'பரவாயில்லை. பெல் அடிக்க இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது’ என்று நினைத்தபடி அதிக கூட்டம் இல்லாத இடமாகப் பார்த்து நகர்ந்து நின்றுகொண்டார், மோகன்.
எல்லாம் வழக்கமாக வருகிறவர்கள்தான். பெரும்பாலும் பெண்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளின் அம்மாக்கள். ஆனால், அவர்களில் பலர் அவர்களே பதினொன்றாவது பன்னிரண்டாவது வகுப்பு படிப்பவர்கள் போலிருப்பார்கள். வேறு சிலர் முழு மேக்கப்பில் முயன்று இளமையாகத் தெரிவார்கள்.
ஜூன் மாத ஊமைவெயில். புழுக்கமாய் இருந்தது. சற்று இரைச்சலாகவும் இருந்தது. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவர்களுக்குள் பேசிக்கொள்ளத்தான் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்று மோகனுக்கு வியப்பாக இருக்கும்.
பெண்கள் மட்டுமில்லை பிள்ளைகளை அழைத்துப்போக ஆண்களும் வருவார்கள். ஆனால், ஒரு வித்தியாசம். வருகிற ஆண்களில் பெரும்பாலானவர்கள் மோகனைப் போல பிள்ளையின் பெற்றோரின் அப்பாக்கள். முதியவர்களாகத் தெரியாவிட்டாலும் உறவு முறைப்படி அவர்கள் ‘தாத்தா’க்கள்தான்.
மோகன் அழைத்துச் செல்ல வேண்டியது பேத்தி ரம்யாவை. இந்த வருடம் அவள், ‘தர்டு ஸ்டாண்டர்ட்’. இரண்டாம் மாடியிலிருந்து இறங்கி வரவேண்டும். மாடிப்படிக்கட்டு வாசலில் போய் நின்றுகொண்டார்.
ரம்யா மெதுவாகத்தான் வருவாள். அவளுக்கு வகுப்பை விட வகுப்புக்கு வெளியே நிறைய வேலைகள் இருக்குமோ என்று மோகனுக்கு சந்தேகம் வரும். ரம்யாவுக்குப் பள்ளியை விட்டுவர மனசு வராது. ஒரு நிமிடம் முன் வரை அவர்களோடு வகுப்பில்தான் உட்கார்ந்திருந்திருப்பாள். ஆனால், மணியடித்து வெளியில் வந்ததும், வெளியேறுகிற வகுப்புத் தோழர்களின் பெயர்களைச் சொல்லி அழைத்து, ஏதோ விமானம் ஏறப் போகிறவர்களுக்கு சொல்வது போல, ”பவன் பை”.. ஸ்ருதி ..பை” என்று அழைத்து அழைத்து, கை அசைப்பாள்.
இதோ ரம்யா வகுப்பு கார்த்திக் வந்துவிட்டான். அவர்கள் கிளாசில் இருந்து எப்போதும் அவன்தான் முதலில் வெளியே வருவான். அவன் நடக்கிறானா அல்லது பறக்கிறானா என்று சந்தேகம் வரும் அளவு வேகமாக வருவான். படிக்கட்டுகளில் தாவித்தாவி இறங்குவான். தலைமுடி கலைந்து, காலையில் அணிந்த வெள்ளை சட்டை மாலைக்குள் பழுப்பாக இருக்கும். அதை இன் பண்ணாமல் வெளியே விட்டு, எவ்வளவு கூட்டத்திலும் கார்த்திக் தனித்துத் தெரிவான்.
சில பெரிய கிளாஸ் மாணவர்களைப் போல, அவனுக்கும் சட்டையை டவுசருக்குள் இன் பண்ணுவது பிடிக்காது போல. வகுப்பு முடிந்ததும் முதல் வேலையாக சட்டையை வெளியே எடுத்து விட்டுவிடுவானோ என்று மோகனுக்குத் தோன்றும். காரணம், வகுப்பு முடிந்த பின் ஒரு நாளும் அவர் அவனை, ‘இன்’ பண்ணிய சட்டையோடு பார்த்ததில்லை.
