1885, டிசம்பர் 31. கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரி, பம்பாய்.
பனிக்காலம். கடலில் இருந்து சுமார் 2 கி.மீக்குள்தான் கல்லூரி அமைந்திருந்தது. பகல் நேரத்தில் அடித்த வெயிலால் ஓரளவு வெப்பமடைந்திருந்த கடலின் மேற்பரப்பு குளிரத் தொடங்கியிருந்தது. அங்கிருந்து வந்த காற்றும், பலர் போர்த்தியிருந்த கம்பளி உடைகளையும் துளைத்தது. சிலரின் பற்கள் நடனமாடிக் கொண்டிருந்தன.
அன்று மாநாட்டின் நிறைவு நாள். வந்திருந்த 72 பேரும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக, சிலர் சிறு, சிறு குழுக்களாகக் கிளம்பத் தொடங்கினர். மூவர் மட்டும் தனியாக ஒதுங்கியிருந்தார்கள். மற்றவர்களைப் போலவே அதில் இருவர் மகிழ்ச்சியுடன் இருந்தனர். மற்றொருவர் மனமும் மகிழ்ச்சியில் இருந்தாலும் தீவிர சிந்தனைக்குப் போயிருந்தார். சுருங்கி விடுவோம் என்று நெற்றி ரேகைகள் மிரட்டல் விடுத்தன.
"எவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு. ஆனா, அத நீங்க ஏத்துக்கலயா..?"
"அப்படியில்ல.. ஒரு முனைல முழு பலத்தோட தாக்குதல் நடத்தலாம்னு நீங்க நினைக்குறீங்க.. இன்னும் சில முனைகள் வேணும்னு நான் நினைக்கிறேன்"
"என்ன பண்ணலாம்.." என்றார் டபிள்யூ.சி. பானர்ஜி. டிசம்பர் 28 முதல் 31 வரையில் நடந்த முதல் மாநாட்டில் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் கேட்டதற்கு 'ஆமாம்' என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினார் பத்ருதீன் தயாப்ஜி. இருவரையும் உற்று நோக்கி விட்டு, "நீங்கதானே தலைவர்.. என்ன செய்யப் போறீங்க.?" என்று கேட்டவர் இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்ட தாதாபாய் நவ்ரோஜி. அவர்தான் சிந்தனை வசப்பட்டிருந்தார். ஒரு வினாடி பானர்ஜிக்கு தூக்கி வாரிப்போட்டது. தயாப்ஜியின் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்.
"என்ன இப்படிக் கேட்டுட்டீங்க..? தேசம் முழுக்க இருக்குற கோரிக்கைகளை கூடுதல் முனைப்போட முன்வைக்கலாம்.."
"யார்கிட்ட வைப்பீங்க.."
"பிரிட்டிஷ்காரங்ககிட்டதான்... "
"நீங்களே அனுப்புவீங்களா.."
இருவருக்கும் புரிய ஆரம்பித்தது. "இல்லை, நாம் ஏ.ஓ. ஹியூமிடம் தருவோம். அவர் அனுப்புவார்" என்ற பானர்ஜியிடம் இருந்து தொடர்ந்த தயாப்ஜி, "நாம தர்ற அனைத்தையும் அவர் அனுப்ப மாட்டார். எதை அனுப்புறது, எதை குப்பைக்கூடையில போடுறதுனு அவர் முடிவு பண்ணுவார். இந்த மாநாட்டுக்கே வைஸ்ராய் டஃப்ரின் பிரபுவிடம் அனுமதி வாங்கிவிட்டுதானே வந்தார்" என்றார்.
தாடியைச் சரி செய்து கொண்டவாறே இருவரையும் பார்த்த நவ்ரோஜி, "ராஜாராம் மோகன்ராய் பற்றிப் படிச்சிருக்கீங்களா?"
"ஓரளவுக்கு.." என்று சொல்லும்போதே நமக்குத் தெரியாத ஒன்றை நவ்ரோஜி சொல்லப் போகிறார் என்று புரிந்து கொண்டார்கள்.
"பிரிட்டிஷ்காரங்க அறிமுகப்படுத்துன கல்வியைப் படிச்ச முதல் இந்தியர் அவர்தான்னு உங்களுக்குத் தெரியும். அதை முடிச்ச அவர் கிழக்கு இந்தியக் கம்பெனியிலதானே வேலைக்கு சேர்ந்தார். கம்பெனியோட கூட்டத்துக்காக லண்டன் போறார். இரண்டு நாட்கள் முன்னாடியே போனதுனால ஊரைச் சுத்திப் பாக்குறார். அவரோட மனசுல நிறைய ஓடுது."
