தொடுதிரைகள் தோன்றாக் காலம்

தொடுதிரைகள் தோன்றாக் காலம்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்
Published on

”ஏம் பையா இப்புடி அட்டையத் தொங்கப் போட்டுட்டு ஒக்காந்துருக்க?"

ரெக்ஸின் டைரி அப்படிக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்து விட்டு முகத்தசைகளை இன்னும் கொஞ்சம் சுருக்கிக் கொண்டது லெதர் டைரி.

"பின்ன என்ன புள்ள? எப்பப் பாத்தாலும் எலக்ட்ரானிக் வெத்தலைக்கி சுண்ணாம்பெ தடவிக்கிட்டுருந்தவங்களுக்கு இப்பத்தான் நம்மளயெல்லாம் நெனச்சுப்பாக்கத் தோணுதாக்கும்?"

"ஏம்பா! இத்தன நாள் கழிச்சு ரெண்டு பேரையும் ஒண்ணா சேத்து வெச்சிருக்காங்களேன்னு சந்தோசப்படாம, நீ என்னடான்னா ?"

லெதர் டைரிக்கு பொசுக் பொசுக்கென்று கோபம் வரும். ரெக்ஸின்தான் பேச்சுக்கொடுத்து அதை இயல்புக்கு கொண்டுவரும்.

"அட கொஞ்சம் நிமிந்துதான் பாரு...லட்சுமி, சரசுவதி, வெநாயகருக்கெல்லாம் வெச்சிருக்கற மாரியே ஏசு நாதருக்கும் மேரி மாதாவுக்கும் சந்தனப் பொட்டெல்லாம் வெச்சு, மாலயப் போட்டு ஜெபாக்கா கலக்கறாங்க"

ரெக்ஸின் வேடிக்கையாக பலகுரல் கலைஞரைப் போல , குரலை மாற்றி பேசத்துவங்கியது.

" லட்சுமிக்கா.....லட்சுமிக்கோவ் "

" யாரு... மேரியா... வா புள்ள.. உள்ற வா... பையனக் கொண்டா.... வா தங்கம்... அந்த ஆட்டுக்குட்டியத்தான் செத்த நேரம் எறக்கிவுடேம் பையா... பாவம் கையக்கால ஒதறி ஓடியாடட்டும்.."

" கனேசு....கனேசு....ஓடியா..சாமீ.... ஆரு வந்துக்குறா பாரு... சரசு! கொஞ்சோம் டீ வெச்சுக்குடு புள்ள"

" டேய்....ஏசு! எப்ப வந்த மாப்ள? ஏன்டா.. எப்பப்பாரு அங்கியோடவே திரியிற?... வேட்டி கட்டிக்கிறியா? வேண்டாமா... அட...ஏன்? வயித்தப்பாக்காத... வயித்தப்பாக்காத... ஜாகிங் போறேன் ஜிம்முக்கும் போறேன்... நம்ம அனுமாரு தான் ட்ரெயினரு... வர்றியா...ஓ... உனக்கு தான் சிக்ஸ்பேக் இருக்கே?"

லெதர் அசைகிறதா என்று ரெக்ஸின் திரும்பிப் பார்த்தது.

லெதர் மௌனமாகவே இருந்தது.

"ஏம் பையா! சிரிக்க மாட்டியா?"

"செரி.... எங்கூட பேச மாட்டியா?"

"இப்பல்லாம் உனக்கு என்னப் பாக்கவே புடிக்கலல்ல?"

ரெக்ஸினின் குரலில் கேவல் தொனித்தது.

" அட!... அப்படீல்லாம் இல்ல புள்ள "

"பச்சப் பொய்!"

சரஸ்வதி பூஜையின் நிமித்தம் சுத்தமாக துடைத்து சந்தனம், குங்குமம் எல்லாம் பூசி இருந்தாலும் ரெக்ஸினின் தோலில் அங்கங்கே சின்னச் சின்ன விரிசல்களும், வெடிப்பும் தெரிகிறது. முகப்பில் மினுங்கிக் கொண்டிருந்த பொன்னிற எண்கள் வெளுத்து வருகிறது. ஆனாலும் லெதருக்கு ரெக்ஸினின் மேலுள்ள காதல் குறையவேயில்லை. மயக்கும் வளைவுகளும், வழவழப்பும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. லெதருக்கு ரெக்ஸினிடம் பிடித்தது அதன் அடக்கம்தான். பார்க்கச் சின்னதாய் தெரிந்தாலும் சுமார் இருநூற்றைம்பது முழுப் பாடல்களையும் உள்ளே வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட தலைக்கனமே இல்லாமல் பேசும். ஜெபாக்கா மாதிரியே. முதன் முதலாக ஜெபாக்காவின் தோள் பைக்குள் ரெக்ஸினை சந்தித்ததை லெதரால் மறக்கவே முடியாது.

