
அலுவலகம் விட்டு வீட்டுக்குள் இளங்கோவன் நுழைந்த உடனேயே அவனது மூத்த மகன் 12 வயதுக்காரன் கேட்டான் "என்னாச்சும்மா ஸ்கூல் பீஸ்? சொல்லிட்டியா? இன்னும் மூணு நாள்தான் இருக்கு "என்றான்.
இளங்கோவனுக்கு கடும் பொருளாதார நெருக்கடி.அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்துகொண்டிருந்தார்கள். பதற்றமாக இருந்தான் அவன்.இறுக்கமான மனச் சூழல்தான். ஆனால் யாரைக் கேட்டால் வேலை நடக்கும்? எங்கு சாவி கொடுத்தால் பூட்டு திறக்கும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரிந்து இருக்கிறது என்று நினைத்தபோது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
எட்டு வயது சின்னவன் குனிந்த தலை நிமிராமலே கோணலாக உட்கார்ந்துகொண்டு ஏதோ வரைந்து கொண்டிருந்தான். தன் அப்பாவை பார்த்து தலைநிமிர்ந்து மெல்ல புன்னகைத்தான்.
அவன் மனைவி மல்லிகாவும் “இன்னைக்குப் போய் பார்த்துட்டு வாங்களேன் "என்றாள்.
"எனக்கு தெரியாது இன்னும் த்ரீ டேஸ் தான் இருக்கு. ஃபீஸ் கட்டலைன்னா ஸ்கூல்ல என்ன வெளியில நிக்கவச்சிடுவாங்க. கேவலமா இருக்கும்," என்றான் பெரியவன் கறாரான குரலில்.
"ஏன் அதை ராஜா என்கிட்டே சொல்ல மாட்டாராமா?" என்றான் இளங்கோவன் சிரித்துக்கொண்டே. ஆனால் அவன் தந்தையைச் சட்டை செய்யவில்லை. அதை ஒரு போலிக் கொஞ்சலாக உணர்ந்தான். முகத்தை திருப்பிக் கொண்டு அம்மாவைப் பார்த்தான்.
அதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் இளங்கோவன் பலமுறை வாக்குறுதி கொடுத்திருக்கிறான். நிறைவேற்ற முடியாமல் போய் இருக்கிறது. பிள்ளைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் மகன் இவ்வளவு கறார்நிலை எடுத்திருக்கிறான் என்பதும் புரிந்தது.
"சரி போய்ட்டு வரேன் காபி இருக்கா?" என்றான். மல்லிகா காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
இளங்கோவன் தன்னுடன் படித்த பள்ளி வயது நண்பர்களில் சிலரை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து இருந்தான். பெரும்பாலும் குட்மார்னிங் சொல்லியே கொன்றார்கள். அதில் அவனுடன் படித்த முருகானந்தமும் இருக்கிறான். பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருக்கிறான். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சொந்த வீடு என்று இருக்கிறான்.
அவனிடம் கடன் உதவிகேட்கச் சொல்லித்தான் மனைவி மல்லிகா நச்சரித்து வந்தாள்.
அவன் வீடு அண்ணாநகரில் இருந்தது. இளங்கோவன் மயிலாப்பூரில் இருந்தான். பஸ்ஸில் செல்வதாக இருந்தால் சரிப்பட்டு வராது. வண்டியில் தான் செல்ல வேண்டும். சிக்கனம் கருதி இளங்கோவன் அலுவலகத்திற்கு பஸ்ஸில் தான் செல்வான். தினமும் கூட்டத்தில் கசங்கி சோர்ந்து வருவான். எங்காவது வெளியில் செல்வது என்றால் தான் டிவிஎஸ் ஃபிப்டியை எடுப்பான்.
வீட்டை விட்டு சற்று வெளியே வந்து முருகானந்தத்திற்கு போன் செய்தான். "உன்னை பார்க்கணும் போல இருக்கு.சந்திக்கலாமா?" என்றான். "வாயேன்" என்றான் அவன்.
