ஊட்டி வளர்த்த கதை!
பி.ஆர்.ராஜன்

ஊட்டி வளர்த்த கதை!

நான் உள்ளே நுழைந்தபோது வீடு கலவர பூமிபோல இருந்தது. தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. மஞ்சு முகத்தில் கோபம் தாண்டவமாட தீபுவை எரித்துவிடுபோலப் பார்த்துக்கொண்டிருந்தாள். சில விநாடிகளுக்கு முன்பு அவள் போட்ட பெரும் சத்தம் படியேறிக்கொண்டிருந்தபோது எனக்குக் கேட்டது. அதற்கு முன்பு பாத்திரம் உருண்டு ஓடும் சத்தம் கேட்டது. தரையெங்கும் தயிர்  சிதறிக் கிடந்தது. தீபு அச்சத்தில் உறைந்தவளாய் நின்றிருந்தாள். மஞ்சு ஊட்டிவிட்ட உணவு அவள் கன்னத்தில் ஈஷியிருந்தது. நான் உள்ளே நுழைந்ததும் தீபு ஆபத்பாந்தவனைப் போல என்னைப் பார்த்தாள். நான் அவளையும் மஞ்சுவையும் மாறிப் பார்த்தேன். தரையில் இறைந்து கிடந்த உணவை மிதிக்காமல் உள்ளே வந்து தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு அதை அணைத்தேன். தீபுவின் மருண்ட விழிகள் என்னையே பின் தொடர்ந்துகொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. என்ன ஆச்சு என்று கேட்டால் மஞ்சுவுக்கு இன்னும் கோபம் வரும் என்பதால் எதுவும் பேசாமல் தரையில் கிடந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய்த் தேய்க்கப் போட்டேன். தோளிலிருந்த பையை உள்ளே வைத்துவிட்டுக் கீழே சிதறியிருக்கும் உணவுத் துணுக்குகளைத் திரட்டி எடுப்பதற்கான கருவிகளை எடுத்து வந்தேன். அதற்குள் சற்றே கோபம் தணிந்திருந்த மஞ்சு என்னிடமிருந்து அவற்றை வாங்கிக்கொண்டு, “நீ போய் கொஞ்சம் தயிர் சாதம் கலந்து எடுத்துட்டு வா. இந்த ராங்கி இன்னும் சாப்பிடவேயில்லை' என்றாள்.

நான் தீபுவை அழைத்துக்கொண்டு போய் அவள் முகத்தை கழுவிவிட்டேன். அவளைத் தூக்கித் தோளில் வைத்தபடி சமையலறைக்குப் போய் தயிர் சாதம் கலந்தேன். நான் பேசாமல் இருப்பதே தீபுவின் அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது எனக்குத் தெரியும். தயிர் சாதக் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டியைப் போட்டுக்கொண்டு கூடத்திற்கு வந்தேன். தீபுவை சோபாவில் உட்கார வைத்துவிட்டு அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன். அவளும் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். திட்டப் போறியா, அடிக்கப் போறியா, கத்தப் போறியா என்பது போன்ற கேள்விகள் அந்தப் பார்வையில் தெரிந்தன. நான் வேண்டுமென்றே என் எதிர்வினையைத் தாமதப்படுத்தினேன்.

மஞ்சு வேலையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள். கிண்ணத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் கொஞ்சம் தயிர் போடு. ரொம்ப திக்கா இருக்கு. மென்னிய புடிக்கும்' என்றாள். கிண்ணத்தை எடுத்துக்கொண்டு எழுந்தேன். “பக்கத்துல ஹாட்பேக்ல பீன்ஸ் கறி இருக்கும் அதையும் போட்டு கொண்டுவா' என்றாள். அப்படியே செய்தேன். வீடு அமைதியாக இருந்தது. மஞ்சுவின் முகத்தில் இயல்பு நிலை கொஞ்சம் எட்டிப் பார்த்தது. “என்ன பண்ணினா?' என்று கேட்டேன்.

