சுவர்

சிறப்புப்பரிசு பெறும் சிறுகதை
சுவர்
ஓவியம்: ரவி பேலட்
Published on

 இருவரும் பேசிக்கொள்வதில்லை. பல ஆண்டுகளாய். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தேவையில்லை என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு நேருக்கு நேர் பேசிக்கொண்டதில்லை. இரண்டு பேருக்கும் ஒன்றுமில்லை பேச.

பையன் வெளிநாட்டில் இருக்கிறான். பெண் மடிப்பாக்கத்தில் இருக்கிறாள். அவர்கள் மட்டும் போனில் தொடர்புகொண்டு பேசுவார்கள்.

எதாவது சண்டை போட்டார்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் அக்கறை உண்டு. அவர் எங்காவது போவதாக இருந்தால், அவள் மாடியில் உள்ள பால்கனி வழியாக அவரைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவர் ஹெல்மெட் போடவில்லை என்றால் ஹெல்மெட் என்று மட்டும் சொல்வாள். அவர் சிரித்துக்கொள்வார். ஹெல்மெட்டுடன் பேச விரும்புகிறாளா?

அவர் வெளியே போகும்போது வீட்டிற்கு வேண்டியதை மறந்து விடுவார். ஒரு நாள் பூ வாங்கிக் கொண்டு வர மறந்து விட்டார். அவள் சத்தமாக, “பைத்தியம்... பூ வாங்க மறந்துடுத்து,” என்று அவர் காதுபட கூறுவாள்.

மளிகைச் சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் அவள் ஒரு லிஸ்ட் எழுதிக்கொடுப்பாள். எப்போதும் வாங்கும் கடையில் மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொண்டு வருவார்.

இரண்டு பேருக்கும் பென்சன் வருகிறது. அது குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்கிறது.

அவர் ஒரு புத்தகப் பைத்தியம். அவள் டிவி பார்த்துக் கொண்டிருப்பாள். கிட்டத்தட்டப் பல மணி நேரம் அசட்டுப் பிசட்டு டிவி சீரியல்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவர் கம்ப்யூட்டரில் எதாவது டைப் அடித்துக்கொண்டு புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார்.

அவர் எழுதுகிற கதைகள் எல்லாம் பத்திரிகைகளிலிருந்தும் திரும்பி வந்து விடும். இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் வோர்ட் பார்மில் கதைகளை அனுப்புகிறார். பொதுவாகப் போட்டிக்கு மட்டும்தான் அனுப்புகிறார். ஒரு சமயம் அவர் எழுத்தாளர் அசோகமித்திரனைப் போய்ப் பார்த்தார். அசோகமித்திரனும் அவருக்குப் போன் பண்ணி வரச் சொன்னார். மாலை வேளையில்தான் போனார். அவர் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, ‘மறக்காமல் மிளகாய் பஜ்ஜி வாங்கிண்டு வாருங்கள்’ என்றார் அசோகமித்திரன்”

கிளம்பும்போது, “அசோகமித்திரனைப் பார்க்கப் போகிறேன்,” என்றார் சத்தமாக. உண்மையில் வீட்டுச் சுவரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கும்.

“ராத்திரி சாப்பாடு இங்க தானே..” அவளும் சுவரைப் பார்த்து.

“ஆமாம்.” அவர்கள் இருவரும் இப்படிச் சுவரைப் பார்த்துப் பேசுவது வழக்கமாகி விட்டது.

அசோகமித்திரனுக்கு அவரைப் பார்த்தவுடன் ஒரே சந்தோஷம்.

“உங்களுக்குப் பிடித்த மிளகாய் பஜ்ஜி,” என்று பொட்டலத்தை நீட்டினார்.

புன்னகைப் புரிந்தபடியே அசோகமித்திரன் கடுக் கடுக்கென்று கடித்துச் சாப்பிட ஆரம்பித்தார். மிளகாய் பஜ்ஜியைக் கடித்துச் சாப்பிடுவதை எப்போதும் பார்த்து ரசிப்பார. ஆனால் இவருக்கு மிளகாய் பஜ்ஜியே பிடிக்காது.

