யானை வெடி
ஓவியம்: ரவி பேலட்

யானை வெடி

அறிவியல் சிறுகதை

யானை வெடி என்றவுடன் தீபாவளி நினைப்பு உங்களுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. யானை வெடி - 1602. இதுதான் நான் என் உதவிக்கு வீட்டில் வைத்திருக்கும் வேலைக்கார - ரோபோட்டின் பெயர். என் வீடு இருப்பது நடுநாட்டில் கள்ளக் குறிச்சிக்கும் விருத்தாசலத்திற்கும் நடுவே கோண்டூர் கிராமம். எங்கள் ஊருக்கு வேலைக்கார ரோபோட் ஒன்றை வீட்டில் வைத்திருப்பது என்பது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் தனிக்கட்டையாக கல்யாணமே ஆகாமல் தங்கிப்போன சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியரான எனக்கு ராணுவத்தில் பணியாற்றிய நண்பன் அன்பளிப்பாக கொடுத்தது என்பதால் ஊர் அதிகம் கண்டுகொள்வதில்லை. ஊர் முழுக்க கடன். என்னால் எதையும் விலைபோட்டு வாங்க முடியாது என்று ஊருக்கே தெரியும்.

யானை வெடியை நான் அழைத்து வந்த புதிதில் அப்படி அல்ல ஆறடி உயர ஆண்ரோபோட் மனிதர் மாதிரியே பேசுவதும் எனது எல்லா கட்டளைகளுக்கும் அடிபணிவதும் ஊரால் நம்ப முடியவில்லை.

என்னுடன் திருச்சி கல்லூரியில் படித்த நண்பன் டேனியல், லெப்டினன்ட் டேனியலாய் இந்திய ராணுவத்தின் அங்கமாகி கார்கில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த நாட்களில் நான் பதறிப்போய் நேரில் சென்று நலம் விசாரித்தேன். பல ஆண்டுகள் கழித்து எங்கள் சந்திப்பு நடந்தது. அவனது சக்கர நாற்காலி நகர்வைக் கண்டு பதறிய எனக்கு அவனுக்கும் திருமணமே ஆகவில்லை என்பது அன்றுதான் தெரியும்.

‘ஆனால் நான் ஒன்றும் தனியாக இல்லை...' என்றான் அவன். ‘யானை வெடி இரண்டு கப் டீ கிடைக்குமா... பிளீஸ்' அவனது குரல் அதிர்ந்தது. சற்று நேரத்தில் அற்புதமான மனித வேலைக்கார ரோபோட் கப் அண்டு சாசர்-தட்டுடன் எங்கள் முன் நின்றது. நல்ல சுவையான தேநீர்.

‘அடுத்த முறை தேநீர்.. ஆர்டர், சொல்லும்போது இனிப்பு எவ்வளவு சேர்க்கலாம்.. என்பதையும் சேர்த்து சொல்லமுடியுமா.?' என்று நல்ல தமிழில் பேசவும் செய்த அந்த இயந்திர மனிதனை நான் நம்ப முடியாமல் பார்க்கிறேன். ‘கண்டிப்பாக இனி சரியாக சொல்கிறேன்.. நன்றி' என்கிறான் நண்பன். நான் அங்கிருந்த ஒரு மணி நேரத்தில் அவன் தனியாக அதுவும் சக்கர நாற்காலியில் தவித்தபடி இருப்பதாகவே கருதமுடியவில்லை. எப்போதும் உடனிருந்த அந்த ரோபோட் உதவியபடியே இருந்தது.

நான் கிளம்பும்போது நண்பன் டேனியல் ‘ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வா தாசு..' என்றான் (ஆமாம். தாசுதான் என் பெயர்) லீவு கிடைக்கவில்லை. தவிர பெங்களூர் வரை போக கையில் காசு சேரவேண்டுமே... நான் திரும்ப செல்வதற்கு நான்கு மாதம் ஆகி விட்டது. அதுகூட என் உறவுக்கார பெண் ஒருத்தியின் திருமணத்தை சாக்கிட்டு அரசுபேருந்தில் போனவன் வரும்போது நண்பன் டேனியலில் காரில் வந்து சேர்ந்தேன். அதற்கு காரணம் இருந்தது.

