சா… சா…
ரீ… ரீ…
கா… கா…
பா… பா…
சரிக… சரிக…
ஹார்மோனியம் : சரிசரி கபகரி சரிகா…
சரிசரி கபகரி சரிகா…
ஆண் குரல் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
ஹார்மோனியத்தின் ஒலி மிக சன்னமாகக் கேட்டது. மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் யாரோ வாசிப்பது போலத் தோன்றியது. அக்கம் பக்கத்து வீட்டில் யாரேனும் சப்தம் கேட்டு சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சம் தொனித்தது. வருணும், சதீஷும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தலையசைத்தனர். இருப்பினும் தயக்கத்துடன் அந்த வீட்டின் வாசலருகிலேயே நின்றனர்.
வழிப்போக்கன் ஒருவர் இவர்களருகே வந்து “யாருப்பா நீங்க என்ன வேணும்?” என்று கேட்டதும் சற்றே திடுக்கிட்டுப் போனார்கள்.
“நாங்க மண்ணச்சநல்லூர்லேர்ந்து வர்றோம்.. துறையூர் காதர் பாட்சா வீடு இதுதானே?”
“ஆர்மோனியம் காதர்தானே? இந்த வீடுதான்.. தம்பி உள்ள போனீங்கன்னா கொஞ்சம் சத்தத்தை குறைச்சு பொட்டி போட சொல்லுங்க. காது கிழியுது சாமி”
இருவரும் தலையாட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். வாசல் இரும்புக்கதவு பலநாள் எண்ணெய்க் காணாத வலியை பெரும் முனகலோடு தெரிவித்தது. கதவின் கடூர சத்தம் கேட்டதும், ஹார்மோனிய இசை சட்டென்று நின்றது. வெள்ளை பைஜாமாவும், கை வைத்த பனியனும் அணிந்த முதியவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். கண்களை இடுக்கிக்கொண்டு இருவரையும் பார்த்தார்.
அவரைப் பார்த்ததும் புரிந்தது. அவரது வெண்ணிறத் தாடியும், வெள்ளைக் குல்லாவும் அவர்தான் காதர் என்று உணர்த்தியது. கழுத்தில் கருப்பு வண்ண தாயத்து இங்கும் அங்குமாக ஆடியது. “வாங்க” என்றார் யாரென்று தெரியாமலே... இருவரும் வணங்கினார்கள்.
“உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு தள்ளாட்ட நடையுடன் உள்ளே சென்றார். இருவரும் சற்று தயங்கி அவருக்குப் பின்னே வீட்டுக்குள் சென்றனர்.
“நாங்க மண்ணச்சநல்லூர்”
“அப்படியா உக்காருங்க. யார் சொல்லி இங்க வந்தீங்க?” என்று கேட்டபடி இரண்டு நாற்காலிகளை அவர்கள் பக்கம் தள்ளி வைத்தார்.
“அரசன்தான் உங்க விலாசம் கொடுத்தார். நீங்க ஃபோன் வச்சிக்க மாட்டீங்களாமே”
“ஆமா நம்மளை கூப்புட யாரும் இல்லை தம்பி.. இனிமே அல்லா கூப்புட்டாத்தான் உண்டு. அரசன்னா நெய்வேலியில இருக்காரே அவருதானே?” என்றபடி தரையில் அமர்ந்தார். அவர் அருகே அந்த ஹார்மோனியம் இருந்தது.
”ஆமா.. அய்யா... என்ன நீங்க கீழ உக்கார்றீங்க?” என்று பதறி எழுந்தார்கள்.
“நம்ம ஹார்மோனியம் கீழத்தானே உக்காந்திருக்கு,, அது தரையில இருக்கறப்ப அதுக்கும் மேலே எதிலேயும் நான் உக்கார்றது இல்லை. வாசிக்கும்போது மட்டும் கீழ இருக்கும். அப்புறம் அதோ அந்த டேபிள் மேல தூக்கி வெச்சிருவேன்.”
