எண்ணம் இரங்காதோ?

எண்ணம் இரங்காதோ?
பி ஆர் ராஜன்
Published on

சிங்காரம்பிள்ளை மரணப் படுக்கையில் கிடந்தார். வயோதிகத்தின் ரேகைகள் முகத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் கண்கள் சுருங்கிச் சிறுத்திருந்தன. தளர்ந்து தொங்கிய வாய்த் தசைகள் எதையோ சொல்ல அசைந்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. அவரது இறப்பை எதிர்பார்த்து, பிஜி இந்தியர்கள் முற்றத்தில் கூடியிருந்தார்கள். உயிர் இன்னமும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதற்கான காரணம் மிக நெருக்கமான வர்களுக்கு மட்டும் தெரியும். எத்தனை ஆண்டுகால ஏக்கம் அது!

வீட்டுக் கோடியில் கிளைபரப்பி நின்ற மா மரத்தின் கீழே, ஆண்கள் காவா அருந்திக் கொண்டிருந்தார்கள். பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் காவாச் செடி, வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரைக் காயவைத்து இடித்த மாவை, தண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டினால் வரும் பானம் காவா. இது மிதமான போதை தருவது. மூளைக்கும் உடலுக்குமான தகவல் பரிமாற்றத்தை மந்தமாக்கி, உடம்பைச் சோர்வடையச் செய்வது. பிஜி மக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் தவிர்க்க முடியாதது. கால ஓட்டத்தில் பிஜி இந்தியர்களும் இதைத் தத்தெடுத்து தமதாக்கிக்கொண்டார்கள்.

போதை தலைக்கேறியதால் சிங்காரம்பிள்ளையின் மகன் தென்னை மரத்தின் கீழே சுருண்டிருந்தான். வழமைபோல காவாவுடன் தென்னஞ் சாராயமும் அவன் அருந்தியிருக்கவேண்டும்.

காவா தயாரிக்கும் ஆரவாரம் கேட்டு ஆண்பெண் என்ற பேதமின்றி சுதேசிகளும் அங்கு வந்திருந்தார்கள்.

நெட்டையும் குட்டையுமான பல தென்னை இனங்கள் நிறைந்த அந்த வளவும் வீடும் சிங்காரம்பிள்ளையின் கடும் உழைப்பில், சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தில் உருவானவை. இலந்தை, நாவல் முதல் இந்தியாவில் காணப்படும் எல்லா மரங்களும் அங்கு நின்றன. மாவும் பலாவும் முருங்கையும் காய்த்துக் குலைகுலையாகத் தொங்கின. கறிமொந்தன் உட்பட எல்லா வகை வாழை இனங்களும் வஞ்சகமில்லாமல் குலை தள்ளின.

அயல்வீட்டு சுதேசிப் பெண்ணொருவர் முற்றிய மாங்காய்களைப் பிடுங்கி தனக்கும் மற்றவர்களுக்கும் பத்திரப்படுத்திய பின், அணில் குடைந்த மாங்காய்களைத் தோல் சீவி வெட்டி, உப்புத்தூள் கலந்து காவாவுக்கு உவப்பான சைட்டிஸ் தயாரித்தார். சிங்காரம்பிள்ளை வளர்த்த நாய்மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து குலைத்தபடி வளவைச் சுற்றி வந்தது.

கரும்புத் தோட்டத்தில் வெய்யில் குடித்துக் காய்ந்த உடம்பு படுக்கையில் தளர்ந்துகிடக்க, பாதி திறந்திருந்த விழிகள் அருகிலிருந்த றங்குப் பெட்டியில் நிலைகுத்தி நின்றன. சிங்காரம்பிள்ளை பிஜிக்கு வந்தபோது கொண்டுவந்த றங்குப்பெட்டியது. பெயின்ற் கழன்று அடிக்கடி துருப்பிடிக்கும் றங்குப்பெட்டி, தேங்காயெண்ணையும் மண்ணெண்ணையும் சேர்ந்த கலவை எண்ணையால் துடைக்கப்பட்டு, ஆமைப் பூட்டால் பூட்டப்பட்டிருக்கும். றங்குப்பெட்டியைத் திறந்து பார்க்க அவர் எவரையும் அனுமதித்ததில்லை. ஆனாலும் றங்குப்பெட்டி உனக்குத்தான் என அடிக்கடி பேரனுக்குச் சொல்வார்.

