செவுலு மாட்டை இழுத்து வந்து கொட்டகையில் கட்டினார் வெங்கடேசன். அந்தி சாய்ந்து காலம் கருக்கத் தொடங்கியிருந்தது. கொட்டகைக்குள் சிறிய மஞ்சள்நிற பல்பு மென்பொன்னிறமாய் ஒளிர்ந்தது. அளவான கொட்டகைக்குப் போதுமான வெளிச்சம். வீட்டின் பின்புறக் கொள்ளையில் கால் காணி நிலத்தில் கிழக்கு மூலையாகக் கொட்டகை போட்டிருந்தார். இரண்டு பக்கமும் நிலைக்குத்தாக நந்நாலு கருங்கல் நட்டு இந்தப் பொங்கலுக்குத்தான் கூரை மாற்றிப் புதிதாகப் பனையோலை இறக்கினார். மாடுகளின் தீவனத்திற்காகக் கொட்டகைக்கு எதிரில் மேற்காக வைக்கோல் போரும் தெற்காகக் கழுநீர்த் தொட்டிப்பானையும் இருந்தன.
செவுலு மாட்டோடு சேர்த்து ஒரு கறுப்பு, கறுப்பு வெள்ளை, ஒரு செவுலு வெள்ளை என நான்கு கறவை மாடுகளும் ஒரு சேங்கன்று, இரண்டு கெடேரி என மூன்று கன்றுகளுமாக மொத்தம் ஏழு உருப்படிகள் வைத்திருந்தார். எல்லாமே நாட்டு மாடுகள். எதுவுமே சந்தையில் பிடித்தவை அல்ல. வீட்டிலேயே கன்று போட்டு கன்று போட்டு வளர்ந்த ஊட்டுங்கன்றுகள். சேங்கன்றாக இருந்தால் பல் படும் வரை வைத்திருந்து சந்தையில் விற்றுவிடுவார். கெடேரிகளாக இருந்தால் வீட்டிலேயே கறவையாகும். அப்படி வைத்திருந்த கன்றுகள்தான் இப்போது பசுக்களாகியிருந்தன.
நான்கு கறவைகளும் காலையும் மாலையும் படி தளும்ப கறக்கும். 4 லிட்டருக்குக் குறையாமல் மடி சுரப்பன. வெங்கடேசன்தான் கறவைகளைப் பால் ஸ்டோருக்கு ஓட்டிப் போவார், மீட்டு வருவார். இரண்டு கால்களுக்கிடையில் படியை இடுக்கி, குத்துக்கால் போட்டு அமர்ந்தாரானால் படியின் வாய் நுரைக்க நுரைக்க பால் கறப்பார். பாலை ஸ்டோரில் அளந்து ஊற்றிய பின்பு அவரது பிரதான வேலை அங்கிருக்கும் கல் திட்டையில் ஏறி அமர்ந்து பீடி இழுப்பது. தன் தலைப்பாகைக்குள் எப்போதும் மூன்று, நான்கு பீடியும் வத்திப்பெட்டியும் வைத்திருப்பார். அதிலிருந்து ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்தபடி மற்ற கறவைக்காரர்களை நோட்டம் விடுவார். மாடு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஸ்டோருக்கு வந்துதான் பால் கறந்து ஊற்ற வேண்டும். மாட்டை ஓட்டிக்கொண்டு வர முடியாதவர்கள் வீட்டிலேயே கறந்து கொண்டுவந்து ஊற்றுவர். அப்படி அங்கு வந்து பால் கறப்பவர்கள் யாராவது கையில் விளக்கெண்ணெய் தொட்டுக் கொள்வது இவர் பார்வையில் பட்டால் போதும். கல் திட்டையிலிருந்தே இப்படிக் கத்துவார்.
“எண்ணெ தொட்டு மடி புடிக்கறவனெல்லாம் எதுக்குக் கறவய வெச்சிருக்கானுவளோ தெரீல…அதுக்குப் பால கன்னூட்டியே குடிக்கட்டன்னு உட்டரலாம்…” என்று கேலி செய்வார். மெல்லிய பெருமிதப் புன்னகையோடு பீடியை இன்னும் ரசித்து ஒருமுறை இழுப்பார்.
