திருப்பண்டம்!

சிறப்புப்பரிசு பெறும் சிறுகதை
திருப்பண்டம்!
 ஓவியம்: ரவிபேலட்
Published on

 தேவாலயத்தின் கடைசிக் கதவும் அடைக்கப்பட்ட சத்தம் கிறீச்சென்று கேட்டதும், திடுமென அந்தகாரத்தில், தான்மட்டும் தனித்து விடப்பட்டதையுணர்ந்து நடுமுதுகில் பனி படர்ந்ததுபோல உறைந்து போனான் பிதேலி. ஆலயத்தினுள்ளே அவன் நெடுநேரமாகப் பதுங்கியிருந்த மரபெஞ்சுகளின் அடியிலிருந்து மெல்ல வெளிவந்தவன் கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான். மெதுவாக இருளுக்கு பழகிக் கொண்டிருந்த கண்களை ஒருதரம் தேய்த்து விட்டுக் கொண்டான். அவன் நின்ற இடத்திலிருந்து கல்லெறி தூரத்தில் இரு மெழுகுவர்த்திகள் தம் சிவப்பு நிற கண்ணாடிச் சிமிழுக்குள் அசையாது சுடர் விட்டு எரிவதைக் கொண்டு அவ்விரு சுடர்களின் மத்தியில்தான் நற்கருணைப்பேழை இருக்குமென்பதை அனுமானித்தான். இரு வெளிச்சப் பொட்டுக்களும், அவனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு பசித்த சிறுத்தையின் சிவந்த விழிகளாகத் தோன்றின.  பிதேலி திடுமென தன்னைச் சுற்றிலும் அதீத குளிரை உணர்ந்தவனாய், இரு கைகளையும் மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றான். தேவாலயக் கூரையில் புறாக்கள் குனுகுவது கூட, நகரத்தை முற்றுகையிட தொலைவிலிருந்து பாய்ந்து வரும் கண்ணுக்குத் தெரியாத ஒரு குதிரைப் படையின் குளம்படிச் சத்தம்போலத் தோன்றி அவனது சிறிய இதயத்தை படபடக்கச் செய்தது.

அவ்வளவு சிறிய மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் அத்தனை பெரிய தேவாலயத்தை நிரப்ப போதுமானதாக இல்லை. அவனுக்கு இடமும் வலமுமாய் வரிசையாக இருந்த சிறு பீடங்களில் நிறுவப்பட்டிருந்த ஒவ்வொரு ஆளுயர  புனிதர்களின் சுரூபத்தின் மீதும் மெலிதாக படிந்திருந்த வெளிச்சம் அவர்களின் பாதி உருவத்தை மட்டும் அவனுக்கு கட்புலனாக்கியது. அரையுடல் மனிதர்கள் இரு மருங்கிலும் அந்தரத்தில் நிற்பது போன்ற தோற்றமயக்கம் அவனது அச்சத்தை மேலும் கூட்டியது.  பீடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அங்கு நற்கருணைப் பேழை இருக்கிற பீடத்தின் பின்புறம் சக்ரீஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய சச்சவுக்கமான அறையொன்றில்தான் சகல பந்தோபஸ்துக்களுடன் அவன் தேடி வந்த பொருள் இருக்கிறது.

திருப்பண்டம்!

அதைத்தான் அவன் திருட வேண்டும்.காலம் காலமாக அவ்வூர் மக்கள் பாதுகாத்து வருகிற ஒரு நம்பிக்கையை, அந்த தேவாலயம் தம் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தும் என எது மக்களை நம்ப செய்கிறதோ அதனை, பல நூறு வருடங்கள் ஆன பிறகும் மக்கிப் போகாமல் இருக்கிற புனிதரின் பாதுகாக்கப்பட்ட அழியாத திருவுடலின் ஒரு மீச்சிறு பகுதியைத்தான் இப்போது அவன் திருட வேண்டும்!

