மீன் வாசனை

சிறப்புப் பரிசு பெறும் சிறுகதை
மீன் வாசனை
ஓவியம்: ஜெயா
Published on

அதிகாலை மூன்று மணியிலிருந்தே, மீன்சந்தை பரபரத்துக் கிடந்தது. வாசலில் ரோட்டை அடைத்துக்கொண்டு பெரிய பெரிய மீன் வாகனங்கள் நின்றிருந்தன. அதிலிருந்து கடலின் வண்ணமும் அந்திவானத்தின் சிவப்புமான நிறத்தில் பிளாஸ்டிக் பெட்டிகள் இறக்கப்பட்டன. நான்கு புறமும் அடைக்கப்பட்ட வாகனங்களின் அடியில் வெளிப்புறமாக நீண்டிருந்த சிறு குழாய் வழியாக, கடல்நீர் வடிந்து கொண்டிருந்தது. அந்நீர், தான் தொலைத்த கடலைத் தேடி பழக்கமில்லாத மேடும் பள்ளமுமான சந்தையின் சாலையில் ஊர்ந்தது.

சந்தையின் உள்ளே மணி கடையின் முன்பாக பெருந்தலைகளான வியாபாரிகளில் மூன்று பேர் நின்றிருந்தார்கள். செருப்புக்குப் பதிலாக கால்களில், புளியமரக்கங்குகளை மாட்டிக் கொண்டதைப் போல துடித்தபடி இருந்தார்கள். ஓங்குதாங்கான தங்களின் குரலை வீட்டு நாய்களைப்போல் அவிழ்த்து விட்டிருந்தார்கள். அது, தெரு நாய்கள் ஒன்று கூடி குரைப்பது போல, இடைநில்லாமல் சந்தை முழுக்க எதிரொலித்தது. அந்த அதிகாலையின் அழகையும் அமைதியையும் அக்குரல்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது.

அவர்களின் கோபத்தையும் ரத்த அழுத்தத்தையும் மணி சகட்டுமேனிக்கு ஏற்றிவிட்டிருந்தான். நேற்றிரவு, மூன்று மணிக்கே வந்துவிடுவதாகச் சொல்லி, அந்த வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிச் சென்றவன், மணி நான்கு ஆகியும் வரவில்லை. அவன் எப்போதும் இப்படி இல்லை. இரண்டு மாதங்களாகத்தான் அழும்பும் அழிச்சாட்டியமும் செய்கிறான். முன்பெல்லாம் எந்த வியாபாரியிடமும் முன்பணம் வாங்க மாட்டான். வேலையை முடித்துவிட்டு முழு பணத்தையும் வாங்கிக் கொள்ளும் வழக்கம் உள்ளவன். அதேபோல், சந்தைக்கு முதல் ஆளாக வந்துவிடுபவன். இப்போதெல்லாம் ரொம்பவே மாறிவிட்டான். “பணமும் வசதியும் பெருத்தாலே பிரச்சனைதான். தொழில்ல அலட்சியம் வந்துடும்” சந்தையில் மூப்பர்கள் முறுமுறுத்தார்கள். அதிலும் முகூர்த்த நாள் வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். அவனை நம்பி ஆர்டர்வாங்கிய வியாபாரிகளுக்கு ‘இமயம் சரிந்தது’ ஹோர்டிங் வைக்குமளவுக்கு போக்கு காட்டிவிடுவான். அவனை விட்டால் வியாபாரிகளுக்கு நாதியில்லை. இன்று முகூர்த்த நாள். ஆடிக்குப் பிறகு வரும் முதல் முகூர்த்தம். வஞ்சிரம் ஆடர் எக்குதப்பாய் இருந்தது.

“எலேய், அந்த நாறபயலுக்கு போனை போட்டு சுருக்கனா, வரச் சொல்லுங்கடா.”

“அதெல்லாம் ‘டாண்’ன்னு வந்துருவாப்டிண்ணே.”

“பொசக்கெட்ட மூதி. நீ என்ன அவனுக்கு திருக்கைவாலா? ஆட்டிட்டே திரியிறே.”

“நைட்டு அடிச்ச போதை எறங்கிருக்காதுண்ணே.”

“வோ. நீயும் சேக்காளியா கூட நக்குனியோ. வெல போவாத வெள மீனு மாதிரி எனக்குன்னு வந்துச் சேருவீங்களாடா.”