கார்த்திக் வீட்டுக்குப் போவது ஒரு தனியார் வேனில். அது, மூன்றே முக்காலுக்குத்தான் கிளம்பும். ஆனால், முதல் ஆளாக வெளியே வந்துவிடுவான். மோகனைக் கடந்து போகிற போது, அங்கிள் என்று அழைத்து, ரம்யா அன்று வகுப்பில் செய்ததாக அல்லது செய்யாததாக ஏதோ ஒரு செய்தியை கலவரமாக அறிவிப்பான். மோகன் என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் பறந்துவிடுவான்.
இப்போது அந்தப் படிக்கட்டு முழுக்க பிள்ளைகள் ’தப தப’ என இறங்கி வந்தார்கள். மூன்று ஆண்டுகளாக வருவதால் ரம்யாவின் வகுப்புப் பிள்ளைகள் பலருடைய முகங்கள் மோகனுக்குப் பரிச்சயம். அவர் பொறுமையாக நின்றார். அவரை சில பிள்ளைகளும் சில பெற்றோர்களும் இடித்தபடி சென்றார்கள். பார்வையை படிக்கட்டிலிருந்து எடுக்காமலே அவர் நகர்ந்து நகர்ந்து நின்று கொண்டார்.
‘ஆ!.. அதோ ரம்யா...’
ரம்யா ரொம்ப ஸ்மார்ட். படிக்கட்டில் இறங்கி வரும்போதே அன்று தன்னை அழைத்துப் போக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்வாள். தாத்தாதான் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் பார்வையைத் திருப்பிவிடுவாள். தன் விளையாட்டுகளைத் படியிலேயே ஆரம்பித்துவிடுவாள்.
வேகமாக கீழிறங்கி வரமாட்டாள். வேறு பிள்ளைகளுடன் நின்று ஏதாவது கதை பேசிக் கொண்டிருப்பாள். மோகன், முன்புறம் நகர்ந்து போய் அவளை எதிர்கொண்டு, “வர்றீயா.. வீட்டுக்குப் போகலாம்,’’ என்று அழைக்கவேண்டும். மோகன் அருகில் வந்ததும், எதுவும் பேசாமல் உடனே திரும்பி முதுகைக் காட்டுவாள். அவர் அவளுடைய புத்தகப் பையை வாங்கிக்கொள்ள வேண்டும். அடுத்து, சாப்பாட்டுக் கூடையை நீட்டுவாள்.
அதையும் வாங்கிக் கொண்டதும், “கொஞ்சம் விளையாடிட்டுப் போலாம் ஐயா” என்று ஆரம்பிப்பாள். அவர்கள் வீட்டு வழக்கப்படி அவள் தாத்தா மோகனை ‘அய்யா’ என்றுதான் அழைப்பாள். சொல்லிவிட்டு அய்யா முகத்தை கூர்ந்து பார்ப்பாள்.
“இல்ல.. இல்ல. ஆட்டோக்காரர் காத்துக்கிட்டு இருப்பார்” என்று மோகன் சொல்வார். அவர் குரலில் கண்டிப்பு இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால், அவர் சம்மதத்திற்கு காத்திராமல் ரம்யா விளையாட ஓடி விடுவாள்.
வேண்டாம் என்று சொல்வாரே தவிர, மோகன் தடுக்க மாட்டார். அதனால் அவளை வீட்டுக்கு அழைத்துப் போக எப்போதாவது அவர் வரவில்லை என்றால், அவள், “அய்யா வரல்லியா? ஏன் வரல்ல?”என்று அழைத்துப் போக வந்திருக்கும் பெற்றோரையோ பாட்டியையோ கேட்பாள்.
அங்கே விளையாட்டுத் திடலில் சறுக்கு மரம், தொங்கி விளையாடும் ‘பார்’ கம்பிகள் என்று பலவும் இருக்கும். பல பிள்ளைகள் புத்தகப் பைகளை வைத்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். வரை முறையில்லாமல் அவர்கள் விளையாடுவதால் அந்த இடம் ஓடுகிறவர்களும் குதிப்பவர்களுமாக கலவரமாக இருக்கும்.