“அது சரி.., இந்த வஸ்துவைக் கண்டு பிடித்தவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்,” என்றார் அசோகமித்திரன்.

இவர் சிரித்துக் கொண்டார்.

“அதிக விலை கிடையாது. ரொம்ப எளிமையான தயாரிப்பு.”

“ஆனா..இது எனக்குப் பிடிக்காது.”

“ஏன்?”

“இந்த வஸ்து ஒரு துஷ்டை. ஒரே உறைக்கும்..உடனே தண்ணீ குடிக்க வேண்டும்.”

“நான் தண்ணியா குடிக்கிறேன்...இது என்ன விலை?”

“எட்டு ரூபாதான்..”

“எட்டு ரூபாய்க்குப் பிரமாதம்..”

“கலைமகள் ஒரு சிறுகதைப் போட்டி வைச்சிருக்காளே..அதுக்குக் கதை எழுதினீர்களா..”

“இல்லை.”

“ஏன்?”

“என் கதையெல்லாம் யார் எடுத்துப்பா..”

“அப்படிச் சொல்ல முடியாது. நீங்க நல்லாதானே எழுதுறீங்க..”

“ஒரு போட்டிக்கு எத்தனை கதைகள் வரும்.”

“300 அல்லது 400 வரும்.. ஆனால் சிவசங்கரி பேரிலே தினமணி கதிர்ல சிறுகதைப் போட்டி நடத்தினா...அதுக்கு ஆயிரக் கணக்கில் வந்தது.”

“300, 400 வைத்துக்கொள்ளலாமே... அதில் என் கதையை எப்பப் படித்து எப்படித் தேர்ந்தெடுப்பா..”

“பத்மநாபன் நீங்க அதைப் பத்தி கவலைப்படக் கூடாது... அனுப்ப வேண்டியதுதான் உங்கள் கடமை... தேர்ந்தெடுக்கப் படாமலிருப்பது நம்ம கையிலே இல்லை.”

“அவா கண்ணுல என் கதை படாமலே போயிடும்”

“பரவாயில்லை...போகட்டுமே,.,உங்களைப் பொறுத்தவரை என்ன நஷ்டம். நீங்க ஒரு கதை எழுத முடிந்தது இல்லையா...”

அவர் யோசித்தார். அசோகமித்திரன் சொல்றது உண்மைதான். என்ன நஷ்டம் ஆகப் போகிறது.

“எல்லாத்தையும் வேற மாதிரி பார்க்கணும்... உங்க கதையை அவா செலக்ட் பண்ணலைன்னு வெச்சுகுங்கோ...அவா பத்திரிகையில் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த கதையைப் போடறான்னு வெச்சுகுங்கோ... உங்களுக்கு என்ன தோணும்? என்னடா இது நாம எழுதற கதையை விட மட்டமான கதையைப் போட்டிருக்காலேன்னு தோணும்...”

“அது இயல்புதானே...”

“இயல்புதான். ஆனா மனசு பக்குவப்படணும். என் கதைகளை எத்தனை ரிஜக்ட் பண்ணியிருக்கா தெரியுமா? இப்ப கூட கலைமகள் தீபாவளி மலருக்குக் கதை கேட்டு, அதுல அந்தக் கதையைப் போடலை...சாதாரண இதழிலில் பிரசுரம் செய்யறேன்னு சொல்றாங்க...”

“என்ன அக்கிரமம்...நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர்... உங்க கிட்டேதான் எல்லோரும் கத்துக்கணும்..கதை எழுதறது எப்படின்னு..”

“நீதான் அப்படிச் சொல்றே...சி.சு செல்லப்பா கொண்டு வந்த எழுத்து பத்திரிகையில் ஒரு கதை எழுதினேன்...தியாகராஜன் என்ற பெயரில். கதை பேரு மஞ்சள் கயிறு. அதை செல்லப்பா பிரசுரம் செய்துட்டார். அப்புறம் அசோகமித்திரன் என்ற பெயரில் நான் எழுதிய எந்தக் கதையும் அவர் போடலை.”

