அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது தான் முதன்முதலாக நானும் தம்பியும் ஓடக்காடு பெரியப்பா வீட்டுக்குச் சென்றோம். நான் ஒன்பதாம் வகுப்பிலும் தம்பி ஐந்திலும் படித்துக்கொண்டிருந்தோம். சாயங்காலம் ஐந்து மணிவாக்கில் அப்பாதான் சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்றார். அவருக்கு அத்தனை விருப்பமில்லை என்றாலும் அம்மாவின் வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டார். வீட்டையும் கண்ணகி நகர், நெசவாளர் காலனி எல்லைகளைத் தாண்டாத எங்களுக்கும் புதிய இடத்துக்குச் செல்லும் ஆர்வமிருந்தது.
அம்மாவோ அப்பாவோ உடனில்லாமல் சொந்தங்களின் வீடுகளுக்கு சென்று இரவு தங்கியதில்லை என்பதால் கொஞ்சம் பயமுமிருந்தது. இரண்டு நாள்கள் இருந்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வந்துவிடலாம் என்பதுதான் திட்டம். நான்கு நாள்களுக்கு தார் சுற்ற வேண்டாம், சைக்கிளில் தண்ணீர் சுமக்கவேண்டாம், அடுப்புக்கு விறகு பொறுக்க வேண்டாம் என்று நிறைய காரணங்கள் இருந்தன.
அன்றிரவே பெரியப்பா வீடு எங்களுக்கு பல ஆச்சரியங்களையும் சந்தோஷங்களையும் கொடுத்தது. சாயங்காலம் ஏழரை மணிக்கெல்லாம் ஆஷா கபேயிலிருந்து சுடச்சுட புரோட்டா வாங்கி வந்தார் பெரியப்பா. பரமு, அழகருடன் நாங்கள் இருவரும். எதிரில் அம்பிகாக்காவுடன் பெரியம்மா. ரமாக்காதான் பரிமாறினாள். வாழை இலையின் வதங்கிய மணத்துடன் ரமாக்கா புரோட்டாவை பிய்த்துப் போட்டு சூடான பட்டாணி கேரட் பீன்ஸ் குருமாவை ஊற்றினாள். அத்தனை சுவையான பரோட்டாவை அதன் பிறகு நான் சாப்பிட்டதாய் நினைவில்லை. தம்பி ஒன்றரை புரோட்டா சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு திண்ணையில் சாய்ந்து வானில் காய்ந்த நிலவைப் பார்த்தபடி கதைபேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் ஓடும் ரயில்களைப் பார்க்க நிச்சயமாக அழைத்துப் போவதாய் பரமு வாக்களித்தான். வெளியில் போயிருந்த பெரியப்பா மறுபடியும் வேகமான உள்ளே வந்தார். “என்னது இப்பிடி படுத்துட்டிருக்கீங்க. கௌம்புங்க. பத்து மணிக்கு படம் போட்டுருவானில்ல.”
புஷ்பா தியேட்டரில் ‘எங்க பாட்டன் சொத்து’. பெரியப்பாவின் கையில் எட்டு டிக்கெட்டுகள். தம்பிக்கு பிடித்த ஜெய்சங்கர் படம். உற்சாகத்துடன் ஓடினோம். கனைத்தபடி தாவி ஓடும் குதிரைகளும் வெடிக்கும் துப்பாக்கிகளுமாய் சுறுசுறுப்பான படம். இடைவேளையில் பெரியப்பா முறுக்கும் ஆரஞ்சு கலரும் வாங்கித் தந்தார். இரவு ஒரு மணிக்கு காலேஜ் சாலையில் நடந்து வரும்போது ஓசையுடன் ரயில்கள் எதிரெதிர் தண்டவாளங்களில் கடந்து போவதைப் பார்க்க முடிந்தது. பெரியப்பாவின் வீட்டுக்கு வெகு அருகிலேயே ரயில் தண்டவாளங்கள். இரவெங்கும் ரயில்களின் தடதடக்கும் ஓசை கேட்டபடியே இருந்தது. பரமு தண்டவாளத்தின் ஓரமாய் சிக்கண்ணா காலேஜ் வரைக்கும் அழைத்துப் போவதாக மறுபடி சொன்னான்.
காலையில் கண்விழித்தபோது பெரியம்மா, பெரியப்பா இருவரும் புறப்பட்டிருந்தனர்.
ஊத்துகுளி சாலையில் இருந்த தனலட்சுமி பஞ்சாலையில்தான் பெரியப்பா, பெரியம்மா இருவருக்கும் வேலை. பஞ்சாலையில் என்ன வேலை என்று எனக்குத் தெரியாது. ஆறு மணிக்கெல்லாம் இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள். காக்கி அரைக்கால்சட்டையும் முழங்கை வரை சுருட்டி ஏற்றப்பட்ட வெள்ளை முழுக்கைச் சட்டையுமாய் பெரியப்பா விறுவிறுவென்று முன்னால் நடக்க, பெரியம்மா அடர்வண்ண நெகமம் புடவையுடன் தன் கனத்த உடலைத் தூக்கிக்கொண்டு வேர்வையுடன் பின்தொடர்ந்தார். கூந்தலில் எண்ணெயிட்டு அழுந்த வாரி கொண்டையிட்டிருக்கும் பெரியம்மாவின் கையில் பழைய காட்பரீஸ் சாக்லெட் பெட்டி. வாடிய வெற்றிலைகள், கொட்டைப் பாக்குகளுடன் சிறிய டப்பியில் சுண்ணாம்புடன் ஐந்தும் பத்துமாய் சில்லறை காசுகள் பெட்டிக்குள் கிடக்கும். எந்தெந்த நாளில் எந்தெந்த ஷிப்டில் வேலை பார்த்தார்கள் என்பதைக் குறிக்கவென மாதமும் தேதிகளும் கொண்ட ஒரு வெள்ளை அட்டை இருக்கும். மாதக் கடைசியில் நீண்ட காகிதச் சுருளொன்றும். சம்பளச் சீட்டு. ஆறே முக்காலுக்கு சங்கு ஊதுவதற்கு முன்பு பெரிய இரும்புக் கதவுகள் கொண்ட வாசலைக் கடந்து மரக் கூண்டுக்குள் நிற்கும் நேரக் காப்பாளரிடம் வருகையைப் பதிவு செய்துவிட வேண்டும். சங்கு ஊதி அடங்குவதற்குள் சுருள்மீசை கூர்க்கா கதவைச் சாத்திவிட்டால் ஒரு நாள் சம்பளம் வீணாகிவிடும்.