‘இந்தா... உனக்கும் ஒரு யானை வெடி..' என்றான் அவன். அவன் காட்டிய இடத்தில் சாதுவாக என் வேலைக்கார ரோபோட் உட்கார்ந்திருந்தது.

‘இதெல்லாம் யார் செய்கிறார்கள் ..? உனக்கு ஏது..? என்ன விலை?' பல கேள்விகளை நான் ஒரே நேரத்தில் கேட்கிறேன்.

‘நாங்கள் எங்கள் ராணுவத் தளவாட ஆலையில் ஆவடியில் இதை செய்கிறோம் தாசு. பொதுவாகவே இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு தான் கிடைக்கும். என் பெயரில் உனக்கும் ஒன்று. நீயும் தனிக்கட்டை உதவியாக இருக்கும் என்று.. ' என்றான்.

‘அது என்ன யானை வெடி?' என் கேள்விகள் தொடர்ந்தன.

‘1970 களில் இந்திய ராணுவத்தில் அர்ச்சுனா என்ற வகை டாங்கிகள் இருந்தன. அவை பெரிய குண்டுகளை தன் பீரங்கிமூலம் பொழிந்து எதிரிகளை தாக்கும். அந்த குண்டுகளுக்கு யானை வெடி.. எலிஃபண்ட் பாம்-என்று பெயர். நம் நாடு இருமுறை பாகிஸ்தானை வென்றிட நம் ஆவடி தளவாட ஆலையின் இந்த யானை வெடிகள் பெரிய பங்கு வகித்தன' அவன் புன்னகைத்தான்.

‘பிறகு நமது ராணுவம் வேறு நவீன தளவாடங்களை செய்யத் தொடங்கிவிட்டது.. அதிகமாக மிஞ்சிப்போன அந்த அர்ச்சுனா டாங்கி... எலிபஃண்டு - பாம் இவற்றை உருக்கிதான் இந்த வேலைக்கார ரோபோட்டுகளை செய்கிறார்கள். அதனால்தான் அந்த பெயர் யானைவெடி... என்னுடையது யானைவெடி - 1601. உன்னுடையது யானைவெடி - 1602 நண்பா' என்றான்.

மறுக்கமுடியாமல் என் ரோபோட்டை அவனது காரிலேயே ஏற்றிக்கொண்டு கிளம்பும்போது சொன்னான்.

‘ஒரே ஒரு விஷயம் மட்டும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்... ராணுவ ரோபோட்... சாதாரண வேலையாள் போல திட்டவோ தாக்கவோ கூடாது. நாமும் அதனிடம் பணிவு காட்ட வேண்டும்.' என்றான்.

‘இல்லையேல் என்ன ஆகும்' என்றேன் நான். ஏற்கனவே எனது யானைவெடி காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்திருந்தது..

‘அதன் இடதுகையால் தன்னை இம்சித்தவரை அது பழிவாங்கும். இடதுகை ஆட்காட்டி விரலால் 75 மில்லி ஆம்ப்பியர் மின்சாரத்தை பாய்ச்சி தாக்கும்' என்று கிசுகிசுத்தான் ‘மனிதனால் 10 மில்லி ஆம்பியர் மட்டுமே தாங்கமுடியும். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை.. தாஸ் என்ஜாய்' என்று வழிஅனுப்பிவைத்தான்.

