மிரட்டல்

மிரட்டல்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்
Published on

 கல்லூரி உணவகத்தில் ஆசிரியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பின்னறைக்குள் சிகரெட் புகை நிரம்பியிருந்தது. இந்தப் பழக்கம் உள்ள ஆசிரியர்கள் சிலர்தான் என்றாலும் சரியாக இரண்டாம் மணிநேரம் முடிந்து இடைவேளை விட்டதும் வந்து குழுமிவிடுவார்கள். அடுத்த மணி வகுப்புக்குத் தயாராகிச் செல்லச் சிலருக்கும் முந்தைய மணி வகுப்பெடுத்த சோர்வைப் போக்கிக்கொள்ளச் சிலருக்கும் புகை வேண்டியிருக்கும். வெளியே நின்று பிடித்தால் மாணவர்கள் பார்ப்பார்கள் என்பதால் அறைக்குள்ளேயே புகை சுழலும். அது பிடிக்காதவர்கள் தான் வெளியே போக வேண்டும்.

பேராசிரியர் முனைவர் கு. வேலு, எம்.ஏ.,பிஎச்.டி. அவர்களுக்குப் புகை பெரும்பகை. அந்த அறைக்குள்ளேயே நுழைய மாட்டார். ‘ஸ்டாபுக்கான ரூம்பா அது? ஏ.பி.நாகராஜன் படத்துல கைலாசத்தப் பாக்கறாப்பல இருக்குது’ என்பார். அவர் கோபமாக அப்படிச் சொன்னாலும் அசர மாட்டார்கள். ஒருமுறை ‘வாங்க ஒன்னப் பத்த வெச்சாப் போதும் நெஜமாலுமே கைலாசத்தப் பாக்கலாம்’ என்று ஒருவர் அழைப்பு விடுத்தார். ‘இவுங்கெல்லாம் எப்பிடித்தான் பசங்களுக்குப் பாடம் நடத்துவாங்களோ? வயசுக்குக்கூட மரியாத இல்ல’ என்று சலித்துக் கொள்வதைத் தவிர அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பின்பக்க நுழைவாயிலுக்கு அருகிலேயே பெருவேம்பு நின்றிருந்தது. அவரைப் போல உள்ளே நுழையத் தயங்குபவர்களுக்காகப் பழைய பெஞ்சுகள் இரண்டைப் போட்டிருந்தார்கள். ஒருகால் ஒடிந்து செங்கல் முட்டுக் கொடுத்த பெஞ்சு ஒன்று. மேல்பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் ஓட்டை கொண்ட பெஞ்சு ஒன்று. சிலர் அவற்றில் உட்கார்வார்கள். சிலர் வேம்படியில் நின்றுகொண்டே தேநீரோ காப்பியோ குடித்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். அவர் ஒரு பெஞ்சில் நடுவிடம் பார்த்து உட்கார்ந்துகொண்டார். உடன் வந்தவர் தற்காலிக விரிவுரையாளர் முனைவர் வ.குமரேசன், எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி. அவர்கள் இளையவர்.

நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரம் தள்ளியிருந்த அந்த அரசு கலைக்கல்லூரியில் இருவரும் வரலாற்றுத் துறை ஆசிரியர்கள். ஒருவர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறார். இன்னொருவர் பணிக்கு வந்து ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும். தற்காலிகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார். இருவருக்கும் எப்படியோ ஒத்துப் போயிற்று. தூரத்துச் சொந்தம் என்று சொல்லிக் கொள்வார்கள். ‘நேர் சொந்தமெல்லாம் இல்ல. ஒரே சாதின்னா எப்படியும் சொந்தமாயிருமில்ல’ என்று சிலர் குசுகுசுப்பார்கள். ஆசிரியர் அறையில் அருகருகே நாற்காலி. கழிப்பறைக்கும் உணவகத்திற்கும் சேர்ந்தே செல்வார்கள். வகுப்புகள்கூட ஒரே நேரத்தில் வருகிற மாதிரி போட்டுக்கொண்டு அருகருகே இருக்கும் அறைகளில் நடத்துவார்கள். கால அட்டவணை தயாரிக்கும் பொறுப்பு அவர்களிடமே இருந்தது. அதில் இருவர் பெயர்களும் சுருக்கமாக KV (கேவி), VK (விகே) என்றிருக்கும். இத்தனை ஒற்றுமை கொண்டிருப்பதால் மாணவர்கள் ‘பெருசு’, ‘சிறுசு’ என்று பெயர் வைத்திருந்தனர். தங்களுக்குள் அப்படிச் சொல்லிக் கொண்டாலும் இருவருக்கும் மதிப்புக் குறை ஏதுமில்லை. மாணவர்களிடம் இயல்பாகப் பேசிப் பழகுவார்கள். விகே இளைஞர் என்பதால் உரிமையோடு நெருங்கிப் பேசுவார்கள். எதுவாக இருந்தாலும் கேவியிடம் கலந்து பேசித்தான் செய்வார் விகே.