பெரியம்மா ஆலை வாசலை எட்டுவதற்குள் பெரியப்பா தொழிற்சங்கக் கட்டடத்தை ஒட்டியிருக்கும் ராசப்பன் கடையில் டீயைக் குடித்துவிட்டு சூடான உருளைக் கிழங்கு போண்டாக்கள் இரண்டை தினத்தந்தி தாளில் பொதிந்து வைத்துக் காத்திருப்பார். உள்ளே நுழைந்து வருகையைப் பதிவு செய்துவிட்டு பஞ்சுக் கூடத்துக்கு நடந்து செல்வதற்குள் பெரியம்மா இரண்டு போண்டாக்களை தின்று முடித்திருப்பார். குழாயில் நீரைப் பருகிவிட்டு பாக்கை மென்றபடிவெற்றிலையைக் கிள்ளி லேசாய் சுண்ணாம்பு தடவி வாயில் போட்டுக்கொண்டு பணியிடத்துக்கு நகர்வாள்.
ஒன்பதரை மணிக்கு ரமாக்கா சோறாக்கி முடித்திருந்தாள். சூடான சோற்றை கடைசி அடுக்கில் நிறைத்து அதற்கடுத்த அடுக்கில் குழம்பையும் மூன்றாவது அடுக்கில் ரசத்தையும் நிறைத்தாள். மேல் தட்டில் பொரியலை வைத்து மூடி பிடிப்பானைப் பொருத்தி கரண்டியை நுழைத்து சரிபார்த்தாள். கைத்துணியால் ஒருமுறை கேரியரைத் துடைத்து நகர்த்தி வைத்தாள். இதேபோல இன்னொன்று. இரண்டு அடுக்குகளும் தயாரானதும் அழைத்தாள் “கண்ணுங்களா…”. திண்ணையில் அடுத்த வீட்டுச் சிறுவனுடன் குண்டு விளையாடிக் கொண்டிருக்கும் அழகர் ஆட்டத்தை அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே ஓடி வந்தான். நாங்கள் இருவரும் பின்னால் ஓடி வந்தோம். அதற்குள் பரமு, சாமி படத்துக்கு கீழே ஆணியில் மாட்டியிருக்கும் சைக்கிள் சாவியை கைப்பற்றியிருந்தான். வளையத்தை விரலில் மாட்டிச் சுழற்றியபடியே சிரிப்பதைக் கண்டு ஆத்திரமாய் வந்தது அழகருக்கு.
ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. சிரித்துக்கொண்டே வழிந்தான். கூடவே நாங்களும். பரமுவுக்கு பாசம் பொங்கியது. “எல்லாருமா போவோம். கொஞ்ச தூரம் நீங்களும் தள்ளிட்டு வருவீங்களாம்.” அடுக்கு உயரத்துக்கு தைக்கப்பட்ட காக்கிப் பைகளில் பாத்திரங்களை இட்டு ரமாக்கா எடுத்து வந்து சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டித் தந்தாள். “மெதுவா உருட்டீட்டு போங்கடா. சாம்பார் ரசமெல்லாம் சிந்துச்சுன்னா பாத்துக்கோங்க… நாளைக்கு சைக்கிள் எடுக்க விட மாட்டேன்.” பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் ரமாக்காதான் இரண்டு தூக்குகளையும் சுமந்துகொண்டு நடப்பாள். பெரியம்மாவைப்போலவேதான் ரமாக்காவும். பருத்த உடல்வாகு. கருப்பு. பார்த்தவுடன் பிடித்துப்போகிற முகலட்சணம். நடைவேகத்துக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. அபூர்வமாகத்தான் பற்கள் தெரிய கலகலத்துச் சிரிப்பாள். அக்கணத்தில் ரமாக்காவைவிட யாரும் அழகிகளெனத் தோன்றியதில்லை.
டிப்டாப் ஹோட்டல் அருகே சாக்கடை நாற்றம் மூக்கைத் துளைக்க நுழைபாலத்தைக் கடந்தோம். கருத்து நுரைத்த சாக்கடை நீர் பள்ளத்தில் நிறைந்து வழிந்தது. சம்பத் ஸ்டோரில் கூட்டம் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்கும்போது மீண்டும் கூட்டம் வந்துவிடும். தபால் நிலையத்தைக் கடந்து சாலை இறக்கத்தில் சைக்கிளை வேகமாக செலுத்தினான் பரமு. தம்பியால் ஓடி வர முடியவில்லை. அழுதான். நான் பாதியிலேயே நின்று அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். பட்சிராஜா முக்கிலிருந்த அரச மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினான் பரமு. வடக்கில் நடைமேடைகளில் சரக்கு வண்டியிலிருந்து நெல் மூட்டைகளை இறக்கிப் போட்டிருந்தனர். கிளிகளும் காக்கைகளும் பறந்து திரிந்தன. அங்கிருந்து கொஞ்ச தூரம் அழகர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். பத்தே முக்கால் மணிக்கு பஞ்சாலை வாசலை அடைந்தோம். சிறிய கதவின் வழியே உள்ளே எட்டிப் பார்த்தான் பரமு. முறுக்கு மீசையும் தொப்பியுமாய் நின்ற கூர்க்காவைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஒருவரை மட்டுமே அவன் அனுமதிக்க பரமு மெதுவாக உள்ளே நுழைந்து நேரக் காப்பாளரின் கூண்டுக்கு அருகே உணவடுக்குகளை வரிசையில் வைத்தான்.