ரவி பேலட்

எனக்கும் என் வேலைக்கார ரோபோட் யானை - வெடிக்கும் விரைவில் எல்லாமே அருமையாக பழகிப்போனது. சமையல் மட்டும் நான் அதை செய்ய விடுவது இல்லை. காலையில் நான்கு மணிக்கு எழுப்பும். வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்கும். சாப்பாட்டு சாமான்களை கழுவும். என் துணிமணி துவைக்கும். அயர்ன்செய்து வெந்நீர்போட்டு... எல்லாமே அதுதான். பற்றாததற்கு நான் வீட்டிற்கு கொண்டுவரும் என் நான்காவது ஐந்தாவது வகுப்பு மாணவர்களின் பரிட்சை பேப்பர்களைக் கூட திருத்தி மதிப்பெண் போட நான் சொல்லிக்கொடுத்தேன். என் நண்பன் சொன்னது படி நான் பிளீஸ், நன்றி என்று பணிவுடனேயே அதை நடத்தினேன். எல்லாம் நன்றாகவே இருந்தது. கல்கத்தாவிலிருந்து என் ஒரே சித்தப்பா வைரமாணிக்கம் வரும்வரை.

என் அப்பா வகையறாவில் மிச்சமிருக்கும் ஒரே சொந்தம் இந்த வைரமாணிக்கம் சித்தப்பா. நானே அவரைப்பார்த்து பல பத்தாண்டுகளில் இருக்கும். இவருக்கும் ஏறக்குறைய யாருமில்லை, என் சித்தி இறந்து ஐந்தாறுவருடம் இருக்கும். குழந்தை கிடையாது. அவர் திடீரென்று வருவதாக போன் வந்தது. என் செல் நம்பர் அவருக்கு எப்படி கிடைத்தது. என்பதே எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘சென்னை பக்கம் ஒரு வேலையாக வர இருக்கிறேன். உன்னோடு ஒருவாரம் பத்துநாள் தங்கலாமா' என்றார்.

எனக்கு பகீரென்றது..‘ஓகே சி... சித்தப்பா... ஆனால் வீட்டில் ஒரு ரோபோட் உதவியாளர் வைத்திருக்கிறேன். நீங்கள் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளமுடியுமா?' என்றேன்.

‘மிஷினா? இந்த துணிதுவைக்குமே?. அது மாதிரியா' என்றார்.

‘ஆ... ஆமாம். ஆனால் இது மற்ற வேலையும் செய்யும். டீ போடுவது... வீட்டைச் சுத்தம் செய்வது...' நான் தயங்கி தயங்கி இழுத்தேன்.

‘அய்யோ... சமையல்' என்றார்.

‘நோ நோ. சமையல் நான்தான்' என்றேன்.

‘அப்போ நோ பிராபளம். கண்ட சாப்பாட்டையும் என்னால் சாப்பிட முடியாது.' என்றபடி இணைப்பை துண்டித்தார்.

‘அவருக்கு என்னென்ன மாதிரி சாப்பிடப்பிடிக்கும்' என்றது யானை - வெடி.

‘உனக்கு எப்படி தெரியும்?' என நான் அதிர்ந்த போது ‘நீங்கள் பேசுவது எல்லாமே எனக்கு கேட்கும் சார்' என்றது அது.

‘இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாம் அதற்கு ஏற்றாற்போல அவரை கவனித்து நடத்த வேண்டும்‘ என்றேன்...

‘அகனமர்ந்து செய்யாள் உறையும்

நல்விருந்து ஓம்புவின் இல்..' என்றது யானை வெடி

‘வாவ்' என்றேன் என்னையும் அறியாமல்

 எல்லாம் பரிட்சை பேப்பர் திருத்தியதால் கற்றது... அது விடவில்லை...

‘முக மலர்ச்சியோடு நாம் விருந்தினரை பேணிடவேண்டும். அப்போது வீட்டில் லெட்சுமி எனும் செல்வம் பெருகும்' என்று திருக்குறளின் அர்த்தத்தையும் கூறியபடி தன் வேலைகளில் மூழ்கியது.