திட்டு வாங்கிய மாலி தலையைத் தொங்க போட்டுக் கொண்டான். அவன் முகம் சாளை மீனைப் போல ‘சவத்து’விட்டது. அருகில் நின்ற முருகன் மாலியின் காலை மிதித்தான். இவன் அவனைப் பார்த்தான். முருகன் தம்ஸ்அப் காட்டினான். மாலி நிமிர்ந்து நின்றான். இருவருக்குள்ளான அந்த சங்கேத பரிவர்த்தனை அவர்களுக்கு மாத்திரமே புரிந்துகொள்ளும்படியான ரகசிய செயலாக இருந்தது. வியாபாரிகள் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்தால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள். அயிலை மீன் கூட்டம் கணக்காக, நாசகார வார்த்தைகளைக் கூடுதலாக உமிழ்வார்கள்.

“அவங்கொணம் தெரிஞ்சுதான் நேத்தி நெருக்கி சொல்லிவுட்டோம். எல்லாத்துக்கும் ஊலுஊலுன்னு மண்டெய ஆட்டிட்டு, திராட்ல விட்டாம் பாத்தியா” - மற்றொரு வியாபாரி ‘பொச’வினார்.

“ஏன்ணே, இன்னிக்கு நேத்தா இது நடக்குது. லேட்டா வந்தாலும் வேலையை முடிச்சுக் குடுத்துருவாப்டிண்ணே.”

“அவனை விட்டா, ஆளு இல்லேன்னு ...திமிரு. அவன் ஆட்டத்துக்கு முடிவு கட்டணும். மணி பயலுக்கு மணியைக் கட்டிவிட்டு சந்தையை விட்டு துரத்தி அடிக்கணும்.”

முருகனும் மாலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பால் சுறாவைக் கொத்திய கடல் பறவையின் சிறகடிப்பு இருவரின் இமைகளின் அசைவுகளில் தெரிந்தது.

சொன்ன வியாபாரி சந்தையில் பெரிய கை. என்ன வேண்டுமானாலும் செய்வார். காணாப் பிணமாக கூட ஆக்கிவிடுவார். அவருக்கு தினமும் பணம், பெட்டியை நிரப்பிக் கொண்டே இருக்கவேண்டும். அதற்கு வேகத்தடையாக யார் இருந்தாலுமே அப்புறப்படுத்திவிடுவார். அப்படி இந்தச் சந்தையைக் கட்டி ஆண்டவர்கள் பலபேர் காணாமல் போயிருக்கிறார்கள். எல்லாவற்றையும் அந்தப் பெரிய கைதான் செய்தது என்ற பேச்சு சந்தையில் உயிருடன் இன்னமும் உலாவிக் கொண்டிருக்கிறது. எதற்கும் ஆதாரம் இல்லை. எல்லாமே கதைகள்தான். கதைகள் என்றாலும் பாறை மீனின் செதில்கள் போல வலுவானது. சுறாவின் பற்களைப் போல கூர் கூடியது.

மூன்று வியாபாரிகளும் பூட்டிக் கிடந்த மணியின் கடையை வெறித்தார்கள். வெளியே கிடந்த வெட்டு மரத்துக்குக் கீழாக, பெரிய பெரிய தர்மாகூல் ஐஸ் பெட்டிகளும் பிளாஸ்டிக் டப்புகளும் இருந்தன. மொத்தம் ஆறு. ஒவ்வொன்றிலும் ஐம்பது கிலோ வஞ்சிரம் மீன்கள் ஐஸ் துகள்களில் புதையுண்டுக் கிடந்தன. மொத்தம் முன்னூறு கிலோ மீன்களை வறுவலுக்கான துண்டுகளாக போட்டு, எட்டு மணிக்கு கல்யாண மண்டபங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். மணிக்காகத்தான் அந்த வஞ்சிரங்கள் குளிர்ந்தும் வியாபாரிகள் சூடேறியும் காத்திருக்கிறார்கள். அவன் வருவதற்கான அறிகுறி உள்ளங்கை அளவிலும் கூட தெரியவில்லை.

“மசமசன்னு நிக்காதீங்கடா. ஏழு மணிக்கு டெலிவரி கொடுக்கணும். அயிர மீனு நீச்சலா நேரம் போயிட்டிருக்கு”. ஆறு மணிக்குத் தொடங்கும் கூட்டத்துக்கு ஐந்து மணியென போட்டிருக்கும் அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல் போல, ஒரு மணி நேரத்தை முன் கூட்டி சொன்னார் அந்தப் பெரிய கை வியாபாரி.

முருகன் மணிக்கு போன் செய்தான். உண்மையில் அவன் போன் போடவில்லை. அதுபோல் பாவித்தான். ஒருவேளை, மணி எப்படியும் போனை எடுக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ. அதையே பதிலாக சொன்னான்.

“எடுக்கலேண்ணே.”