வெளியில் எதிர்ப்பக்கமாய் டீக்கடை அருகே மர நிழலில் காத்திருந்தபோது பதினொன்றே கால் மணிக்கு சங்கொலித்தது. அதுவரை பெருத்த ஓசையுடன் இயங்கிக் கொண்டிருந்த ஆலை மெல்ல அடங்கியது. ஒவ்வொரு பிரிவும் பணியை நிறுத்துவது தெரிந்தது. கதவிடுக்கின் வழியே ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தோம். உடைகளை உதறிக்கொண்டு வெளியே வந்து தென்னை மரங்களின் வரிசையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களில் கை கால் முகம் கழுவினார்கள். பசியும் உடல் களைப்புமாய் அவரவர் உணவடுக்குகளைக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்தார்கள். பேசியபடியே அடுக்குகளைத் திறந்தார்கள். சிலர் மரத்தடிகளிலும். வார இறுதியில் நடக்கவிருக்கும் ‘கேட் மீட்டிங்’, சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, தீபாவளி போனஸ், சீட்டுப் பண விவகாரங்கள், கார்டிங் பிரிவில் ஏற்பட்ட சிறு விபத்து, வெள்ளிக் கிழமை வெளியான சிவாஜி படம், பூலுவபட்டி பிரிவில் வீட்டுமனைகளில் விலை நிலவரம் என்று எல்லாவற்றையும் அலசி முடிக்கும்போது உணவு காலியாகியிருந்தது. குழாயில் பாத்திரங்களைக் கழுவி பையிலிட்டு வைத்துவிட்டு பீடியைப் பற்ற வைக்கும்போது பெண்கள் வெற்றிலையை மடித்து மெல்லத் தொடங்கினார்கள். பஞ்சாலையும் அதன் இயந்திரங்களும்கூட ஓய்வு முடிந்து ஓடத் தயாரானது.
“நாம போலாண்டா” பரமு சைக்கிளைத் தள்ளியபோது மீண்டும் பன்னிரெண்டு மணிக்கு ஆலை இயங்கத் தொடங்கியது.
“இனி நாலு மணிக்குத்தான் மறுபடி சங்கூதும். வேலை முடியும்.”
நான்கு மணிக்கு சங்கொலிக்க மறுபடி ஓசைகள் அடங்கி ஒவ்வொருவராய் வெளியில் வருவார்கள். களைத்த உடலும் சோர்ந்த முகமுமாய் தலையில் ஒட்டியிருக்கும் பஞ்சுத் திவலைகளை நீக்கியபடி பெரியம்மா, எதிரில் இருக்கும் ராசப்பன் கடை பெஞ்சில் உட்காருவாள். போனியில் டீயை ஆற்றி ஆற்றி கண்ணாடி தம்ளர்களில் ஊற்றிக் கொண்டேயிருப்பார் ராசப்பன். கணக்குச் சிட்டைகளில் அவரவர் எழுதிவிட்டு நடப்பார்கள். பெரியப்பாவுக்கு டீயுடன் சேர்ந்து குயில் பீடிக் கட்டும். பெரியம்மா கூடுதலாய் இரண்டு வெங்காயப் பக்கோடா பொட்டலங்களை எடுத்துக் கொள்வாள். அடுத்த ஷிப்டுக்கான ஆட்கள் உள்ளே சென்றிருக்க அதற்குள் ஆலை இயங்கத் தொடங்கியிருக்கும்.
பெரியம்மா உணவடுக்குப் பையுடன் மெல்ல நடந்து ஓடக்காடு அய்யப்பன் கோயில் மேட்டுக்கு வரும்போது அந்தி மங்கியிருந்தது. புள்ளார் கோயில் வாசலில் பந்து விளையாடிக்கொண்டிருந்தாலும் பரமுவும் அழகரும் மேட்டிலிருந்து கண்களை விலக்கியிருக்கவில்லை. அவள் தலை தெரிந்தவுடன் நீ முந்தி நான் முந்தி என்று ஓடிச் சென்று பையை கைப்பற்றினார்கள். தம்பியால் மேட்டில் ஓட முடியவில்லை. வெற்றிலை மென்றபடி நடந்து வரும் பெரியம்மாவின் முகத்தில் அரைக்கால் வீசமே சிரிப்பிருந்தது. நான் மெல்ல அவள் கையைப் பற்றிக்கொண்டேன். சிமெண்ட் கற்கள் பாவிய சந்தில் நடக்கும்போது தெருவிளக்குகள் எரியத் தொடங்கின. “மத்தியானமா சாப்பிட்டீங்களா தங்கம்?” பெரியம்மா கேட்டபோது தம்பி பலமாக தலையாட்டினான். ரமாக்கா நடைவிளக்கை எரியவிட்டிருந்தாள். பெரியம்மாவுக்கு உள்ளே வரும்போது வீடு இருண்டிருக்கலாகாது. கால்களில் நீரை அள்ளி ஊற்றிக் கொண்டு அப்படியே திண்ணையில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள். ரமாக்கா சொம்பு நிறைய தண்ணீரை தயாராக வைத்திருந்தாள். அதைக் குடித்து முடித்துவிட்டு புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைக்கும்போது அழகரும் பரமுவும் பொட்டலத்தைப் பிரித்துத் தின்னத் தொடங்கியிருந்தார்கள். “டேய், இவங்களுக்கும் குடுங்கடா பாவம்.” ஈயப்போசியில் சூடான டீயை ஆற்றியபடி ரமாக்கா காலடியில் உட்கார்ந்தாள். டீயைக் குடித்து முடிக்கும்வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வாயில் அரைப் பாக்கை அதக்கியபடி வெற்றிலையை பெட்டியிலிருந்து எடுத்து நீவி மடித்து சுண்ணாம்பு தடவும்போது ரமாக்கா கேட்டாள் “இந்த மாசம் சீட்டு எடுத்தார்லாமா?”
பெரியம்மாவின் விரல்கள் ஒருகணம் தயங்கி பின் நீவும். ரமாக்காவை ஏறெடுத்தும் பார்க்காமல் மெல்லச் சொன்னாள் “சொல்லியிருக்கேன். பாக்கலாம்.”
“போன மாசமே வீட்டுக்காரர்கிட்ட சீட்டு எடுத்துத் தர்றதா சொல்லிருக்கு. இந்த மாசமும் குடுக்கலேன்னா அந்தம்மா மானத்தை வாங்கிரும்.”
பெரியம்மா வாயைத் துடைத்துக்கொண்டாள். “கேட்டுப் பாக்கலாம். இல்லையா எப்பவும்போல சட்டி பானையத் தூக்கிட்டு வேற வீடு பாக்க வேண்டிதுதான்.”