சறுக்குமரத்தில் சறுக்கி வந்து இறங்க வேண்டிய பக்கமாக, சில பிள்ளைகள், தூரத்தில் இருந்து ஓடி வந்து, ஷூ காலோடு ஏறுவார்கள். ஷூக்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மணல் சறுக்கு மணத்தின் தகரத்தில் கர புரவென்று உராய்வதால் வரும் சத்தத்தை காது கொடுத்து கேட்கமுடியாது. உடம்பு கூசும். அப்படி மேலேறிய பிள்ளைகள், ஏறிவரவேண்டிய படிக்கட்டு வழியாக இறங்குவார்கள். கம்பிகளில் தொங்குவார்கள். நம்பி போன்ற சிலர் தலைகீழாகக் கூட.
நம்பி என்ற நம்பி சதாசிவனும் ரம்யா செக்ஷன் தான். அவன் கார்த்திக்கு சளைத்தவன் அல்ல. விளையாடுமிடத்தில் அவன் செய்வதெல்லாம் மிக வித்தியாசமாக இருக்கும். அவன் வகுப்புப் பிள்ளைகளுக்கெல்லாம் அவன் பெரிய வீரன். எதையும் செய்யக் கூடியவன் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ போல.
மோகன் பார்த்த சில நேரங்களில் நம்பி மண் தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கர்ம சிரத்தையாக பென்சிலால் தரையைக் குத்தி நோண்டிக்கொண்டிருப்பான் உறுதியாக இருக்கும் தரையில் பள்ளம் தோண்ட அவனுடைய வாட்டர் பாட்டில் மட்டுமல்லாமல் கண்ணில் படும் பல வாட்டர் பாட்டில்களிலிருந்தும் தண்ணீர் ஊற்றுவான். அவன் ஷூ வெள்ளை சட்டை தலைமுடி எல்லாம் மண்ணாக இருக்கும்
வேலையில் மட்டுமே கவனமாக இருப்பதாலோ என்னவோ வாட்டர் பாட்டில் மூடிகளைத் திறந்ததும் கடாசிவிடுவான். பெண் பிள்ளைகள் சிலர் அவனிடம் ‘என் வாட்டல் பாட்டில் கவர் எங்கடா? நாம் கிளம்பனும்’ என்பதுபோல கெஞ்சிக்கொண்டேயிருக்க, அவன் அடுத்து காம்பவுண்ட் பக்கம் இருக்கும் அவன் முட்டிக்கால் உயரமிருக்கும் வலுவான செடியை அடுத்த நிமிடங்களுக்குள் பிடுங்கியே ஆகவேண்டும் என்பது போல இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக்கொண்டிருப்பான்.
சில உஷாரான அம்மாக்கள் அவர்கள் பிள்ளைகளை விளையாடுமிடத்தில் ஓரமாக அமரவைத்து, அவை மதியம் சாப்பிடாமல் விட்ட மீத உணவை, டிபன் பாக்ஸிலிருந்து எடுத்து ஊட்டி விட்டுக்கொண்டிருப்பார்கள்.
சற்றுத் தள்ளி பெரிய கிளாஸ் பையன்களும் பெண் பிள்ளைகளும் சர்வதேசப் போட்டியின் இறுதி ஐந்து நிமிடங்கள் போல பரபரப்பாக, வேர்த்துக் கொட்டக் கொட்ட பாஸ்கெட்பால் விளையாடுவார்கள். அந்தப் பக்கம் வேறு யாரும் நடக்கவே முடியாது. காரணம், ஆட்டத்தில் மட்டுமே இருக்கும் கவனம் காரணமாக, ஷூ கால்களோடு வழுவழு சிமிண்ட் தரையில் சர்ர்.. என சறுக்கியபடி வந்து மோதிவிடுவார்கள். சமயங்களில் சில மிஸ்களும் மோதப்பட்டிருக்கிறார்கள்.
