கடைசி தோசை

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப்போட்டி 2026- ஊக்கப்பரிசு
short story
கடைசி தோசைஓவியம்: நரசிம்ம பாலாஜி
Published on

எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் முகவாய்க்கட்டில் இரத்தம் வழிந்தபடியே  சிரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிரிப்பு கள்ளம் கபடம் அற்ற குழந்தையின் சிாிப்பைப் போன்றது.  சிறுவயது குழந்தை அல்ல அவர்.  எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவருடைய உயரம் ஆறடி. எளிதில் அசைக்க முடியாத கணம். குறைந்தது எழுபத்தைந்து கிலோ இருப்பார்.  அவர் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . நகர்தல் என்பது கூட அவருக்கு நத்தையைக் காட்டிலும் சிரமமாக இருந்தது. பத்துக்குப் பத்து அறையில் இருக்கும் அவருக்கு பசி வரும்போது மனைவி நினைவில் வந்துவிடுவாள். தொடும் தூரத்தில் இருந்தால் அசைத்து வயிற்றில் கைவைத்து சைகை மொழியில் சாப்பாடு கேட்பார். அருகில் இல்லாதபோது மெதுவாக நகர்ந்து அறைக்கதவையை ஒட்டி வாசல்படியில் அமர்ந்து மேற்குத் திசை நோக்கி  முகம் வைத்தபடி பார்த்துக்கொண்டிருப்பார். சிலநேரங்களில் ஆடை சரியாக இருக்கும். பலநேரங்களில் அணிவித்திருந்த கைலி அவிழ்ந்திருக்கும்.

அதிகளவில்  ஆள் நடமாட்டம் இல்லாத அந்தத் தெருவில் நினைவு தப்பிய இவரை ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை வந்து பார்க்கின்ற ஒரே மனிதர் ஈஸ்வரி மட்டும் தான். வெளியூரில் இருந்து பக்கத்து வீட்டுக்கு மருமகளாக வந்தவள். இருபது ஆண்டுகள் கடந்தாலும் திருமணமாகி வந்த முதல் நாளில் உள்ளார்ந்த அன்போடு   அவரை நைனா என்று அழைத்ததைப் போன்றே இன்றுவரை  அழைத்துக்கொண்டிருக்கிறாள். தெருவில் உள்ளவர்கள் அவளுடைய சேவையைக் கண்டு கேலி பேசுவார்கள்.

“ஒனக்கு  வந்த தலவிதி இன்னா? அவரு நாலஞ்சி வருசமா நாண்டுக்கினு பேண்டுக்கினு கெடக்குறாரு. பெத்த புள்ளைங்க ஊரோட இருந்தும் இன்னா ஏதுனு கண்டுக்கமாட்டுதுங்க. கட்டிக்கினப் பாவத்துக்கு லச்சுமி வாரிக்கொட்டினு கெடக்குறா. அது அவ தலையெழுத்து. நீ எதுக்கு நடுவால அல்லாடிக்கினு கெடக்குற?” என்று அறிவுறுத்துவார்கள்.

 “எனக்கும் இந்த வயசுல ஒரு அப்பா இருக்குறாரே அவரு இப்படியிருந்தா பாத்துனு சம்மாவாயிருப்பன். பாவம் லச்சுமி தொத்தா.  எதோ அவங்க வூட்ல இல்லாதப்ப செத்தம் எட்டிப்பாருமானு சொல்லிட்டு போறாங்க. வூட்டு உள்ளருந்து வெளிய வந்து பாக்கறதால நான் இன்னா கொறஞ்சிடப் போறனா இல்ல தேஞ்சிடப் போறனா?” பதில் சொல்லிக்கொண்டே அவருடைய ஆடையைச் சரிசெய்து விடுவாள்.

