பயணம்
ஓவியம்: ஜீவா

பயணம்

ஒரு வாரமாக வீட்டில் ஒரே ஆரவாரம். இன்று அதன் உச்சகட்டம். இந்த ஆரவாரத்துக்கான நாயகி எனது மூத்த மகள் மோகனா. ஆனால் அவள் அமைதியாகத்தான் இருக்கிறாள். உண்மையில் “அதை எடுத்து வச்சியா?”, “இதை எடுத்து வச்சியா?” என்று கேட்டபடி வீட்டிலுள்ள அனைவருக்கும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது எனது மனைவி.

அவ்வப்போது அம்மாவுக்கும் மகள்களுக்குமிடையில் வாக்குவாதமும் நடந்தது. முக்கியமாக இரண்டாவது மகள் அர்ச்சனாவுடன். மோகனா கொஞ்சம் பொறுமைசாலி. கோபத்தை அடக்கத் தெரிந்தவள். அர்ச்சனா அவளுக்கு நேரெதிர் குணம் கொண்டவள். இந்த அம்மா மகள்கள் சச்சரவுகளுக்குள் என் மூக்கை நுழைத்தால் அது எனது மூக்குக்கு பரந்த பாதிப்பில் முடியும் என்பதை அனுபவம் மூலம் அறிந்தவன். அதனால் அமைதி காத்தேன். அவர்களில் யாராவது வந்து புகார் கொடுக்கும் வரையில் நடப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே எனக்கு நல்லது.

இந்த ஆரவாரத்துக்குக் காரணம் நாளை மோகனா முதல் தடவையாகப் பல்கலைக்கழகம் போகிறாள். நாளை போய் விடுதியில் சேர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் குடும்பமாக அவளைக் கொண்டு போய் விடுதியில் சேர்த்து விட்டு வருவோம். நாளை மறுநாள் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் ஆரம்பிக்கும். மகள் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அது மட்டுமல்ல. அவள் காலடி எடுத்து வைக்கப் போகும் இடம் சாதாரணமானதல்ல. உலகில் பழம் பெரும் பல்கலைக்கழகமெனப் பேரெடுத்ததும் இன்று வரை உலகளவில் முன்னணியில் நிற்பதுமான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துக்குச் செல்கிறாள். இது எனதும் எனது மனைவிக்குமான ஒரு கனவு. எமது பிள்ளைகள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள். ஆனாலும் அனுமதி உறுதியாகி வரும்வரை எம்மிருவருக்கும் ஒரே டென்ஷன். மோகனாவோ அது பற்றி அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவள் அப்படித்தான். தன்னம்பிக்கை கொண்டவள். எதற்கும் டென்ஷனாக மாட்டாள்.

மோகனாவுக்கு எடின்பரோ பல்கலைக்கழகம் செல்லத்தான் விருப்பம். அதுவும் பழம் பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றுதான். ஆனாலும் ஆக்ஸ்ஃபோர்டிற்குப் போவது எவ்வளவு சிறந்த வாய்ப்புகளை அவளுக்குக் கொடுக்கும் என்று நாம் விளக்கிச் சொன்ன பின் ஏற்றுக் கொண்டாள். அதை விட இன்னமொரு காரணமும் உண்டு. ஆக்ஸ்ஃபோர்ட் எமது வீட்டிலிருந்து முப்பத்தைந்து மைல்கள் தூரத்தில் உள்ளது. முக்கால் மணி நேரத்தில் காரில் போய் விடலாம். எடின்பரோ போவதானால் எட்டு மணி நேரம் கார் ஓட வேண்டும். அதாவது ஒரு நாள் பயணம். இன்று வரை மோகனா தனியாக எங்கும் சென்றதுமில்லை. பாடசாலைச் சுற்றுலாக்கள் தவிர அவள் நாங்களில்லாமல் வெளியிடத்தில் ஒரு நாள் கூடத் தனியாகத் தங்கியதில்லை. பாடசாலைச் சுற்றுலாக்களின் போது ஆசிரியர்களின் பொறுப்பில் நம்பி அனுப்புவோம்.

பாடசாலை விடுமுறை நாள்களில் சில தடவைகள் மோகனா நண்பிகள் வீட்டில் இரவில் போய்த் தங்க அனுமதி கேட்டிருக்கிறாள். எனது மனைவி இல்லை என்று சொல்ல மாட்டாள். மிகவும் சிறப்பாக ஏதாவது கதை சொல்லி அந்த நண்பியை எங்கள் வீட்டுக்கு வந்து தங்கப் பண்ணுவாளே தவிர மோகனாவை அனுப்ப மாட்டாள். மோகனாவைப் பொறுத்தவரை நண்பியோடு பொழுது போக்க வேண்டும். அதை நிறைவேற்றினால் சரி என்பதே என் மனையாளின் கருத்து.

