ஓவியம்: ஜீவா
ஓவியம்: ஜீவா

அதிர்ஷ்டமில்லாத மனிதன்!- மொழிபெயர்ப்பு சிறுகதை

ஆசிரியர்: சமன்ரா ஸ்வெப்லின், தமிழில் அ.முத்துலிங்கம்

எனக்கு எட்டு வயதானபோது, எப்பொழுதும் மற்றவர்கள் கவனத்தில் நடுவில் இருக்க விரும்பும் என் தங்கை அபி, ஒரு கோப்பை நச்சுத் தன்மை வாய்ந்த சலவை திரவத்தை விழுங்கிவிட்டாள். அவளுக்கு மூன்று வயது தான். முதலில் அவள் சிரித்தாள், பின்னர் அதனுடைய மோசமான சுவையில் அருவருத்து அவளுடைய முகம் பயத்திலும், வலியிலும் கோணலாக மாறியது. ஒரு வெறும் கோப்பை அவள் கைகளில் தொங்குவதை கண்ட அம்மாவுடைய முகம் அபியினுடையதைப்போல வெள்ளையாக மாறியது.

‘ஓ, கடவுளே அபி' என்று அம்மா கத்தினார். இன்னொரு முறை அதையே சொல்லிக்கொண்டு காரியத்தில் இறங்கினார்.

அம்மா அபியின் தோள்களைப் பிடித்து உலுக்கினார், ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அம்மா அப்படிக் கத்திக் கூவியும் அபியின் முகத்தில் அசைவு இல்லை. அம்மா போனைத் தேடி ஓடி அப்பாவை அழைத்து விட்டு திரும்பவும் வந்தபோதும் அபி அப்படியே அதே இடத்தில் நின்றாள். அவள் கைகளில் கோப்பை தொங்கியது. அம்மா வெறும் கோப்பையை பிடுங்கி கழுவு தொட்டியில் எறிந்தாள். அம்மா குளிர் பெட்டியை திறந்து பாலை எடுத்து ஒரு குவளையில் ஊற்றினார். குவளையைப் பார்ப்பதும் பின்னர் அபியை பார்ப்பதும் மறுபடியும் குவளையைப் பார்ப்பதுமாக அங்கே நின்றார். இறுதியில் குவளையையும் கழுவு தொட்டியில் எறிந்தார். அப்பா மிகக் கிட்டவாகவே வேலை செய்ததால் உடனேயே வந்துவிட்டார். அம்மா அதற்கிடையில் இன்னொரு தரம் பால் குவளையை பார்த்து பின்னர் அபியையும் பார்த்து விட்டு பாலை கழுவு தொட்டியில் வீசியிருந்தார். அப்பா கார் ஒலிப்பானை சத்தம் வைத்தபடி வந்து அவரும் தன் பங்குக்கு கூப்பாடு போட்டார்.

அம்மா மின்வேகத்தில் அபியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். முன்கதவு, கேட், கார் கதவு எல்லாம் ஒரே நேரத்தில் திறந்தன. மீண்டும் கார் ஒலிப்பான் அலறலைத் தொடர்ந்தது. காருக்குள் ஏறிவிட்ட அம்மா அழத் தொடங்கினார். அப்பா என்னைப் பார்த்து இரண்டு தரம் கத்திய பின்னர் நான் தான் எல்லா கதவுகளையும் மூடவேண்டும் என்பது எனக்கு தெரிந்தது.

நான் கதவுகளைப் பூட்டி என்னுடைய சீட் பெல்ட்டை இழுத்து மாட்டுவதற்கிடையில் கார் பத்து சந்திகளைக் கடந்துவிட்டது. ஆனால் பிரதான வீதிக்கு வந்தபோது கார்கள் நகரமுடியாமல் நின்றன. அப்பா ஒலிப்பானை அமுக்கி சத்தம் எழுப்பிக்கொண்டு யன்னல் வழியாகக் கூப்பாடு போட்டார். 'நாங்கள் அவசரமாக மருத்துவ மனைக்கு போகவேண்டும். நாங்கள் அவசரமாக மருத்துவ மனைக்கு போகவேண்டும்.' எங்களைச் சுற்றி நின்ற கார்கள் எப்படியோ அற்புதம் செய்து வழியுண்டாக்கி எங்களை நகர வைத்தன.

ஆனால் சில கார்களைக் கடந்தவுடன் மறுபடியும் வழிகேட்டு நாங்கள் கெஞ்சவேண்டியிருந்தது. அப்பா காரை நிற்பாட்டி, ஒலிப்பானை அமுக்குவதையும் நிறுத்திவிட்டு தன் தலையை ஓட்டு வளையத்தின் மீது மோதினார். அப்படி அப்பா செய்வதை நான் ஒரு முறையும் கண்டதில்லை. ஒரு கண மௌனத்தின் பின் அப்பா நிமிர்ந்து உட்கார்ந்து பின் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்தார். பின்னர் என்னைத் திரும்பிப் பார்த்து ‘உன்னுடைய நிக்கரைக் கழற்று' என்றார். நான் பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்தேன். என்னுடைய நிக்கர் எல்லாம் வெள்ளை நிறம். அந்தச் சமயம் என்னால் சிந்திக்க முடியவில்லை. அப்பா கேட்டதும் எனக்குப் புரியவில்லை. என்னுடைய கைகளை இருக்கையில் நுழைத்து என்னை வலுவாகத் தாங்கிக்கொண்டேன். நான் அம்மாவைப் பார்த்தபோது அவர் 'உன்னுடைய நாசமாய்ப்போன நிக்கரை கழற்று' என்றார்.