கேவி தன்னை அங்கீகரித்து உடனழைத்துச் செல்கிறார் என்றாலும் தன் எல்லை எதுவரை இருக்கும் என்பது விகேவுக்கு நன்றாகத் தெரியும். நிரந்தர ஆசிரியர், மூத்தவர் இரண்டுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறுவதில்லை. தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதாமாதம் ஒன்றாம் தேதி ஊதியம் வராது. சிலசமயம் மூன்று நான்கு மாதங்களுக்குச் சேர்ந்துதான் வரும். அத்தகைய சமயங்களில் கைமாற்றுக் கொடுத்து உதவுவார் கேவி. அதையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

‘சார், நீங்க இருங்க. நான் வாங்கியாரன்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் விகே.

இருவரும் காப்பி குடிப்பார்கள். கேவிக்குச் சர்க்கரை நிறைய வேண்டும். விகேவுக்குக் குறைச்சல். உணவகத்தில் வேலை செய்யும் எல்லோருக்கும் அது நன்றாகத் தெரியும் எனினும் நினைவுபடுத்திச் சொல்லிக் கையில் வாங்கிக் கொண்டு வருவார் விகே. வலக்கையில் சாருக்கான டம்ளர். இடக்கையில் அவருக்கானது. அதில் மாற்றமே நேராது. இருவர் பெயரும் சேர்ந்த கணக்கு இருக்கிறது. மாத முடிவில் பார்த்து ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்து பணத்தைக் கொடுப்பது என ஏற்பாடு. தினமும் காப்பி மட்டும்தான். என்றைக்காவது மசால் வடை வாசனைக்கு மயங்கி ஆளுக்கொன்று வாங்கிக் கடிப்பார்கள்.

இன்னொரு துறைப் பேராசிரியர் ஒருவர் அருகில் நிற்கப் பெஞ்சில் உட்கார்ந்தபடியே கேவி ஏதோ பேசிக் கொண்டிருந்தார். விகே நீட்டிய காப்பியை அனிச்சையாக வாங்கிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார். ஐம்பது வயதுக்கு மேலாகியும் இத்தனை சர்க்கரை போட்டுக் குடிக்கிறாரே என்று எப்போதும் வரும் எண்ணம் இப்போதும் தோன்றியது. ஆசிரியர் சங்கம் தொடர்பாகப் பேராசிரியர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சில் இறங்கிவிட்டால் நிறுத்த மாட்டார். ‘பல வருசமாப் பேசிப் பேசிப் பழக்கமாயிருச்சு’ என்பார். ஜாலியாக இருக்கும்போது ‘பொண்டாட்டி ஆத்தாகிட்டப் பேச முடியாது. வீட்டுல வாயப் பொத்திக்கிட்டு இருக்கறமா, வெளியில வந்தொடன ஆட்டமேட்டிக்காத் தொறந்துக்குது’ என்று ஜோக்கடிப்பார்.

சற்றுத் தள்ளி வந்து, பெரும்பரப்பில் விழுந்திருந்த வேம்பு நிழலின் ஒருபகுதியில் நின்று கொண்டு காப்பியை அனுபவித்துக் குடிக்கத் தொடங்கினார் விகே. கண் மூடி ஒருமிடறு உறிஞ்சி நிமிர்ந்து திறந்தபோது கொஞ்ச தூரத்தில் மூன்று மாணவர்கள் நிற்பது தெரிந்தது. இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்கள். சரவணன், அறிவழகன், சுரேஷ். இந்தப் பக்கமே நோக்கியபடி நிற்பதைப் பார்த்தால் தன்னிடம்தான் பேச வந்திருக்கிறார்கள் என்று அனுமானிக்க முடிந்தது. கேவியும் இருப்பதால் தயங்குகிறார்களோ என்னவோ. சங்கப் பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்பதால் மாணவர்களைக் கைகாட்டி அழைத்தார். அதற்குக் காத்திருந்தது போல ‘சார்’ என்று அவரை நோக்கி மூவரும் வந்தனர். மூவருக்குமே குச்சி உடம்பு. வயிறு எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டும். இளமைப் பொலிவு கூடிய முகங்கள். இப்போது சரவணன் முகம் சரியில்லை, அவனுக்கு ஏதோ பிரச்சினை என்பது தெரிந்தது. மற்ற இருவர் முகங்களும் சற்றே குழப்பம் சூழ்ந்திருந்தாலும் இயல்பாக இருந்தன. சரவணனுக்கு உதவியாக அவர்கள் வந்திருக்கக் கூடும் என்று ஊகித்தார்.

‘ஏப்பா?’ என்றார் சாதாரணமாக விகே.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யார் தொடங்குவது என்பதுதான் இப்போதைய பிரச்சினை போல என்று நினைத்துச் சிரித்தார். வயதின் காரணமாக நெருக்கம் இருந்தாலும் ஆசிரியர் என்பது நீருக்குள் மறைந்திருக்கும் தடுப்பணை போன்றதுதான். அதைத் தகர்க்க ‘என்ன? யாராச்சும் வாயத் தொறங்க’ என்று தூண்டினார்.

‘சரவணனுக்கு ஒரு பிரச்சினைங்க சார்’ என்றான் அறிவழகன். ஒருசொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் இடைவெளி இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றைப் போட்டு நசுக்கிக்கொண்டு அவன் பேசுவதைக் கேட்கக் காதை நன்றாகக் குவித்துக்கொள்ள வேண்டும். இது சின்ன வாக்கியம் என்பதால் புரிந்தது.