“எவனாச்சும் வூட்டுக்குப் போயி, அந்த மயிராண்டியத் தூக்கிட்டு வாங்கடா.”

“டாட்டா ஏஸ்சைத்தான் எடுத்துட்டு போவனும்” - முருகனின் காதுக்குள் மாலி கிசுகிசுத்தான். அதின் உள்ளர்த்தம் புரிந்து முருகன் சிரித்தான். அந்தச் சிரிப்பு வாயை மூடிய அவனது வலது உள்ளங்கைக்குள் புதையுண்டது. காற்றில் லாகிரி வாடையடித்தது.

“எலாய் மாலி. அவன் காதுக்குள்ள என்னடா சோலி ஒனக்கு?”

“இல்லண்ணே. மணிப்பய என்ன நெலமையில கெடக்கானோன்னு சொல்லிட்டுருந்தேன்.”

“எல்லா நொட்டம் மயிரையும் இங்கெனக்குள்ளயே சொல்லிட்டு நிக்காதீங்கடா. ரெண்டு அன்னக் கூடெ தண்ணீல ஆளை முக்கி, அள்ளிப் போட்டு வாங்கடா.”

’ஊடாங்கண்ணி’யைப் பொறிப்பது போல் ஆளாளுக்கு மணியைப் பொறித்து கொண்டிருந்தார்கள். அந்த இளைஞர்கள் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு பைக்குகளை நோக்கி நடந்தார்கள். வியாபாரிகளில் நீர் பசுபோல் தொந்திப் பெருத்தவன், அவர்களின் புற முதுகில் மடிவலையாய் குரலை வீசினான்.

“அடேய்ங்களா, அங்கெ போனதும் போன் பண்ணுங்கடா, இதான் சாக்குன்னு அந்த நீச்சபய கூட நீங்களும் பட்டறையப் போட்டுறாதீக.”

 “சரிண்ணே” - மாலி பைக்கை இயக்கினான். பிரேக்கை அழுத்தியபடி ஆக்சிலேட்டரை முறுக்கினான். ஸ்பீடா மீட்டரில் அவனது கோபம் எகிறியது. சந்தையை விட்டு சற்று தூரம் சென்றதுமே, வியாபாரிகள் மீதான தன்னுடைய ‘பொசபொசப்பை’ எரிச்சல் கலந்த புலம்பலாக முருகனிடம் வெளிப்படுத்தினான்.

“இவிங்க சம்பாத்தியம் பண்றதுக்கு நம்மளப் போட்டு நொதிக்கிறானுங்கடா. இந்த எழவு புடிச்ச வேலையத் தூக்கியெரிஞ்சுட்டு போலான்னு இருக்குடா. ஒரு மாசம் நொம்பலம் இல்லாம இருந்தோம். ந்தா, மறுக்கா தொரத்த ஆரம்பிச்சுட்டானுவோ. முகூர்த்த நாள் வந்தாலே நொதிப்புதான்.”

முருகன் அமைதியாக இருந்தான். இரண்டு பைக்குகளும் முகப்பு வெளிச்சத்தை இருட்டுக்குள் துப்பியபடியே சென்று கொண்டிருந்தன. பெயர்தான் பைக்குகள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வயதாளிகள்போல் அவைகள் இருந்தன.

“மாப்ள. பொட்டலமா வெச்சிருக்கே?”

“ம்.”

“குடுடா. காலங்காத்தாலே மண்டெ சூட்டை ஏத்திவுட்டானுங்க” - நட்ட நடுரோட்டிலேயே வண்டிகளை நங்கூரம் போல் நிறுத்தினார்கள். முருகன் பைக்கில் அமர்ந்து கொண்டே, மீன் கவிச்சையால் நெய்யப்பட்டது போலிருந்த லுங்கியைச் சுருட்டினான். உள்ளே சங்கரா மீனின் கீழ்ப் பகுதி வண்ணத்திலிருந்த டவுசர் ஜட்டியின் பாக்கெட்டைத் துலாவி, சுருட்டி வைத்திருந்த பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான். அது வண்ண மீனைப்போல மஞ்சளும் சிகப்புமாக இருந்தது.

ஓவியங்கள்: ஜெயா

இரண்டு பேரும் நின்ற இடத்தில் வெளிச்சம் இல்லை. வண்டிகளின் இன்ஜின் உறுமலுக்கு ஏற்ப, முகப்பு வெளிச்சம் மங்கியிருந்தது. ஆனாலும் புளி போட்டுத் துலக்கிய செப்புப்பாத்திரமாக, அதன் ஒளி இருளுக்குள் மினுக்கியது. மாலிக்கு அந்த வெளிச்சமே போதுமானதாயிருந்தது. இடது உள்ளங்கைக்குள் இரண்டு பிஞ்ச் தட்டி, பாக்கெட்டை முருகனிடம் கொடுத்தான். வலது பெருவிரலால் அழுந்தத் தேய்த்து, ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் அதக்கி எடுத்து, உதட்டை இழுத்துப் பிரித்து கீழ்வாயின் கடையோரத்தில் வைத்தான். மண்டைக்குள் ‘சுர்ர்’ரியது.