“என்ன பண்ணினாளா? சொல்பேச்சே கேக்கறதில்ல. கார்ட்டூன் பாத்துட்டே சாப்பட்றது பிரச்சனை இல்ல. ஆனா ஊட்டும்போது ஒழுங்கா காமிக்கணுமா வேணாமா? ஊட்ட வரும்போது மூஞ்சி மூஞ்சிய திருப்பிக்கறது. கார்ட்டூன் படத்தை விட்டு கண்ண எடுக்கறது கடயாது. பாத்துட்டுப் போ. வேண்டாங்கல வாய ஒழுங்கா காமிச்சா ஊட்டி முடிச்சிட்டு நான் பாட்டுக்கு என் வேலைய பாப்பேன்ல? சொல்லிட்டே இருந்தேன். காதுலய போட்டுக்கல. வாய்ல ஊட்ற சாதம் கன்னத்துலயும் கழுத்துலயும் விழுது. அதான் ஒண்ணு போட்டேன். உடனே அழுக. கைய கால ஆட்டிக்கிட்டே எழுந்து ஓடினா. பாத்தரம் செதறு தேங்கா மாதிரி உருண்டுது. அப்பதான் சத்தம் போட்டேன். நீயும் வந்துட்ட. இனிமே நீயாச்சு உடம் பொண்ணாச்சு. எப்படி ஊட்டுவியோ தெரியாது' என்றாள்.

‘ஆடாம உக்காருடின்னா கேக்கறதில்ல. வாய ஒழுங்கா தொறன்னா கேக்கறதில்லை. இந்தப் பக்கமா ஒக்காருன்னா கேக்கறதில்ல.

சொல்பேச்சே கேக்கறதில்ல. டிவிய ஆஃப் பண்ணினா எதோ பெல்ட்டால அடிச்சா மாதிரி வீல் வீல்னு அழுக. என்னால சமாளிக்கவே முடியல' என்று  சொல்லும்போது மஞ்சுவின் குரலில் சிறு விசும்பல் கசிந்தது.

நான் தீபுவை நோக்கித் திரும்பினேன். ‘சொல்பேச்சு கேக்க மாட்டியா?' என்றேன். இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல தீபு என்னைப் பார்த்தாள். ‘சொல்பேச்சு கேக்காட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?' என்று கேட்டேன். இதற்கும் எதுவும் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டேன்.

“சொல்பேச்சு கேக்காம ஒரு புறாவுக்கு நடந்த ப்ராப்ளம் உனக்குத் தெரியமா?' என்றேன்.

“எந்தப் புறா?' என்றாள்.

“அது ஒரு குட்டிப் புறா. ஒன்ன மாதிரி சின்னக் கொழந்த' என்றேன்.

தீபுவின் முகம் மலர்ந்தது. ஒரு வாய் ஊட்டிவிட்டேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வாங்கிக்கொண்டாள்.

“அந்தப் புறாவுக்கு என்ன ப்ராப்ளம்?' என்றாள். நான் மஞ்சுவை ஓரக் கண்ணால் பார்த்தேன். அவளும் கதை கேட்க ஆர்வமாக இருப்பதுபோலத் தோன்றியது. உற்சாகமாகச் சொல்லி தொடங்கினேன்.

“அது ஒரு பெரிய்ய ஊரு. நம்ம இருக்கறா மாதிரி சிட்டி கிடையாது. வில்லேஜ். நெறய மரம் செடி எல்லாம் இருக்கும். ரொம்ப தூரத்துக்கு வயல் இருக்கும். அந்த ஊர்ல ஒரு பெரிய மலை இருந்தது.'

“இப்ப இல்லையா?'

“இருக்கும். மலை எங்க போகும். அங்கயேதான் இருக்கும்.' இன்னொரு வாய் உள்ளே போனது.

“அந்தப் புறா?'

“சொல்றேன். அந்த மலைக்கு அடியில பெரிய தோட்டம். அந்தத் தோட்டத்துல நெறய பேர்ட்ஸ் இருந்தது. இந்தப் புறாவும் அங்கதான் இருந்தது.'