நான் அதைக் கழற்றினேன். அப்பா அதை என் கைகளிலிருந்து பறித்தார். கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு மறுபடியும் ஒலிப்பானை ஒலித்தபடி யன்னல் வழியாக என்னுடைய நிக்கரை ஆட்டத் தொடங்கினார். அதை வெகு தூரத்துக்கு உயர்த்தி ஒலிப்பானையும் ஒலிக்கவிட்டார். எல்லோரும் எங்களை திரும்பி பார்த்தார்கள். என்னுடைய நிக்கர் சின்னதாகவும் நல்ல வெள்ளையாகவும் இருந்தது. ஓர் அவசர மருத்துவ ஊர்தி எங்களுக்கு பின்னால் ஒரு சந்தி தள்ளி அபாயச்சங்கை ஒலித்தபடி வந்தது. எங்கள் காரை நெருங்கி எங்களுக்கு பாதை உண் டாக்கியது. அப்பா என்னுடைய நிக்கரை அசை த்தபடியே இருக்க மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தோம்.

காரை அவசர உதவி வாகனத்துடன் நிறுத்திவிட்டு அவர்கள் குதித்து இறங்கினார்கள். யாருக்காகவும் காத்து நிற்காமல் அம்மா அபியை காவிக்கொண்டு மருத்துவ மனைக்குள் நுழைந்தார். காரைவிட்டு இறங்குவதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் நிக்கரை அணியவில்லை. என்னைச் சுற்றிப் பார்த்தபோது அப்பா கையில் நிக்கர் இல்லை, சீட்டிலும் இல்லை. கார் கதவுகளை அப்பாவின் கை பலமாகச் சாத்தியது.

‘வா, வா' என்று சொன்னபடி அப்பா கார் கதவை திறந்து நான் இறங்க உதவி செய்தார். நாங்கள் அவசர சிகிச்சை அறைய நோக்கிப் போனபோது அப்பா என்னுடைய தோளில் மெல்லத் தட்டினார். அம்மா பின்னுக்கு இருக்கும் ஒரு கதவு வழியாக வெளியே வந்து எங்களுக்கு சைகை காட்டினார். அம்மா தாதிமாருக்கு விசயத்தை விளங்கப்படுத் திக்கொண்டு இருந்ததை பார்த்தபோது நிம்மதியாக இருந்தது.

தங்கும் அறையில் இருந்த செம்பழுப்பு நிற நாற்காலிகளை சுட்டிக்காட்டி அப்பா ‘இங்கே இரு' என்றார். நான் அமர்ந்தேன். நான் வெளியே இருக்க, அப்பாவும் அம்மாவும் மருத்துவருடைய அறைக்குச் சென்றார்கள். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை ஆனால் நீண்ட நேரம்போல பட்டது. நான் என்னுடைய முழங்கால்களை ஒன்றாக அழுத்திக்கொண்டு அன்று அத்தனை வேகமாக நடந்தவற்றைப் பற்றி சிந்தித்தேன். முக்கியமாக என்னுடன் பள்ளியில் படிப்பவர்கள் யாராவது என்னுடைய நிக்கர் சமாச்சாரத்தை பார்த்திருக் கக்கூடிய சாத்தியம் பற்றியும் யோசித்தேன். நான் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தபோது என்னுடைய உடை கொஞ்சம் மேலே ஏறியது. அப்போது என்னுடைய நிக்கர் இல்லாத பிருட்டம் பிளாஸ்டிக் இருக்கையில் பட்டது. சில வேளைகளில் தாதி, மருத்துவருடைய அறைக்கு போவதும் வருவதுமாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் அங்கே வாக்குவாதம் செய்வது கேட்டது. ஒரு சமயம் நான் தலையை நீட்டிப் பார்த்தபோது அபி அமைதியில்லாமல் படுக்கையில் உழன்றுகொண்டிருப்பது தெரிந்தது. அப்பொழுது எனக்கு அவள் அன்றைக்கு சாகப்போவதில்லை என்பது நிச்சயமானது. அதற்கு இன்னும் காத்திருக்க வேண்டும்.

ஒரு மனிதன் வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். எங்கேயிருந்து அவன் வந்தான் என்று தெரியவில்லை. நானும் கவனிக்கத் தவறிவிட்டேன்.

‘என்ன நடக்கிறது?' அவன் கேட்டான். அம்மா சொல்வதுபோல ‘நல்லாய் போகிறது' என பதிலுரைக்கலாம் என்று நினைத்தேன். நானும் தங்கையும் அந்த நேரத்தில் அம்மாவை பைத்தியமாக அடித்துக் கொண்டிருந்தாலும் அம்மா அப்படித்தான் சொல்வார். நான் ‘பரவாயில்லை' என்றேன்.

