ஆழி சேரக் காத்திருக்கும் நதிகள்

முதல் பரிசு ரூ. 10,000 பெறும் கதை
ஆழி சேரக் காத்திருக்கும் நதிகள்
ஒவியம்: டிராட்ஸ்கி மருது
Published on

கடல் காற்று வீசிய திசையில் இருந்தும் ஏதோ சேதி வந்தது போல் இருந்தது மாதேம்மைக்கு. சுளுக்கு பிடித்தது போல காற்று ஒரு முடிச்சு போட்டு நிதானமாய் அடித்தது. கடற்கரை மணலில் உட்கார்ந்து தூரத்து பாய்மரத்தை கண்ணால் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருந்தாள்.

கட்டுமரமும், தூரத்து வெளிச்சத்தில் கப்பலும் தெரிந்தன. நடுக்கடலில் எறும்பு ஊர்வது போல் அந்தக் காட்சி மங்கிப் போய் தெரிந்தது. கப்பல் நகருகிறதா என்று கூடத் தெரியவில்லை.

"எனக்கும் நீச்சலடிக்க கத்துத் தாங்கோ அப்பா." அப்பா சட்டையை பற்றி இழுத்து செல்லம் கொஞ்சி கூத்தடித்தது நினைவில் வந்தது. பிறகொரு நாள் அம்மா ஊருக்கு சென்ற சமயத்தில்  கரையோரத்து அலைகளைத் தொட்டுக்கொண்டு இடுப்பில் கயிறை இறுக்கி, மறுசரத்தை அவர் இடுப்பில் இறுக்கிக் கொண்டு கரையோரத்தில் நீச்சல் அடிக்க பழக்கப்படுத்தினார்.

அம்மாவிற்கு இந்த சரசங்கள் எல்லாம் அவ்வளவு பிடிக்காது. பெண் பிள்ளைகள் இப்படித்தான் என்று அவளாய் ஒரு வடிவத்தை உண்டாக்கி வைத்திருப்பாள். இன்றும் அதே  சிந்தனையில் இருக்கிறாளா என்றும் தெரியாது.

சுருக்குப் பையில் இருந்து கொஞ்சமாய் புகையிலை எடுத்துக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டாள். மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. கையில் ஃபோன் இருந்தால் கூட எடுத்துப் பார்க்கலாம். ஆனால் அதை வைத்துக கொள்ள அவசியமே ஏற்படவில்லை. வானமே இல்லாத ஊருக்கு கூரை எதற்கு ?

அழைக்க ஆளுமற்று, விசாரிக்க சேதியுமற்ற உலகத்தில் அவள் இருப்பின் அடையாளம் அவள் மட்டுமே அறிந்த திறந்த நிலை ரகசியம்.அணிந்திருந்த முக்கால் உயர பாவாடை காற்றுக்கு பறக்காமல் இருக்க சுருட்டி கால் இடுக்கில் பிடித்தபடி கையை தலைக்கு அண்டத் தந்தபடி மல்லாந்து படுத்தாள்.

கடப்பா கல்லைப் போல நல்ல தேகம். அதற்கேற்ப வயதின் மூப்பால் கீழ் சரிந்த மார்பு. முரடாய் தடித்த முடியில் நிறைய நரை தட்டி இருந்தது. கரி பிடித்த வானம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தது. தூண்போல் தடித்த காலில் ஒரு கருப்புக் கயிர் இற்றுப் போய் நெளிந்தது. குடும்பமாய் கடந்து போனவர்கள் எல்லாம் மல்லாந்து கிடக்கும் கருஞ்சிலையாய் அவளை வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

திரும்பிப் பார்த்தாள். இன்னும் சோனாவைக் காணோம். இந்த விடுமுறை நாள்களில் தான் கொஞ்சம் வெளியில் வர முடிகிறது. முன்னெல்லாம் ஞாயிறுகளில் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும், உறங்கி எழுந்து, தலை முழுகி, உடுப்புகளைக் கசக்கிப் போட்டு, மேல் மாடியில் அமர்ந்து தெருவில் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்து நேரத்தை ஒப்பேற்றுவாள். இப்போது ஓய்வைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஓய்ந்து ஓர் இடத்தில் உட்கார்ந்து விடுவோமோ என்று பரிதவித்தாள். அந்த ஓய்வில் கூட உறங்காமல் கிடக்கும் மூளை, இறந்த காலத்தில நின்று கொண்டு இறங்கி வர மறுத்து  ஆர்ப்பாட்டம் செய்யும் கொடுமை, நிகழ்காலத்தில் மூச்சு விட்டுக்கொண்டு, கடந்த காலத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

