அரசதூது

அரசதூது

தூரத்தில் வரும்பொழுது கூக்குரல் கேட்டது, அருகில் வருவதற்குள் வாள்கள் மோதி அடங்கும் சப்தம் வந்தது. உங்களுக்கு எதுவும் ஆகவில்லையே அம்மா?‘ என்று கேட்டபடி குதிரையில் இருந்து தாவினான் ஈசுவரன்.

‘யாருக்கும் ஒன்றும் ஆகவில்லையப்பா, நல்லவேளையாக இந்த இளைஞர் வாளுடன் புகுந்து அந்த கள்வர் கூட்டத்தைத் துரத்தி அடித்தார்' என்று வலதுபக்கம் கைநீட்டினாள் அந்த வணிகக்கூட்டத்தின் தலைவி போல விளங்கிய அந்த மூதாட்டி. அவள்  கைநீட்டிய திசையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் கள்வர்களுள் ஒருவனைத் தரையோடு அழுத்தி கைகால்களைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டிருந்தான்.

‘நல்ல காரியம் செய்தீர் நண்பரே. தாங்கள் யாரென்று அறிந்துகொள்ளலாமா?' என்று அருகில் சென்றான் ஈசுவரன்.

‘என்னை இன்னாரென்று முன்பின் அறியாதவரிடம் அறிமுகம் செய்துகொள்ள என்னால் இயலாது. அருகில் உள்ள ஊரின் காவல் பொறுப்பாளரிடம் இந்தக் கள்வனை ஒப்படைக்க வேண்டும், வழி சொல்வீரா?' என்றபடி கள்வனைத் தன் குதிரையோடு சேர்த்து பிணைத்தான் அந்த இளைஞன்.

பதில்கள் சுளீரென்று வந்ததில் சிறிது தடுமாறிய ஈசுவரன், இவனைப் பற்றி நிச்சயம் அறியவேண்டும் என்று எண்ணி வழிகாட்ட ஒப்புக்கொண்டான். இருவரும் முன்பின்னாக செல்ல நடுவில் பத்திரமாக அந்த வணிகக் குழு பயணம் செய்தது.

ஊரை அடைந்ததும் பேசத்தொடங்கினான் ஈசுவரன், ‘இந்த ஊரின் காவல் பொறுப்பாளர் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். இங்கிருந்து வணிகர்குழு தம் வழியே செல்லட்டும், இந்த கள்வனை சேர்க்க வேண்டிய இடத்திற்கு நான் தங்களை அழைத்து  செல்கிறேன்' என்று அந்த இளைஞனை ஒரு பெரிய அரசு சத்திரத்திற்கு அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்ற ஈசுவரன் சிறிது நேரத்தில் கம்பீரமான இளைஞன் ஒருவனுடன் வெளியே வந்தான். அவனுடைய உடைகளும் தோற்றமும் அரச பதவியில் இருப்பவன் என்பதைப் பறைசாற்றின.

‘நீங்கள் இந்தப் பகுதி மக்களுக்கு மாபெரும் உதவி செய்திருக்கிறீர் நண்பரே! என் பெயர் பொற்சிலம்பன். இந்த பகுதிக்கு நான் வந்ததே நீங்கள் பிடித்த கள்வர்களை ஒழிப்பதற்காகத்தான். உங்கள் பெயரை நான் அறிந்துகொள்ளலாமா?' என்று கேட்டான் ஈசுவரன் அழைத்துவந்த அரசு அதிகாரி.

‘என் பெயர் ஆதித்தன். உங்களுக்கு உதவ முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன். நான் அவசர வேலையாக உடனே புறப்பட வேண்டும், தவறாக எண்ண வேண்டாம். நான் வருகிறேன்‘ என்று விடைபெற விரும்பி கிளம்பினான் ஆதித்தன்.

‘நீங்கள் அவ்வளவு விரைவாக எங்கே செல்லவேண்டும் என்று கூறினால் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்' என்று விடாமல் தடுத்தான் பொற்சிலம்பன்.

‘புரிந்துகொள்ளுங்கள் அய்யா, அரச காரியம். அவசரமாக நான் தலைநகர் காஞ்சியை அடைந்து பல்லவ இளவரசர் தந்த ஓலையை அரசர் இராசசிம்மரிடம் அளிக்க வேண்டும்' என்று துடித்தான் ஆதித்தன்.

