சனியன்
ஓவியம்: ரவி பேலட்

சனியன்

சந்திரனுக்கு ஒரு நடை வண்டியை அனுப்பி இருக்கிறீர்கள். அதையா இவ்வளவு பெரிதாக கொண்டாடுகிறீர்கள்’ என்கிறார் அவர். எங்களது அணியில் ஆறு நாள்களுக்கு முன் கடைசியாக இணைந்தவர். அவரது பெயரே எனக்கு வாயில் நுழையவில்லை. பாகினியோ... பகீனியா... கூடவே ஏதோ செப்லோ பாத் அப்புறம் ஒரு யங் (அது ஜூங் ஆகவும் இருக்கலாம்) பி.எஸ் என்று அவருக்கு ஜூலியானா சுருக்கப் பெயரை இட்டார். நான் புரோபசர் சேர்த்து கொண்டேன். அடுத்த சிக்கல் அந்த ஆள் எந்த ஊர் என்பது.

நாங்கள் இப்போது பதினோறு பேர் இருந்தோம். என் வாழ்நாள் சாதனை இந்த அண்டார்ட்டிகா பயணம். இருமுறை நிராகரிக்கப்பட்டேன் என் படிப்பு அப்படி. புரோகாரியோடிக்ஸ் படித்திருக்கிறேன். பார்த்தீர்களா நீங்களே முகம் சுழிக்கிறீர்கள். சாதாரண ஐ.டி, பொறியியல் படிப்பு, நர்சிங், மருத்துவம், இலக்கியம், பொருளியல் வரலாறு தாண்டி நாம் யோசிப்பதே அபூர்வமாகிவிட்ட காலத்தில் நான் ஒரு புரோகாரியோடிக்ஸ் என்றால் கம்யூனிஸ்ட் என்பதுபோல அதுவும் ஒரு கட்சி என்று கூட சிலர் நினைக்கிறார்கள். கூகுளில் போட்டால்கூட ஏழெட்டு படிக்கு கீழேதான் வரும். ஏனெனில் கணினி புரோகிராமர் என்பது முந்திக்கொள்கிறது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அதை புரிந்து ‘வாவ்’ என்றவர் புரொபசர் பி.எஸ் தான். அதனாலேயே எனக்கு அவரைப் பிடித்து போனது.

‘புவியில் முதலில் தோன்றிய உயிரி பாக்டீரியாதான்... அதிலும் கடலில் ஐஸ்கட்டியில் வாழும் பாக்டீரியா பற்றிய படிப்பு...’ என்றார். ‘அபூர்வமான ஆள் நீங்கள்... புரோகாரியோடிஸ்ட்’ கைகுலுக்கினார். ‘இந்த துறை வல்லுனர்.. நான் சந்திப்பது இதுதான் முதல்முறை’ எனக்கு உலகமே எழுந்து நின்று கரவொலி எழுப்பிய ஜில் தட்டியது. அவர் ஒரு ஏலியனிஸ்ட். அதாவது அயல்கிரஹ உயிரியியலாளர் அண்டார்டிகாவில் அப்படி ஏதாவது இருக்கிறதா என்று ஆராய எங்கள் குழுவில் இணைக்கப்பட்டவர். கொரியாகாரர் என்று தற்காலிகமாக நாங்கள் ஜூலியானா உட்பட முடிவு செய்தோம்.

எங்கள் அண்டார்டிகா சர்வதேச ஆய்வுக் குழுவின் தலைமையகம் யுனெஸ்கோவோ, யுனிசெஃப்போ அல்ல. கடல் பிராந்திய கணக்கெடுப்பு ஐ.நா மன்றம். அது சுவிட்சர்லாந்தில் இருந்தது பிறகு ஐரோப்பிய யூனியனின் முதலீடு குறைந்துபோனதால் ரஷ்யா ஏற்றது.. உக்ரேன் யுத்தம் எங்கள் தலைமையகத்தை ஜப்பானுக்கு மாற்றிவிட்டது. இது அண்டார்டிகாவை ஆய்வு செய்யும் 47வது பயணம். ஒரு புரோகாரியோடிஸ்ட் என் பயணமே என் துறையின் முதல் ஆய்வு என்பதை நான் சார்ந்திருந்த தமிழகத்தின் பரங்கிப்பேட்டை கடல் உயிரி ஆய்வகம் வழங்கியிருந்த எனது சிபாரிசு கடிதத்தில் கொட்டை எழுத்துகளில் குறிப்பிட்டது.