என்ன செய்வது? நாற்காலியில் உக்காரலாமா, வேண்டாமா என்கிற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது.
“அட, நீங்க உக்காருங்க.. நீங்க விருந்தாளிங்க... அதுவுமில்லாம நீங்க வாசிக்கிற ஆளுக இல்லையே” என்றதும் இருவரும் அமர்ந்தார்கள். சூரியன் மூவரையும் நோட்டமிட்டபடி மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது. அதன் ஆரஞ்சு வெய்யில் அறையின் உள்ளே அரை வட்டத்தில் விழுந்திருந்தது.
“அரசன் எனக்கு ரொம்ப நாள் பழக்கம். ஊர்ல, பக்கத்துல விசேஷம், திருவிழான்னா நடராஜன் நாடக சபா ஆளுங்களைத்தான் கூப்பிடுவார். நடராஜன் தெரியுமா உங்களுக்கு? ராஜபார்ட் நடராஜன்னா அப்ப தென்னாற்காடு, வடாற்காடு ஜில்லா முழுக்க பிரபலம். நடராஜன் ட்ரூப் எங்க போனாலும் நான்தான் ஆர்மோனியம் போடுறது” என்றவர் உள்ளே சென்று இரண்டு தம்ளர்களில் டீ எடுத்துவந்தார்.
“அரசன் அண்ணன் சொன்னாங்க உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடாம வெளியே அனுப்ப மாட்டீங்கன்னு.”
“ஆமா அரசன் வந்தாருன்னா பாத்திமா ஒண்ணும் கேக்கமாட்டாக. அவரு என்ன விரும்பி சாப்பிடுவாருன்னு தெரியும். அடுப்படியில் அதுபாட்டுக்கு சமையல் ஆயிடும். பாத்திமா இப்ப இல்லை ஆறு வருசத்துக்கு முன்னால மவுத் ஆயிட்டாக.. அதுக்கப்புறத்துலேர்ந்து டீ காபி, சாப்பாடு எல்லாம் நமக்கு வெளியில கடையிலதான். இந்தாங்க சாப்பிடுங்க. பிளாஸ்க்குல வாங்கி வச்சுருவேன்”
“எதுக்கு அத்தா உங்களுக்கு சிரமம்? அரசன் உங்களை ‘அத்தா’ அப்படின்னுதான் கூப்பிடுவேன்னு சொன்னாரு”
“நீங்களும் அப்படியே கூப்பிடுங்க.. எங்களுக்கு பிள்ளை பொறக்கலை. ஆனா எங்களுக்கு தமிழ்நாடு முச்சூடும், நூறு நூத்தம்பது பிள்ளைக உண்டு.. பெத்த பிள்ளை இருந்தா ஒத்தை வீடு. நமக்கு எல்லா ஊர்லேயும் வீடு இருக்குன்னு பாத்திமா சொல்லும்”
அரசன் கிளம்பும்போது நினைவூட்டிய விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. காதருக்கு உலகத்தில் பிடித்த சொற்கள் இரண்டு ஒன்று ஆர்மோனியம் மற்றொன்று பாத்திமா. ஆகவே அவரிடம் எது கேட்கும் முன்பாகவும் ஹார்மோனியத்தைப் பற்றி எதையாவது தெரிந்ததைக் கேளுங்கள். அவர் ஹார்மோனியம் பற்றி தெரியாததை எல்லாம் சொல்வார் அதே போல் ஏதாவது சாப்பிடக்கொடுத்தால் நாகரீகம் பார்த்து தட்டில் வைத்துவிட்டு வந்து விடாதீர்கள். எதைக் கொடுத்தாலும் ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள் மிச்சம் வைத்தால் அதை அவமானமாகக் கருதுவார் என்று எச்சரித்து அனுப்பினார்.
