ஓவியம்: பி.ஆர்.ராஜன்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்

சமையல்

என்னடே ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீக, நான் உன்னையத்தான்டா முருகா எதிர்பாத்தேன், இவன் எப்ப உன்ட்ட ஒட்டிக்கிட்டான்'' வாயிலிருந்த வெத்தல எச்சியை கொப்பளித்துத் துப்பிவிட்டு இடது கையால் வாயைத் துடைத்துக் கொண்டே அருணாசலம் பிள்ளை கேட்கும்பொழுது, முருகனும், மணியும் அவர் முன்னால் பவ்யமாக நின்று கொண்டிருந்தார்கள்.

‘‘என்னடே கேக்கேன்ல''

‘‘இல்லங்க அய்யா, இப்ப, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் எல்லா விசேஷத்துக்கும் போறது வர்றது''

‘‘அதாண்டா கேக்கன். எப்படா சண்ட விலகி சமாதானம் ஆனீங்கன்னு''

‘‘அது ஒரு வருஷத்துக்கும் மேல இருக்குங்க அய்யா''

‘‘அப்ப உங்க தொசுக்கு மீனாட்சி எங்கே? ரெண்டு பேருக்கும் ஆகாமப் போனதே அவளால தானே'' - முதலாளி மீனாட்சியைப் பற்றிக் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை. முருகனும், மணியும் பேசாமல் நின்றார்கள்.

‘‘அவளே சிவப்புக் கொடி காட்டினா. அவளே இப்ப வெள்ளைக்கொடி காட்டீட்டாளாக்கும். கூடக் கூட்டிக்கிட்டு வந்திருந்தா, சிவப்பு வெள்ளை, பச்சைண்ணு நல்லா இருந்திக்கும் அல்லவா பாக்கதுக்கு' மீனாட்சியைப் பற்றிப் பேசப் பேச அருணாசலம் பிள்ளை முகமும் கண்ணும் மினுங்கியது.

முருகனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் பக்கத்தில் இருந்த தண்ணீர்ச் செம்பையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘‘இவ்வளவு நடந்துருக்கு. ஒரு பயபுள்ளையும் எங்கிட்ட சொல்லலியே, சரி சவத்த விடு, நல்லா இருந்தாச் சரி''

‘‘அய்யா கூப்பிட்டு விட்டீகன்னு மொட்டையன் சொன்னான்''

‘‘ஆமா, ஒரு விசேஷம், சமைக்கத்தான் வேற என்ன''

‘‘அய்யா என்ன விசேஷம், தெரிஞ்சுக்கலாமா?' முருகன் கேட்க

‘‘ஏன் என்னன்னு சொன்னாத்தான் துரைமார்க சமைப்பீகளோ''

‘‘அதில்லங்கையா, என்ன விசேஷம் எத்தனை பேர்ன்னு தெரிஞ்சாத்தானே ஆள் சேக்க வைக்க தோதா இருக்கும்''

‘‘அதுவும் சரிதான்'' என்று குனிந்தவர், ‘‘மீனாட்சிய விட்டிராத டே . அவ பக்கத்தில நிக்காட்டா உனக்கு ஒண்ணும் ஓடாது'' அருணாசலம் பிள்ளை மீண்டும் வெத்தலப்பெட்டியை திறக்கத் தொடங்கினார், கையில் எடுத்த முதல் வெத்திலையை, தனது

பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து தொடையில் போட்டுக் கொண்டு துடைத்துவிட்டு, காம்பைக் கிள்ளத் தொடங்கினார். கையை விட்டு துளாவும் போது ஒரு சுருள் பாக்குதான் வந்தது, ‘‘எலே மணி சட்டுன்னு செட்டியார் கடைக்குப் போய், நான் கேட்டேன்னு ஒரு அஞ்சு ரூபாய்க்கு சுருள் பாக்கு வாங்கிட்டு ஓடியாறயா'' என்றார்.

மணி சரியென்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாகச் செட்டியார் கடை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனான்.