அவருக்கு தன்னுடைய நான்கு பிள்ளைகளின் முகமும் குரலும் நினைவில் இருப்பதைப் போலவே ஈஸ்வரியின் குரலும் முகமும் நினைவில் இருந்தது. அதனால் அவளைப் பார்க்கும் போதெல்லாம் வாஞ்சையோடு சிரிப்பார். இலட்சுமி இல்லாத நேரங்களில் அவளைப் பார்க்கின்ற பார்வை “தொத்தா எங்கே” என்று கேட்பதைப் போலிருக்கும். அவரைப் புரிந்து வைத்திருக்கின்ற அவள் “நீ உள்ளபோய் ஒக்காரு! தொத்தா வந்துடுவாங்க” என்பாள். அவர் புரிந்தும் புரியாத குழந்தையைப் போல் அவளுடைய முகத்தையும் மேற்குத் திசையையும் பார்ப்பார். அவர் அசையாததைக் கண்ட அவள் அருகில் கிடக்கின்ற புடவையை அல்லது போர்வையை எடுத்து போர்த்திவிட்டு  குழந்தையை அசைமடக்குவது போல் கெஞ்சி உள்ளே அனுப்புவாள். இலட்சுமியின் நிலையை நினைத்து பெரிதும் கவலைக்கொள்பவள். பலநேரங்களில் இலட்சுமிக்கு மிகவும் ஒத்தாசையாக இருப்பவள். அவருக்கு இரத்தம் வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் முகத்தில் தடவித் தடவிப் பார்க்கிறாள்.

 “என்னதான் இப்படி ஊத்துதே? ஒரு அளவு இல்லாம!  எங்கருந்துதான் இம்மாம் இரத்தம் வருதுனு தெரியலையே! லச்சுமி போட்ட சோறு இப்படி ரத்த ஆறா ஓடுதே?” வேடிக்கை பார்த்தவர்கள் கூறினார்கள்.

“நீ எங்க போன? எப்பருந்து அவருக்கு இப்பிடி ரத்தம் ஊத்துது?” மூத்த மருமகளின் கேள்வி இலட்சுமியின் அலட்சியத்தை அனைவருக்கும் முன்பு பதிவிடுவதாக அமைந்தது.

“நான் எங்க போனேன்? தோ இப்பதான் செத்தம் முன்னாடி காபி போட்டுக்குடுத்தேன். ரொட்டி தொவட்டி துன்னுகினு  நல்லாத்தான் குந்தியிருந்தாரு! இராபர்ட் வூட்டாண்டப் போய் மாவு வாங்கியாரப்போனேன். கண்ணமூடி கண்ண தொறக்கறதுக்குள்ள போய் வந்து பார்த்தா குந்தியிருந்த எடம், செவரு, போட்டிருந்த சட்டலாம் ஒரே ரத்தம்” இலட்சுமி தன்னுடைய கவனமிகுதியை வெளிப்படுத்தினாள்.

“அவர் படுத்துருந்த எடத்துல பிளேடு எதாச்சும்  இருக்கானு பாரு! அங்கருந்து வந்துட்டு சும்மா அவங்கள கேள்வி மேல கேள்வி கேக்கற” ஈஸ்வரி கூறினாள்.

“ஏன் பிளேடு வச்சிகினு இன்னா பன்னுவாரு?” மூத்த மருமகள் ஏளனமாகக் கேட்டாள்.

“ஏன் வச்சிருக்க மாட்டாரு? தொத்தாவோட பழைய பொடவயத் துண்டுத்துண்டா கிழிச்சி கால் கட்ட வெரல்ல மாட்டிகினு பழைய நெனப்புல பத்து அறுப்பாரு. அப்பறம் கண்ணாடி பாத்து சேவிங் பன்னுவாரு. அந்த மாரி பன்றப்ப  எத்தினியோ வாட்டி இப்பிடி ரத்தம் வந்துக்குது”என்றாள் ஈஸ்வரி.

“ம்ம்ம் இதெல்லாம் வேற செய்வாரா? ஏன் சேவிங் பன்னிகினு பொண்ணு பாக்கவாப் போறாராம்? பத்தா அறுக்குறாரு இதலாம் முன்னடியே சொல்லக்கூடாதா எங்கவூட்டுக்காரு பத்தறுக்க ஆள் கெடைக்காம அவன் அவங்கிட்ட அம்பது நூறுனு குடுத்து கெஞ்சனாலும் வரமாட்ரானுங்கனு வருத்தப்பட்டுனு கெடக்குறாரே” மூத்த மருமகள் மீண்டும் கிண்டலாகக் கேட்டாள்.