‘நீ யாருக்காகவும் காத்திருக்கிறாயா?' நான் அதைப்பற்றி சிந்தித்தேன். நான் உண்மையில் ஒருவருக்காகவும் காத்திருக்கவில்லை. இந்த நேரம் நான் செய்ய விரும்பும் வேலையல்ல இது. ஆகவே நான் தலையை ஆட்டினேன். அந்த மனிதன் சொன்னான், 'நீ அப்ப காத்திருக்கும் அறையில் எதற்காக இருக்கிறாய்?'

அது மிகப்பெரிய முரண் என்று எனக்குப் பட்டது. அவன் தன் மடியில் வைத்திருந்த பையை திறந்து அவசரமில்லாமல் கிளறித் தேடினான். பின்னர் தன்னுடைய பணப்பையை திறந்து ஓர் இளஞ்சி வப்பு பேப்பரை எடுத்து தந்தான்.

‘இதோ, எனக்குத் தெரியும் இது எங்கே இருக்கிறது என்று.' அந்தப் பேப்பரில் 92 என்ற இலக்கம் அச்சடித் திருந்தது. ‘இது ஒரு ஐஸ்கிரீம் கூம்பு வாங்குவதற்கான இலவசச் சீட்டு. என்னுடைய விருந்து' என்றான். நான் வேண்டாம் என்றேன். ஒரு வெளியாளிடம் இருந்து ஒன்றையும் பெறக்கூடாது. 'ஆனால் இது இலவசம். எனக்குக் கிடைத்த வெற்றிச் சீட்டு.' ‘வேண்டாம்,' நாங்கள் நேரே பார்த்தபடி மௌனமாக இருந்தோம். ‘சரி, அது உன் விருப்பம்' என்று அவன் கோபப்படாமல் சொன்னான்.

அவன் தன்னுடைய பையிலிருந்து ஒரு சஞ்சிகையை எடுத்து அதிலிருந்த குறுக்கெழுத்துப் புதிரை நிரப்ப ஆரம்பித்தான். மருத்துவருடைய கதவு மீண்டும் திறந்தபோது, அப்பாவின் குரல் கேட்டது. 'நான் இந்த அபத்தத்துக்கு ஒரு போதும் உடந்தையாக இருக்க மாட்டேன்.' எந்த விதமான விவாதத்தையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அப்பா சொல்லும் வழக்கமான வாசகம்தான் அது. எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனிதனுக்கு அது கேட்டதாகத் தெரியவில்லை.

‘இன்று என்னுடைய பிறந்தநாள்,' நான் சொன்னேன். ‘இன்று என்னுடைய பிறந்த நாள்,' நான் மீண்டும் எனக்கு அதைச் சொன்னேன். நான் என்ன செய்யவேண்டும்?

குறுக்கெழுத்துப் புதிரில் பேனாவால் ஒரு சதுரத்தில் அடையாளமிட்டுவிட்டு என்னை அந்த மனிதன் ஆச்சரியமாகப் பார்த்தான். நான் அவனைப் பார்க்காமல் தலையை ஆட்டினேன். அவன் கவனம் என்மீது திரும்பியது எனக்குத் தெரியும்.

‘ஆனால்' என்று அவன் சொல்லியபடியே சஞ்சி கையை மூடினான். ‘சில வேளைகளில் எனக்குப் பெண்களைப் புரிவதே இல்லை. இன்று உன்னுடைய பிறந்தநாள் என்றால் இங்கே இந்த மருத்துவ மனை காத்திருப்புக் கூடத்தில் உனக்கு என்ன வேலை?'

அவன் நல்லாய் அவதானிக்கக்கூடிய மனிதன். நான் மறுபடியும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அப்பொழுதும் கூட என்னால் அவனுடைய தோள்மூட்டு உயரத்துக்கு வரமுடியவில்லை. அவன் சிரிக்க, நான் என் தலைமயிரை கைகளால் ஒதுக்கினேன். பின்னர் நான் சொன்னேன், 'நான் நிக்கர் அணியவில்லை.'

நான் எதற்காக அதைச் சொன்னேன் என்று தெரியவில்லை. அன்று என்னுடைய பிறந்தநாள் அத்துடன் என்னிடம் அணிய வேறு நிக்கர் இல்லை. இந்த அபத்தமான சூழ்நிலையில் என் யோசனை இப்படி போவதை தடுக்க முடியவில்லை. அவன் என்னைத் தொடர்ந்து பார்த்தான்; அவன் சிலவேளை அதிர்ச்சியுற்றிருக்கலாம், அல்லது புண்பட்டிருக்கலாம். அது எனக்குப் புரிந்தது. ஆனால் அது என் எண்ணம்  இல்லையென்றாலும் நான் சொன்னதில் கொஞ்சம் ஆபாசம் இருந்தது.

‘ஆனால் இன்று உன்னுடைய பிறந்த நாள்' அவன் சொன்னான். நான் தலை ஆட்டினேன். ‘இது நியாயமில்லை. ஒருவர் பிறந்த நாள் அன்று நிக்க ர்கூடப் போடாமல் அலையமுடியாது.'