“செல்லப்பாவிற்கே கதை எழுத வராது...உங்க கதையை ரிஜக்ட் பண்றான்னா என்ன சார் அர்த்தம்... நீங்க ஒருவர்தான் அந்தக் காலத்திலிருந்து இன்று வரை ஒரே மாதிரியாய் சிறப்பா எழுதறீங்க”

“நான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படறதில்லை. அந்தக் காலத்திலே சுதேசமித்திரனுக்குக் கதை அனுப்புவேன். கார்பன் வெச்சு அனுப்ப மாட்டேன். அனுப்பற எல்லாக் கதைகளும் வரலை. உடனே அவுங்க ஆபிஸுக்குப் போனேன். என் கதை என்ன ஆயிற்று? நீங்க திருப்பி அனுப்பவில்லை என்றேன்.

 ‘அந்த அறையில் இருக்கிறது உங்கக் கதையைத் தேடி எடுத்துக்குங்க’ என்று சொன்னாங்க..

தியாகராஜன்னு பேர்லதான்எழுதி அனுப்பிச்சிருந்தேன்.. அங்கே தேடினா.. தியாகராஜன் என்ற பெயரில் ஏகப்பட்ட பேர்கள் கதை அனுப்பி இருக்காங்க. கண்டு பிடிக்க முடியவில்லை.”

அவர் சொன்னதைக் கேட்டு பத்மநாபனுக்குச் சிரிப்பு வந்தது.

“நீ உன் ஒய்ப்கிட்டே பேசிண்டு இருக்கியோ?”

“இல்லை. நான் சுவரைப் பார்த்துத்தான் பேசறேன். அவளும் அப்படித்தான். மாதப்படி எங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லை.”

“வேடிக்கையாக இருக்கிறது. உங்கள் சண்டை.. நான் வந்து சமாதானம் பண்ணட்டுமா?”

“எனக்குத்தான் நீங்க அசோகமித்திரன். மானசீக குரு. அவளுக்கு நீங்க பொருட்டல்ல. உங்களை அவமானப்படுத்தினாலும் பண்ணுவா”

“அவ அப்படி இருக்க மாட்டா...எதனால உங்களுக்குள் சண்டை?”

“பெரிசா சண்டை இல்லை. அவ டீவி பாக்கறதை நிறுத்த மாட்டா...டெய்லி அந்தக் கண்ணராவி சீரியல்களைப் பார்க்கணும்... அதே போல் நான் கம்ப்யூட்டரில் கதை அடிக்கறது...புத்தகம் படிக்கிறது அவளுக்குப் பிடிக்கவில்லை.”

“இரண்டு பேரும் ஒருநாள் நிறுத்தி விடுங்க...அவ டிவி பார்க்கக் கூடாது...நீங்க கம்ப்யூட்டரைத் தொடக் கூடாது...நல்லா யோசித்துப் பாருங்க இருக்கப் போறது இன்னும் கொஞ்சக் காலம்தான். ஏன் ஒவ்வொருத்தரும் பேசாமலிருக்கணும்...”

அவர் சொல்றது சரியென்று பட்டது பத்மநாபனுக்கு. ஒரு நாள் அப்படி இருந்து பார்க்கலாமா?

நேரே பேச முடியாது. சுவத்துக்கிட்டேதான் பேசணும். அவர் சிரித்துக் கொண்டார்.

அசோகமித்திரன் வீட்டை விட்டுத் திரும்பி வரும்போது ரொம்ப தாமதம் ஆகிவிட்டது.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், சுவருடன் பேச ஆரம்பித்தார்.

“என்ன இருக்கு சாப்பிட?”

சுவர் பதில் சொல்லிற்று. “மோர்சாதம் பிசைந்து வச்சிருக்கேன்.”

சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கி விட்டார்.