“நவுருங்க இப்படி! இங்க இன்னா வித்தையா காட்றாங்க எல்லாரும் வேடிக்க பாக்கறிங்க?” வேடிக்கை பார்த்தவர்களை விலக்கிக்கொண்டு அருகில் சென்றாள் மூத்த மகள்.

“அவருக்கு இன்னா வாயில ஜொல்லா வூத்துது? இத்துனொண்டு துணிய வச்சி இஸ்திரி போட்டுகிட்டு இருக்க? போய் பெரிய துணியா கிழச்சி எடுத்துகினு ஒரு ஏனத்துல தண்ணி எடுத்தா” மகள் சொன்னபடியே இலட்சுமி அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தாள். துடைத்துக்கொண்டிருந்த மகளின் முகத்தைப் பார்த்து சிரித்தார்.

“எப்பா! எப்பா! இன்னாச்சி? ஏன் ரத்தம் வருது? இன்னா பன்ன?” மூத்த மகன் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான். அவர் வழக்கம் போல் மகனைப் பார்த்து சிரித்தார்.

“ஆய் உங்கப்பா பத்தறுக்க ஆசப்பட்டு அப்பப்ப உங்கம்மா பொடவயக் கிலிக்கிறாராம் இதுக்கப்பறம் பூர பட்ட வலயிருந்தா எடுத்தாந்து உங்கப்பாகிட்ட குடு. பத்தறுத்து வலப்பொத்தித் தருவாரு” என்றாள்.

“அடிங்க ஒனக்கு இன்னா தெரியும் எங்கப்பாவப் பத்தி? அவரு அவ்ளோ அரிமா பத்துக்கட்டுவாரு. சும்மா கட்டவெரல்ல வலய மாட்னார்னா சரக் சரக்னு பூரயெல்லாம் அறுத்துபோட்டு ஊசியும் நூலும் போய்வர்ர வழி தெரியாது. செத்த நேரத்துல ஒரு மடி வலயாருந்தாலும் பத்தறுத்து கட்டிமுடிச்சிடுவாரு” என்றான்.

“ஆமா அவரு போவாத கட்டுவலயா இலுக்காத பெருவலயா ஏறாத கோலாவலயா பாய் புடிச்சி ஓட்டாத மேலாவலயா? அவராட்டம் தொலில் செஞ்ச ஆளு அந்த நாள்ள யாரு? என்னமோ அவராட போதாத நேரங்காலம் பிபி, சுகுரு, அட்டாக்கலாம் வந்து கை, காலு வெளங்காமப் போய் கொஞ்சம் கொஞ்சமா நெனவு தப்பிப் போச்சு” என்றாள் இலட்சுமி.

“கோலாவல மேலாவலனு  ஒன்னு வுடமாப் போய் சம்பாரிச்சி பெரிய பில்டிங்கு கட்டிவெச்சி புள்ளைங்களலாம் பணங்கட்டி பெரிய பெரிய படிப்பு படிக்க வச்சிக்கிறாரு பாரு?” இளையமகன் தந்தையைத் தரம் தாழ்த்தினான்.

“இந்த நாள்ள இருக்குற அறுவு அந்த நாள்ள இருந்துருந்தா எப்பிடியோ இருந்துருப்போம். புத்தியில்லாமதான் அண்ணன்புள்ளைவள தம்பிப்புள்ளைவள எல்லாம் தான்புள்ளைவளா நெனச்சி வளத்து ஆளாக்குனாரு. அவனவனுவ முன்னேறன்னதும் தான் குடும்பம் குடிவாக்குனு போயிட்டானுவ. அந்த நாளையில உங்களப் பெத்து வளத்துவுட்டதுக்கே ராக்கண்ணு பகல்கண்ணு முழுச்சிதான் வளத்தாரு” என்றாள் இலட்சுமி.

