குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணை
பி ஆர் ராஜன்
Published on

அனிருத் பட்டேலின் சட்டைப் பையில் மடித்து வைக்கப்பட்டு இருந்த பிடிவாரண்ட் வெளியே எட்டிப்பார்க்க முயன்றது. பத்திரமாக இருக்கிறதா என வலதுகை அனிச்சையாக தொட்டுப்பார்த்தது. குஜராத்தில் ராஜ்கோட் நகரில் காவல்துறை உதவி ஆய்வாளனாக பணியாற்றும் அவன் புஜ் நகர நீதிமன்றத்தில் சாட்சியாக அழைக்கப்பட்டிருந்தான். அந்த காலை நேரத்திலேயே வந்த கொட்டாவியை கட்டுப்படுத்த முயன்றான்.

ராஜ்கோட்டில் இருந்து கிளம்பி முழு இரவும் பேருந்தில் பயணம் செய்து இன்று அதிகாலைதான் வந்து சேர்ந்தான். பயணத்தின்போது எல்லா ஊர்களிலும், எல்லா நிறுத்தங்களிலும் பேருந்து நின்றது. முழு இரவும் மரக்கிளையின் மீது இரவுகாத்த காகமாக விழித்திருந்தான். நீதிமன்ற வளாகம் முழுதும் வாரக்கடைசியின் சோம்பல் திங்கள்கிழமையின் காலை நேரத்திலும் மிச்சம் இருந்தது. நீதிமன்றத்தின் பெயரையும், வழக்கு எண்ணையும் தவிர விவரம் எதுவும் அவனுக்கு தெரியாது. வேலை நெருக்கடி அவனை யாரிடமும் பேச விடாமல் செய்திருந்தது.

நீதிமன்ற வளாகத்தில் அவன் சாட்சி சொல்லவேண்டிய அறையைக் கண்டடையும்வரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல அவன் மிகவும் குழம்பிப் போனான். நீதிமன்ற அறைகளின் எண்வரிசை, யாரோ மாற்றிவைத்து விளையாடியதுபோல தாறுமாறாக இருந்தது. அதை கண்டுபிடிக்க அவன் முன்னும் பின்னும் சுற்றி அலைந்து விசாரித்தப்பின்தான் வந்து சேர்ந்தான்.

ஜன்னல் வழியாகப் பாய்ந்த ஒளிக்கீற்றில் தூசுகள் மிதந்தன. குமாஸ்தாக்கள்கூட வராததுபோல பட்டது. சுத்தம் செய்யும் ஊழியர் மட்டும் கைக்கு வலிக்காமல் துடப்பத்தை நிதானமாக அசைத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த மேசை, நாற்காலிகள் தங்களது புராதன காலத்தை பறைசாற்றின. அவன் வந்து சேர்ந்தபிறகே நிதானமாக ஒவ்வொருவராக ஊழியர்கள் வந்தார்கள். 

அரசு வழக்குரைஞரின் குமாஸ்தாவிடம் விபரத்தைச் சொல்லி அவன் வழக்குக்கட்டை எடுத்துக்கொண்டான். பத்து வருடங்களுக்கு முன்னர் அவனது பயிற்சிக்காலத்தில் பதிவு செய்திருந்த வழக்கில் இன்று சாட்சி சொல்லவேண்டி இருந்தது. அது ஒரு விபச்சார வழக்கு. அப்படிப்பட்ட வழக்கில் அவன் முதன்முறையாக சாட்சி சொல்லப்போகிறான். எதிர்த்தரப்பு வக்கீல் யார், தனது வாக்குமூலம் என்னவாக இருக்கும், எந்த மாதிரி கேள்விகள் வரும் என மனதில் கேள்விகள் எழுந்தன. முடிந்த மட்டும் அவசரமாக வழக்கைப்பற்றி படித்து தெரிந்து கொள்ளவேண்டும். அரசு வழக்கறிஞருக்கு வணக்கம் போட்டுவிட்டு மூலையில் உட்கார்ந்து வழக்குக்கட்டைப் படிக்க முயன்றான். விசாரணைக்கு வருவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என அவனுக்கு தோன்றியது. அரசு வழக்கறிஞரும் அப்படித்தான் சொன்னார்.   

கோப்பைப் புரட்டும்போது அவன்தான் அந்த வழக்கைப் பதிவு செய்தானா என சந்தேகம் வந்தது. பயிற்சிக்காலத்தில் அவன் புஜ் நகரத்தின் ஒவ்வொரு காவல்நிலையமாக அலைந்தவண்ணம் இருந்தான். அல்லது அலைக்கழிக்கப்பட்டான். ஏதாவது ஒரு அதிகாரி வேலையை கற்றுத் தருகிறேன் எனச் சொல்லி அழைப்பார். தனது வீரதீர சாகசக் கதைகளை பட்டியலிடுவார். எந்த காவல்நிலையம் வேண்டுமானாலும் போய் வழக்கு பதிவு செய்யலாம் என ‘கச் (kutch)’ மாவட்ட எஸ்பி அவனைப் போன்ற பயிற்சி அதிகாரிகளை அனுமதித்து இருந்தார். அப்படித்தான் ஏதோ ஒரு சமயத்தில், புஜ் நகர காவல்நிலையப் பகுதியில் இருந்து தனிப்படையினரின் அழைப்பு வந்தது. அந்த ஊரின் பழைய நகரப்பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல். தனிப்படையோடு போய் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணை அவளது வீட்டில் வைத்து பிடித்தார்கள். பின்னர் காவல்நிலையத்திற்கு செய்தி சொல்லி வழக்கைப் பதிவு செய்தது அவனுக்கு மங்கலாக ஞாபகம் வந்தது. எது எப்படியோ, இப்போது சாட்சி சொல்லவேண்டும். இதிலிருந்து தப்பிக்க வழியில்லை. கோப்பை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தான். அதில் மனம் ஒன்றாமல் அலைந்தது. கார்பன் பிரதியின் சில பக்கங்கள் கிழிந்திருந்தன. தனது வாக்குமூலத்தையாவது படித்துவிடவேண்டும் என முயன்றான். அடிப்படைத் தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்ளாமல் சாட்சிக் கூண்டில் ஏறமுடியாது.