‘ஆனாலும் நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன் இருக்கிறது என்பது முதன்முறையாக இப்போதுதானே ஊர்ஜிதமாகி உள்ளது’ என்றேன் நான். நாங்கள் எங்களது ஆய்வுக்கப்பல் டார்வினின் ஹெலிகாப்டர் தளத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ‘எல்லா சந்திரன்களிலும் ஆறு சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கும்...’ என்றார் பேரா பி. எஸ்.

‘சந்திரன்களா.. ஒன்றுதானே இருக்கிறது?’ என்றார் சிவப்புத் தொப்பி அணிந்தவர். அவர் ஒரு பைட்டோ பிளாங்க்டிஸ்ட் அதாவது பைட்டோ பாசிகள் பற்றிய துறை வல்லுனர்.

‘நான் புவியின் நிலாவை சொல்லவில்லை. சனி கிரகத்திற்கு அறுபத்திஒன்று. ஆமாம்.. அறுபத்தோறு நிலவுகள் உள்ளன...’ என்றார் பேரா. பி.எஸ்.

‘ஓ... டைட்டானிக்… ஓகே ஓகே’ என்றார் ஜூலியானா, ‘வாவ் இரவில் இத்தனையும் ஒளி வீசினால் எவ்வளவு அழகாக இருக்கும்.’!

பேரா.பி.எஸ் சிரிக்கிறார். ஏதோ ஒரு விலங்கு கனைப்பதுபோல உள்ளது அதில் சப்தம் இருந்ததே ஒழிய உணர்ச்சியே இல்லை. அது அப்போது எனக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.

‘ஆனால்...ஜே... இரவில் இரண்டு மட்டும்தான் தெரியும்... டைட்டான் என்று புவியில் அழைக்கப்படும் பெருநிலவு மற்றும் லாப்பிடஸ் என்று அழைக்கப்படும் மலை நிலவு.. இவை மட்டும்தான் இரவில் ஒளிரும்... லாப்பிடஸ்தான் பிரபஞ்சத்திலேயே மிக உயரமான மலைகளைக் கொண்டது.’ என்றார். ஜூலியானவை அவர் ஜே என்று அழைத்தார். சனி கிரஹத்தில் 10 மணி நேரம் 33 நிமிடம் என்பதே ஒரு நாள்.. அதில் நான்கு மணி நேரம் இருள்...’ என்றவர் தனது கைகடிகாரத்தை பார்த்தார்... ‘இப்போது இரவு…’

‘அப்படியானால் சனி கிரஹம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள பத்தரை மணிநேரம்தான் ஆகிறதா’ என்றார் சிவப்புத் தொப்பி பொதுவாக 16 பேருமே ஒன்றாக இருந்தாலும் பேசுவது என்றால் நாங்கள் மூன்றுபேர்தான். அதிலும் பேரா.பி.எஸ் வாய்மூடா ஆய்வாளர்.

‘ஆனால் சனியின் ஒரு வருடம் ஆகவேண்டுமானால் புவியில் 29 வருடம் ஆகவேண்டும்... சனிக்கிர‘ஹத்தில் எனக்கு இப்போதுதான் ஒன்றரைவயது ஆகிறது’ என்று சொல்லி மறுபடியும் கனைத்தார் அதாவது சிரித்தார் அவர். ‘புவியின் கணக்கீட்டின்படி... அதைவிடுங்கள்... அந்த 64 நிலவுகளில் பலவும் இரண்டு மூன்று மீட்டர் விட்டம் கொண்டவை... ஆனால் அவற்றிலும் ஏறக்குறைய ஆறு சதவீதம் ஆக்ஸிஜன்... உண்டு... சோ.. மிஸ்டர் ராசன் ஏதாவது புதிதாக இருந்தால் சொல்லுங்கள்...’ (ஓ.கே. ராசன் என்பது தான் என் பெயர்).