விளையாடுமிடத்துக்கு ரம்யாவை விட்டுவிட்டால், எளிதில் திரும்பக் கூட்டி வர முடியாது. “குட் கேர்ள். கேட்டதும் அய்யா விட்டேனில்ல. வந்திடுவியாம்” என்று கொஞ்சி. பிறகு, “பிளீஸ்டா பிளீஸ்டா.. அய்யாவுக்கு வேலையிருக்குடா” என்று கெஞ்சி, அதற்குப் பிறகு கோபம் வந்தது போல நடித்து..அதன்பின்தான் மனசில்லாமல் வருவாள். அதுவும் “நீ என்ன விளையாடவே விடமாட்ட..” என்று குற்றம் சொல்லியபடி.
ஆட்டோ நோக்கி நடக்கும்போது அண்ணாந்து பார்த்து ”இன்னைக்கு என்ன தெரியுமா நடந்துச்சு ?” என்று ஆரம்பிப்பாள். பீடிகை பெரிதாக இருக்கும்.
“அசெம்பிளி முடிஞ்சு கிளாசுக்குப் போற போது நம்பி வாமிட் பண்ணிட்டான்யா...” என்பாள். அப்படியா? என்று மோகன் அதிர்ந்து கேட்டதும். ”ஆமாய்யா” என்று கதையை மேலும் சுவாரஸ்மாக்கிவிடுவாள்.
இன்னொரு நாள், “எங்கள் கிளாசுக்குள் குரங்கு வந்துவிட்டது” என்பாள். மற்றொருநாள் “ஆயாம்மாவை பாம்பு கடித்துவிட்டது” என்பாள். அவற்றில் பல நடந்திருக்காது. ஆனால், அப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்கிற அவளுடைய கற்பனை அவை என்று மோகன் நினைத்துக்கொள்வார். அவர், ரம்யா சொல்வதை முழுதும் நம்புவது போலவே கேட்பார்.
ரம்யாவின் ஜாதகத்தைப் பார்த்த கீழைச் சேவல்பட்டி ஜோதிடர், “இவ பொய் போலவே உண்மை சொல்வாள். உண்மை போலவே பொய் சொல்வாள்” என்று சொன்னது எவ்வளவு சரி! என்று சில சமயங்களில் அவருக்குத் தோன்றும்.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்த நாள், “அதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்கு மிஸ் ஹாண்ட் ரைட்டிங் நோட் புக்கு கேட்டார்களா? பார்த்தார்களா?” என்று கேட்டார் மோகன்.
“இல்லைய்யா” என்றாள் முதலில்.
மற்றொரு தாத்தா வீட்டிற்கு வெளியூர் லீவுக்கு போயிருந்த ரம்யா, கோடை விடுமுறையில் செய்து எடுத்துவரச் சொல்லியிருந்த ஹேண்ட் ரைட்டிங் நோட்டுப் புத்தகத்தை மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்ததற்காக நேற்றுத்தான் அவள் பெற்றோருக்கு சொல்லியிருக்கிறாள். ”அய்யய்யோ ..” என்று பதறிய அப்பாவிடம் கூலாக “ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா. நீ ஒரு லெட்டர் குடு போதும். விட்டுடுவாங்க” என்று சொல்லியிருக்கிறாள்.
“நான் லெட்டர்லாம் தரமாட்டேன். நீ தானே நோட்டை விட்டுட்டு வந்தாய். நீ அப்பாலஜி கேளு. மிஸ் என்ன சொல்றாங்களோ, அதைச் செய்” என்று சொல்லி முடித்துக்கொண்டு விட்டார் ரம்யாவின் அப்பா.
இந்தக் கதையெல்லாம் மோகனுக்கு இன்று காலையில்தான் தெரியும். ‘என்ன இது! மூன்றாவது வகுப்பிற்கு போனதும், ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று கெட்ட பெயர் எடுக்கப் போகிறாளே பேத்தி’ என்று அவருக்கு கவலை.
அவருக்கு, மகனையா, மருமகளையா அல்லது பேத்தியையா, இதில் யாரைக் கோபிப்பது என்று தெரியவில்லை. “அந்தத் தாத்தாக்கு போன்ல சொல்லி, நோட்டை கொரியர்ல அனுப்ப சொல்வோமா?” என்று ரம்யாவிடம் கேட்டதற்கு, “அந்த நோட்டு எங்க இருக்குன்னு அவங்களுக்குத் தெரியுமா அய்யா?” என்று மோகனைத் திருப்பிக் கேட்டாள்.