"நம்மை விடப் பல வகையில் லண்டன் முன்னேற்றம் கண்டிருக்குமே.?"
"உலகின் பல பகுதிகளையும் சுரண்டிக் கொண்டிருப்பவர்களாயிற்றே.. நல்ல முன்னேற்றம்தான்.. ஆனா, இவரோ அந்தக் கோணத்துல லண்டனையும், அதன் புறநகர்ப்பகுதிகளையும் பார்க்கல. சமூக நிலையைப் பார்த்தார்.. கம்பெனிக் கூட்டம் தொடங்குனதும், இங்க உங்க ஆட்சி நடக்குது. இந்தியாவையும் நீங்கதான் ஆளுறீங்க. சாதி, சதி, பெண்கள் மறுமண மறுப்புனு எங்கள் தேசத்தில் மட்டும் கொடுமைகள் நிலவ அனுமதிக்குறீங்களே... அதெல்லாம் இங்கு இல்லயே..? ஏன் இந்த நிலைமை?" என்றார்.
தொடர்ந்தார் நவ்ரோஜி. "கம்பெனி நிர்வாகிகள்லாம் அதிர்ந்து போயிட்டாங்க.. இப்படிப்பட்ட வினாக்களை அவங்க எதிர்பாக்கல. வெறும் வர்த்தகம் பற்றி கலந்துரையாடலா இருக்கும்னு நினைச்சாங்க.. அதனால ராஜாராம் மோகன்ராயோட இந்த விமர்சனத்த எதிர்கொள்ள சிரமப்பட்டாங்க. ஆனா அவரோட அந்த வினாக்கள் கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வாகிகளைத் துளைச்சு எடுத்துச்சு. அதான் பின்னாடி உடன்கட்டை ஏறுறத தடை பண்ணினாங்க... விதவைங்கள்லாம் மறுபடி திருமணம் செய்யலாம்னு சட்டம் வந்துச்சு.."
ஏதோ கனவுலகில் மிதந்து கொண்டு தாதாபாய் நவ்ரோஜி பேசுவதைப் போல இருந்தது.
"புரியுது... நமக்கு இப்போ அப்படி என்ன வாய்ப்பு இருக்கு?"
இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், மாநாட்டிற்கு வந்தவர்களில் சிலர் இவர்களைப் பார்க்க வந்தனர்.
"மும்மூர்த்திகள் தனியா ஒதுங்கிருக்கீங்களே.. என்ன தாதா, தேசத்தின் முதல் கல்லூரிப் பேராசிரியர் நீங்க... பிரிட்டிஷாருக்கு பாடம் எடுக்க ஏதாவது புதுசாத் திட்டம் வெச்சுருக்கீங்களா.." என்றார் ஒரு பிரதிநிதி.
"ஏற்கனவே இந்திய வறுமை பற்றி அவர் எழுதுனதுலயே பிரிட்டிஷ்காரங்க ஆடிப் போய்த்தான் இருக்காங்க" என்றார் மற்றொருவர். அந்த இடம் கலகலப்பானது.
"ஆமா... மீண்டும் லண்டனுக்குப் போறேன்" என்றார் நவ்ரோஜி.
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட கன்றுகள் மள, மளவென்று வெளியில் வந்து, திரும்பிப் பார்த்து தாய் இல்லையென்றால் எப்படித் திகைத்துப் போய் நிற்குமோ, அப்படி நின்று இவர்களும் விழித்தனர். காங்கிரஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதால் இங்கிருந்து அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பார் என்றுதான் நினைத்திருந்தனர். ‘லண்டனுக்குப் போகிறேன்' என்ற அவரது வார்த்தைகள் அங்கிருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை.
‘தங்களது வினாவிற்கு அவர் விடை தந்து கொண்டிருந்தார்' என்று பானர்ஜியும், தயாப்ஜியும் உணர்ந்திருந்தனர்.