தொடுதிரை அலைபேசிகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்துள் பரபரப்போடும் மகிழ்ச்சியோடும் மெல்லிசைக் கச்சேரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் கிருபாகரன். அம்மா அவனுடைய திரையிசைப் பாட்டேடுகள் அடங்கிய தோள் பையைக் கொண்டு வந்து கொடுத்தாள். மேடைப் பாடகர்கள் பழைய வருடங்களின் நாட்குறிப்பேடுகளில் திரைப்படப் பாடல்களை எழுதி வைப்பது வழக்கம். பழைய டைரிகளானாலும் அவற்றின் உறைகளால் பழுதுபடாமல் வருடக் கணக்கில் உழைக்கும் என்பதால் முன்னோர் அவற்றைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். கிருபா, அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். அவனுக்குள் பூத்துக் குலுங்கிய நேசமிகுதியை ஜெபாவிடம் காட்டிக்கொள்ள பாட்டு டைரியையே பயன்படுத்த முடிவுசெய்தான். கத்தோலிக்க கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான ஜெபா, அவளது பாட்டு டைரியின் முதல் பக்கத்தில் Jesus Loves you என்றும், கடைசிப் பக்கத்தில் Jesus Never Fails என்றும், எழுதி வைத்திருந்தாள். ஒரு நல்ல நாளில் ஜெபா அவளது வீட்டில் புதிய பாடலை எழுதுவதற்காக தனது ரெக்ஸின் டைரியைத் திறந்தாள். முதல் பக்கத்தில் அவள் எழுதி வைத்திருந்ததையும் சேர்த்து,

Jesus Loves you

நானும் !

Jesus Never Fails

நானோ ?

என்று கவிதை வடிவில் எழுதி, அதற்கும் கீழே கண்ணீர் வடிக்கும் மெழுகுத்திரியின் படத்தையும் யாரோ வரைந்து வைத்திருந்தார்கள்.

கச்சேரி மேடையில் பாட்டு எழுதி வைத்திருக்கும் டைரிகளின் உள்ளிருந்து பாடலும், காதலும் இரு பறவைகளாய் எழுந்து பறக்கும். ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்போதே அங்கேயொரு கண்கட்டி வித்தை நடக்கும். காதலுக்கு அழைப்பு விடுவதும், அதை ஏற்பதும், மறுப்பதுமான அந்தரங்க நாடகம் ஒன்று நட்ட நடு மேடையில் அரங்கேறும். கிருபா, அவன் பாட வேண்டிய புதுப்பாட்டை தன்னுடைய லெதர் டைரியின் வலது பக்கம் முழுவதிலும் சுருக்கிச் சுருக்கி எழுதி விட்டு இடது பக்கத்து வெற்றுத் தாளின் நடுவே இரண்டே வரிகளை மட்டும் பெரிதாக எழுதி வைத்தான்.

‘மோகம் பாதி மெளனம் பாதி

என்னைக் கொல்லும் எந்நாளும்'

வனாந்திரப் பாலையின் நடுவே அனாதைகளாக நிற்கும் இந்த ஒட்டகங்களை, பாடும்போது கவனித்து விட்டாள் ஜெபா. அந்த கையெழுத்து? அவளது மனம் கிடந்து நச்சரிக்கத் தொடங்கி விட்டது. கிருபா, ‘இளஞ்சோலை பூத்ததா' தனிப்பாடலுக்காக போகும்போதும்,‘அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காதே மச்சான் சொன்னா கேளு!' கூட்டுக்குரலுக்காக தன் குரலை கோமாளித்தனமாக மாற்றும்போதும், ‘அந்திமழை'யின் ஆலாபனையை விழிமூடிப் பாடும்போதும், ஜெபா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கிருபா அதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போலிருந்தான். எதையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை உறுதி செய்து கொள்ள வேண்டுமல்லவா? அடுத்த ஜோடிப்பாடலின் போது, வேறு வரிகளை காட்சிக்கு வைத்தான்.

‘ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச

யாரவிட்டு தூதுசொல்லி நானறிவேன் உம் மனச?'

ஜெபாவின் மார்புக்கு நடுவில் இன்பமும் துன்பமுமான வலியொன்று தோன்றி நெஞ்சு பாரமாகிறது. இரண்டு மூன்று பாடல்கள் கழித்துத்தான் மீண்டும் இருவரும் இணைந்து பாடும்படியான பாடல் வாய்த்தது. கிருபா இந்த முறை நேரடியாகவே தோரணத்தை தொங்க விட்டான்.

‘நாரினில் பூத்தொடுத்து மாலையாக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே!'

ஜெபாவால் தாங்கவே முடியவில்லை. முட்டிக்கொண்டு வரும் அழுகையை தடுக்கும் பொருட்டு அப்பொழுதே அவளுடைய மனதை திறப்பதாக தனது ரெக்ஸின் டைரியைத் திறந்து வைத்தாள். அதில் அவனுடைய அத்தனை கேள்விகளுக்குமான பதிலாக ஒரே ஒரு வரி இருந்தது.

‘தேவன் வேதமும் கண்ணன் கீதையும்

ஒரு பாடலில் இங்கு சங்கமம்'

அதைப்பார்த்ததும் பாடிக் கொண்டிருந்த பாடலில் கூடுதலாக சங்கதி ஒன்றைப் போட்டான் கிருபா. ஜெபா வேறொரு பக்கத்தை திருப்பினாள்.

‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு?'

அவ்வளவுதான்! பாடி முடித்த கிருபா தலைமுடியை தனிவிதமாக கோதிவிட்டுக் கொண்டு தன்னுடைய டைரியை ஸ்டாண்டிலேயே விட்டுவிட்டு நகர்ந்தான். கோரஸ் பாடிக்கொண்டிருந்த இளங்கோவும், மோனாவும் கூட‘டைரியை மறந்து விட்டுப் போகிறானே? இது ஒரு நல்ல பாடகனுக்கு அழகா?'என்றபடி கிசுகிசுத்துக்கொண்டிருக்க, ஜெபா, கிருபாகரனைப் புரிந்து கொண்டவளாக உரிமையோடு அவனுடைய டைரியையும் சேர்த்து எடுத்து வந்து தன்னுடைய பைக்குள் வைத்துக் கொண்டாள். இதையெல்லாம் ஒரு ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த மதுக்கரை மலேசியா, சுருதி சுத்தமாக காதல் ஓவியத்தை ஓதலானார்.

‘ஓம்......ஸதமானம் பவதி

ஸதாயு புருஷஸ் ஸதேந்த்ரியே...

ஆயுஷ் யேவேந்த்ரியே.... பிரதிதிஷ்டதி....'

லெதரும் ரெக்ஸினும் சத்தமாக சிரித்துக் கொண்டன.

"சொரக்குன்னு எம்மேல வந்து வுழுந்தே... அய்யோ! பயந்தே போயிட்டன்" ரெக்ஸினுக்கு ஒரே வெட்கம்.

"மறுநா வரைக்கிம் கட்டிப்புடிச்சே கெடந்தோம் இல்ல புள்ள?" கண்ணடித்தது லெதர்.

"ம்ம்.... மூச்சு முட்டற மாதிரி ஆயிடுச்சு... அப்போ கசங்குனதுதான்! இன்னுஞ்சரியாகல...." வெட்கம் குறையாமல் சொன்னது ரெக்ஸின்.

"அடுத்த நாளு என்னைய எடுத்துப் பாத்துட்டு முத்தம்லாம் குடுத்துச்சு ஜெபாக்கா"

"போதும்... போதும்... ரொம்பத்தான் பீத்திக்காதே"

"ஏய்...இல்ல புள்ள.... கிருபாண்ணனுக்காக ஜெபாக்கா பாட்டு எழுதுச்சு.. அதுக்கும் முன்னாடி என்ர பாட்டெல்லாம் எப்புடி இருந்துச்சுன்னு

ஞாவகம் இருக்கா ஒனக்கு?"

ரெக்ஸின் சத்தமாக சிரித்தது.

"ஓ....நல்லாவே இருக்கு"

கூச்சத்தில் நெளிகிற லெதரின் நடுநெஞ்சில் கைவைத்து அதன் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டிப் பார்த்து தேடிப் பிடித்துக் காட்டியது ரெக்ஸின். கிருபாகரன் லெதர் டைரியின் ஒரு பக்கத்தில் கவிதை போலவோ, கவிதைக்கான குறிப்பு போலவோ எதையோ கிறுக்கி வைத்திருந்தான்.

300 - பின்

ஆ..ஆ.....

300 - பின்

ரெண்டு -2

கண்டு -2

சித்- சிங்- மத்- மயில்

முத்- முழ- வித்-

முத்- மயில் -2

முத்.

"என்ன இது? மளிகைச் சீட்டு மாதிரி? யாருக்கு புரியும்?"

"இல்ல... அண்ணனுக்குப் புரியும். அவருக்கு இதெல்லாம் மனப்பாடம். எதுக்கும் இருக்கட்டும்னு ஏதாவது அவசரத்துல தொடக்க வரியை மட்டும் எழுதிருப்பாரு" விட்டுக் கொடுக்காமல் பேசியது லெதர்.

" செஞ்சா திருத்தமா செய்யணும்! கூட நின்னு பாடறவங்களுக்கும் இது உதவாதில்ல...?"

ரெக்ஸின் திரும்பவும் லெதரின் பக்கங்களைப் புரட்டித்தேடி ஒரு பக்கத்தை நிறுத்திக் காட்டியது.

குடி நோயாளிகளான ஆண்களில் சிலர் நினைத்ததைக் குடித்து, கிடைத்ததை உண்டு மயங்கி விடுகிறார்கள். குடும்பத்தைப் பற்றிய நினைவே இருப்பதில்லை. ஆனால் நமது பெண்கள் அவ்வளவு அலட்சியமானவர்கள் அல்ல. விறகு உடைத்தோ, சுள்ளி பொறுக்கியோ, வீட்டுவேலை செய்தோ, கடைசிக்கு கடனை வாங்கியாவது அடுப்பைப் பற்ற வைத்து விடுகிறாள் வீட்டு லட்சுமி. குழந்தைகளும் அவளும் பசியாறியது போக இந்தக் குடியனுக்கும் பாத்திரத்தில் மீந்திருக்கும் அவளது பெருந்தன்மை. பாடகர்களில் பெரும்பாலான ஆண்கள் அலட்சியமாக, அவர்கள் பாட வேண்டிய ஆண் குரலுக்கான பாடல் வரிகளை மட்டும் எழுதி வைத்திருக்க, தன்னியல்பில் அக்கறையும் கருணையுமுள்ள பாடகியரோ பொறுப்போடு அவரவர் வரிகளை ஆண் என்றும் பெண் என்றும் வரிசை பிரித்து தெளிவாக எழுதி வைத்திருப்பார்கள். மேடையில் குழப்பமே வராதபடி குழுவினர்கள்