பால் கறப்பதில் அவரைவிட அந்த ஊரிலேயே தலைசிறந்தவர் யாரும் இல்லை என்கிற கர்வம் அவருக்கு உண்டு. நியாயமான கர்வம்தான் என்றாலும் கொஞ்சம் மிகை. சிறு வயதிலிருந்து மனிதர்களுடன் புழங்கியதை விட மாடுகளிடம்தான் அதிகமாகப் புழங்கினார் வெங்கடேசன். நினைவு தெரிந்த நாளிலிருந்தே பால் கறக்கிறார். ஆரம்பத்தில் அவரும் எண்ணெய் தொட்டு மடி பிடித்தவர்தான். ஆனால் காலப்போக்கில் எண்ணெயை விட்டுவிட்டார். மாட்டின் காம்பை இழுத்து விரல்களில் பாலைப் பீய்ச்சிக்கொள்வார், அவ்வளவுதான். அந்த ஈரத்திலேயே சரசரவென்று கறந்துவிடுவார்.
வெங்கடேசன் பால் கறப்பதில் மட்டும் கைதேர்ந்தவர் என்று நினைப்பதற்கில்லை. ஊருக்குள்ளே பல அசகாய சூரத்தனங்களைச் செய்து காட்டுவார். விசித்திர விச்சைகளில் வல்லாளர். வாலிபப் பருவத்தில் இருக்கும் பயல்களோடு சரிக்குச் சமமாக வலிமைக்கு நிற்பார். அவர்களிடத்தில் தனது பராக்கிரமங்களை அநாயசமாக நிகழ்த்துவார். ‘இந்திர…ஜித்’ என்னும் பெயரை ஒரு மந்திரச் சொல்போல, கம்பீரமாக உச்சரித்தவாறே தனது இடது கையை இறுக மூடி பலமேற்றி அவர்களிடையே நீட்டுவார். தன் கையை யாராவது மடக்கிக் காட்டும்படி சவால் விடுப்பார். யாரும் அவர் கையை மடக்கியதே கிடையாது.
இப்படி ஒருமுறை பலப்பரிட்சை வைத்துக் காட்டினால், மறுமுறை தன் கைகளின் இரண்டு ஆள்காட்டி விரல்களை மட்டும் மடக்கி ஊன்றி, அதில் தன் உடல் எடையைத் தாங்கி 30 தண்டால் எடுத்து எல்லோரையும் அசத்துவார். மற்றவர்கள் தன் முழுக் கைகளைப் பயன்படுத்தினாலும் அவரது எண்ணிக்கையைத் தொடமாட்டார்கள். அவருக்குக் கௌரவமாய் இருக்கும்.
உடலில் மட்டுமின்றி அறிவிலும் பலம் உண்டானவர். அவரைப் போல் இராமாயண, பாரதக் கதைகளில் தேர்ச்சியுடையவர் யாரும் இல்லை எனலாம். படிப்பறிவு இல்லாதவர் என்றாலும் இராமாயண, பாரதக் கதைகள் அத்துப்படி. மையக் கதை தொடங்கி கிளைக்கதைகள் உட்பட எல்லாமே அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. சிறுவயதிலிருந்தே இராமாயண, மகாபாரதக் கூத்துகள் சுற்றுப்பட்டில் எங்கு நடந்தாலும் அங்கு வெங்கடேசனின் தலை தெரியும். பத்துநாள் இராக்கூத்து என்றாலும் இருக்கின்ற வேலைகளை விட்டுவிட்டு கூத்துக் கொட்டகையே கதி என்று கிடப்பார். சமயத்தில் கூத்தாடுபவர்களே கூட தவறு செய்துவிட்டால் வெங்கடேசனிடம் மாட்டிக் கொள்வதுண்டு.
அப்படித்தான் ஒருமுறை பாரதக் கதையில் விராட பருவம் கூத்து நடந்துகொண்டிருந்தது. பீம வேடம் கட்டியவர் அடவுக்குரிய பாடலைப் பாடி ஆடிக்கொண்டே “தந்திரி பாலன் நானே…” என்று தவறான பெயரை இராகம் இழுத்து நிறுத்தினார். அன்று சூர வேடம் கட்ட வேண்டிய ஆள் போதையில் இருந்ததால் கூத்தாடியவர்கள் கீசகன் வதத்தையும் விட்டுவிட்டனர்.
வெங்கடேசனுக்கு வந்ததே கோபம்! கூத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இடைமறித்து உள்ளே நுழைந்துவிட்டார்.