‘ஆனால்... டைட்டானின் நிலை வேறு’ நாங்கள் மிகக்குளிர் அறையை அடைந்திருந்தோம்... கப்பல் டார்வினின் கடைசி சோதனை. அதாவது நீங்கள் அண்டார்டிகாவின் மைனஸ் இருபத்திநான்கு டிகிரி செல்ஷியஸ் குறை வெப்பநிலையை தாக்குப்பிடிப்பீர்களா என்பதை சோதிக்கும் ஆய்வறை எனக்கு நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. இத்தனை தூரம் வந்துவிட்டும்... கப்பலிலேயே திரும்பிவிட்டவர்கள் அதிகம். ஆய்வுக்கூடத்தில் எங்கள் பயிற்சியில்கூட ஜீரோ டிகிரிதான். மைனஸை பார்க்க நான் காஷ்மீர் வரை அனுப்பப்பட்டேன்... நான் அங்கே அனுபவித்தது ஒன்றுமே இல்லை என்பது ஜூலியானாவின் வாதம்… பை த பை நான் சொல்லாமல் விட்டுவிட்டேன். ஜூலியானா கிளைமேட்டாலஜிஸ்ட் தட்பவெப்பநிலை நிபுணர்.

‘டைட்டான் ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா’ என்றார் பேரா. பி. எஸ். என் பதட்டம் உணர்ந்து பேச்சை திசை திருப்புகிறார் என்பது புரிந்தது. ‘ஏன் சார்..’ என்றேன் நான். ‘டைட்டான் ஒரு சந்திரன் அல்ல... அது ஏறக்குறைய புவிமாதிரிதான் மிஸ்டர் ராசன்... அதை முதலில் ‘கண்ட’ புவியின் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் அதை இன்னொரு புவி என்றே அழைத்தார். அடுத்து காத்திருந்த ஐஸ்பெட்டி அறை அவருக்கு எந்த பதட்டத்தையுமே ஏற்படுத்தவில்லை. ஒன்று அவருக்கு இது முதல் முறையல்ல.. அல்லது வெளிக்காட்டிக்கொள்ள அவர் தயாராக இல்லை. அந்த அளவு நெஞ்சுரம்.!

‘பூமியைப் போலவே மேல்அடுக்கில் நிலையான நீர்மப்பரப்பும்... அதீத நைட்ரஜன் கொண்ட உயிர்மண்ணும் திரவ ஹைட்ரோ கார்பன் ஏரிகளும் உண்டு... உங்கள் ஊரோடு தொடர்புடைய ஒரு சுவாரஸ்யம் ஆன விஷயம் சொல்லவா? என்றார். ‘டைட்டானின் படம் ஒன்றை அருகில் சென்று எடுத்த அமெரிக்காவின் காசினி விண்கலம் அங்கே வினோதமான ஓர் அமைப்பை வெளியிட்டது.... உங்க ஊரில் ஆறுதலை பத்து பன்னிரண்டு கை உள்ள சாமி உள்ளதால்லவா..’ என்று என்னைப் பார்த்து கண்சிமிட்டினார். ‘யெஸ்... சுப்பிரமணி... முருகன்சாமி சார்’ என்றேன் நான். ‘சேம்... லுக்... இது என் விண் ஏலியன் கோட்பாட்டிற்கு உதவியாக இருக்கும் ஒரு எவிடன்ஸ்... சாட்சியம்’ என்று சற்று உரக்கச் சொன்னார்.

கடுங்குளிர் அறைக்குள் இரண்டிரண்டு பேராக நுழைய வேண்டும். நான் இயல்பாகவே பேரா.பி.எஸ் சாரோடு இணைந்துகொள்கிறேன்... ஜூலியானாவும் சிவப்பு தொப்பியும் இணைகிறார்கள். பத்து நிமிடத்திற்கு ஒரு அணி செல்ல வேண்டும்... உள்ளே நுழையும் முன் உடல் எடை உயரம் என அளப்பார்கள். எங்கள் அழைப்பிற்கு மூன்று பத்து நிமிடம் இருந்தது. இடைக்கால நிம்மதி.