அவர்கள் இருவரும் உறவினர் நண்பர்கள் கல்யாணங்களுக்குப் போவதென்றால், சுவரிடம் சொல்வார்கள். பின் குறிப்பிட்ட நேரத்தில் ஊபர் புக் செய்வார். சுவரிடம் திரும்பவும் சொல்வார். அவள் தயாராய் இருப்பாள்.

அவர் சட்டை சரியாய் இல்லையென்றால், சுவர் சொல்லும். வேற சட்டை மாற்றிக்கொள்...என்று.

இதுமாதிரி இருக்கிறது அவர்கள் இருவருக்கும் சரியாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக எங்காவது போனால் செயற்கையாக நடிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு வாரமாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கு நாவல். மொழிபெயர்ப்பு நாவல்.

காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது நடராஜனிடம் தான் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படித்துக் கொண்டிருப்பதாகப் பீற்றிக் கொண்டார்.

நடராஜன் உடனே அது எந்த நாவல் என்று கேட்க, இவர் முழித்தார். நாவல் பெயரே தெரியவில்லை. நாவல் பெயர் என்ன? நாவலை எழுதியது யார்? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் நாவல் நேஷனல் புக் டிரஸ்ட்டில் பிரசுரமானது. நாவல் படித்துக்கொண்டிருந்ததால் நாவலை அவரால் விளக்க முடிந்தது.

பானுமதி என்ற பெண் வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். அவள் கணவனை விட்டுவிட்டு . தற்கொலை செய்து கொண்டாளா தெரியாது. தன்னுடைய குழந்தையையும் விட்டுவிட்டுப் போய் விடுகிறாள்.

அவளுடைய கணவனின் கொடுமைகளைச் சொல்லிக்கொண்டே போகிறாள். அவள் ஒன்றுவிட்ட அண்ணனிடம்.

இந்த நாவலை முழுவதும் ஒரு வரி கூட விடாமல் படிக்க வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால் நடராஜன் கேட்டவுடன் நாவலின் பெயர், எழுதியவர் யார் என்று சொல்ல முடியவில்லை.

அடுத்தநாள் மொபைலில் நாவலின் பெயர். எழுதியவர் பெயர். அந்த நாவலை மொழி பெயர்த்தவர் பெயர். என்றெல்லாம் குறித்துக்கொண்டு நடராஜனிடம் சொன்னார்.

முப்பாள ரங்கநாயகம்ம எழுதிய காகித மாளிகைதான் அந்த நாவல். இதைத் தெலுங்கிலிருந்து மொழி பெயர்த்தவர். பா. பாலசுப்பிரமணியன். 100 பக்கங்கள்தான் படித்திருக்கிறார் இன்னும் 87 பக்கங்கள் படிக்க வேண்டும். இந்த நாவலை பிளாட்பார கடையில் வாங்கியிருக்கிறார்.

இதுதான் அவளுக்குப் பிடிக்கவில்லையோ? இப்படிப் புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பது ஒரு பெரிய கெட்ட பழக்கமாக அவள் நினைக்கிறாளா? அவள் மட்டும் என்ன? டிவியை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் டிவியைப் போடுகிறாள். திரும்பவும் தூங்கும்போதுதான் அணைக்கிறாள்.

அவர் நாவல் படிப்பதால் என்ன ஆபத்து இருக்கிறது? அவர் பல புத்தகங்களைப் படிக்கிறார். எல்லாவற்றைப் பற்றியும் குறிப்புகள் தயார்செய்து எழுதி விட வேண்டுமென்று நினைக்கிறார். முகநூலிலாவது தன் எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் சில காலம் கழித்து என்ன படித்தோம் என்பது கூட மறந்து விடுகிறது. அப்படித்தான் ஓடிடியில் அவர் பார்க்கிற சினிமாக்களைப் பற்றிக் கூட எழுத நினைக்கிறார். எல்லாம் முடிவதில்லை.