மற்றவர்கள் கலைந்ததும், சிறிது நேரம் மூவருமே மவுனம் காத்தனர். ‘இப்படிப்பட்ட அமைப்புக்காகத்தானே நாம் காத்திருந்தோம். லண்டனுக்குச் சென்று என்ன செய்யப் போகிறோம்' என்று பானர்ஜி, தயாப்ஜியின் மனங்களில் குழப்பம்.
நவ்ரோஜியே அதை உடைத்தார்.
"பிரிட்டனில் குழப்பமான அரசியல் சூழல். ஏப்ரல் மாசம் நடந்த தேர்தல்ல யாருக்கும் பெரும்பான்மை சீட்டுகள் கிடைக்கல. லிபரல் கட்சிக்குதான் அதிக இடங்கள். அதனால ஆட்சிப் பொறுப்ப ஏத்துக்கிட்டாங்க. அயர்லாந்து விடுதலை குறித்த கேள்வினால கட்சி உடைஞ்சிருச்சு. மீண்டும் தேர்தல் வரப்போகுது. நான் போட்டியிடலாம்னு இருக்கேன்."
"யாரோட இணைஞ்சு நிக்கப் போறீங்க.. புதுசா சோசலிஸ்டு கட்சி ஆரம்பிச்சுருக்காங்களாம்.. உங்க சுரண்டல், வறுமை பற்றிய கருத்தோடு அவங்க பெரும்பாலும் ஒத்துப் போவாங்க.." - பானர்ஜி.
"இல்ல. ஆரம்பமே சரியில்ல. கார்ல் மார்க்சோட வரிகளை எடுத்துப் போட்டு, ஏதோ தானே அதெல்லாம் எழுதுன மாதிரி காட்டியிருக்காரு அந்தக் கட்சியைத் தொடங்கிருக்குற ஹிண்டுமேன். அந்தக் கட்சிய ஏத்துக்க முடியாதுன்னு ஏங்கல்ஸ் சொல்லிருக்காரு.. அதோட, நம்ம கருத்துக்கள நாடாளுமன்றத்துல ஒலிக்கனும். பழமைவாதக் கட்சி நம்ம ஏத்துக்காது. லிபரல் கட்சி நம்மள ஏத்துக்கலாம். முயற்சிப்போம்."
"நம்மள யார் முன்மொழிவாங்க?" - தயாப்ஜி.
"ஒருத்தர் இருக்கார்" என்ற நவ்ரோஜியின் விடையை மேலும் கேள்விக்கு உட்படுத்த விரும்பாத இருவரும் 'நாங்களும் லண்டனுக்கு வருகிறோம்' என்றார்கள்.
"டாக்டர்ஸ், நர்சுகள், வேலை பாக்குறவங்க இருந்தா போதுமா.. நாட் எனஃப்(போதாது). நல்ல கட்டிடமா மருத்துவமனை இருக்கனும். உள்அரங்குக்கும், வெளிப்புறத்திற்கும் தொடர்பு இருக்குறது அவசியம். உங்க நாட்டுல இருக்குற கட்டிட வடிவமைப்பாளர்கள்கிட்ட இதை வலியுறுத்துங்க. ப்ளீஸ்" என்று தன்னைப் பார்க்க வந்திருந்த ஆஸ்திரேலிய மருத்துவக்குழுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஃபிளாரென்ஸ் நைட்டிங்கேல்.
அப்படியே திரும்பித் தன்னுடைய சகாக்களைப் பார்த்த அவர், "தாதாபாய் நவ்ரோஜிய தேர்தல்ல நிறுத்துங்கன்னு கட்சிக்கு ஒரு கடிதம் தயார் பண்ணச் சொன்னேனே.. ஆயிருச்சா" என்றார்.
அவரது கடிதம் பிரிட்டனில் விவாதத்தை உருவாக்கியது.
லண்டன் திரும்பியதும், 'தங்களை ஆதரிக்கப் போகும் நபர் யார்' என்பதை பானர்ஜியும், தயாப்ஜியும் புரிந்து கொண்டார்கள்.
"இப்படி ஒரு ஆதரவு கிடைக்கும்னு நாங்க எதிர்பாக்கல" - தயாப்ஜி.
"அவரோட இந்தக் கருத்து புதுசு இல்ல. பல பிரச்சனைகள்ல முற்போக்குக் கருத்தைக் கொண்டவர். அவரோட தாத்தாதான் அவருக்கு முன்மாதிரி. இந்தியர்களோட கோரிக்கைகள்லாம் நியாயமானதுன்னு வெளிப்படையாவே சொல்வாரு.. அவராலதான் நாம இப்போ லிபரல் கட்சி சார்புல ஹோல்போர்ன் என்ற நாடாளுமன்றத் தொகுதில நிக்கப் போறோம்." - நவ்ரோஜி.
பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு கடிதம் எழுதினார் நைட்டிங்கேல். இந்தியர்களின் குரல் நமது நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று அக்கடிதம் கோரிக்கை வைத்தது. தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லை. பெரும் வித்தியாசத்தில் நவ்ரோஜி தோற்றார்.
முடிவுகள் பற்றிப் பேசிய பிரதமர் சாலிஸ்பரி, "அதெப்படி, வெள்ளையர்கள் ஒரு கருப்பருக்கா வாக்களிப்பார்கள்" என்று வெறுப்பை உமிழ்ந்தார். அரசியல் வெப்பத்தை அந்தக் கருத்து அதிகரித்தது.
இந்த வெறுப்புப் பேச்சு பிரிட்டனை உலுக்கியது. நிறவெறிக்கு எதிரானவர்கள் 'மனிதம் செத்துப்போகும்' என்று குரல் எழுப்பினர். 'நவ்ரோஜி வெற்றி பெற்றிருக்க வேண்டியவர்' என்று நாடு முழுவதும் பேசிக் கொண்டார்கள்.
இரவு உணவின்போது பானர்ஜியும் இதைத்தான் சொன்னார்.
"இந்த ஆள் தேர்தல் பிரச்சாரத்துல இப்படிப் பேசியிருந்தா இந்நேரம் நீங்க சரித்திரம் படைச்சுருப்பீங்க"
"ஆளும் வர்க்கத்தோட குணத்தைப் பாருங்க.. வெறுப்ப உமிழ்றாரு... அப்ப கூட, என்னதான் மாறிருந்தாலும் ஒரு கருப்பருக்கு எப்புடி வெள்ளைக்காரங்க ஓட்டுப் போடுவாங்கனு, மக்கள் மேலயே பழி போடுறாரு.."
உரையாடலில் கலந்து கொண்ட தயாப்ஜி, "ஆமா... நம்ம தேசத்த ஆக்கிரமிச்சிருக்காங்க. எதுக்காக ஆளுறோம்னா இந்தியர்களுக்கு ஆளத்தெரியாதுனு சொல்வாங்க.. நமக்கு உரிமைகள அனுபவிக்குற அளவுக்கு முதிர்ச்சி இல்லனு நம்ம மேலயே குற்றம் சாட்டுறாங்க.."
"தட் இஸ் இம்பீரியல் வியூ(அது ஏகாதிபத்திய பார்வை)... எல்லாரும் நமக்குக்கீழங்குற கண்ணோட்டம்.. பேரரசர்கள், சிற்றரசர்களப் பாத்தாங்க... இப்போ பலத்துல பெரிய நாடுகள், மத்த நாடுகளத் தரக்குறைவாப் பாக்குறாங்க.. - நவ்ரோஜி.
"ஆனா, நைட்டிங்கேலோட ஆதரவு நல்ல தாக்கத்த ஏற்படுத்துச்சே - பானர்ஜி.
"அவரோட ஆதரவுனாலதான் நாம வேட்பாளரானோம். லிபரல் கட்சி நம்மை வேட்பாளராக்குச்சு. இப்பவும் பிரதமரோட பேச்சால பெரிய அதிருப்தி இருக்குனா அதுக்கும் நைட்டிங்கேலோட நிலைப்பாடுதான் காரணம்.. நிலைமை இன்னும் மாறும்."
அப்போ இப்போ வெச்சது முற்றுப்புள்ளி இல்லையா?
முற்றுப்புள்ளிங்குறது வாக்கியங்கள நிறைவு பண்ணுறதுக்குதான... வாழ்க்கையை இல்லியே..
ஆண்டுகள் உருண்டோடின. 1892ல் அடுத்த தேர்தலும் வந்தது. அதுவரையில் பேசுபொருளாகவே "கருப்பர்" நவ்ரோஜி இருந்தார்.
மத்திய ஃபின்ஸ்பரியில் சாலையோரப் பூங்காவொன்றில் மூவரும் அமர்ந்திருந்தனர்.