உரசாத கல்லுக்குள்ளே ஒண்ணுமத்து செத்துப்போன நெருப்புத் துளியாய் அவள் வாழ்க்கையும், அவளைப் போல புலம் பெயர்ந்த எத்தனையோ பேரின் வாழ்க்கையும் அணைந்து போனது.

"ஏ மாதேம்மா, என்ன பண்றே?"  கலகலவென சிரிப்பு சத்தமும், வளையல் சத்தமும் கேட்டது. வேண்டுமென்றே கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போல் வேசம் போட்டாள் மாதேம்மா.

பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தவள் பிடித்து உலுக்கி எழுப்ப, முகத்தை அந்தப் பக்கமாய் திருப்பிக் கொண்டு அழிச்சாட்டியம் காட்டினாள்.

"மாதேம்மா, நான் போகட்டா?" சிணுங்கவும், கண்ணைத் திறந்தவள், கையை தரையில் ஊன்றி எழுந்து அமர்ந்தாள். கருத்த, அந்த தடித்த முகத்தில் அப்படியொரு ஆற்றாமை.

"ஏன் இம்புட்டு நேரம்? காணலைனு நினைச்சுக் கொண்டே இருக்கிறன். "

"இல்லே மாதேம்மா, நான் கிளம்பும் நிமிசத்தில் எனக்கு ஒரு வேலை தந்து உட்கார வச்சுட்டாங்க." இந்தியும் தமிழும் கலந்து பேசிக் கொண்டிருக்க, மாதேம்மா அதில் கவனம் கொள்ளாமல் பக்கத்தில் இருந்த பையைப் பிரித்து உள்ளே இருந்த வட்டலாப்பத்தை எடுத்துத் தந்தாள் ஆசையாக.

சுற்றி வைத்திருந்த காகிதம் எண்ணெய்யில் குளித்து நமுத்துப் போய் இருந்தாலும் பஞ்சு போல் தித்திப்பாய் இருந்ததை ருசித்து மென்றாள்.

"நீங்க செய்ததா?"

"ஓம்."

"இதெல்லாம் இன்னும் நினைப்பில் இருக்கா?" கேள்வி அவ்வளவு துயரத்தை தந்தது மாதேம்மாவிற்கு. ருசியும் மணமும், செயல்பாடும், நாடும், மக்களும் எதுவுமே நினைவில் இல்லை… எதுவுமே மறக்கவும் இல்லை.

நாள்கள் நினைப்பிலில்லை. அப்போது ஆறோ, ஏழோ எதுவோ படிக்கிறாள். முன்னும் பின்னும் குஞ்சும் குருத்துமாய் ஆறு  பிள்ளைகள். அப்பா கடலில் இறங்கி மீன் பிடிக்க போகிறவர்.

மீன் பிடியாள்களின் சிறுத்த தெருவில் ஏகப்பட்ட வயசொத்த பிள்ளைகள். படிப்பு முடிந்து வீடு வந்தால், ஏகப்பட்ட சண்டையும், சல்லும், உறங்க போகும் வரைக்கும் ஒரே வழக்குமாய் இருக்கும்.

திண்ணையில் இருந்து குதிக்கையில் ஒருக்கால் முட்டி சிதறும். மறுக்கால் மண்டை உடையும். இப்போது வலப்பக்க நெத்தியில் பதிந்த தழும்பு முகம் கழுவுகையில் தட்டுப்பட்டால், சோப்போடு சேர்த்து கண்ணீரையும் கழுவி விடுவாள்.

காலம் மனிதர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் நாளில்தான் அவர்களை கஷ்டத்தோடு சேர்த்து வாழவைக்கும். தண்டிக்க முடிவு செய்து விட்டால் நிம்மதியை கையில் தந்து விட்டு, உணர்ச்சிகளை பிடுங்கிக் கொள்ளும்.