இவள் ஹோம் ஒர்க், அதுவும் 30 பக்கம் ஹேண்ட் ரைட்டிங் நிச்சயம் செய்திருக்கமாட்டாள். சும்மா கதையளக்கிறாள் என்று மோகனுக்குப் புரிந்துவிட்டது. ஸ்கூல் விட்டு வரும்போது அதைத்தான் கேட்டார்.
“என்ன, மிஸ் ஹோம் ஒர்க் பத்தி கேட்டாங்களா?”
அவரைப் பார்க்காமலே இல்லை என்றாள் சாதாரணமாக.
“அதெப்படி கேட்காமல் இருப்பார்கள்!” என்றதற்கு, “கேட்டாங்க. ஆனா எழுதாதவங்களை ஒண்ணும் சொல்லல” என்றாள்.
மோகனுக்கு புரிந்துவிட்டது, என்னவோ நடந்திருக்கிறது. மறைக்கிறாள் என்று. சரி, இதுபற்றி ரம்யா அம்மாவிடம்தான் சொல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். அம்மாவுக்குத்தான் ரம்யா கொஞ்சமாவது பயப்படுவாள்.
ஆட்டோ நோக்கி நடந்தார்கள்.
“சரி.. இன்னைக்கு வேற ஏதாவது ஹோம் ஒர்க் கொடுத்தாங்களா?”
ரம்யாவின் அம்மாவும் அப்பாவும் அலுவலகத்தில் திரும்பி வர இரவு மணி ஏழு, ஏழரை ஆகிவிடும். அதற்குப் பிறகு ரம்யா சோர்வாக இருப்பாள். ஹோம் ஒர்க் செய்வது ஒத்து வராது. அதனால் அவர்கள் வருவதற்குள் அவளை மோகன் மனைவி, பாட்டி செய்ய வைத்து விடுவார். அதற்காக கேட்டார்.
இப்பவே சொல்லலாமா, வேண்டாமா? என்பது போல கொஞ்சம் தயங்கிவிட்டு, “கொடுத்திருக்காங்க ஐயா. மேத்ஸ்” என்றாள் ரம்யா.
ஆட்டோ அருகே வந்து விட்டார்கள். ஏறி அமர்ந்து கொண்டார்கள்.
“அப்ப.. வீட்டுக்குப் போனதும், சாப்பிட்டுட்டு உட்கார்ந்து நீ அதை முடிச்சிடுற”
“அது முடியாதுய்யா”
“என்ன ரம்யா விளையாடுறியா?”
“யோவ்.. என்ன ஹோம் ஒர்க்குன்னே தெரியாம, எப்படிய்யா செய்யறது?”
“என்னது..! என்ன ஹோம் ஒர்க்ன்னே உனக்குத் தெரியாதா?”
“நான் நோட்ல எழுத்திறதுக்குள்ள பெல் அடிச்சிடுச்சு’’
“மத்த பிள்ளைங்க எல்லாம் எப்படி எழுதிகிட்டாங்க?”
“மிஸ்ஸு தான் என்னையும் ஓவியாவையும் நோட் புக்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு ஸ்டாப் ரூமில் கொண்டு போய் வச்சுட்டு வர சொன்னாங்க ”
“அதனால.?”
“நாங்க வச்சிட்டு கிளாசுக்கு திரும்பி வர்றதுக்குள்ள அவங்க போர்டுல ஹோம் ஒர்க் எழுதிப்போட்டுட்டாங்க. நாங்க திரும்பிவந்து எழுதிக்கிறதுக்கு முன்னாடி பெல் அடிச்சிருச்சு”
“அதெப்படி எப்பவும் மிஸ் உன்னையே இதுமாதிரி வேலைக்கு அனுப்புறாங்க?”
“தெரியலையே அய்யா” சொல்லும் போது ரம்யா முகத்தில் கொஞ்சம் பெருமை தெரிந்தது.
“யாராவது போறீங்களான்னு மிஸ் கேட்டிருப்பாங்க. நீ உடனே எந்திரிச்சுருப்ப”
“அதெப்படிய்யா கரெக்டா சொல்ற!”