தயாப்ஜியின் முகத்தில் சந்தேக ரேகைகள். திருப்தியில்லாமல் முகத்தை இடது, வலதுமாக ஆட்டிக் கொண்டிருந்தார். உடல் வெப்பத்தால் முகம் சிவந்து கிடந்தது.
அதைப் புரிந்து கொண்டவராய், "இதப் பாருங்க தயாப்ஜி... நமக்கு லிபரல் கட்சி ஆதரவு முக்கியம். அவங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கும்.." - நவ்ரோஜி.
"அது எப்படிங்க... ஹோல்போர்ன்ல தோத்தோம். அப்போ பிரதமர் நிறவெறியக் கிளப்புனாரு.. அதனால நாம ஜெயிச்சுருக்கனும்குற கருத்து மக்கள் மத்தில எழுந்துச்சு... அப்படினா, நீங்க மறுபடியும் அங்கதான நிக்கனும்.. எதுக்காக தொகுதி மாறி இங்க(மத்திய ஃபின்ஸ்பரி) போட்டியிடனும்.."
அதை ஏற்றுக் கொள்ளாதவராக பானர்ஜி, "எனக்கு என்ன தோணுதுன்னா.. இந்த ஹோல்போர்ன் பழமைவாதிகளோட சொர்க்கம். அவங்களுக்கு ஆதரவு அதிகம். ஹோல்போர்ன் மக்கள்கிட்ட பிரதமரோட கருத்துக்கு பெருசா எதிர்ப்பு கிளம்புன மாதிரி தெரியலை. வெளிப்படையா சொல்லனும்னா, நவுரோஜி கருப்பர்.. அவருக்கு எதுக்கு வாக்குனு கேட்டா, சரி, போடலைன்னு சொல்றவங்கதான் அதிகம்.."
அதிர்ந்து போனார் தயாப்ஜி. "எங்களோடயே இருக்கீங்க... இதெல்லாம் உங்களுக்கு எப்புடித் தெரியும்..?"
"கொஞ்சம் விசாரிச்சேன், அவ்வளவுதான். நாம தேர்தல்ல நிக்குறோம்னு சொன்னாக்கூட அவங்களால ஜெயிக்கவே முடியாத ஹோல்போர்ன் மாதிரி இன்னும் ரெண்டு தொகுதிய லிபரல் கட்சிக்காரங்க குடுத்துருவாங்க.."
மூவரும் சிரித்தனர்.
ஃபின்ஸ்பரியில் மனுத்தாக்கல் செய்கிறார் நவ்ரோஜி.
வெளிப்படையாகவே பழமைவாதக் கட்சியினர் 'கருப்பருக்கா வாக்கு' என்று பிரச்சாரம் செய்கிறார்கள். நைட்டிங்கேலின் தாக்கம் இங்கும் இருந்தது. லிபரல் கட்சி மீது அவர் அதிருப்தி கொண்டிருந்தாலும், நவ்ரோஜி நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்பதில் அக்கறையோடு இருந்தார்.
"நிலைமை எப்படி இருக்கிறது?" - தயாப்ஜி. அரசியல் நிலவரம் பற்றி பானர்ஜிதான் நிறைய விபரங்கள் வைத்திருப்பார் என்று தயாப்ஜி நம்பத் தொடங்கியிருந்தார்.
"இழுபறிதான்" - பானர்ஜி.
"என்ன, இப்புடிச் சொல்றீங்க" என்று தயாப்ஜி கேட்கும்போதே, "அவர் சொல்றது சரிதான்" என்றார் நவ்ரோஜி.
"இந்தத் தேர்தலத் தாண்டி நான் ஒண்ணு சொல்லனும்" - தயாப்ஜி.
மற்ற இருவரும் அவரை நோக்கிக் கண்களைத் திருப்பினர்.
"இங்க எப்புடி தேர்தல் நடக்குது... நாடாளு-மன்றத்துக்கு அவங்கவங்க பிரதிநிதிகளத் தேர்வு பண்றாங்க... அடுத்த தேர்தலுக்கு முன்னாடி வரைக்கும் நாங்க என்ன செய்வோம்னு மக்கள்கிட்ட சொல்றாங்க.. நம்ம தேசத்துலயும் நமக்குனு நாடாளுமன்றம் இருந்தா நல்லாருக்குமே.."