அவன் திரும்பிவந்தபோது முருகன் மட்டும் நின்று கொண்டிருந்தான், பிள்ளைவாளைக் காணோம், ஒரு வேளை அட்வான்ஸ் எடுக்க உள்ள போயிருப்பாரோன்னு சந்தேகத்தோட ‘‘எங்க அவாளைக் காணோம்'' என்று முருகனைக் கேட்க, ‘‘தெரியல அம்மா கூப்பிட்டாங்கன்னு உள்ளே போனாக, நான் காத்துக் கிட்டு இருக்கேன்'' முருகன் சொல்லி முடிக்கவும் அருணாசலம் பிள்ளை உள்ளேயிருந்து வரவும் சரியாக இருந்தது.

மணி, பாக்குப் பொட்டலத்தை நீட்டினான். பிள்ளை அதை வாங்கிக் கொண்டு,

‘‘சரி முருகா சொல்லுடே'' என்றார்.

‘‘அய்யா நீங்கதான் சொல்லணும்''

‘‘ஆமடே, அம்மாவை கலந்திட்டுதான் வாறேன், ஐப்பசி மாசம் பத்தாம் தேதிதான் விசேஷம், வெளிநாட்டில இருந்து பொண்ணும் பையனும் வாறாக, பொண்ணு வயித்துப் பேத்திக்கு சடங்கு வைக்கணும், இப்ப நீ சொல்லு''

முருகன் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன நோட்டை எடுத்து பார்த்துவிட்டு, ‘‘சரிங்க ஐயா, செஞ்சிரலாம், எத்தனை பேர் வருவாக'' என்றான்.

‘‘ஒரு நூறு பேர் வருவாகன்னு வச்சுக்கையேன்''

‘‘மத்தியான சாப்பாடு மட்டுமா''

‘‘இல்லடே, காலைக்கு ஐம்பது பேர், ரவைக்கு ஐம்பது பேர், மதியத்துக்கு நூறு பேர், மொத்தம் இருநூறு பேருக்கு அன்னைக்கு நீங்க சமைக்கணும்''

‘‘அயிட்டமெல்லாம் என்னன்னு சொன்னா, நாங்களும் கரெக்டா, சொல்லத் தோதா இருக்கும்''

‘‘அதெல்லாம் நமக்கெங்கடா தெரியுது, ஒண்ணு செய்ங்க, ரெண்டு பேரும் மூணு வேளைக்கு என்ன போடலாம், எவ்வளவு செலவாகும்ன்னு பேப்பர்ல்ல, எழுதிக் கொண்டாந்து பொழுது சாய எங்கிட்ட கொடுங்க, பேசி முடிவு எடுப்போம், என்ன நான் சொல்றது''.

முருகனுக்கும் மணிக்கும் கொஞ்சம் உற்சாகம் வர, சிரித்துக் கொண்டே.

‘‘சரிங்கய்யா சாயங்காலம் வர்றோம்'' என்றார்கள்.

‘‘சரி நல்ல அயிட்டங்களா போடுங்க, செலவெல்லாம் பாத்துக்குவோம்''

‘‘அய்யா, மண்டபம், எந்த மண்டபம்''

‘‘அது எதுக்குடே''

‘‘இல்லங்கய்யா, சில அயிட்டங்கள் செய்யணும்ன்னா சில மண்டபங்கள்ல்ல வசதி இருக்காது, மண்டபம் தெரிஞ்சா, அதுக்குத் தகுந்த மாதிரி அயிட்டங்களை லிஸ்டல போடலாமன்னுதான்''

‘‘டே முருகா, உன் சேக்காளி விவரமாத்தாண்டா இருக்கான், உன் மச்சினனா?''

‘‘ஆமங்கய்யா, ஒண்ணுவிட்ட தங்கச்சியை கல்யாணம் பண்ணியிருக்கான்''

‘‘ஒண்ணுவிட்ட தங்கச்சியைக் கட்டினவன் என்கிறதில் மச்சினன் முறை சரிதான். இந்த மீனாச்சி விஷயத்தில கொஞ்சம் முறை தப்புதே'' என்று மணியைப் பார்த்துச் சிரித்துவிட்டு ‘‘இந்த விஷயத்தில முறை கிறையெல்லாம் பார்க்கமுடியுமா?'' என்று லேசாகக் கண்ணடித்தார். மணி முருகனைப் பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டான்.

