
மனைவி சொல்லே மந்திரம் என்பதில் நம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? உங்களுக்குச் சொல்ல என்னிடம் ஒரு சம்பவம் இருக்கிறது.
அபுதாபியில் சூடான ஜூலை மாத இரவொன்றில் நடந்த சம்பவம்.
பிறந்த நாள் பரிசு (லூலூ சென்டரில் ரெடிமேட் உடைகள்) வாங்குவதற்காக மனைவியோடு மாலை எட்டு மணி போல் பிளாட்டை விட்டு இறங்கிக் காரை நோக்கி நடக்கும்போதே ஆரம்பமாகி விட்டது மனைவியின் அறிவுரைப் படலம்:
"பேசாம டாக்ஸியில போயிட்டு வரலாமே?"
“இப்போ எல்லாம் ஓகே? பார்க்கிங் கிடைக்குதும்மா" என்றபடி காரை நோக்கி நடையை சற்று விரைவுபடுத்தினேன்.
சொல்லிவிட்டேனே தவிர எனக்குமே உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருந்தது.
முன்பெல்லாம் இப்படி இல்லை. முன்னென்றால் ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன். அதிகபட்சம் ஓரு அரைமணி நேரம் சுற்றினால் கொஞ்சம் தூரத்திலாவது பார்க்கிங் கிடைத்து விடும்.
கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக, குறிப்பாக இரவு நேரத்தில், பார்க்கிங் கிடைப்பது அரிதிலும் அரிதாய்ப் போனது, எப்படியென்று தெரியவில்லை.
இத்தனைக்கும் தங்கியிருக்கும் இடத்தைச் சுற்றி, ஒரு சதுர கிலோ மீட்டர் அளவில் அங்கு குடியிருப்போர் மட்டுமே கட்டணம் செலுத்தி நிறுத்தக்கூடிய பார்க்கிங் ஏரியாவில்… எங்கிருந்து புதிதாய் இத்தனை கார்கள் வந்து நிறுத்தப்படுகின்றன? அந்த அளவுக்கு புதிதாகக் குடும்பங்கள் வந்து குடியேறி விட்டனவா?
எங்காவது பார்க்கிங் இருக்கிறதா என்று பார்த்தபடியே வந்தவள், "இப்பவே ஒரு இடம் கூட ப்ரீயா இல்ல...நம்ம திரும்பி வரும்போது இருக்குமா? என்றாள்.
காதில் கேட்காதது போல் நடையில் சற்று வேகத்தைக் கூட்டினேன்.
சமீப காலங்களாக (தினம் அலுவலகம் விட்டு வரும்போது) பார்க்கிங்குக்காக சுற்றி அலைவது பழகிப் போயிருந்தது. அலையும் நேரத்தில் அருமையான பழைய பாடல்கள் கார் சிடி பிளேயரில் கேட்பது ஒரு சுகம்.
“ஹலோ… கேட்காத மாதிரியே போறீங்க...”
பின்னாலிருந்து ஒலித்த குரலுக்குத் திரும்பியவன், ஒரு புன்னகையைப் பகிர்ந்தேன்.
எங்கள் கார் நின்றிருந்த இடத்தின் பின்னால் பக்கவாட்டில் ஒரு கார் நின்றிருந்தது. பார்க்கிங் தேடி கிடைக்காமல், யாராவது எடுப்பார்களா? என்று, இதுபோல் ஓரிடத்தில் நிற்பது அங்கங்கே காணக் கிடைப்பது இப்போதெல்லாம் சகஜம். (எத்தனை நாள் நான் நின்றிருப்பேன்!)
நாங்கள் காருக்குள் நுழைவதைப் பார்த்ததும் சற்றுப் பின் தள்ளிப் போய் நின்று, எங்கள் கார் வெளிவர வாகாக நின்றது அந்தக் கார். என்ன ஒரு கரிசனம். "தடாகத்தின் அழுக்கைச் சுத்தப்படுத்தும் மீன்" பராசக்தி வசனம் நினைவுக்கு வந்தது எனக்கு.