“நீ போடல.”

“வாய்ல இருக்கு.”

“அந்த மணிபய, இவிங்களெ வெக்க வேண்டிய எடத்துலதான்டா வெச்சிருக்கான். முகூர்த்த நாள் வந்துட்டாலே, ஆப்பு வெச்சுடுறான் பாத்தியா.”

“தொழில்காரன்டா. சந்தையில அவனெத் தாண்டி எவனும் தலையெடுக்க முடியல பாரேன்?”

“தொழில் வசீகரம் அவங்ககிட்டே இருக்குடா. ரெண்டு வெட்டுக் கத்தியை வெச்சுகிட்டு மாசம் லம்சமா சம்பாதிக்கிறானே. வாழ்ந்தா, அவனெ மாதிரி வாழனும். இல்லாட்டி, நாண்டுகிட்டு சாவனும்.”

 “இன்னிக்கே இந்தப்பாடு. நாளைக்கு பெரும்பாடா இருக்கும்டா.”

“நாளைக்கு என்ன?”

“செம முகூர்த்தம் மச்சான்.”

“கெட்டுச்சு போ. மணி தலையில கொம்பு மொளச்சித் திரிவானே.”

இருவரும் வண்டியைக் கிளப்பினார்கள். வழிநெடுக அவர்களின் வாய்க்குள் மற்றொரு லாகிரியாக மணி ‘அத’பட்டிருந்தான்.

*********

அந்தச்சந்தையில் மாத்திரமல்ல. அந்தப்பெருநகரத்தில் மாத்திரமல்ல. சமூகவலைத் தளங்களின் வழியாகவும் ஏகபட்ட யூட்யூப் ரெவ்யூவர்ஸ் வாயிலாகவும் மணி நாடறிந்த நபராக இருந்தான். யூட்யூப்பர்ஸ் அவனுக்கு வைத்திருக்கும் அடை மொழி. வெட்டுமணி. சந்தையில் உள்ளவர்களுக்கு அவன் எப்போதும் துண்டுக்காரன். மீன்களை அவன் துண்டுகள் போடும் வேகமும் நேர்த்தியும் அழகும் பார்ப்பவர்களின் கண்களின் இமைகளை பூவிதழ்களாக உதிர வைக்கும் வல்லமை கொண்டவை. அதிலும் வஞ்சிரம் மீனை அவன் துண்டுகளாக்கும் விதத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

முழங்கை தடிமனிலிருந்து முழுக்கை அளவு நீளமுள்ள வஞ்சிரங்களின் தலையைத் தனியாக வெட்டி நகர்த்துவான். அதுவே, அன்னக்கூடைகள் நிறைய குவிந்திருக்கும், வாலை நறுக்கி நாய்களுக்கும் காக்கைகளுக்குமான உணவாக ஒருபுறம் ஒதுக்குவான். அதன் பிறகு வெட்டுக்கத்தி அந்த மீனோடு விளையாடுகிற விளையாட்டு இருக்கிறதே. ஹைஸ்பீட் இயந்திரங்களே மணியிடம் மண்டியிடும்.

சிறிய ஓட்டல்களில் ஆரம்பித்து, நட்சத்திர தகுதி பெற்ற ஓட்டல்கள் வரை மீன் வறுவல் என்றாலே, வஞ்சிரம் என்றாகிவிட்டது. தவிர, பெரும் செல்வந்தர்கள் இல்லங்களின் பிரமாண்டமான திருமணங்களில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 இவற்றோடு வஞ்சிரம் வறுவல் வைப்பதும் அந்தஸ்து ஆகிவிட்டது. வஞ்சிரத்தைத் தாண்டி ஊடாங்கண்ணி, சுறும்பு மாதிரியான மீன்கள் வறுவலுக்கென்றே பிறப்பெடுத்தவை. எப்படி பாரம்பரிய அரிசி வகைகளை மக்கள் மறந்தார்களோ, அதேபோல், ருசியான, உடலுக்கு நன்மையை மாத்திரமே தருகிற மீன்களையும் மறந்துவிட்டார்கள். வறுவல் என்றாலே, வஞ்சிரம்தான் என்ற மார்க்கெட்டிங் மாயமாலத்துக்குள் மக்கள் மாய்ந்து மகிழ்ந்துக் கிடக்கிறார்கள்.