“ஆமா அப்பிடியே ஒலச்சி வளத்து கிலிச்சாரு! ஒரு நொள்ள மரத்தயும் ரெண்டு இத்துப்போன வலயயும் வச்சிகினு காலந்தள்னாரு. கால்வவுறு அரவவுறு கஞ்சி குடிச்சி மரவள்ளிக்கட்ட மல்லாட்டயத் துன்னு வளந்ததுதான் பெரிய வளப்பு. இதுல வூட்டுக்காருக்கு நீ வக்காளத்து வாங்கற” இளையவன் மிகவும் சலித்துக்கொண்டான்.

“ஏன் எனக்கு தெரிஞ்சே எங்கப்பா வல தட்டவச்சார்னா ஒரு பறி மீன ஒத்த ஆளா ஒரே கையிலத் தூக்கி தோள்மேல வச்சிகினு வருவாரு! எங்கப்பா சம்பாரிச்சிதான் என்னக் கட்டிக்குடுத்தாரு. நீங்களா ஒழச்சி எனக்கு செஞ்சிங்க? வல பொத்தறதுக்கும் வல வலக்கிறதுக்கும் மீன்பேக்கறதுக்கும் எங்கப்பாவ உச்சிவெயல்லயும் பொழுது சாயற வரிக்கும் நிக்கவச்சி நிக்கவச்சி அவரு முள்ள முறிச்சி பொழுதோட படுக்கயிலப் போட்டதே நீங்கதான்” என்றாள் மூத்தமகள்.

“அப்போ உங்கப்பா குடிச்சதுனால சுருட்டு புடிச்சதுனால பிபி சுகர் அட்டாக் வந்ததால இப்படியாவலயா? எங்களுக்கு வலப்பொத்தி வலவலச்சி மீன்பேத்து குடுத்துதான் இப்படியாயிட்டாரா?” என்றான் மூத்தமகன்.

“நீங்க ஒத்துக்கினாலும் ஒத்துக்காட்டாலும் அதான் நெஜம். மானாவரியா வலயத் தள்ளினுபோய்ட்டு காத்தால எட்டுமணியலருந்து பன்னண்டு மணிவரிக்கும் மீன்பேக்கவச்சியனுப்புவ. அவருக்கு பசியிலயே காதடிச்சிபோச்சி. அதோடவுட்டயா? மத்தியானம் மூனு மணியிலருந்து ஆறுமணி வரிக்கும் வல வலைக்க வச்சி அனுப்புவ. இதுக்கலாம் கூலியா சுருட்டுக்கும் சாராயத்துக்கும் சேத்து அறுவதுரூவா குடுப்ப. இப்ப எங்கப்பா நடமாட்டம் இல்லாமப் போனதால நூறுரூவா குடுத்தாலும் ஆள்வரலனு அவனவனக் கெஞ்சினு கெடக்குற. மரங்கெளப்ப மரங்காவனு எங்கப்பாவப் போட்டு சவுரடிச்ச. இப்ப தெனம் மரங்காவ மரங்கெளப்ப கொக்கிவண்டிக்கு ஒருஒரு தாட்டியும் அம்பதுரூவா குடுக்குற. அப்பன் ரத்தத்தயும் வலுவயும் உறிஞ்சமே அப்பனுக்கு அட்டாக் வந்து கை கால் வெளங்காமப் போச்சேனு ஆஸ்பத்திரியில சேத்தப்போ அண்ணந்தம்பி ரெண்டுபேர் இருந்தும்  ஒரு ராத்திரி அவரு கூட இருந்திங்களா? எங்கம்மாதான ஆம்பள வாடுல ராத்திரியும் பகலுமா கெடந்தாங்க. அப்பாவால நடக்கமுடியலயே பிபி சுகர் இருக்குதேனு ரெண்டுபேர்ல யாராச்சும் ஒண்டி ஆஸ்பத்திரிக்கு போய் மருந்து மாத்தர வாங்கியாந்து குடுத்துங்கிளா? எங்கப்பா சாறெல்லாம் புழுஞ்சிகினு சக்கயா தூக்கிபோட்டு என் மயிருக்கின்னானு அவங்கவங்க குடும்பத்த பாக்கிறிங்க. அடுத்த தெருவுல இருந்துகினு சேதி சொன்னாதான் வந்து பாப்பிங்க. இல்லனா வரமாட்டிங்க?” நான்கு ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த கோபதாபங்களையெல்லாம் வெளியே கொட்டினாள் மூத்த மகள்.