“தனியாவா?' இன்னொரு வாய்.

“தனியா எப்படி இருக்கும்? அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணன், அக்கான்னு நெறய புறா. மொத்தம் ரிலேட்டிவ்ஸ்லாம் சேத்து ஃபார்ட்டி டோவ்ஸ். எல்லாம் கலர் கலரா இருந்தது. ஆஷ் கலர், ரெட் கலர், ப்ளூ கலர்னு நெறைய கலர்ல டோவ்ஸ். இந்தக் குட்டிப் புறா ஆஷ் அண்ட் ரெட் கலர்ல இருந்தது.'

தீபுவின் கண்கள் விரிந்தன. இன்னொரு  தேக்கரண்டி. “அந்த ஆஷ் அண்ட் ரெட் கலர் டோவ்க்கு என்ன ப்ராப்ளம்?'

“சொல்றேன்....' இன்னொரு தேக்கரண்டி. தொலைக்காட்சி பக்கமே தீபு திரும்பவில்லை.

பி.ஆர்.ராஜன்

பஞ்ச தந்திரக் கதையில் வரும் புறாக் கதையை வளர்த்துக்கொண்டு போனேன். பள்ளிக்கூடத்தில் கேட்டு, பிறகு புத்தகத்திலும் படித்த கதை. புறாக்கள் எல்லாம் ஒன்றாகப் பறந்து சென்றன. வழியில் வேடன் விரித்த வலையை அறியாமல் தானியங்களைத் தின்னச் சில புறாக்கள் விரும்பின. கீழப் புறா எச்சரித்தது. மற்ற புறாக்கள் அது சொல்வதை ஒப்புக்கொண்டாலும் குட்டிப் புறா கீழ்ப்படியாமல் தனியாகச் சென்று வலையில் மாட்டிக்கொண்டது. அதைக் காப்பாற்றுவதற்காக அத்தனை புறாக்களும் வந்து வலையில் மாட்டிக்கொண்டு அந்த வலையுடன் சேர்ந்து பறந்து சென்று வேடனிடமிருந்து தப்பின. பிறகு தங்கள் நண்பனான எலியின் உதவியுடன் வலையை அறுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தன. இந்தக் கதைக்குக் கண், மூக்கு, காது வைத்து, வசனங்களையெல்லாம் இன்றைய மொழியில் சொல்லி வளர்த்துக்கொண்டு போனேன். கிண்ணத்தில் இருந்த உணவின் அளவைப் பார்த்துக்கொண்டே கதையை வளர்த்தினேன். கிண்ணம் காலியான பிறகும் கதை முடியவில்லை. “இப்ப ஒரு சின்ன ப்ரேக்' என்று சொல்லிவிட்டு அவள் வாயைக் கழுவிவிட்டுத் தண்ணீர் குடிக்கச் சொன்னேன். மீதிக் கதையை என் மடிமீது படுத்துக்கொண்டிபடி கேட்டாள்.

“வீட்டுக்கு வந்ததும் எல்லாப் புறாவும் அந்தக் குட்டிப் புறா மேல கோவமா இருந்தது. ஆனா தாத்தா புறா அவங்கள அடக்கிடுச்சு. பாவம் சின்ன கொழந்த தெரியாம செஞ்சிடிச்சு. இனிமே அது பெரியவங்க சொல்ற பேச்சு கேட்டு  நடந்துக்கும். இல்லயா செல்லம் என்று தாத்தா புறா சொல்லிச்சு. ஆஷ் அண்ட் ரெட் கலர் புறா தலையை ஆட்டி தாத்தாவுக்கு தேங்ஸ் சொல்லிச்சு... இனிமே சொல்பேச்சு கேக்கறன் தாத்தான்னு சொல்லிச்சி.'