"ரொம்பச் சரி தயாப்ஜி.. நாம இப்போ உரிமைகளக் கேக்குற கட்டத்துல இருக்கோம்.. அடுத்த கட்டமும் வரவே செய்யும்.."
"சரி..சரி... வாங்க. ஓட்டு எண்ண ஆரம்பிச்சுருவாங்க.."
முக்கியமான பல பத்திரிகையாளர்கள் மத்திய ஃபின்ஸ்பரிக்கு வந்துவிட்டிருந்தார்கள். வாக்குகள் எண்ணத் தொடங்கியதிலிருந்து பழமைவாதக் கட்சியின் ஃபிரெடெரிக் பென்டனும், நவ்ரோஜியும் மாறி, மாறி ஒற்றை இலக்கத்தில் முன்னணியில் இருந்தனர். கடைசிக் கட்ட எண்ணிக்கையில் எண்ணும் அறையில் இருந்த அனைவருமே மூச்சை இழுத்துப் பிடித்திருந்தார்கள். வெப்பம் அதிகரித்தது.
அறிவிப்புப் பலகையில் இறுதி நிலவரம் எழுதப்பட்டது.
பென்டன் - 2956
நவ்ரோஜி - 2959
ஆம், மூன்று வாக்குகள் அதிகம் பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இடம் பெறப்போகும் முதல் இந்தியர் என்ற சாதனை படைக்கப்பட்டது.
திடீர் சலசலப்பு தோன்றியது. ‘இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என்று பழமைவாதக் கட்சியினர் பிடிவாதம் பிடித்தார்கள். அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. தகவல் தெரிந்த பிரதமர் சாலிஸ்பரியும், ‘இப்படி ஒரு முடிவு வருவதற்கு வாய்ப்பில்லை. வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்' என்றார்.
வாக்குகள் எண்ணப்பட்டன. கூடுதலாக இரண்டு வாக்குகள் கிடைக்கின்றன. ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் நவ்ரோஜி வெல்கிறார்.
தயாப்ஜியிடம் பானர்ஜி, "முதல் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கருப்பரால் முடியாது.. ஜனநாயகத்திற்கு இந்தியர்கள் லாயக்கில்லை.. சட்டம் இயற்றுவது அவர்களுக்கு வராது.. என்று நம்மீது சுமத்தப்பட்ட அனைத்தையும் முறியடித்திருக்கிறோம்.. அடுத்த கட்டத்தை நோக்கி தேசம் நகரட்டும்" என்றார்.
அடுத்த ஆண்டில் லண்டனிலிருந்து பம்பாய் நகருக்கு நவ்ரோஜி வந்தார். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு முதன்முறையாக வருகிறார். அப்போது அவரை வரவேற்க அஞ்சு லட்சம் பேர் கூடியது, 'ஆம்.. நகர்த்தத் தயாராக இருக்கிறோம்' என்று பானர்ஜிக்கு பதில் அளித்தது போலிருந்தது. அதுவும் பனிக்காலம்தான். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் விட்ட மூச்சுக்காற்றின் வெப்பம், கடற்காற்றின் குளிர்ச்சியைத் தோற்கடித்தது. அந்த வெப்பத்தை மூவரும் உணர முடிந்தது. கண்களாலேயே அதன் பொருளை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
சொந்த நாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு லண்டனுக்குத் திரும்பியிருந்தனர். நவ்ரோஜியின் முகவரிக்கு வந்திருந்த கடிதங்கள் கொட்டிக் கிடந்தன. ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்தார். ஒரு கடிதத்தில் அவரது கவனம் சிறிது நேரம் நின்றது.
"தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தங்கள் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்."
இப்படிக்கு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
"பானர்ஜி.." என்று சத்தமாக விளித்தார் நவ்ரோஜி. தயாப்ஜியும் சேர்ந்து எட்டிப்பார்த்தார்.
"அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கிவிட்டது நமது பயணம்" என்றவாறே கடிதத்தை நீட்டினார்.
கணேஷ்
கணேஷ் என்ற பெயரில் எழுதும் க.சுப்ரமணியன், இந்திய விமானப் படையில் 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்று, சமூகக் கடமையாகக் கல்விப்பணி செய்துவருகிறார். போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் செய்கிறார். "ஓம்..க்ரீம்..ஐஸ்கிரீம்" "மாதா, பிதா, யூடியூப், தெய்வம்" ஆகிய தலைப்புகளில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.