‘மாபெரும் காரியம்தான். ஆனால் இன்று இரவு உங்களால் பயணம் செய்ய இயலாது. பல்லவப் போர்ப்படைகள் தாங்கள் செல்லும் வழியே தான் இன்று காஞ்சி நோக்கி பயணப்பட உள்ளதாக தகவல், நீங்கள் விரும்பினால் இந்த அரசு சத்திரத்தில் இன்றிரவு எங்களோடு தங்கலாம். நாளை காலை பொழுது விடிந்தவுடன் நீங்கள் தாமதிக்காமல் புறப்படலாம். இதோ என் நண்பர் ஈசுவரன்கூட காஞ்சிக்குத் தான் செல்கிறார், அவர் உங்களை அழைத்துச்செல்வார்' என்று பொற்சிலம்பன் கூற வேறுவழியின்றி ஒப்புக்கொண்டான் ஆதித்தன்.

ஆதித்தன் உணவு உண்டு திரும்பியபோது நண்பர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்று ஆதித்தன் அமர்ந்தபொழுது அவர்களது பேச்சு பல்லவ-சாளுக்கிய போர் பற்றித் திரும்பியது.

‘இராசசிம்மர் ஆட்சியில் பல ஆண்டுகளாக பல்லவ தேசம் போரை மறந்து நிம்மதியாக இருந்து வந்தது. இந்த இளவரசர் தேவையில்லாமல் சாளுக்கிய சிற்றரசர் மகளை விரும்பி அழைத்துவந்து மீண்டும் போருக்கு வழிவகுத்துவிட்டார். ஏதோ ஒரு சாளுக்கிய தேசப்பெண்ணை காதலித்து அழைத்துவந்தாலும் பரவாயில்லை, அந்த சிற்றரசர் மகள் சாளுக்கிய மன்னர் விஜயாதித்தருக்கு மிகவும் வேண்டிய சிற்றரசர் மகளாம்' என்று தன் வேதனையை வெளிப்படுத்தினான் ஈசுவரன்.

‘அதென்ன அப்படிச் சொல்லிவிட்டாய் ஈசுவரா! பல்லவர்கள் போருக்கு அஞ்சியவர்களா? பல்லவ இளவரசர் விரும்பிய பெண்ணை அந்த சிற்றரசரே மனமுவந்து அவருக்கு திருமணம் செய்துவைத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் அமைதி நிலைத்திருக்கும், இரு நாடுகள் இடையே நல்ல உறவு வளர்ந்திருக்கும். அதை அவர்கள் செய்யத் தவறியது இளவரசர் தவறா என்ன? நீ என்ன சொல்கிறாய் ஆதித்தா?' என்று கேள்வியை ஆதித்தன் பக்கம் திருப்பினான் பொற்சிலம்பன்.

‘பல்லவ-சாளுக்கியப் பகை பல ஆண்டுகளாக இருந்துவருவது, சமீப ஆண்டுகளாக இல்லாமல் இருந்து வந்தது. இத்தனை ஆண்டு அமைதியைக் கெடுக்கும் விதமாக தற்பொழுது இளவரசர் நடந்துகொண்டார். ஆயிரம் இருந்தாலும் இளவரசர் அந்த பெண்ணை அழைத்துவந்திருக்கக் கூடாது' என்று தன் மனதில் உள்ளதைக் கூறினான் ஆதித்தன்.

‘அட என்னப்பா நீயும் ஈசுவரன் பக்கம் பேசுகிறாய்' என சலித்துக்கொண்டான் பொற்சிலம்பன்.

‘ஆதித்தன் என் பக்கம் பேசவில்லை, நியாயத்தின் பக்கம் பேசுகிறார். இப்படி போர் தூண்டும் காதல் தேவையா என்ன?' என்று தன் பக்கக் கருத்தை பதிவு செய்தான் ஈசுவரன். இப்படியாக வெகுநேரம் நண்பர்கள் பேசியபடி இருக்க, களைத்திருந்த ஆதித்தன் தனியே சென்று உறங்கினான்.