“பீமம் பேர தப்பா சொன்னானுவளே. அப்பவே கேட்டுருப்பேன். போனா போவுதுன்னு பாத்தா கீசெகன் வதத்தையே உட்டுட்டானுவளே. கூத்துக் கட்ட தெரியாதவனுவளா வந்தா கத இப்பிடித்தான். தலையும் புரியாது, வாலும் புரியாது.” என்று கூச்சலிட்டார். அதன் பின்னர் கூத்தைப் பார்க்க அவர் விரும்பவில்லை.
கூத்து நடக்கையில் என்றில்லை. வீட்டின் திண்ணையில் வெறுமனே பீடி இழுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் போதும் இப்படித்தான். யாரையாவது ஏதாவது புராணக் கதைகள் கேட்டு, தன் நினைவாற்றலைப் பரிசோதனை செய்து கூர்தீட்டிக் கொள்வார். ஒருமுறை தெருவில் சென்ற சூணாம்பட்டானை அழைத்து, “யோவ்! அசுவத்தாமன் இப்ப எங்க இருக்கான்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“அதாம் பாரதக் கதெ நடந்து முடிஞ்சு போச்சேயா. அப்பவே அவன் செத்துருப்பான்” என்று சூணாம்பட்டான் பதிலளித்தார்.
“அதான் இல்ல. அசுவத்தாமன் ஒரு செரஞ்சீவி. அவன் இந்நேரங் காட்டுல யாரு கண்ணுலயும் படாத சுத்தினுருப்பான். தெரிஞ்சதா” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
இந்த வேடிக்கைத்தனமான விநோதங்கள் நிரம்பிய வெங்கடேசன்தான் மாடுகளிடம் பொறுப்பாக நடந்து கொள்வார். எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். காலையிலும் மாலையிலும் தண்ணீர் காட்டுவார். மறக்காமல் தவிடு மூட்டைகள் வாங்கி இருப்பில் வைத்துக்கொள்வார். மாலையில் தானே அடுப்பு மூட்டி அவற்றுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொண்டுபோவார். அவரது மனைவி கற்பகம், ‘ஏந்தே. நாந்தான் காச்சறன். நீ போயி செத்தப் படுதே’ என்றாலும் ஒப்புக் கொள்ளமாட்டார்.
“நீ வர்றதுக்கு முன்னாலேர்ந்து அதுவள எனக்குத் தெரியும். நாம் பாத்துக்கறேன் நீ போ…” என்பார்.
“அப்படி என்னதான் அந்த மாடுவகிட்ட இருக்குதோ. அதை இப்பிடி பாத்துக்கற. அதுவளா காலத்துக்கும் வரப்போவுதுவ…” என்று கற்பகம் சலித்துக் கொள்வாள். வெங்கடேசன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் வேலையைச் செய்வார்.
2
செவுலு மாட்டைக் கொட்டகையில் கட்டிவிட்டு வீடு நுழைந்தார் வெங்கடேசன். கற்பகம் அவரிடம், “வாதே. கைய கால கழுவிட்டு வந்து சாப்பிடுதே” என்றாள்.
வெங்கடேசன் வந்து சாப்பிட அமர்ந்ததும், “ஏந்தே. அந்தச் செவுலு மாடு மூனு நாளா அழுக்கு அட்ச்சினு இருக்குதே. அத்த எங்கயாச்சும் செனக்கிக் கூட்டிம் போவர்த்தான” என்று ஆரம்பித்தாள்.
“ஆமா. கூட்டிம்போவனுந்தான். நம்ம பட்டுராஜ் நைனாரு கைனில வக்கெ சுத்தறாங்க. அவரு வீட்ட இருக்கமாட்றாரு. இல்லன்னா அவரு வீட்டுக்கு கூட்டிம்போயி தாண்டினு வரலாம். நேரங் கெடக்கமாட்டிங்கது அவருக்கு.”
“அவரு இல்லன்னா என்ன. மாட்டாஸ்பித்திரிக்குக் கூட்டிம்போயி ஊசி போட்டு இட்டாந்தட்டுமா?”