‘என்ன பிரச்சின?’ என்றார் மீண்டும் சாதாரணமாக.

பொதுவாக மாணவர்களுக்குப் பணப்பிரச்சினை இருக்கும். தேர்வுக் கட்டணம் கட்ட ஆசிரியர்களிடம் உதவி கேட்பதுண்டு. கல்லூரி திறந்து ஒன்றரை மாதம் ஆகிறது. தேர்வுக்கு இன்னும் காலமிருக்கிறது. வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவச் செலவுக்காகவும் பணம் கேட்பார்கள். அப்படி ஏதும் சரவணனுக்கு இருக்கலாம் என்று ஊகித்தார். அவன் குடும்பத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தார். ஏற்கனவே அவன் சொல்லியிருக்கிறான் என்றாலும் இப்போது நினைவுக்கு வரவில்லை.

‘நீயே சொல்லுடா’ என்று சரவணன் தோளில் தட்டினான் சுரேஷ். அவனுக்கு வாய் வரவில்லை. கண்கள் கலங்குகிற மாதிரி இருந்தது. ஆதரவாகக் கையைப் பற்றினால் போதும், கண்ணீர் கொட்டிவிடும்.

‘என்ன பிரச்சின சரவணா? சொன்னாத்தான தெரியும்? எங்கிட்டச் சொல்றதுக்கு என்ன?’ என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டார் விகே.

‘ஒரு பொண்ணு பிரச்சின பண்ணுதுங்க சார்’ என்று தயங்கிச் சுற்றிலும் பார்த்தபடி மெல்லச் சொன்னான் சரவணன். இடைவேளை நேரம் என்பதால் மாணவர்கள் அங்கங்கே தென்பட்டனர். அவர்கள் சத்தத்தில் இவன் பேச்சு யாருக்கும் கேட்டிருக்காது.

‘மொதல்ல நீ பண்ணியிருப்ப. இப்ப அந்தப் பொண்ணு பண்ணுதா?’ என்று ஒருமாதிரி சிரித்தார் விகே. சரவணனைத் தவிர மற்ற இருவரும் சிரித்தனர்.

‘நானெல்லாம் ஒன்னும் பண்ணுலீங்க சார்’ எனச் சட்டென்று மறுத்தான் அவன்.

‘ஆமா… உனக்கு ஒன்னுந் தெரியாது பாரு. நீ ஒன்னும் பண்ணாத எதுக்கு ஒரு பொண்ணு வந்து பிரச்சின பண்ணுது?’ என்று புரியாமல் கேட்டார் விகே.

அருகே வந்து அவர் காதில் மட்டும் விழுகிற மாதிரியான குரலில் விவரமாகச் சொன்னான். தாவரவியல் துறையில் இரண்டாமாண்டு படிக்கும் பெண் அவள். சரவணனுக்குப் பக்கத்து ஊர். தினமும் போக்கும் வரத்தும் ஒரே பேருந்தில்தான். ஐந்தாறு ஊரிலிருந்து இந்தக் கல்லூரிக்கு வரும் ஆண்களும் பெண்களும் ஏறுவார்கள். சிரிப்பும் பேச்சுமாக இருக்கும். அதில் வரும் எல்லோருடனும் பேசிப் பழகுவது போலத்தான் சரவணன் அவளுடனும் பழகினான். ஏதோ கணத்தில் அவளுக்கு அவன் மேல் காதல் வந்துவிட்டது. தன்னைக் காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். போன வருசத்திலிருந்து இந்தப் பிரச்சினை நடக்கிறது. என்னென்னவோ சொல்லி அவன் தவிர்த்தாலும் அவள் விடுவதாயில்லை. இப்போது அவனுக்குக் கெடு விதித்திருக்கிறாள். நாளைக்குக் காலைக்குள் அவன் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் மணி நேரத்தின் போது அவன் வகுப்புக்கே வந்து எல்லோர் முன்னிலையிலும் அவனை இறுக்கிக் கட்டியணைத்து முத்தம் கொடுக்கப் போகிறாளாம். கடைசியில் இப்படி முடித்தான்:

‘இப்ப என்ன செய்யறதுங்க சார்?’

‘இறுக்கிக் கட்டிப்புடிப்பன்னே சொன்னாளா?’ என்று கேட்டார் விகே.

‘அப்பிடித்தான் சொன்னா’ என்றான் அவன்.

‘ஆமாங்க சார். எங்க முன்னாலயே லிப் கிஸ் குடுப்பன்னு அழுத்திச் சொல்றா’ என்றான் அறிவழகன். அமைதியாக ஆமோதித்தான் சுரேஷ்.

‘செரி, நாளைக்கு நல்லாப் பல்லு வெளக்கிக்க. வாசன தூக்கற மாதிரி மவுத் வாஷ் பண்ணிக்கிட்டு ஜோரா வாடா’ என்று சிரித்தார் விகே.

அவர் கிண்டலைக் கேட்டுச் சரவணன் சிரிக்கவில்லை. மற்ற இருவரும் தலையைத் திருப்பிச் சிரித்தார்கள்.