சின்ன குடிசைதான். ஓர் ஓரத்தில் கொடி அடுப்புப் போட்ட குசுணி. மீதியுள்ள இடம் அத்தனை பேரும் தலைசரிக்க. ஆறு பிள்ளைகளுக்கும் சேர்த்து ரெண்டு தலையணை தான். அதில் பெருவாரியான இடத்தில் யார் தலையை வைத்துக் கொள்வது என்று போராட்டமே நடக்கும்.

தலையோடு தலை மோதி, கண் அசந்ததும் பிடுங்கிக் கொண்டு அடுத்தாளை  ‘ஓ' வென தூக்கத்தில் அலற விட்டு, அப்பா சாரத்தை கையில் இறுக்கிக் கொண்டு, சரமாரியாய் அத்தனை பேரையும் அடித்து, உறங்கியவர்களையும் எழுப்பி உட்கார வைத்து இருப்பார். கண்ணைக் கசக்கிக் கொண்டு மாறி மாறி காரணம் புரியாமல் அழுவார்கள். அதுக்கும் ரெண்டு மாத்து சேர்த்தி விழும்.

அவர்கள் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்களோ, அல்லது இருக்கிறார்களோ இல்லையோ. எப்போது நினைத்தாலும் அடி வயிற்றில் ஒரு நடுக்கமும், பயமும் கவ்வுமே அது கவ்வியது.

"மாதே மா…"சோனா அழைத்து,  மறுபடியும் நினைப்பில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

"ஏன் சோனா இவ்வளவு நேரம்? நீ வர மாட்டியோனு நினைச்சேன்."

"எப்படி வராமல் இருப்பேன். உங்களைப் பார்க்க வருவேன்," கைகளைப் பிடித்துக் கொண்டாள். அதில் கதகதப்பு இருந்தது. மாதேம்மா ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள். அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கடல் ஆர்ப்பரித்து கை தட்டியது. தேக்கி வைத்த வார்த்தைகள் மனிதரைக் கண்டதும் நீச்சலடித்தன.

 “காலத்தை நம்பாதே. நம்ம வாழ்க்கைனு சொல்லிட்டு நாம எப்படி வாழணும்னு அந்தக் காலம் நம்ம விதிமேல நின்னு சதிராட்டம் போடும்.

நிம்மதியா வாழு, சந்தோசமா வாழுன்னு சொல்றது எல்லாம் பேச்சுக்கு பேச்சு. அந்த நிமிசத்துக்கு எது தேவையோ அது கிடைக்கணும். ஆனால் அதை காலம் தராது. ஏங்கவைக்கும். அடுத்தாளைப் பார்த்து பொறாமைப்பட வைக்கும். எப்போ இது எதுவுமே வேண்டாம்னு தீர்மானிச்சு விலகி நிக்கிறோமோ, அப்போ இந்தா வச்சுக்கன்னு நமக்குத் தரும். அதாலே என்ன பிரயோசனம்?’’ என்பார் அந்தோணி டீச்சர்.

இருட்டுக் கட்டிவிட்டது. சோனா எழுந்து கொண்டாள். அவள் கைகளை பற்றி மாதேம்மாவும் எழுந்து கொண்டாள். நீண்ட நேரமாய் இருப்பில் இருந்ததால் குறுக்கு வலித்தது.

மணலில் இடுப்பசைத்து புதைய புதைய நடந்ததால், வேகத்தை குறைத்தது. திக்கத்த காத்து வீசி, அணிந்திருந்த பாவாடையை குடையாய் பரவ விட்டது. இருவரும் நடந்து நடைபாதைக்கு வந்தார்கள்.

இப்படியொரு நடைமேடையில் தான் சோனாவை முதன்முதலாய் பார்த்ததும். இப்போது விட அப்போது இன்னும் இளவயசில் இருந்தாள். நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்றில் இக்கட்டாய் மாட்டிக் கொண்டு நின்று அழுது கொண்டிருந்தாள்.

ஒவியங்கள்: டிராட்ஸ்கி மருது

என்னமோ சொந்த விசயமென்று எண்ணி ஒதுங்கி உட்கார்ந்து கடலை கொறித்துக் கொண்டிருக்கவும், ஆண்களின் அத்துமீறலும், பெண்ணின் அவலமும் தள்ளி அமர்ந்திருந்த போதும் துல்லியமாய் தெரிந்தது.