உள்ளே வந்த நீதிபதி இருக்கையில் உட்கார்வதற்குமுன் முழு அறையையும் நோட்டம் விட்டார். மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்காதவர்களை அவர் உற்றுப் பார்ப்பதுபோல தோன்றியது. சிலர் வேறு வழியில்லாமல் மெதுவாக எழுந்து நின்றார்கள். உட்கார்ந்து கோப்பை புரட்டிக்கொண்டிருந்த அனிருத்தை அவர் முறைத்துப்பார்த்தார். அவசர அவசரமாக எழுந்து நின்றபின்னும் என்ன பிரச்சனை என அவனுக்கு புரியவில்லை. தான் தொப்பியை அணிந்திருக்கவில்லை என திடீரென உறைத்தது. மேசைமேல் இருந்த தொப்பியை எடுத்து அவசரமாக அணிந்து அவன் சல்யூட் அடித்தபோது சமன் குறைந்து உடல் ஆடி அடங்கியது. அதைப்பார்த்து அறையில் இருந்த எல்லோரும் புன்னகைத்தார்கள். கோபத்தின் சாயல் முகத்தில் இருந்து முழுதாக மறையாமலேயே நீதிபதி தனது இருக்கையில் அமர்ந்தார்.

அன்றைய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. முதல் வழக்கின் எதிர்தரப்பு வக்கீல் வேறு நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருப்பதாகவும், வேறு தேதி கொடுக்குமாறும் ஜூனியர் வக்கீல் கேட்டார். அதைக்கேட்ட நீதிபதி,  ‘நானும் இங்க இருக்கறவங்களும் ஈயடிக்க உட்கார்ந்துட்டு இருக்கமா?’ என உறுமினார்.  ‘உங்க சீனியரை உடனே வரச்சொல்லு’ என்றார்.  ‘குறைஞ்சபட்சம் மதிய உணவுக்கு அப்புறமாவது வைங்க’ என ஜூனியர் கெஞ்சினார். ஏதோ யோசித்தபடி, நீதிபதி, ‘ஒரு மணி நேரம்தான் அவகாசம்,’ என வேண்டாவெறுப்பாக சொன்னார். ஜூனியர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். அடுத்த வழக்கு வந்தது. அதில் எந்த சாட்சியும் வரவில்லை என்றார் அரசு வழக்குரைஞர் (ஏபிபி). ஏன் என்று வினவினார் நீதிபதி.  ‘கோர்ட்டிலிருந்து ஐந்து சம்மன்களை அனுப்பிவைத்தோம், ஆனால் ஒரு சாட்சி கூட வரவில்லை,’ என்றார். நீதிபதி குமாஸ்தாவை பார்த்து முழு கோப்பையும் தன்முன்னே கொண்டுவரச் சொன்னார். ‘அடுத்த தேதில  எஸ்பியை வரச் சொன்னாதான் பயம் வரும்’ என்று உரக்கச் சொன்னார். போலீஸ்காரர்களுக்கு தன்மேல் இன்னும் முழுபயம் வரவில்லை என அவருக்குத் தோன்றியது. தான் யார், நீதிமன்றம் எவ்வளவு வலிமையானது எனக்காட்ட இதுதான் நல்ல வாய்ப்பு என அவர் மீண்டும் கடிந்தார்.

நடக்கும் சம்பவங்களை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அனிருத் கோப்பை படித்துக்கொண்டிருந்தான். திடீரென சீமாக்குமாரி கேஸ், சீமாக்குமாரி கேஸ் என அழைப்பது கேட்டது. முழு பைலையும் நிதானமாக வாசிக்க முடியவில்லை. அதற்குள் அவனது வழக்கு வந்துவிட்டது.  ஆனாலும் சாட்சிக்கூண்டில் நின்றுதான் ஆகவேண்டும். அவனைப் பார்த்து ஏபிபி, “ம்ம், வாப்பா, போய் சாட்சிக்கூண்டில் நில்லு” என சைகை செய்தார். கூண்டை நோக்கிச் செல்கையில் அவர் “என்ன, வழக்கைப்பத்தி படிச்சுட்டுதான வந்திருக்கீங்க” என முணுமுணுத்தார். “வழக்கைப் பதிவு பண்ணி ரொம்ப நாள் ஆயிடுச்சு. முடிஞ்ச அளவுக்கு இப்போதான் படிச்சேன்,” என்றான் அனிருத். 