“உன்னத் தெரியாதா எனக்கு? எப்படா மத்த வேலை செய்வோம்ன்னுதானே நீ இருப்ப. இதாண்டா சாக்குனு வெளியே போய் கதை பேசி, மெதுவா வந்திருப்பீங்க. ரெண்டு பேரும்”
சொல்லியபடியே ரம்யாவை செல்லமாக கன்னத்தைக் கிள்ளினார் .
“நீ சொல்றது பாதி கரெக்ட்ய்யா. நாங்க திரும்பிவர லேட் ஆயிடுச்சுங்கறது சரிதான்.. ஆனா, அது ஓவியாவால தான்ய்யா. ஸ்டாப் ரூம்ல நோட்டை வைச்ச பிறகு, அவ நாம பாத்ரூம் போயிட்டு கிளாசுக்கு போலான்ன்னு சொன்னா”
மோகனுக்கு பாத்ரூம் ஐடியா யாருடையதாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. நிச்சயம் ரம்யாதான் சொல்லியிருப்பாள் என்று நினைத்துக்கொண்டார்.
“அது சரி. கிளாசுக்கு வந்திட்டீங்க. பெல் அடிச்சா என்ன? இருந்து, எழுதிகிட்டு வர வேண்டியதுதானே?”
“யோவ்.. நீ வெளியே வெயிட் பண்ணிட்டு இருப்பியே!”
காதில் விழுந்த இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டு வந்த ஆட்டோ டிரைவர் அடக்க முடியாமல் சத்தமாக சிரித்து விட்டார்.
இப்படிப்பட்ட கதையெல்லாம் கேட்டு மோகனுக்கு கோபம் வராது. இதே கதையை ரம்யா அவளுடைய அப்பா அம்மாவிடம் சொல்லியிருந்தால் நடப்பதே வேறு. அவள் சொல்லவும் மாட்டாள். அவர்களுக்கு சொல்ல வேறு கதை வைத்திருப்பாள்.
திடீரென்று நினைவு வந்தவளாக, “யோவ்.. வேற யார் கிட்டயாவது வாட்ஸ் அப்ல கேட்டு ஹோம் ஒர்க் வாங்குவோமா?”
“அது சரி. அதுவும் நல்ல ஐடியாதான். ஆனா, என்கிட்ட வேற பேரண்ட்ஸ் போன் நம்பர் இல்லையே. அம்மாகிட்ட யார் நமபரையாவது கேப்பமா?”
“யோவ் என்ன விளையாடுறயா? அம்மா அப்பாகிட்ட மட்டும் இத சொல்லவே சொல்லாத. விக்னேஷ் தாத்தாகிட்ட ஒருவாட்டி நம்பர் வாங்கினியே!” என்றாள்.
மோகன் சொல்ல மாட்டார். எப்படியாவது என்ன ஹோம் ஒர்க் செய்யவேண்டும் என்பதை வாங்கிக் கொடுத்துவிடுவார் என்பது ரம்யாவுக்கு தெரியும். இப்படி பல சமயங்களில், ‘உன்கிட்ட மட்டும் ஒண்ணு சொல்லவா?. நீ யார் கிட்டயும் சொல்லக் கூடாது’ என்று அய்யாவிடம் கோரிக்கை வைப்பாள். அவரும் எச்சரிக்கையுடன் அந்த ரகசியங்களைக் காப்பாற்றுவார். ஆனால், பிறகு ரம்யாவே அதை அவளுடைய அம்மா அல்லது அப்பாவிடம் சொல்லிவிடுவாள். மோகன் மாட்டிக் கொள்வார்.
ஆட்டோ அவர்கள் வீடு இருக்கிற சாலையில் திரும்பியது.
“சமோசா சாப்பிட்டுட்டு போலாம்ய்யா”
மோகன் ஏதும் மறுத்து சொல்லாததால் ஆட்டோ டிரைவரும் வண்டியின் வேகத்தைக் குறைத்தார். உடன் மோகன் “நிப்பாட்டாதீங்க. வீட்டுக்குப் போங்க” என்று ஆட்டோ டிரைவரிடம் சொல்லிவிட்டு, “இதோ பாரு.. இப்ப சமோசா சாப்பிட்டா, சாப்பாடு சாப்பிட முடியாது” என்றார்.