‘அது என்ன சார்.. விண் ஏலியனிஸ்ட் கோட்பாடு’ என்றேன் நான்.

‘அயல் உயிரிகள் தான் புவியில் உயிரிகள் தோன்ற காரணம் மிஸ்டர் ராசன்.. முதல் உயிரி பாக்டீரியா... உங்கள் டார்வினின் பரிணாமவியல் உண்மைதான் ஆனால் ஒன்றை கவனித்தீர்களா... மனிதர்கள் தங்களுக்கு சோதனை வேதனை வரும்போதெல்லாம் வானத்தை அதாவது மேல் நோக்கி பார்த்து கடவுளே என்கிறார்கள்... இது பழகிவிட்டது அல்லவா... மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவான காலகட்டத்தில் ஏதோ நடந்திருக்கிறது... வாய்மொழி பேச்சு.. எழுத்து... இவை..’ அவர் சற்றே நிறுத்துகிறார்.

‘உண்மைதான் சார்... பரிணாமவியல் முடித்து மானுடவியல் தொடங்கும் இடம்... தீர்க்க முடியாத மர்மங்களோடு உள்ளது உண்மைதான்’ என்கிறேன் நான்.

‘கரெக்ட்... நாங்கள் விண் ஏலியனிஸ்ட்கள் அங்குதான் நுழைகிறோம்... இரண்டு மூன்று லட்சம் புவி ஆண்டுகளுக்குமுன் புவிக்கு மீண்டும் அயல் கிரஹ உயிரி இரண்டாவது பரவலாக்க விஜயம் நடந்திருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்... உதாரணமாக கிரேக்கம்.

‘அப்படியா...’ நான் வாய்பிளந்தேன்.

‘அதற்கு ஆதாரம் உள்ளது... பெருதேசத்தின் லிமா என்கிற ஊரில் அகழ்வாராய்ச்சியில் லட்சம் ஆண்டுகளான உடல் புதைப்படிவமாக கிடைத்துள்ளது.... மூக்குவாய் இணைந்த முகம்... மூன்று நீண்ட விரல்கள் கொண்ட கரங்கள். அயல் உயிரிகள் வந்ததற்கான உண்மையான ஆதாரம்’ என்றார்.

எடைமேடை உடலாய்வு அறைக்கு நாங்கள் அடுத்து அழைக்கப்பட இருந்தோம்.

‘சோ... அயல் உயிரிகளின் தலையீடு... அதாவது முதல் தலையீடு பாக்டீரியாவை விதைத்தது... இரண்டாவது தலையீடு மனிதன்.... பேச்சு.. சமூகம்.. இதுதான் எங்களது விண்ஏலியனிஸ்ட் கோட்பாட்டின் எளியவிளக்கம்’ என்றார்.

‘ரொம்ப சுவாரசியமாக உள்ளது சார்’ என்றேன். எச்சிலை இழுத்து விழுங்கினேன்.. ‘அடுத்தது நான்தான் சார்.. ஏன் இப்படி பயமாக இருக்கிறது சனியன்’ என்றேன் பழக்க தோஷத்தில்.

‘என்னது சனியன் என்றா சொன்னீர்கள்?’ மனுஷன் இந்த ரணகளத்திலும் கனைத்தார்.. சாரி... சிரித்தார். ஒருவேளை அவருக்கு புரியவில்லையா?

நமது சுற்றுச்சூழலில் வெப்பநிலை மைனஸ் நோக்கி விரையும்போது உங்கள் உடல் என்ன ஆகும் என்பதைபற்றி எனக்கு பயிற்சி கொடுத்துள்ளார்கள் நீங்கள் உங்களுக்கு ஹைப்பர் தெர்மியா நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண மார்கழி குளிரில் அடிக்கும் பனி... ஊட்டி குளிரில் இயற்கை உபாதை வராது-.. என்பனவற்றை கடந்து ரத்தம் உறைதல் நுரையீரல் விரைப்பு... சிறுநீர்ப்பை ஐஸ் கட்டி ஆகிவிடும் அபாயம் என பல உண்டு... கண்களுக்கு பிரத்தியேக மித வெப்ப கண்ணாடி தேவை. இல்லையெனில் கண் ஐஸ் கட்டியாகி நிரந்தரமாக ‘பூத்து’ போய்விடும்.