“தே…மாடும் மனுசாளும் ஒன்னு. நமுக்குக் கொம்பும் வாலும் இல்ல. அதுவளுக்கு இருக்குது. மத்தபடி புத்தி கித்தியெல்லாம் ஒன்னுத்தான். மனுசாளுக்கும் பத்து மாசம் செம. அதுவளுக்கும் பத்து மாசம் செம. அதுவளுக்கும் நம்மாட்டந்தான ஒடம்பு வேகம் கேக்கும். நம்மளும் ஊசி போட்டுப் புள்ள பெத்துக்கலான்னு இருந்தா மனுசாளு கதிய ஓசிச்சிப் பாரு” என்று ஜாடையாகச் சிரித்தார்.
“தே…ஊசி போட்டா செலவு மிச்சமாவுதில்ல. 10 ரூபாயில வேல முடிஞ்சிரும். நைனாரூட்டுல 300 கேப்பாங்க.”
“அதுக்குப் பாத்தா ஆவுமா. மாட்டாஸ்பித்திரில என்னா ரவம் வெச்சிங்கிறான்னே தெரியாது!”
“சூணாம்பட்டானுந்தான் வீட்ட காள போர்றான். அவன் தாண்டித்தருவான். அவங்கிட்ட கூட்டிம்போவர்த்தான…”
“எதே? சூணாம்பட்டான் வீட்டுக்கா? கொம்பில்லாத போடி ரவம் ஒன்னு வெச்சினு ஊரு மாட்டப் பூரா மொட்டையாக்கறானே. அவங்கட்டயா கூட்டிம்போவணும்.”
“இப்பக் கொம்புல என்னா வாழுது. கொம்பா கறக்குது. அவன் நைனார உட கம்மியா தான வாங்கறான். அவங்கிட்ட கூட்டிம்போ.”
“அதுவளுக்குக் கொம்புதான் லெட்சணம். கொம்பு இல்லாத மொட்ட மாட்ட வெச்சினு அழவு பாக்க சொல்றியா” என்று அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாதது போல் கடுத்து நிறுத்தினார். கற்பகமும் அதன்பின்பு எதுவும் பேசவில்லை.
வெங்கடேசன் மறுநாள் மாலை பட்டுராஜ் நயினாரை அவரது வயலுக்குச் சென்று சந்தித்து, “மாடு வளுவடிக்குது நைனாரே. அதான் நம்ம ஊட்டுக்கு இட்டாரலான்னு கேக்க வந்தேன்…” என்றார்.
“சரிதான் வெங்கடேசு. நான் ரவைக்கி எம் பொண்ணு ஊட்டுக்குப் போறேன். அங்க பத்துத் தெனம் துரோபதி திருநா. பாரதக் கூத்து கட்டறாங்க. எல்லாம் பாத்து திருநா முடிச்சிட்டு வர்றதுக்கு நாளாவும். நீ நாளைக்குக் காலைல நம்ம ஊட்டுக்குப் போ. நான் மரிக்காங் கிட்ட சொல்லிடறேன். அவன் தாண்டித் தருவான்.”
வெங்கடேசனுக்கு நயினார் சொன்ன எல்லாவற்றிலும் ‘பாரதக் கூத்து’ என்பது மட்டும்தான் காதில் நின்றது. வந்த செய்தியை விட்டுவிட்டார். கைகால் பரபரத்தது.
“நைனாரே! நானு உங்கூட கூத்து பாக்க வர்றேன்.”
“யோவ்! மாடு பருவத்துல இருக்கொள்ளவே தாண்டுனாத்தானயா கப்புனு சென புடிக்கும். நீ எங்கூட வந்துட்டா யாரு செனக்கி ஓட்டிம்போவாங்க…”
“ஊட்டுல கற்பவங்கிட்ட சொன்னா அது கூட்டிம்போவும். அதெ நா சொல்லிக்கறேன். நீ வண்டி எப்பன்னு சொல்லு. நம்ம போவலாம். நாம் போயி துணி எடத்தாறன்” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குத் திரும்பினார்.
கற்பகத்திடம் தானும் பட்டுராஜ் நயினாரும் பக்கத்து ஊருக்கு ஒரு காரியமாகப் பத்து நாட்களுக்குச் செல்வதாகவும் நாளை காலை நயினார் வீட்டிற்குச் செவுலு மாட்டைக் கொண்டு செல்லும்படியும் சொல்லி 300 ரூபாயைக் கையில் தந்தார். அன்று இரவு வண்டியைப் பிடித்து ஊருக்குச் சென்று முதல்நாள் கூத்திலிருந்தே பார்க்க அமர்ந்துவிட்டார் வெங்கடேசன்.