பிதேலி ஒரு தொழில்முறை திருடன். அவ்வூரில் வசித்தாலும், அவ்வப்போது காணாமல் போய் விடுவான். திரும்பி வரும்போது கைக்கொள்ளாத பணத்தோடு வருவான். அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று கேட்டால் கேரளாவுக்கு தொழில் பார்க்கச் சென்றிருக்கிறான் என்றுதான் எப்போதும் சொல்வாள் அவன் மனைவி மேரி. ஆனால், அவன் எங்கு என்ன தொழில் செய்கிறான் என்பதில் யாருக்கும் தெளிவில்லை.அவன் மனைவியின் கழுத்திலும், காதிலும் குளுமையாக கிடக்கிற சொர்ணத்தைக்கொண்டு, அவன் கள்ளக் கடத்தலில் ஈடுபடுவதாக ஊருக்குள் ஒரு அனுமானம் உண்டு. முதலில், வயிற்றுப் பாட்டுக்காக திருட ஆரம்பித்தவன்தான் பிதேலி. பின்னர் அதையே தனது வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டு ஒரு தொழில்முறைத் திருடனாகி விட்டான்.ஊரின் பெருங்குடிகள் தமது நிழற்குற்றங்களுக்கு கையாளாக அவனை நியமித்துக் கொள்ளுமளவுக்கு குற்றச் செயல்களில் தேர்ச்சி பெற்றிருந்தான்.

இம்முறை பிதேலி ஊருக்கு வந்திருந்த போது, அவ்வூரின் பங்களாகாரர்களில் ஒருவனான பர்னபாசு, அவனை கொம்புத்துரை அருகிலிருந்த  ஒரு பனைவிடிலியில்  தற்காலிகமாக அமைந்திருந்ததொரு சாராயக்கடையில் சந்தித்தான்.

"அந்த வேசி மவன சந்தி சிரிக்க வைக்கணும்டா, பிதேலி!"

"செஞ்சுருவோம் மச்சான்...என்ன எப்படின்னு மட்டும் சொல்லுங்க! முடிச்சு உட்டுருவோம்"

"கோயில் திருப்பண்டத்த தூக்கிருடா... என்னிய அத்தன பேர்த்துக்க முன்னுக்க கள்ளனாக்கி நிக்க வுட்டானுல்லா! அவனையும் அதே மாறி திருட்டு பட்டங்கட்டி தொரத்தி வுடனும்"

"திருப்பண்டத்தையா மச்சான்..."

"என்னாலே! கொரல் கவ்வுது..."

"அடச்சே! பயம்லாம் ஒண்ணும் இல்ல.அது சக்ரீஸ்ட்க்குள்ள சகல பந்தோபஸ்த்துக்களோட வச்சிருப்பாவளேன்னு பாத்தேன்!"

"ஆமா... நாளைக்கு பெரிய வியாழக் கெழம..திருப்பலி முடிஞ்சு கண்ணாடிப் பாத்திரத்தில வெச்சு, காலம்காலமா  காத்துகிட்டு வார அர்சிஷ்டரோட திருப்பண்டத்த ஊர்மக்க எல்லாத்துக்கும் முத்தி செய்ய தருவாங்க. நீ இன்னிக்கி ராப்படவே கோயில் உள்ளுக்க போயி பதுங்கிரு. திருப்பண்டத்த நாம எடுத்தது தெரியாம நேக்கா தூக்கிரணும். நாளைக்கி சனங்க நெறஞ்சு இருக்க சபையில திருப்பண்டத்தக் காணாம அந்த சாமிப் பய திருதிருன்னு முழிக்கணும். என்னைய திருடன்னு சொன்ன சாமியே கள்ளன் தாம்னு ஊருக்கு முன்ன நிரூபிக்கணும்."

பர்னபாசு தன்னுள் நின்றுஎரிந்து கொண்டிருந்த அவமானத்தை என்ன செய்வதென்று தெரியாமல், போத்தலில் இருந்த நாட்டுச் சாராயத்தை ஒரே மூச்சில் வாயில் கவிழ்த்தான். அன்று காலையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் கண்முன் காட்சியாக விரிந்தன.