மறுநாள் அதிகாலையிலேயே பொற்சிலம்பனிடம் விடைபெற்று ஆதித்தனும் ஈசுவரனும் கிளம்பினர். வழிநெடுக ஆதித்தன் அமைதிகாத்தபடியே வந்தான். அவனை தொந்தரவு செய்யவேண்டாமென்று ஈசுவரனும் அமைதியாக அவனை விரைந்து காஞ்சிக்கு அழைத்துச்சென்றான். காஞ்சி நகருக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே அரசர்மாளிகை வாயிலுக்கு ஆதித்தனை கொண்டுசென்றான் ஈசுவரன்.

‘என்னால் வாசல்வழியே செல்ல முடியாது ஈசுவரா. யாரும் அறியாமல் அரசரிடம் ஒப்படைக்கவேண்டி இளவரசர் என்னிடம் கொடுத்த ஓலையைச் சுமந்து வந்திருக்கிறேன் நான். எப்படியாவது காவலர்கள் கண்களில் படாமல் நான் உள்ளே செல்கிறேன். உம் உதவிக்கு நன்றி' என்று நகர முயன்றான் ஆதித்தன்.

‘நில்லப்பா! உன்னை பாதியில் விட்டுச்செல்ல என் மனம் இடம்கொடுக்க மாட்டேன் என்கிறது. உன் குதிரையை என்னிடம் கொடு, இதை வைத்து நான் காவலர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறேன். உன் காரியம் ஆனவுடன் கோட்டைக்கு மேற்கே உள்ள காட்டிற்கு வந்துவிடு. அங்கே உனக்காக நான் குதிரையுடன் காத்திருக்கிறேன்' என்று ஆதித்தனின் குதிரையைத் தன் கையில் வாங்கிக்கொண்டு அவனது பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் விரைந்தான் ஈசுவரன்.

மாளிகையின் சுவர்களில் ஏறி ஒளிந்து மறைந்து உள்பகுதியை அடைந்தான் ஆதித்தன். தான் வந்த காரியமாக பல இடங்களில் அலைந்து திரிந்தான். கடைசியில் நந்தவனத்தில் ஆலமரத்தின் அடியில் ஆழ்ந்த சிந்தனையில் ஓர் இளம்பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவள் அமர்ந்திருந்த மரத்தின் பின்புறம் மறைந்து நின்றான்.

ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உறுதிசெய்தபின் அவள் முன்னே தோன்றினான் ஆதித்தன். திடீரென ஒரு ஆண்மகன் தன் முன்னே தோன்றியதில் திடுக்கிட்ட அந்த இளம் பெண் குறுவாளை உருவி நீட்டியபடி லேசாக பின்நகர்ந்தாள்.

‘நான் எதிரி இல்லை தேவி, உங்களை இங்கிருந்து மீட்டுச் செல்லவே வந்திருக்கிறேன். பார்போற்றும் சாளுக்கிய அரசர் விஜயாதித்தரின் மகன் விக்ரமாதித்தன் நான். தங்களுக்கு தம்பி முறை ஆவேன். தங்களை பல்லவ இளவரசன் கடத்தி வந்ததை அறிந்த என் தந்தை தங்களை மீட்டுவர என்னை அனுப்பினார், வழியில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிக்கவும். புறப்படுங்கள் தேவி, இன்று மாலைக்குள் தங்களை தங்கள் தகப்பனாரிடம் நான் கொண்டுசேர்க்கிறேன்' என்று சாளுக்கிய சிற்றரசன் மகள் முன் வணங்கி நின்றான் சாளுக்கிய இளவரசன் விக்ரமாதித்தன்.

‘இந்த ஏழைக்காக தாங்களே நேரில் வந்திருப்பது நான் செய்த புண்ணியம். ஆனால், இளவரசே! நான் என் விருப்பத்தின் பேரிலேயே பல்லவ இளவரசருடன் இங்கே வந்தேன். தங்களுடன் வருவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என்பொருட்டு போர் வேண்டாம் என்று தாங்கள் தான் என் தந்தையிடமும், உங்கள் தந்தையிடமும் கூறிப் புரியவைக்க வேண்டும்' என்று வேண்டி நின்றாள் சிற்றரசன் மகள்.