காலையில் கற்பகம் செவுலு மாட்டைக் கொட்டகையிலிருந்து அவிழ்த்து நயினார் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அப்போது எதிரே சூணாம்பட்டான் தன் மாட்டைப் பிடித்துக்கொண்டு வந்தார்.
“என்னா கற்பவம். மாட்ட எங்க ஓட்டிம்போற?”
“நம்ம நைனாரூட்டுக்குண்ணே. மாடு வளுவடிக்குது. அதான் தாண்டினு இட்டாரலான்னு இட்டும்போறேன்.”
“ஏன்? எங்கிட்ட இட்டார்றத்தான.”
“நீ போடி ரவந்தான் வெச்சிங்கற. நைனாரு நாட்டு ரவம் வெச்சிங்கறாரு. அங்கத்தான் தாண்டனுன்னு எங்கூட்டுல சொல்லிட்டுப் போச்சி.”
“ரவத்துல என்னா இருக்குது. சென புடிக்குதான்னு பாரு. எல்லாம் பாலத்தான் கறக்குதுவ. நாட்டு ரவம் என்ன தேனா கறக்குது?”
“அது செரி. ஒனக்கா பேச கத்துத் தரணும். நா ஒங்கிட்ட இட்டார்றத்து இருக்கட்டும். நீ மாட்ட எங்க புட்ச்சிம்போற?”
“சந்தக்கிதான் புட்ச்சிம்போறேன். இது வந்து நாளாயிட்டுது. அதான் இத்த மாத்திட்டு கறவ ஒன்னு புட்ச்சாரலான்னு போறேன்” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, “சரீ! அந்த நைனாரு எவளோ வாங்கறாரு?” என்பதை ரகசியக் காற்றுக் குரலில் மெல்லமாகக் கேட்டார்.
“300 வாங்கறாரு.” என்று மூன்று விரல்களைக் காட்டி வாயிலிருந்து சத்தமே வராமல் உதட்டசைவில் உணர்த்தினாள் கற்பகம். அது மிகவும் அதிகம் என்பதுபோலவும் சலித்து முகக்குறி காட்டினாள்.
“அடேயப்பா! நான் எச்சாவா வாங்கறன். அதவுட கம்மிதான. இருந்தாலும் நம்மகிட்ட இட்டாரமாட்டியே. நான் இத்த விக்கத்தாம் போறேன். ஒம் மாட்டுக்குத் தாண்டிக்கனு கையில இருக்கறத ஏதாச்சுங் கொடுத்தா அண்ணனுக்கு டீ செலவுக்காச்சும் ஆவும்” என்று ஆதுரத்துடன் கேட்டார்.
கற்பகத்துக்குச் சூணாம்பட்டானின் நிலை புரிந்தது. முந்நூறை மொத்தமாக இழப்பதற்கும் அவள் மனம் விரும்பவில்லை. சூணாம்பட்டானுக்குக் கொடுப்பதுபோக மீதமிருப்பதை மிச்சப்படுத்தினால் ஏதாவது கைச்செலவுக்கு ஆகும் எனத் திட்டமிட்டாள். ஆனால் வெங்கடேசனுக்குத் தெரிந்தால்? தெரியாமல் பார்த்துக்கொண்டால் போதும் என்ற தைரியம் வந்தவளாய், “சரிண்ணே. இந்தா 50 வெச்சிக்க. தாண்டட்டும்” என்று சொல்லி பணத்தைக் கையில் மறைத்துத் திணித்தாள். சூணாம்பட்டானின் போடி காளை செவுலு மீது எக்கியது.
எல்லாம் முடிந்து செவுலு மாட்டைக் கொண்டு வந்து கொட்டகையில் கட்டினாள். பத்து நாட்கள் திருவிழாவை முடித்துவிட்டு வெங்கடேசனும் வீடு வந்து சேர்ந்தார். வந்ததும் கற்பகத்திடம், “மாட்ட நைனாரூட்டுக்கு இட்டும்போயி தாண்டினு வந்தியா?” என்று கேட்டார். அவளும் ‘அதெல்லாம் ஆச்சு’ என்று சாவதானமாகப் பதிலளித்தாள்.