‘‘நம்ம மண்டபந்தாண்டா, அது போதாது?''

‘‘நூறு பேருக்கு அது எதேச்சங்கய்யா, சரி சாயங்காலம் வர்றோம்ய்யா''

‘‘கிளம்புங்க, ஒரு அஞ்சு மணிக்கு வந்திருங்க''

இருவரும் வணக்கம் வைத்துவிட்டுப் புறப்பட, பிள்ளை வெத்திலப் பெட்டியை கக்கத்தில்

இடுக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

ஆனி மாசத்துக்குப் பிறகு ஒரு ஆர்டர் சாப்பாடும் வரல, விசேஷமும் வரல, முருகனுக்குப் போட்டியா இப்ப ஊர்ல நாலைஞ்சு சமையக்காரங்க உருவாகீட்டாங்க, எல்லாம் முருகன்கிட்ட நின்னு சமையல் கத்துக்கிட்டவங்கதான், தனித் தனியாப் போய் இப்ப கொஞ்சம் பொழைச்சுக்கிட்டு இருக்காங்க. போட்டி அதிகமானதால ரேட்டும் கொஞ்சம் அப்படி இப்படின்னு ஏத்த இறக்கமா போச்சு, ஆர்டர் கிடைச்சாப் போதும்கிற நிலைமைக்கு இறங்கி வர ஆரம்பிச்சிருச்சு.

இந்த மணியும் மச்சினன்னு பார்க்காம பிரிஞ்சு போனவன்தான், தனியா சமாளிக்க முடியாம திரும்பி முருகன்கிட்ட வந்திருக்கான். ஆனா எப்ப வேணாலும் தனியாப் போயிருவான்னு முருகனுக்கும் தெரியும், சரி இருக்கிறவரை இருக்கட்டும்ன்னு சேர்த்துக்கிட்டான். அவன் தனக்காக இருக்கானா, மீனாட்சிக்காக இருக்கானா, தெரியலை. அது எப்படியும் போகட்டும். இப்ப ஆளும் கிடைக்க மாட்டேங்குதில்ல.

தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலின் மேட்டுக்கரையில் வளர்ந்து படர்ந்து நின்ற ஆலமரத்தின் மூட்டில் தன் ஆட்கள் எல்லோரும் இருக்க, முருகன் அருணாசலம் பிள்ளை வீட்டு விசேஷ ஆர்டரைப் பத்தி விவரிக்கத் தொடங்கினான்.

முத்தம்மாளும், மீனாட்சியும் வரவில்லை. முருகனுக்கு மீனாட்சி ஏன் வரவில்லை என்று நேரடியாகக் கேட்கத் தயக்கம். மீனாட்சியை மட்டம் தட்டுவது போல, ‘‘இந்த மூதி முத்தம்மாவை எங்கே காணோம்? அந்த மூதேவி கொடுக்கைப் பிடிச்சுக்கிட்டே அலையுதா போல'' என்று மீனாட்சி பெயரைச் சொல்லாமல் கேட்டான்

கருப்பன்கிட்ட கேட்டதற்கு, ‘‘ தகவல் சொல்லியாச்சு. ரெண்டையும் காணும்ன்னு'' சொல்லிட்டு என்னவோ வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டான். அவன் என்ன முனகுகிறான்னு முருகனுக்குத் தெரியும். இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், ‘‘சொல்லிட்டேல்ல விடு கழுதைகள் வந்தா வருதுக. இல்லேண்ணா வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்'' விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டான். இதுவே ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்த காலமென்றால், கால்ல சதங்கை கட்டின ஆட்டக்காரனைப் போல வாயாலேயே நாட்டியம் ஆடியிருப்பான். காது கொடுத்துக் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளாலேயே திட்டித் தீத்திருப்பான். ஆனா கடைசி நேரத்தில வந்தால் கூட ரெண்டு பேரையும் சேர்த்துக்குவான்.