வெகுநேரம் வாதிட்டும் சாளுக்கிய தேசம் திரும்புவதற்கு அவள் மறுக்கவே, வேறு வழியின்றி வந்த வழியாகவே திரும்பினான் விக்ரமாதித்தன். கோட்டையின் மேற்குபக்க காடுகளில் ஈசுவரனைத் தேடி திரிந்தான். சிறிது நேரத்தில் ஈசுவரனே குதிரைகளுடன் விக்ரமாதித்தனை வந்து சேர்ந்தான். ஈசுவரன் வழிநடத்த வாதாபி செல்லும் சாலையை அடைந்தான் விக்ரமாதித்தன்.

‘நான் வந்த காரியம் முழுவதும் வெற்றிபெறாவிட்டாலும், உங்கள் உதவி இல்லாமல் இந்த அளவு கூட நிறைவேறி இருக்காது. மீண்டும் உங்களை எப்போது காண்பேன் என்று தெரியவில்லை. செய்த உதவிகள் அனைத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே. விடைபெறுகிறேன்‘ என்று விடைபெற்றுத் திரும்பினான் விக்ரமாதித்தன்.

‘சாளுக்கியப் படைகள் பல்லவ தேசத்தின் மீது போர்தொடுத்து வரும்போது பல்லவப் படைகளின் முன்னணியில் நீங்கள் என்னைக் காணலாம் சாளுக்கிய இளவரசர் விக்ரமாதித்தன் அவர்களே' என்று ஈசுவரன் கூறியதைக் கேட்டு திடுக்கிட்டு உடைவாளை உருவினான் விக்ரமாதித்தன்.

கண்ணிமைக்கும் பொழுத்துக்குள் அவர்கள் இருவரையும் ஆயுதம் ஏந்திய பல குதிரை வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.

‘வாளை உறையில் இடுங்கள் சாளுக்கிய இளவரசரே! தாங்கள் காஞ்சி சென்று, வாதாபி திரும்பும் வரை தங்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்று வழிகாட்டிய பல்லவ இளவரசர் பரமேஸ்வரவர்மரை நோக்கியே நீங்கள் வாள் நீட்டுவது முறையாகுமா?' என்று கேட்டபடி முன்னே வந்தான் பல்லவ அரசின் ஒற்றர்ப்படை தலைவன் பொற்சிலம்பன்.

‘இளவரசர் மாறுவேடத்தில் எல்லைகளைக் கண்காணிக்கச் சென்றபொழுதே தங்களைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுதே தங்களைப் பற்றி அறிய வேண்டும் என்று விரும்பியே என்னிடம் அழைத்துவந்தார். பல்லவ படைகளிலும், எனக்கு கீழே வரும் ஒற்றர்ப்படையிலும் இல்லாத உம்மைப்பற்றி எப்படி அறிந்துகொள்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது இளவரசரிடம் இருந்து ஓலை என்று இளவரசரிடமே பொய்யுரைத்து தாங்களே தங்களை யாரென்று காட்டிக் கொடுத்துவிட்டீர். உங்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென்று நான் இளவரசர் பரமேஸ்வரவர்மரை வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அவர் அனுமதி மறுத்து தங்களை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்' என்று நடந்தவற்றை விளக்கினான் பொற்சிலம்பன்.

‘உங்கள் நாட்டு இளவரசியை அவரது விருப்பத்தின் பேரிலேயே நான் அழைத்துவந்தேன். இதைத் தங்களுக்கு உணர்த்தவே உங்களை காஞ்சிக்கு அழைத்துச் சென்றேன். நீங்கள் தாராளமாக இந்த உண்மையைத் தங்கள் அரசருக்குக் கொண்டுசெல்லலாம். திருமண சம்பந்தம் ஆனாலும் சரி, போரானாலும் சரி பல்லவ தேசம் தங்களுக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கும்' என்று சாளுக்கிய இளவரசரை வழியனுப்பி வைத்தார் பல்லவ இளவரசர் பரமேஸ்வரவர்மர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபு வயது கல்லூரி மாணவர் திருமாறன் ராதாகிருஷ்ணன். பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பயிலும்போது கல்லூரிப் பேராசிரியர்களின் தூண்டுதலால் கதைகள் எழுதத் தொடங்கினார். வேள்பாரி போன்றதொரு நாவலை எழுதுவது இவருடைய கனவு. நிறைய வாசித்து, தொடர்ந்து எழுதவேண்டும் என்பது  விருப்பம்.

ஜனவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com