அதற்கான பிரத்யேக ஆடைகளுக்கு முன் எடைபோடும் அறை அங்கே தான் பேரா.பி.எஸ் பற்றி என் சந்தேகம் முதலில் ஆரம்பமானது. எடை அறைக்குப் போகும்முன் எனக்கு உதவியாக எனது இரு தோல்பைகளில் ஒன்றை பெற்றுக்கொண்டார்…

இரு வருமாக உள்ளே நுழைந்தோம்.

உடலின் ரத்த ஓட்ட அளவு, இருதயம் அடிக்கும் எண்ணிக்கை அது இது என்று கூடவே எடை... நான் அறுபத்தோறு கிலோ இருந்தேன். நாற்பது கிலோவுக்கு கீழே இருந்தால் அண்டார்டிகாவுக்கு இப்படி ஆய்வு பயணம் முறைப்படி மேற்கொள்ள அனுமதி கிடையாது... அவர் பேரா.பி.எஸ் என்ன எடை என்று அறிய ஆவலுற்றபோதுதான் முதல் அதிர்ச்சி காத்திருந்தது எடை 47 கிலோ.

எனது பாக்டீரியா ஆய்வுகருவி , நுண்ணோக்கி, பிளஸ் லேப்டாப் என்று வைத்திருந்த அந்தப் பையின் எடை என என் மனம் அதிவேகமாக ‘எடை’ போட்டது. அவர் ஏமாற்றி இருக்கிறார்... அவரது எடை ஏறக்குறைய பூஜ்ஜியம்! இது எப்படி சாத்தியம் என்று நான் யோசிப்பதற்குள் நாங்கள் மைனஸ் எட்டு டிகிரியில் இருந்தோம்… மெல்லமெல்ல... வெப்ப நிலை குறைந்து இறுதியாக மைனஸ் 24 அறை வரும் அங்கிருந்து ஹெலிகாப்டர் பயணத்தில் நிஜ அண்டார்டிகா பனிப்பாறைமீது இருப்பீர்கள்.

எனக்கு மைனஸ் பத்து டிகிரி அறை வரும்போது அருகே வந்தார். பயப்படவேண்டாம் மிஸ்டர் ராசன்... என் கையை பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். அவரது கரம் பற்றியபோது ஒருவகை வெதுவெதுப்பை உணர முடிந்த என்னால் மேலும் மேலும் வெப்பநிலை குறைத்துக் கொண்டே போனபோது... மறுத்துப்போன தன்மை காரணமாகவோ என்னவோ அவர் இருப்பதே தெரியவில்லை கைப்பற்றி இருக்கிறேனா இல்லையா என்பது புலப்படவில்லை... உண்மையில் அவர் யாரென்று மனம் அலைந்து தவித்தபோது நான் ஹெலிகாப்டரில் இருந்தேன்.

லார்ஸ்மன் பனிமலை குன்றில் உள்ள இந்தியாவின் பாரதி ஆய்வு நிலையம் அருகே ஹெலிகாப்டர் எங்களை இறக்கிவிட்டபோது 16 பேரில் நாங்கள் ஏழுபேர் மட்டுமே இருந்தோம். ஜூலியானா மற்றும் சிவப்பு தொப்பியாளர் கூட தேர்வாகவில்லை. கண்டிப்பாக நான் தேர்வானது பேரா.பி.எஸ் உதவியோடுதான். பிளஸ் 37 டிகிரி வரை போகும் தமிழக வெப்ப சூழலில் இருந்து மைனஸ் 24 டிகிரிக்கு என் உடல் ஒத்துழைத்தது உலக அதிசயம். ஆனால் ஹெலிகாப்டரில் பேரா.பி.எஸ் இல்லை. எங்கள் ஆய்வு பெட்டிகள் உணவுப் பொருட்களை ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி கொண்டிருந்தபோது அவரைப் பார்க்கிறேன். மீண்டும் சந்தேக மின்னல்கள். இப்போது நாங்கள் எட்டு பேர் இருந்தோம் எப்படி?