சாட்சிக்கூண்டில் நின்று உறுதிமொழி எடுத்தபின், ஏபிபி பைலை திறந்துவைத்துக்கொண்டு அவர் முன்னே நின்றார்.”சொல்லுங்க” என்றவர், என்ன சொல்லப்போற என்பதுபோல அவனது முகத்தை நோக்கினார். எப்படி ஆரம்பிக்கலாம் என அவன் யோசித்தான். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. இதற்காகவே காத்திருந்ததுபோல எதிர்த் தரப்பு வக்கீல் நீதிபதியை நோக்கி,  ‘இப்படி நின்னுகிட்டு இருந்தா எப்படி, கோர்ட்டின் நேரத்தை வீணடிக்கிறாரு,’ என்றார். அனிருத்திற்கு படித்த எல்லாமே மறந்து போனதுபோனதுபோல பட்டது. எப்படி ஆரம்பிப்பது என மீண்டும் குழம்பினான்.

ஏபிபி உதவ முன்வந்தார், “வழக்கை எப்ப பதிவு பண்ணீங்க?”.  

“2000 ல பதிவு செஞ்சோம். மாதம் ஜனவரி மாதம். தேதி இருபத்தாறு”

“சரி. அப்ப நீங்க எங்க வேலை செஞ்சிட்டு இருந்திங்க?”

“புறநகர் காவல் நிலையத்துல பயிற்சி எடுத்துட்டு இருந்தேன்”

“ஆனா, இந்த வழக்கு புஜ் நகரக் காவல்நிலையத்தில பதிவாயிருக்கே”.

“பயிற்சியப்ப அங்கயும் அப்பப்ப போயிட்டிருந்தேன். எஸ்பியோட தனிப்படையுடன் சேர்ந்து நாங்க மாவட்டம் முழுதும் வழக்குப் பதிவு பண்ணிட்டிருந்தோம்”.

இதைக் கேட்ட உடனேயே எதிர்த் தரப்புவக்கீல் உற்சாகத்துடன், “இவர் எப்படி தன் காவல் நிலையத்தை விட்டுட்டு இன்னொரு இடத்துக்கு போகலாம். அதற்கு ஏதாவது பணி ஆணை இருந்ததா?” என கேள்வி எழுப்பினார். இப்படி அவர் திடீரென குறுக்கிட்டது ஏபிபியை எரிச்சலடைய வைத்தது. நீதிபதியை நோக்கி, “நான் விசாரணை பண்ணும்போது இவர் இப்படி குறுக்கிடுவது சரி இல்லை, யுவர் ஆனர்” என்றார். வக்கீலையும் நோக்கி, “நீங்க குறுக்கு விசாரணையில என்ன வேணும்னாலும் கேளுங்க. நான் விசாரணை பண்ணும்போது குறுக்கிடக்கூடாது.” என்றார்.

“கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா எஸ்ஐ எப்படி தன் ஏரியாவில இருந்து இன்னொரு ஏரியாவுக்கு போகலாம்? அதற்கான பவர் எங்கிருந்து வந்தது? இன்னொரு முக்கியமான விசயம், சாட்சி தன் வாக்குமூலத்தை அவராகவே சொல்லட்டும். ஏபிபி எல்லாத்தையும் சொல்ல வைக்கிறார். இந்த எஸ்ஐ வழக்கை பதிவு பண்ணும்போது அந்த இடத்துல இருந்தாரா, இல்லை யாரோ எழுதிய காகிதத்துல கையெழுத்து போட்டாரா?” எதிர்தரப்பு வக்கீல் அடங்கவில்லை.

ஏபிபி இன்னும் எரிச்சல் அடைந்தார். “இவர் இப்படி பேசிக்கிட்டே இருந்தா என்னால் வேலையை செய்ய முடியாது,” என்ற வேகமாக தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.

இதையெல்லாம் பட்டும்படாமல் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, இருவரையும் பார்த்து கோபப்பட்டார். “உங்க ரெண்டுபேரோட வயசு எவ்வளவு, அனுபவம் எவ்வளவு. சின்ன பசங்க மாதிரி சண்டை போடறீங்க. அவங்க அவங்க வேலையை மட்டும் பாருங்க. யார் என்ன பண்ணனும்னு நான் முடிவு செய்யறேன். விசாரணையப்ப வக்கீல் அமைதியா இருங்க. ஏபிபி வந்து விசாரணையை முடிங்க. ஆனா எஸ்ஐ தன் வாக்குமூலத்தை தானா சொல்லட்டும்” என்றார். சூழல் கொஞ்சம் அமைதியானது. மீண்டும் ஏபிபி விசாரணையை ஆரம்பித்தார்.

“உங்க காவல்நிலையத்தை விட்டுட்டு இன்னொரு காவல்நிலையத்துக்கு போய் இந்த வழக்கை எப்படிப் பதிவு செஞ்சீங்க. அதற்கான ஆணை ஏதாவது இருக்கா?”.

 “இன்னைக்கு ஞாபகம் இல்லை” என்றான் அனிருத். “ஞாபகம் இல்லைன்னா கோப்பை பார்த்து பதில் சொல்லலாம்” என கூறிவிட்டு அவனிடம் கோப்பை கொடுத்தார். கூண்டில் நின்றவாறே அனிருத் அதை புரட்டினான். அப்படி எதுவும் ஆணை கிடைக்கவில்லை. திரும்பவும் புரட்டிப் பார்த்தான். எதுவும் இருப்பதுபோல தெரியவில்லை. ஏபிபியைப் பார்த்து கோப்பில் எதுவும் கிடைக்கவில்லை என்றான். “அப்ப அப்படி ஆணை இருந்ததா?” எனக்கேட்டார் ஏபிபி. அனிருத் தடுமாறி, “ஞாபகம் இல்லை” என்றான். “சரி அப்படியே எழுதிக்கலாம்” என குமாஸ்தாவிடம் சொன்னார் நீதிபதி.