 ஓவியங்கள்: ரவிபேலட்

"சவேரியார் கோயில ஒட்டி இருக்க நாலு ஏக்கரா சவுக்கந்தோப்பும், மேக்க குண்டாங்கரைக்கி பக்கத்துல இருக்க சோங்கான் விளையும் மூணு தலைமுறைக்கி முன்னாலயே கோயிலுக்கு பாத்தியதையாகிட்டு...அது சம்மந்தமா எல்லா வெவரமும் பங்குப் பேரவைல சமர்பிச்சிருக்கேன். பத்தாத்தைக்கி சர்வேயர கூட்டி வந்து அளந்து கூட பார்த்தாச்சுவே.நீங்க உங்க பூர்வீக நெலமுன்னு இதுநா வரை அனுபவிச்சுட்டு இருந்தது பூராம் கோயில் நெலமாக்கும்! நீமர் இதுக்கு ஏதாகிலும் அப்ஜெக்சன் சொல்லதா இருந்தா கோயில் கமிட்டி கோர்ட்டுக்கு வந்து உண்மைய ப்ரூப் பண்ணவும் தயங்காது! "

பாதிரியார் அருமை நாயகம் அன்று காலையில்,  குருமார் இல்லத்தில் நடந்த ஊர் கமிட்டியாரின் பொதுக் கூட்டத்தில் முத்தாய்ப்பாக தீர்ப்பு சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த பர்னபாசு முகம் கறுத்துப் போனது.

"அது எப்புடிவே! அப்பம் என் வீட்டு அட்டாணில நாங்க தலமுறையா பாதுகாத்திட்டு வார, என் பூட்டன் கையெழுத்து போட்டு குடுத்த மூலப்பத்திரம் அவரு மூத்திரத்தக்கொண்டு எழுதனதா?"

"எலெய்... பர்னபாசு! சாமி முன்னுக்க நின்னு அவசங்கையா பேசுத! அளந்து பேசுல... குரு சாவம் குல நாசம்!"

"ஆமாம் பெரிய சாபம்... இவரு யோக்கியத எங்களுக்கு தெரியாதாங்காட்டியும்! எனக்கு ஒரு கொமப்புள்ள இருந்திருந்தாலோ, எம்பொஞ்சாதி ஓரோருத்தி மாதிரி வெவரமா இருந்திருந்தாலோ இந்தாள் ஞாயம் வேற மாதிரில்லா இருந்திருக்கும்! ச்சீ...ச்சீ...அவுசாரிமுண்டைகள் புருசன் போன பின்னாட்டியும்ல நெஞ்ச நிமுத்திக்கிட்டு முன்ன முன்ன வந்து நடமாடுதாளுகள்"

காப்பித்தட்டத்தை கையிலேந்தி அனைவருக்கும் விநியோகித்து கொண்டிருந்த குருசம்மாவை, சாடையாகப் பார்த்து அவன் பேசியதும் அவள் கண்களில் நீர் துளிர்க்க உள்ளே ஓடிச்சென்று விடவே, ஊர் பெரியவர்கள் பர்னபாசை கண்டிக்க தலைப்பட்டனர்.

"எல.. பேப்பயலே!நீ எத மனசுல வெச்சுட்டு இப்படிப் பேசுத..."

குருசம்மாவின் கணவன் சுனாமியில் இறந்து விடவே, ஆதரவற்ற அவளையும்  அவளின் பிராயத்து மகளையும் கோயில் நிர்வாகம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டிருந்தது. சுனாமியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கோவில் நிலத்தில் ஊர் செலவில் கட்டி வழங்கப்பட்டது. எல்லாரையும் போலவே பாதிக்கப்பட்ட குருசம்மா குடும்பத்துக்கும் ஒரு வீடு வழங்கப்பட்டது. அதன் பின், வயிற்றுப் பிழைப்புக்காக குருமார் இல்லத்தில் தனக்கு தெரிந்த சமையல் வேலையைச் செய்தவள் அங்கு அண்டிவாழ தலைப்பட்டாள். ஊரின் வக்கிரவாதிகள் சிலர் இதுகுறித்து அவ்வப்போது அவதூறு பரப்புவதும் உண்டு. பங்குத்தந்தையின் பவித்திரத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், இன்று அவரை அவமதிக்கும் நோக்கில் பர்னபாசு குருசம்மாளை சாடை பேசியதும் கூட அப்படித்தான்.