“டீ அருமையா இருக்கு அத்தா”
“இது சுடுதண்ணி தம்பி.. பாத்திமா போடுற டீ குடிச்சீங்கன்னா அப்புறம் வேற எதையும் டீன்னு சொல்ல மாட்டீங்க... அமிர்தம்... தேவாமிர்தம் அப்படின்னு சொல்வாங்களே அதான் அது”
“அடடா எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லாம போச்சு”
“அதை விடுங்க நீங்க என்ன விஷயமா வந்தீங்க?”
“அத்தா இந்த ஹார்மோனியம் பார்க்க ரொம்ப வெயிட்டா இருக்கும் போல இருக்கே... இதை நீங்க தூக்கி கழுத்துல மாட்டிக்கிட்டு, ஆடிக்கிட்டே வாசிப்பீங்களாம்”
“சிவதாண்டவம் நாடகத்துல உச்சபட்சமே ருத்ரதாண்டவம்தானே.. தபலா, கொம்பு, தவில், நாதஸ்வரம் இப்படி எல்லாருமே ஒட்டுக்கா நின்னுக்கிட்டுத்தான் வாசிப்போம். இது எங்க கொழந்தை தம்பி... குழந்தைங்க நமக்கு வெயிட்டா தோணுமா?”
“இதை வாங்கி எத்தனை வருஷம் இருக்கும்?”
‘அது ஆயிடுச்சு நாப்பது, நாப்பத்தி அஞ்சு வருஷம். கோயம்புத்தூர்ல பொன்னையா ஆசாரின்னு ஒருத்தர் இருந்தார். அவருதான் தயார் பண்ணிகொடுப்பார். இப்பவும் இத ரிப்பேர் பண்ண இங்க யாருமில்லே நாகர்கோயில்ல கணேசன்னு ஒருத்தர் இருக்கார் அவருதான் எப்பேர்ப்பட்ட ரிப்பேர்னாலும், சரி பண்ணி கொடுப்பார்.. பவுனு மாதிரி இதை பத்திரமா வெச்சிருக்கேன் என்றவர் ஹார்மோனியத்தை தன் பக்கம் எடுத்து வைத்துக் கொண்டார். மெல்ல அதில் சுருதி சேர்த்தார்.
“மத்த வாத்தியமெல்லாம் பார்க்கும்போது இங்கேர்ந்துதான் ஒலி வருதுன்னு புரியாது ஆனா இந்த ஹார்மோனியத்துல மட்டும் எப்படி சவுண்ட் வருதுன்னு புரிய மாட்டேங்குது அத்தா”
“இது கொஞ்சம் புரிபடாது. ஆர்மோனியம் அப்படிங்கறது கையால் பம்ப் செய்றதுனால சவுண்ட் வரக்கூடிய இசைக்கருவி. இதோ இந்தா இருக்குல்லே இது வெளிப்புற நாணல்... பம்ப் செய்யும் போது உள்ள இருக்குற நாணல் ஊதி, கருவிக்குள் காத்து அழுத்தத்தை உண்டாக்கும். விசைப்பலகைக்கு கீழ இரண்டு அறைங்க இருக்கும், அதுல இரண்டு வரிசை பித்தளை நாணல்கள், ஒரு நம்பர் கேப்புல ஒவ்வொரு சாவியின் கீழேயும் ஒரு ஜோடி நாணல்கள் இருக்கும்.
முன்பக்கம் உள்ள காத்து நிறுத்தக் குமிழ்கள் இருக்கே, அதுங்க அந்த ஒவ்வொரு அறைக்குள்ளேயும் காத்து ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும். இந்த விசையை அழுத்துனா, நாணல்களுக்கு மேலே உள்ள துளைகள் திறந்துக்கும், அப்புறம் உள் துருத்திகளிலிருந்து நாணல்களைக் கடந்து காத்து குப்புன்னு வரும். இதனால அதிரும் அதுவே ஒலியை உருவாக்கும். வெளிப்புற துருத்திங்களை பம்ப் செய்றதால காத்து அழுத்தத்தை கண்ட்ரோல்ல வச்சிக்கிட்டா ஒலியும் அப்படியே இருக்கும். இருந்தாலும், இந்தச் சாவியை நிறுத்தினா, ஒலியும் உடனே நின்னுடும் இந்த காரணத்துக்காக, ஹார்மோனியம் வாசிக்கிறவங்க பெரும்பாலான நேரங்களில் ஒரு சாவியையாவது குறைந்தபட்சம் கீழே வைத்திருப்பாங்க.. ரொம்ப சுலபம் புரியுதா?”