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவனாக “இன்னா ஈஸ்வரி உங்க நைனா புட்டுக்குவாரா? அஞ்சு வருசமா ஆக்சன் தான் காட்றாரு ஆனா ஒன்னும் நடக்கமாட்டுதே! ஆளு எமனுக்கே டாட்டா காட்டிட்டு வந்திடறான்னே” இளைய மகன் கேலியும் கிண்டலுமாகக் கேட்டான்.

“ஏன் அவரு இருக்குறதுல உனக்கு இன்னா நஷ்டமாப் போச்சு? எல்லாம் எங்க தொத்தா செய்றாங்க. நீங்க என்னமோ செய்றது போல சலிச்சிக்கிறிங்க?” ஈஸ்வரி கடுப்பாகக் கேட்டாள்.

“சரிமா உங்க சித்தப்பா இந்த வருசம் நடக்கப்போற ஒலிம்பிக் போட்டியில ஓடி இந்தியாவுக்கு மெடல் வாங்கித் தருவாரு. அதனால இன்னும் ஒரு அம்பது வருசம் இப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு இருக்கிற  எடத்தவிட்டு நகராம வேல வெச்சிகிட்டே இருக்கட்டும். உங்க தொத்தா வாரிக்கொட்டி கழுவி குளிப்பாட்டிக்கிட்டே இருக்கட்டும்”என்றான்.

தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதை அறியாமல்  அவர்   எப்போதும் போல் தன் எதிரில் இருப்பவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். இளைய மகளைப் பார்த்ததும் “பசியெடுக்குது. சாப்பாடு வேண்டும்!” என்பதைப் போல் சைகை காண்பித்தார். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

“இன்னாடி இது அநியாயமா இருக்குதே! மூனு மணி நேரமா ஒரு ஆம்பளய எங்கயும் இட்டுனு போவாம வூட்லயே வச்சிகினு வேடிக்க காட்றாங்களே? ஏய் லச்சுமி இவனுங்க என்ன ஒரு தலப்பா? நீ வா! நாமளே ஒரு ஆட்டோ புடிச்சி ஆஸ்பத்திரிக்கு ஏத்திகினு போலாம்” இலட்சுமியின் நடு சின்னம்மாள் கூறினாள்.

“ஏத்தினு போ! ஏத்தினு போனு சொல்றிங்களே அது எங்களுக்குத் தெரியாதா? ஊர் ஒலகம் எல்லாம் கொரனா நோவு வந்து எங்கயும் போக வரமுடியாம கெடக்குது. ஏற்கினவே ஆஸ்பத்திரியில இருக்கறவங்களுக்கே எடம் இல்லாம பள்ளிக்கொடத்துலயும் அங்கயும்  இங்கயும்னு லோல்பட்டு சாவறாங்க. பொணத்த பத்து இருவதுனு மூட்ட மூட்டையா அடுக்கி பொதைக்கிறாங்க!  இந்த நெலமயில எங்கப்பாவ ஆஸ்பத்தரிக்கு இட்டுட்டு போனா கொரனானு ஊசி போட்டு சாவடிச்சிட்டு அங்கயே பொட்டலம் கட்டி பொதச்சிட்டா எங்கப்பாவ கெடத்தி அழுவ முடியுமா? இல்ல நாலு மக்க மனுசாளோட சுடுகாட்டுக்குதான் எடுத்துனுபோய் கொள்ளி  வெக்க முடியுமா?” மூத்த மகன் கோபத்தில் கத்தினான்.

இலட்சுமியின் இரண்டு சித்திகளும் குத்துக்காலிட்டபடி ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள். “இங்க செத்தம் நிமிந்து என்ன பாருங்களாம்! எங்கப்பா இன்னா செத்தா போயிட்டாரு? உயிரோடத்தான இருக்காரு! குத்துக்கல்லு மாதிரி இருக்குற ஆளுக்கு ஏன் இப்பிடி கூப்பாடு போடறிங்க? மொதல்ல எழுந்து அவங்கவங்க வூட்டுக்கு போங்க” என்றான் இளைய மகன்.