அனிருத் தொடர்ந்தான். தனக்கு நகரக் காவல்நிலையப்பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தெரியவந்ததும் எஸ்பியின் தனிப்படை டீமோடு அங்கே போனதாகவும், தானே வாடிக்கையாளனாகி சீமாகுமாரியின் வீட்டை அடைந்ததாகவும் சொன்னான்.

“அங்கே போய் பேரம் பேசி என் கையெழுத்திட்ட 100 ரூபாய் நோட்டை கொடுத்தேன். அவள் அதை வாங்கிக்கொண்டாள். நாங்கள் படுக்கை அறைக்குள் போனோம். பின்னர் கொஞ்ச நேரத்தில் போலீஸ் டீம் வந்து சீமாகுமாரியை சோதனை செய்தது. அவளது பிளவுசுக்குள் இருந்து நூறு ரூபாயை எடுத்து, அதில் கையெழுத்து இடப்பட்டிருந்ததை லோக்கல் இன்ஸ்பெக்டர் உறுதி செய்தார். பின்னர் அதை பறிமுதல் செய்து, ஒரு அறிக்கையைத் தயார் செய்தார். சீமாகுமாரியை கைது செய்தார்” என்று முடித்தான்.

“நீங்க பிடிச்ச பெண் இங்க இருக்காளா பார்த்து சொல்லுங்க” என்றார் ஏபிபி. குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்த அனிருத்துக்கு குழப்பமாக இருந்தது. நரைக்கத் தொடங்கிய கூந்தலோடு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். இவளையா கைது செய்தோம் என அனிருத்துக்கு சந்தேகம் வந்தது. வேறு பெண்ணை நிற்க வைத்து தன்னை ஏமாற்றுகிறார்களா என நினைத்தான். ஆனால் வேறு எந்த பெண்ணும் அவள் பக்கத்தில் இல்லாததால் அவளாகத்தான் இருக்கவேண்டும் என நினைத்தவாறு ஆமாம் என்று சொன்னான். “இந்த அறிக்கையில் இருக்கிற கையெழுத்து யாருடையது?” “அது என்னுடையதுதான்” சாட்சி வாக்குமூலத்தை ஏபிபி முடித்துக்கொண்டார்.

பின்னர் குறுக்கு விசாரணை ஆரம்பமானது. அவன் எச்சரிக்கையடைந்தான். எதிர்தரப்பு வக்கீல் என்னவெல்லாம் கேட்கப் போகிறாரோ என அவன் கற்பனை செய்து பார்த்தான். அவர் சிறிய நோட்டை கையிலேந்தி மூன்று ஜூனியர்கள் புடைசூழ நின்றார். மிரட்டுவதுபோல அவனை ஊடுருவி நோக்கினார். அவன் தனது பார்வையை வேறுபக்கம் திருப்பினான். “பயிற்சியில இருக்கும்போது ஒருவர் விபச்சார வழக்குபோன்ற முக்கியமான ஒன்றை பதிவு செய்ய முடியுமா?” என ஆரம்பித்தார். “அதற்கான அதிகார ஆணை உங்களிடம் இருந்ததா?. இருந்தால் அதை நீதிமன்றத்தின் முன்னால் காட்டவேண்டும்,” என்றார். என்ன பதில் சொல்வதென அவனுக்கு உடனடியாகத் தோன்றவில்லை. யோசித்துப் பார்த்தான். எதுவும் ஞாபகம் வரவில்லை. ஏபிபியை பார்த்தான். அவர் உணர்ச்சியின்றி சாட்சிக்கூண்டின் கம்பிகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவன் மீண்டும் வக்கீலை வெறித்துப் பார்த்தான். எந்த பதிலும் சொல்ல முடியுமென அவனுக்கு தோன்றவில்லை. எரிச்சலடைந்த வக்கீல், “இப்படியே பேசாம இருந்தா எப்படி. பதில சொல்லுங்க. இல்லைன்னா பயிற்சியில இருக்கும் ஒருத்தனால சட்டப்படி வழக்கை பதிவு பண்ணமுடியாதுன்னு சொல்லுங்க,” என்றார்.

  “என்னால இப்ப எதையும் சொல்ல முடியாது,” என்றான்.

 ‘ஆ…ஆ. அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நேரடியா பதில் சொல்லணும். சொல்லித்தான் ஆகணும்,’ என்று அழுத்தம் கொடுத்தார்.

திடீரென  கோபப்பட்ட அனிருத், “நீங்க எதிர்பார்க்கிற மாதிரில்லாம் சொல்ல முடியாது” என்று குரலை உயர்த்தினான்.

ஆத்திரமடைந்த வக்கீல் “போலீஸ்தனத்தை இங்க காட்டவேணாம். இது நீதிமன்றம்” என்றவாறே நீதிபதியை நோக்கித் திரும்பினார், “அய்யா, இந்த மாதிரி சாட்சிகிட்ட நான் என்ன குறுக்குவிசாரணை பண்றது. என்ன வேலை செஞ்சாருன்னு தெரியாது. யாரோ வழக்கை எழுதி இவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. கேள்வி கேட்டா நேரா பதில் சொல்ல மாட்டன்றாரு... ஜட்ஜ் அய்யாதான் சொல்லணும். நான் என்ன பண்ணட்டும். இவருக்கு நீதிமன்றத்துல என்ன பேசணும். எப்படி பதில் சொல்லணும்னு எதுவும் தெரியாது போல இருக்கு”. என்றார்.