“சத்தியமா புரியவே இல்லை அத்தா. ஆனா ஒரு விஷயம் புரியுது அத்தா.. நீங்க ஹார்மோனியத்துல பிஸ்தான்னு புரியுது”
அவர் புன்னகைத்துக்கொண்டே தனது கைகளால் ஹார்மோனியத்தின் பெல்லோக்களை அசைக்கத் தொடங்கினார்.
எனக்கு நாடகத்து பாட்டுங்க இன்னிக்கும் மனப்பாடம்.
கனைத்துக்கொண்டு ‘ம்’ என்று ராகம் இழுத்தவர்
பொய்த்ததடா பொய்நாடு........
உழைப்பதெல்லாம் வீண்பாடு.....
உண்மைக்கான மனக்கூடு......
உலகமே உயிர் ஆசை........
பொக்கை மகிழும் பொரிமாவு......
நமக்கு ஊருரா போகுதடா பகல் ராத்திரி.....
தூங்கையிலே வரும் சாவு.....
இனி திடமேது....?திடமேது
அகிலம் புகழும் தமிழ்ப்பாட்டு .....
எங்கப்பா அருள் ராமசாமி பாட்டு.....
இதெல்லாம் ஆண்டவனின் விளையாட்டு...
“ஆனா உங்களுக்கு எல்லாம் சினிமா பாட்டுத்தான் ரொம்பப் பிடிக்கும் இல்லே கேட்டுக்கங்க”
என்று இன்னொரு தரம் ம் என்று இழுத்து கனைத்தவர்.
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி....
குரல் சற்று நடுங்கினாலும், மிக அழகாக பாடினார். பாட்டை நிறுத்திய பிறகு
“ஆயிரம் இசைக்கருவிகள் வந்தாலும் ராஜா சார் ஆர்மோனியத்தைத்தான் எப்பவும் கையில வச்சிருப்பார். அதை வச்சுத்தான் ட்யூன் சொல்லிக்கொடுப்பார். அதனால அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. என் உயிரை ஒருதரம் ராஜா சார் பாட்டுதான் காப்பாத்துச்சு.”
அவர்கள் ஆச்சர்யமாக காதர் பாட்சாவைப் பார்த்தனர்.
“அட ஆமாப்பா... அப்ப நான் சென்னையில்தான் இருந்தேன்.. ஆந்திராவுல தடா பக்கத்துல அக்கம்பேட்டைன்னு ஒரு ஊரு. அங்க நம்ம தமிழ் ஆளுக அப்ப அதிகம்.. அங்க உள்ள ஒரு கோயில்ல திருவிழான்னு கூத்து நடத்த எங்களை கூப்பிட்டுருந்தாங்க. அன்னிக்கு நைட்டே திரும்பனும்னு எல்லாம் ஒட்டுக்கா வேன்ல போயிட்டோம். திரும்பி வர்றச்சே ஒரு திருட்டு கும்பல் வழிமறிச்சிட்டானுக. வடநாட்டுல ராஜஸ்தான்லே இருப்பாங்களே அது மாதிரி எதுக்கும் அஞ்சாத கும்பலாம் அது. நாங்க வேன்ல பாட்டுப் பாடிக்கிட்டே வர்றோம். வழக்கமான பார்டர் செக்கிங் அப்படின்னு நினைச்சிக்கிட்டோம். வண்டியை நிறுத்துனாலும் நாங்க பாட்டை நிறுத்தலை.. உள்ளே அவனுக ஏறுன அப்புறமும் பாட்டு குஜாலா ஓடுது. முகத்துல துண்டு கட்டி மறைச்சி இருந்தானுக. ஒரு நிமிஷத்துக்கு அப்புறம்தான் எங்களுக்கு நிதானம் வந்துச்சு”
“அய்யய்யோ அப்புறம் என்னாச்சு?”