முள் அதிகமுள்ள மீன்கள்தான் உடலுக்கு வலு சேர்ப்பவை என்பதை மறந்து விட்டார்கள். வாழைப்பழத்தை உண்பதுபோல, மீன்களும் இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மணிக்கு அது மிகவும் வசதியாகிவிட்டது. வஞ்சிரத்தைத் துண்டு போடுவதென்றாலே, அப்பெருநகரில் மணியை விட்டால், வேறு யாருமில்லை. சந்தையில், இவனைத் தவிர இன்னும் பத்து பதினைந்து வெட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் மக்கள் வாங்கும் சங்கரா, கெளுத்தி, கெண்டை, வாவல், கட்லா, வவ்வால், கிழங்கான் திருக்கை போன்ற மீன்களைச் சுத்தம் செய்து, துண்டு போட்டுத் தருவார்கள். அதில் மணி தலையிடுவதே இல்லை. அவன் வஞ்சிரம் வெட்டுவதற்கென்றே அவதாரம் எடுத்தவன். மற்ற எந்த மீன்களையும் துண்டாடுவதில்லை. தெரிந்தோ, தெரியாமலோ ரெண்டு கிலோ, மூன்று கிலோ வஞ்சிரத்தோடு சம்சாரிகள் யார் வந்தாலுமே நைசாக மற்ற வெட்டுக்காரர்களிடம் தள்ளிவிடுவான். அதனாலேயே பார்மலின் தெளிக்கப்படாத மீன்களை பொய்க்கும் ஈக்களாக, வெட்டுக்காரர்கள் அவனை மொய்த்துக் கிடப்பார்கள்.

அப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, கையில் இரண்டு வஞ்சிரத்தை பிடித்தபடி ஒருவள் நேராக மணி கடைக்கு வந்தாள். அவன் வேலையில் பரபரப்பாக இருந்தான். அவனைத் தவிர, ஒட்டு மொத்த சந்தையுமே அவளை ‘தளபொத்து’ மீனைப் போல ‘ஆ’ வென வாயைப் பிளந்தபடி பார்த்தது. பக்கத்து கடையில் உட்கார்ந்திருந்த மாலியும் முருகனும் வைத்தகண் வழுவாமல் அவளை வெறித்து கொண்டிருந்தார்கள். அவளும் சளைத்தவளில்லை. இருவரையும் பார்த்தாள். புலனம்போல கண்கள் தகவல்களைப் பறிமாறிக் கொண்டன. பார்வையின் மொழிகள் ரகசியம் நிரம்பியவை. காதல் காமம் குறும்பு அலட்சியம் இளக்காரம் சூழ்ச்சி இப்படி பல விசயங்களை பிறர் அறியாதபடி கொடுத்து வாங்குபவை. முருகனையும் மாலியையும் அழுத்தம் திருத்தமாக பார்த்தபடியே, மணியிடம் பேசினாள். பார்வையை குரலாகவும் குரலைப் பார்வையாகவும் வெவ்வேறு நபர்களிடம் ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வித்தை சில தனித்துவமான பெண்களால் மாத்திரம்தான் முடியும், அப்படிப்பட்டவர்களால் சாம்ராஜியங்களே சரிந்திருக்கின்றன. மீன் சந்தை சரியாதா என்ன?

“அண்ணே. இதை பீஸ் போட்டு குடுண்ணே.” டால்பினைப் போல் அவள் குரல் இருந்தது.

மணி நிமிர்ந்துப் பார்க்கவில்லை. முருகனும் மாலியும் ஆச்சரியமாக மணியைப் பார்த்தார்கள். தங்களை உள்பட சந்தையவே ஸ்தம்பிக்க வைத்து கொண்டிருக்கும் அவளை மணி சட்டை செய்யாதது அவர்களுக்கு அந்த நொடியின் ஆச்சரியமாக இருந்தது. அவளது கையிலிருந்த இரண்டு மீன்களை மாத்திரம் மணி பார்த்தான். கண்களால் மீன்களை எடை போட்டான்.

“பத்து கிலோவுக்குக் கொறஞ்சு பீஸ் போடுறதில்லை” கவனத்தையும் பார்வையையும் மீண்டும் துண்டு போட்டுக் கொண்டிருந்த வஞ்சிரத்தின் மீது குவித்தான்.

“ஆறு கிலோண்ணே.”

மணி பதில் பேசவில்லை. நிமிரவும் இல்லை. அவனது அமைதியின் அர்த்தம் சந்தையில் உள்ளவர்களுக்குப் புரியும்.