ரமாக்கா தம்ளர்களை போசியில் போட்டாள் “ஓடக்காட்டுல ஒரு சந்து பாக்கி கெடையாது. இனி மேக்க எங்காயுச்சும் சோமனூர் பக்கந்தான் ஓடணும்.”
ரமாக்காவின் குரலில் கடுப்பும் சலிப்பும். கூடவே சாயங்காலம் தலை சீவும்போது காதோரமாய் கண்ணில்பட்ட ஒற்றை நரைமுடி தந்த எரிச்சலும். இந்த புரட்டாசி முடியும்போது இருபத்தி மூன்றைத் தொட்டிருப்பாள்.
பெரியம்மா பொறுமை இழந்திருந்தாள் “ஓடறதா வேண்டாமன்னு இப்ப உங்கப்பன் வருவானில்ல, கமகமன்னு. அவன்கிட்ட போய் கேளு. தெனந்தெனம் என்னையே போட்டு உயிரை வாங்காத.” சொன்னவாறே திண்ணையில் சரிந்து படுத்தாள்.
ரமாக்காவின் ஆத்திரம் இப்போது பரமு அழகரின் மீது திரும்பியது. “சனியன்களா. தின்னுட்டு அப்படியே போடாதீங்கன்னு எத்தனதரம் சொல்றது?”
கையை ஓங்கியபடி அவள் வருவதற்குள் பொட்டலத்தைச் சுருட்டியபடி வாசலைத் தாண்டி ஓடியிருந்தார்கள் இருவரும். தம்பி பயந்து அழத் தொடங்கவும் ரமாக்கா அவனிடம் வந்து தலையைத் தடவினாள் “நீ இல்லடா ராசா. இந்தக் கொரங்குகளத்தான் சொன்னேன். போடா ராஜா நீ போய் வெளையாடு.”
“எதுக்குடா இப்பிடி ஓடியாறீங்க?” பரமுவின் தோளைப் பிடித்து நிறுத்தினாள் சின்னக்கா அம்பிகாவதி. சுப்பையா காம்பவுண்டில் புதிதாக வந்திருக்கும் பனியன் கம்பெனியில் கை மடிக்கிறாள். டீ டைம்மில் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
“ஒண்ணில்லக்கா” தோளை விடுவித்தபடி ஓடினான். அழகரும் தலையாட்டியபடியே பின்தொடர்ந்தான்.
அம்பிகா காலைக் கழுவியபடி உள்ளே நுழையும்போது பெரியம்மாவிடமிருந்து சன்னமான குறட்டையொலி. ரமாக்கா அடுப்படி ஜலதாரையில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். தம்ளரில் டீயை ஊற்றிக்கொண்டு பாதி கரைந்த அரிசி மூட்டையில் சாய்ந்தாள் அம்பிகா.
“நைட் டிபனுக்கு என்ன பண்ணப் போறேக்கா?”
முறைத்தாள் ரமாக்கா.
“சொல்லாட்டி போ. எதுக்கு மொறைக்கறே. எனக்கு ஒண்ணும் வேணாம். நைட் ஷிப்ட். புரோட்டா வாங்கித் தருவாங்க. வரதுக்கு லேட்டாகும். அம்மாட்ட சொல்லிரு.” பதிலுக்குக் காத்திராமல் கண்ணாடி முன்னால் நின்று தாவணியைத் திருத்தியபடி முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியேறினாள் அம்பிகா.
ரமாக்காவை விட மூன்று வருடம் இளையவள். எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் புகையிலை குடோனில் வேலைக்குச் சென்றபோது இத்தனை பவுசு இருக்கவில்லை. கண்கள் சிவக்க தும்மியபடியே வருவாள். பாதிநாள் போக மாட்டாள். அதன் பிறகு ஒன்றரை வருடம் அட்டைப் பெட்டி குடோனில் பெட்டி அடுக்கப் போனாள். பிறகு இரண்டு வருடம்போல வஞ்சிபாளையத்தில் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்த்தாள். இப்போது மூன்று வாரங்கள்தான் ஆகியிருக்கிறது. கம்பெனி வேலை அத்தனை பிடித்துப்போய்விட்டது. ஆளே மாறிவிட்டாள்.
ரமாக்கா முகத்தைக் கழுவி பொட்டிட்டு அம்மன் படத்துக்கு முன் விளக்கேற்றிய சமயத்தில் வாசலில் சத்தம்.
“மில்லுக்காரம்மா வந்துடுச்சா?” வீட்டுக்காரம்மாவின் கரகரத்த குரல். மெத்தையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கும். அந்த சந்தில் கிழவியின் பார்வையில் படாமல் யாரும் நடமாடுவது கடினம். காலையில் எழுந்தது ராத்திரி படுப்பது வரைக்கும் தெருவை மட்டுமே கண்காணித்துக் கொண்டிருக்கும் கிழவி. குடியிருப்பவர்கள் வீட்டுத் திண்ணையில் காய வைத்திருக்கும் வெங்காயத்தை யாரும் பார்க்காத சமயம் ஒரு பிடி அள்ளி மடிச்சேலையில் கட்டிக்கொண்டு போகுமளவுக்கு காரியக்காரி. சிலுவாணக் காசை சேர்த்து வைத்து சிறு வட்டிக்கு விடும் தாராளமனசுள்ளவள்.
கல்லுவைத்த கெம்புத் தோடு விளக்கொளியில் மின்ன புடவையை உதறிக்கொண்டு உட்கார்ந்தாள்.
பெரியம்மா உடலை அசைத்து எழுந்தாள். கூந்தலை அள்ளி முடிந்தாள். இன்னும் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“ரொம்ப சலுப்போ மில்லுக்காரம்மா? வௌக்கு வெச்ச நேரத்துல இப்பிடி படுத்துக் கெடக்கறீங்க?”
“ஆண்டவன் நம்ம தலையில அப்பிடி எழுதி வச்சிருக்கான். என்ன பண்ண முடியும்?”