 அனிருத்தைப் பார்த்த நீதிபதி, “வக்கீல் கேக்கற கேள்விக்கு நேரா பதில் சொல்லணும். சரியா பதில் சொல்லலன்னா உங்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கவேண்டி இருக்கும்” என்றார். அப்படிச் சொல்லும்போது அவரது கைவிரல்கள் அவனை நோக்கி உயர்ந்தன.

மதிய உணவுக்கான நேரம் நெருங்கியதால் இடைவேளைக்கு அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என நீதிபதி சொல்லிவிட்டு யாரையும் பார்க்காமல் தனது அறையை நோக்கி விரைந்தார்.         

அனிருத்துக்கு மூச்சு திரும்ப வந்தது போல இருந்தது. ஏபிபியைப் பார்த்தால் அவர் அரை மணி நேரத்திற்குள் திரும்ப வந்துவிட சொல்லிவிட்டு எங்கோ போய்விட்டார். அடுத்து என்ன செய்வது என அவனுக்கு புரியவில்லை. யாரும் அவனை சட்டை செய்வதுபோல தெரியவில்லை. மெதுவாக வெளியே வந்தான். நன்றாக பசி எடுத்தது. வளாகத்தில் கிடைக்கும் உணவு எதையாவது சாப்பிடுவோம் என உணவகத்துக்கு சென்றான்.  அங்கே இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்தன. கூட்டம் நெருக்கியது. மற்றவர்களிடம் இருந்து தள்ளி நிற்கப் போராட வேண்டி இருந்தது. சீருடையில் இருக்கும் அவனை எல்லோரும் வெறித்துப் பார்ப்பதுபோல அவனுக்கு தோன்றியது. ஒருவழியாக ஒரு டீயும், ஒரு சமோசாவும் வாங்கி அவசர அவசரமாக சாப்பிட்டான். இதைவிட மோசமாக டீயை போடமுடியுமா என அவன் நினைத்துப் பார்த்தான். நேரம் அதிகமானதால் கோர்ட்டை நோக்கி விரைந்தான்.   

எதிர்த்தரப்பு வக்கீல் ஜூனியர்கள் படைசூழ உள்ளே நுழைந்தார். அவனுக்கு முன்னே வந்து நின்று தனது வலது கையை நீட்டினார். ஒரு ஜூனியர் வழக்கு கோப்பை மெதுவாக கையில் வைத்தார். வக்கீல் முழுக்கவனத்துடனும் அவன் முகத்தை நோக்கிவிட்டு குறுக்கு விசாரணையைத் தொடங்கினார்.  

“சரி சொல்லுங்க. நீங்க ரூமுக்குள்ள போனப்ப, அங்க யார் யார் இருந்தாங்க”.

“சீமாகுமாரி மட்டும் தான் இருந்தா”

“நிஜமா, வேறு யாரும் இல்லையா. சீமாவோட குழந்தைங்க எங்க இருந்தாங்க”

“தெரியாது. நான் அங்க பாக்கல”.

“சரி. ரூம்ல என்ன இருந்தது”

“வேற என்ன. ஒரு படுக்கை. பிரோ. ஒரு மேசை. ரெண்டு இருக்கை” என்றான். வக்கீல் கிளர்க்கிடம் அவன் சொன்னதை அப்படியே எழுதச் சொன்னார்.

“அப்படியா. ஆனா அறிக்கை அப்படி சொல்லலேயே. படுக்கை மட்டும் இருந்தது. மற்றபடி ரூம் காலியா இருந்ததா எழுதி இருக்கே. தேவைன்னா வழக்குக்கட்டை பார்த்து உறுதி செஞ்சிக்கலாம்”

“எனக்கு அப்படித்தான் ஞாபகம் இருக்கு. ஒரு வேளை அறிக்கையில எல்லா விவரத்தையும் எழுதாம விட்டிருக்கலாம்”

“சரி, சீமா என்ன துணி உடுத்தியிருந்தா”

“புடவை”

”நிஜமா, புடவைதான் கட்டியிருந்தாளா?”

“ஆமாம்”

“ஆனா அவ சல்வார் கமீஜ்ல இருந்ததா அறிக்கை சொல்லுதே”

“எனக்கு தெளிவா ஞாபகம் இல்லை”

“அப்படில்லாம் சொல்ல முடியாது. தேவைப்பட்டா கோப்பை பார்த்து பதில் சொல்லலாம். தெரியாது, ஞாபகம் இல்லைன்னு சொல்லி தப்பிக்க முடியாது”.

”எனக்கு ஞாபகம் இருக்கிறததான் சொல்ல முடியும். உங்களுக்கு தகுந்த மாதிரி பொய் சொல்ல முடியாது,” அனிருத்தின் குரல் உயர்ந்தது. அது வக்கீலை சீண்டியது. அவர் சத்தமிட்டார். “யார் பொய் சொல்ல சொன்னா? கோப்பில இருக்கறதையும், நேர்ல பாத்ததையும்தான் கேக்கறேன். திரும்ப கேக்கறேன், அவள் என்ன துணி உடுத்தி இருந்தா?”. அவரது குரல்வேகத்தை கேட்டு, சிதறியிருந்த எல்லோரின் கவனமும் சாட்சிக்கூண்டுப்பக்கம் திரும்பியது.       