பாட வேண்டிய வரிகளையும்கூட தனித்தனியே ஆண்குழு, பெண் குழு என்று பிரித்து, துலக்கமாகத் தெரியும்படிக்கு எழுதியிருப்பார்கள். கிருபாகரன் அவசரத்தில் குறிப்புகளாக கிறுக்கி வைத்திருந்ததை ஜெபா திருத்தமாக வடித்து வைத்திருந்தாள்.

இடையிசை

பெண்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க...

ஆண்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க...

பெண் குழு: ஆ...ஆ...ஆ...ஆ...

ஆண் குழு: ஆ...ஆ...ஆ...ஆ...

பெண் குழு: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க..

ஆண் குழு: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க..

பெண்: அந்த ரெண்டோடு ஒன்னு சேர்ந்து மூணாகுங்க..

ஆண்: இந்த ரெண்டோடு ஒன்னு சேர்ந்து மூணாகுங்க..

பெண் குழு: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடி பாடப் போறாங்க.

ஆண்/பெண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடி பாடப் போறாங்க.

பெண் குழு: சித்தாடை கட்டிகிட்டு...

ஆண் குழு: சிங்காரம் பண்ணிக்கிட்டு...

பெண் குழு: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி...

ஆண் குழு: மயிலாக வந்தாளாம்.

பெண் குழு: முத்தாத அரும்பு எடுத்து...

ஆண் குழு: முழ நீள சரந்தொடுத்து..

பெண் குழு: வித்தார கள்ளி கழுத்தில்...

ஆண் குழு: முத்தாரம் போட்டானாம்.

பெண் குழு: மயிலாக வந்தாளாம்.

ஆண் குழு: முத்தாரம் போட்டானாம்.

பெண் குழு: மயிலாக வந்தாளாம்.

ஆண் குழு: முத்தாரம் போட்டானாம்!

இப்படி ஜெபா அவ்வப்போது கிருபாவின் டைரியை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் ரெக்கார்ட் நோட் எழுதித் தருவது போல பத்துப் பதினைந்து பாடல்களை எழுதி எடுத்து வருவாள். பின்னே? ‘புத்தியுள்ள ஸ்த்ரீ தன் வீட்டை கட்டியெழுப்புகிறாள்'என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே? கொண்டவன் தொழில் எதுவானாலும் வருகிறவள் துணை செய்ய வேண்டுமில்லையா?

"அடிக்கடி நாம பாத்துக்கற வாய்ப்பு கெடச்சது, ஆனா நீ நல்லா ஊர் சுத்துவே இல்ல?"

"ஆமா! நான் என்ன செய்ய முடியும்? அண்ணன் சில நேரம் அவரோட கூட்டாளிங்க கிட்ட என்னை குடுத்துட்டு போயிருவாரு...அடுத்த கச்சேரி மறுநாளைக்கும் மறுநாள் சாயங்காலம்தான்! அந்த மாரி ரெண்டு மூணு நாளு கூட ஆகும். அதுவரைக்கிம் எங்கீயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சுதான் அண்ணங் கைக்கே வந்து சேருவேன். அங்கங்கே திரிஞ்சதுல எனக்கும் ஒரு அனுபவந்தான புள்ள? அண்ணனோட கூட்டாளிகள்ல ஒருத்தர் கலைக்கண்ணன். சுமாரா பாடுவாப்ல...ஆனா செமத்தியா படம் வரைவாப்ல... அவருடைய பாட்டுப் புத்தகம் ரொம்ப அலங்காரமா இருக்கும். உள்ளே ஆம்பள கொரல், பொம்பள கொரல் ரெண்டையும் வெவ்வேற நெறத்துல நல்ல கையெழுத்துல எழுதியிருப்பாரு. ஆணுக்கு நீல மையி, பொண்ணுக்கு செவப்பு மையி! பாட்டுவரிக்கு மேல படத்தோட தலைப்பை சுவரொட்டில வந்த அதே நிறத்துல, அதே வடிவத்துல, அதே‌ எழுத்துருவத்துல டைரிலயும் தீட்டி வெச்சிருப்பாரு.. உதாரணத்துக்கு சொல்லோணும்னா, கரகாட்டக்காரனோட ரெண்டாவது 'ர' இருக்குதுல்ல அதோட கால்ல சலங்கையைக் கட்டி நிக்க வெச்சு, சின்னத் தம்பியோட ரெண்டு புள்ளிக்கும் தாலியக் கட்டி வுட்டுருப்பாரு. இதப்பாத்து கிருபாண்ணன் என்ன பண்ணி வெச்சிருக்காரு பாரு.."

