இன்னும் சில அம்மாக்கள்!

இன்னும் சில அம்மாக்கள்!

சதீஷ் அந்த மாலை நேரத்தில் வீட்டுக்கு போன் செய்திருந்த போது அம்மா வைதேகி தான் போன் எடுத்தாள்.

‘ஹலோ சொல்லு சதீஸ்.. எப்படியிருக்கே. சினேகா எப்படியிருக்கா. எல்லோரும் சவுக்கியம் தானே..' என்றாள் அம்மா.

‘ம்..ம்..' என்றான் அவன் வேகமாக.‘அப்பா இல்லையாம்மா. அவரு எங்கே போனாரு..?'

‘அவரோட நண்பர் நடராஜன் வந்தாரு. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வெளியே கிளம்பிட்டாங்க. என்ன ஹைஸ்கூல் வரைக்கும் போய் கீரை வடை சாப்பிட்டுட்டு, தேங்காய்ப் பால்

குடிச்சிட்டு வருவாங்க. ஏன்ப்பா. ஏதாவது முக்கியமான விசயமா.. அம்மாகிட்டே சொல்லக் கூடாதா..?' என சிரித்தாள்.

‘நீ வேறம்மா என் டென்சன் புரியாம..' அங்கலாய்த்துக் கொண்டான்.‘அவரு வந்தவுடனே கூப்பிடச்

சொல்லும்மா. அப்பா கூடக் கொஞ்சம் பேசணும்.' மீண்டும் மறுஒலிபரப்பினான்.

‘சரி வந்ததும் கூப்பிடச் சொல்றேன். சினேகா பக்கத்துல இருக்காளா. பேசி நாளாச்சு. போன் கொடேன்.'

‘அம்மா நான் வெளியே இருக்கேன். இன்னும் வீட்டுக்கு போகலை. ஏக்சுவலா அவ விசயமாத் தான் அப்பா கூடப் பேசனும் நான்.' என்றான் மர்மமாக.

‘ஏதும் பிரச்சனையா..' என்றாள் பதட்டமாக.

‘பிரச்சனை தான்..' என்றான் அவன் பெருமூச்சு விட்டவாறே.‘சும்மா இருன்னு சொன்னாக் கேட்டாத் தானே. அந்த பிசினஸ் பண்றேன், இதை வாங்கறேன், அதை விக்கறேன்னு எதையாவது பண்ணி எதிலேயாவது மாட்டிக்க வேண்டியது. ச்சே.'

‘என்னடா சொல்றே. என்ன ஆச்சுடா. யாரு..' பதறினாள் வைதேகி.

‘வேற யாரு. எல்லாம் உன் மருமக தான். உனக்கு இவ ஃப்ரெண்ட் கலாவதியைத் தெரியும் தானே.?'

‘யாரு.. அந்த காஞ்சிபுரம் புடவைகளை ஆன்லைன்ல விப்பாளே அவளா, உசரமா கண்ணாடி போட்டுக்கிட்டு'

‘ம், அவளே தான். பெரிய ஆர்டர் வந்திருக்கு. கையில பணம் இல்லை, ஒரு லட்சம் தா, அடுத்த மாசம் வட்டியோட சேர்த்துத் தர்றேன்னு எதையோ சொல்லி இவ மண்டையைக் கழுவியிருக்கா. இந்த லூசும் என்னைக் கேட்காமலேயே வீட்டுல இருந்த அவ நாலு பவுன் செயினை பாங்க்ல அடகு வெச்சு சினேகிதிக்காரிக்கு பணம் கொடுத்திருக்கு.'

‘ம்..'

‘என்னாச்சுன்னு தெரியலை, சரக்கு வந்திருக்கு, டெலிவரி எடுக்க வேண்டிய பார்ட்டி அப்படியே திரும்பிட்டான். எனக்கு இப்ப வேணாம், அடுத்த வருசம் வாங்கிக்கறேன்.. வீட்டுல கொஞ்சம் பிராப்ளம்ன்னு ஒரே வார்த்தையில போனை வெச்சிட்டான்.'

 'அய்யய்யோ அப்புறம்'

‘அப்புறம் என்ன அப்புறம்.. அவ்வளவு தான். தோழிக்கு உதவப் போய் இப்ப இவளுக்கு சிக்கல். பணத்தைக் கேட்டா புடவைகளை வித்துத் தர்றேன், பொறுன்னு அவ நழுவுறா.. அத்தனை புடவைகளை இவ எப்ப விக்கிறது, பணத்தைத் தர்றது..'