அர்ச்சனா கொஞ்சம் முரண்டு பிடிப்பாள். ஆனால் இது வரையில் மோகனாவைக் கையாண்டது போலவே அர்ச்சனாவையும் சமாளிக்கிறாள் என் மனைவி. அர்ச்சனாவுக்கு இப்போது பதின்மூன்று வயது. அவள் தொடர்ந்தும் மோகனாவைப் போல அம்மாவின் சாமர்த்தியமான பேச்சுகளுக்கு இடம் கொடுப்பாளோ என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை. என் மனைவியின் சாமர்த்தியத்தை மெச்சும் நான் என்னிடம் பிள்ளைகள் இப்படியான கேள்விகள் கேட்கும் போது மெதுவாக அம்மாவிடம் கேளுங்கள் என்று அங்கே அனுப்பி விடுவேன். பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டல்லவா. அதனால் நானும் என் மனைவியும் ஒற்றுமையாக அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தி வருகிறோம்.

இப்படியாக வளர்க்கப் பட்ட மோகனா பதினெட்டு வயதில் முதல் முதலாகத் தனியாக விடுதியில் தங்கிப் படிப்பதென்பது ஒரு பாரிய மாற்றம். அதனால் எங்களால் உடனே போகக் கூடிய தூரத்தில் இருக்கும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமே அவளது வாழ்க்கைக்குச் சிறந்ததென்பது எமது முடிவு. ஆனால் நாங்கள் இக்காரணத்தை அவளிடம் சொல்லவில்லை. கேள்விகள் கேட்டாலும் எங்கள் நியாயத்தை ஏற்றுக் கொள்ளும் பண்புள்ளவள் மோகனா. அதனால் நாங்கள் இக்காரணத்தைச் சொல்ல வேண்டிய தேவையும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கனவு நனவாகும் போது மகிழ்வின் உச்சிக்கே போவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எனது மனைவியின் நிலைமையும் அதுதான். மோகனா தேவையான பொருட்கள் எல்லாம் பெட்டியில் வைத்திருக்கிறாளா என்று எனது மனைவி இது வரை மூன்று தடவை ஆடிட்டிங் செய்து விட்டாள். ஒவ்வொரு முறை செய்யும் போதும் ஏதோ ஒன்று இல்லை என்று கண்டு பிடிக்கிறாள். ஏதோ இதுவரை அவள் கண்டுபிடிக்கும் தவறுகள் ஒன்றுக்கும் காரணகர்த்தாவாக என்னை அவள் அடையாளம் காணாததால் நிம்மதியாக இருக்கிறேன். வெளியே அதிகம் காட்டாமல் இருந்தாலும் எனக்கும் உள்ளுக்குள் அளவுக்கு மீறிய மகிழ்ச்சிதான்.

நான் பல்கலைக்கழகம் சென்ற நாளை நினைத்துப் பார்த்தேன். இன்று எனது மனைவி போல் அன்று என் அம்மா மிகவும் ஆரவாரமாக இருந்தார். எனது பெட்டியில் எல்லாம் இருக்கிறதா எனப் பலதடவைகள் உறுதிப் படுத்தினார். அப்பப்போ எனக்கு ஒரு சில சிங்களச் சொற்களைச் சொல்லித் தந்தார். அது எதுவும் என் மூளைக்குள் ஏறவில்லை என்பது வேறு விஷயம். யாழ்ப்பாணத்திலிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குப் பொறியியல் படிக்கப் போன எனக்கு அப்போ சிங்களத்தில் ஒரு சொல் கூடத் தெரியாது. ஆங்கிலமும் எழுத வாசிக்கத் தேவையானளவு திறமையிருந்தாலும் வாய் திறந்து பேசுவதில் அதிகம் புலமை இருக்கவில்லை.

தனியாக இரவு மெயில் ரயில் ஏறிப் போக வேண்டும். தனியாக என்று சொல்லக் கூடாது. என்னுடன் ஒரு நண்பனும் வந்தான். விடுதியில் ரூம் மேட்ஸாக இருப்பதாக ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம். ஆனாலும் அதுவே நான் முதல் தடவையாக குடும்பத்தினர் யாருமில்லாது மேற்கொண்ட பயணம். வீட்டிலிருந்து இருநூறு மைல்கள் தூரம். மலைப் பிரதேசம். காலநிலையும் வித்தியாசமாக இருக்குமிடம். அது போதாதென்று பேராதனைப் பல்கலைக்கழகம் இருக்குமிடமோ சிங்கள மொழி பேசப்படும் பிரதேசம். பல்கலைக்கழகத்திற்குள் ஆங்கிலத்தில் தடக்கித் தடக்கிப் பேசிச் சமாளிக்கலாம். ஆனால் போகும் வழியிலோ அல்லது பல்கலைக் கழகத்திற்கு வெளியிலோ யாரிடமாவது ஏதாவது பேச வேண்டி வந்தால் பிரச்சினை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்படி ஒரு நிலைமை வரும்போது ஏதோ ஒரு வகையில் சமாளிப்பேன் என்று ஒரு நம்பிக்கை.