லெதர் டைரி தன்னைத் திறந்து காட்டிய பக்கத்தில் தேவர்மகன் இலச்சினைக்குள் சிவாஜியும் கமலஹாசனும் இருக்க வேண்டிய இடத்தில் கிருபாகரனுடைய பள்ளித் தலைமையாசிரியரும் சீனிவாசா திரையரங்கத்தின் காவல்காரரும் கிடா மீசையோடு முறைக்கிற முகங்களுடன் தத்ரூபம்.

"இஞ்சி இடுப்பழகிய பாடற புள்ளைங்களுக்கெல்லாம் என்னையப் பாத்து ஒரே இளிப்பு. ரொம்ப அசிங்கமா போச்சு ரெக்ஸினு..'வெறும் காத்து தாங்க வருது' ன்னு அவளுக சொல்லி முடிச்சவுடனே கிருபாண்ணனும்

'ம்க்கும்....ம்க்கும்..ம்க்குக்குக்கும்'னு பல்லை வெறிச்சுக்கிட்டு கடுப்போட சிரிப்பாப்ள "

"ஆனாலும்..கிருபாண்ணாக்கு உம்மேல ரொம்பப் பிரியம் இல்ல?"

"எனக்கு அவரு மேல எவ்வளவு பாசமோ அதே அளவு அவருக்கும் எம்மேல பாசம்"

"உனக்குத் தெரியுமே என்னோட முதுகப் பார்த்திருக்க இல்ல?"

ரெக்ஸினுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

" நீ தான் எத்தனை தாட்டி கேட்டாலும் அதைப்பத்தி சொல்லவே மாட்டேங்கிறியே?"

லெதர் டைரியின் முகத்தில் தன்னுடைய எழுதாத பக்கங்களையும் திறந்து காட்டத் தயாரான துணிவு தெரிகிறது.

கருப்பண்ணன் என்றொரு மெல்லிசைப் பாடகர் கோயமுத்தூரில் வாழ்ந்து வந்தார். ஆள் சுமார் இரண்டரை அடி அகலம். ஆறடி உயரம். மற்றவர்கள் ரூபாய்த்தாளை மடித்து வைக்கிற மாதிரி தன்னுடைய மேல்சட்டைப் பைக்குள் பாட்டு டைரியை வைத்துக் கொள்வார். முறையாக இசை பயின்ற வல்லுநர். குரல்வளை தொழில்நுட்பம் அறிந்தவராதலால் சங்கதிகள் அத்துப்படி. மகா ஞானஸ்தன். பலவீனமாக சங்கதி போடுகிறவர்களை இரண்டாக கிழித்துப் போடுவார்.

"ஏனப்பா! ரொம்ப குளுருதாக்கும்? எல்லா பாட்டையும் ஆட்டோல போறவனாட்டம் பாடற?"

அவரது உள்ளத்தைத் தீண்டுகிற விதமாக யாராவது பாடிவிட்டால் கருப்பண்ணன் அவரது உயரத்தைச் சுருட்டி காலடியில் போடுவார்.

"அடேய் பொன்னா!இன்னைலருந்து இந்த ஆறுக்கு ரெண்டரை உன்ற பாட்டுக்கு அடிமையப்பா!"

அதே சமயம் நாராசமாக குரல் எழுப்பிப் பாடிக் கொண்டே இருப்போரை ஒன்றுமே சொல்லமாட்டார்.

"பாவம்யா நாதச்செவுடு! இவுனுகளுக்கு அந்த நாரதனே வந்து சொன்னாலும் புரியாது.. கெரகம்"என்பார் கிசுகிசுப்பாக.

கருப்பண்ணன் பஞ்சாலைத் தொழிலாளியுங்கூட. மூன்று பயில்வான்களைச் சேர்த்து செய்தாற்போல வலுவான உடல்வாகு. காத்திரமான, ஆண்மை மிகுந்த குரல். பனங்காட்டுச் சாளைக்குள் புகுந்து எட்டு சொப்புக் கள்ளையும் குடித்து முடித்து, கோழிக்கால் சக்கைகளை மென்று துப்பிவிட்டு, உட்கார்ந்த தடம் தெரியாமல் வீட்டுக்குப்போய் களியுருண்டைகளையும் கீரைக்கடைசலையும் உண்டு முடித்து நல்ல பிள்ளையாக உறங்குவார். அப்படியாப்பட்ட கருப்பண்ணனைத்தான் யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று போலீஸ் வந்தது.

"வெளையாட்டு வெனையாப்போகும்ணு சொல்லுவாங்களே? "

"அப்படித்தானெ ஆச்சு அன்னைக்கு?"

"பாட்டு நோட்டுல துல்லியமா எழுதி வெச்சாக்கா மேடையில கொழப்பமே வராதுன்னு ஜெபாக்கா சொல்லுமா? "

"ஆமா..."

"ரொம்பவும் சுத்தம் பாக்கறவங்களுக்கு அடிக்கடி ஒடம்பு செரியில்லாம போற மாரி ஒரு விசியம் நடந்தது"

" ஆமா...அவங்கல்லாம் ஊறுகாயி அளவுக்கு சோப்பையுமில்ல தின்னுறாங்க "

"ஏய்! நாஞ்சொன்னதுக்கு வெளக்கத்த நீ சொல்லீட்ருக்க?" லெதருக்கு கோபம் வந்தது.