‘வெளையாடாதீங்க சார். எனக்குப் பயமா இருக்குது’ என்றான்.

‘மொதமொறயா உனக்கு? அப்படீன்னா பயமாத்தான் இருக்கும். ரண்டு மூனு வாங்குனதுக்கு அப்பறம் பழகீரும். நல்லாவும் இருக்கும்டா. என்ன அறிவழகா, அப்பிடித்தான?’ என்று மீண்டும் சிரித்தார். அவர் மனதுக்குள் ஓடிய குழப்பத்தை வெளிக்காட்டக் கூடாது என்று இந்த உத்தியைக் கையாண்டார்.

‘எனக்கெல்லாந் தெரியாதுங்க சார்’ என்றான் அறிவழகன்.

‘உனக்கு அனுபவம் இருக்கும்டா. நாலஞ்சு பொண்ணுங்ககூட எப்பப் பாரு பேசிக்கிட்டே திரியறயே நீ’ என்று அவனை உசுப்பேற்றினார் விகே.

‘சும்மா பேசுவங்க சார். அவ்வளவுதான்’ என்று பேச்சில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான்.

‘நாளைக்குச் செகண்டவர் உங்க வகுப்புத்தாங்க சார்’ என்று சுரேஷ் நினைவூட்டிப் பேச்சை மடை மாற்றினான்.

தம் வகுப்பு நேரத்தில் அந்தப் பெண் சொன்னபடி வந்து அவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டால் பெரிய பிரச்சினை ஆகிவிடும். முதல் மணி நேரத்தையோ மூன்றாம் மணி நேரத்தையோ தேர்வு செய்யாமல் அதென்ன இரண்டாம் மணி நேரம்? தன் வகுப்பு என்று அவளுக்குத் தெரிந்திருக்குமா? இவர்தான் எதையும் அனுமதிப்பார் என்று முடிவு செய்திருப்பாளா? மாணவர்களிடம் நெருங்கிப் பழகுவதில் இப்படியும் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. இதில் தனக்கு எதிரான சதி ஏதும் இருக்கிறதா என்று மனதுக்குள் ஓட்டிப் பார்த்தார். அவள் வந்து இறுக்கிக் கட்டியணைத்து அவனுக்கு முத்தம் கொடுத்த பிறகு முதல்வர் அறையில் போய் நின்று தான் விளக்கம் சொல்லும் காட்சி மனதில் ஓடிப் பயம் அதிகரித்தது. அப்போது கேவி துணைக்கு வருவார் என்று சொல்ல முடியாது. ‘பசங்ககிட்டத் தள்ளியே பழகுங்கன்னு சொன்னாக் கேக்கறீங்களா?’ என்று சத்தமாக அறிவுரை சொல்லக் கூடும். அப்படி ஏதும் நடந்தால் தன்னால் தடுக்க முடியாது என்று உணர்ந்தார். நாளைக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாமா, இன்னும் எத்தனை நாள் விடுப்பு இருக்கிறது என யோசனை ஓடிற்று. ஏன், சரவணனை விடுப்பு எடுத்துக் கொள்ளும்படி சொல்லலாமே. அவனா தானா? யார் விடுப்பு எடுப்பது என்னும் குழப்பம் ஓடியபோது பேச்சையும் காப்பியையும் ஒருசேர முடித்துவிட்டுக் கேவி எழுந்து வந்தார்.

‘இங்கயே பாடமெடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா? அவ்வளவு ஆவலாக் கேக்கறானுங்களா?’ என்று கேட்டுச் சிரித்தார் கேவி. அவரிடம் பிரச்சினையைச் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. மூவர் முகத்தையும் பார்த்தார் விகே. சொல்லலாம் என்று ஆமோதிப்பது போலவே தோன்றினார்கள். தன்னை விடவும் மூத்தவர் ஒருவர் இதை விசாரித்தால் நன்றாக இருக்கும் என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

‘இல்லீங்க சார்… பசங்களுக்கு ஒரு பிரச்சின’ என்று சொல்லத் தொடங்கினார் விகே.

‘சார்… எங்களுக்கு இல்ல. சரவணனுக்குத் தான்’ என்று அவரைத் திருத்தினான் சுரேஷ்.

‘இதுலயெல்லாம் கவனமா இரு. பாடத்துல உட்ரு. இவன நம்பாத சரவணா… எந்த நேரத்திலயும் கழட்டி உட்டுட்டு ஓடிருவான்’ என்று திட்டிவிட்டு ‘அவனுக்குப் பிரச்சினைன்னா கூட இருக்கறவங்களுந் தான்டா பதில் சொல்லணும். ஏன், நாளைக்குக் கிளாசுல நானிருந்தன்னா நானுந்தான பதில் சொல்லணும்’ என்று கோபமாகச் சொன்னார் விகே.

‘செரி. எல்லாரும் பதில் சொல்லலாம். என்ன பிரச்சினைன்னு இப்பச் சொல்லுங்க’ என்றார் கேவி. குள்ளமான அவர் தன் அகண்ட உடலை உருட்டியபடி நடப்பார். மெல்ல அவருடன் நடந்துகொண்டே விவரம் முழுவதும் சொன்னார். மாணவர்கள் மூவரும் பின்னாலேயே ஊர்ந்து வந்தனர்.