‘என்னடா இது இப்படிப் போய் மாட்டிக்கிட்டாளே.'

‘இதெல்லாம் நடந்து மாசத்துக்கும் மேல ஆச்சும்மா. ஒரு வார்த்தை மூச்சு விடலை. பிரச்சனை சமாளிக்க முடியாம பெரிசானதுக்கப்புறம் சொல்லிட்டு அழறா.'

‘ப்ச், பாவம்டா. தெரிஞ்சா ஏமாறுவாங்க..' மருமகள் சார்பாக பேசினாள்.

‘படட்டும்மா. சொல் பேச்சு ஒண்ணு கேட்கறதில்லை. ஆட்டமோ ஆட்டம். உனக்கென்ன தெரியும், உன்னை விட எனக்குத் தான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரி குதிக்க வேண்டியது. கடவுள் எப்படி கொட்டு

வெச்சான் பார்த்தியா.? நான் கண்டிசனா

சொல்லிட்டேன், இன்னும் பத்து நாள் தான் உனக்கு டைம். நகை வரலைன்னா நீ அவ்ளோ தான்னு..'

‘ஏன்டா. தோழிக்கு உதவப் போய் ஏமாந்து அவளே மனசுடைஞ்சு போயிருக்கா. ஆதரவா இருக்க வேண்டிய நீயே கை விடலாமா..'

‘அடப் போம்மா, உனக்கு உலகம் புரியாது. பண விசயத்துல யாரையும் நம்ப முடியாது! அவ தோழி சொல்றதெல்லாம் உண்மையான்னு உனக்கோ, எனக்கோ தெரியுமா. இதெல்லாம் நாடகமாக் கூட இருக்கலாமே.'

‘என்னடா சொல்றே. இப்படிக் கூடவா நடந்துக் குவாங்க.'

‘நீ வேறம்மா. டெய்லி பேப்பர் படிச்சுட்டு தானே இருக்கீங்க. சொத்துக்காக பெத்த அம்மா, அப்பாவையே கழுத்தறுத்துக் கொல்றாங்க. இதென்ன பிரமாதம்!'

 வைதேகிக்கு இதற்கு மேல் பேசத் தெரியாமல் பொதுவான குரலில்‘விடு விடு. எல்லாம் கிடைச்சுடும். நீ டென்சனாகாதே' என்றாள்.

‘நீ வேறம்மா, நான் கூப்பிட்ட விசயம் என்னன்னா.. அவ அங்கே வந்தாலும் வரலாம், என்னை சமாதானம் செய்ய அடகு வெச்ச நகையை மீட்க உங்ககிட்டே பண உதவி கேட்க வரலாம். அப்படி வந்தா அடிச்சுத் துரத்துங்க சொல்றேன் அந்தக் கழுதைய.'

‘ஏன்டா இப்படி? நம்ம குடும்பத்து ஆண்கள் பேசற வார்த்தையாடா இதெல்லாம். நல்லாவா இருக்கு.'

‘சும்மா இரும்மா.. அவ மேல எத்தனை கோபத்துல இருக்கேன் தெரியுமா. லட்சம்ன்றது சாதாரண தொகையா உனக்கு. பத்து ரூபாய் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருக்கு. பணத்தோட அருமை உனக்கு எங்கே தெரியும்.? அப்பா வந்தா அவருகிட்டேயும் ஸ்ட்ராங்கா சொல்லிடு. ஞாயித்துக் கிழமை வந்து நேர்ல பேசிக்கிறேன். வைக்கிறேன்ம்மா. கவனம்!'

 மறுமுனையில் சதீஷ் போனை வைத்துவிட யோசனையுடன் தானும் இணைப்பை துண்டித்தாள் வைதேகி.

 மருமகள் சினேகாவின் பரிதாப முகம் மனக் கண்ணில் தோண்றி வருத்தம் தந்தது. எதையாவது செய்து கொண்டே இருப்பாள். சும்மாவே இருக்க மாட்டாள்.

போன தடவை பல்லடம் போயிருந்த போது நடந்தது நினைவுக்கு வந்தது..