3
வெங்கடேசன் தன் வழக்கமான காரியங்களில் ஈடுபடலானார். மாடுகளைப் பார்த்துக் கொள்வது, பால் ஸ்டோருக்கு மாடுகளை ஓட்டிச் சென்று பால் கறப்பது, ஊருக்குள் சாகசங்கள் செய்து காட்டுவது, வம்பளப்பது என நாட்கள் இனிதே நகர்ந்தன. செவுலு மாடும் சினை பிடித்ததற்கு அறிகுறிகளைக் காட்டியது. நான்கு மாதங்களில் சாந்தமாகியது. ஆறு, ஏழாவது மாதங்களில் மடி வற்றிக் காம்புகள் மட்டும் நின்றன. எட்டு, ஒன்பதாவது மாதங்களில் மடி இறங்கிப் பருக்கத் தொடங்கியது. இன்னும் சில நாட்களில் கன்று போடும் என்பதுபோல மாட்டின் பின்பக்க அறையும் தளர்வாகித் தொங்கியது.
சித்திரை மாதத்தில் சூணாம்பட்டானின் காளை தாண்டியது. இப்போது மார்கழி நடக்கிறது. ஊர் முழுதும் பனி இறங்கி மூடியது. விடியல் நேரத்தில் பக்கத்தில் ஆள் வருவது தெரியாதபடிக்கு வெண்ணிற அடர்பனி புகையாய்ச் சூழ்ந்தது. காலையில் ஸ்டோருக்குச் செல்லும் மாடுகளின் கழுத்து மணியோசையை வைத்துத்தான் ஆள் வருவதையே கண்டறிந்து ஆட்கள் நடந்தனர்.
செவுலு மாடு சினையானதிலிருந்து அதனைத் தவிர்த்து மற்றவற்றை ஸ்டோருக்கு ஓட்டிப்போனார் வெங்கடேசன். சினை மாட்டின் பாலைக் கறந்துவிட்டால் பிறக்கின்ற கன்று தெம்பின்றி நோஞ்சானாகப் பிறக்கும். எனவே, செவுலுக்கு நல்ல தீனியும் ஓய்வும். வெங்கடேசன் வழமைபோல் மற்ற கறவைகளை ஸ்டோருக்கு ஓட்டிச் சென்றார். அன்றைய தினம் அவருக்கு முன்பே ஸ்டோரில் சூணாம்பட்டான் அமர்ந்து தன் கறவையோடு பால் கறந்து கொண்டிருந்தார். வெங்கடேசன் அவருக்கு அருகில் தன் மாடுகளைக் கட்டிவிட்டுக் கறக்க அமர்ந்தார்.
சூணாம்பட்டான் பெரும்பாலும் வெங்கடேசன் கண்ணில் படுவதை விரும்புவதில்லை. ஏதாவது கேள்வி கேட்டு மூக்கை உடைப்பார் என்பதால் அவரிடம் தலை காட்டாமல் தப்பித்துக் கொள்வார். எப்போதாவது யதேச்சையாகச் சிக்கினால் வெங்கடேசன் விடமாட்டார். சூணாம்பட்டானின் போடி காளையால்தான் ஊரில் பல மாடுகள் கொம்பின்றி மொட்டையாக இருப்பதாக வெங்கடேசனுக்கு ஒரு எண்ணம். அதனால் சமயம் வாய்க்கும்போதெல்லாம் சூணாம்பட்டானின் காலை வாரிவிடுவார். அன்றும் அப்படித்தான் நடந்துகொள்ளத் துணிந்தார்.
“காளைய உட்டுட்டு கறவைக்கு வந்து மாசம் பத்தாவ போவுது. இன்னம் வெரலு எண்ண தேடுது” என்று வம்பிழுக்க ஆரம்பித்தார்.
“ஆமா வெங்கடேசா. என்ன இருந்தாலும் உன்னாட்டம் வருமா. மாட்டுக்கே தெரியாத பால் கறக்கறவனாச்சே நீ.”
“இன்னங் கொஞ்ச நாள்ல பாரு. கொம்புலயே கறக்கப் போறேன்” என்று அங்கலாய்த்தார்.
இருவரும் பேசியபடியே கறந்து முடித்தனர். வெங்கடேசன் வழக்கம்போல அளந்து ஊற்றிவிட்டு கல் திட்டைக்குப் பீடி பிடிக்கப் போனார். பின்னாலேயே சூணாம்பட்டானும் சென்றார்.