காரை ரிவர்ஸ் (அவ்வளவு தூரமில்லை என்றாலும் பிளாட்டுக்கு சற்று அருகிலேயே இருந்த பார்க்கிங்!) எடுத்து வண்டியை நகர்த்த ஆரம்பிக்கும்போது மறுபடியும் ஒலித்தது மனைவியின் குரல்.
“இப்பவும் சொல்றேன். அப்படியே பார்க்கிங்கில் விட்டுட்டு டாக்ஸில போயிட்டு வந்துடலாம்"
திரும்பத் திரும்ப அவள் சொன்னதில் எனக்கு இதற்கு முன்னான ரசமான பார்க்கிங் அனுபவங்கள் நினைவில் வந்து போயின.
ஒரு சில நாட்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலே தேடியலைந்து, ஏதோ ஓர் புண்ணியவான் தன் காரை எடுத்த இடத்தில், வண்டியை நிறுத்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியிருக்கிறேன்..
ஆயினும் ஒரு நகைப்போடு (உள்ளுக்குள் இன்று எப்படியும் சீக்கிரம் பார்க்கிங் கிடைத்துவிட வேண்டுமென்று சொல்லிக்கொண்டே) வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
நம்பிக்கை! அதானே எல்லாம்!
மால் பார்க்கிங்கில் நிறைய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இத்தனை பேருக்கும் இந்த வார நாளில் மாலில் வாங்க ஏதோ இருக்கிறது. ஒருவேளை அவர்கள் ஏரியாவில் பார்க்கிங் கிடைக்காமல் ஒரு இரண்டு மணி நேரம் இங்கு நிறுத்திவிட்டு, ரிலாக்ஸ் செய்கிறார்களோ?
சே...என்ன இது? சிந்தனை எல்லாம் ஒரே பார்க்கிங்?
ஐந்து நிமிட தேடலுக்குப் பின் கிடைத்த பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு மாலுக்குள் நுழைந்தபோது மணி ஒன்பது பத்து.
உள்ளுக்குள் இருந்த பார்க்கிங் நினைவினாலோ என்னவோ, அன்று மனைவி ஒருமணி நேரத்திலேயே தன் பர்சேசை முடித்ததில் உள்ளுக்குள் அதிக சந்தோஷம் கொண்டது மனசு. (சீக்கிரம் பார்க்கிங் போட்டுடலாம், தவிர பர்ஸுக்கும் அதிக சேதாரமில்லை!)
அடுத்த பதினைந்து நிமிடத்தில் மனைவியை பிளாட்டுக்கு கீழே இறக்கிவிட்டவன், ஒரு கணக்கில் முன் நாள்களில் பார்க்கிங் கிடைத்த இடங்களை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தேன்.
பத்தே முக்காலுக்கு மனைவி அழைத்தாள், “கிடைச்சுதா?”
பதினோரு மணிக்கு விளித்து விசாரித்தாள், “இன்னுமா கிடைக்கல?”
பதினொன்னேகாலுக்கு மறுபடி குசலம் விசாரித்தாள், “போன முறை போட்ட இடமெல்லாம் பார்த்தீங்களா?”
ஒவ்வொரு முறையும் வண்டியில் ஒலித்துக் கொண்டிருந்தப் பாடலை நிறுத்தி, அலைபேசியை ஸ்பீக்கர் மோடில் வைத்து (வண்டியோட்டும்போது கையில் ஏந்தியபடி அலைபேசினால் அபராதம்!) பதில் சொல்லிக் கொண்டிருந்தவன், சட்டென்று பார்க்கிங்கில் இருந்த ஒரு காரில் விளக்கு எரிவதைப் பார்த்தவுடன் உடனே பிரேக்கை அழுத்தினேன்.
“ஒரு வண்டி எடுக்கப் போறான், போனை வை, பார்க்கிங் போட்டுட்டு வந்துடறேன்" என்றபடி இணைப்பைத் துண்டித்தேன்,
ஐந்து நிமிடமாயிற்று.