“நீ வேற இவளுங்க தம்பித் தம்பினு அழுது அவரப் பாடையிலக் கெடத்தாமப் போவமாட்டாளுங்க” என்றான் மூத்த மகன். அதுவரை பொறுமையாக இருந்த இலட்சுமி அனைவரையும் வீட்டிற்குப் போகுமாறு வேண்டிக் கொண்டாள். கூட்டத்தோடு கூட்டமாக மகன்களையும் மருமகள்களையும் மூத்த மகளையும் மருமகனையும் அனுப்பிவைத்தாள். இலட்சுமியின் அந்த ஒரு வார்த்தைக்காக காத்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். அப்பாவின்மீது கரிசனம் கொண்டு நீட்டி முழங்கிய மூத்த மகளும் சென்றாள். மூவரும் அதிகபட்சமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருந்தார்கள்.

நிதானத்திற்கு வந்த இலட்சுமி “இங்க பாரு! இன்னா பன்னுது உனுக்கு? வாந்தி வருதா? தல நோவுதா? மயக்கம் வருதா?” என்று கேட்டாள். பதிலுக்கு அவர் பொங்கி பூரித்து சிரித்தார்.

“சரி தொத்தா நீ பாரு! நானும் போய் படுக்கறேன். மணி பன்னண்டாவுது. ரத்தம் வடியிறது மின்னாடிக்கு கொஞ்சம் கம்மியான மாரி இருக்குது. நைனாவ படுக்கவச்சிட்டு நீயும் படு. காலயில இன்னா ஏதுனு பாக்கலாம்” ஈஸ்வரி விடைபெற்றாள்.

இலட்சுமி துடைப்பதை நிறுத்திவிட்டு இரத்தவாடை வீசிய வாய்க்காலைத்  தண்ணீர் ஊற்றி கழுவித் தள்ளினாள். அப்பா அம்மா இருவரின் முகத்தையும் பார்த்த இளைய மகளுக்கு மனம் நெருடலாக இருந்தது. இந்நேரத்தில் எப்படி ஒருவருக்கு ஃபோன் பன்னி தொந்தரவு செய்வது என்று யோசித்தாள். வேறு வழி தெரியாமல் அவளுக்குத் தெரிந்த தலைமை செவிலியர் எமிலி சிஸ்டருக்கு கால் செய்தாள். கருணையின் வடிவான அவள் நள்ளிரவிலும் அழைப்பை ஏற்று “சொல்லுமா! எதாவது பிரச்சனையா? இந்நேரத்துல கூப்பிட்டிருக்க?” என்று கேட்டாள்.

“ஆமாம் சிஸ்டர். ரொம்ப நேரமா அப்பாக்கு ரத்தம் வழிஞ்சிட்டே இருக்கு. எதனால ஏன்னு ஒன்னும் புரியல” சொல்லும்போதே குரல் கம்மியது. “அப்பாக்கு பிளட் பிரசர், சுகர் இந்த மாதிரி எதாவது பிரச்சனை இருக்கா? டேப்ளட் எல்லாம் சரியா எடுத்துக்குறாரா?” என்று கேட்டாள்.

“ம் ஆமாம் சிஸ்டர். பதினஞ்சு வருசமா நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் இருக்கு. ரெண்டு தடவ மைல்ட் அட்டாக்கும் வந்திருக்கு”என்றாள்.

“மாத்திரை எல்லாம் ரெகுலரா போடறாரா மா?”

“இல்ல சிஸ்டர். நாலு வருசமா எந்த மாத்திரையும் போடறதில்ல”

“அச்சச்சோ ஏன் இவ்வளவு அஜாக்கிரதையா இருந்திருக்கீங்க? டேப்ளட் போடலனா இப்படித்தான் ரத்தக்குழாய் வெடிச்சி காதுவழியாகவும் மூக்குவழியாகவும் ரத்தம் வெளியேறும்”

“இப்ப என்ன சிஸ்டர் பன்றது? ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாமா?”