"எதையும் மனசுலயும் வைக்கல... எவளையும் கூட்டிக்குடுத்து குடித்தனமும் நடத்தல... இதுக்கு தான் சாதி மாறுன பயலுவள கோயிலுக்குள்ள விடக் கூடாதுன்னு அப்பமே சொன்னேன்.எவங்கேட்டான்? இப்பம்,எவ்வளவு நேக்கா என் மாப்ள மச்சானுவளையே எனக்கு எதிரா பேச வெச்சுட்டான் பாரு! என்ன கும்பாதிரி... அன்னிக்கி நான் சொல்லும்போது, திருச் சமூகத்துக்கு முன்னால சாதியெல்லாம் இல்லன்னு, கீழ்சாதி பயக்க கையால அப்பத்த வாங்கித் தின்னுட்டு ஆமென் சொன்னியள்ளா..இன்னிக்கி எனக்குன்னா, நாளைக்கு உமக்குவே! ஆதிகிறிஸ்த்தவன் எனக்கு இந்த அநியாயம் பண்ணினத்துக்கு, இந்த பங்கும் இந்த ஊரும் கட்டமண்ணா தான் போவும் பாத்துக்கிடுங்க"

மண்ணை வாரி இரைத்து சபித்தபடி சென்றான் பர்னபாசு.

பிதேலி அன்று அந்திசந்தியில் வீட்டெதிரில் இருந்த கிணற்றின் துலாவில் தண்ணீர் இறைத்து குளிப்பதை ஒரு அதிசயம் போல பார்த்துக் கொண்டிருந்தாள் அவனது மனைவி மேரி.

"என்ன மச்சான்... இந்நேரத்துல குளிக்கிறீயள்?"

"குளிக்கதுக்கு ஏதுட்டி நேரங்காலம்லாம்..."

" ஏங்குரன்...முதுவு கிதுவு தேச்சு விடட்டுமா?"

"ஒண்ணும் வேணாம்ட்டி...நீ உள்ள போ!"

அவனது விரிந்த முதுகைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அடிவயிற்றை, நூற்றுக்கணக்கில் அயிரை மீன்கள் மொய்த்தன. கடற்கரையில் காற்றடிக்கு ஏற்றபடி உருண்டு செல்லும் இராவணன் மீசைச் செடிப்பந்தினைப்போல அவனிருக்கிற திசை நோக்கி அவளது பெருங்காமம் அவளைத் தானாகவே உந்திச் சென்றது.

தன் முதுகில் மேரியின் கைகளை உணர்ந்த பிதேலி, திருக்கை வாலால் கொட்டுபட்டதைப் போல துடித்துப் போனான்.

"தாயளி! இப்பம் என்னத்துக்கு எங்கிட்ட வந்து கரவல போடுத...நா ஒரு கோயில் காரியமா போயிட்டு இருக்கம்னு சொன்னம்லா!"