சிங்காரம்பிள்ளையின் இறப்பு அங்கு வந்திருந்தவர்களுக்கு கவலைச் சாவல்ல. அதுவொரு கலியாணச் சாவு. தொண்ணூற்று வயதுக்குமேல் வாழ்ந்து சாதித்த கட்டை, நிம்மதியாகப் போய்ச் சேரவேண்டியதுதான் என்ற நினைப்பு. வந்திருந்தவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணைத் தூவியபடி சிங்காரம்பிள்ளை தொடர்ந்தும் சேடமிழுத்துக் கொண்டிருந்தார்.

கரும்புத்தோட்ட வேலைக்கு கூட்டத்துடன் கூட்டமாக சிங்காரம்பிள்ளை அழைத்துவரப்பட்டபோது, குத்துமதிப்பாக அவருக்குப் பதினெட்டு வயது இருக்கும். அடிமைக்குப் பத்திரப் பதிவு எதற்கு? அதனால் உண்மையான வயது இற்றைவரை அவருக்குத் தெரியாது. அடையாளம் இல்லாமலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியை பிஜியிலுள்ள கரும்புத் தோட்டங்களில் கழித்துவிட்டார். இப்பொழுது மூன்றாம் தலைமுறை தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் தாய் மண்ணுக்குச் சென்றுவரத் தேவையான பொருளாதார வசதி கரும்புத்தோட்டக் கூலிகளுக்கோ, அவர்களின் சந்ததியினருக்கோ வாய்த்ததில்லை.

தென் இந்தியாவிலிருந்து, கூலிகளாக வந்த சிங்காரம்பிள்ளைகளைத் தொடர்ந்து வியாபாரம் செய்யவென குஜராத்திலிருந்து வணிகர்கள் புலம்பெயர்ந்தார்கள். அனைவரும் இந்தியர்கள் என்ற கொடியின் கீழே இணைந்ததால் இந்திய மொழிகளின் சங்கமமான பிஜிஹிந்தி பேச்சு மொழியானது. இது இந்திய ஹிந்தியிலும் மாறுபட்டது. எழுத்து வடிவம் கிடையாது. சிங்காரம்பிள்ளைக்கு பிஜிஹிந்தி ஏனோ வாலயப்படவில்லை. இருந்தாலும் கரும்பு வெட்டத் தேவையான அளவுக்கு அதைத் தெரிந்து வைத்திருந்தார். தேவையான தகவல்களையும் காசுக் கணக்குகளையும் முடிந்தவரை தனக்குத் தெரிந்த தமிழில் எழுதினார்.

வேலை வெட்டியில்லாமல் சதா போதையில் திரியும் மகனுக்குத் தமிழ் புரியும், பேச வராது. மது அருந்தப் பணம் தேவைப்படும்போது மட்டும் தந்தையைக் குளிர்விக்க பிஜிஹிந்தியும் தமிழும் கலந்த மொழியில் பேசுவான். பேரன் தமிழ் கற்கவேண்டுமென்பது அவரின் தீராத ஆசை. அதற்கான வசதியும் வாய்ப்பும் நேரமும் அங்கில்லாததால் அவனும் பிஜிஹிந்தி பேசப் பழகிக்கொண்டான்.

மனைவி இருந்தவரை எல்லாமே சிங்காரம்பிள்ளைக்குத் தமிழ்தான். மனைவி இறந்த பின் சகலதும் தலைகீழாக மாறியது. தனிமையில் பதகளித்துப்போனார். மெல்லமெல்ல மரம், செடி, கொடி, நாய், பூனை, பறவைகளுடன் வீதியிலும் வீட்டுவளவிலும் தமிழ் பேசத்துவங்கினார். பின்வளவில் குவியும் மைனாக்களுக்குத் தீனிபோடுவது தினசரி வேலையாகியது. தான் பேசும் தமிழ் மைனாக்களுக்குப் புரியும் என நம்பி மணிக் கணக்கில் கதை சொல்வார். இதனால் சிங்காரம்பிள்ளைக்குப் பிஜி சுதேசிகள் வைத்த பெயர் மறை கழண்ட மைனா.