“அதென்ன அப்பிடிச் சொல்லீட்டீங்க. மில்லு சம்பளம்னா சும்மாவா? யாருக்கு அந்த யோகம் இருக்கு சொல்லுங்க பாக்கலாம். போதாதுன்னு சின்ன மவ வேற கம்பினிக்கு போறா. அவளுக்கு நீங்க இனி எதையும் சேத்து வெக்க வேணாம். அவளே பாத்துப்பா.”
ரமாக்கா வெளியே தலைகாட்டாமல் பொறுமிக் கொண்டிருந்தாள். இந்தக் கிழவி எதற்கு இந்த நேரத்தில் வந்து வம்பை வளர்க்கிறாள்.
“மில்லு சம்பள யோகம்னா இங்க வந்து நாலு பேரு நாலு விதமா பேசறத கேட்டுட்டு எதுக்கும்மா உக்காந்திருக்கோம்?” பெரியம்மாவின் குரலில் எரிச்சல் முட்டியிருந்தது.
“அப்பிடி கஷ்டப்பட்டு உக்காந்திருக்க வேணாம்னுதான் நானும் சொல்றேன்” கிழவிக்கு சுருக்கென்று தைத்திருக்கவேண்டும்.
“நீங்க இப்ப ஒண்ணும் சொல்ல வேணாம்மா. எனக்கும் முடியலை. கொஞ்சம் பொறுத்துக்கங்க. இந்த மாசம் சீட்டெடுத்து பாக்கிய குடுத்தர்றேன். புரிஞ்சுக்கம்மா.” பெரியம்மா எழுந்து உள்ளே நடந்தாள்.
கிழவியும் ஆத்திரத்துடன் எழுந்தாள் “குடுக்கறே. இல்லே இந்த மாசத்தோட காலி பண்ணிட்டு போயிடு. அவ்ளோதான் மரியாதை.”
ஒருகணம் அந்த இடம் மொத்தமும் அமைதியில் உறைந்திருந்தது. பெரியம்மா முகத்தைத் துடைத்தபடி மறுபடி திண்ணைக்கு வந்தாள். அதே நேரம் நடைவழியில் சத்தம் கேட்டது.
‘உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தந்தனத்த தந்தனத்த…’ பெரியப்பாவின் குரலில் குதூகலம். கூடவே குளறலும் தடுமாற்றமும். பரமுவையும் அழகரையும் அணைத்தபடி வந்தவர் திண்ணையில் இருந்த பெரியம்மாவை பார்த்ததும் நின்றார். “என்னாச்சு சின்னத்தாயீ! டல்லா இருக்கே” வெகு சில சமயங்களில் மட்டுமே பெரியப்பா அப்படி பெயர் சொல்லி அழைப்பார். நிறைபோதையில் கால்கள் தள்ளாடின. குப்பென்ற சாராய வாடை எங்கும் நிறைந்தது. எதிர்ப்பக்கமாய் உட்கார்ந்த பெரியப்பா சட்டைப் பையிலிருந்து ரூபாய் தாள்களை எடுத்து விசிறிபோல் விரித்துக் காட்டிச் சிரித்தார். “அதிர்ஷ்ட தேவதை இப்பத்தான் இந்தப் பக்கமா வலது காலை எடுத்து வெச்சிருக்கா. இனிமே பாரு. அன்னாடமும் காசு வந்து கொட்டப் போகுது.”
“அடியே, அண்டா குண்டா சாக்குப்பை எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கடீ. கொட்டற காசு வீணாப் போயிறப் போகுது” உரக்கக் கத்தியவள் அதே ஆத்திரத்துடன் பெரியப்பாவை பார்த்துச் சீறினாள் “இந்தக் காசை மட்டும் எதுக்கு கொண்டுவந்தே? அதுக்கும் ஊத்திட்டு வர வேண்டிதுதானே? உனக்குத்தான் எத்தனை குடிச்சாலும் பத்தாதே.”
“என்னம்மா நீ. பம்பர் லாட்டரிலே ஆயிரம் ரூவா விழுந்துருக்குன்னு சந்தோஷமா சொல்றேன். நீ குடிக்கறதப் பத்தியே பேசறியே? மனுஷன் சந்தோஷத்துலயும் குடிக்கலாம். சந்தோஷத்துக்காகவும் குடிக்கலாம். அஞ்சாயிரத்துல அப்பிடியே சுளையா எழுநூறு ரூவா கொண்டு வந்துருக்கேன் பாரு. இந்தா வெச்சுக்க. எனக்கு ஒண்ணுமே வேணாம். நான் ஹேப்பியா இருக்கேன். நீயும் ஹேப்பியா இருக்கணும். இதப் பாரு கொழந்தங்களுக்கு கேக் வாங்கி தந்துருக்கேன். தேங்கா பன்னு வாங்கித் தந்திருக்கேன். நான் ஹேப்பியா இருக்கேன். எல்லாரும் ஹேப்பியா இருக்கலாம்.”
பெரியம்மா ஆத்திரத்துடன் எழுந்தாள். அருகில் வந்து பெரியப்பா கையிலிருந்த ரூபாய் தாள்களை பிடுங்கி விசிறினாள் “வீட்டுக்காரங்களுக்கு ரூவாய் பத்தாயிரம் தரணும். அவங்களும் எத்தன நாள்தான் பொறுமையா இருப்பாங்க. நீ என்னடான்னா ஹேப்பியா இருக்கியா? குடிக்காம இருக்க முடியாதா உனக்கு? எத்தனை வந்தாலும் குடிச்சே அழிப்பியா நீ? ரெண்டு பொட்டப் புள்ளைங்க இருக்காங்க. ஒரு பொட்டு தங்கம் சேத்து வெச்சிருக்கியா? கல்யாணம் பண்ற வயசு வந்துருச்சேன்னு உனக்கு கொஞ்சமாச்சும் கவலையிருக்கா? ஹேப்பியா இருக்கியா நீ? தெனந்தெனம் இந்த பாழாப் போன லாட்டரி சீட்டுக்கு செலவு பண்ணின காசு இருந்தாவே ரெண்டு பவுன் தங்கம் வாங்கிருக்கலாம். நாலு காசு விழுந்தா நாப்பது ரூவா செலவு பண்றவன் நீ. ஹேப்பியா கேக்குது உனக்கு?”