" சரி சரி கோச்சுக்காம சொல்லு" குரலை தணித்துக் கொண்டு அடக்கமாகப் பேசியது ரெக்ஸின்.

"ஒத்திகை பாக்கறதுக்கு, மேடையில பாடணும்னு ஆசைப்படறவங்க, புதுசா வாத்தியங்கள கத்துக்க விரும்புறவங்கன்னு இப்படி எல்லாரும் வருவாங்க."

"ஆமா"

"அப்படிப் பாட வந்த ஒருத்தருதான் நம்ம 'இருவரும்' இளங்கோ"

"ஒருத்தர் தானே?"

"ஒரு ஆளுதான் புள்ள! பேருதான் இருவரும் "

"அதென்ன அப்படி ஒரு பேரு?"

"பட்டப்பேரு"

"அது ஏன் அப்படி?... சொல்லுப்பா.. ப்ளீஸ்" லெதரின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்சியது ரெக்ஸின்.

"என்னாலதான்!"

"என்னது? உன்னாலயா?"

"அட ஆமா புள்ள...கதைய கேளு"

புதுசா பாட வந்த இளங்கோ,

ஏ எம் ராஜா மாதிரியே பாடுவேன்னு சொல்ல, இவங்க அவரை பாடிக் காட்டச் சொல்ல, பாட்டு மனப்பாடமா தெரியாதுன்னாரு. ஒடனே கிருபாண்ணன் என்னைத் தூக்கி அவர்கிட்ட குடுத்தார்"

"ம்ம்.."

"மாசிலா உண்மை காதலேங்கற பாட்டை வாத்தியக்காரங்க வாசிக்கறாங்க.."

" நல்ல பாட்டுல்ல?"

"ஆமா...இளங்கோவும் நல்லாத்தான் பாட ஆரம்பிச்சாரு... மோசமில்லன்னு நெனக்கிறப்ப போது என்னவோ மோசமா நடந்துருச்சு"

"என்ன தப்பு பண்றார்னு கிருபாண்ணன் கவனிச்சுப் பார்த்தா பாட்டுவரிக்கு முன்னே ஏதோ சொல்றார். என்னன்னே புரியல!. அரைகுறையா 'வானும்' னு காதுல விழுகுது. திடீர்னு 'மண்ணும்'ங்கிறாரு. பாட்டுலயே இல்லாத வார்த்தைகள எல்லாம் சேத்துப் பாடுறாரு. நானே காத்துக்கு திரும்பற சாக்குல என் மேல என்னதான் அப்படி தப்புத்தப்பா ஜெபாக்கா எழுதிவெச்சிருக்குதோன்னு எட்டி எட்டிப் பாத்தேன்"

"வானும், மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே

மண்ணும், பேசும் வார்த்தை உண்மை தானா? பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?"

லெதர் பாடிக் காட்டியது.

"பல்லவி இப்படி தாளம் தப்பாம ஓடிடுச்சு..."

"சரணத்துல தாளம் தப்பி, பாட்டு சிக்கிக்கிச்சு"

ரெக்ஸின் சிரிக்கச் சிரிக்க, லெதர் உற்சாகமாக பாடிக் கொண்டே போனது.

"வானம், உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே"

"மண்ணும், இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே"

"மழைவரும், அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இன்பமாய் இந்த வாழ்வின் எல்லை காணுவோம்"

"என்னது? மழை வருமா?"ன்னு கேட்டு தபேலா வாசிச்சிட்டிருந்த மணிகண்டன் வாசிப்பை நிறுத்தீட்டு மொறச்சுப் பார்த்தான்"

"கிருபாண்ணன் யாரு? என்ன விஷயம்னு கண்டு புடிச்சுட்டாரு. ஆனா...மனுஷன் பயங்கரமா சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு"

"ஏன்? என்னாச்சு.... அய்யே என்னன்னு சொல்லு" அடம் பிடிக்கிற பாவனையில் கெஞ்சியது ரெக்ஸின்.

"பாட்டு வரிக்கு முன்னாடி ஜெபாக்கா ஆண், பெண் அப்படின்னு எழுதிருக்கும் இல்லையா? அந்தாளு அதையும் பாட்டோட சேத்துப் பாடிருக்காரு"

" அய்யயோ... ச்சே...பாவம்"

சிரித்துக்கொண்டே பரிதாபப்பட்டது ரெக்ஸின்.

"ஆணு, மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே

பெண்ணு, பேசும் வார்த்தை உண்மைதானா? பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?"

"சரணத்துல 'மழைவரும்'னு ஏதோ வந்ததேன்னு கேட்டா அவரு சொல்றாரு... டைரில 'இருவரும்'னு எழுதியிருந்ததாம். "

" மணிகண்டன் எந்திரிச்சு வெளிய ஓடீட்டான்"

"ஏஷப்பா!"