“ஏம்மா, ஊருக்கு புதுசா நீயி?” - மாலி கேட்டான்.

“ஆமா.”

“அதான் மணியைப் பத்தி தெர்ல. உம் பேரென்ன?”

“மீனு வெட்ட ரேசன் கார்டு, ஆதார் கார்டெல்லாம் கேப்பிய போலயே.”

“அதெல்லாம் வேணாம். பேரை மாத்திரம் சொல்லு.”

“ம்.. யெலிச்சூரை” - நக்கலாக சொன்னாள். அந்தப் பெயர் காதில் விழுந்ததும் மணி அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் சொன்னது அவளது பெயரையே அல்ல. கடலில் வாழும் மீன்வகை ஒன்றை. மணி, கடலோர மாவட்டத்தின் பெயர் ஒன்றைச் சொல்லி, “அந்த ஊரா?” என கேட்டான். “ஆமா” கடல் குதிரையாய் தலையசைத்தாள்.

“அதானே பார்த்தேன். வேறென்ன மீனுங்க பேரெல்லாம் ஒனக்கு தெரியும்?”

“சொன்னா, பீஸ் போட்டுத் தர்றியாண்ணே.”

“தரேன்” என்றான். அவள் பூக்களைக் கோர்ப்பது போல், மீன்களின் வகைகளை வாய்க்குள் கோர்த்தாள். அங்கே நின்றிருந்தவர்கள் அத்தனை பேர்களின் கண்களும் சிற்றெறும்புக் கூட்டமாய் அவளை மொய்த்தன. மணி மாத்திரம் அவளது வாயையே வாய் பார்த்துக் கொண்டிருந்தான். வெட்டுவதிலிருந்து அவன் கைகள் சில நிமிடங்களுக்கு விஆர்எஸ் வாங்கியிருந்தது.

“அவிலி, வாழன், அகலை, உளுவை, தும்பிலி, அக்காண்டி, இப்பி, ஊரி, ஏரல், ஓரா, குதிப்பு, கருந்திரளி, கீச்சான், கிழக்கான், கும்புளா, கூந்தா, கும்டுல், கெலவெல்லா, கொய், காறல், கெளிறு, கண்டல், காலா, கற்றளை, கும்புளா, கொட்டிலி, கொம்பரன், நுணலை, கொறுக்கை, செவ்விளை, திரளி, தனபொத்து, பளயா, பன்னா, நவரை, திலப்பியா, பொறுவா, மணலை, மிர்கால், அரிஞ்சான், வேளா.”

படபடவென சொல்லி ‘நெத்திலி மூக்கில் சங்கரா’வாக மூச்சு வாங்கினாள். மணி பதிலேதும் பேசவில்லை. அவள் கையிலிருந்த வஞ்சிரத்தை வாங்கி துண்டு போட்டுக் கொடுத்தான். அதுதான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு அவன் பத்து கிலோவுக்குக் குறைச்சலான வஞ்சிரத்தை துண்டு போட்டு கொடுத்தது.

அதன் பிறகு சந்தைப் பக்கமே அவளைக் காணவில்லை. எங்கே போனாள் என்ன ஆனாள் என்றும் தெரியவில்லை. யட்சி போல் மாயமாகி விட்டாள். கடல் யட்சி. யட்சிகள் மீன்களைப் புசிக்குமா? மனிதர்களையேப் புசிக்கும்போது, மீன்களைப் புசிக்காதா? அன்று முழுக்க சந்தையில் அவளைப் பற்றிதான் பேச்சாக இருந்தது. அவள் தன் வாசனையை சந்தைக்குள் விட்டுச் சென்றிருந்தாள்.

**********

மாலியும் முருகனும் மணியின் வீட்டின் முன்பாக வண்டியை நிறுத்தினார்கள். மாலி அழைப்பு மணியை அழுத்தினான். நீலாவதி தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தாள்.

“அக்கா, அண்ணே கடைக்கு இன்னும் வரல, கூட்டியாரச் சொன்னாங்க.”

“என்னண்ணே சொல்றே. அவரு ராத்திரி வூட்டுக்கு வர்லியண்ணே. ஆடர் இருக்கு. கடெயிலேயே படுத்துக்கறேன்னு சொன்னாரே.”

“என்னக்கா இப்டி சொல்றே. சந்தையிலருந்துதான் வாரோம். அண்ணே கடெயிலயும் இல்லியே.”

“அய்யோ, என்னாச்சுன்னு தெர்லியே” - அவள் குரலில் பதட்டம் ‘கீச்சான்’ குஞ்சாக நீந்தியது.