அவர்களைச் சுற்றி கூட்டமும் சேர, மாதேம்மையும் எழுந்து அவர்களை நோக்கிப் போனாள். கூட்டத்தில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

எப்படியோ போலீசும் வந்து சேர்ந்தது. பெண்ணை வலிக்க கையாண்டவர்களை விட்டுவிட்டு, பெண்ணை வலிக்க வைக்கவே கேள்வியை செலுத்தினார்கள்.

 “யார் நீ? இங்கேக்க என்ன வேலை? விபச்சாரம் செய்ய வந்தனையோ?” சில சமயம் அழுகை நாம் தவறு செய்து விட்டதாய் நமக்கு எதிராய் சாட்சி சொல்லும்.

சுத்தி நின்றவர்கள் அவளைக் கத்திப் பார்வை பார்த்தார்கள். சிலபேர் அந்த கத்தியில் தங்கள் உணர்ச்சிகளை வெட்டிக் கொள்ள காத்திருக்க, மாதேம்மைக்கு இங்கே அகதியாய் புலம் பெயர்ந்து வந்து, கூடாரத்துக்கு கூடாரம் இந்த துயரத்தை அனுபவித்த நாட்கள் நினைவு வந்தன. பேசாத கூட்டத்துக்கு நடுவே அவள் மட்டுமே வாய் திறந்தாள்.

 “அந்தப் பொண்ணு ஒண்ணும் செய்யல. அவிகள் எல்லாரும் தான் தப்பா கதைச்சுக்கொண்டு வந்தாங்கள்," எல்லோர் பார்வையும் மாதேம்மையின் மீது படிந்தது.

"யார் நீங்க?"

"அவளோட ஏஜென்டா இருக்கும்." என்றான் ஒருத்தன்.

அழுகையை நிறுத்திவிட்டு புரிந்தும் புரியாமலும் மாதேம்மையை பார்த்தவள், அழுதுகொண்டே ஓடி வந்து கட்டிக் கொண்டாள். மாதேம்மை தைரியமாய் பேசியதும் மற்றவர்களும் நிமிர்ந்து பேச, வம்படி செய்தவர்கள் பயந்தபடி நகர்ந்தோடி விட, போலீசும் சோனாவை இரண்டு வார்த்தை அரட்டிவிட்டு விலகிப் போனது. கூட்டமும் அவரவர் அபிப்ராயங்களை தூக்கிக் கொண்டு அவரவர் திசையில் ஒதுங்க, ஒற்றை விளக்கு கம்பத்திற்கு கீழே இருவரும் நின்றார்கள்.

"ஆரு நீ ? உன்ற பேர் என்ன ?"

"சோனா. ராஜஸ்தானி."

"இங்கே சோலியாய் வந்தினியோ ?"

"ஆமாம். ரெண்டு வருசமா இங்கேதான். சவுகார்பேட்ல எங்க ஊர்க்காரர் ஒருத்தர் வீட்ல பேபி பார்த்துக்க இருக்கேன். பீச் பார்க்க வந்தேன். தனியா இருக்கேன்னு கலாட்டா பண்றாங்க." தமிழும், இந்தியும் சரிவிகிதமாய் கலந்து பேசினாள்.

தனிமை இப்போதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாகி விட்டது. கேலிக்கும், சிரிப்பிற்கும், அத்து மீறலுக்கும், அதிகாரத்திற்கும் ஆட்படுவதாய் தனிமை ஆகிவிட்டது.ஆனால் இதைச் செய்பவர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் நிற்கும் மிருகங்கள்.

சோனாவை கைப்பிடித்து அழைத்து வந்து பஸ் ஏற்றி விட்டாள். தின்ன வாங்கி வைத்திருந்த பழத்தை கையில் வைத்து அழுத்தினாள் மாதேம்மை. அன்று இரவு மனசு புத்துணர்வாய் இருந்தது.பயன்பட்டோம்' என்பதால் இறுக்கிப் பிடித்திருந்த சங்கிலியின் கணு’வொன்று விடுபட்டது போல் கனம் குறைந்ததாய் உணர்ந்தாள்.

பயன்படாத வாழ்க்கை வாழ,இந்த உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தான் நாடு விட்டு நாடோடியாய் ஓடி வந்தாள்.இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, இருந்ததற்கான அடையாளமும் இல்லாமல்,யாரோவாகி,எங்கேயோ தெறித்து விழுந்து, முளைக்க வழியத்த அவிச்ச விதை போன்ற அகதி வாழ்க்கை.

