நியதி

நியதி
ஓவியம்: பி.ஆர். ராஜன்
Published on

முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து நெடுநேரமாகத் தன் வழியை மறித்தபடி போய்க்கொண்டிருப்பதாக விஸ்வநாதனுக்குத் தோன்றியது. அது கொஞ்சம் குறுகலான சாலை. இதுபோன்ற சாலைகளில் பெரிய வண்டிகளை முந்த முயல்வது பாதுகாப்பானதல்ல என்றாலும் விஸ்வநாதனின் எரிச்சல் அவனைத் தூண்டியது. சட்டென்று கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு பேருந்தின் இடதுபுறமாக அதைக் கடந்து சென்றான். பேருந்தைக் கடந்ததும் பெரிய சாதனை செய்துவிட்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.

வாயிலிருந்து ஒரு பாட்டு வந்தது. தற்செயலாகச் சாலையின் எதிர்ப்புறம் பார்வை சென்றபோது பெரிய பல்பொருள் அங்காடி ஒன்று கண்ணில் பட்டது. உடனே வண்டியை முடுக்கி வேகம் கூட்டி அடுத்து வந்த ‘யு’ திருப்பத்தில் அரை வட்டமடித்துத் திருப்பினான். அந்தப்புறம் வந்துகொண்டிருந்த வாகனங்களினூடே வளைத்து நெளித்து ஓட்டியபடி இடது ஓரமாகச் சென்று அங்காடிக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தினான்.

 “இங்க எதுக்குப்பா நிறுத்தறீங்க?”

“அப்பாக்கு ஷேவிங் பிளேடு வாங்கணுண்டா கண்ணா.”

“லேட்டாகுமா?”

“உடனே வாங்கிடலாம்மா. ஏன், வீட்டுக்குச் சீக்கிரமா போகணுமா? ஹோம் வொர்க் இருக்கா?”

“ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சிட்டேம்பா. பசிக்குது. அதான் சீக்கரம்

போலாம்னு . . .”

“பசிக்கிதா? அச்சச்சோ . . .” என்றபடி சுற்றுமுற்றும் பார்த்த விஸ்வநாதனின் கண்களில் ஒரு பேக்கரி தட்டுப்பட்டது.

“பேக்கரில ஏதாவது சாப்பட்றியா?” 

“வேணம்பா. அம்மா மேகி பண்ணித் தரேன்று சொன்னா. வீட்டுக்குப் போய் சாப்டுக்கறேம்பா.”

“அப்ப சரி. சீக்கரமா வாங்கிட்டு வந்துடலாம். சரியா . . .?”

கமலி தலையாட்டினாள். விஸ்வநாதன் அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, “சமத்து” என்றான்.

பல்பொருள் அங்காடிக்குள் சென்றவன் வாங்க விரும்பிய பொருளோடு மேலும் நான்கைந்து பொருட்களை வாங்கிக்கொண்டான். கமலி தன் பங்குக்கு கலர் பென்சில், படம் வரைவதற்கான புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாள். தனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பாவிடம் காட்டுவதற்காக அப்பா இருந்த இடத்தை எட்டிப் பார்த்தாள். காணவில்லை. உள்ளே சென்று தேடினாள். பாதாம், முந்திரி முதலான பருப்பு வகைகள் வைத்திருக்கும் இடத்தில் அப்பா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். கையில் இருந்த பொருட்களைக் காட்டினாள். 

“உங்கிட்ட ஏற்கெனவே நெறய கலரிங் பென்சில், வாட்டர் கலர், பிரஷ் எல்லாம் இருக்கே?” என்றான் விஸ்வநாதன்.

“இந்த மாதிரி இல்லப்பா, இது க்ரயான் பென்சில். இதுல ட்ரா பண்ணினா நல்லா இருக்கும்பா” என்றாள் கமலி.

“சரி, எடுத்துக்கோ. கவுண்டர் கிட்ட நில்லு. வந்துடறேன்” என்றபோது கைப்பேசி மணியடித்தது.

“சீக்கிரம் வாங்கப்பா” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

விஸ்வநாதன் வாசலுக்கு வரப் பத்து நிமிடங்கள் ஆயின. கமலியின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. அதைக் கண்டு பதறியவன், “முடிஞ்சிது . . . முடிஞ்சிது... தோ கௌம்பிடலாம்” என்று சொல்லிவிட்டு வாங்கியவற்றுக்குப் பணம் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் தன் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினான். 