“ஒரு பீடி குடு வெங்கடேசா. ரொம்பக் குளுருது.”
“பீடி புடிக்கறத்துக்கு உனக்கு ஒரு காரணம் ஆப்டுக்குச்சு போ” என்று சொல்லியபடியே தலைப்பாகையிலிருந்து ஒன்றை எடுத்து நீட்டினார். பீடிகள் புகைந்தன.
“காளய வித்து இந்தக் கறவய வாங்கனியே. நல்ல வெலயா?”
“எங்க வெல போச்சு. வித்ததுக்கு மேக்கொண்டு 12 ரூபா போட்டுத்தான் இத்தப் புடிச்சாந்தன். இது என்னாடான்னா இன்னும் பழவாம யார பாத்தாலும் தலையாட்டுது. பாய சீறுது. முந்தாநா பக்கத்து ஊட்டு மாடப் பாஞ்சிட்த்து. ரெண்டு நாளா எனக்கும் அவனுக்குஞ் சண்ட. தெரியாத இத்த வாங்கியாந்தாச்சு. நம்ம கையில இருக்கொள்ளவே ஒரு கன்னு போட்டுதுன்னா வித்தட்லான்னு பாக்கறேன்.”
“சரி. அதாம் பாரு. ஓசன பண்ணிச் செய்யி.”
“உன் செவுலு மாடு கன்னு போடப்போவுது பாக்கறேன்.”
“ஆமாமா! பின்னால வாய தெறக்க ஆரம்பிச்சிட்த்து. இன்னம் பத்து, பாஞ்சி நாள்ல போட்ரும்.”
“நம்ம காளதான். கடைசியா போட்டாலும் நல்ல கனம்மாத்தான் போட்டுது. அதாம் பட்டுனு பலம் பட்டுட்த்து.”
“யோவ்! அது நைனாரூட்டுல போட்டதுயா. உனக்கு பவல்லே பசுமாடு தெரியாது. இருட்ல எரும்மாடா தெரியப்போவுது.”
“நைனாரூட்ட போட்டதா? யோவ் வெங்கடேசு! போயி கற்பவத்த கேளு. காள மாடு கட்ட கடேசியா போவுதே! நாந்தான் எதாச்சும் செலவுக்கு ஆவுன்னு கற்பவத்துகிட்ட கம்மியா வாங்கினு தாண்டிவுட்டேன். எங்கணக்குல நம்மூர்லயே உன் செவுலுதான் கடேசி” என்று உறுதியாகச் சொன்னார் சூணாம்பட்டான்.
வெங்கடேசனுக்கு இருப்பு கொள்ளவில்லை. புகைத்துக் கொண்டிருந்த பீடியைச் சட்டென்று வீசி காலால் மிதித்துவிட்டு மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினார். கற்பகம் வாசல் மெழுகிக் கொண்டிருந்தாள். வெங்கடேசனைக் கண்டதும்,
“ஏந்தே. சீக்கரம் வந்துட்டே. காபி கலக்கட்டா?”
அவளிடம் வெங்கடேசன் எதுவும் பேசவில்லை. மாடுகளைக் கொட்டகையில் கட்டினார். நேராக அங்கிருந்து நயினார் வீட்டிற்குச் சென்றார்.
“வாண்ணே. இம்மாங்காலைலயே இந்தப்பக்கங் காத்தடிக்குது” என்று எழுந்தான் மரிக்கான்.
“டேய்! கற்பவம் வந்து செவுல இங்கத்தானடா தாண்டிம்போனா?”
“இல்லியேண்ணே. ‘வழியில சூணாம்பட்டான் ஊட்டயே தாண்டிட்டேன். அண்ணங்கிட்ட நான் சொல்லிட்டேன், நீ ஒன்னுஞ் சொல்லிக்காத’ன்னு அண்ணி வந்து சொல்லிட்டுப் போச்சேண்ணே” என்றான்.