கூடு கட்ட மரமற்ற தேனீக்களின் கொடுக்குகளில் செரிந்த தேன்கள் தித்திப்பு இல்லாமல் செத்துப் போனது.சண்டையும்,சல்லும் கோபமும்,குணமுமாக சிறு குச்சிற்குள் மாதேம்மையின் உலகமே இருந்தது. முதல் போரின் தாக்குதலில் அப்பா தொலைந்து போக,அம்மா தனித்துப் போனாள்.பிள்ளைகளை வைத்து, போருக்கு பயந்து நித்தமும் செத்து, வளர்பருவத்து பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் சேர்த்து யோசித்து, அத்தனை தெளிந்தவள் இல்லை பெற்றவள்.

கூட்டம் கூட்டமாய் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குடும்பம்ங்கள் அயல்நாடுகளுக்கு புலம் பெயர்த்தன. இப்படி சொத்து சுகத்தோடு புலம் மாறிய மக்களை மட்டுமே அகதி என்று பார்வையில் பதித்தவர்களுக்கு, அந்த சொல்லின் மறுபாதியில் இருக்கும் கதி அற்ற ஏழ்மைப்பட்டவர்களின் வாழ்க்கையும்,வலியும் தெரியாது.

வலிமை கொண்ட பறவைகள் வேறு மரம் தேடிப் பறந்தன. காலும் இல்லாமல், இறக்கையும் உதவாமல் வாழ்ந்த ஏழ்மைப்பட்டவர்கள் தான் மரணத்தை வாழ்க்கைக்கு காவலாக வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு, எதற்கோ காத்திருந்தனர்.

நாடு கடந்த சீமான்களோடு,வீட்டுக்கு ஒரு புள்ளையை அம்மா வேலைக்கு அனுப்பி விட்டாள். அப்படி யாராலோ தான் மாதம்மை பதினாலு வயதில் இந்தியா வந்தாள். திரும்பிப் பார்க்கவே மாட்டோம் யாரையும்’ என்று அப்போது தெரியாது.

அலைபேசி,தொலைபேசி என்று எந்த அடையாளமும் இல்லை. அக்காவும், அண்ணாவும், தம்பி, தங்கையும் எங்கிருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை.

அகதிகள் முகாமில் தங்கி, அடையாளம் கெட்டு அலைக்கழிந்து, அழைத்து வந்தவர்கள் வேறு நாடு புலம் பெயர, மாதேம்மாவை இங்கேயே விட்டுச் சென்றார்கள்.

நிறைய கஷ்டங்களோடு கைமாறி கைமாறி இந்த முற்றிய வயதில் பாரிமுனையில் ஒரு வக்கீல் வீட்டில் மூன்று வருடங்களாய் வீட்டோடு தங்கி வேலை செய்கிறாள்.

ஆரம்ப நாளில் அடையாளமற்ற அகதிக்கு இருப்பிடம் தரவும், வேலை தரவும் பெரிய யோசனை செய்தார்கள். புறக்கணித்து விரட்டியவர்கள் மீது எந்த மனத்தாங்கலும் இல்லை மாதேம்மைக்கு. நம் குணமும், நேர்மையும் நெத்தியிலா எழுதி இருக்கிறது?

இருக்கிற தெருவிலும், வாழுகின்ற வீட்டிலும் பேசுகிற பேச்சுகளை பொறுக்கித் தின்பாள்.மத்தபடி, சில நேரம் கருத்துகளை சொல்வாள். பல நேரம் அது கவனிக்கப் படாமலே போய் இருக்கிறது.

மேல் தோல் உரிய உரிய சிந்திக்க அவசியமற்று போனது வாழ்க்கை. மூன்று நேரம் சோறும், ஊதியமும், உறங்கி எழ அறையும், உடுத்த துணியும் ஒரு வாழ்க்கைக்கு போதுமா?

இடையில் ஒருமுறை நாட்டுக்குச் சென்றாள். ஒவ்வொரு துளி மண்ணும் புதைந்த கனவை உயிர்ப்பித்து தர, வீடிருந்த தெருவுக்கு ஒடினாள்.குடில்கள் அத்தனையும் மாறி, வீடுகள் எல்லாம் அகண்ட கடைத்தெருவாய் மடைமாறி இருந்தது. ஒடி ஒடித் தேடியும் ஒரு முகம் கூட அறிமுகமில்லை.