தம்பி என்னருகே ஒடுங்கி உட்கார்ந்தான். ஆத்திரத்துடன் கண்களை உருட்டிபடி கைகளை ஓங்கி நின்ற பெரியம்மாவை பார்க்க எனக்கே பயமாகத்தான் இருந்தது. பரமுவும் அழகரும் எதுவுமே நடக்காததுபோல தேங்காய் பன்னை ரகசியமாக அதக்கிக் கொண்டிருந்தனர்.
பெரியப்பா பதில் பேசவில்லை. ஒடுங்கி அமைதியானவர் வழக்கம்போல அட்லாங்கால் போட்டுக்கொண்டார். சட்டைப் பையிலிருந்த சிறிய நோட்டை எடுத்தார். அதனுள் மடித்து வைத்த காகிதங்களுடன் லாட்டரிச் சீட்டுகளும் இருந்தன. சில தொலைபேசி எண்கள், முகவரிகள், சிறு கணக்குகள் என்று அங்கங்கே கிறுக்கப்பட்டிருந்தது. அவரையும் மீறி இயல்பாகவே வலது பாதம் அசையத் தொடங்கியது. அட்லாங்கால் போட்டுக்கொண்டதும் அப்படித்தான் நடக்கும். பெரியம்மாவுக்கு அது போதுமானதாக இருந்தது.
“மனுஷி இப்பிடி கத்திட்டு இருக்கேன். நீ அட்லாங்கால் போட்டு ஆட்டி காட்டறே. என்னதான் நெனச்சிட்டிருக்கிறே நீ?”
பெரியப்பா என்னவோ முனகினார். சரியாக கேட்கவில்லை. ஆனால் பெரியம்மா ஊகித்துக் கொண்டவள் போல அவர் கையிலிருந்த நோட்டை ஆத்திரத்துடன் பிடுங்கி வீசினாள். தாட்களும் லாட்டரி சீட்டுகளும் காற்றில் பறந்தன. பெரியப்பா ஒருகணம் திடுக்கிட்டார். அதே நொடியில் பெரியம்மாவின் கையைப் பற்றி விலக்கினார். அந்த வேகத்தில் அவள் தடுமாறி கீழே சரிந்தாள். ஒரு நொடி உற்றுப் பார்த்தார். பெரியம்மா தரையில் கையை ஊன்றி அப்படியே கவிழ்ந்தவளிடமிருந்து ஓங்காரம் எழுந்தது. எச்சில் வழிய தலை தூக்கினாள். அவளால் தன் பருத்த உடலைத் தூக்கி உட்கார முடியவில்லை. இப்படியும் அப்படியுமாக அசைந்தாள். பதற்றமும் ஆத்திரமுமாக கையை ஊன்ற முயன்றாள். வலியும் அவமானமுமாய் தன் ஆற்றலைத் திரட்டும் வெறியை முகத்தில் காண முடிந்தது.
“நானும் பொறுமையா உக்காந்திருக்கேன். வம்புக்குன்னே திரியறே நீ?” தள்ளாடி நின்று சுவரைப் பிடித்தார். நிதானமடைந்த பின் குனிந்து மெல்ல காகிதங்களை எடுக்கலானார். அழகர் சில தாள்களை பொறுக்க பரமுவும் சிதறிக் கிடந்தவற்றை ஒன்று சேர்த்தான். எனக்கு நகரவே தைரியம் வரவில்லை. கால்கள் தரையில் ஒட்டி நின்றன. தம்பி ஏற்கெனவே சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தான்.
ரமாக்கா பொறுமையிழந்தவளாய் வெளியே வந்தாள். பெரிய அவள் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. கூந்தலை அள்ளி முடித்த அவள் வேகம் அச்சம் தந்தது.
ஆனால் பெரியம்மா அதற்குள் உருண்டு சமாளித்து எழுந்து பெரியப்பாவின் கையைப் பிடித்தாள். “என்ன அடிக்கறியா நீ? குடிச்சிட்டு வந்து பொம்பளைய அடிக்கறே நீ?”
பெரியப்பா பொருட்படுத்தாதவர்போல கையை உதறினார். அதே வேகத்தில் நகர்ந்து மூலையில் கிடந்த விறகுக் கட்டைகளிலிருந்து ஒன்றை தாவி எடுத்தார். நன்கு காயாத வேப்பம் விறகின் கசப்பு வாசனை.
தம்பியின் அழுகைச் சத்தம் வலுத்தது. மெல்ல நடுங்கினான். நான் அவன் கையைப் பிடித்து எழுப்பி மெல்ல சுவரோரமாய் பின்னால் நகர்ந்தேன். இப்போது யார் யாரை அடிப்பார்கள் என்று புரியவில்லை. பயமாக இருந்தது. எனக்குமே அழவேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் நான் அழுதால் தம்பி இன்னும் பயந்து விடுவான்.
“விறகுக் கட்டைய எடுத்து அடிக்கறியா? வா நீ. வந்து அடி பாக்கலாம்.” பெரியம்மாவின் கையிலும் மஞ்சள் துலங்கும் விறகுக் கட்டை.
ரமாக்கா பெரியப்பாவின் கையிலிருந்த கட்டையைப் பிடித்து இழுக்கவும் அவர் கீழே சரிந்தார். விறகிலிருந்த சிலாம்பு உள்ளங்கையில் ஏறியிருக்கவேண்டும். வெடுக்கென கையைப் பின்னுக்கிழுத்து மடக்கி உற்றுப் பார்த்தார். ஒரு துளி ரத்தம். வாயில் வைத்துச் சப்பினார். அதே சமயத்தில் பெரியம்மாவும் மூச்சு வாங்க அவரை நெருங்கியிருந்தார். கீழே விழுந்தவர் சுதாரிப்பதற்குள் முதுகில் கட்டையால் சாத்தினாள். அவளைப் பிடித்து நிறுத்த முயன்றாள் ரமாக்கா. ஆனால் அவளோ ஆத்திரத்துடன் காலால் மிதித்தபடி கட்டையை கண்டபடி காற்றில் வீசினாள். பரமுவும் இப்போது ரமாக்காவுடன் சேர்ந்துகொண்டு பெரியம்மாவைப் பிடித்து பின்னால் இழுத்தான். ஆங்காரத்துடன் பெரியம்மா கைகளை உதற ரமாக்காவும் பரமுவும் தடுமாறினர். அழகர் பெரியப்பா கையைப் பிடித்துப் புரட்டி எழுந்திருக்க உதவினான்.