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அவ்வளவுதான் சொல்ல முடியும்”

“சரி. சீமா அறையில எங்க உக்காந்திட்டு இருந்த.?’’

“அவ படுக்கைமேல உக்காந்துட்டு இருந்தா...’’

“அப்ப கதவு திறந்து இருந்ததா?’’

“ஆமா”

“கோப்பில் கதவு உள்ளிருந்து சாத்தி இருந்ததாக எழுதி இருக்கே?’’.

சந்தேகம் வந்தவனாக அனிருத் கோப்பை புரட்டிவிட்டு திருப்பி கொடுத்தான். பின்னர் பதில் அளித்தான், “ஆமாம் கதவு சாத்தி இருந்தது. நான் கதவை தட்டினேன். அவள் கதவை திறந்தா...”

  “அப்புறம் என்ன நடந்தது?”

“நாங்க உக்காந்தோம். நான் முன்னே பேசியபடி அவள் கிட்ட பணத்தை கொடுத்தேன். கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து எங்களை புடிச்சிருச்சு”

“நோ. நோ. பைல் ஒன்னு சொல்லுது. நீங்க வேற எதையோ சொல்றீங்க. திரும்ப கோப்பை பாத்துட்டு சொல்லலாம்” என அவர் நீட்டினார். பின் ஏதோ சொல்லவருவதுபோல நீதிபதியை பார்த்தார். இருந்த எல்லோரையும் பார்த்தார். அவர் முகத்தில் கர்வம் அலையாடியது. அனிருத் கோப்பை புரட்டிப்பார்த்தான். அதில் அவனும் சீமாவும் படுக்கையில் படுத்த நிலையில் நிர்வாணமாக ஆலிங்கன நிலையில் இருந்ததாக எழுதப்பட்டிருந்தது.ஏன் இவ்வளவு எழுதி இருக்கிறார்கள் என அவனுக்கு எரிச்சலாக வந்தது.  இந்த வக்கீல் என்ன என்னவோ கேட்கிறார். எப்படி பதில் சொல்வது என குழம்பினான். வக்கீலை நோக்கி, “கோப்பை பார்த்துட்டேன். மேலும் கேளுங்க” என்றான்.

“அறைக்குள்ள போன பிறகு என்ன நடந்துன்னு சொல்லுங்க”

அவனுக்கு சொல்ல கூச்சமாக இருந்தது. சமாளிப்பதுபோல “அதுதான் எழுதி இருக்கே. தனியா சொல்லணுமா?” என்றான்.

  “அப்படி சொல்லி தப்பிக்க முடியாது. கேக்கற கேள்விக்கு கோர்ட்டுல ஜட்ஜ் அய்யா முன்னாடி பதில் சொல்லித்தான் ஆகணும்.”

அவன் நீதிபதியை நோக்கினான். ஏபிபியை பார்த்தான். அவர்கள் ஆர்வம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. சீமாக்குமாரியைத் தவிர சில பெண் வக்கீல்களும் நின்று கொண்டிருந்தார்கள். தன்னால் பைலில் இருந்தபடி நிதானமாக சொல்ல முடியுமா என அவனுக்கு தோன்றவில்லை. பின் யோசித்தவாறு பதில் சொன்னான், “என்ன கேட்கணுமோ அதை கேள்வியா கேளுங்க, நான் பதில் சொல்றேன்”.

“பணம் எவ்வளவுன்னு எப்ப பேரம் பேசினீங்க?’’

“ரூமுக்குள்ள போனபிறகு தான் பேசினோம்.’’

   “உங்கள மாதிரி புதுசா ஒருத்தன் வருவான். உடனே உங்களை நம்பி வீட்டுக்குள்ள வர அவளும் ஒத்துக்கிட்டா, அப்படித்தானே.”

  “எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட மூலமா சீமாவை தொடர்பு கொண்டேன்’’

“அவர் யார். இதுவரை யாருக்கும் அப்படி ஒருத்தர் இருக்கறது தெரியல. உங்க வழக்கு கோப்பும் அப்படி எதுவும் சொல்லல”

“அவர் பேர் இப்ப ஞாபகம் இல்ல’’

“பேரம் பேசினீங்க. இந்த காலத்துல யாராவது நூறு ரூபாய்க்கு ஒத்துக்குவாங்களா”

“நிஜமா. அவ நூறு ரூபாய்க்கு ஒத்துக்கிட்டா”

“ஆமா, நீங்க கடைக்கு போய் எதையாவது காசு குடுத்து வாங்கி இருக்கீங்களா? வாங்கியிருந்தா தெரியும் நூறு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்னு”

“என்ன சொல்ல வரீங்க. எனக்குன்னு எது வேணும்னாலும் என் பணத்துல தான் வாங்குவேன்”

“அப்படின்னா சொல்லுங்க பார்ப்போம். நூறு ரூபாயில என்ன வாங்கமுடியும்? இந்த காலத்துல என்னென்ன கிடைக்கும்? ஒரு பெண் நூறு ரூபாய்க்கு உடம்ப விக்க ஒத்துக்குவா?”.

அதற்கு அனிருத் எந்த பதிலும் அளிக்கவில்லை. வக்கீலும் அடுத்த கேள்விக்கு தாவினார்,

“அவள் துணியை நீங்க கழற்றினீங்களா? அவளாகவே கழட்டினாளா?” அவன் உடனே பதில் சொல்லவில்லை. அவர் கேள்வியை திரும்பக் கேட்டார்.