மணிக்குத் தெரியும் அவனுக்கு மீனாட்சி இல்லாம இருக்க முடியாதுன்னு. வேலை செய்றது முழுவதும் முத்தம்மாதான். மீனாட்சிக்கு முருகனோட இருக்கவே சரியா இருக்கும். இப்ப வேலையில்லாத நேரத்தில இதை எல்லாம் கிளப்ப வேண்டாம்ன்னு அமைதியாக இருந்தான்.

மணிக்கு நெருக்கடி ஜாஸ்தி. டிசம்பர் மாசம் அரைப் பரீட்சைக்கு முன்னால மகளுக்கு பள்ளிக்கூடத்தில பீஸ் கட்டணும், இப்பவே குழுவுக்குக் கட்ட பணம் இல்லேன்னு வீட்ல கத்திக்கிட்டு இருக்கா. சமையல், அட்வான்ஸ் கிடைச்சா, குழுக் காசுக் கொடுத்துட்டு அவ வாய அடைச்சிறலாம். சம்பளம் கிடைக்கும் பொழுது ஸ்கூல் பீஸ் பிரச்சினை முடிஞ்சுரும் அப்புறம் தை மாசம் கொஞ்சம் பிஸி ஆயிரலாம்ன்னு, அமைதியாக இருந்தான். ஆலமர மூட்ல உட்கார்ந்து, ஒரு குச்சியால் மண் தரையில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான். ‘மீ'  என்று அவனை அறியாமல் எழுதியிருப்பதை அவசரமாக அழித்தான். லேசா கத்தான் குச்சியால் கீறி இருந்தாலும் மண் வாசனை வந்தது

இசக்கி, கொஞ்சம் முன்னால் வந்து ‘‘அந்த அய்யா ஒரு மாதிரி. நம்ப முடியாது. கடைசி நேரத்தில ஆளை மாத்தினாலும் மாத்தீருவாரு, கையோட அட்வான்ஸ் வாங்கினாத்தான் உண்டு. அட்வான்ஸ் வாங்கியாச்சா?'' என்றார்.

‘‘யோவ் உம்ம வியாக்கினத்த எல்லாம் வாயை மூடி வச்சுக்கிட்டு நாஞ் சொல்றத கேளும்'' ன்னு இசக்கியின் வயதைக் கூட மனதில் கருதாமல் சத்தம் போட்டு நிறுத்த, கூட இருந்த பரமுவும், சின்ன முருகனும் முருகனுக்கு ஒத்து ஊத இசக்கி பின்னோக்கி நகர்ந்து தன் பழைய இடத்தில் நின்று கொண்டார்.

‘‘ஏலே எனக்குத் தெரியாதா அந்த அய்யாவைப் பத்தி? அட்வான்ஸ் கிட்வான்ஸ்ன்னு கேட்டா வேலை போயிறக் கூடாதேன்னுதான், பொத்திக்கிட்டு வந்திருக்கேன், அப்படி அட்வான்ஸ் வாங்கியிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா, இங்க உட்கார்ந்து இருக்கான்ல மச்சினப் பிள்ளை அவனையும் கேளுங்க, என்ன நடந்துச்

சுன்னு'' அவன் பேசி முடித்த போது அவனுக்கு இருந்த பதட்டமே அவனோ, மணியோ அட்வான்ஸ் வாங்கவில்லைன்னு எல்லோருக்கும் தெரியவைத்தது. எல்லோரும் கொஞ்சம் உற்சாகமிழந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள்.

அமைதியாக இருந்த மணி, ‘‘சரி எல்லாரும் ஐப்பசி ஒம்பது, பத்து ரெண்டு நாளும் குறிச்சு வச்சுக்கங்க, நாங்க லிஸ்ட் போட்டு அய்யா சரீண்ணு வார்த்தை கொடுத்ததும், அட்வான்ஸ் வாங்கிட்டு உங்களக் கூப்பிடுறோம் வாங்க, வேற எதும் சொல்றதுன்னா சொல்லிட்டு கிளம்புங்க'' என்றான்,

இப்படித் தன்னை முந்திக் கொண்டு மணி பேசினது கொஞ்சமும் முருகனுக்குப் பிடிக்கலேன்னாக் கூட, மச்சினனை என்ன செய்ய என்று அடக்கிக் கொண்டான். மணி தனியாக சமைக்கும் பொழுது எப்படியோ, முருகனுடன் சேர்ந்து விட்டால் அவன் கைப்பக்குவமே தனியாகத் தெரியும், முருகனுக்கு மணி சளைத்தவனில்லைன்னு மத்தவங்களுக்கும் தெரியும் அதனால் மாஸ்டர் முருகன் சொன்னாலும் ஒண்ணுதான் மணி சொன்னாலும் ஒண்ணுதான்னு கிளம்பத் தயாரானார்கள்.