“அதுல தமிழ் பேசத்தெரிஞ்ச தெலுங்குக்காரன் ஒருத்தன் ‘யோவ் என்னய்யா பாட்டு இது? சினிமா பாட்டு பாடத்தெரியாதா’ன்னு கேட்டான். நாங்க கூத்து பாட்டைத்தானே பாடிக்கிட்டு வந்தோம். சரின்னுட்டு ‘மடை திறந்து தாவும் நதியலை நான்.... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்’ அப்படின்னு ராஜா பாட்டை எடுத்து உட்டேன். அந்த கூட்டத்துல ஒருத்தன் உக்காந்து தாளம் தட்ட ஆரம்பிச்சிட்டான். சுத்தியிலும் காடு மாதிரி இருட்டு. அந்த ரோட்டுல ஒரு ஈ காக்கா இல்லை” சொல்லிவிட்டு பயங்கரமாக சிரித்தார் காதர். “நம்ம முறுக்கு, கடலை மிட்டாய், பொரி உருண்டை எல்லாத்தையும் எடுத்து அவனுக திங்க ஆரம்பிச்சிட்டானுக. பாட்டு போயிட்டே இருக்கு”
ஹார்மோனியத்தை எடுத்து மறுபடி வாசிக்க ஆரம்பித்தார் காதர்.
“கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே...
இந்த பாட்டை வாழ்நாள்லேயே மறக்கமாட்டேன்பா.. பாட்டோட கடைசி சரணம்
மாதவன் பூங்குழல்
மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின்
ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொன் போல அலையாட
அப்படின்னு பாடும்போதே கூட்டத்துல தமிழ் பேசுனானே அவன் ‘கோ’ ன்னு அழறான். நீ ரஜினி ரசிகனா அப்படின்னு கேட்டேன். இல்லை நான் ராஜா ரசிகன் அப்படின்னு சொன்னான். அவனும் பாடகனாம்.. நெல்லூர் பக்கத்துல அவனுக்கு ஊரு.. ஏதோ பேரு கூட சொன்னான். ஊருக்குள்ள சின்ன மியூசிக் ட்ரூப் இருந்திருக்கு. அதுல பாடி இருக்கான். தொடர்ந்து பெருசா வாய்ப்பு கிடைக்கலை. படிச்சவங்க வேலை கிடைக்கவும் அவங்கவங்க வெளியூர் போயிட்டாங்க. குரூப் கலைஞ்சிடுச்சு. அப்புறம் இவனுக்கு பொழப்பு இப்படி ஆயிடுச்சு. பாடி முடிச்சதும் அவனுக கையில இருந்த கூல் டிரிங்க்ஸ், தண்ணி பாட்டில் இதை எல்லாம் எங்க கிட்ட கொடுத்துட்டு... இதான் எங்க சன்மானம் வச்சிக்கங்க. இன்னிக்கு இன்னும் போனியாகலை... போயிட்டு வாங்க. ஆனா எங்களைப் பத்தி எங்கேயும் எதுவும் சொல்லிடாதீங்க’ அப்படின்னு கிளம்பிட்டாங்க”
“மிராக்கிள் அத்தா.. இதெல்லாம் சினிமாவுலதான் நடக்கும்”
“சிலசமயம் உண்மை, கற்பனையை விட மிக அதிசயமா இருக்கும். நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். அரசன் அனுப்பி இருக்கார்னா நிச்சயம் தெருக்கூத்து நிகழ்ச்சியாத்தான் இருக்கும். கொரானா வந்ததிலேர்ந்து ஜனம் வெளியில வர்றது கொறைஞ்சிப் போச்சு. அப்படியே பழகிட்டானுங்க. தெருக்கூத்து ஆடறவங்க எல்லாம் கலைஞ்சு இரும்பு அடிக்கவும், கார் ஓட்டவும், கட்டட வேலைக்கும் போயிட்டாங்க. ஆனா அவங்களுக்கு உள்ளே இருக்குற கலைஞன் இன்னும் தூங்காம அப்படியேத்தான் இருக்கான். நீங்க வந்தது ரொம்ப சந்தோசம் தம்பி. இன்னிக்கு சொன்னா நாளைக்கு அவனவன் வேலையை அப்படியே போட்டுட்டு ஓடி வந்துருவானுக. எந்த ஊர்? எந்தக் கோயில் விசேஷம்? எத்தினி நாளு கூத்து கட்டனும்?”