பிஜியில் மைனா என்பது இந்தியர்களுக்கான பட்டப்பெயர். பிஜித் தீவுகளெங்கும் பெருகிப் பரவிய மைனாக்களை, இந்தியர்களே கொண்டு வந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். மைனாக்கள் மிகவும் சுறுசுறுப்பான பறவை. விரைவில் இனப்பெருக்கம் செய்யும். அவை பல்கிப்பெருகி, தங்களின் பூர்வீகப் பறவைகளைக் காடுகளுக்குள் துரத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். பிழைக்க வந்த இந்தியர்களும் மைனாக்கள் போலவே பெருகுவதால், தங்களை நசுக்கி ஒதுக்கிவிடுவார்கள் என்பது பிஜியர்களின் அடிமனத்து அச்சம்.

சிங்காரம்பிள்ளையைச் சுற்றியிருந்து கண்ணீர் வடித்து மூக்குச்சிந்தி அழ அங்கு யாருமில்லை. இதனால் கொல்லைக்கு இரைதேடி வந்த மைனாக்கள் வீடுவரை வந்து படுக்கையைச் சூழ்ந்துகொண்டன. சில மைனாக்கள் உணர்வற்றுக் கிடந்த சிங்காரம்பிள்ளையின் உள்ளங் கைகளைக் கொத்துவதும் பின்னர் தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்துத் தயங்கி, மறுபடியும் கொத்துவதுமாக அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டன. தாயுடன் கூடவந்த மைனாக் குஞ்சொன்று நெடுநேரம் தத்தித் திரிந்த களைப்பில் றங்குப்பெட்டியின் மேலேறி அமர்ந்துகொண்டது. இவை எதற்கும் எதிர்வினையாற்றாது அரைக்கண் திறந்தபடி சிங்காரம்பிள்ளை படுத்துக்கிடந்தார்.

கரும்புக்காடு தீப்பற்றி எரிந்தபோது, தீயில் கருகி மருமகள் மறைந்த பின்னர், சிங்காரம்பிள்ளையின் நம்பிக்கை, பிடிமானம் எல்லாமே தலைநகர்ப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி, ஆங்கில மொழியில் தொழில்நுட்பம் படிக்கும் அவரது ஒரேயொரு பேரனே. றங்குப்பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த மனைவியின் தாலிச்சரடும் சங்கிலியும் காப்பும் விற்ற பணமே பேரனின் கல்விக்குச் செலவாகிறது. அன்புக்கும் பாசத்துக்கும் மொழி எதற்கு? அவனுடன் தனக்குத் தெரிந்த பிஜிஹிந்தியிலே பேசுவார்.

திடீரென சிங்காரம்பிள்ளை மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விட அவதிப்படும் திணறல் சத்தம் கேட்டது. நெஞ்சுக்கூடு வலியில் அவஸ்தைப்பட்டது. பேரனின் வரவுக்காகவே உயிர் காத்திருப்பதாக ஆரூடம் சொன்ன கோவில் ஐயர், தமிழில் இரண்டு தேவாரங்கள் பாடித் தண்ணீர் தெளித்துவிட்டு கோவில் பூசைக்குப் போய்விட்டார். பூசாரி தண்ணீர் தெளித்தால் ஊசலாடும் உயிர் அமைதியாகப் பிரியுமென்பது அங்குள்ளவர்களின் வாகடம். மொழி அழிந்தாலும் கடவுள் நம்பிக்கையும் சமய அனுஸ்டானங்களும் இன்னமும் பிஜியில் ஒட்டிக்கொண்டிருந்தன.

மூன்றாம் தலைமுறை இந்தியர்கள் முருகனுக்கு கோவில்கட்டிக் குடமுழுக்கு நடத்தியதால் நித்திய பூசைக்கெனத் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டவர் மேற்படி ஐயர். அதற்குமுன்னர் கோவில்களில் லோக்கல் பூசாரிதான். ஐயருக்குத் தமிழும் சமஸ்கிருதமும் தவிர்ந்த மற்றதெல்லாம் அப்படியிப்படித்தான். இனித்தான் பிஜிஹிந்தி கற்றுக் கொள்ளவேண்டும். கோவில் சுற்றுவட்டாரத்தில் அப்போது தமிழ் பேசியவர் சிங்காரம்பிள்ளை மட்டுமென்பதால் இருவருக்கும் ஒத்துப்போனது. பூசையில்லாத நேரங்களில் தனித் தமிழிலே கோவில் மண்டபத்தில் தினசரி சமா நடக்கும். அந்த நேரங்களில் சிங்காரம்பிள்ளை புதிய மனிதராகவே மாறிவிடுவார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதால் வார்த்தைகள் வரமறுக்கும். அவரின் பல கேள்விகளுக்கு ஐயரிடம் பதில் இருக்காது. அத்தருணங்களில் தூர இருக்கும் பொருளொன்றின் மீது பார்வையைக் குவித்து சிங்காரம்பிள்ளை அமைதியாவார்.