இரும்பு கிராதியை ஆக்சா பிளேடினால் அறுத்துக் கொண்டிருந்த பிதேலி, கவனமின்றி கைகளில் வெட்டிக் கொண்டான். புது ரத்தம்  ஆலயத்தின் வெண்ணிறதரையில் அந்த இருளிலும்  பளபளத்தது. பக்கவாட்டில் யாரோ வந்து நிற்பது போன்ற பிரம்மை எழுந்தது பிதேலிக்கு. ஒரு கணம் கண்களை அழுந்த  மூடித்திறந்தான்... பின்பு, முன்னை விட வேகமாக கிராதிக்கதவை அறுக்க ஆரம்பித்தான். சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு இங்கிருந்து சென்று விட வேண்டும். மேரியிடம் அவன் இன்னும் கொஞ்சம் தன்மையுடன் நடந்திருக்கலாம். முப்பொழுதும் அவனையே எதிர்பார்த்து கொண்டு கிடக்கிறவள், அவளிடம் இப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்திருக்க வேண்டாம் அவன். இப்போது கூட அவனுக்காக கட்டுமந்திர செபத்தை சொல்லி எண் திசையிலும் அவனைச் சுற்றிலும் சிலுவைக்குறி  வரைந்து அவனையே நினைத்துக் கொண்டு குடிசைக்குள்  கிடப்பாள். அவள் அப்படிப் படுத்திருக்கிற சித்திரத்தை கற்பனைத்தவனுக்கு, களவுத்தொழிலை இதோடு தலைமுழுகி விட்டு மேரியின் அருகிலேயே அண்டிக்கிடந்துவிட வேண்டும் என்ற ஆவேசம் தோன்றியது. 'இந்த திருப்பண்டத்தோட, இந்த நீசப்பிழைப்புக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டுற வேண்டியது தான்!' ,என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் பிதேலி. இதையெல்லாம், அவளிடம் அவன் சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்.ஆனால்,அவன் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் தீவிரத்தை அவள் நிச்சயமாக நீர்த்திருப்பாள். கடலின் நீளத்தை அனாயாசமாக அளந்து விட்டு கரைக்கு வருகிற படகினை, கொஞ்சமே அசந்திருந்தாலும்  குப்புறத் தள்ளிவிடும் அளி போன்றவள் அல்லவா பெண்!

இரும்புக் கிராதிக்கதவு முடிந்து மூன்று பூட்டுகள் கொண்ட மரக் கதவின் கீல் மீது கையோடு கொண்டு வந்திருந்த திருப்புளியால் படம் வரைவது போல எதையோ செய்தான் பிதேலி.மரக் கதவும் திறந்து கொண்டது. உள்ளே ஒரு கையகல சவப்பெட்டி போல சிறிய தந்தப் பேழை இருந்தது. பேழையின் முன் ஒரு கணம் தெண்டனிட்டு வணங்கியவன் அதனைத் திறந்து பார்க்க உள்ளே, உள்ளங்கை அளவேயான வட்ட வடிவ கண்ணாடிப் பேழை இருந்தது. கண்ணாடிப் பேழையை மெழுகு வெளிச்சத்தில் உயர்த்திப் பார்க்க உள்ளே நெல் மணி அளவிலான ஒரு வஸ்து இருந்தது. திருப்பண்டம்!

" திருப்பண்டத்த எடுத்து எங்க வைக்க போறீங்க மச்சான்?"

"சம்சாரிவ பொழங்குற எடம்னால அர்ச்சிஷ்ட பண்டத்த நம்ம ரெண்டு பேருக்க வீட்லயும் வைக்க முடியாதுடே!"

" பேசாம கடல்ல தூக்கி போட்ருவமா மச்சான்?"

"ஒருவேளை கடல் கொந்தளிச்சி காட்டி குடுத்துட்டுன்னா..."

"அப்படியும் நடக்குமோ?குழி நோண்டி பொதச்சு வெச்சிட்டா என்ன..."

"அது அவசங்கையில்லையா மாப்ள? அற்புதங்கள நடத்தும்னு ஆயிரக்கணக்கான சனங்க நம்பிக்கும்பிடுக ஒரு ஜாமான அநியாயமா பொதைக்கச் சொல்லுதியே"

" ஆமா மச்சான். நமக்கு நம்பிக்கை இல்லாட்டியும் பாரம்பரியமா நம்ம கோயில்ல நம்ம சாதிசனம் கும்புட்டுகிட்டு வார ஒரு விசயத்த, நாமும் சகல மரியோதைகளோடதான் நடத்தணும் !"

"அத பின்னாட்டி யோசிப்போம் மாப்ள! எனக்கு மொதல்ல இந்த பாதிரிய திருட்டுப் பட்டங்கட்டி ஊர  விட்டு தொரத்தணும். நீமர் மொதல்ல திருப்பண்டத்த தூக்கிட்டு வாரும்! பொறவு ஒருத்தரும் காணாம அத நான் எப்படி முழுங்கி செரிக்கியேன் பாரும்!"