வருணும் சுரேஷும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு தயக்கத்துடன் “அத்தா .. இப்ப ஊரு முன்ன மாதிரி இல்லை. பசங்களும் மாறிட்டானுங்க. தெருக்கூத்து, நாடகம் எல்லாம் இப்ப யாரும் ரசிக்கிறது இல்லை. அபிஜித் அப்படின்னு ஒருத்தர் யூ ட்யூப் அப்புறம் ரீல்ஸ்ல எல்லாம் ராப் பாடுறார். ரொம்ப ஃபேமஸ் அத்தா. அவரை வரவைக்கனும்னு ஊர்ல ஆசைப்படறாங்க”
காதர் சற்று தளர்ந்துபோனார் “ராப் அப்படின்னா யாரோ பின்னாடி துரத்தற மாதிரி, மூச்சு வாங்க பாடுவாங்களே அதுவா?”
இருவரும் சங்கடத்துடன் நெளிந்தார்கள். “அத்தா அவரு உங்க கிட்ட சங்கீதம் கத்துக்கிட்டவராம்.”
“அப்படியா யார் சொன்னது? அவன் பேர் கேட்க புதுசா இருக்கே. அவன் என்னோட ஸ்டூடன்ட் அப்படின்னு யாரு சொன்னா?”
“அவரோட பழைய பேரு அப்பாதுரை”
நெற்றியைச் சுருக்கி சிறிது நேரம் யோசித்தார். பிறகு நினைவு வந்தவராக “அட ஆமாப்பா.. ஆனா அவன் ஹார்மோனியம் கத்துக்க முடியலைன்னு பாதியிலேயே நின்னவனாச்சே”
“அப்படியா?”
“சுட்டுப்போட்டாலும் உனக்கு சங்கீதமே வராது அப்படின்னு திட்டி அனுப்பினேன். அவன் இப்ப ட்ரூப் வச்சிருக்கானா? பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு”
“ஆமா சார் உங்க மேல அளவுகடந்த மதிப்பு வச்சிருக்கார். அவர்கிட்ட நீங்க பேசினீங்கன்னா எங்க ஊருக்கு வர ஒத்துக்குவார். ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு லட்சம் வாங்குறாரு. நீங்க சொன்னா தொகையை குறைச்சி கூட பேசலாம் அதான் அத்தா,,”
“ஓ சிபாரிசு லெட்டர் வாங்க வந்தீங்களா? நான் கூட என்னமோ வெளிச்சம் வந்துடுச்சுன்னு நினைச்சேன். சரி அவன் கிட்ட நான் சொல்றேன். பெரிய தொகையை குறைச்சிக்கிட்டா எங்க தெருக்கூத்துக் கலைஞர்கள் குடும்ப நல நிதிக்கு ஒரு அமவுண்ட் குடுக்கணும் செய்வீங்களா?”. இருவரும் சந்தோஷமாகத் தலையாட்டினர்.