இந்த களேபரத்துக்குள் நான் முன்வாசலுக்கு வந்திருந்தேன். எனக்கு முன்னால் நடுங்கியபடி தம்பி நடந்தான். மங்கலான வெளிச்சம். யாரும் இருக்கவில்லை. பின்னால் திரும்பி பார்த்தேன். கூச்சலும் அமளியுமாய் அவர்கள் நால்வரும் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. தம்பியின் கையை பற்றிக்கொண்டு சந்துக்கு வந்தேன். தெருவிளக்கின் வெளிச்சம் நீண்டிருந்தது. சாக்கடை ஓரத்தில் நின்று தம்பி ஒன்றுக்கிருந்தான். எனக்கும் முட்டிக்கொண்டிருந்தது. கால்களை மடக்கி உட்கார்ந்து மூத்திரம் போனேன். காணவில்லை என்று ரமாக்காவோ பரமுவோ வந்துவிட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இப்போதுகூட வெளியில் வந்துவிட்டேனே தவிர என்ன செய்வதென்று தெரியவில்லை. மணி என்ன இப்போது? புஷ்பா தியேட்டர் ஸ்டாப்புக்கு போனால் பத்தாம் நம்பர் பஸ்ஸில் ஏறலாம். இரண்டு பேருக்கு டிக்கெட் எடுக்க ஒரு ரூபாயாவது வேண்டும். கால்சட்டை பாக்கெட்டில் பத்து பைசாக்கள் இரண்டுதான் கிடக்கின்றன. யோசித்தபடியே தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு கல்லூரி சாலையில் வேகமான நடந்தேன். அய்யப்பன் கோயில் நடை சாத்தியிருந்தது. சாலையோர புங்க மரங்கள் காற்றில் அசைந்து பூக்களை உதிர்த்தன. ஒரே சாலைதான். நடந்து போய்விடலாம். வேறு வழியில்லை.
டிப்டாப் ஹோட்டலில் வழக்கம்போல கூட்டம். ஓரமாய் நடந்தோம். தம்பி அழுகையை மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான். வடபுறம் அடர்ந்த மரங்கள் அடங்கிய தேவாங்கபுரம் துவக்கப்பள்ளி. இடப் பக்கமாய் ரயில்நிலையத்துக்கு போகும் வழி. பத்ரகாளியம்மன் கோயிலில் இன்னும் வெளிச்சம் இருந்தது. சாலையைக் கடந்து புஷ்பா தியேட்டர் எதிரில் திரும்பினோம். நேற்று பார்த்த ‘எங்க பாட்டன் சொத்து’ படத்தின் போஸ்டரை தம்பி ஒரு நிமிடம் நின்று பார்த்தான். “தம்பி, இங்கிருந்து ஒரே ரோடுதான். நடந்தர்லாமா?”
அவன் வெறுமனே தலையாட்டினான். எவ்வளவு தூரம் என்று அவனுக்குத் தெரியவில்லை. வேடிக்கை காட்டியபடியே போய்விடலாம்.
வடக்கில் பெருமாநல்லூர் வரைக்கும் நேராகச் செல்லும் ஒரே சாலைதான். மில்லர் கம்பெனி அருகே வண்டிக் கடை. கேஸ் லைட் வெளிச்சத்தில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்கள் கொட்டிக் கிடந்தன. பத்து பைசாவை நீட்டினேன். நிமிர்ந்து பார்த்துவிட்டு பொட்டலத்தில் மடித்துக் கொடுத்தான். தம்பி ஆசையுடன் மென்றபடி நடந்தான். கிச்சப்பன் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது தம்பி மூக்கைச் சுளித்தான். அதற்கு அருகில்தான் பஜனை கோயில். சனிக்கிழமைகளில் அப்பா மிருதங்கம் வாசிப்பார். இலையில் மடித்து சுண்டல் கொண்டு வருவார். இப்போது கோயில் திண்ணையில் யாரோ முகத்தை துண்டில் மூடியபடி படுத்துக் கிடந்தார்கள். செல்வி ஸ்டோரை தாண்டியதும் முனியப்பன் கோயில். கொடுவாள் ஏந்திய முனியப்ப சாமிகளைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். கருப்புசாமி கடை இன்னும் திறந்திருந்தது. அப்பா வழக்கமாக குமுதமும் கல்கண்டும் இங்கேதான் வாங்குவார். கருப்புசாமிக்கு என்னை அடையாளம் தெரியும். நல்ல வேளையாக அவர் தலை தெரியவில்லை. வீனஸ் பேக்கரியின் வாசனையை உணர்ந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. பலகையை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தார்கள். கருப்பு வட்டத்தில் வெள்ளை எண்கள் எழுதிய நீலப் பலகைகள். எப்போதும் வாலை ஆட்டியபடி வாசலிலேயே நிற்கும் ஜிம்மியைக் காணவில்லை. இதோ, மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம். யாருமில்லை. கடைசி பஸ் போய்விட்டதா என்ன? வீதிக்காரர்கள் யாரும் கண்ணில் பட்டால் தேவலை என்று நினைத்தேன். இனி ஆள் நடமாட்டம் குறைந்துவிடும். ஒத்தைப்பனைமர மேடு தெரிந்தது. அது வரைக்குமான தைரியம் இப்போது குறைந்துவிட்டது. தம்பி நடை தளர்ந்திருந்தான். மொட்டைப் பாறைக் குழியில் தேங்கிய நீரின் கெட்ட வாடை. போன வாரந்தான் ஒருத்தி உள்ளே விழுந்து செத்துப் போயிருந்தாள். எதிர்ப்பக்கமாய் சுடுகாடு. எதுவோ எரியும் புகைவாடை. பிணத்தை எரித்தாலும் இப்படித்தான் வாடை எழும். கண்களை அந்தப் பக்கமாய் திருப்பாமல் நடக்க முயன்றேன். இரவு பத்து மணிக்குப் பிறகு சுடுகாட்டின் ஓரமாய் சாராயமும் கஞ்சாவும் விற்பதாக பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. சினிமாவில் வருவதுபோல கழுத்தில் துண்டுத்துணியும் கன்னத்தில் மருகும் வைத்திருப்பார்களா? வேகமாக நடக்கவேண்டும். ஆனால், கால்கள் எழ மறுத்தன. பிள்ளையார் கோயில் வாசலில் தலைநிறைய பூவும் அடர்த்தியான முக அலங்காரத்துடனும் இரண்டு பெண்கள். கைகளை ஆட்டி பேசும்போது வளையல்கள் குலுங்கின. அவர்கள் திரும்பி எங்களை பார்த்த அதே நேரத்தில் எதிர்ப்பக்கமாய் முகப்பு வெளிச்சத்துடன் பத்தாம் நம்பர் பஸ் வருவது தெரிந்தது. இருவரும் நிறுத்தத்தை நோக்கி சிரித்தபடியே ஓடினார்கள்.