“சித்தநாழி இருண்ணே. போனை போட்டு கேட்டுச் சொல்றேன்” - என்றபடியே வீட்டுக்குள் சென்றாள். சற்றைக்கெல்லாம் போனில் பேசியபடி வந்தாள். போனை காதிலிருந்து எடுத்தபடி, “கடெயிலதான் இருக்காராம். நீங்க கவனிக்கலையாண்ணே.”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

“அக்கா, போனை இப்படி குடுங்க” - மாலியிடம் கொடுத்தாள்.

“மணியண்ணே. எங்கனெக்குள்ள இருக்கே?”

“யாரு மாலியா? டேய், நேத்து சரக்கு ஓவராயிடுச்சுடா. பார்லயே மட்டையாயிட்டேன் எம் பொண்டாட்டிகிட்ட சொல்லிறாதீங்கடா. என்னைய துண்டு போட்ருவா.”

“சரிண்ணே.” - மாலி சமாளித்தபடி போனை அவளிடம் நீட்டினான்.

“அக்கா. மன்னிச்சுடு. கடெயிலதான் இருக்காப்லயாம். நாங்கதாக்கா சரியா கவனிக்காம வந்துட்டோம்.”

“நைட்டு ஓவராயிடுச்சாண்ணே” - மாலியைக் கேட்டபடியே போனை வாங்கினாள். சந்தைக்கு இருவரும் திரும்பும்போது, “முருகா. மணி பொண்டாட்டிக்குக் திமிரைப் பாத்தியா? என்னைய ஓவராயிடுச்சான்னு கேக்கறா” என்றான்.

“விட்றா. பொண்டாட்டிக்குத் தெரியாம, மணி மறைச்சு மறைச்சு பண்ற சோலி எப்படியும் அவளுக்குத் தெரியத்தான் போவுது. அன்னிக்கு இருக்கு கச்சேரி.”

மாலியின் முகம் ஜெல்லி மீனாக ஒளிர்ந்தது.

*********

கடலில் நீந்தும் ஆமையாக ஒரு மாதம் ஓடியிருந்தது. மணியின் உடம்பிலும் முகத்திலும் புதிதாக மினுமினுப்புக் கூடி வருவதை நீலாவதி கவனித்தாள்.

“மாமா. கெடந்து மின்னுறியே. ஓவரா குடிக்கிறியோ?”

“ஆமா. மூத்திரத் தண்ணி மாரி இருக்கிற அந்தச் சனியனை ஓவரா குடிக்குறனாக்கும். ஒடம்பு நோவுக்கு மருந்து மாரி அந்தச் சாக்கடெத் தண்ணியை உள்ளத் தள்ள வேண்டிக் கெடக்கு.”

“பின்ன எப்படி தேங்கா பாறையாட்டம் ஜொலிக்கிறே?”

“நீலி. சந்தையிலையும் பசங்க கவனிச்சு கேட்டாங்க புள்ள?”

“என்ன பதிலச் சொன்ன?”

“நான் எங்கே சொன்னேன். ராமு சித்தப்புல்ல சொன்னாரு.”

“என்னன்னு?”

“‘புடிச்ச வேலை. லம்சமா சம்பாத்தியம். அசராத உழைப்பு. கொஞ்சம் புகழ். ரொம்ப முக்கியமா, மனசுக்கும் ஒடம்புக்கும் ஒத்துபோற பொண்டாட்டி. பாசமான புள்ளைங்க. கெடுதி நெனக்காத ஓறவுக்காரங்க எந்த ஆம்பளைக்கு வாய்க்குதோ, அவன் மொகமும் ஒடம்பும் மினுக்கும்’னு சொன்னாரு.”

“ந்தா. மறந்தேட்டன் பாரு மாமா. நாளைக்கி அத்தெ பையன் கண்ணாலத்துக்குப் போவனும். மறந்துறாதே.”

“ஏ.. புள்ள, முகூர்த்த நாளுலதான் கொஞ்சம் காசு பார்க்க முடியும். அதை விட்டா வர முடியும்? செய்ய வேண்டிய செய்முறைக்கெல்லாம்தான் எல்லா சீர் சாமானும் வாங்கியாச்சே. புள்ளைங்களைக் கூட்டிட்டு நீ போயிட்டு வந்துரு நீலி.”

“அது சபை நிறைவா இருக்காது மாமா. சீர் மொறையை நீயும் நானும் சேர்ந்து செஞ்சாதான் நிறைஞ்சாப்புல இருக்கும். பார்க்குறவங்களுக்கும் குத்தம் குறையா இருக்காது.”