அம்மாவும், மற்ற உடன் பிறந்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற அடையாளமும் தெரியவில்லை. அக்கம்பக்கம் இருந்தவர்கள் யாரும் அங்கே வசிப்பதிற்கான  அடையாளம் இல்லை. போருக்குப் பயந்தோ, வாழ்வுக்கு பயந்தோ எங்கோ எப்போதோ அகதிகளாகி போய் இருக்க கூடும்.

கிளம்பும் போது நப்பாசையாய் தன் பெயரையும், வசிக்குமிடமும் துண்டுச் சீட்டில் எழுதி அங்கு கடை வைத்திருந்தவர் கைகளில் ஒப்புவித்து விட்டு வந்திருந்தாள். ஏதாவது ஒரு கிழமையில், தன்னைப் போலவே தன் உடன் பிறப்புகள் யாரும் தேடிக் கொண்டு வரக்கூடும் என்று மனசு ஒப்புக்கு பேசியது.

இத்தனை வருசத்தில் அவளைத் தேடிக் கொண்டு வரவேயில்லை. யாருமே தேடப்படாமல் தொலைந்து போனாள், மாதேம்மா.

இளமையும், வயசும் இருந்த காலத்தில் இந்த வாழ்க்கையை தொடங்கலாம் என்று யோசித்த நிமிசத்தில் அவளை பயன்படுத்திக் கொள்ள வந்தார்கள் தவிர, அவளுக்கு யாரும் பயன்படவில்லை. உள்ளுக்குள் செத்துப்போன உணர்ச்சியை உடம்பைக் கொண்டு அவளால் மீட்க முடியவில்லை.

காலமும் ஒடிவிட்டது. உடம்பு தளர்ந்து உணர்வு தளராத வாழ்க்கை ஒரு சாபக்கேடு. இப்படி சவமாய்ப் பிழைக்க ஊர் விட்டு வந்திருக்க வேண்டாம் என்று இப்போது சலிப்பாக இருந்தது. சோத்துக்கும், வாழ்வுக்கும் பயந்தோடி வந்த ஊரில்,சோத்துக்காக மட்டுமே வாழும் வாழ்க்கை சாபமல்லவா? இதற்கு அங்கேயே செத்திருக்கலாம் என்ற சிந்தனையும் வராமல் இல்லை.

இப்படியான வாழ்க்கையில் தான் மாதேம்மையைப் போலவே வயித்துக்காக புலம் பெயர்ந்த சோனாவும், அவளின் வாழ்க்கையும், அவள் பலகீனத்தின் மீது ஆண்கள் பாய்ச்சிய அடக்குமுறையும் என்று மாதேம்மை தன்னையே பார்த்தாள், தன் இளவயதினை அவளில் பார்த்தாள்.

வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் அரைநாள் விடுப்பை அவள் கழிப்பது கடற்கரையில் தான்.அந்த நீண்ட சாகரத்தின் இன்னொரு முனையில் தன் உடன் பிறப்புகள் யாராவது இருக்ககூடும்.அவர்களின் முகத்தை ஏந்திக்கொண்டு இந்த அலைகள் வருமென்று அவள் மனசு நம்பும்.

கடற்கரையில் அமர்ந்து ஜனங்களை வேடிக்கை பார்ப்பாள். சோனாவை காப்பற்றிய பிறகு வந்த அடுத்த வாரம் மங்கலான இருட்டில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, கைகளைப் பிடித்தாள். திரும்பிப் பார்த்த மாதேம்மாவின் கண்ணில் அத்தனை வியப்பு.

"மறுபடியும் பீச்சுக்கு வந்திருக்கிறாய் ? பயமில்லையோ?" என்றாள் சிரிப்போடு.

"என்ன பயம்? அன்னைக்கு பீச்சில் ஆயிரம் இரண்டாயிரம். மக்கள் இருந்தாங்க தானே? அதுல நாலு பேர் தானே என்கிட்டே முரட்டுத்தனமாய் நடந்து கொண்டது? அப்போ மீதியுள்ள ஜனங்கள் எல்லாரும் நல்லவங்க தானே? நாலு கெட்டவனுக்காக நான் ஆயிரக்கணக்கான நல்லவங்களை பார்த்து ஏன் பயப்பட ?"