வைர மாணிக்கம் சித்தப்பா ஒருநாள் மாலையில் வந்து சேர்ந்தார். ஆனால் என்ன பெரிய ஆச்சரியம், அவர் என் ரோபோட் யானைவெடியோடு சகஜமாகி ஒன்றிவிட்டார்.. யானை வெடி இந்த பெட்டியை அங்கே வை. யானைவெடி வாசலில் உட்கார நாற்காலி போடு... ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துவா யானை வெடி என்று கேட்டுக்கொண்டே இருக்கும்...

ஆனால் அவர் வந்த எட்டாவது நான் அந்த சம்பவம் நடந்தது. மழை வருவது போலிருந்தது பயங்கரமாக இடிஇடித்துக்கொண்டிருந்தது… நான் உன் அறையில் இருந்தேன். மடார் என்று ஒரு சப்தம். இடி இடித்ததா வேறு ஏதாவதா என பார்க்க வெளியே விரைந்தேன், தோட்டத்திலிருந்து என் ரோபோட் வந்து என் முன் நின்றது.

‘சாரி, ஒரு விபத்து நடந்துவிட்டது' என்றது.

‘என்ன... என்ன ஆனது?' நான் பதறினேன்.

‘உங்கள் விருந்தினர் - திருக்குறளை தப்பு தப்பாக சொன்னார். நான் திருத்தினேன். வாக்குவாதம் முற்றியது வேலைக்கார நாயே... என்று என்னை ஒங்கி அறைந்தார்' என்றது யானை - வெடி. ‘நாங்கள் என்ன மனித அடிமையா? எங்களிடம் அதெல்லாம் நடக்காது.'

‘ எ... என்ன செய்தாய்' என்றேன். எனக்கு கைகால் எல்லாம் நடுங்கியது.

‘அதே... கரெண்ட் டீரிட்மெண்டதான். 75 மில்லி ஆம்பியர்... அவர் இப்போது உயிருடன் இல்லை‘ என்றது கூலாக.. நான் தோட்டத்திற்கு ஓடினேன். மழையில் அவர் சித்தப்பா வைர மாணிக்கம் குப்புற விழுந்து கிடந்தார்.

‘சற்று நேரத்திற்குமுன் நம் தோட்டத்து தென்னை மரத்தில் இடி விழுந்துவிட்டது சார். சித்தப்பா அதில்தான் இறந்துவிட்டார் என்று கூறிவிட முடியும்..' என்று எனக்கு அது யோசனையும் கூறியது... வேறு என்ன செய்வது. விதி.

வைரமாணிக்கம் சித்தப்பாவுக்கு ஈமகிரியை எல்லாம் முடிந்து எல்லாரும் ஊருக்கு போகும்வரை நான் யானை  -  வெடிக்கு வேலை எதுவும் தரவில்லை. அதுவும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.

சித்தப்பா இறந்த ஏழாம்நாள் ஒரு போன் வந்தது ‘ கல்கத்தாவிலிருந்து பிரகாஷ் மாண்டேல் பேசுகிறேன்... வீரப்பதாஸ் தானே பேசுவது.?. நான் வக்கீல்... திரு வைரமாணிக்கம் உயில் சம்பந்தமாக...' என்றார்.

‘ சொல்லுங்க சார்..' என்றேன் நான்.

‘திரு வைரமாணிக்கம் கடைசியாக தன்னை பார்த்துக் கொண்டு ஈமசடங்கும் செய்பவருக்கு தன் ஒரு கோடி ரூபாய் சொத்து என்று எழுதி உள்ளார். எல்லாம் உங்களுக்குத்தான். எப்ப சார் வரலாம்?‘

 திரும்பி பார்த்தேன். மிக அருகில் என்பின் நின்றிருந்தது யானை வெடி.

‘அகனமர்ந்து செய்யா உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்...

விருந்தினரை உபசரித்தால் செல்வம் வளரும்'

என்றபடி டீ குவளையை கொடுத்தது.

 மனதில் ஏற்பட்ட திகிலில் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com