“புரியுது. என்னோட நிலைமையையும் புரிஞ்சுக்கோ. யாவாரிங்க என்னெய நம்பி, கல்யாண ஆடர் வாங்கிட்டாங்க. வஞ்சிரத்தைத் துண்டு போட என்னெய விட்டா வேறாரு இருக்கா நீலி?”

அவள் முகத்தைத் தொங்கப்போட்டாள். மணி செல்லம் கொஞ்சினான். நீலாவதி இறங்கி வரவில்லை.

“சரி புள்ளெ. ஒன்னு வேணா பண்றேன்.”

அவள் ஆர்வம் மினுங்க அவனைப் பார்த்தாள்.

“வேலையை சுருக்கனா முடிச்சுட்டு, கண்ணாலத்துக்கு கண்டிப்பா வரேன். அது முகூர்த்த நேரமாவும் இருக்கலாம். பந்தி நேரமாகவும் இருக்கலாம். நீ என்னை எதிர்பாக்காம முறையைச் செஞ்சுடு.”

அவள் அரைமனதாக ஒப்புக் கொண்டாள்.

அன்றிரவு ஒன்பது மணி இருக்கும்.

மணி வண்டியை எடுத்தான். வாசலில் பிள்ளைகள் சிரித்த முகமாய் நின்று கொண்டிருந்தனர். நீலி மட்டும் குரங்கு சுறாவாக முகத்தை வைத்திருந்தாள். அவளையும் பிள்ளைகளையும் பஸ் ஸ்டாண்டில் கொண்டு விடுவதற்கு, வாசலில் ஆட்டோ தயாராக இருந்தது.

“அப்பா நாளைக்கு மத்தியானம் கல்யாணத்துக்கு வந்துடுவேன். அம்மாவெ படுத்தி எடுக்காம சமத்தா இருக்கனும்.”

பிள்ளைகள் இரண்டும் அப்போதே சமர்த்தாக ‘ஒட்டி’போல் தலையாட்டின.

“என்னங்க.”

“என்னடி?”

“மாலியண்ணேகிட்டேயும் முருகன்ணங்கிட்டேயும் சொல்லிருங்க. ரெண்டு பேரும் காலங்காத்தால ஆள் இல்லாத வூட்ல பெல் அடிச்சு, அதை ரிப்பேராக்கிடப் போறாங்க.”

“சொல்லிடுறேன். அண்ணே, பத்திரமா பஸ் ஏத்திவிட்டுண்ணே” - ஆட்டோகாரரிடம் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

சொல்லிவைத்தாற்போல் கடைவீதியில் எதிரே மாலியும் முருகனும் வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். மூவரும் ஓரங்கட்டி நிறுத்தினார்கள்.

“என்னண்ணே பாருக்கு போறியா?”

“ஆமாடா.”

“அங்கேயே மட்டையாயிடாதேண்ணே. ஒன்னையக் காணோம்னாலே எங்களெ முதலாளிங்க சாவடிக்கிறானுங்க.”

“கண்டிப்பா காத்தால கடையில இருப்பேன். வூட்டுக்கெல்லாம் தேடி வர வேணாம். வூட்டம்மா புள்ளைங்களைக் கூட்டிட்டு முக்கியமான ஒறவுக்கார கல்யாணத்துக்குப் போறாங்க.”

“நீ போவலையாண்ணே.”

“தாலி கட்டுக்கு போவல. பந்திக்குப் போயிருவேன்.”

“அப்படில்லாம் போற ஆளு இல்லியண்ணே நீயி?”

“என்ன செய்ய? இங்கே சோலி இருக்கே.”

“சரிண்ணே.”

மூவரும் பிரிந்தார்கள். அரைமணி நேர வண்டியோட்டத்துக்குப் பிறகு புறநகரின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தான்.

தனியாக இருந்த வீட்டுக்குள் வண்டியை ஏற்றி நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.

அவனுக்கும் திறக்கப்படாத கதவுக்கும் இடையே மௌனம் சில நொடிகள் சிங்கி எறாவாக ஊர்ந்தது.

மீண்டும் மணி, மணியை அழுத்தினான்.

கதவு திறந்தது. இதழ் பிரிக்காத சிரிப்பும் முகம் முழுக்க பூப்புமாக யட்சிபோல் நின்றிருந்தாள் எலிச்சூரை.

வீட்டுக்குள் மணி நுழைந்தான்.

பாலஜோதி இராமச்சந்திரன்

தஞ்சை அருகே வல்லத்தில் பிறந்தவர். இப்போது வசிப்பது புதுக்கோட்டை. ஏராளமான இலக்கிய அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள், விருதுகள் வென்றிருக்கிறார். இதுவரை மூன்று நாவல்கள், நான்கு குறுநாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com