“உங்க போன் குடுங்க அதுலதானே போட்டோ, மெசேஜ் எல்லாம் அனுப்ப முடியும்?”
அவரிடம் திறன்பேசியைத் தந்தனர். “அப்பாதுரை போன் நம்பர் இதுலேயே இருக்குது அத்தா”
“அப்பாதுரை, நான் காதர் பேசறேன்பா”
காதர் பேசிய உடனே அந்தப் பக்கத்திலிருந்து குழைவும், பணிவும் மிக்க குரல் இவர்களின் செவி வரை ஒலித்தது. நல விசாரிப்புகளை எல்லாம் முடித்த பிறகு விஷயத்தை மெல்லச் சொன்னார் காதர். அந்தப் பக்கத்திலிருந்து குரல் எதுவும் வரவில்லை. மௌனமாக இருந்தது.
“தம்பி நான் உன்னை பழைய ஞாபகத்துல அப்பாதுரைன்னு கூப்பிட்டுட்டேன். மன்னிச்சுக்கப்பா”
“வாப்பா... நீங்க என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க. ஒரு மாமேதை கிட்ட இருந்து, அந்த மகத்தான வாத்தியத்தை முழுசா கத்துக்காம வந்துட்டேன். அவங்ககிட்ட ஃபோனை குடுங்க”
மிகுந்த துயரத்துடன் திறன்பேசியை அவர்களிடம் தந்தார்.
“ப்ரோ... நீங்க தேதியை என் பி.ஏ. கிட்ட சொல்லி கன்ஃபார்ம் பண்ணிக்கங்க அந்தத் தேதியில எனக்கு வேற நிகழ்ச்சி இல்லை. எனக்கு ஞாபகம் இருக்கு. எனக்கு பணம் எல்லாம் வேண்டாம். ஏதாவது குடுக்கனும்னு நினைச்சா வாப்பாவுக்கு குடுங்க என் குருவுக்கு இன்னும் பாக்கி தர வேண்டியது நிறைய இருக்கு. வீடியோ காலுக்கு வாங்க நான் வாப்பாவை பாக்கணும்”
அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். உற்சாகத்துடன் திறன்பேசியில் காணொளிக்கானத் தேர்வை எடுத்து காதரிடம் தந்தனர்.
“வாப்பா .. நீங்க சொல்லிட்டா அப்புறம் மறுப்பே இல்லை.. ஒரே ஒரு நிபந்தனை. நான் இப்ப கொஞ்சம் அழனும். என்னோட மனைவி போன மாசம் இறந்துட்டா வாப்பா.. அவதான் என் ப்ரோகிராம் டேட், என்னோட பிளாங்கிங்ஸ் எல்லாத்தையும்.. எவரிதிங் அவதான் பாத்துக்குவா இப்ப கையில்லாதவன் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருக்கேன். எக்கச்சக்கமா சம்பாதிச்சிட்டேன். ஆனா அழறதுக்கு நேரமில்லை.. எழுந்தா பயணம், நின்னா பாட்டு, படுத்தா தூக்கம்னு ஒவ்வொரு நாளும் சாபம் மாதிரி போவுது வாப்பா.. எனக்காக இப்ப ஒரு பாட்டு பாடுங்க .. உன் பார்வையில் ஓராயிரம்... பாடுவீங்களே
“உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
என்ற பாடலின் ப்ரீ லூட்டை முதலில் வாசித்தார். பின் காதரே பாடத்தொடங்கினார்.
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…
அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்…
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்…
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்…
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்…
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
மனதை மயிலிடம் இழந்தேனே…
மயங்கி தினம் தினம் விழுந்தேனே…
மறந்து…
இருந்து…
பறந்து
தினம் மகிழ…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்
பெருமழை பெருக்கெடுத்து ஓடுவது போல அபிஜித்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. பார்த்துக்கொண்டிருந்த வருணுக்கும், சதீஷுக்கும் ஏனோ கண்களில் நீர் துளித்தது.