‘‘சரி அப்படியே அவள்களையும் சொல்லீருங்க, எப்படியும் சுத்து வேலைக்கு ஆள் வேணுமில்ல'' முருகன், மீனாட்சி, முத்தம்மாவைச் சாடையாகச் சொல்ல, மணி அவனுக்குத் தெரியாமல் சிரித்துக் கொண்டான். மணிக்கு மீனாட்சியை உடனே பார்த்தால் தேவலை என்பது போல இருந்தது.

‘‘சரி, மாப்ள, வாறீயா எங்க வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு அந்த லிஸ்ட்டப் போட்டு சாயங்காலம் அந்த அய்யாகிட்ட கொண்டு போய் கொடுத்திறலாம்''

‘‘சரி அத்தான், போகலாம்''ன்னு மணி சொன்னதும் எல்லோரும் கிளம்புவதை ஒரு இலை கூட அசையாமல் ஆலமரம் பார்த்துக்கொண்டு இருந்தது.

 வீட்டுக்குள் நுழையும்பொழுதே, மணி ‘அக்கா, அக்கா'ன்னு குரல் கொடுத்துக் கொண்டே வர ‘‘யாரு தம்பியா, சித்த இரு வர்றேன்னு'' புறவாசல் பக்கமிருந்து குரலும், குரலைத் தொடர்ந்து, கையில் இரண்டு வாழை இலையுடனும் சிவபாக்கியம் நுழைந்தாள்.

இருவரும் கை கால் கழுவ புறவாசல் பக்கம் நகர்ந்தார்கள். இலை நறுக்கின காம்பிலிருந்து பிசுபிசுப்பாக ஈரம் கசிந்து அந்த இடமே வாழையின் வாசனையால் நிரம்பியிருந்தது. வாய் கொப்பளிக்க வைத்திருந்த தண்ணீரைக் கன்னத்தில் ஒதுக்கிக் கொண்டு அப்படியே முருகன் பார்த்துக் கொண்டிருந்தான். வாழை மூட்டுப் பக்கம் போய்க் கொப்பளித்துவிட்டு வாழையை, அவன் உயரத்தில் தடவிக் கொடுத்தான்.

‘‘மாப்ள, என்னத்த லிஸ்ட் போட, எதப் போட்டாலும் அந்த அய்யா, திருப்திப் படப் போறதில்லை, அவர்கிட்ட போய், பேசாம அவரயே சொல்லச் சொன்னா என்ன?''

‘‘அத்தான் நாம எதையோ எழுதிக் கொடுப்போம், நீங்க சொல்ற மாதிரி அவர் மாத்தட்டும், என்ன நான் சொல்றது''

பேசிக் கொண்டே இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள், அப்பப்ப கேட்டுக் கொண்டே பறிமாறிக் கொண்டே சிவபாக்கியமும் கலந்து கொள்ள, சாப்பாடு வேகமாக உள்ளே போய்க் கொண்டிருந்தது.

‘‘நம்ம பிழைப்பு இப்படி ஆயிருச்சே மாப்ள''

‘‘என்ன செய்ய ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காதுல்லா. இன்னைக்குக் குப்புறப் படுத்தா நாளைக்கு நிமிந்து படுக்க மாட்டமா?''