புறப்படும் முன் மனைவியை ஒரு கணம் பார்த்தான். சோகையான ஒரு சிரிப்பு சிரித்தாள்.ஒரு பெரிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அவள் முகத்தில் பரவியிருந்தன.
பள்ளியில் படிக்கும்போது முருகானந்தம் வீட்டில் மளிகைக் கடை வைத்திருந்தார்கள். அக்கா அண்ணன்கள் படித்தவர்கள். அந்த பின்புலம் அவனை மேலே படிக்க வைத்தது. பத்தாவது முடித்து பாலிடெக்னிக்கில் சிவில் முடித்தான். சிறிது நாட்களில் அரசு வேலை கிடைத்தது. இன்று பெரிய ஆளாக உயர்ந்திருக்கிறான். ஒரே வகுப்பில் படித்தவன்தான் .அவன் எங்கே இருக்கிறான்? இவன் எங்கே?
தான் அன்றாட அலைக்கழிப்புகளில் சிக்கித் தவிப்பதை இளங்கோவன் நினைத்துக்கொண்டான்.அவனுக்கு யாரை எதை வெறுப்பது என்பது புரியவில்லை.
முருகானந்தம் அப்போதே கொஞ்சம் சுயநலக்காரன் தான். படிப்பில் கவனமாக இருப்பான். படிப்பு நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளமாட்டான். கைடு எல்லாம் வைத்திருப்பான். அதைக் காட்டவே மாட்டான். எப்போதும் "படிக்கவில்லை படிக்கவில்லை" என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் அதிக மார்க் எடுத்து விடுவான். ஆனால் அந்த மாதிரி சுயநலம் எல்லாம் இல்லாமல் இப்போது சகஜமாகப் பேசுகிறான்; பழகுகிறான்.
இளங்கோவன் பி.காம் அஞ்சல் வழியில் முடிப்பதற்குப் படாதபாடு பட்டான். பிழைப்பு தேடி சென்னை வந்தான் பல இடங்களில் வேலை.அச்சகங்கள், பதிப்பகங்கள், ஸ்டேஷனரி கடை, என்று போய் ஒயின்ஷாப் வரை வேலை பார்த்தான். இப்போது ஒரு கம்பெனியில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான். இத்தனை நாள் நின்றுகொண்டு எடுபிடி போல் வேலை பார்த்தவன், இப்போது தான் உட்கார்ந்து பார்க்கும் வேலைக்கு சென்றிருக்கிறான்.அதற்குள் 40 கடந்துவிட்டது வயது.
ஒருவழியாக டிராபிக்கில் நீச்சலடித்து அண்ணாநகர் வந்துவிட்டான். வீடு தேடுவதில் சிரமம் இல்லை. பத்தொன்பதாவது மெயின்ரோட்டில் மூன்றாவது குறுக்குத் தெருவில் இருந்தது. நகர சந்தடிகளின் மத்தியில் திடீரென்று அமைதியான இடம். முருகானந்தம் எப்போதும் உஷாரானவன். பார்த்து தான் வாங்கியிருக்கிறான். அது ஒரு முட்டுச்சந்து எந்த டிராபிக் இரைச்சலும் இல்லை.
குறிப்பிட்ட வீட்டை அடைந்த போது தேடிக் கொண்டிருக்க அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால் பெயர்ப்பலகை பொறித்திருந்தான்.தேர்ந்தெடுத்த வண்ணங்களால் அந்த வீடு பளிச்சென்று இருந்தது. தெருவில் இருபுறமும் மரங்கள் தழைத்திருந்தன. முதல் தளத்தில் அவன் குடியிருந்தான். கீழ்த்தளத்தை வாடகைக்கு விட்டிருந்தான். கீழே இரண்டு கார்கள் நிறுத்தப் பட்டிருந்தன. மேலே சென்றவன் நாய் இருக்குமா என்ற தயக்கத்தில் அழைப்பு மணியை அழுத்தினான். முருகானந்தமே வந்து கதவைத் திறந்தான் .
நன்றாகச் சிரித்தபடி "வாப்பா இளங்கோவா" என்று அழைத்தான். சோபாவில் உட்கார்ந்திருந்த முருகானந்தத்தின் மகன்கள் இருவரும் இவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தார்கள்.