‘ஒருபொண்ணா அப்பிடி மெரட்டுது?’ என்று அதிர்ச்சியோடு கேட்டார் கேவி.

‘ஆமாங்க சார்’ என்று அழுத்தினார் விகே.

‘ஏண்டா தம்பி… இவரு சொல்றது நெசந்தானா?’ என்று சரவணனைப் பார்த்துக் கேட்டார்.

அவன் அழுகை முகத்தை இன்னும் பரிதாபமாக்கிக் கொண்டு ‘ஆமாங்க சார்’ என்று உறுதிப்படுத்தினான்.

‘காலம் எப்பிடி மாறிப் போச்சு பாருங்க. பொண்ணுங்க பின்னால பசங்க அலஞ்சு பாத்திருக்கறம், கேட்டிருக்கறம். ஒருபொண்ணு இப்பிடிச் சொல்லுதா? அதும் எல்லாருத்துக்கும் முன்னால கட்டிப் புடிச்சு முத்தம் குடுக்கப் போவுதாமா? எப்பிடிச் சொல்லுச்சு? இறுக்கிக் கட்டிப்புடிச்சு ஒதட்டுலயே முத்தம் குடுப்பன்னு சொல்லுச்சா? என்ன தெகிரியம் பாருங்களே. இன்னமே ஆம்பளைங்கதான் உசாரா இருக்கோணும்’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திப் புலம்பினார்.

‘நாளைக்குச் செகண்டவர் என்னோடதுங்க சார்’ என்று இடையில் தம் பிரச்சினையைச் செருகினார் விகே.

‘உடுங்க. ஒருபொண்ணு என்ன பண்ணீரும்? பாத்துக்கலாம்’ என்று சொன்னவர் சரவணனைப் பார்த்து ‘அதுகிட்ட நீ எதுனா தப்பா நடந்துக்கிட்டயா? எதுனா நடந்திருந்தா ஒழுங்காச் சொல்லீரு. மறச்சீன்னா அப்பறம் பேச முடியாது’ என்று அவனை எச்சரிக்கும் தொனியில் கேட்டார்.

‘நான் ஒன்னுமே பண்ணுலீங்க சார். அதுதான் தொந்தரவாப் பண்ணுது. எங்குடும்பக் கஷ்டத்தச் சொல்லி எனக்கிப்பக் காதல்லாம் வேண்டாமுன்னு கோபமாவே சொல்லீட்டன். அதுகிட்டப் பேசறதயும் நிறுத்திட்டன். நெம்பரக்கூட பிளாக் பண்ணிட்டன். அப்பவும் உட மாட்டீங்குதுங்க சார்’ என மடமடவென்று ஒப்பிப்பது போலச் சொன்னான்.

‘இன்னக்கத்த பொண்ணுங்க எல்லாம் கண்ட சினிமாவயும் பாத்துக் கெட்டுப் போயிருதுங்க. ஒரு பொண்ணு பேசற பேச்சா இது? செரி, அந்தப் பொண்ணக் கூட்டிக்கிட்டு வா, நான் பேசறன்’ என்றார்.

சரவணன் தயங்கி ‘நான் அதுகிட்டப் பேச மாட்டங்க சார்’ என்றான்.

‘என்னடா உன்னய இறுக்கிக் கட்டிப்புடிச்சு ஒதட்டுலயே முத்தம் குடுக்கப் போற பொண்ணுகிட்டப் பேச மாட்டமுன்னு சொல்ற?’ என்று ஏளனமாக அவனைப் பார்த்தார் கேவி.

‘எங்குடும்பமே என்னய நம்பித்தான் இருக்குது. அக்கா இருக்கறாங்க, அவுங்களுக்குக் கல்யாணம் பண்ணனும். நானும் படிச்சு டிஎன்பிசி எழுதி வேலைக்குப் போலான்னு இருக்கறன். எங்க வீட்டுல தெரிஞ்சா இதுக்குத்தான் உன்னயப் படிக்க அனுப்பமான்னு அடிச்சே கொன்னுருவாங்க சார்’ என்றான் சரவணன். அவன் கன்னத்தில் சில துளிக் கண்ணீர் வடிவதைக் கண்டார் கேவி.

‘அட… நீ அழுவாத. இப்பிடிப் பொறுப்பா எந்தப் பையன் இருக்கறான்? எல்லாம் தெல்லவேரி நாயாத் திரியறாங்க. நீ அந்தப் பொண்ணக் கூட்டியா. நான் பேசறன்’ என்று குரலில் உறுதியோடு சொன்னார் கேவி.

‘அறிவு… அவந்தான் பேச மாட்டமுன்னு சொல்றான். நீ பேசுவீல்ல… சொல்லிக் கூட்டிக்கிட்டு வா’ என்று பொறுப்பை அறிவழகனிடம் ஒப்படைத்தார் விகே.

உடனே அறிவழகன் ‘நான் கூட்டியாரங்க சார். அது ரொம்பத் தெகிரியமான பொண்ணுங்க சார். வந்து பேசும்’ என்றான்.