‘எனக்குத் தெரியும்,' நான் அழுத்தமாகச் சொன்னேன். இப்பொழுது எனக்கு அபியின் நாடகம் என்னை எவ்வளவு அவமதித்தது என்று புரிந்தது.

அவன் சற்று நேரம் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தான். பின்னர் கார்கள் தரிப்பிடப் பக்கமாக இருக்கும் பெரிய கண்ணாடி யன்னல் வழியாகப் பார்த்தான். ‘எனக்கு எங்கே உனக்கு நல்ல நிக்கர் ஒன்று வாங்கமுடியும் என்பது தெரியும்,' என்றான்.

‘ஆனால் இன்று உன்னுடைய பிறந்த நாள்' அவன் சொன்னான். நான் தலை ஆட்டினேன். ‘இது நியாயமில்லை. ஒருவர் பிறந்த நாள் அன்று நிக்கர்கூடப் போடாமல் அலையமுடியாது.' ‘எனக்குத் தெரியும்,' நான் அழுத்தமாகச் சொன்னேன்.

‘எங்கே?' ‘பிரச்சினை முடிந்தது.' அவன் தன்னுடைய பொருட்களை சேகரித்து எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான்.

நான் தயங்கினேன். நான் நிக்கர் அணிந்திருக்கவில்லை என்பதுதான் முக்கிய காரணம். ஆனால் அத்து டன் அவன் உண்மை பேசுகிறானா இல்லையா என்பதும் தெரியவில்லை. அவன் முன் மேசையில் உட்கார்ந்திருந்த உதவியாளனைப் பார்த்து கையை அசைத்தான்.

‘நாங்கள் உடனே திரும்பிவிடுவோம். இவருடைய பிறந்தநாள்,' என்று என்னைச் சுட்டிக்காட்டினான். ‘ஓ, யேசுவே, இவன் நான் நிக்கர் அணியவில்லை என்பதை சொல்லாமல் இருக்கவேண்டும்.' ஆனால் அவன் மௌனமாக கதவைத் திறந்தபடியே என்னைப் பார்த்து கண் சிமிட்டினான். அப்போது அவனை நம்பலாம் என்று எனக்குத் தோன்றியது.

நாங்கள் கார்கள் தரிப்பிடத்துக்குப் போனோம். நின்றபோது நான் அவனின் இடுப்புக்கு கொஞ்சம் மேலே இருப்பது தெரிந்தது. என்னுடைய அப்பாவின் வண்டி அவசர சிகிச்சை வாகனத்துக்கு பக்கத்தில் நின்றது. ஒரு போலீஸ்காரன் எரிச்சலுடன் அதைச் சுற்றிவந்தான். நான் அந்த போலீஸ்காரனையே பார்த்தேன். நாங்கள் அப்படியே நடந்துபோவதை அவன் அவதானித்தான். என் கால்களைச் சுற்றி காற்று அடித்து என்னுடைய பள்ளிக்கூட சீருடையை ஒரு கூடாரம்போல ஆக்கியது. நான் உடையை மேலே அழுத்திப் பிடித்தபடி இரண்டு கால்களையும் அகலாமல் உரசிக்கொண்டு நடந்தேன்.

அவன் பின்னே திரும்பி நான் அவனைத் தொடர்கிறேனா என்று பார்த்தபோது நான் என்னுடைய கட்டைப் பாவாடையுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தேன்.

‘நாங்கள் சுவருக்கு கிட்டவாக நடப்போம். எங்கே போகிறோம் என்பது எனக்கு தெரிய வேண்டும்.'

‘என்னோடு முரண்டு பிடிக்காதே, குஞ்சு.'

நாங்கள் சாலையை தாண்டி பல்கடை அங்காடி க்குள் நுழைந்தோம். அது பெரிதாக ஆட்களை வரவேற்கும் இடமல்ல; எனக்கு நல்லாய்த் தெரியும், என் அம்மா அங்கே போவதில்லை. பின்னால் இருக்கும் துணிக்கடை ஒன்றை நோக்கி நடந்தோம்.

அது ஒரு பிரம்மாண்டமான கடை. அங்கேயும் அம்மா போயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அங்கே உள்ளே நுழையமுன்னர் அவன் ‘தொலைந்து போய்விடாதே,' என்று சொல்லியபடி தன்னுடைய மிருதுவான குளிர்ந்த கையை எனக்குத் தந்தான். அவன் காசாளர்களைப் பார்த்து கையசைத்தபோது யாரும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. நாங்கள் கடைகள் நடுவே நடந்தோம்.

அங்கே பலவிதமான ஆடைகள், கால்சட்டைகள், சேர்ட்டுகள், பணி உடைகள், கடினமான தொப்பிகள், குப்பை அகற்றுவோர் அணியும் மஞ்சள் மேலங்கிகள், பிளாஸ்டிக் பூட்சுகள், சில கருவிகள், உபகரணங்கள் என அடுக்கியிருந்தன. இவன் இங்கே தன்னுடைய ஆடைகளை வாங்குவானா? அந்தப் பொருள்கள் இவன் வேலைக்கு தேவைப்படுமா? இவனுடைய பெயர் என்னவாயிருக்கும்?