வரவேற்பறையில் கணவன்-மனைவி திருமண வயதில் எடுத்த புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. இருவரும் அழகாக இருந்தார்கள்.
பிள்ளைகளிடம் கையிலுள்ள கேரிபேக்கை நீட்டினான் சின்னவன் அதை வாங்கிக்கொண்டான்.
வரும் வழியில் பேக்கரியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டுகள் அதில் இருந்தன.
பையனின் கை குலுக்கிய போது மிருதுவாக பூ மாதிரி இருந்தது எலும்பை உள்ளே தேட வேண்டும் போலிருந்தது.
உள்ளே இருந்த அவன் மனைவி அமுதா வந்தாள். நைட்டியில் இருந்தாள். ஒரு ரெடிமேட் புன்னகையை உதிர்த்தாள்.கண்களில் கர்வம் மின்னியது. தோற்றத்தில் பணச் செழுமை.கன்னத்தில் மெல்லிய பூனை ரோமங்கள்.
"வீட்ல எப்படி இருக்காங்க? பிள்ளைகள் எப்படி இருக்காங்க?" என்ற ஒரு சம்பிரதாய விசாரிப்புக்குப் பின் உள்ளே சென்றாள். ஒரு ட்ரேயில் காபி கொண்டு வந்து டீபாயில் வைத்தாள்.
கூடவே ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் நான்கு பிஸ்கட்டுகள். காலில் வெள்ளை செருப்பு அணிந்து இருந்தாள். வீட்டுக்குள்ளேயே செருப்பா? என்று அதைப் பார்த்து அதிர்ச்சியை அடக்கிக் கொள்ள முயன்றவனிடம் "கால் வலி" என்றாள்.
"ஆபீஸில் ஒர்க் லோடு ஜாஸ்தி. ஒரே டென்ஷன்" என்று கைகளை நீள விரித்து செயற்கையான உடல் மொழியோடு முருகானந்தம் அலட்டிக் கொண்டான்.
இவன் காபி குடித்தவுடன் "வா மேலே செல்லலாம்" என்று மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
படியேறும்போதே முருகானந்தம் பேச ஆரம்பித்தான்.
இளங்கோவனை பார்த்தது முதல் முருகானந்தத்தின் சிரிப்பு சதவிகிதம் குறையவில்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று இளங்கோவன் நினைத்துக் கொண்டான்.
"இந்த வீட்டுக்கு இப்பதான் நீ வர்றே? இல்லையா? இது கட்டி ரெண்டு வருஷம் ஆச்சு. நானே என் ஆசைப்படி திட்டமிட்டு கட்டிய வீடு இது. ரொம்ப கஷ்டப்பட்டு தேடித்தான் இந்த இடம் கிடைச்சுது. இது மாதிரி நிழல் உள்ள தெருவில் முட்டு சந்தா கிடைப்பது ரொம்ப கஷ்டம்." என்றான் பெருமையாக.
வாழ்க்கையில் சாதித்து விட்ட திருப்தி அவன் முகத்தில் தெரிந்தது.
அவன் கன்னக் கதுப்புகள் பளபளத்தன.
படியேறி வந்தவன், மெதுவாக மேல் மாடியிலுள்ள அறையைத் திறந்தான். அது ஒரு கெஸ்ட் ஹவுஸ் போல் 20க்கு 10 அறை. சோபாக்கள், டீபாய். மைக்ரோ ஓவன், சின்ன பிரிட்ஜ், ஏசி, டிவி என ஏறக்குறைய நட்சத்திர ஓட்டலின் அறையைப் போல இருந்தது.
உட்காரச் சொன்னான். அமர்ந்தான். சோபா சொகுசாக அவனை விழுங்கியது போல் உள்ளழுந்தியது, அந்த வீடு நுழைந்தது முதல் அந்த நொடி வரை எல்லாவற்றிலும் பணத்தின் நிறம் பளபளத்தது.