தலையில் கையை வைத்துக் கொண்டு சிரித்தது ரெக்ஸின்.

"அப்போ வெச்ச பேருதான் 'இருவரும்' இளங்கோ!"

லெதருக்கு அப்படியே முகம் மாறியது.

"இந்த இளங்கோவும், மதுக்கரை மலேசியாவும் சேர்ந்து தண்ணியப் போட்டுட்டு புரோட்டாக்கடையில சாப்ட்டுட்டுருந்த கிருபா அண்ணங்கிட்ட வம்பிழுத்து ஆளுக்காளு கை வச்சுகிட்டாங்க ...கிருபா அண்ணனுக்கு நல்ல அடி! ஒதடு கிழிஞ்சு ரத்தம் வந்திருச்சு"

" அச்சச்சோ "

"இவங்க ரெண்டு பேரும் கிருபாண்ணனுக்கு எதிர்ல உக்காந்து சாப்ட்டுட்டுருந்த கருப்பண்ணனை கவனிக்கல..."

" ஹைய்யோ"

"மாப்பளைகளுக்கு அவ்ளோ மப்பு! கருப்பண்ணன் எந்திரிச்சு எச்சக் கையோட கன்னங் கன்னமா பளார் பளார்னு அறஞ்சு, ரெண்டு பேரு முதுகுலயும் நாலஞ்சு அடி!.. நல்லா வச்சு சாத்துனாரு..."

" சட்டைல குருமால்லாம் சிந்திப்போச்சு"

"இளங்கோ அங்கிருந்த கத்தியை எடுத்து கருப்பண்ணன் நெஞ்சுல குத்திட்டான்"

" மாதாவே! "

"கருப்பண்ணன் கீழே விழுந்த ஒடனே ரெண்டு பேரும் ஒரே ஓட்டமா ஓடிப் போய்ட்டாங்க.. போலீஸ் வரும் போது அங்க யாருமே இல்ல"

"கருப்பண்ணனுக்கு என்ன ஆச்சு..."

"போலீசுக்கு போன் பண்ணதே கருப்பண்ணந்தான்"

"என்ன சொல்ற?"

"அட ஆமா... கத்திய கருப்பண்ண நெஞ்சுல குத்துனாங்க. அவர் சட்டைப் பாக்கெட்ல இருந்தது நான்! என்னோட முதுகுலதான் வுழுந்தது குத்து!"

ரெக்ஸினின் அழுகையை லெதரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அட! அது வெங்காயம் வெட்டுற கத்திதான் புள்ள... அப்புறம் நம்ம அட்டையும் கொஞ்சம் வலுவா இருந்ததாலே தழும்போட தப்பிச்சிட்டோம்!"

கண்ணடித்துச் சிரித்தது லெதர்.

"கத்தியில குத்துற அளவுக்கு அப்படி என்ன கோவம் அவங்களுக்கு?"

"அது... கோரஸ்காரனுக கோவம். அட இந்த மதுக்கரை மலேசியாவுக்கு டைரியே கெடையாது! எல்லாப் பாட்டும் மனப்பாடம்! எந்த பாட்டைச் சொன்னாலும் வந்து பாடிடுவாப்ள"

"டைரியே கிடையாதுங்கறதுனால கச்சேரிக்கு வரும்போது கையை வீசிட்டு வருவாப்ள"

"இத்தனை வருஷமா யாருக்கும் தெரியாத தகவலை கிருபாண்ணன் கண்டுபிடிச்சிட்டாரு"

"இதே பொழப்பு "

"நான் எல்லாத்தையும் உன்கிட்ட வந்து சொல்லிடற மாதிரி கிருபாண்ணன் ஜெபக்காகிட்ட மதுக்கரை மலேசியாவுக்கு எழுதப் படிக்கவே தெரியாது, அதனால தான் மனப்பாடம் பண்ணிக்கிறாப்ளன்னு சொல்லிச் சிரிக்க, இந்த விசியம் காந்திபுரம், ஆரெஸ் புரமெல்லாம் பரவிருச்சு"

"ஏற்கனவே 'இருவரும்' இளங்கோவுக்கு இருந்த கோவமுஞ் சேந்துகிச்சு... இவங்க ரெண்டு பேருக்கும் சரக்கு வாங்கி குடுத்து திட்டம் போட்டு ஏத்திவுட்டது யாரு தெரியுமா? "

"யாரு?"

மோனா!"

"அடப்பாவமே! யாரு நம்ம மோனா அண்ணனா?"

"அவனே தான்! போலீசுக்காரங்க விசாரிக்கும்போதுதான் எல்லாமே தெரிஞ்சுதாமா.."

" பாவம் அது ஒரு அப்புராணியாச்சே?"