‘செரி, இந்தவர் ஃப்ரிதான். இப்பவே கூட்டியாரயா? இதயெல்லாம் தள்ளிப் போடக் கூடாது. எங்க வெச்சுப் பேசலாம்? ஸ்டாப் ரூம்ல வேண்டாம்’ என்று யோசித்தார் கேவி.

‘நம்ம ஃபஸ்ட் எம்.ஏ. கிளாஸ் ரூம் சும்மாதான் இருக்குதுங்க சார்’ என்று நினைவுபடுத்தினார் விகே.

‘செரி. அங்கயே வெச்சுப் பேசலாம்’ என்று ஒப்புதல் கொடுத்தார்.

‘நாங்க அங்க போயி இருக்கறம். சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாங்க’ என்றார் விகே.

‘எதுக்கும் ஹச்சோடிக்கி ஒருவார்த்த சொல்லீரலாங்களா சார்’ என்று இழுத்தார் கேவி.

‘ஹச்சோடி என்ன சொல்லீருவான்? நானும் அவனும் ஒரே பேட்ச்தான? ரோஸ்டர்ல அவன் மேல வந்துட்டான். வயசுலயும் என்னயவிட நாலு மாசம் சின்னவன் அவன்’ என்று ஏற்கனவே பலமுறை சொன்ன அதே விவரத்தை வேகமாகச் சொன்னார் கேவி.

‘ஆமாங்க சார், ஆமாங்க சார்’ என்று சொல்லித் தன் யோசனையைத் திருப்பி வாங்கிக் கொண்டார் விகே.

மாணவர்கள் மூவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டே வேகமாகப் போனார்கள். இந்தப் பிரச்சினையை கேவி சார் எப்படிக் கையாள்வார் என்று யோசித்துக்கொண்டே நடந்தார் விகே. பெண்கள் இப்போது எப்படியெல்லாம் மாறிவிட்டார்கள் என்னும் வியப்பு மாறாமல் திரைப்படங்களையும் இன்றைய கலாச்சாரத்தையும் திட்டிக்கொண்டே வந்தார் கேவி.

‘எதோ ஒரு படத்துல இறுக்கி அணச்சு ஒரு உம்மா குடுன்னு மலயாளத்துல சொல்லிப் பல பேருகிட்ட ரஜினி கேட்டுத் திரிவானே, அது மாதிரியில்ல இருக்குது?’ என்றார் கேவி.

‘ஆமாங்க சார்… அதுல மீனாதான் ஹீரோயின்’ என்று தன் திரைப்பட அறிவையும் வெளிப்படுத்தினார் விகே.

‘நெசமேலுமே ஒருபொண்ணு எல்லாருத்துக்கும் முன்னால ஒருத்தனக் கட்டிப் புடிச்சு முத்தம் குடுக்குமா? சும்மா பயப்படுத்தியிருக்கும். அப்பிடித்தானே?’ என்று விகேவின் முகம் பார்த்துக் கேட்டார்.

விகேவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்குக் குழப்பமாக இருந்தது. முத்தம் கொடுக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கொடுக்கும் என்பதும் உறுதியில்லை. அவருக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்ல முயன்றார்.

‘இன்னக்கத்த பொண்ணுங்கள நம்ப முடியாதுங்க சார். குடுத்தாலும் குடுக்கும்’ என்று பொதுப்படையாகச் சொன்னார்.

இருவரும் எம்.ஏ. வகுப்பறைக்குள் போய் அமர்ந்தனர். இருபது பேர் அமர்கிற அளவு சிறிய அறை. முன்னால் ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருந்தது. அதை அசைத்துப் பார்த்துப் பிறகு உட்கார்ந்தார் கேவி. அவருக்கு எதிரே முதல் வரிசை பெஞ்சில் விகே உட்கார்ந்து கொண்டார். எம்.ஏ. படிப்பு தொடங்கிய சமயத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்ந்த நினைவு அவருக்கு வந்துவிட்டது. ‘அந்த மொத வருசம் எம்.ஏ. சேந்த பையன் பிரகாசு உங்கள மாதிரிதான் இந்தப் பெஞ்சுல உக்காந்திருப்பான்’ என்று சொன்னார். பலமுறை சொல்லியிருந்த போதும் இப்போதைய சூழல் அதை நினைவுபடுத்தியது.

‘நானும் உங்க ஸ்டூடண்ட் தாங்க சார்’ என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார் விகே. அதைக் கண்டுகொள்ளாமல் கேவி மேற்கொண்டு பேசினார்.

‘என்னோட சர்வீஸ்ல இப்பிடி ஒரு பஞ்சாயத்து வந்ததேயில்ல. பையன் லட்டர் குடுக்கறா, பொறத்தாண்டயே வர்றான், கமெண்ட் பண்றான் அப்பிடி இப்பிடீன்னு பிரச்சின வந்திருக்குது. பேரண்ட்ஸ வர வெச்சுக்கூடப் பேசியிருக்கறம். நம்ம டிபார்ட்மெண்ட ஹிஸ்ட்ரியில என்ன, நம்ம காலேஜ் ஹிஸ்ட்ரியிலயே இதுதான் மொதக் கேஸா இருக்கும்’ என்றார் கேவி.