முதுகு முழுக்க வேர்த்திருப்பதை உணர்ந்தேன். இனி பயமில்லை. அடுத்து ஸ்பேரோ நிட்டிங்கும் கருணா நிட்டிங்கும் வந்துவிடும். உயரமான மரங்களுக்குக் கீழே பன்னீர் பூக்கள் உதிர்ந்திருந்தன. நெசவாளர் காலனி பஸ் நிறுத்தத்தில் டீக் கடை திறந்திருந்தது. பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்த அம்சா தலைநிமிர்த்திப் பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை.
பள்ளிக்கூடத்தைத் தாண்டி கண்ணகி நகர் முதல் தெருவில் திரும்பியபோதுதான் கால்களில் வலியை உணர்ந்தேன். தம்பி முழுக்க களைத்திருந்தான். தூக்கமும்கூட. தளர்ந்து என்மீது சாய்ந்தபடியே வந்தான். நடவை வீட்டு கருப்பன் தலை நிமிர்த்தி பார்த்து மெல்ல உறுமியது. என்னைக் கண்டவுடன் வாலைக் குழைத்தபடி பின்னால் வந்தது. பொடாரம்பாளையும் அம்மிணியக்கா இன்னும் தறி நெய்யும் சத்தம் கேட்டது.
வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த சோடா பாட்டி தலையை நிமிர்த்திப் பார்த்தாள் “என்னடா இந்த நேரத்துல வந்துருக்கீங்க? யாரு கொண்டாந்து விட்டாங்க?”
நான் பதில் சொல்லாமல் படியருகே நின்று உள்ளே எட்டிப் பார்த்தேன்.
“உங்கம்மா அப்பால்லாம் சினிமாவுக்கு போயிட்டாங்கடா.” பாட்டி எழுந்து உட்கார்ந்தாள்.
தம்பி சிணுங்கினான். மூலையில் சுருட்டி வைத்திருந்த பாயை எடுத்து விரித்தேன். தலையணையை எடுப்பதற்குள் தம்பி பாயில் சுருண்டு படுத்தான்.
“சாப்பிட்டீங்களாடா?”
“சாப்பிட்டோம் பாட்டி. நீ தூங்கு.”
வெற்றிலைக் கொட்டிலை எடுத்து பாக்கையும் வெற்றிலையையும் போட்டு இடிக்கத் தொடங்கினாள் பாட்டி. வாயில் அதக்கிக் கொண்டால்தான் தூக்கம் வரும் பாட்டிக்கு.
பாயில் படுத்தேன். பெரியப்பா வீட்டில் எங்கள் இருவரையும் காணவில்லை என்று தெரிந்திருக்குமா? தேடியிருப்பார்களா? இங்கே இப்போது வருவார்களா? அம்மா திட்டுவாளா? பசித்தது. கூடவே வேப்பம் விறகின் பச்சை வாசனையும் பெரியப்பாவிடமிருந்த சாராய வாடையும் கலந்த நாற்றத்தை உணர்ந்தேன். சுடுகாட்டில் நெருப்பு வெளிச்சம். புகை கருகும் வாடை. இருட்டில் சமையல் தடுப்புக்குள் உற்றுப் பார்த்தேன். எதுவும் மிச்சமிருக்குமா? கால் வலித்தது. கண்களை இறுக மூடி ஒருக்களித்துப் படுத்தேன்.
“ரெண்டு பேரும் கில்லாடி பசங்களா இருக்கானுங்க. ராத்திரி நேரத்துல பயமில்லாமே நடந்தே வந்துருக்கானுங்க.” சிரிப்புடனான பெரியப்பாவின் குரல் கேட்டது.
விடிந்துவிட்டதா?
கண்களைத் திறக்காமல் அப்படியே படுத்திருந்தேன்.
“வீட்ல எப்பவும் போடற சத்தந்தான். சண்டைதான். இவங்க பயந்துட்டானுங்க போல. கொஞ்ச நேரத்துக்கப்பறம் சாப்பாட்டுக்கு தட்டெல்லாம் வெச்சிட்டு பாத்தா பசங்கள காணம். ரமாக்காதான் பாவம் ரொம்ப பயந்துட்டா. ராத்திரி நேரத்துல புள்ளைங்க எங்க போச்சோன்னு. செரி அந்த நேரத்துல வந்து உங்களையும் பயமுறுத்த வேண்டான்னுதான் விடியறதுக்கு முன்னாடி பொறப்பட்டு வந்தேன். இவனுங்கள இங்க பாத்ததுக்கு அப்பறந்தான் உசுரு வந்துச்சு.”
அம்மா டீ போட்டு கொடுத்திருக்க வேண்டும். குடித்துவிட்டு தம்ளரை கீழே வைக்கும் சத்தம்.
“செரி அம்மிணி. முட்டை போண்டா சூடா இருக்கு. பசங்கள எழுப்பிக் குடு. மெரட்டிராதே பாவம். நான் ஞாயித்துக் கிழமை அக்காவ கூட்டிட்டு வரேன்.”
சிறிது நேரங்கழித்து மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தேன். யாருமில்லை. ஓசைப்படாமல் எழுந்து தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்தபோது பெரியப்பா சைக்கிளைப் பிடித்தபடி அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவசரமாய் ஓடி வந்து பாயில் படுத்து போர்வையைப் போர்த்திக் கொண்டேன்.