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் போது கதையிலிருந்து அறியும் நீதி என்று எதுவும்  சொல்லக் கூடாது என்று எங்கோ படித்திருக்கிறேன். இதுதான் கதையின் செய்தி என்று சொல்வது குழந்தைகளின் கற்பனையைக் கட்டுப்படுத்திவிடும் என்று அந்தப் புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் நான் இந்தக் கதையைச் சொன்னதே சொல்பேச்சு கேட்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான். அதைச் சொல்லாவிட்டால் மஞ்சு என்னைச் சும்மா விட மாட்டாள். அதனால் நீதியை அந்தப் புறாவின் வாயிலிருந்தே வரவழைத்தேன்.

“தூங்கிட்டா' என்றாள் மஞ்சு. அவள் முகம் இயல்பு நிலைக்கு முழுமையாகத் திரும்பியிருந்தது. “டெய்லி வந்து இப்படி ஒரு கதை சொல்லுப்பா. எனக்குப் பெரிய நிம்மதியா இருக்கும்' என்றாள்.

“ஆஃபீஸ்ல குடுக்கற சம்பளத்த குடுத்துடு. டெய்லி புக்ஸ் படிச்சு ஒண்ணு என்ன, பத்து கத சொல்றேன்' என்றேன்.

“பெத்த பொண்ணுக்கு கத சொல்றதுக்குப் பணம் கேக்கறயே, வெக்கமா இல்ல?' என்றாள்.

“சத்தம் போடாதே. எழுந்தரப் போறா' என்றேன் சிரித்துக்கொண்டே.

“அவ இப்போதைக்கு எழுந்துக்க மாட்டா. காலைலதான் எழுந்துருப்பா. தூக்கிட்டுப் போய் பெட்ல போட்டுட்டு வா. சாப்பிடலாம்' என்றாள்.

“நான் இன்னம் ட்ரெஸ்ஸே மாத்தல' என்று

சொன்னபடி தீபுவைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனேன்.

**

குழந்தைகள் தாமாகச் சாப்பிடத் தொடங்கும்வரை அவர்களுக்கு வேண்டிய உணவை வேளா வேளைக்குக் கொடுப்பது பெரிய பேராட்டம்தான். ஒரு காலத்தில் கதைகளையும் நிலா, பறவைகள் போன்றவற்றையும் பாடல்களையும் பயன்படுத்திவந்த பெரியவர்களுக்குக் கடந்த நூற்றாண்டின் இறுதியில் தொலைக்காட்சி ஆபத்பாந்தவனாகக் கை கொடுத்தது. காட்சி ஊடகத்தின் சேவை பிறகு இணையம், கைபேசி என்று தன் கரங்களை விரித்துக் குழந்தை வளர்ப்புக்கு உதவ ஆரம்பித்துவிட்ட பிறகும் இளம் பெற்றோரின் பிரச்சினைகள் ஓய்ந்துவிடவில்லை. அதுவும் தீபுவைப் போன்ற குழந்தைகள் அம்மாக்களுக்கு எப்படியெல்லாம் தொல்லை

கொடுக்க முடியும் என்னும் வித்தைகளின் நுட்பங்களில் தேர்ந்தவர்கள். பத்து வயது ஆவதுவரையிலும் உண்ணும் விஷயத்தில் தீபு பெரிய சலாலாகத்தான் இருந்தாள். நான் வீட்டில் இருக்கும்போது ஏதாவது கதை சொல்வேன். மஞ்சுவிடம் கைவசம் கதைகள் அதிகம் இல்லை. கதை சொல்லப் பொறுமையும் இல்லை எப்போதாவது சொன்னால் பாட்டு, நடன அசைவுகள், நாடகீயமான முக பாவங்கள், குரலில் ஜாலங்கள் எல்லாம் சேர்த்து அற்புதமாகச் சொல்லுவாள். ஆனால் அப்படிச் சொல்வதற்கான மனநிலை தினமும் வராது. வரவும் முடியாது. எனவே தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றின் உதவி யோடு தீபுவை ஊட்டி வளர்த்தாள்.