இதைத் துறைத்தலைவரிடமோ முதல்வரிடமோ கொண்டு போயிருப்பதுதான் சரியோ என்று விகேவுக்குத் தோன்றியது. ஆனால் பையன்கள் வந்தது தம்மிடம் தானே? பெரிய பிரச்சினை ஆகிவிட்டால்? அனுபவம் மிக்க ஆசிரியர், அதுவும் நிரந்தரப் பேராசிரியர் கேவி இருக்கும்போது கவலை வேண்டாம் என்று மனதுக்குள் ஒருமாதிரி சமாதானத்திற்கு வந்தார். கேவி நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்தார்.

‘நானெல்லாம் படிக்கற காலத்துல கிளாஸ்ல ஒருபொண்ணுகூடக் கெடையாது. இத்தனைக்கும் கோ எஜுகேசன் காலேஜ்தான். ஹிஸ்ட்ரி படிக்கறதுக்கு எந்தப் பொண்ணும் சேராது. சயின்ஸ்ல ஒன்னு ரண்டு இருக்கும். அதுங்களும் பசங்ககிட்டப் பேசாதுவ. பிலுக்கிக்கிட்டுப் போவும். பசங்கதான் வழியில நின்னுக்கிட்டு எதாச்சும் கமெண்ட் பண்ணுவானுங்க’ என்று அந்தக் கால வரலாற்றை விவரித்துக் கொண்டிருந்தார்.

வரலாற்றின் பக்கங்கள் ஒருபோதும் முடிவதில்லை. இடையிலேயே அவர்கள் வந்து சேர்ந்தனர். அந்தப் பெண் தனியாகத்தான் வந்தாள். ஆசிரியரைப் பார்க்க எந்தப் பெண்ணும் தனியாக வந்து அவர் பார்த்ததில்லை. நான்கைந்து பேர் சேர்ந்து வருவார்கள். குறைந்தது இரண்டு பேராவது வருவார்கள். இவள் தனியாக வருகிறாள். பெருந்துணிச்சல் உள்ளவள்தான் என்று தோன்றியது. பையன்களுக்கு முன்னால் அறைக்குள் நுழைந்து கேவியைப் பார்த்துக் ‘குட்மார்னிங் சார்’ என்றாள். என்சிசி சல்யூட் மாதிரி தெரிந்தது. பின்னாலேயே மூவரும் வந்து நின்றனர். திருத்தமான வட்ட முகம் மெல்லிய கறுப்பு நிறத்தில் பொலிவு கொண்டிருந்தது. அழகான பெண் தானே, இவன் ஏன் வேண்டாம் என்று சொல்கிறான் என்று நினைத்துச் சரவணனைப் பார்த்தார் விகே. அவன் பதற்றத்துடன் கேவியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘என்னம்மா… உங்க வீட்டுல படிக்கத்தான அனுப்பறாங்க?’ என்று ஆசிரியரின் அம்பை எடுத்தவுடனேயே எய்தார் கேவி.

‘ஆமாங்க சார்’ என்றாள் தடுமாற்றம் இல்லாமல்.

அம்பு போய்க் கொண்டிருந்தது.

‘அப்பறம்… நீ படிக்க வந்த மாதிரி தெரீலியே?’

‘படிக்கத்தான் வந்திருக்கறன் சார்.’

‘இந்தப் பையன லவ் பண்ணச் சொல்லி மெரட்டறியாமே. உங்கப்பா அம்மாவுக்குத் தெரீமா? எங்க நெம்பர் குடு. பேசலாம்.’

‘அவுங்ககிட்டப் போனில்லைங்க சார். இவன் ஒத்துக்கிட்டப்பறம் நானே அவுங்ககிட்டச் சொல்லிக்கறங்க சார்.’

இந்தப் பெண்ணிடம் நிதானித்துத்தான் பேச வேண்டும் என்று அவருக்கு மனதில் தோன்றியது.

‘அவந்தான் லவ்வெல்லாம் இல்லீன்னு சொல்றானேம்மா.’

‘இல்லீங்க சார். அவனும் என்னய லவ் பண்றான்.’

‘என்னம்மா? சாருகிட்ட எப்பிடிப் பேசறதுன்னு உனக்குத் தெரியாது? இப்பிடியா பேசுவாங்க?’ என்று அவள் மேல் கோபத்தைக் காட்டினார் விகே.

‘உடுங்க. இந்தக் காலத்துப் பிள்ளைங்க… எப்பிடி வேண்ணாலும் பேசுவாங்க’ என்று அமைதிப்படுத்திவிட்டு ‘என்னம்மா சொன்ன?’ என்று அவளை நோக்கிக் கேட்டார்.

‘அவனும் என்னய லவ் பண்றான்னு சொன்னங்க சார்’ என்று தெளிவாகச் சொன்னாள்.

கேவிக்குக் குழப்பமாயிற்று. சரவணனைப் பார்த்துக் கேட்டார்.

‘என்னடா… இந்தப் பொண்ணு இப்பிடிச் சொல்லுது?’

‘சார்… நான் லவ்வெல்லாம் பண்ணுல. அது பொய் சொல்லுது’ என்று அவன் பதறினான்.