வண்டியை எடுக்க முடியாதபடி யாரோ தன் வண்டியைக் குறுக்கே நிறுத்தியிருந்தார். அதைக் கண்டதும் விஸ்வநாதனுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கத்தில் இருந்த காவலரிடம் சத்தம் போட்டான்.

“இப்படி நிறுத்தினா எப்படிய்யா எடுக்கறது?”

“நா அந்த பக்கம் போயிருக்கும்போது யாரோ நிறுத்திட்டாங்க சார். கவனிக்கல” என்றார் காவலர். 

“அதப் பாக்கறதுதானய்யா உன் வேல? கவனிக்கலன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று விஸ்வநாதன் மேலும் கத்தினான்.

“அப்பா...” என்றாள் கமலி. விஸ்வநாதன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“கத்தாதிங்கப்பா...” என்றாள் மெதுவான குரலில்.

குறுக்கே நின்ற வண்டியைக் காவலர் தள்ளி வைத்தார். பிறகு விஸ்வநாதன் வண்டியை வெளியே எடுத்தான். சில்லறை ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டு நின்ற காவலரைக் கவனிக்காதவன்போல விஸ்வநாதன் வண்டியைக் கிளப்பினான். காவலரின் முகத்தைப் பார்த்துவிட்டுக் கமலி வண்டியில் ஏறிக்கொண்டாள்.

“யூஸ்லெஸ் ஃபெலோ. வேலைய ஒழுங்கா செய்ய துப்பில்ல. டிப்ஸ் மட்டும் கேக்க வந்துட்டான்” என்று தன் மகளிடம் சொன்னபடியே வண்யை ஓட்டினான்.

கமலி ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் இடுப்பைக் கட்டியபடி உட்கார்ந்திருந்தாள். கண்கள் சாலையை வேடிக்கை பார்த்தபடி இருந்தன. வண்டி ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியது. “சீ... ரோடு எவ்ளோ கேவலமா இருக்கு. ஒரு ஸ்ட்ரீட்டாவது ஒழுங்கா இருக்கா. எல்லாத் தெருவுலயும் குண்டு, குழி, பள்ளம், மேடு. ஒருத்தன் ரோடு போட்டுட்டு போவான். அடுத்த நாளே இன்னொருத்தன் வந்து தோண்டிட்டுப் போவான். தோண்டறவன் அத சரியா மூட மாட்டான்” என்று சலித்துக்கொண்டான்.

“கத்தாதீங்கப்பா . . .” என்றாள் கமலி. 

“இதையெல்லாம் பாத்தா பயங்கர கோவமா வருதும்மா. என்ன ஊரு இது. யூஸ்லெஸ் ஃபெலோஸ்...”

அப்போது ஒரு வேகத்தடை எதிர்ப்பட்டது. “பாத்தியா... இங்க எதுக்கு ஸ்பீட் பிரேக்கர்? அதுவும் இவ்வளோ பெரிசா? இது ஸ்பீட் பிரேக்கரா வீல் பிரேக்கரான்னு தெரியல...” என்றான்.

“அப்பா... ரோட்ல சத்தம் போட்டுப் பேசாதீங்கப்பா. வீட்ல போய் பேசிக்கலாம். எனக்குப் பசிக்குது” என்றாள் கமலி.

“சரிம்மா, சரிம்மா. சாரி. இதெல்லாம் பாத்தா பத்திக்கிட்டு வருது” என்றவன் வண்டியை அமைதியாக ஓட்டினான்.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் என்றாலும் அது சந்தைப் பகுதி என்பதால் சாலையில் போக்குவரத்து அதிகம் இருந்தது. மேம்பாலம் ஒன்றைத் தாண்டியதும் வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் விஸ்வநாதனுக்கு எரிச்சல் வந்தது. “ஞாயித்துக்கிழமைகூட ஏன்தான் இவ்ளோ டிராஃபிக் இருக்கோ தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டான். எதிரில் தவறான முறையில் தாண்டி வந்த வாகனத்தைப் பார்த்துச் சத்தம் போட்டான். தனக்குப் பின்னாலிருந்து சாலையில் மறுபுறத்தில் ஏறித் தாண்டிச் செல்ல முயன்ற ஒருவரைப் பார்த்து, “இப்படிப் பண்ணினா டிராஃபிக் கிளியர் ஆகவே ஆகாது சார். டிராஃபிக் ஜாம் ஜாஸ்திதான் ஆகும்” என்றான். “அங்கதான் கேப் இருக்குல்ல?” என்று சொல்லிவிட்டு அவர் தாண்டிச் சென்றார். “இர்ரெஸ்பான்ஸிபிள் பீப்பிள்” என்று அப்பா முணுமுணுத்தது கமலிக்குக் கேட்டது.