”இதுதான் நம்ம கெஸ்ட் ஹவுஸ் ”என்றபடி ஹாயாக அமர்ந்தான். அடுத்த சில வினாடிகளில் எழுந்து ப்ரிஜைத் திறந்தான் .உள்ளே இருந்து விண்டேஜ் விஸ்கியை எடுத்து கடகடவென இரண்டு கிளாஸ்களில் ஊற்றினான்.
தயக்கத்தோடு விழித்தான் இளங்கோவன்.அவனுக்கு அப்போது குடிக்கும் மனநிலை இல்லை.
“பரவால்ல ஒரு டேபிள் மேனர்ஸ்க்காகச் சாப்பிடு,’’ என்றபடி பாதி நிறைந்த கிளாசை அவன் பக்கம் நகர்த்திக் கொடுத்தான்.
அவன் சம்மதம் பாராமலேயே “ச்சியர்ஸ்” சொன்னான்.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் மேலேயே பார் மாதிரி வைத்திருக்கிறானே என்று. “யாரும் வரமாட்டார்களா?" என்றான்.
"இங்கே யாரும் வரமாட்டாங்க. இது என்னுடைய பர்சனல் ரூம் மாதிரி" என்றான் .
மெல்லப் பேசிப்பேசி பள்ளிக்கால பழைய நினைவுகளுக்குள் புகுந்தனர். யார் யாரெல்லாம் இப்போது தொடர்பில் இருக்கிறார்கள்?என்று கேட்டான். அவன் சிலவற்றைப் பகிர்ந்தான்.
இவனுக்குக் குடிப்பதற்குத் தயக்கமாக இருந்தது.
"பரவால்ல யோசிக்காத. எடுத்துச் சாப்பிடு."என்றான். இவன் மனதிற்குள் வேறொன்றை விழுங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறான்.
நண்பனின் நிர்ப்பந்தத்தின் பேரில் கிளாஸ் எடுத்து இரண்டு சிப்ஸ் மட்டும் உறிஞ்சினான்.தொண்டையில் எரிச்சலோடு இறங்கியது. மனம் அதில் ஒன்றாததால் கூடுதல் எரிச்சலாக இருந்தது.
முருகானந்தம் நீளமாக வாய்விட்டு சிரித்தான். அது இயல்பின் சதவீதம் தாண்டியதாக இருந்தது. கை தொட்டு, தொட்டு பேசினான். கை தட்டிச் சிரித்தான். "வாழ்க்கைய நினைச்சா வேடிக்கையாக இருக்குது." என்றான்.
நிறைய வளவளவென்று பேசினான். இளங்கோ ஒடுங்கலுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.நண்பனின் உணர்வில் அவனால் நுழைய முடியவில்லை.
இடையிடையே சில வரிகள் உதிர்த்திருப்பான். அவன் நெஞ்சில் ஒரு பாரம் சுமந்து கொண்டு இருக்கிறான். பேச்சின் ஊடாக அதை இறக்கி வைக்க தக்க இடம் தேடிக் கொண்டிருந்தான்.
"வாழ்க்கை நாம நினைக்கிறது போல அமையுறதில்லை. நம்ம கூட படிச்ச பசங்கள எல்லாம் பாரு. நம்மளோட படிச்ச ஏ. ராஜேந்திரன் ஆட்டோ ஓட்டுறான். ஜெ.அருள் கல்யாண மண்டபத்தில் கணக்கெழுதுறான். மகேந்திரன் 18 வயசுல சூசைட் பண்ணிட்டான்.சாம்பசிவம் லவ் மேரேஜ் பண்ணிட்டு ஊரைவிட்டே போய்ட்டான். சம்பந்தம் மளிகைக்கடை. தனபதி போலீஸ் வேலைக்கு போய்ட்டான். மக்கு மக்கு என்று பேரெடுத்த கண்ணதாசன் சப் ரிஜிஸ்டர் ஆய்ட்டான்.ஐயர் வீட்டு மணிகண்டன் டூவீலர் மெக்கானிக் ஷாப் வச்சிட்டான்" என்று பலரைப் பற்றியும் தகவல்களைக் கூறினான்.