என்னைப் பல்கலைக்கழகத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதற்கு வீட்டில் யாருமில்லை. அப்பாவுக்குப் பாரிசவாதம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரால் பேசக் கூட முடியாது. அவரைப் பராமரிக்கும் பொறுப்பு அம்மாவிடம் மட்டுமே உள்ளது. ஆகவே அவரை விட்டு விட்டு வர முடியாது. இப்பொறுப்பு இல்லாவிட்டாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. நானறிந்தவரை அம்மாவும் என்னைப் போல அதுவரை தனிப்பயணம் மேற்கொண்டதில்லை. அண்ணன் வெளி நாட்டில். உள்ளூரில் அக்கா இருந்தாலும் அவளுக்கும் என்னைக் கொண்டு போய் விட வேண்டும் எனும் எண்ணம் தோன்றியதாகத் தெரியவில்லை.

அம்மாவுக்கு என்னைத் தனியாக அனுப்ப விருப்பமில்லை. ஆனாலும் காலத்தின் கட்டாயம். போனவுடனே ஒரு கடிதம் போடும்படி பல தடவை என்னிடம் சொல்லியிருந்தார். அக்காலத்தில் நம் வீட்டில் தொலைபேசி வைத்திருக்குமளவு வசதியிருக்கவில்லை. அப்பாவின் பென்ஷன் வருமானத்தில் அவரது மருந்துச் செலவு வீட்டுச் செலவு போக எதுவும் மிஞ்சுவதில்லை. பட்டினி கிடக்கும் நிலைமையில் இருக்கவில்லை. ஆனாலும் அடிப்படைத் தேவைக்கதிகமான சொகுசு உபரணங்கள் ஏதும் என் இளமைப்பருவத்தில் நம் வீட்டில் இருந்ததில்லை. அவ்ற்றுக்கு வசதியில்லத கீழ் நடுத்தரக் குடும்ப வாழ்க்கை.

இரவு மெயில் ரயில் ஏறிப் பொல்காவல ஸ்டேஷனில் இறங்கிப் பின்னர் கண்டி நோக்கிப் போகும் ரயில் பிடித்துப் பெனிதெனிய ஸ்டேஷனில் இறங்கக் காலை எட்டு மணியாகி விட்டது. என்னுடன் வந்த நண்பனின் அண்ணனும் பேராதனையில் படிப்பதால் அவன் இதற்கு முதல் ஒரு தடவை வந்திருக்கிறான். அதனால் அவனுக்கு வழியெல்லாம் தெரியும். அவனை நம்பி அவன் பின்னால் நான் சென்றேன். நித்திரை கொண்டால் பொல்காவல ஸ்டேஷனை விட்டு விடுவேனோ எனும் பயத்தில் மெயில் ட்ரெயினில் இடைக்கிடை அசதியில் கண்ணை மூடினாலும் சரியாகத் தூங்கவில்லை. அடுத்த கண்டி நோக்கிய ட்ரெயினிலும் ஏனோ தூக்கம் வரவில்லை. மிகவும் அழகான மலைப் பிரதேசப் பயணம். ஆனாலும் இரவு நேரமென்பதால் அப்போது என்னால் இயற்கையின் அழகைக் கூடக் காண முடியவில்லை.

விடுதியில் சேர வரிசையில் நிற்கும்போது ஒரு சில மாணவர்களைப் பெற்றோர்கள் காரில் கொண்டு வந்து இறக்கினார்கள். எனக்கு அவர்களைப் பார்க்கும் போது சற்றுக் கவலையாக இருந்தது, நம்மைக் காரில் கொண்டு வந்து விடுவதற்கு நம் பெற்றோரிடம் கார் ஒரு போதும் இருந்ததில்லை. அக்காலத்தில் கார் என்பது மிகவும் வசதியுள்ளவர்களிடம் மட்டுமே இருக்கும். ஆனாலும் அப்பாவிற்குப் பாரிச வாதம் வந்திருக்காவிட்டால் நிச்சயமாக என்னுடன் ரயில் ஏறி வந்திருப்பார். நானும் துணிவுடன் எந்த விதப் பயமுமில்லாமல் வந்திருப்பேன். நன்றாகத் தூங்கியிருப்பேன். இப்படியான சிந்தனைகளோடு வரிசையில் நின்று எமது பதிவுகளையெல்லாம் வெற்றிகரமாக முடித்தேன். அக்பர் ஹாலில் எனக்கும் என் நண்பனுக்கும் அறை கிடைத்தது.