"அட" மாதேம்மா வியந்து போனாள் அந்த தன்னம்பிக்கையில்.

"ஆனால் இன்னைக்கு உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். அவசரத்துல அன்னைக்கு நன்றி சொல்லாம போயிட்டேன்."முகம் மலரச் சொல்ல, மாதேம்மாவுக்கு ஓவென்று அழ வேண்டும் போல இருந்தது. தன்னைத் தேடிக் கொண்டு வந்த முதல் மனுசி, இந்த முழு வாழ்க்கைக்குமாய் சேர்த்து.

அன்று மட்டுமல்ல ஒவ்வொரு வாரமும் தேடிக் கொண்டு வந்தாள். பண்டமும், பரிசும், கோபமும், உணர்வும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.அந்த ஞாயிறு அரை நாளுக்காக ஆறு நாள்களை அடைகாத்து கொண்டிருப்பாள் மாதேம்மா.

மருதாணி அரைத்துக் கொண்டு வந்து சிவக்க வைத்துவிடுவாள். ஒதுக்கமாய் தாவணி போட்டு இருந்தாள் கண்டித்துக் கொண்டே சரிசெய்து விடுவாள். சோனா வாங்கி வந்த கால்வலித் தைலம் நன்றாக வலி கேட்பதாக அவளிடம் சொல்லி சந்தோசப்பட்டாள்.

வழியில் இருந்த தள்ளுவண்டியில் பானிபூரி சாப்பிட்டுக் கொள்வார்கள். நாட்டையும், அங்குள்ள பழக்க வழக்கங்களும், போரையும், அதன் பாதிப்பையும் கேட்டு, அதற்கு மாதேம்மை கண்ணீரோடு கதை சொல்லும் போது கேட்டு கேட்டு வருத்தம் கொள்வாள்.

அவளை பஸ்சில் ஏற்றி விடும்வரைக்கும் மாதேம்மை விசித்திர மனுசியாய் உணர்வாள். அந்த பொறுப்பு போதையாக இருக்கும். மெல்லுணர்வுகள் என்பது கடினமான உடம்போடு இதயத்தை இணைக்கும் மெல்லிய கம்பி. அந்தக் கம்பி அத்தனை உறுதியானது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும்.

தன் இருப்பு கவனிக்கப்படுகிறது என்பதே, ஒரு தன்னம்பிக்கை. அத்தனையும் தொலைந்த வாழ்க்கையில் அடிக்கோடில் ஏதோ அர்த்தமிருப்பதாய் தோன்றும். ஆனால் இதெல்லாம் காலம் போட்ட சிறுநாடகம் தான்.அதுவும் ஒரு மேகமாய் கலைந்து போனது ஒருநாள்.

இப்போதும் கடலைப் பார்த்தாள் மாதேம்மை. இருட்டிலும் கண்கள் ஈரம் சொரிவது தெரிந்தது. வருத்தமாய் இருந்தாலும், தன்னைப் போல் நில்லாமல் அவளுக்கு சென்று சேர ஒரு அக்கரை இருக்கிறது என்பதே நிம்மதியாக இருந்தது. ஒன்றுமே இல்லையென்று ஏங்கிக் கொண்டிருந்த முழு வாழ்க்கையில் எதையோ தந்திருக்கிறாள், ருசித்துக் கடிக்க.

"அழவேண்டாம் மாதேம்மை. நான் போன் நம்பர் தர்றேன். விரும்பும் போது பேசலாம். நீங்களும் சீக்கிரம் ஃபோன் வாங்குங்க." கைகளைப் பற்றிக் கொண்டு மடியில் சாய்ந்தாள்.

"எப்போ கிளம்பணும்? "

"அடுத்த வாரம். முதலாளிக்கு கல்கத்தா மாத்தியாச்சு. எனக்கு இஷ்டமில்லை. அதான் ராஜஸ்தானே திரும்பிப் போறேன் அப்பா, அம்மாகிட்டே."

அவளுக்கு சென்று சேர ஒரு கடல் இருக்கிறதே…அது போதும். ஆனால் மாதேம்மை தான் கடலைத் தேடித்தேடி வற்றிப் போன நதியாகிப் போனாள்.