" ம்ம்...ஆனா சரியான முனுக்கன்!... நம்ம கிருபாண்ணனும் கருப்பண்ணனும் மோனாவோட மனசு காயப்படற அளவுக்கு எதையாச்சும் கொறையா கண்டுபுடிச்சு கிண்டல் பண்ணி இருக்கணும்... அதுக்கு ஜெபாக்காவும் சேந்து சிரிச்சிருக்கலாம்.... இவனும் அதை அவமானமா நெனச்சிருக்கலாம்... இல்லன்னா பாவம் அவன் ஏன் இவ்வளவு தூரம் போகப் போறான்? எனக்குத் தெரில"

மேடைப்பாடகர்கள் தங்களைப் பாடகர்கள் என்று இந்த உலகத்திற்கு அறிவித்துக் கொள்ள கையில் இருக்கும் டைரியைத் தவிர வேறு என்னதான் இருக்கிறது? என்பதுதான் மோனாவின் கேள்வி. ஒரு மனிதன் தீத்திபாளையம் போன்ற ஒரு கிராமத்தில் பிறந்து, இலட்சியத்தோடு எழுந்து, காந்திபுரத்தில் வந்து விழுந்து, அங்கே ஒரு இசைக்குழுவில் இணைந்து, திரையிசைக் கடலில் பயணிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன? ஊருக்குள் இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டாமா ? டைரியின் மேற்பகுதியில் பக்கவாட்டில் பார்க்கும் 'அறுவடைநாள்' இளையராஜாவையோ, கன்னத்தில் கைதாங்கிய பாலசுப்பிரமணியத்தையோ, ஆர்மோனியத்துள் துழாவுகிற விசுவநாதனையோ, ஒளிபொருந்திய கண்ணதாசனையோ கத்தரித்து ஒட்டிக் கொள்ள வேண்டியது. பின்பு பஸ்ஸுக்குக் காத்திருக்கும் நேரத்தில் பெட்டிக்கடை ஓரத்தில் நின்று புதிய பாடல்களை கொஞ்சம் சத்தமாக பயிற்சி செய்ய வேண்டியது. அவ்வளவுதானே! ரொம்ப இலகுவான விஷயம். ஊருக்கே தெரிந்துவிடும். ஊர் முழுக்கவும் தெரிய வேண்டியதில்லை. மோனா அப்படி விரும்பவும் இல்லை.

ஏதோ கல்லூரிக்குப் போகிற, பள்ளிக்கு போகிற, வேலைக்கு போகிற பெண்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் கூட போதுமானது. அவருடைய வயதுக்கு அவர் அப்படி ஆசைப்படுவதில் என்ன தவறு?

மோனாவைப் போல வளரும் பாடகர்கள் தாங்கள் மேடையில் பாடிக் கொண்டிருக்கிற பாடல்களைத் தவிர தங்களின் விருப்பப் பாடல்களையும் டைரி முழுவதும் எழுதி வைத்திருப்பார்கள். எடை நிரம்பிய துப்பாக்கியைப் போல எப்போது வேண்டுமானாலும் பாடத் தயாராக இருப்பார்கள். ஆனால் மோனா அப்படியெல்லாம் செய்யவில்லை. அவர் நேர்மையாக இருந்தார். அவரை குழுவில் சேர்த்துவிட்ட அவரது குருநாதர் 'டைமிங்' மணி எந்த பாடலை பாடச் சொன்னாரோ, அந்தப் பாடலில் அவர் பாட வேண்டிய வரிகளை மட்டும் தன்னுடைய டைரியில் எழுதி வைத்திருந்தார். அதுதானே முறை?

ஆனால், ஆனால், அதுதான் அவர் செய்த பெரும்பிழை என்று அவரை நினைக்க வைக்கிறார்கள். இந்த பாதகிகள், பாதகர்களுக்கு காதல் தூது விடுவதற்காக ஒரு பக்கத்தில் அவர்களுக்கு பிடித்த வரிகளை மட்டும் எழுதி வைத்திருப்பது போல மோனா தனது ஏட்டில் அவர் பாட வேண்டிய ஒரே ஒரு வரியை மட்டும் எழுதி வைத்திருந்தார்.

அவர் அவருடைய குருநாதருக்கு உண்மையாக இருந்தார். அவருடைய குருநாதர் அவருக்கு அருளியிருந்த வரி அதுதான். சுமார் ஒன்றரை வருட காலமும் அந்த ஒரு வரியை மட்டுமே பாடிவிட்டு ஒலிவாங்கியை அதன் இடத்தில் அழகாக, பொறுப்பாக வைத்து விட்டு குருநாதரிடமே திரும்பிவிடுவார். ஜெயிலுக்குள் மோனாவுக்கு நிச்சயம் வேறோரு நல்ல பெயர் கிடைத்திருக்கும். நல்ல பெயராக இல்லாவிட்டாலும் கூட அவர் பெருமூச்சு விடும்படியான ஒரு விடுதலையை அவருக்கு உறுதியாகக் கொடுத்திருக்கும். அனேகமாக அது அவருக்கென்று அவருடைய பெற்றோர் வைத்த பெயராகவும் கூட இருக்கும்.

இசைக்குழுவில் அவரது பட்டப்பெயர் 'மோனாலிசா' என்பதாக இருந்தது. அதன் செல்லச் சுருக்கம்தான் 'மோனா' என்பது. முழுப்பெயர் 'பூஞ்சிரிப்பில் மோனலிசா!' இதுவரையில் மேடையில் பாடிவந்த ஒரு வரியும் அதுதான்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com