‘ஆ, இங்கே வந்துவிட்டோம்,' என்றான். எங்களைச் சுற்றியிருந்த மேசைகளில் ஆண்கள், பெண்களுக்கான உள்ளாடைகள் குவிந்திருந்தன. கைகளை நீட்டினால் மிகப்பெரிய பெட்டிகளில் பிரம்மாண்டமான, நான் இதுவரை பார்த்தேயிருக்காத பெரிய அளவு உள்ளாடைகள், வெறும் மூன்று பெசோக்களுக்கு கிடைத்தன. இந்த உள்ளாடைகளில் என்னைப்போன்ற ஒருவருக்கு மூன்று உள்ளாடைகள் செய்திருக்கலாம். ‘அவை வேண்டாம், இங்கே,' என்று சிறிது தூரத்தில் சின்ன அளவு உள்ளாடைகள் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றான்.

‘இந்த உள்ளாடைகளை எல்லாம் பாருங்கள், அம்மையே. உங்கள் தேர்வு என்னவாயிருக்கும்?' என்றான். நான் சற்று நேரம் சுற்றிவரப் பார்த்தேன். அநேகமாக எல்லாமே வெள்ளை அல்லது மென்சிவப்பு நிறம். நான் அலங்கார முடிச்சு இல்லாத ஒரு வெள்ளை நிக்கரை சுட்டிக் காட்டினேன்.

‘இவைதான், ஆனால் என்னால் காசு கொடு க்க முடியாது.' அவன் கிட்டவாக வந்து என் காதுகளுக்குள் ‘பரவாயில்லை,' என்றான்.

‘நீதான் உரிமையாளனா?'

‘இல்லை, இது உன்னுடைய பிறந்தநாள்.' நான் சிரித்தேன்.

‘ஆனால் நாங்கள் இன்னும் திறமான நிக்கரை தேடவேண்டும்; மிகச் சரியான ஒன்று.'

‘ஓகே, அன்பே,' நான் சொன்னேன்.

‘அன்பே என்று சொல்ல வேண்டாம். நான் முரண்டு பிடிப்பவனாகி விடுவேன்,' என்றான் அவன். நான் கார் தரிப்பு இடத்தில் என்னுடைய பாவாடை பறக்காமல் அழுத்திப் பிடித்ததை நடித்துக் காட்டினான்.

அவன் என்னை சிரிக்க வைத்தான். அவனுடைய கோமாளித்தனம் முடிந்த பிறகு அவன் இரண்டு கைகளையும் மூடியபடி எனக்கு முன்னே நீட்டி அப்படியே எனக்கு புரியும் வரைக்கும் நின்றான். நான் ஒரு கையை தொட்டேன். அதைத் திறந்தான். அங்கே ஒன்றுமில்லை. 'மற்றதை தொடலாம்,' என்றான். நான் தொட்டதும் கையை திறந்தான். அங்கே அழகான கறுப்பு நிற, பெண்களுக்கான நிக்கர் இருந்தது. அதில் குட்டி இருதய வடிவம் இழைத்திருந்தது. அம்மாவுக்கும் எனக்கும் பிடிக்காத ‘Hello Kitty' முகம், முன்னுக்கு முடிச்சு இருக்கும் இடத்தில் இருந்தது. ‘நீ அதை அணிந்து அளவு பார்க்கவேண்டும்,' என்றான் அவன்.

நான் அந்த நிக்கரை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தேன். அவன் தன்னுடைய கையை இன்னொருமுறை தந்தான். நான் அதைப் பிடித்தபடி உடைமாற்றும் அறைகளுக்குப் போய் எது வெறுமையாக இருக்கிறது என்பதை ஆராய்ந்தேன். நாங்கள் உள்ளுக்கு எட்டிப் பார்த்தோம். அவை பெண்களுக்கானதாய் இருப்பதால் அவனும் உள்ளே வரமுடியுமா என்பது தெரியவில்லை என்றான். அவன் நான் தனியாக உள்ளே செல்லவேண்டும் என்றான்.

அந்த தர்க்கம் சரியானதுதான். உன்னை ஒருவருக்கு நல்லாய் தெரிந்தால் ஒழிய அவன் உன்னை உள்ளாடையில் பார்ப்பது நல்லதல்ல. ஆனால் எனக்கு உடைமாற்றும் அறைக்குள் தனியாகப் போக பயமாக இருந்தது. அதிலும் மோசம் நான் திரும்பி வரும்போது அவன் இல்லாவிட்டால் என்ற அச்சம்.

‘உன்னுடைய பெயர் என்ன?' நான் கேட்டேன்.

‘அதை நான் சொல்ல முடியாது.'

‘ஏன்.'

அவன் முழங்காலில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் என் உயரமே இருந்தான். சிலவேளை ஒன்றிரண்டு அங்குலம் கூடவாக இருக்கலாம்.

‘ஏனென்றால் நான் சாபமிடப்பட்டவன்.'