‘‘ரெண்டு பேரும் எல்லாத்திலேயும் கவனமா இருங்க,. அருணாசலம் அய்யா லேசுப் பட்டவரில்லை, நமக்கு இப்ப நேரம் சரியில்லை, இந்த மூணு மாசத்தில ஒரு துஷ்டி வீடு கூட வரல, அடைச்ச கதவைத் தட்டினது மாதிரி வந்திருக்கும் இதையும் விட்றாதீக'' சிவபாக்கியம் சொன்னதும் உண்மைதான்னு ரெண்டு பேரும் தலைக் குனிந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘‘அட்வான்ஸும் கொடுக்காம, முதல்ல நீங்க என்ன ஆகும்னு ஒரு தொகையைச் சொல்லுங்கண்ணு சொல்லுதார்ன்னா அவர் எப்படிப் பட்டவர்ன்னு தெரிஞ்சுக்கங்க, அவர் போக்கிலயே போய், வேலையை கைப்பத்தப் பாருங்க'' மீண்டும் சிவபாக்கியம் சொல்ல இருவரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள்.

‘‘சொல்லுதனேன்னு தப்பா நினைக்காதீங்க. தற்செயலா அவள் அந்தப் பக்கம் யதேச்சையா வந்த மாதிரி மீனாச்சியையும் கூட்டிக்கிட்டுப் போங்க. நான் எல்லாத்தையும் யோசிச்சுதான் சொல்லுதேன்'' முருகனின் சம்சாரம் மணி முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

முருகன் அதைக் கேட்காதது போல அண்ணாந்து தண்ணீரைக் குடித்து காலி டம்ளரை வைத்துவிட்டு எழுந்திருந்தான்.

‘இலை கிடக்கட்டும். நான் எடுத்துக்கிடுதேன்'' என்று சிவபாக்கியம் சொன்னதும் கைக்குள் சுருட்டின இலையை மணி தரையில் வைத்தான். அவனுக்கு சிவபாக்கியம் அக்காவை ரொம்பப் பிடித்தது.

முருகனும் மணியும் பேப்பர் பேனா சகிதம் திண்ணையில் வந்து உட்காரவும், பிச்சுமணி வந்து சேர்ந்தான். பிச்சுமணிக்கு இன்னொரு பேர்தான், மொட்டையன்.

‘‘என்ன அய்யாவைப் பார்த்தாச்சா''

‘‘ஆமா அவர் வேலையைத்தான் பாத்துக்கிட்டு இருக்கோம்''

‘‘சரி நானும் மழை பெய்யாட்டாலும் தூத்தலாவது விழாதாண்ணுதான் டே பார்த்துக்கிட்டுக் கிடக்கேன், கொஞ்சம் கவனிச்சுங்கங்க'' சொல்லிக் கொண்டே வேகமாக கிளம்பினான், இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

‘‘அத்தான், நாம கடவுளுக்குப் பொதுவா, நமக்கும் வஞ்சகமில்லாம, அவுகளுக்கும் வஞ்சகமில்லாம் ஒரு லிஸ்ட்ட போடுவோம். இது இதுக்கு இவ்வளவு, இன்னின்னாருக்கு இவ்வளவு சம்பளம்னு சொல்லுவோம். நெஞ்சுக்கு மேலேயும் போகாம. வயித்துக்குக் கீழேயும் போகாம ஒத்துக்கிட்டு அட்வான்ஸ் வாங்கீருவோம்''

 ‘‘எல்லாம் சரிதான் அவரு அயிட்டம், அயிட்டமா கேட்பாரு மாப்ளே''

 ‘‘அதெல்லாம் பாத்துக்கலாம். இப்ப ரெண்டு பேரும் பேசினது வச்சுக்கிட்டு, மையமா நான் ஒண்ணு போட்டு வைக்கேன். எப்படியும் பத்து எழுதினா எட்டை அவரு மாத்தப் போறாரு. இதுக்கு எதுக்கு அனாவசியமா நாம மண்டையை உடைக்கணும் அத்தான்?''

 ‘‘சரி லிஸ்ட்டப் போட்டு வச்சுட்டு வீட்டுக்குப் போயிட்டு வா ஒரு அஞ்சு மணி வாக்கில அய்யாவைப் போய் பாத்துப் பேசி, அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருவோம்''

‘‘சரி, அத்தான் நீங்க கொஞ்சம் தலையச் சாய்ங்க, நான் போயிட்டு வாறேன், அக்காகிட்ட சொல்லீருங்க''ன்னு மணி கிளம்பினான்.