தீபு அநியாயத்திற்குத் தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் குழந்தைகள் படங்களைப் பார்ப்பாள். மஞ்சுவுக்கு இதில் வசதியும் சிக்கலும் கலந்தே இருந்தன. சில சமயம் சிக்கல் பெரிதாகும். ஒருமுறை அப்படித்தான் முன்வாசல் கூடத்திலிருந்து சத்தம் கேட்டது. நான் பின்பக்க அறையில் அமர்ந்து மடிக்கணிணியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன்.

சத்தம் முதலில் கேட்டபோது இது வழக்கம்தானே என்று அலட்சியப்படுத்தினேன். மறுபடியும் சத்தம் வந்தது. ‘கொஞ்சம் இருடி, இந்த ப்ரோக்ராம் மட்டும் பாத்துட்டு மாத்தறேன்' என்று மஞ்சு கெஞ்சினாள். தீபு அதற்கும் சம்மதிக்கவில்லை என்று புரிந்தது. விசித்திரமான ஒலிகளை எழுப்பி கத்திக் கூப்பாடு போட்டு, ‘கார்ட்டூன் போடு...' என்று கத்தினாள்.

‘சத்தம் போட்டா அறைஞ்சி இழுத்துடுவேன். கொஞ்ச நேரம் சும்ம இருடி' என்று மஞ்சு அதட்டினாள். இப்போது தலையிட்டால் நான் ஊட்ட வேண்டியிருக்கும். அல்லது என் லேப்டாப்பைக் கொடுத்துவிட்டு வர வேண்டியிருக்கும். இரண்டும் இப்போது முடியாது என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தேன்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. அம்மாவும் பெண்ணும் மத்யஸ்தர் இல்லாமலேயே உடன்படிக்கைக்கு வந்துவிட்டார்கள் என்று நினைத்து நிம்மதியடைந்தேன். மீண்டும் சத்தம் வந்தது. தீபு வீல் என்று கத்தினாள். ‘அட்வர்டைஸ்மென்ட்தானடி ஓடுது... ஏன் அடிபட்ட நாய் மாதிரி கத்தற?' என்றாள் மஞ்சு. ‘மாத்து... மாத்து... மாத்து...' என்று தீபு பதிலுக்குக்குப் பதற்றமாகக் கத்தினாள். ‘இன்னொரு வாட்டி சத்தம் போட்ட, மண்டய பேத்துருவேன்' என்று மஞ்சு உரத்த குரலில் மிரட்டினாள். தீபு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். இனிமேலும் தலையிடாமல் இருந்தால் மஞ்சு என் மண்டையைப் பிளந்தாலும் பிளந்துவிடுவாள் என்பதால் கூடத்திற்கு விரைந்தேன். நான் வந்த வேகத்தைப் பார்த்த தீபுவின் அழுகை தணிந்தது. ‘என்ன புடிவாதம் பார் இதுக்கு. அஞ்சு நிமிஷம் ஏதாவது பாக்க விடறாளா... எப்பப் பார்த்தாலும் கார்ட்டூன், போகோ, நேஷ்னல் ஜாக்ரஃபி. எனக்கு பைத்தியமே புடிச்சிடும் போலருக்கு. இனிமே இவளுக்கு நான் சாதம் ஊட்ட மாட்டேன். அதுக்குன்னு ஒரு ஆளைப் போட்டுக்கோ. இல்லாட்டி நீயே ஊட்டிவிடு' என்று சொல்லிவிட்டு ரிமோட்டை வீசி எறிந்துவிட்டு எழுந்து உள்ளே போனாள் மஞ்சு.

நான் அமைதியாக ரிமோட்டை எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தேன். தீபு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அழுகை நின்றுவிட்டிருந்தது. கன்னத்தில் கண்ணீரின் தடம் தெரிந்தது. நான் இடுப்பில் கை வைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னைப் பார்த்தாள்.

சிறிது நேரம் கழித்து, ‘சொல்பேச்சு கேக்காத கதை சொல்லுப்பா' என்றாள்.

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com