‘சாபமா? என்ன சாபம்?'

‘என்னை வெறுக்கும் பெண் ஒருமுறை சொன்னாள் நான் என் பெயரை சொன்னால் இறந்துபோவேன் என்று.'

நான் அது ஒரு விளையாட்டு நகைச்சுவை என நினைத்தேன். ஆனால் அதை அவன் ஒருவித தீவிரத்துடன் சொன்னான்.

'நீ உன் பெயரை எழுதித் தரலாம்.'

‘எழுதுவதா?'

‘எழுதினால் அது சொல்வது ஆகாது. எனக்கு உன்னுடைய பெயர் தெரிந்தால் வெளியே வந்ததும் உன்னை அழைக்க வசதியாக இருக்கும். உடைமாற்றும் அறைக்குத் தனியாகச் செல்ல பயம் இருக்காது.'

‘ஆனால் அது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. ஏனென்றால் அந்த சாபமிட்ட பெண் என் பெயரை சொல்வதும், எழுதுவதும் ஒன்று என நினைத்தால்? சொல்வது என்றால் என்ன, இன்னொருவருக்கு தெரியப்படுத்துவதுதானே. என் பெயரை வெளி உலகத்துக்கு அறிவிப்பதுதானே?'

‘ஆனால் அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியவரும்?'

‘மனிதர்கள் என்னை நம்புவதில்லை. உலகத்திலேயே நான்தான் அதிக துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன்.'

‘நான் உன்னை நம்பவில்லை. அந்தப் பெண் இதைக் கண்டுபிடிக்கவே மாட்டாள்.'

‘நான் என்ன கதைக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.'

இருவரும் என் கையில் தொங்கிய நிக்கரை பார்த்தோம். என்னுடைய பெற்றோர்கள் இப்பொழுது முடித் திருப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

‘ஆனால் இன்று என்னுடைய பிறந்தநாள்,' என்றேன். நான் வேண்டுமென்றே செய்திருக்கலாம். அந்தச் சமயம் அப்படிச் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியிருக்கலாம். என்னுடைய கண்கள் நீரால் நிரம்பின.

அப்பொழுது அவன் என்னைக் கட்டி அணைத்தான். மிக விரைவாக அதைச் செய்தான். அவன் தன் கைகளை என் முதுகில் சுற்றிக் கோர்த்து என்னுடைய முகம் அவன் நெஞ்சில் அழுத்தமாகப் பதிய இறுக்கினான். பின்னர் என்னை விட்டுவிட்டு, தன் சஞ்சிகையை எடுத்து அதன் அட்டையின் வலது ஓரத்தில் தன் பேனையால் ஏதோ எழுதினான். பின்னர் அதைக் கிழித்து மூன்றாக மடித்து என்னிடம் கொடுத்தான். 'அதைப் படிக்கவேண்டாம்' என்று சொல்லியபடியே மெதுவாக என்னை உடைமாற்றும் அறையின் திசையில் தள்ளினான்.

நான் நாலு வெறுமையான அறைகளைத் தாண்டிச் சென்றேன். என்னுடைய தைரியத்தை எல்லாம் திரட்டி ஐந்தாவது அறைக்குள் நுழையமுன்னர் மூன்றாக மடித்த அந்தப் பேப்பரை என்னுடைய சீருடை பக்கெட்டில் வைத்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தேன். நாங்கள் சிரித்துக் கொண்டோம்.

நான் நிக்கரை அணிந்து பார்த்தேன். அது நல்லாய் இருந்தது. நான் சீருடையை உயர்த்தி நிக்கர் எப்படி அழகாயிருக்கிறது என்பதைப் பார்த்தேன். உண் மையில் அது மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. அது கறுப்பு கலரில் இருப்பதால் அதைப் பறித்து, ஆம்புலன்சுக்கு பின்னால் காரை ஓட்டியபடி, யன்னல் வழியாக அதை ஆட்டுவதற்கு அப்பா கேட்கமாட்டார். அவர் அப்படிச் செய்வதை என்னுடைய வகுப்பர்கள் பார்த்தாலும் எனக்கு அத்தனை வெட்கமாக இருக்காது. 'ஆ, அந்தப் பெண்ணின் நிக்கரை பாருங்கள். என்ன நேர்த்தி' என்று நினைப்பார்கள்.

இனி நிக்கரை கழற்றமுடியாது என்று எனக்குப் பட்டது. இன்னும் ஒன்று எனக்குத் தோன்றியது. அந்த நிக்கரில் பாதுகாப்பு பட்டை இல்லை, ஆனால் அது இருந்த அடையாளம் மட்டும் காணப்பட்டது. எச்சரிக்கை மணி அடிக்கவைக்கும் பட்டை நிக்கரில் கிடையாது. கண்ணாடிக்கு முன் நின்று என்னைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றேன். பின்னர் கொஞ்சம் அலுப்புவர பையில் இருந்த பேப்பர் துண்டை எடுத்து வாசித்தேன்.