" பேசாம திருப்பண்டத்த முழுங்கிட்டா என்ன மச்சான்?'’

கிளிக்!

பிதேலி திருப்பண்டமிருந்த கண்ணாடிப் பேழையைத் திறந்தான்...

சாலையின் இருபுறமும் வேம்பு சூழ்ந்த பங்களாக்காரர்கள் தெருவில் பூசை உடுப்பணிந்து அப்பப்பாத்திரத்தை ஏந்தியவராய் துரித  நடை நடந்து வந்து கொண்டிருந்தார் பாதிரியார் அருமைநாயகம். அவர் வருகையை கட்டியம் கூறுகிறது போல வெள்ளுடை அணிந்த பீடப்பணி உதவிச் சிறார்கள் அவருக்கு முன் இருபுறங்களிலும் தம் கையில் வைத்திருந்த வெண்கல மணிக் கொத்தினை இடைவிடாது இசைத்து செல்வதைக் கேட்டு, மரங்களிருந்த காகங்கள் தம் கூட்டிலிருந்து எழுந்து எழுந்து அமர்ந்தன. குடிநீர் குழாயில் மொய்த்து நின்ற பெண்டிர் அவசர அவசரமாய் தலையை முக்காடிட்டு ஒதுங்கி நின்றனர். வேம்பின் நிழலில் அமர்ந்து வலை கட்டிக் கொண்டிருந்த ஆடவரெல்லாம் எழுந்து மடித்துக் கட்டியிருந்த கைலியை இறக்கி விட்டு தம் மரியாதையை தெரிவித்தனர். நோய்மையால் தேவாலயத்திற்கு வரமுடியாமல் நாள்பட வீட்டிலே முடங்கிக் கிடக்கிறவர்களுக்கு, அப்பத்தை எடுத்துச் சென்று அவர்கள் இல்லத்திலே வழங்கும் திருச்சபையின் தயாளத்திற்கு அனைவரும் கரம் கூப்பினர்.

வாழ்ந்து கெட்ட வீட்டிற்கான சர்வ லட்சணங்களும் நிறைந்திருந்த ஒரு வீட்டின் விரியத்திறந்திருந்த கதவின் வழி நுழைந்த பாதிரியார், நடுக்கூடத்தில் நார்க்கட்டிலில் படுத்திருந்த மெலிந்த உருவத்தின் அருகில் நின்று ஜெபங்களை தனக்குள் முணுமுணுத்தவராய், அவ்வுருவத்தின் பற்கள் கிட்டித்த வாயில் அப்பத்தை புகட்ட முயன்றார்.அப்போது, தூண் மறைவிலிருந்து  விம்மல் சத்தங்கள் எழுந்தன. பாதிரியார், தான் கொண்டு வந்த தீர்த்த சொம்பிலிருந்து புனித நீரை தெளிக்கவும், கட்டிலில் எலும்பு மட்டுமே மீதமிருந்த அந்த உருவத்திடமிருந்து அடிபட்ட ஒரு  மிருகத்தின் உறுமல் எழுந்தது. திகைத்து போன பாதிரியார், அவ்வுருவத்தின் பக்கமாக குனிந்து அது சொல்ல முனைவதை உன்னித்தார். பின் கண்களிலிருந்து கரகரவென்று நீர் வழிய," கர்த்தருக்க சத்தியமா நா உன்னைய சபிக்கலடே...லே... பர்னபாசு...என்னைய நம்புடே!' என்றார்.