‘இப்பிடித்தான் சொல்லுவான் சார். எம்மேல அவனுக்கு ஆழமா லவ்விருக்குது. அத மறச்சிக்கிட்டுப் பொய் சொல்றான். லவ்வ மனசுல வெச்சுக்கிட்டு இல்லீன்னு சொல்லி அவனயே ஏமாத்திக்கறான் சார்’ என்றாள் அவள்.

‘அவன் பொய் சொல்றான்னு எப்பிடிச் சொல்ற?’

‘எம்பேர டியூடுன்னு சேவ் பண்ணி வெச்சிருந்தான் சார்.’

‘டியூடா… அப்பிடின்னா என்னம்மா’ என்று கேட்டார் கேவி.

‘சார்… அது லவ்வுக்கு முன்னாடி ஸ்டேஜ்’ என்று விளக்க முயன்றார் விகே.

‘என்னங்க… டவுன்பஸ்ஸுக்கு ஸ்டேஜ் இருக்கற மாதிரி சொல்றீங்க?’ என்று அதிசயப்பட்டார் கேவி.

‘இல்லீங்க சார்… அது லவ்வத்தான் குறிக்கும். அப்பறம் எங்கூட ரண்டு சினிமாவுக்கு வந்திருக்கறான். ஒருநாள் டூருக்கும் போயிருக்கறம்’ என்று சரவணன் தன்னைக் காதலிப்பதற்கான சான்றுகளை அடுக்கினாள்.

‘என்னடா?’ என்று அவன் பக்கம் திரும்பினார்.

‘சார்… சினிமாவுக்குப் பத்துப் பாஞ்சு பேரு சேந்துதான் போனம். டூரெல்லாம் இல்ல. ஒருநாள் காலேஜ் ஸ்ட்ரைக்கு, கிளாஸ் இல்லைன்னு பக்கத்துல இருக்கற டேமுக்குப் போனோம். அதும் கூட்டமாத்தான்’ என்று சரவணன் விளக்கினான்.

‘எம்பக்கத்துல உக்காந்துதான் படம் பாத்தான். டேமுல என்னோடவே தான் இருந்தான். வேண்ணா போட்டோவக் காட்டறங்க சார். செல்லுல தான் இருக்குது’ என்று தன் கைப்பேசியை எடுத்தாள்.

அவள் பேசுவதை ‘அடேங்கப்பா’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே கவனித்தார் விகே. இவளிடம் பேசி வெல்ல யாராலும் முடியாது என்று தோன்றியது. கேவி என்ன செய்யப் போகிறார் என்று அறியும் ஆவல் வளர்ந்தது.

‘அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். ஆனா அவன் உன்னய லவ் பண்ணுலன்னு சொல்றானேம்மா? அவன் படிச்சு வேலக்கிப் போற ஐடியாவுல இருக்கறான். இப்ப அவனுக்கு லவ்வு, கலியாணமெல்லாம் ஒத்து வராதேம்மா’ என்று நிதானமாக எடுத்துச் சொன்னார்.

‘அவன் லவ் பண்றத மொத ஒத்துக்கட்டுங்க சார். அப்பறம் மத்ததப் பேசிக்கலாம்’ என்று தன் நிலையிலிருந்து சிறிதும் இறங்காமல் சொன்னாள்.

‘அவனுக்கு லவ்வே இல்லீன்னு சொல்றானேம்மா’ என்றார்.

‘அதெல்லாம் பொய்யிங்க சார். அவன் மனசக் கேக்கச் சொல்லுங்க, எம்மேல லவ்வு இருக்கறத அது சொல்லும்’ என்றாள்.

அவள் பேச்சிலிருந்த தீவிரம் அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

‘இல்லீன்னு சொல்றவன ஏம்மா தொந்தரவு பண்ற? இந்த அறிவழகன் உன்னய லவ் பண்ணத் தயாரா இருக்கறாம்மா. செரியா?’ என்று அறிவழகனைக் கைகாட்டினார்.

அவன் பயத்தோடு ‘சார்… என்னய மாட்டி உடாதீங்க’ என்று கோபமாகச் சொன்னான்.

‘என்னோட சரன்தான் எனக்கு வேணும் சார்’ என்றாள்.

‘என்னம்மா?’

‘என்னோட சரன் எனக்கு வேணும்’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னாள்.

பேச்சைத் தொடர்வதற்குத் தடையாகப் பெரும்பாறாங்கல்லைப் போல அவள் சொற்கள் வந்து நின்றன. தன்வசம் இருந்த அம்புகள் எல்லாம் பொடிந்து விழுவதைக் கேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வதென்று நிமிட நேரம் தயங்கியவர் பிறகு ஒருமுடிவுக்கு வந்தவராய்ச் சொன்னார்.

‘சரவணா… வந்து முன்னால நில்லுடா. ஒரு பொண்ணு முத்தம் குடுக்கறம்னு சொல்றா… உனக்கென்னடா… வா… வந்து நில்லு… நாளைக்கென்ன… இப்பவே முத்தம் குடுக்கட்டும். குடு… எத்தன முத்தம் குடுக்கறயோ குடு… நாங்களும் பாக்கறம். அறிவழகா… வீடியோ எடு.’

அவள் முகத்தில் குழப்பம் சூழச் சூழத் தமக்குள் மகிழ்ச்சி கூடுவதை உணர்ந்தார் கேவி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com