வெளியே வந்தபோது நான் விட்ட இடத்தில் அவன் இல்லை; ஆனால் சிறிது தூரத்தில் குளியல் உடுப்புகளுக்கு பக்கத்தில் நின்றான். அவன் என் கையில் நிக்கர் இல்லாததைப் பார்த்து கண் சிமிட்டினான். நான் அவனது கையை பிடித்தேன். இம்முறை அவன் என் கைகளை இறுக்கினான். நாங்கள் வெளிவாசலை நோக்கி நடந்தோம்.

அவன் என்ன செய்கிறான் என்பது அவனுக்கு தெரியும் என்றே நினைத்தேன். ஒரு சாபம் இடப்பட்ட மனிதன், உலகத்தின் ஆகத் துரதிர்ஷ்டம் கொண்ட ஒருவனுக்கு காரியங்கள் எப்படிச் செய்யவேண்டும் என்பது தெரிந்திருக்கும். வழியில் நின்ற பல பதிவு மெசின்களை தாண்டி பிரதான வாசலை அடைந்தோம். காவல்காரர்களில் ஒருவன் எங்களை சுவாரஸ்யமில்லாமல் பார்த்துவிட்டு தன் இடுப்பு பட்டியை இழுத்து சரிசெய்தான். அவன் பெருமையாக இருந்தது.

வாசலில் நிறுத்திவைத்த உணர்கருவிகளைத் தாண்டி பல்கடை அங்காடிக்குள் சென்றோம். அப்படியே மௌனமாக நடந்து பிரதான வீதிக்கு வந்தோம். அப்பொழுதுதான் நான் அபி மருத்துவமனை வாகன தரிப்பிடத்தில் தனியாக நிற்பதைப் பார்த்தேன். அம்மா என்னுடைய பக்க வீதியில் நின்று ஆவேசமாக எல்லாப் பக்கமும் பார்த்தார். அப்பாவும் கார் தரிப்பிடத்திலிருந்து எங்கள் பக்கமாக நகர்ந்தார். எங்கள் காரை முன்னர் எரிச்சலாகப் பார்த்தபடி சுற்றிய போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய திசையில் அப்பா எங்களை நோக்கி வேகமாக நடந்தார்.

சகலதும் வெகு விரைவாக நடந்து முடிந்தது. அப்பா எங்களைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அலறினார். சில வினாடிகள் கழிந்து அந்த போலீஸ்காரனும் இன்னும் இரண்டுபேரும் எங்கள் மேல் பாய்ந்தனர். அதிர்ஷ்டம் இல்லாத அந்த மனிதன் என் கைப்பிடியை விட்டான். ஆனால் என்னுடைய கை சிறிது நேரத்துக்கு அவன் பக்கமாக நீண்டு அந்தரத்தில் தொங்கியது. அவர்கள் அவனை சுற்றிப் பிடித்து தள்ளினார்கள். அவன் அங்கே என்ன செய்கிறான், அவனுடைய பெயர் என்ன, என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை. அம்மா என்னை அணைத்துக் கொண்டு என் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தலையிலிருந்து கால்வரை ஆராய்ந்தார். என்னுடைய வெள்ளை நிக்கர் அவருடைய வலது கையில் தொங்கியது. என் உடலின் அனைத்து பாகங்களையும் தடவிப் பார்த்த அவர் நான் வேறு நிக்கர் அணிந்திருப்பதை கண்டுபிடித்தார். அத்தனை பேருக்கும் முன்னால் ஆவேசமாக அம்மா என்னுடைய பாவாடையை சட்டென்று மேலே தூக்கினார். அது இங்கிதம் இல்லாத ஆபாசமான செயல். நான் அதைப் பறித்து இரண்டு அடி பின்னுக்கு நகர்ந்து விழாமல் சுதாரித்துக் கொண்டேன். அதிர்ஷ்டமில்லாத அந்த மனிதன் என்னைப் பார்த்தான்; நான் அவனைப் பார்த்தேன். அம்மா அந்த கறுப்பு நிக்கரைக் கண்டு அலறினாள். ‘நாய்க்குப் பிறந்தவன், நாய்க்கு பிறந்தவன்.' அப்பா அவன்மேல் பாய்ந்து ஒரு குத்துவிட முயன்றார். போலீஸ்காரர்கள் அவர்களைப் பிரித்துவிட்டார்கள். என்னுடைய சீருடையின் பக்கெட்டுக்குள் மடித்து வைத்த கடுதாசித் துண்டை தேடியெடுத்து வாயிலே போட்டு விழுங்கிய அந்த தருணத்தில் அவனுடைய பெயரை, இனி என்றென்றும் மறக்க முடியாதவாறு, பலமுறை மௌனமாக உச்சரித்தேன்.