“வேண்டாம் இப்ப இருக்குற சூழ்நிலையிலக் கூட்டிட்டு போறது அவ்வளவு நல்லதில்ல. கூட்டிட்டு போனாலும் ஒன்னும் ஆகப்போறது இல்ல. அதிகபட்சமா  ஒருவாரம் தாக்கு பிடிக்கலாம். அதுக்கு மேல கஷ்டம்”.

“சரி… … ங்க சிஸ்டர். நீங்க தூங்குங்க! நான் வேற நேரங்கெட்ட நேரத்துல கூப்பிட்டு தொந்தரவு பன்னிட்டேன்”

“அதெல்லாம் ஒன்னும் இல்லமா! நீ அப்பாவப் பாரு! நான் காலையில் பேசறேன். டேக் கேர்”அழைப்பு நிறுத்தப்பட்டது.

வியர்வையைத் துடைப்பதை போல் இரத்தத்தைத் துடைத்துக்கொண்டிருந்த தந்தையின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். ஆள் அரவமற்ற அடர்ந்த இருட்டில் தென்னங் குருத்தினிடையே அமர்ந்திருந்த ஆந்தையின் ஒலி காற்றின் திசையெங்கும் எதிரொலித்தது. வானில் நிலவு மட்டும் தனியே வலம் வந்து கொண்டிருந்தது. எத்தனையோ உயிரினங்கள் மண்ணில் இருக்க எமன் தன் தந்தையின் உயிரை மட்டும் எடுப்பதற்காகப் பிரயத்தனப்பட்டு தேடியலைவதாகத் தோன்றியது. மரணத்தின் மீது அசாத்திய நம்பிக்கை அவளுக்கு. எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடியது. ஒருநாள் எல்லோருக்கும் நிகழ்ந்தே தீர்வது. மரணம் பற்றிய புதிருக்கு விடை தெரியாத வரை எத்தனை கனவுகள், கற்பனைகள், நிம்மதி? தெரிந்துவிட்டால் அடுத்த நொடியே அத்தனை அவநம்பிக்கை, ஏமாற்றம், வலி. அதனால்தான் பிறப்பின் விடை தெரியாத கேள்விக்கு  இறப்பு பதிலாக இருக்கிறதோ? என்று நினைத்தாள். ஒருவாரம் என்பது எவ்வளவு குறுகிய காலம்? இந்தச் சொற்பமான நாட்களில் இவர் எப்படியிருக்கப் போகிறார்? குழந்தை இராமனாகவா? இளைஞன் இராமனாகவா? நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பன் இராமனாகவா? கேள்விகளும் சிந்தனைகளும் மனதை அழுத்தியது. மகளை உற்றுப் பார்த்தவர் ‘பசிக்குது’ என்பதைப் போல் வயிற்றில் கைவைத்து  ஐந்து விரல்களையும் வாயின் அருகே கொண்டுபோய்க் காண்பித்தார்.

“இந்நேரத்துலயா  சாப்படப்போற? போய் படு! காத்தால சாப்படலாம்” இலட்சுமி கணவனைச்  சமாதானம் செய்தாள்.

“ஏன் மா அவரப் படுக்கச் சொல்ற? ரொட்டி காப்பி சாப்ட்டு எவ்வளோ நேரம் ஆவுது? அப்போ அவருக்கு பசிக்காதா? இரு நான் போய் தோச சுட்டு எடுத்துட்டு வரேன். நீ ஈரத் துணியக் கிழச்சி காதுலயும் மூக்குலயும் வெய்” சொல்லிவிட்டு தோசை சுடச்சென்றாள்.

மகள் கொண்டு வந்து கொடுத்த தோசையைப் பார்த்தவுடன் முதல்முதலில் சாப்பிடப் பழகும் குழந்தை  ஆர்வத்தோடு பிய்த்து விரல்களின் இடுக்கில் இருந்து நழுவி விடாமல் சிரத்தையோடு பத்திரமாகக் கொண்டுபோய் வாயில் வைப்பதை போல் மெதுவாக சாப்பிட்டுக்கொண்டே மகளைப் பார்த்து சிரித்தார்.