கரும்புத் தோட்டங்களிலே மாடாய் உழைத்த கூலிகளுக்கு, பிறந்த மண்ணின் நினைப்பு வராத அளவுக்கு, பிஜியை ஆண்ட வெள்ளையர்களின் நெருக்குவாரமும் கெடுபிடிகளும் இருந்தன. வெள்ளையர்கள் போனபின் அதையே லோக்கல் முதலாளிகளும் கடைப்பிடித்தார்கள். ஐயரைச் சந்தித்த பின்னர் ஊரும் உறவுகளும் தினமும் சிங்காரம்பிள்ளையின் கனவில் வந்துபோனார்கள். எல்லாம் மங்கலான கறுப்பு வெள்ளைத் திரைப்படம்போல. காலவோட்டத்தில் சிங்காரம்பிள்ளையின் வளவில் விளைந்த இந்திய மரக்கறிகளும், பழங்களும் ஐயர் வீட்டுக்குச் சென்றன. பண்ட மாற்றாக இந்தியாவிலிருந்து கொண்டுவந்த கந்தசஷ்டி கவசப் புத்தகத்தையும் பாரதி பாடல் தொகுப்பையும் ஐயர் கொடுத்தார். அந்திம காலத்தில் சிங்காரம்பிள்ளையின் உற்ற துணையாக இருந்தவை இப் புத்தகங்களே.

தலைநகர் சுவாவிலிருந்து சிங்காரம்பிள்ளை வாழ்ந்த ஊருக்கு வர இரண்டு நாள்களாவது ஆகும். இருந்தாலும் பஸ்களிலும் கரும்பு லொறிகளிலும் மாறிமாறி ஏறி அதிகாலையில் பேரன் வந்தபோது நிலம் வெளித்துப் பளிச்சென்றிருந்தது. வழமைக்குமாறாக வெய்யிலின் வெப்பம் கூடியிருந்தது. கொல்லையில் குவிந்த மைனாக்கள் சிங்காரம்பிள்ளையைக் காணாது கூட்டாகக் கத்தின. சாவீட்டைச் சாட்டி அயலவர்கள் கொண்டுவந்த தென்னஞ் சாராயம் மாமரத்தின் கீழே போதுமான அளவு இருந்தது. நள்ளிரவில் றங்குப்பெட்டியைத் திறக்க முயற்சித்து, முடியாத வெப்பிசாரத்தில் சிங்காரம்பிள்ளையின் மகன், மீண்டும் போதையேற்றிக்கொண்டு தரையில் படுத்திருந்தான். இப்போதைக்கு எதுவும் நடக்கிற காரியமில்லை என்ற எண்ணத்தில் அயலவர்கள் எல்லோரும் தத்தமது வீடுகளுக்குச் சென்றிருந்தார்கள். சிங்காரம்பிள்ளையின் வளர்ப்பு நாய் மட்டும் பிட்டத்தை தரையில்பதித்து முன்னங்கால்ளை நிமிர்த்தி படுக்கையருகே குந்தியிருந்து காவல் காத்தது. பேரன் தாத்தாவின் நெற்றியில் தனது உதடுகளைப் பதித்து, தாத்தாவென அழைத்தான். உடல் குளிர்ந்திருந்தது. விஷயம் விளங்கியதும் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து உடல் குலுங்கியழுதான். தலைமாட்டில் குந்தியிருந்த நாய் மெல்ல எழுந்து வந்து தன் முன்னங்கால்களை அவனுடைய தொடையில் பதித்து, தலையை உயர்த்தி முகம் பார்த்து முனகியது.

சட்டுப்புட்டென்று இன்றே காரியத்தை முடித்துவிடுவோம் என்றார் காலைப் பூசையை முடித்துவிட்டு வந்த ஐயர். கோவிலில் பூசைசெய்யும் ஐயர் மரணச் சடங்குகளைச் செய்வது சம்பிரதாயமில்லையாம். இருந்தாலும் பேச்சுத் துணையாக இருந்தவரின் மரணச்சடங்கை ஐயரே முன்னின்று செய்ய முன்வந்தார். மகன் போதையில் தள்ளாடியதால் பேரனே கிரியைகளையும் செய்து கொள்ளியும் வைக்கவேண்டியதாயிற்று.

