்களைத் தேடுகிறது. அதன்பிறகு...

சரி, விளக்கிச் சொல்லும்படி படத்திலும் ஒன்றும் இல்லை. திரைக்கதையிலும் எந்த மெனக்கெடலும் இல்லை. இத்தனை நடிகர்களை இப்படி பாழடித்திருக்கிறார்களே என்ற வேதனைதான் மிஞ்சுகிறது,

அடுத்த வாரம் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியானது விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா.

தன் மகள் சிறுகுழந்தையாய் இருக்கையில் ஒரு விபத்திலிருந்து மகளின் உயிரைக் காப்பாற்றிய இரும்பு குப்பைத் தொட்டி காணவில்லை என்று புகார் கொடுக்க காவல் நிலையம் செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கே அவர் அலைக்கழிக்கப்பட, 'கண்டுபிடித்தால்  ஏழு லட்சம் தரேன்' என்கிறார். நட்டி நடராஜ், அருள்தாஸ், முனிஸ்காந்த் என்று போலீஸ் குழு கண்டுபிடிப்பது போல பாவனை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் விரியும் திரைக்கதை காணாமல் போனது குப்பைத்தொட்டிதானா என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இன்னொரு புறம் பகலில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து இரவில் கொள்ளைக்காரரர்களாக இருக்கும் அனுராக் காஷ்யப், வினோத் சாக்ர் கூட்டணி.

இடைவெளைக்குப் பிறகு அனுராக், விஜய் சேதுபதிக்கான தொடர்பு என்ன என்பதை ஒரு ஷாக்கிங் ட்விஸ்ட் மூலம் முடித்திருக்கிறார்கள்.

நல்ல திரைக்கதைதான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காட்சியை காட்சிப்படுத்திய விதமும், அதை சிங்கம் புலி விவரிக்கும் விதமும் அபத்தம். போலவே பெண் என்றால் யாருடைய பெண்ணாக இருந்தாலும் பெண் தான். அந்த இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்கு அந்த உணர்வு புரியாமல் மெச்சுகிற வகையிலான கதை... நெருடல்.

மூன்றாம் வாரம் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்கும ராஜா, பர்வேஷ் மெஹ்ரூ, வைரமாலா, ரமேஷ் வைத்யா நடிப்பில் வெளியானது ரயில்.

வடக்கன் என்று முதலில் பெயர் வைக்கப்பட்டு, பிறகு சென்சார் போர்டின் தலையீட்டல் ரயில் ஆகியிருக்கிறது படம்.

எப்போதும் குடிபோதையில் சுற்றுகிறார்  குங்குமராஜ். இதனால் வேலை சரியாகக் கிடைக்காமல் போக, எதிர் வீட்டில் குடிவரும் வடமாநிலத்தவரான பர்வேஷ் மீது கோபம் திரும்புகிறது. அவரால் ஒட்டுமொத்த வடமாநிலத்தவர்களையே வெறுப்பாகப் பார்க்கிறார் குங்குமராஜ். இருவருக்குமான பகை, இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

இன்றைய சூழலுக்குத் தேவையான கதை. நாயகனும் ரமேஷ் வைத்யாவும் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. ஜனனி இசையில், ரமேஷ் வைத்யா வரிகளில்  பூ பூக்குது நெஞ்சை வருடுகிறது. உணர்வு பூர்வமான காட்சிகளின் பின்னணி இசையிலும் சோபிக்கிறார் இசையமைப்பாளர்.

ஆனால் இதுதான் கதை என்று நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தபிறகான காட்சிகளில், அழுத்தமில்லாமல் இருப்பது படத்தின் வேகத்தை கொஞ்சம் மட்டுப்படுத்துகிறது. அதேபோல புலம்பெயர்ந்தவர்களை நியாயப்படுத்த வலிந்து சிலவற்றை மட்டுமே மேலோட்டமாக பேசிச் சொல்கிறதோ என்பதும் நெருடல்.

வசனங்களில் பாஸ்கர் சக்தி பளிச்சென்று தெரிகிறார். போதை, அடிதடி, ரத்தம் என்ற எதுவும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைக் கொடுத்த குழுவுக்கு அடுத்த படத்தை இன்னும் மெருகேற்றிக் கொடுக்கும் ஊக்கத்தை நம் பாராட்டின் மூலம் கொடுக்கலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com