கையைப் பற்றிக் கொண்டு இருவரும் நடைமேடைக்கு வந்தார்கள். கடலும் கூடவே வந்தது. விளக்குக் கம்பத்திற்கு கீழ் கைகளைப் பற்றிக் கொண்டு நின்றார்கள். நாட்டையும், மக்களையும், குடும்பத்தையும் பிரிந்து வந்தபோது தொட்ட அதே வலி, இப்போதும் உண்டானது.ஆனால் இந்த ரணம் கொஞ்சம் சுகமாக இருந்தது.அன்பின் வெற்றிடங்களை எளிய மனிதர்களால் நிரப்ப முடியும் என்ற பேருண்மை புரிந்தது.

சோனா எழுதித் தந்த தொலைபேசி எண்ணை வாங்கி பத்திரமாய் சுருக்கு பைக்குள் வைத்துக் கொண்டாள். அந்த எண், இன்னும் வாழ்க்கை இருக்கிறது என்று அவளைப் பார்த்து பூடகமாய்ச் சொல்வது போல் இருந்தது.

ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து கைகளுக்குள் திணித்தாள். சோனா கனமாக மறுக்கவும், "இதை வாங்கிக்காட்டி மாதேம்மை அழும்." என்று பலிப்புக் காட்ட, சோனா முத்துப்பல் தெரிய சிரித்தாள்.

"மாதேம்மை பத்தி எல்லார்கிட்டேயும் சொல்லுவேன். ஒருநாள் மாதேம்மை ராஜஸ்தான் வரணும். நான் ஊர் முழுக்க சுத்திக் காட்டுவேன்." மாதேம்மைக்கு சந்தோசமாக இருந்தது. கைகளைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டாள்.

பிரிவின் துளி மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்து, அது நெருங்க நெருங்க அவஸ்தையாக இருந்தது இருவருக்குமே. அந்த நொடியை சீக்கிரம் தாண்டிவிட மாட்டோமா என்று தவித்தாள் மாதேம்மை.

இனிமேல் உடன் பிறந்தவர்களைப் போல் அம்மாவைப் போல், நாட்டைப் போல், சோனாவும் பிரியத்தோடு தள்ளி இருக்கப் போகிறாள். அவ்வளவுதான். பேசுவோம், சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை் தானே வாழ்க்கை.

"சீக்கிரம் ஃபோன் வாங்கிட்டு எனக்கு இந்த நம்பர்க்குச் சொல்லணும்."

"நாளைக்கே சொல்றேன்." இதுவரை அவசியப்படாத அலைபேசி அவசியப்பட போகிறது. அவளிடம் சொல்லவும், அவள் சொல்லவும் வாழ்க்கை காத்திருக்கிறது. பிரிவில் கூட நேர்மறையாய் பூ பூத்தாலும் அது தலைகுப்புற கவிழ்ந்தது போல் ஒரு தவிப்பு.

தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. சோனா திரும்பி தலை அசைத்தாள். பதிலுக்கு மாதேம்மை தலை அசைக்காமல் நிற்க, என்ன என்பது போல் பார்த்தாள்.

"என்ன  ‘அம்மா'னு ஒரு தடவை கூப்பிடேன்.’’ அந்தக் குரலில் அப்படியொரு எதிர்பார்ப்பு.பக்கத்தில் வந்த சோனா  இறுக அணைத்தாள். கன்னத்தில் முத்தத்தை பதித்தாள்.

"நான் போயிட்டு வர்றேன் அம்மா," என்றாள் நெஞ்சில் இருந்து வரும் ஈர வார்த்தையாய்.

உடம்பு முழுக்க அந்த வார்த்தை நோய் நிவாரணியாய் துக்கம் தீர்க்க, அகதியாய் தத்தளித்த நதி இறுதியாய் ஆழி சேர்ந்தது.

எஸ்.பர்வின் பானு

எஸ். பர்வின் பானு. 14 வயதில் தொடங்கிய எழுத்து ஆர்வம் 28 ஆண்டுகளைக் கடந்து இந்நாளிலும் தொடர்கிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, நன்னன் குடி விருது, கஸ்தூரி சீனிவாசன் விருது உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ள இவருடைய நாவல் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com