எப்போதும் காலையில் எழுந்து விடுவாள் மல்லிகா. அன்று அவளுக்கு உடம்பு முடியவில்லை. படுக்கையிலேயே படுத்திருந்தாள். இவருக்குப் பதைப்பாக இருந்தது.

இவருக்குக் காப்பி வைக்கக் கூடத் தெரியாது.

 “என்ன எழுந்திருக்கவில்லையா?” என்று சுவரைப் பார்த்துக் கேட்டார்.

“முடியலை.” என்றது சுவர்.

“காப்பிக் குடிக்காமலிருக்க முடியவில்லை,” என்றார் அவர்.

“அசடு... காப்பி கூட போட்டுக் குடிக்கத் தெரியாது” என்று பதில் வந்தது.

அசடு என்று சொன்னதைக் கேட்கும்போது அவருக்குக் கோபம் வந்து விட்டது. சட்டையை மாட்டிக்கொண்டு பக்கத்திலுள்ள ஓட்டலுக்குச் சென்றார். ஒரு காப்பியைக் குடித்தார். அவளுக்கு ஒரு பார்சல் காப்பி வாங்கிக்கொண்டு வரலாமா என்று நினைத்தார்.

திட்டினால் என்ன செய்வது என்று தோன்றியது. வீட்டிற்குச் சென்றார். அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை.

“டாக்டரைப் பார்க்கலாமா?” என்றார் சுவரைப் பார்த்து.

“வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். தலைவலி அவ்வளவுதான்”

அப்படியே தூங்கிக்கொண்டிருந்தாள். அவருக்குப் பயம் வந்துவிட்டது. அவள் இப்படி இருந்ததில்லை. அவருக்கு எதாவது உடம்பு சரியில்லை என்றால் அமர்க்களம் பண்ணுவார்.

“இன்று சமையல் வேண்டாம். எதாவது வாங்கிண்டு வர்றேன்,” என்றார் சுவரைப் பார்த்து.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டிருந்தாள். அவர் யோசித்து யோசித்து அவள் தலையில் கை வைத்துப் பார்க்கலாமா என்று கிட்டே போனார்.

அவள் உடனே,”அசடு...எனக்கு ஒன்றுமில்லை,” என்றாள்.

திரும்பவும் அந்த வார்த்தையைக் கேட்டவுடன் அவருக்குக் கோபம் வந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டார். “இரண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிண்டு வரட்டுமா?” என்றார் சுவரைப் பார்த்து.

“வாங்கிண்டு வாங்க,”

அவளை நினைத்தபடியே திரும்பவும் ஓட்டலுக்குச் சென்றார். இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தார். அவளைப் பத்தி யோசித்துக்கொண்டே வந்தார். அவள் டிவியைப் பார்த்தால் என்ன என்று இப்போது தோன்றியது.

அவள் இஷ்டப்படி இருக்கட்டுமே...உடம்பு எதுவும் வராமல் இருக்க வேண்டும். அவள் மீது அவருக்கு இரக்கம் வந்து விட்டது.

வீட்டிற்குப் போனவுடன், வழக்கம்போல் அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

 அவர் வாங்கிக்கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டாள்.

“ரசத்தில் உப்பு அதிகம்,” என்றாள் சுவரைப் பார்த்து. அவருக்கு உற்சாகமாக இருந்தது. பழையபடி அவள் மாறி விட்டாள் என்று தோன்றியது அவருக்கு.

“மல்லிகா... இப்ப சரியாய் போய் விட்டதா...”? என்றார் அவர் திடீரென்று.

இப்போது அவர்கள் முன் சுவர் நிற்கவில்லை.

அழகியசிங்கர்

37 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் விருட்சம் இதழின் ஆசிரியர். நூறு சிறுகதைகளுக்கு மேலாக எழுதி இருக்கிறார். 700 கவிதைகள் எழுதி உள்ளார். அனைத்தும் நூல் வடிவம் பெற்றுள்ளன. இரண்டு நாவல்களையும் எழுதி இருக்கிறார். வாசிப்பும் எழுத்தும்தான் இவருக்கு வாழ்க்கை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com