மரணத்தை கூட ஒரு மனிதனால் இத்தகைய புன்னகையோடு எதிர்நோக்கி வரவேற்க முடியுமா? என்று தோன்றியது அவளுக்கு. பதிலுக்கு சிரிப்பதா?அழுவதா என்று புரியாமல் கலங்கிய விழிகளில் பரிவு ததும்பப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெறும் தோசையைச் சாப்பிட்டு முடித்தவர் கையைத் தலையில் வைக்கப் போனார். கையை இறக்கி தண்ணீர் ஊற்றி கழுவி விட்டவுடன் மீண்டும் மகளைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்.

எவ்வளவு கம்பீரமான ஆள்? எத்துணைக் கடின உழைப்பாளி? பிள்ளைகளை எப்படியெல்லாம் உருட்டி மிரட்டியவர்? மாத்திரை போடாமல் நடமாட்டம் இல்லாமல் இப்படியாகிவிட்டாரே! அவருக்குப் பிடித்தமான சாராயத்தையும் சருட்டையும் கூட மறந்துவிட்டார். நினைவில் இருப்பது மனைவி இலட்சுமியும் பசி நேரத்துக்கு சாப்பாடு மட்டுமே. பிள்ளைகளோ மருமகள்களோ அக்கம் பக்கத்தினரோ குரல் கொடுத்தால் பதிலுக்கு சிரிப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. யார் அவரிடம் பேசினாலும் எந்தப் பதிலும் சொல்வதும் இல்லை.

“நீ போய் படு! நான் பார்த்துக்குறேன். நாலு புள்ளையில உனுக்கு மட்டும் என்ன தலையெழுத்தா வெடிய வெடிய உக்காந்து தூங்காம முழிச்சினு கெடக்கனும்னு? அவர் தூங்கிட்டாரு பாரு! ரத்தம் வடியறது கூட நின்னுபோச்சி. ஒடம்புலாம் வடிஞ்சிபோச்சி. கணமா இருந்தவரு ராத்திரிக்குள்ள எப்பிடி வத்திட்டாரு பாரு! நெத்தியிலக் குழி வுழுந்துடுச்சி.இனிமே பொழக்கிறது கஷ்டம். அப்பா பக்கப் பக்கையா பணம் சேத்து சொத்து தேடி வச்சிருந்தா பெத்த மக்க அப்பனவுட்டு போயிருக்க மாட்டாங்க. இவுரு இன்னா வச்சிக்கிறாரு? கவர்மண்ட்டா குடுக்குற ரெண்டாயிரத்துல சின்னமவன் வூட்டுதுக்கு மாசம் அயிநூறு குடுக்கறேன். நான் வாங்கற ரெண்டாயிரத்துல செலவுக்கு பாத்துக்குறேன். நான் மட்டும் இன்னா மூட்டையா வச்சிக்கிறேன் அவுத்து குடுக்க. இந்தக் காலத்துல காசு பணம் இருந்தாதான் மதிப்பு. கூடப் பொறந்த பொறப்புங்களோட இலட்சணத்த பாத்துக்க. தாயும் புள்ளையானாலும் வாயும் வவுறும் வேறதான். நீயாச்சும் நாலெழுத்து படிச்சிக்கிற. புரிஞ்சி நடந்துக்குனு பொழச்சிக்க” இலட்சுமி  மகளுக்கு ஏதேதோ அறிவுரை கூறிவிட்டு படுத்தாள்.

அம்மாவின் இறுகி மூடிய கண்களுக்குள்ளும் உதடுகளுக்குள்ளும்  ஆயிரம் ஆயிரம் கலைக்கப்பட்ட கனவுகளும் கலைக்க முடியாத மௌனங்களும் அடர்ந்திருப்பது அவளுக்குப் புரிந்தது. அப்பாவிற்கு இன்னும் எத்தனை இரவுகள் மிச்சமிருக்கும்? ஒருவேளை இப்போது வேண்டி விரும்பி சாப்பிட்டாரே நான் சுட்டுக் கொடுத்த வெறும் தோசை. அதுவே கடைசி தோசையாக இருக்குமோ? யோசித்துக்கொண்டே உறங்க மறுத்த விழிகளை இறுக்கி மூடினாள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com