“சீமாதான் தனது துணியை கழற்றினாள்’’

 “அப்புறம்?’’

அவனது உடல் இறுக்கமானது.   “அப்புறம்லாம் ஒண்ணும் இல்லை. போலீஸ் வந்து எங்களை புடிச்சிட்டாங்க..’’

  “ரெண்டு பேரும் துணியை கழற்றுனதா சொன்னீங்க. நீங்க உடல் உறவு வெச்சிட்டீங்களா?’’

“இப்படி எல்லாம் நீங்க கேட்க முடியாது,” என வெடித்தான்.

“தம்பி, நீங்க ஒரு பெண்ணை விபச்சார வழக்குல கைது பண்ணி உள்ள வச்சீங்க. அவள மானபங்கப் படுத்தினீங்க. ஆனா ரெண்டு கேள்விக்கு பதில் சொல்ல கஷ்டமா இருக்கு இல்லையா?”

  “நான் ஒண்ணும் பொய் கேசு போடல’’

  “அப்ப சொல்லுங்க…. நீங்க ரெண்டுபேரும் உடலுறவு வெச்சிகிட்டீங்களா?”

  “எனக்கு ஞாபகம் இல்லை..’’

  “அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கல. எதையோ எழுதி கையெழுத்து வாங்கிட்டாங்க, அப்படித்தானே…’’

  “அப்படி எல்லாம் நடக்கல…’’

  “அப்ப, என்ன நடந்தது?’’

  “நாங்க நிர்வாணமா இருந்தப்ப போலீஸ் டீம் எங்களை புடிச்சிட்டாங்க’’

  “அப்ப, நீங்க உடலுறவு வச்சிக்கல…’’

“இல்லை.’’

அவன் சொன்னபடியே எழுதச்சொல்லி கிளர்க்கை பணித்தார். மீண்டும் அனிருத்தை நோக்கினார். “போலீஸ் வந்து சீமாகுமாரியோட ஜாக்கெட்டுக்குள்ள இருந்து பணத்தை எடுத்ததா சொல்றீங்க. ஆனா இப்பதான் போலீஸ் வரும்போது நிர்வாணமா இருந்தான்னு சொல்றீங்க.. போலீஸ் பணத்தை எங்கிருந்து பறிமுதல் செஞ்சாங்க?’

“நான் முன்னாடியே சொல்லிட்டேன். அவளோட ஜாக்கெட்டுக்குள்ள இருந்துதான் எடுத்தாங்க”

  “யார் பணத்தை எடுத்தாங்க?’

  “இப்போ மறந்துபோச்சு’

  “சரி. யார் யார் டீம்ல இருந்தாங்க?’

அவனுக்கு இன்ஸ்பெக்டர் பெயரைத்தவிர வேறு பெயர் ஞாபகம் வரவில்லை. மற்ற பெயர்கள் நினைவில் இல்லை என்றான்.

  “அப்ப ஒரு பெண் காவலர்கூட அந்த டீமில் இல்லைன்னு சொல்றீங்க.’’

அவனுக்கு எதுவும் தெளிவாக ஞாபகம் வரவில்லை. பெண்ணை சோதனை செய்ய பெண்காவலர் இருந்தாகவேண்டும் என தெரிந்தாலும் அதுவரை அவன் வாக்குமூலத்தில் சொல்லவில்லையென அப்போதுதான் உறைத்தது.

“பயிற்சில இருந்த உங்களுக்கு கத்துக்கறதுக்கு ஒவ்வொரு சட்டத்துலயும் வழக்குப் போடணும். எலியா பூனையா ஏழை மக்கள் கிடைப்பாங்க. சோதனை முயற்சியா இந்த வழக்கையும் அப்படித்தான் போட்டீங்க…”

“இல்லை. நீங்க சொல்றது தப்பு. வழக்கை சரியாதான் பதிவு செஞ்சோம்”

“ஓ... அப்ப நான் பொய் பேசறேன். அப்புறம், நீங்க ஒவ்வொரு சட்டத்துலயும் வழக்கு போடணும். உன் சீனியர்ஸ்க்கு கணக்கு காட்டணும். ஒவ்வொரு சட்டத்துலயும் இவ்வளவு வழக்கு போட்டோம்னு சொல்லணும். போன வருசத்தைவிட அதிகமா வழக்கை போடணும். அதனால ஒரு ஏழைப் பெண்ணை புடிச்சு பொய் வழக்கை போட்டுட்டீங்க…”

”இல்லை. நீங்க சொல்றது சரியல்ல”

உடலில் இருந்த முழு ரத்தமும் அவனது தலைக்குள் ஏறியதுபோல ஜிவ்வென தலை வலித்தது.

“இனியாவது வழக்கை பதிவு பண்ணும்போது ஜாக்கிரதையா பண்ணணும். வந்தம் போனம்னு பண்ணக்கூடாது,’’ என எல்லோரும் கேட்கும்படி வக்கீல் சத்தமாகவே சொன்னார். விசாரணையை முடித்துக்கொள்ளுவார் என எதிர்பார்த்தான். பின்னர் ஏதோ ஞாபகம் வந்தபடி பைலை புரட்டினார். ஜுனியர் வக்கீலிடம் ஏதோ கிசுகிசுத்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஏபிபி, “ எவ்வளவுதான் இழுப்பீங்க. முடிங்க சார். இளம் அதிகாரின்னு கூட பார்க்காம போயிட்டே இருக்கீங்க…” என்றார். ஆனால் எதிர்தரப்பு வக்கீலின் முகம் பைலில் எதையோ தேடிக்கொண்டிருந்தது.