ஹாலில் உள்ள அறைகள் அனைத்தும் இருவர் பகிர்ந்து கொள்ளும் அறைகளே. தெரிந்த ஒருவனுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு நிம்மதி. அப்படி ஏற்கனவே திட்டமிடாமல் வருவோருக்கு முன்பின் தெரியாத ஒருவருடன் பகிர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவும் ஒரு விதத்தில் புதுமையான அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் அந்தளவு ரிஸ்க் எடுக்க நான் அப்போது தயாராக இருக்கவில்லை.

விடுதியில் ஒவ்வொரு ஃப்ளோரிலும் இருபக்கமும் அறைகள் இருக்கும். முடிவில் அனைவருக்கும் பொதுவாகச் சில கழிவறைகளும் குளியலறைகளும் இருக்கும். இதுதான் நான் பல்கலைக்கழகத்தில் எனக்குக் கிடைத்த விடுதி வாழ்க்கை. அப்படி ஆரம்பித்த கல்லூரி வாழ்க்கை மேற்படிப்புக்கு லண்டனில் கொண்டுவந்து விட்டது. அப்படியே இங்கிலாந்து எனது நிரந்தர வதிவிடமாகி விட்டது.

எனது இளமைப்பருவத்தில் எதையெல்லாம் பார்த்து ஆசைப்பட்டேனோ அவையெல்லாம் என் மகள்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டேன். இங்கிலாந்தில் சிறப்பான அரசுப் பள்ளிகள் இருந்த போதும் எனது பிள்ளைகளை அதை விடச் சிறப்பான தனியார் பள்ளிக்கு அனுப்பினேன். எனது இளமைப் பருவம் போலல்லாது எங்கள் பிள்ளைகளின் இளமைப் பருவம் சொகுசான வாழ்க்கையாகவே இருந்தது. அவர்கள் மற்றவர்களைப் பார்த்து ஏங்குமளவு இடம் வைக்கவில்லை. பிள்ளைகள் எங்கு போவதானாலும் காரில் கொண்டு போய் விடுவோம். அவர்கள் பஸ் ஏறிப் போக வேண்டிய தேவை இதுவரை வந்ததில்லை.

இரவு உணவு சாப்பிட நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்தோம். சாப்பிடத் தொடங்கியதும். “அப்பா….” என்று செல்லமான குரலில் இழுத்தாள் மோகனா. இப்படியான செல்ல அழைப்புகள் என் புத்திரிகளிடமிருந்து வரும்போது, 99.99 சதவீதம் எனக்குக் கணிசமான பொருளாதாரச் செலவு இருக்கும் என்பது அனுபவ ரீதியான புள்ளிவிபரம். நாளைக்குப் போறவளுக்குத் தேவையானளவு எல்லாம் கொடுத்தாச்சு. அதற்கு மேல் என்ன கேட்கப் போகிறாள்?

சற்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தேன்.

“உங்கள் இரண்டு பேரோடும் ஒரு விஷயம் கதைக்கணும்.”

அப்பா மட்டுமல்ல அம்மாவையும் சேர்த்து என அறிந்ததும் என் மனைவியும் ஆச்சரியத்துடன் அவள் மீது கவனத்தைச் செலுத்தினாள். அர்ச்சனாவும் கூட அவளை ஆவலுடன் பார்த்தாள்.

“நாளைக்கு நீங்கள் ஒருத்தரும் என்னுடன் வர வேண்டாம். பஸ் ஸ்டேஷனில் இறக்கி விடுங்க. நான் ஆக்ஸ்ஃபோர்டுக்குப் பஸ்ஸில தனியாகப் போகிறேன். ஒரு மணி நேரப் பயணம்தான். எல்லாம் கூகுளில் தேடிப் பார்த்து விட்டேன். முதுகுப் பையும் ஒரு பெட்டியும் கொண்டு போகிறேன். மற்றதை நீங்கள் இரண்டு வாரம் கழித்து என்னைப் பார்க்க வரும்போது கொண்டு வாங்க. ஓகேவா?” வழக்கம் போலப் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்து சொன்னாள்.

அர்ச்சனா முள்ளுக் கரண்டியால் சிக்கன் துண்டு ஒன்றை எடுத்து வாயில் வைத்தாள். அது அவளது இதழ்களில் தோன்றிய நமட்டுச் சிரிப்பினை அடக்க உதவி செய்தது.

ந. ஜெயரூபலிங்கம்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு இங்கிலாந்தில் வாழும் முனைவர் ந. ஜெயரூபலிங்கம், தொழில்முறையில் ஒரு தகவல் தொழில்நுட்ப ஆலோசகர். இதுவரை இவர் ஐயம் துற என ஒரு நாவலும், ‘தல’ புராணம் எனும் ஒரு அபுனைவு நூலும், சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியாகும் இதழ்களில் வெளிவந்துள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com