ஒருவழியாகப் போக்குவரத்து நெருக்கடி விலகியதும் விஸ்வநாதன் வேகமெடுத்தான். வேகமாகவே இடதுபுறம் திரும்பியபோது அங்கே வந்த இன்னொரு இரு சக்கர வாகனத்துடன் மோதிக்கொள்ளும் நிலைக்குப் போய்விட்டான். எதிரில் வண்யை ஓட்டி வந்தவன் சட்டென்று வண்டியைத் திருப்பி மோதலைத் தவிர்த்தான். விஸ்வநாதனுக்கு ஒரு கணம் உயிர் போய்விட்டு வந்ததுபோல் இருந்தது. “சாவு கிராக்கி... பாத்து வரமாட்ட? முட்டாள்” என்று கத்தினான்.

மோதலைத் தவிர்த்துவிட்டுத் தாண்டிப் போனவன் இதைக் கேட்டதும் வண்டியை வேகமாகத் திருப்பி இவனருகில் வந்தான். அந்த வண்டியில் இரண்டு பேர் இருந்தார்கள். இருவரும் இருபது, இருபத்தைந்து வயது இருக்கக்கூடிய இளைஞர்கள்.

“என்ன சொன்ன?” என்று கேட்டான் வண்டியை ஓட்டி வந்தவன் நிதானமான குரலில்.

“ரோட்ல பாத்து வரமாட்டியா? கொஞ்சம் தவறியிருந்தா வண்டி மோதி ரெண்டு வண்டியும் தெறிச்சிருக்கும். பாத்து ஓட்டு” என்றான் விஸ்வநாதன் படபடப்புடன்.

“நீ பாக்காம வந்துட்டு என்ன சொல்றியா? நான் கட் எடுத்துருக்காட்டி நீ காலியாயிட்ருப்ப. பண்றதையும் பண்ணிட்டு சத்தமா போடற?” என்றான் அவன்.

“நீ சின்ன சந்துலேந்து மெயின் ரோடுக்கு வரும்போது எப்படித் திரும்பணும்? நீ அப்டியா திரும்பின? நான் ஒழுங்கா ரூல்படிதான் வந்தேன். நீ ராங் சைட்ல திரும்பிட்டு என்ன சொல்றயா?”

“யோவ், என்னய்யா பெருசா சட்டம் பேசற? நீ என்ன டிராபிக் போலீஸா? இத்தினி வண்டி நிக்கும்போது ரைட்டு, லெஃப்டுன்னு பாத்துனுருக்க முடியுமா? கேப்ப பாத்து போயினே இருக்க வேண்டித்தானே. மெயின் ரோட்லேந்து சந்துக்கு வர்ரவன் மட்டும் கண்ண மூடிக்கினு வர்லாமா? என்னா பேச்சு பேசற?”

“தப்பா வர்ரதும் வந்துட்டு தெனாவட்டா வேற பேசறயா? இதுக்கெல்லாம் நான் பயந்துர மாட்டேன். அந்த பருப்புல்லாம் இங்க வேகாது” என்று விஸ்வநாதன் குரலை உயர்த்திக் கை நீட்டிப் பேசினான். கமலி அப்பாவின் தோளைப் பிடித்து இழுத்தாள். “போலாம்பா. சண்ட போடாதீங்கப்பா...” என்றாள்.

“நீ பயப்படாதம்மா. நான் பாத்துக்கறேன்'' என்று அவளிடம் சொல்லிவிட்டு, “இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்கிட்ட வெச்சிக்காத” என்றான் சண்டைக்கு வந்தவனிடம். 

‘‘நீ என்ன பெரிய பருப்பா? எதோ மோதறா மாதிரி வந்துது. எப்டியோ தப்பிச்சோம்னு போவாம சாவு கிராக்கி அது இதுன்னு பேசினுருக்க? இன்னும் ஒரு வார்த்த பேசினா வாய கொயப்பிடுவேன்” என்றான் அவன்.