சாயங்காலம் சரியாக அஞ்சுமணிக்கு அருணாசலம் பிள்ளை வீட்டு கேட்டுக்குள் நுழையும் போது, பிள்ளைவாள் திண்ணையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார். கேட் திறக்கிற சத்தம் கேட்டு கண்களைத் திறந்து பார்த்து, ‘‘வாங்கடே, சமையல் புலிகளா, உங்களுக்காகத்தான் இங்கன உக்காந்திருக்கேன், ஊர்ப்பட்ட வேல கிடக்கு''

‘‘வணக்கம் அய்யா''

‘‘சரி லிஸ்ட்டக் கொடு பாக்கட்டும்''

தயாராக இருந்த லிஸ்டை மணி எடுத்து நீட்ட, அருணாசலம் பிள்ளை கண்ணாடியைத் தேடி எடுத்து கண்களில் மாட்டிக் கொண்டு படிக்கத் தொடங்கினார்.

முருகனும் மணியும் கண்களில் ஒரு எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

‘‘என்ன முருகா, நீயும் உன் மச்சினனும் சேர்ந்த பழைய அயிட்டங்களாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க, புதுசா ஏதாவது போடலாமில்ல''

‘‘இல்லங்கையா, இதுக்கு ஒரு தொகை தெரியும். புதுசுன்னா செஞ்சப்பறம்தான் சரியான தொகை தெரியும், அதான் இப்படிப் போட்டோம்''

‘‘அப்படியா, சரி சொல்லு, மொத்தம் எவ்வளவு வரும்?''

‘‘காலைல ஐம்பது இலை, மதியம் நூறு பேருக்கு சாப்பாடு, சாயங்காலம் வீட்டுல இருக்கிறவகன்னு ஒரு முப்பது பேருக்கு, ரவைக்கு ஒரு ஐம்பது பேருக்குன்னு போட்டிருக்கோம், பாத்திர வாடகை, எங்க சம்பளம்ன்னு தனிங்க அய்யா''

‘‘சரிடே மொத்தத்தை சொல்லு''

‘‘அய்யா, காலைக்கு தலைக்கு ஐம்பது ரூபா, மதியத்துக்கு நூறு, சாயங்காலம் தலைக்கு முப்பது ரூபா, ராத்திரிக்கு திரும்பவும் ஐம்பதுன்னு கணக்குப் போட்டிருக்கோம்''

‘‘தொகையைச் சொல்லுடே''

‘‘அய்யா, சாப்பாட்டுக்கு பதினைந்தாயிரத்து தொளாயிரம், பாத்திர வாடகை ஒரு ஏழாயிரத்து ஐநூறு, அப்புறம் எங்க கூலி பத்தாயிரம், மொத்தமா முப்பத்து மூணாயிரத்து முன்னூறு வருதுங்கய்யா''

‘‘அதிகமா தெரியுதே, முருகா, மணி''

‘‘இல்லங்கய்யா உங்களுக்குத் தெரியாதா பலசரக்கும், காய்கறியும் என்ன விலை விக்குதுன்னு, அப்புறம் நாங்க இலை எடுக்கிற ரெண்டு பேரையும் சேர்த்து எட்டு, பத்து பேர் நிப்போங்கய்யா, உங்களுக்குத் தெரியாதா''

‘‘ஏண்டா ஹோட்டல்ல சொன்னாலே மதியம் நூறு ரூபாய்க்கு சாப்பாடு கொண்டு வந்து தந்துருவான் நீங்க நூறு ரூபா கேட்டா எப்படி''

‘‘அப்படி இல்லங்கய்யா, மொத்தம் எத்தனை அயிட்டம், அளவு இதெல்லாம் பாக்கணுமில்ல. அதையெல்லாம் தாண்டி ருசிண்ணு ஒண்ணு இருக்குல்லா. அது தானே உசத்தி. ருசிக்கு ரேட் பேச முடியாதுல்லா'' முருகனுக்கு ஹோட்டல் சாப்பாட்டோடு ஒப்பிட்டுச் சொன்னதும் மனது முட்டிப் பேச்சுத் ததும்பி விட்டது.