இளங்கோவன் பெண்கள் பக்கம் திசை திருப்பினான்.
"செல்வமதி எப்படி இருக்கு?" என்றான்.
"அது எங்கயோ டீச்சர் வேலை பார்க்குது. மலர்விழி பேரன் பேத்தி அளவிற்கு போயாச்சு. ஆனால் ஆள் அப்படியே இருக்கு.' பத்மாவதி தெரியுமில்ல? பத்மாவதியை ஒருநாள் பஸ்ஸில் பார்த்தேன். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு தளர்ந்து போய் கிழவியா இருந்துச்சு. ரெண்டு பசங்க அல்லாடிட்டு பஸ்ல ஏறிச்சு. அது இருந்த இருப்பென்ன?. படிக்கிறப்போ தினசரி ஒரு கலர்ல ட்ரஸ். அதுக்கு மேட்சா ஒயர் கூடை பேக்னு வரும். அதைப் பார்த்துட்டு நான் ஷாக்காயிட்டேன். ஆண்டு விழாவுல பாட்டு பாடுன கனிமொழி கிழவிபோல ஆயிடுச்சு" என்று மாணவிகள் பலரைப் பற்றியும் சொன்னான்.
இதுதான் சமயம், எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் இளங்கோவன். கிடைக்கிற இடைவெளியில் கேள்வியை செருகிவிட வேண்டியதுதான் என்று நினைத்தான். அந்த தவிப்பு அவனை அரித்துக் கொண்டிருந்தது. முகத்தில் ஒரு தயக்க ரேகை படர்ந்து விரிந்து கொண்டே இருந்தது.
நல்ல வாய்ப்பு. குடும்பத்தை விட்டுக் கத்தரித்துக் கொண்டு தனியே இருக்கிறான். இதுதான் நல்ல சமயம். கேட்டுவிட வேண்டியதுதான் என்று இளங்கோவன் நினைத்துக் கொண்டான்.
"முருகானந்தம் தப்பா நினைச்சுக்காத. ஒரு ஹெல்ப் பண்ணு. பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும் ஒரு பத்தாயிரம் ரூபாய் வேணும். ரெண்டு மூணு மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன். கேட்க கஷ்டமாத்தான் இருக்கு. மாதாமாதம் பட்ஜெட் போட்டு ஓட்ட வேண்டி இருக்கு. எப்படியாவது திருப்பி கொடுத்துடறேன். தப்பா நினைக்காதே..."
என்ற வார்த்தைகளை மனதுக்குள் பல முறை ஒத்திகை பார்த்து வைத்திருந்தான். ஏற்கெனவே மனனம் செய்திருந்தான். ஒரு வார்த்தை நுனி தொட்டு இழுத்தால் போதும். கடைசிவரை இழுபட்ட நூல்போல் அறுபடாமல் வந்துவிடும்.
நல்ல மகிழ்ச்சி மனநிலையில் இருந்தான் முருகானந்தம். இப்போது அவன் மறுப்பதற்கு எந்த முகாந்திரமே இல்லை.தூண்டில் காரன் மிதவை மேல் கண் வைத்திருப்பது போல நண்பனின் மனநிலையில் கூர் கவனம் வைத்திருந்தான்.சரியான சந்தர்ப்பத்திற்காக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் அவன் ஒரு க்ளாஸ் முடித்துவிட்டான். அடுத்த ரவுண்டுக்கு தயாரானான்.
"என்ன இப்படி இரண்டு சிப் போட நிறுத்திட்டே? ஏன் ஏன் தயங்குறே? நீ என் நண்பன் பால்யகால நண்பன். நமக்குள்ள எதுவுமே கிடையாது," என்றான் உரத்த குரலில்.
"எனக்கு மூடு இல்லை" என்றான்.
" இன்னைக்கு நல்லா இருக்கிறேன்.’’ என்றபடி பலமாக சிரித்து நீளமாகப் பேச ஆரம்பித்தான்.