காலை எடுத்துவைத்து நடப்பது பெரிய பாரமாக இருந்தது.. நான் அண்டர்டிகா பற்றி கற்பனை செய்த எது மாதிரியும் இது இல்லை. ‘சற்று... தடுமாற்றம் மிஸ்டர் ராசன்’ என்றார் பேரா.பி.எஸ்...

‘பெரிய தண்டனை சார்… சனியன்’ என்று சொல்ல முயன்றேன்... பேச்சே வரவில்லை வாயை திறந்ததில் குடல் நடுங்கியது. எச்சில் துப்பியதும் பனிக்கட்டியானது.

‘சீக்கிரம் சரியாகிவிடும்’ என்றவரை நேரே பார்த்து....

‘எப்படி இங்கே வந்தீர்கள்... ஹெலிகாப்டரில் நீங்கள் இல்லையே’ என்று பலமனத்தையும் திரட்டி கேட்கிறேன்... எங்கள் ஊர் பேய்கதை போல இருந்தது.

‘டெலிட் டிரான்ஸ் போர்ட்டேஷன்... ஒரு இடத்தில் உடலை முற்றிலும் அணுக்களாக்கி தூளாக காற்றில் அலைகளாக மாற்றி தேவைப்படும் இடத்தில், வேறுகிரகத்தில் மறு கட்டுமானம் செய்யும் பயணயுக்தி... ஐ.வில்... டீச் ... உங்களுக்கும் சொல்லித் தருவேன்’ என்றவரை நம்ப முடியாமல் பார்த்தேன்…

அவரவர் வேலையில் அவரவர் பிசி ஆனபோது பனிக்கட்டிகளில் இருந்து பாக்டீரியா மாதிரிகளை சேகரிக்க புறப்பட்ட என்னை அவர் பின் தொடர்கிறார்… ‘எனக்கு தெரிந்து இந்தப் பகுதியில் அவை இல்லை...’ என்றார். ‘நீங்கள் ஒரு புரோகாரியோஸ்டிட்தானே... ஏன் உங்கள் உணர்வுக்கு எட்டவில்லை... நீங்கள் தேடும் வகை பாக்டீரியா ஒன்னறை மைல் தள்ளி போனால்... ஏராளமாக உள்ளது’ என்று அவர் சொல்ல...’ ஒன்னறை மைலா... எப்படி நடப்பது...’ நான் அலறினேன். ‘ அட சனியனே’

‘அதற்குத்தான் டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் கம்’ என்றார் அவரது இடகரத்தில் ஒரு வளையம் இருப்பதை அப்போதுதான் பார்க்கிறேன்.

எல்லாம் ஒரு சில நொடிகள்தான்... நாங்கள் ஒன்னைரை மைல் தள்ளி இருந்தோம்... ‘சார்... உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... சூப்பர்..’ என்றேன். ‘இல்லையேல் இந்த குளிர் சனியன் என்னை கொன்றே போட்டிருக்கும்.’

நான் பாக்டீரியா மாதிரிகளை திரட்டியது என்பது அரை மணி நேரம் நடந்திருக்கும். அண்டார்டிகாவில் ஒன்னரை கிலோ மீட்டர் ஆழம் வரை பனிக்கட்டிதான்... அவர் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஒரு மூவர்ண கொடியை நான் நட்டு வைத்தேன். ஏனெனில் இங்கு வரும் முதல் மனிதன் நான் என்று தோன்றியபோது... அவரிடம் கேட்க மிச்சம் மிகுந்த அந்த கேள்வி தொண்டையில் நின்றது...

‘சார்... ப்ளீஸ் சொல்லுங்கள்... நீங்கள் யார்... எந்த நாடு... ஊர்’ என்றேன்.