அன்று பெரிய வியாழனாதலால், தேவாலயம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. போதாததற்கு, அன்று  திருப்பலி முடிவில் திருப்பண்டம் முத்தி செய்ய தருவார்களாதலால் தீரா பிணியுற்றோர், அற்புதங்கள் நிகழ வேண்டுவோர், திருமணத்தடை இருக்கிறவர்கள் என்று அனைவரும் திருப்பண்டத்தை முத்தி செய்ய அலைமோதினர்.தங்க நிற விளிம்பு கொண்ட சிறிய வட்ட வடிவ கண்ணாடிப் பேழையை உதவிக்குரு ஏந்தி கொள்ள அனைவரும் வரிசையில் வந்து அதனை முத்தி செய்தனர். பேழையின் பக்கத்தில் நின்ற சீஷப்பிள்ளை பொதுமக்களில் ஒருவர் முத்தமிட்டு முடித்ததும் கண்ணாடிப் பேழையை தன் கையில் இருந்த வெண்பட்டுத்துகிலினால் துடைத்து அடுத்தவர் அதனை முத்தமிட வசதி செய்து தந்தார். பக்தியின் மிகுதியால் திருப்பண்டத்தை விட்டு அகலாமல் நெடுநேரம் நிற்கிறவர்களை அப்புறப்படுத்தும் வேலையையும் செய்தார். மேரியும் தன்  முறைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தாள்.. அவளது சிறிய இதயம் எண் திசைகளிலும் வெம்மை சூழ்ந்த அறையில் நிற்கும் ஒரு பரிதாபம் மிக்க மெழுகுவர்த்தி போல உருகிக் கரைந்து கொண்டிருந்தது.

"அவரு காங்காம போயி இன்னியோட வருசம் ரெண்டாவுது. இங்க ஒத்தையில கிடந்து நா அல்லாடுறேன். அவுகளை எப்படியாவது எங்கண்ணுல காட்டிரும் அய்யாவே!"

வேண்டுதலை மனதுக்குள் சொல்லியவண்ணம், மேரி குனிந்து கண்ணாடிப் பேழையை முத்தமிட்டாள்.

"மேரி...மேரி..."

அவளது சூடான  கண்ணீர் துளிகள் பேழையின் மீது சிந்தின. மேரி கண்ணாடிப் பேழையை முத்தமிட்டாள். அவளின் உதட்டு ரேகைகள் கண்ணாடிப் பேழையில் படிந்தன.

"மேரி...மேரி....என்னைய காப்பாத்துட்டி!"

" இந்த பக்கம் பாரு...நா இங்குன தாம்ட்டி இருக்கேன்...கடவுளே! நா கூப்புடறது ஒருத்தருக்கும் கேக்கலையே! ரெண்டு வருஷமா இந்த கண்ணாடிச் சட்டத்துக்குள்ள என்னைய சாகவும் விடாம, போகவும் விடாம அடச்சு வெச்சு எதுக்கு இப்படி கொடுமைப் படுத்துறீரு!"

கண்ணாடிப் பரப்பைத் தீண்டி அவளது வெம்மையை அவன் உணரும் முன்னமே சீஷப்பிள்ளை, கண்ணாடிப் பேழையை வெண் பட்டுத்துகிலால் அழுந்தித் துடைத்தார்.

மேரி தலை முக்காட்டில் வாய் பொத்தி விசித்து அழுதவண்ணம் வாயிலை நோக்கிப்போய்க்கொண்டே இருந்தாள். இனி அவளைக் காண்பதற்கு அவன் மேலும் ஒரு வருடம் கண்ணாடிப் பேழையினுள் காத்திருக்க வேண்டும்.அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் மெல்ல நடந்து வாயிலில் சென்று மறைந்தாள். கண்ணாடிப் பேழைக்குள் சிறைப்பட்டிருந்த பிதேலி ஒருவருக்கும் கேளாத குரலில் கத்திக்கொண்டே இருந்தான்.

"மேரி...மேரி!"

பிரிம்யா கிராஸ்வின்

 தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியன் பட்டணம் என்கிற கடலோர கிராமத்தைச் சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின்.அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் கவிதை தொகுப்பு "தப்பரும்பு" 2022- ஆம் ஆண்டு வெளியானது.இவரது சிறுகதைத் தொகுப்பு "கெத்சமனி"  டிசம்பர் 2024 இல் வெளியானது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com