பத்து நிமிடமாயிற்று.
பதினைந்தாவது நிமிடத்தில் அந்தக் காரை அடுத்திருந்த இன்னொரு காரின் விளக்கு எரிந்தது.
“ஆஹா...கிடைத்தால் இப்படி இரண்டு பார்க்கிங்...” என்று சந்தோசப்பட்டது தவறு போல.
அந்த காரும் விளக்கொளியோடு அப்படியே நின்று கொண்டிருந்தது. விளக்கைப் போட்டுவிட்டு அப்படி என்னதான் கதைப்பார்களோ?
யாரவது ஒருத்தர் எடுங்கப்பா என்று உள்ளுக்குள் கத்தினேன்.
யாருக்கும் கேட்ட மாதிரி தெரியவில்லை.
மறுபடி ஒலித்த அலைபேசியை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மிகச் சரியாக பதினொன்று நாற்பதுக்கு இரண்டாவது கார் நகர்ந்து பின்னால் வர, நான் காரை சற்றுப் பின்னகர்த்தினேன்.
வாழ்க நீ எம்மான் என்று அந்தக் கார்காரனை (ரை) வாழ்த்தியபடி, காரைப் பார்க் செய்தேன்.
அது பிரீமியம் பார்க்கிங். இரவு பன்னிரண்டு மணி முதல் காலை எட்டு மணி வரை இலவசமாக யார் வேண்டுமானாலும் நிறுத்தலாம்.
பன்னிரண்டு மணியாக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன. பார்க்கிங் சார்ஜ் ஒரு மணிக்கு மூன்று திர்ஹாம்ஸ். எப்படியும் காலை எட்டு மணிக்கு வந்து எடுப்பது சிரமம். இன்னும் ஒரு மூன்று திர்ஹாம்ஸ் கட்டினால், ஒன்பது மணிக்குள் வந்து காரை எடுத்து விடலாம்.
அலைபேசியில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு டைப் செய்து தகவல் அனுப்பினேன். அழகான மறுமொழி ஆங்கிலத்தில் வந்தது.
"Error…you don’t have sufficient balance in your sim card”
கடுப்போடு ஆச்சரியம் கலந்து அலைபேசியைப் பார்த்தேன். என்னுடையது போஸ்ட் பெய்டு சிம். முன்பணம் எல்லாம் கட்ட வேண்டியதில்லை. முழுமாதம் உபயோகித்துவிட்டு பில் வந்தவுடன் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
இதில் எங்கிருந்து கார்ட் பேலன்ஸ் வந்தது?
ஒருவேளை இப்படி இருக்குமோ? காலையில் அலுவலக ஏரியாவுக்கு காரைக் கொண்டு போயிருந்தேன். அது இரண்டு திர்ஹாம் பார்க்கிங் ஏரியா. முழுநாள் பார்க்கிங் சார்ஜ் அலைபேசியில் செலுத்தியிருந்தேன். அது நாளை காலை பத்து மணி வரை செல்லுபடியாகும்.
அதனால் இப்போது “Error” என்கிறதோ?
அதுவே போதும் என்று விட்டுவிட்டுப் போகவும் முடியாது. இரண்டும் மூன்றும் வேறு வேறல்லவா? அலைபேசியின் ஆன்லைன் டேட்டா பட்டனை ஆப் செய்து ஒரு நிமிடம் கழித்து ஆன் செய்தேன்.
இப்போது நிச்சயம் சரியாக வேலை செய்யுமென்று மறுபடி மெசேஜ் அனுப்பினேன்.
அதே “Error” மெசேஜ் மறுபடி அழகாக ஒளிர்ந்தது.
அடுத்திருந்த ஒரே வழி பார்க்கிங் மெஷின் வழி பணம் செலுத்துதல். வண்டியில் இருந்த (நல்ல வேளை இருந்த) ஆறு ஒரு திர்ஹாம் நாணயங்களையும் இரண்டு ஐம்பது பில் (இரண்டு ஐம்பது பில்=ஒரு திர்ஹாம்) நாணயங்களையும் எடுத்துக்கொண்டு வண்டியை ஆப் செய்துவிட்டு வெளியே வந்தேன்.