“அடிப்பியா, அடிச்சிடுவியா... எங்க அடி பாப்பம்...” என்று விஸ்வநாதன் படபடத்தான். “நீ கொஞ்சம் கீழே இறங்கும்மா...” என்று கமலியிடம் சொன்னான். அவள் அசையவில்லை. தைரியமாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் விஸ்வநாதனுக்கு உள்ளூர உதறல் எடுக்கத் தொடங்கியது. அந்த வண்டியில் வந்தவர்களின் தோற்றம் மிரட்டும்படி இருந்தது.

“போலாம்பா, சண்ட போடாதீங்கப்பா...” என்றாள் கமலி. அவள் குரல் கம்மியது. அதைக் கேட்ட விஸ்வநாதனுக்குக் கோபம் அதிகரித்தது. “இவனெல்லாம் சும்மா வுடக் கூடாதும்மா” என்றவன், “நீ என்ன பெரிய ரவுடியா? அடிச்சிடுவியா?” என்றான் அவனைப் பார்த்து.

“ங்கோத்த நீ வாங்காம போகப்போறதில்ல. எறங்குடா, ரெண்டு போட்டாதாண்டா இவன் அடங்குவான்” என்றான் அந்த வண்டியோட்டி.

பின்னால் அமர்ந்திருந்தவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். “டேய், வண்டிய எட்றா. வேற வேல இல்ல உனுக்கு?” என்றான்.

பின்னால் இருப்பவன் இறங்காமல் தன்னால் இறங்க முடியாது என்பதால் வண்டியோட்டி மேலும் சூடானான்.

“ஏய், எறங்குடா, இவம் பேசற பேச்சுக்கு வாய ஒட்ச்சிட்டு வர வேணாம்?” என்றான்.

“ஒண்ணியும் வாணாம். நீ மூடினு வண்டிய எடு” என்றான் பின்னால் இருந்தவன்.

இதைப் பார்த்த விஸ்வநாதன், “ஜாக்கிரதை. பாத்து போ” என்றான். அந்த வண்டியோட்டியின் கோபம் உச்சத்திற்குச் சென்றது.

“அடிங் கோத்த... யார பாத்து ஜாக்ரதன்ற? டேய், எறங்குடா. இவன சொம்மா உடக் கூடாதுடா” என்று கத்தினான்.

“ஏய், கெட்ட வார்த்த பேசினா அப்புறம் நல்லா இருக்காது. வாய அடக்கி பேசு” என்று விஸ்வநாதன் கத்தினான்.

“அப்பா, போலாம்பா...” என்றாள் கமலி.

“டேய், நான் சொல்றன்ல்ல... வண்டிய எடு” என்று பின்னால் இருப்பவன் அதட்டினான், பிறகு அவன் விஸ்வநாதனைப் பார்த்து, “நீங்க போங்க சார். ரோட்ல எதுக்கு சார் சண்ட, நீங்க போங்க சார்” என்றான்.

உள்ளூர பயந்துகொண்டிருந்த விஸ்வநாதனுக்கு இந்த வார்த்தைகள் பேருதவியாக இருந்தன. “உங்க ஃப்ரெண்டு கிட்ட வண்டிய ஒழுங்கா ஓட்ட சொல்லுங்க” என்றபடி வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனான். வண்டி அவர்களைக் கடந்தபோது கமலி அவர்களை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். சண்டை போட்டவன் கோபத்துடன் துரத்த முனைந்தபோது பின்னால் இருந்தவன் கை நீட்டி வண்டியின் சாவியை எடுத்துவிட்டான்.

“ஏய்... ஏண்டா என்ன தடுக்கற? எனக்கு வர்ற கோபத்துக்கு அவன் வாய ஒட்ச்சிருக்கணுண்டா. . .” என்றான்.

“ஏ லூஸூ, உனக்கு அறிவில்ல?” 

“அவந்தானடா மொதல்ல ஆரம்பிச்சான்?”

“அதுக்காக? ஆமா, அந்த ஆளு ஓவராதாம் பேசினான். அதுக்காக கொயந்த முன்னாலயே ஒரு அப்பன போட்டு அடிப்பியா?” என்றான் பின்னால் இருந்தவன்.

*

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com