சுடுகாட்டுக்குப் போனவர்கள் திரும்பி வந்தபோது மகனுக்குப் போதை சற்றுக் குறைந்திருந்தது. அவசரஅவசரமாக மீண்டும் றங்குப்பெட்டியை திறக்க ஆயத்தமானான். ஐயர் விடவில்லை. றங்குப்பெட்டி மேலே சிங்காரம்பிள்ளைக்கு இருந்த பற்றும் பாந்தமும் ஐயருக்குத் தெரியும். இதனால் பேரன் முன்னிலையில் ஐயர் பூட்டை உடைத்தார். குப்பென்று பழைய சாமான்களின் அடைசல் மணம் மூக்கைத் தாக்கியது. பெட்டிக்குள் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. பொத்தல்கள் நிறைந்த வேட்டிகள், திட்டுத்திட்டாக இரத்தக்கறை படிந்த ஒருசில கதர் மேலங்கிகள், மனைவியின் நைந்துபோன புடவைகள் என்பன உருட்டிக் கட்டப்பட்டிருந்தன. கதர் மேலங்கிகளின் அளவையும் அமைப்பையும் வைத்துப் பார்க்கையில் அவை பிஜிக்கு வந்தபோது அவர் கொண்டுவந்தவைகளாக இருக்கலாம். இரத்தக் கறைகளும் பொத்தல்களும் கரும்புத்தோட்டக் கூலியாக அவர் பட்ட சித்திரவதைகளின் சின்னமும் குறியீடும் என்பது ஐயருக்குப் புரிந்தது.

துணிகளுக்கு அடியிலே ஒரு கூழாங்கல், செழும்பு பிடித்த இரண்டு பித்தளை மூக்குப்பேணிகளும் அலுமீனிய சாப்பாட்டுத் தட்டுக்களும். றங்குப்பெட்டியின் பக்கவாட்டு அமைப்பில் ஐயர் கொடுத்த பாரதி பாடல் புத்தகம் செருகப்பட்டிருந்தது. தனக்குத் தேவையனது றங்குப்பெட்டியில் இல்லாததால் தமிழில் தனக்குத் தெரிந்த தூஷன வார்த்தைகள் அனைத்தையும் சொல்லித் திட்டிவிட்டு மீண்டும் போதையேற்ற மா மரத்தடிக்குப் போய்விட்டான். பேரன் புத்தகத்தை உருவி எடுத்தான். புத்தகதிலிருந்து விழுந்த கடித உறைக்குள் பெரியபெரிய நோட்டுக்ளாக பிஜியன் டாலர்கள் இருந்தன. உறையின் மேலே, இந்தப் பணம் என் பேராண்டிக்கு. ‘நீயாவது ஒருமுறை ஊருக்குப் போய்வா’ எனத் தமிழில் எழுதி இருந்ததை ஐயர் வாசித்துச் சொன்னதும், பேரன் நொறுங்கிப்போனான். அப்படியே அங்கிருந்த தூணில் சாய்ந்து தலையைக் குனிந்து கண்களைத் துடைத்தான்.

பாரதிபாடல் புத்தகத்தின் சில பக்கங்கள் அழுக்காகியிருந்தன. கரும்புத் தோட்டத்திலே என்ற தலைப்புடன் இருந்த தேசிய கீத அத்தியாயத்தில், சிங்காரம்பிள்ளை பென்சிலால் சில வரிகளை அடிக்கோடிட்டிருந்தார். தன்னை மறந்து ஐயர் வரிகளை உரத்துப் படித்தார்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்

கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்து கின்றனரே ஹிந்து

மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்

சுருங்குகின்றனரே - அவர்

துன்பத்தை நீக்க வழியில்லையோ?

நாட்டை நினைப்பாரோ? - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ? - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்

கேட்டிருப்பாய் காற்றே...

ஐயரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. றங்குப்பெட்டி முன்னே உறைந்துபோய் நின்றார்.

வரிகளுக்கான அர்த்தம் தேடி, ஐயரின் முகத்தைப் பார்த்தபடி பேரன் நின்றான்!

logo
Andhimazhai
www.andhimazhai.com