பிள்ளைவாள் மீண்டும் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். மணி மச்சினனைப் பார்த்து கண்ணைக் காட்ட, முருகன், ‘‘அய்யா அதை வேணா முப்பது ரூபான்னு ரவுண்டாப்

போட்டுக்கலாம் அய்யா'' என்றான்.

‘‘முப்பதுக்கும் முப்பத்து மூணுக்கும் என்னடே பெரிய வித்யாசம், நான் பதினஞ்சுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன், நீங்க இன்னும் அங்கேயே நிக்கீறீங்க''

‘‘அய்யா வேலைன்னு வந்துட்டா, நேரம் காலம் பாக்க மாட்டோம், மணிக்கணக்கு, சாப்பாடு பத்தலேன்னா திருப்பி சமைக்க இதுக்கெல்லாம் சுணங்க மாட்டோம், அதோட வீட்டு விசேஷம்ன்னு எப்பவாதுதானய்யா வருது வருஷம் பூரா எங்களுக்கு யாருங்கய்யா வேல கொடுக்குறா''

‘‘இப்படியே பேசிக்கிட்டு இருந்தா விடிஞ்சிரும். நான் அம்மாகிட்ட, என் மககிட்ட எல்லாம் கலந்துகிட்டு அடுத்த வாரம் சொல்றேன்'' அருணாசலம் பிள்ளை துண்டை இழுத்து மேலே போர்த்திக்கொண்டு எழுந்திருந்தார்.

முருகன், மணி இரண்டு பேருக்குமே அடுத்த வாரம் சொல்கிறேன் என்பது பதற்றத்தைத் தந்தது

‘‘சரிங்கய்யா, ரேட்டு இருக்கட்டும், இப்ப கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்தீங்கன்னா..'' முருகன் குரல் தரையோடு தரையாகத் தணிந்தது.

மதியம் சாப்பிடும் போது, இந்த வேலையை விட்டிராதீங்க. வேணும்னா மீனாட்சியைக் கூடக் கூட்டிக்கொண்டு போங்க என்று சிவபாக்கியம் சொன்னது நினைவுக்கு வந்தது.

‘‘அட்வான்ஸ் என்னடே அட்வான்ஸ், நான் என்ன ஓடியா போகப்போறேன், எல்லாம் பேசி முடிச்சுட்டு அப்புறம் பாக்கலாம்'' என்று பக்கத்தில் இருந்த வெற்றிலைப் பெட்டியையும் கையில் எடுத்தார்.

முருகனுக்கும் மணிக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

குழுவுக்குப் பணம் கட்டணும் என்று வீட்டு அம்மா புலம்பல் ஞாபகம் வந்தது. இவர்கள் அட்வான்ஸ் வாங்கி வருவார்கள் என களத்து மேட்டு டீக்கடையில் கருப்பன், இசக்கி, பரமன், சின்ன முருகன், முத்தம்மா மற்றும் மீனாட்சி எல்லோரும் உட்கார்ந்திருப்பார்கள். வந்தவுடன் வடையும் டீயும் சாப்பிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் என்று தவித்தது.

‘‘வேற என்னடே.. எதுக்கு நின்னுக்கிட்டே இருக்கிய, புறப்படுங்க'' என்ற அவர் முகத்தையே முருகன் பார்த்தான். ருசியைப் பற்றிக் குறைத்துச் சொன்னது தொண்டைக்குள் கசந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டே சொன்னான்

‘‘அய்யா வீட்டுக்கு இப்படி அட்வான்ஸ் வாங்கப் போறோம்னு சொன்னோம். நானும் அய்யாவைப் பார்க்க வாரேன்னு மீனாட்சியும் சொன்னா''

சொல்லிவிட்டு அவர் முகத்தையே பார்த்தான்.

அவர் முருகனையும் வாசல் பக்கம் போய், அங்கிருந்த குழாயில் முகம் கழுவிக் கொண்டு இருந்த மணியையும் பார்த்தார். வீட்டுப் பக்கமாகத் திரும்பியிருந்தவர் வெற்றிலைப் பெட்டியைத் திண்ணையில் வைத்தார்.

‘‘ரெண்டு பேரும் போயிராதீங்க. கொஞ்சம் இருங்க. வந்திருதேன்'' என்று உள்ளே போனார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com