ஆட்டோ வீட்டு வாசலில் நின்றது. அவர் புத்தகப் பைகளைத் தூக்கிக்கொண்டு, லிப்ட் நோக்கி நடக்க, அவருக்கு முன்னரே இறங்கிய ரம்யா, படிக்கட்டுகளை நோக்கி ஓடினாள்.
“ஏய்.. ஓடாத. லிஃப்டுல போகலாம் வா”
“முடியாதுய்யா நான் படியில வர்றேன் என்னை பர்ஸ்ட் புளோர்ல கூட்டிக்க’’
குட்டிக் கால்களை தூக்கித் தூக்கி வைத்து, படிகளில் ஏறத் துவங்கினாள். மோகன் லிப்ட் கதவை மூடி, ‘மூன்றாவது தளம்’ என்று அழுத்தாமல், ‘முதல் தளம்’ என்று அழுத்தினார்.
முதல் தளத்தில் லிப்ட் நின்றது. அவர் கதவுகளை திறந்து பார்த்தால், ரம்யா இரண்டாவது தளத்துக்கு படியேறியபடி, “இரண்டாவது ஃப்ளோருக்கு வந்திடுய்யா..” என்றாள்.
அவர் இரண்டாவது தளத்தில் நிறுத்தாமல், நேராக அவர்கள் பிளாட் இருக்கும் முன்றாவது தளம் பொத்தானை அழுத்தினார். லிப்ட் மூன்றாவது மாடிக்கு போய்விட்டது.
லிப்ட் கதவைத் திறந்தார். அவர்கள் பிளாட் வாசலில் இரண்டு ஜோடி ஷூக்களும் ஒரு ஜோடி செருப்பும் இருப்பதும் தெரிந்தது. யாரோ இன்று மூன்று மணிக்கு வருவதாக சொல்லியிருந்தது அவருக்கு நினைவு வந்தது. காலிங் பெல் அடித்தார்.
”என்னை ஏன்யா செகண்ட் ப்ளோர்ல கூட்டிக்காம, நீ பாட்டுக்கு மேல வந்துட்ட?’’ என்று மூச்சிரைத்தபடி ஏறிவந்து வந்து அவருடைய சட்டை பிடித்து இழுத்து ரம்யா கேட்பதற்கும், வீட்டுக் கதவை மோகன் மனைவி திறப்பதற்கும் சரியாக இருந்தது.
கருப்பு கலர் கோட் பேண்டில் ஒருவரும் சட்டை இன் பண்ணிய வேறு இருவரும் மோகனைப் பார்த்ததும் டக்கென்று சோபாவில் இருந்து எழுந்து நின்றார்கள். கோட் போட்டிருந்தவர் கையில் ஒரு பெரிய ரோஜாப் பூங்கொத்து அதை நீட்டியபடி நாசுக்கான ஆங்கிலத்தில்,
“நாங்கள் எம்.எஸ்.எம் பல்கலைக்கழகத்திலிருந்து வருகிறோம். நான் காமர்ஸ் டிப்பார்ட்மெண்ட் டீன் ஷங்கர். இவர், எச்.சோ.டி. 7ஆம் தேதி நடக்கவிருக்கும், ‘நிதித்துறை வேலை வாய்புகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்’ குறித்த சர்வதேச கான்பிரன்ஸ்சில் நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தொடக்க உரை ஆற்ற ஒப்புக்கொண்டதற்கு நன்றி. முறைப்படி அழைக்க வந்திருக்கிறோம்” என்றார் அவர்.
அவர்களை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, மோகன் அருகில் வந்து, அவரை அவள் உயரத்திற்கு குனியச் சொல்லி, காதில், “என்னைய விட்டுட்டா லிப்ட்ல வந்த.! இரு.. இரு. இவுங்க போகட்டும். உனக்கு இருக்கு!” என்று கிசுகிசுப்பான குரலில் மிரட்டிவிட்டு உள்ளே ஓடினாள் ரம்யா.