சாட்சிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த அனிருத்திற்கு லேசாக தலை சுற்றுவதுபோல தோன்றியது. உடனே கூண்டுக்கம்பியை பிடித்துக்கொண்டான். இரவு முழுதும் பயணம் செய்ததாலும், அரைத்தூக்கத்தாலும் இப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டான். நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களுக்கும் கட்டிடம் ஆடுவது அப்போதுதான் தெரியவந்தது. சில நொடிகளில் முழு கோர்ட்டும் ஆடுவது புரிந்தது. நீதிபதியின் முன் வைக்கப்பட்டிருந்த டம்ளர் ஆடியது. கடிகாரமும், மின்விசிறியும் ஆடின. அதுவரை ஏதோ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நிலநடுக்கம் வந்தது அப்புறம்தான் புரிந்தது. ஐயோ, ஐயோ என எல்லோரும் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினார்கள். வெளியே செல்ல ஒரே வழிதான் இருந்ததால் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு போகவேண்டி இருந்தது. இடையில் டவாலி,  ‘ஜட்ஜ் அய்யா போகணும், ஜட்ஜ் அய்யா போகணும், வழிவிடுங்க’ என்றார். ஆனால் யாரும் அதைக்கேட்கவில்லை. யார் முன்னால் போவது என்பதிலேயே குறியாக இருந்தார்கள். இடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் ஒருவழியாக வெளியே போய்ச்சேர்ந்தார்கள். மற்ற அறைகளிலிருந்தும் மக்கள் வெளியே ஓடி வந்தார்கள். கட்டடங்களுக்கு இடையே இருந்த வெட்டவெளியில் ஏராளமான பேர் குழுமி விட்டார்கள். அதனால் அங்கும் தள்ளுமுள்ளுவில் இருந்து யாராலும் தப்பிக்க முடியவில்லை.

அங்கிருந்து கோர்ட் கட்டடங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவை ஒரு இடைவெளிக்குப் பிறகு நன்றாக குலுங்கின. சிலர் அது ஒரே நிலநடுக்கம் என்றும், சிலர் இப்போது வந்தது இரண்டாவது நிலநடுக்கம் என்றும் அபிப்பிராயம் சொன்னார்கள். ஏதாவது சேதாரம் ஆகியிருக்கிறதா என பேச்சு எழுந்தது. கட்டடத்தைப் பார் விரிசல் விழுந்திருக்கு என்று ஒரு குரல் சொன்னது. இது அந்த கால கட்டடம். முன்னிருந்தே விரிசல் இருக்குன்னு இன்னொரு குரல் சொன்னது. எல்லோரும் பயந்துபோய் நின்றுகொண்டிருந்தார்கள்.

நிலநடுக்கம் நின்று அரைமணி நேரம் ஆகியிருக்கும். அதற்கு பிறகு எந்த நடுக்கமும் வந்த மாதிரி தெரியவில்லை.  எல்லோரும் தங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு நேரத்திற்குள், நீதிபதிகள் ஒரு குழுவாகவும், மூத்த வக்கீல்கள் ஒரு குழுவாகவும், இளம் வக்கீல்கள் இன்னொரு குழுவாகவும் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அனிருத் சுற்றிப்பார்த்தான் அவனுக்கு தெரிந்த முகம் ஒன்றுகூட இல்லை. நாலாபக்கமும் பார்த்ததில் தன்னிடம் விசாரணை செய்த ஏபிபியும் மூத்த வக்கீலும்கூட யாரென்று அவனுக்கு புரியவில்லை. பார்ப்பதற்கு எல்லோரும் ஒன்றே போல தெரிந்தார்கள். அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. 

பயம் அடங்கி சிலர் கோர்ட்டுக்குள் போகத் தொடங்கினார்கள். அங்கங்கு கீழ்நிலைப் பணியாளர்கள் முதலில் போனார்கள். சில கிளர்க்குகளும், பிஏக்களும் தங்கள் அறைக்குள் நுழைந்தார்கள். எல்லோரும் போகவே அவர்களைத் தொடர்ந்தவாறு அனிருத்தும் உள்ளே போக எத்தனித்தான். தான் வந்த கோர்ட்டுக்கு உள்ளே எட்டிப்பார்த்தான். எல்லோரும் ஓரிடத்தில் குழுமி இருந்தது கண்ணில் பட்டது. அறையின் சுவர்கள் விரிசல்களோடு கோணலாக தெரிந்தன. பயத்தோடு மேலே அண்ணாந்து பார்த்தால் மிருகத்தின் வெடித்த வயிறுபோல கூரை கீழிறங்கி தொங்கியது. நீதிபதியின் முன்னால் இருந்த மேசை, அந்த மேடையில் இருந்து யாராலோ தள்ளப்பட்டது போல முன்பக்கமாக கவிழ்ந்து கிடந்தது. அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் விழுந்து கிடந்தன. கிளாஸ் டம்ளர் கீழே விழுந்து  நொறுங்கிக்கிடந்தது. சாட்சிக்கூண்டும்கூட சாய்ந்து கிடந்தது. அடுத்து என்ன என்பதுபோல எல்லோரும் நீதிபதியையே பார்த்தார்கள். அவரது முகம் அதுவரை இருந்ததைவிட மேலும் இருண்டுபோய் இருந்ததை அனிருத் கண்டான்.

logo
Andhimazhai
www.andhimazhai.com