"வாழ்க்கையில் இன்னைக்கு நல்லா இருக்கிறேன். எந்த கவலையும் இல்லை -ஆனா இந்த இடத்துக்கு வர்றதுக்கு நானும் பல கஷ்டங்கள் அவமானங்கள் இடையூறுகள் எல்லாம் தாண்டி தான் வந்திருக்கேன்..."என்றான்.
"ஆமாம்,ஆமாம்"என்று தயக்கத்தோடு தலையாட்டினான் இளங்கோவன்.
"நீ வந்து நம்ம கூட படிக்க பசங்கள் எல்லாம் ஒன்று சேர்த்து வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்க. சந்தோஷமான விஷயம் .ஆனா நாம அப்ப படிச்ச காலத்தில் உள்ள மாதிரி இப்ப கிடையாது. லைஃப் ரொம்ப மாறிடுச்சு.இப்ப பக்கத்துல இருக்கவங்கட்ட கூட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். குறிப்பா ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்," என்றவன்,
"நீ என் பெஸ்ட்பிரண்ட். உயிர் நண்பன்டா. அப்ப ஸ்கூல்ல க்ளாஸ் மேட் இப்ப இங்கேயும் க்ளாஸ்மேட்" என கண்ணடித்தபடி கால்வாசி விஸ்கி இருந்த கிளாசைத் தூக்கிக் காண்பித்தான். கலகலவென சிரித்தான்.
நண்பனின் சுருதி மாறியது போல் தோன்றியது.அவனை உற்றுப் பார்த்தான் முருகானந்தம்.
"இளங்கோவா ரொம்ப விழிப்பா இருக்க வேண்டிய காலம் இது. வந்து கொஞ்சம் பேசிப் பழகினாலே கடன் கேக்குறானுங்க.. இத ஒரு ட்ரெண்டா ஆகிட்டாங்கப்பா.கைமாத்து கேக்குறானுங்க. நம்மள முட்டாளாக்கிடுவானுங்க. ஒரு பயலையும் நம்பாதே எதுவும் கொடுக்காதே.இரக்கப்பட்டு கொடுத்தா... சத்தியமா திரும்பி வராது. காசும் போச்சு.நட்பும் போச்சு. டபுள் லாஸ்... சத்தியமா வராது. ஜாக்கிரதையா இரு. எத்தனை பேரு கொஞ்சம் பழக ஆரம்பிச்சவுடனே கடன் கேட்டிருக்காங்க தெரியுமா? நான் என்ன சும்பையா? என் மூஞ்சில அப்படியா எழுதி ஒட்டி இருக்கு? முடியாதுன்னு சொல்லிடுவேன். என்கிட்டே நடக்குமா? எத்தனை பேரை பார்த்து இருப்பேன்?" என்றான்.
இளங்கோவன் உள்ளுக்குள் நிலைகுலைந்து போனான்.அவன் கேட்கவந்த விஷயம் நுனிநாக்கு வரை வந்து இருந்தது சுருண்டு மடங்கி உள்ளுக்குள் திரும்பிச் சென்றுவிட்டது. அவன் மனம் அந்தச் சூழலிலிருந்து கழன்றுகொண்டது.
சரேலென்று உடனே கிளம்ப வேண்டும் போலிருந்தது இளங்கோவனுக்கு. கடிகாரத்தைப் பார்த்தான் திடீரென்று எழுந்தான். அங்கிருக்கும் ஒவ்வொரு வினாடியும் வீணானது என்று தோன்றியது அவனுக்கு.
இளங்கோவன் மனதில் அடுத்து என்ன செய்யலாம் ? என்று கேள்விகள் அலையடித்தன.அவை சிராய்ப்புகளில் மிளகாய்ப்பொடி தூவியதுபோல் எரிச்சலுடன் எழுந்தன.
"என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட? வேலை இருக்கா? இருந்துட்டு போகலாமே. சரி, நீ எப்ப வேணும்னாலும் வா... ஒரு நாளைக்கு குடும்பத்தோட அழைச்சிட்டு வா." என்றான் முருகானந்தம் பின்தொடர்ந்த குரலில்.
அது அவன் காதில் விழவே இல்லை.