இரண்டு புறமும் கண்களை எட்டிப் போட்டுப் பார்த்தேன். பார்க்கிங் மெஷின் இருப்பது போல் தெரியவில்லை.
வேறு வழியில்லை. இரவு பதினொன்று ஐம்பது மணியளவில், இந்தப் பக்கம் ஒரு இருபது மீட்டர் நடந்தேன். அந்தப் பக்கம் ஒரு இருபது மீட்டர் நடந்தேன்.
இதற்கு முன்னால் எத்தனையோ முறை, மெஷினில் பணம் செலுத்திருக்கிறேன்.
எந்த ஒரு மெஷினும் என்னோடு இப்படி கண்ணாமூச்சி ஆடியதில்லை.
அந்த நேரத்திலும் இருந்த சூட்டில் வியர்த்தது, கர்சீப்பால் துடைத்தபடி, பக்கத்துக் காரை எடுக்கப் போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மெஷின் குறித்து விசாரித்தேன்.
அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் யூகமாக அவர் சுட்டிக் காட்டிய ஒரு கார்னரை நோக்கி நடந்தேன்.
இருந்தது. இருண்டிருந்த திரையைத் தட்டி உயிர்ப்பித்தேன். வண்டி எண், எவ்வளவு மணி நேரம் என்று கேட்ட விவரங்களை சரியாக உள்செலுத்தினேன்.
“க்ரெடிட் கார்டா? காசுகளா?” என்றது. கார்டைத் தட்டினேன்.
“கார்டை நுழை” என்றது. நுழைத்தேன்.
சற்றும் யோசிக்காமல் "எடு வெளியே" என்றது. வெளியே எடுத்தேன். பேச்சேதும் இல்லாமல் அமைதியாய் இருந்தது.
“முதலில் இருந்து ஆரம்பி” என்று ஒளிர்ந்தது.
மறுபடி விவரங்களை தட்டினேன். இம்முறை புத்திசாலித்தனமாக “காசு” என்று தேர்ந்தேடுத்தேன்.
நாணயங்களை ஒவ்வொன்றாக உள்ளிட, “ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து” என்று மாறி வந்த திரை, ஆறாவது நாணயத்தை மட்டும் இரண்டு மூன்று முறை வெளியே தள்ளியது. அதற்கு பதிலாக இரண்டு ஐம்பது பில் (fil) நாணயங்களை நுழைத்தேன், பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டது.
“அலைபேசிக்கு தகவல் அனுப்பவா? அல்லது பேப்பர் பிரிண்ட் செய்யவா?” என்றது. பேப்பர் என்றேன்.
"பேப்பர் இல்லை...மன்னிக்கவும்" என்றே சொல்லும் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன்.
ஆனால், அன்றைக்கு இதுவரை போதும், இன்னொரு நாள் இவனைப் பாத்துக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டது போல.
பேப்பர் பிரிண்ட் வந்தது. கார் டாஸ்போர்டில் வைத்துவிட்டு ஒரு ஐந்து நிமிட நடையில், வீட்டுக்குள் நுழைந்தேன்.
"அப்பவே சொன்னனே கேட்டியா?" என்ற அன்பு மனைவியின் பார்வையைத் தவிர்த்தபடி, பாத்ரூமில் முகம் கழுவி வெளியே வந்தேன்.
"நாளைக்கு சாயந்திரம் ஹாஸ்பிடல் அப்பாயின்மென்ட் இருக்கே? எதுல போறதா உத்தேசம்?" என்றவளிடம், "நாளை மற்றுமொரு நாள்...யோசிப்போம்?" என்றபடி அசதியில் அப்படியே படுக்கையில் விழுந்தேன்.
காலை ஒன்பது மணிக்குள் போய் காரை அங்கிருந்து எடுக்கவேண்டும் என்பதே அப்போதிருந்த கவலை.