**********

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு

வருடா வருடம் பிரசுரமாகும் ஓ ஹென்றி சிறுகதை தொகுப்பு 2022 இல் வெளிவந்தபோது அதை வா ங் கி ப் ப டி த்தே ன் . அ தி ல் வழக்கம்போல 20 சிறுகதைகள் வெளியாகியிருந்தன. 2022ஆம் ஆண்டு அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவந்த ஆகச்சிறந்த சிறுகதைகள். இந்த தொகுப்பில் ஒரு வித்தியாசம். இதைத் தொகுத்தவர் பெயர் வலெறி லூயிசெல்லி. இவர் ஒரு புதுமை செய்தார். தொகுப்பில் பத்து வெளிநாட்டு மொழிபெயர்ப்பு கதைகளும் பத்து அமெரிக்காவில் வெளியான ஆங்கிலக் கதைகளும் இடம்பெற்றிருந்தன. மொழிபெயர்ப்பு கதைகள் வெளிநாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவில் பிரசுரமானவை. இதற்கு முன்னர் வந்த தொகுப்புகளில் இப்படி மொழிபெயர்ப்பு கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

உடனேயே தொகுப்பாளரைப் பாராட்டிக் கடிதம் போட்டேன். அவரும் பதில் அனுப்பினார்.

இது நடந்து ஒரு வருடம் கழிந்து அந்த தொகுப்பில் காணப்பட்ட ஒரு கதை --அதாவது ஸ்பானிஷ் மொழியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது- என்னைத் தொந்தரவு செய்தது. மறக்க முடியவில்லை. புதுவிதமான கதை. மனிதனின் இருட்டு சிந்தனை பற்றியது. அதை மொழிபெயர்க்கலாம் என்று நினைத்தேன். எத்தனை அபத்தமான யோசனை. தொகுப்பாளர் வலெறிக்கு என் விருப்பம் பற்றி எழுதினேன். அவர் ஆசிரியரை தொடர்புகொள்ளச் சொன்னார். ஆனால் அங்கேயிருந்து பதில் இல்லை. இதை மொழிபெயர்த்த மேகன் மக்டோவெல்லுக்கு எழுதினேன். அவர் ஏஜண்டை தொடர்புகொள்ளச் சொன்னார். அவர் என்னை பதிப்பாளரிடம் கைகாட்டி விட்டார்.

இப்படியே சுற்றிச் சுற்றிப் போனது. ஒரு மொழிபெயர்ப்பு அனுமதிக்கு இத்தனை சுற்றா? ஆறுமாதம் கடந்துவிட்டது.

என்ன நட்டம் இவர்களுக்கு? பெருமையல்லவா படவேண்டும். நான் மறுபடியும் ஆசிரியருக்கு எழுதினேன். அவர் பெயர் சமன்ரா ஸ்வெப்லின், ஸ்பானிஷ் மொழியில் எழுதுபவர். ஆர்ஜெண்டினாவில் பிறந்தவர், தற்சமயம் பெர்லினில் வசிக்கிறார். பல விருதுகள் பெற்றவர். மூன்று சிறுகதை தொகுப்புகளுக்கும் இரண்டு நாவல்களுக்கும் சொந்தக்காரர். அவருடைய An Unlucky Man சிறுகதையை மொழிபெயர்ப்பதற்குத்தான் நான் அனுமதி கேட்டிருந்தேன். நான் அவருக்கு நினைவூட்டினேன். 30 மொழிகளில் உங்கள் எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. உலகத்தில் தமிழ் பேசும் மக்கள் தொகை ஒன்பது கோடி. தமிழ் மக்கள் உங்கள் கதைகளைப் படித்து இன்புறும் வாய்ப்பை நீங்கள் ஏன் மறுக்கவேண்டும்? அடுத்த நாளே பதிப்பாளர் பல கேள்விகளுடன் என்னைத் தொடர்புகொண்டார்.

எந்தப் பத்திரிகையில் சிறுகதை வெளிவரும்? அவர்கள் முகவரி என்ன? அச்சுப் பத்திரிகையா, இணையப் பத்திரிகையா? எந்த வருடத்தில் இருந்து பத்திரிகை நடக்கிறது? எத்தனை பேர் அச்சில் படிக்கிறார்கள்? எத்தனை பேர் இணையத்தில் படிக்கிறார்கள்?

ஆனால் கடைசிக் கேள்விக்கு நான் தயாராக இல்லை.

சன்மானம் எவ்வளவு? எனக்குச் சிரிப்பு வந்தது. பெருமையாக ஒன்பது கோடி தமிழர்கள் என்று எழுதிவிட்டேன். சன்மானம் கிடையாது என்று எப்படிப் பதில் எழுதுவது?

இறுதியில் பிரசுரிக்க அனுமதி கிடைத்தது. கடைசியாக ஒரு நிபந்தனை போட்டார்கள். இந்தக் கதை இணையத்தில் ஒருவருடத்திற்கு மேல் ஓடக்கூடாது. நிறுத்திவிடவேண்டும். இது என்னவிதமான நிபந்தனை. புரியவே இல்லை. இவருடைய கதையை மக்கள் தொடர்ந்து படிப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லையா? இத்தனை இடர்களைத் தாண்டித்தான் இந்தச் சிறுகதை இங்கே பிரசுரமாகிறது.

சமன்ரா எழுதிய சிறுகதையிலும் பார்க்க எனக்குப் பிடித்தது இந்தக் கதையை நான் மொழிபெயர்த்து பிரசுரிக்கப் பாடுபட்ட என் வரலாறுதான்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com