அவ்வளவுதான். இதைக் கேட்டதும் வெங்கடேசனுக்கு ஒரு கணம் இந்த உலகம் பிரமையானது. விதிர்த்துப் போனார். எல்லாம் கைம்மீறிப் போய்விட்டதாகத் தோன்றியது. கற்பகத்தின் மீது ஆத்திரம். நேராக வீட்டிற்கு வந்தார். ஆனால் கற்பகத்திடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. செயலற்றுப் போனார். என்ன செய்வதென்றே தெரியாமல் நான்கு நாட்களாக வீட்டிற்குள்ளேயே உழன்றார். கற்பகம்தான் மாடுகளை இருவேளையும் ஸ்டோருக்கு ஓட்டிப் போகிறாள். வெங்கடேசன் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார். வெளியில் சென்று தனது வீரதீர பிரதாபங்களைச் செய்து காட்டுவதில்லை. யாரிடமும் கேள்விகள் கேட்பதில்லை. மாடுகளுக்குத் தீவனம் வைக்கக்கூடச் செல்வதில்லை. நான்கு நாட்களாக வீட்டிற்குள் பூனை போல் அமைதியாகக் கிடக்கும் வெங்கடேசனைப் பார்க்க கற்பகத்திற்கு ஆச்சரியமாய் இருந்தது.
4
ஐந்தாம்நாள் விடியற்காலையில் கற்பகத்திற்கு முன்னரே எழுந்தார் வெங்கடேசன். எல்லா மாடுகளோடு செவுலு மாட்டையும் அவிழ்த்துக்கொண்டு ஸ்டோருக்கு ஓட்டிப்போனார். சூணாம்பட்டானும் அப்போது தன் மாட்டை ஓட்டிவந்தார். மணியோசை கலகலத்ததை வைத்து வெங்கடேசன், அது சூணாம்பட்டானின் மாடுதான் என்று உள்ளுணர்ந்தார். ஒரு கணம். ஒரே கணம்தான். மனம் குரூரமடைந்தது. கையில் பிடித்திருந்த செவுலு மாட்டை சூணாம்பட்டான் மாட்டின் பக்கமாகத் திருப்பிவிட்டார். சூணாம்பட்டானின் மாடு வலுவாகத் தலையாட்டி எகிறியது. செவுலு மாட்டின் வயிற்றில் கொம்பு பலமாக இடித்தது. வலி பொறுக்காமல் செவுலு பெருங்குரலெடுத்து கத்தியது.
“யோவ்! செனயா இருக்க மாட்ட எதுக்குயா இதுங்கிட்ட ஓட்டியாந்த. இதாந் தலையாட்டுதுன்னு சொன்னனே. ஓரமா ஓட்டறதுதானயா” என்று சூணாம்பட்டான் கத்திக்கொண்டே செவுலைப் பார்த்தார். அடி பலமாகத்தான் பட்டிருந்தது.
“யோவ்! பனீல ஒன்னுந் தெரிலயா” என்று ஏதுமறியாதது போல் சொன்னார் வெங்கடேசன்.
5
அன்றைய பகலெல்லாம் அழுது கொண்டிருந்த செவுலு மாலையில் கன்று போட்டது. அழகான சேங்கன்று செத்துப் பிறந்திருந்தது. கற்பகம் பார்த்துப் பார்த்துக் கதறி அழுதாள். வெங்கடேசன் திண்ணையில் குத்துக்கால் போட்டு பீடி புகைத்துக் கொண்டிருந்தார். அப்போது சூணாம்பட்டான் செவுலுக்கு என்னவாயிற்று என்பதைப் பார்க்க வந்திருந்தார். வெங்கடேசன் அவரிடம்,
“யோவ்! உனக்கு அபிமன்யு கதெ தெரியுமா?” என்று விசாரித்தார்.
‘இந்த நேரத்தில் இவனுக்கு இது தேவைதானா?’ என்பதுபோல் சூணாம்பட்டான் முறைத்தபடி அமைதியாக இருந்தார்.
வெங்கடேசன் அவரது பதிலுக்குக் காத்திராமல், “சக்கர வியூகத்துக்கு உள்ள போக்கொள்ள உயிரா போனவன், வரக்கொள்ள பொணமாத்தான் வந்தான். குருஷேத்ரப் போருக்கு அவன் ஒரு காவு!” என்று சொல்லி பீடியைப் பலமாக இழுத்தார்.
ந. சூரிய மூர்த்தி
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இதழ்களில் தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். நவீன இலக்கியத் தளங்களிலும் எழுதும் ஆர்வம் உடையவர்.
பல சிற்றிதழ்களில் இவரது சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. வளரும் எழுத்தாளர்.