அவர் வானத்தைப் பார்த்தார்... ‘சற்று முன் என்ன சொன்னீர்கள்... அந்த சொல்... அடிக்கடி திட்டுவதற்கு சொல்கிறீர்களே..’ என்றார்…

‘அ…ஆமாம்... பழக்க தோஷம் சார்.... சனியன்... சனியன்... என்று எங்க ஊரில் ஒரு வசவு சார்’ என்றேன்.

‘அது நான் தான்... சனியன்’ என்றார்.

‘வாட்.? என்ன சார் சொல்றீங்க’ என்றேன் சிரித்தபடி…

‘இந்தியாவில் இருந்து வந்தால் இந்தியன். அமெரிக்காவில் இருந்து வந்தால் அமெரிக்கன். ரஷ்யாவில் இருந்து வந்தால் ரஷ்யன். சனிகிரகத்தில் வந்தால் சனியன்....’ என்றார். ‘நான் ஒரு சனியன்... டைட்டான் நிலவு என்பது வீடு…’

எனக்கு மூச்சே நின்று போனது. ‘இங்கே அண்டார்டிகாவில் நீங்கள் திரட்டி இருக்கும் இந்த விசேஷ பாக்டீரியா மாதிரிதான் முதலில் புவியில் தோன்றிய உயிரி... இயற்கையை மனிதன் காக்கவில்லை எனில் விரைவில் அழிவு நிச்சயம்... ப்ளீஸ்... உங்கள் உலகிற்கு புரிய வையுங்கள்… லட்சகணக்கான ஆண்டுகளுக்குமுன் விதைக்கப்பட்ட பனிக்கட்டி பாக்டீரியா இன்னும் புவியில் உயிர்ப்புடன் இருக்கிறதா என்று கண்டு வருவதே என் பயணத்தின் நோக்கம்.. உங்கள் மூலம் அது நிறைவேறிவிட்டது.. இது என் மனித உறுவம்.. நாங்கள் கிரஹத்திற்கு ஏற்ப உறுவம் மாறவும் அதே டெலி டிரான்ஸ்போர்ட்டேஷன் உதவுகிறது என்றார்.

‘அப்போது உங்கள் உண்மை உருவம்‘ நான் மெல்ல கேட்டேன்,

‘திரும்ப எங்கள் கிரஹத்திற்கு செல்லும்போது கவலைப்படவேண்டிய விஷயம் அது.. எங்கள் மொழியும் வேறு. டெலி டிரான்ஸ்போர்ட்டேஷன் மூலம் எந்த மொழியும் நாங்கள் புரிந்துகொள்ள முடியும்,’ என்றார் நான் திகைத்து நிற்கிறேன்.

‘வாருங்கள் திரும்ப அங்கேயே விட்டு விடுகிறேன்..’ இப்போது அவர்... அதிக அவசரத்தில் இருந்ததுபோலிருந்தது.

மீண்டும் பாரதி ஆய்வகம் அருகே லார்ஸ்மென் பனிமலை குன்றில் டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் மூலம் நான் இறக்கிவிடப்பட்டபோது என் மனம் உலக அளவில் பத்திரிக்கையாளர் கூட்டம்... ஒரு தரமான அறிவியல் ஆய்வு புத்தகம் அது இது என திட்டமிடத் தொடங்கியது. உலகிற்கு அவரை அறிமுகம் செய்யவேண்டும். ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் முதலில்…

ஆனால் நான் போய் இறங்கி எப்படி தேடியும் பேரா.பி.எஸ் எங்குமே தென்படவில்லை அதைவிட பெரிய அதிர்ச்சி அங்கே எங்களை இறக்கிவிட்ட ஹெலிகாப்டரும் இல்லை... தூரத்தில் கடலில் டார்வின் கப்பலும் இல்லை.. அவர்கள் என்னை தேடி விட்டு கிளம்பி இருக்க வேண்டும்.

ஐயோ இப்போது என்ன செய்வது. உறைந்துபோன கைகளால் அவசரமாக என் கைப்பேசியைத் தேடினேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com