 சென்னையில் ஒரு கம்பெனியிலிருந்து ஸ்பெசலான கொசுவலைகளை வாங்கி வைத்திருந்தாள். தெரிந்தவர் நடத்திய கண்காட்சியில் ஒரு ஸ்டால் போட்டு அதை விற்பனை செய்யலாம் என அவள் எண்ணம். இவள் நேரம் திடீரென புயல் மழை வர கண்காட்சிக்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் வராமல் போய் விட.. வாங்கின அத்தனை கொசுவலைகளும் தேங்கி விட்டது. அத்தனையும் முழுப் பணம் கொடுத்து கண்காட்சிக் காக வாங்கியது.!

 ‘உன்னை யாரு இந்த வேலையைச் செய்யச்

சொன்னா.. எத்தனை நட்டம் பாரு, ஸ்டாக்கும் திரும்ப எடுத்துக்க மாட்டாங்க.‘ என்று கத்தினான் சதீஷ். தெரிந்தவர்களுக்கு தானமாகக் கொடுத்து.. இங்கே கூட ஒன்றினை அனுப்பி வைத்தாள் ‘நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனச் சொல்லி.

‘நேரம் சரியில்லைன்னா சும்மா இருக்கலாம்ல்லா. இவளை யாரு இதை யெல்லாம் பண்ணச் சொல்றா. மத்த பொம்பளைங்க எல்லாம் இப்படியா இருக்காங்க? நேரத்துக்கு சாப்பிட்டுட்டு டீவி சீரியல் பார்த்துக்கிட்டு.. எத்தனை ஜாலியா இருக்காங்க. இவ மட்டும் ஏன் இப்படி எதாவது புதுமை பண்ணனும், புரட்சி பண்ணனும்ன்னு துடிக்கிறா..'

 பல நேரங்களில் இவர்களிடம் புலம்புவான் சதீஷ்.

 அவனைப் பார்த்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கும்.

‘சும்மா இருக்கிறதுக்காக நான் படைக்கப்படலைங்க..' என்பாள் சினேகா சினிமா கதாநாயகன் பஞ்ச்

வசனம் போல.

 யார் சார்பாக பேசுவது என்பது புரியாது பொதுவாக பேசி வருவார்கள். இப்போது என்னடாவெனில் இவ்வளவு பெரிய தொகையை..

 வைதேகி வெளியே எட்டிப் பார்த்தாள்.

 என்ன இவரை இன்னும் காணோம்.. போன் எடுத்து நடராஜன் இந்தியன் பேங்க் என்றிருந்த எண்ணுக்கு அழைத்தாள்.

‘ஹலோ..'

‘அண்ணா நான் வைதேகி பேசறேன்.. அவர்கிட்ட கொஞ்சம் போன் தாங்களேன்..' என்றாள்.

‘இதோம்மா. டேய் உன் வீட்டிலிருந்து..' என்ற குரலைத் தொடர்ந்து சாரதியின் 'ஹலோ..'

‘என்னங்க இன்னும் முடியலையா..'

‘இல்லம்மா, இங்கே பரிமேலழகர் வீதியில

 கந்தசாமி இருக்கான்ல. அவனுக்கு ஒரு சின்ன விபத்து. இப்பத் தான் விசயம் தெரிஞ்சு பார்க்கப் போறோம். கொஞ்ச நேரத்துல வந்துடறோம்..'

‘சரி வாங்க நேர்ல பேசிக்கலாம்..'

 வைதேகி பாத்ரூம் போய் முகம் கழுவி விட்டு தலையை மேலுக்கு சீவிக் கொண்டு கந்தசஷ்டி புத்தகம் எடுத்துக் கொண்டு முருகன் படத்துக்கு முன்னால் உட்கார்ந்து விளக்கேற்றிவிட்டு, புத்தகம் விரித்து முணுமுணுத்த போது.. மனசு பக்தியில் லயிக்கவில்லை. இடறிக் கொண்டே இருந்தது.

 அவளுக்கு புரிந்து விட்டது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.

 தெருவில் ஆட்டோ சத்தம் கேட்டது. வீட்டு வாசல் முன்பு வந்து அது சத்தம் குறைத்து நிற்க, குழப்பமான முகத்துடன் எழுந்து ஜன்னலில் எட்டிப் பார்த்தாள்.

 பச்சை நிற சுரிதாரில் சினேகா தெரிந்தாள்.

 ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு பையுடன் படியேறினாள்.

 ‘அவ அங்கே வந்தாலும் வருவா. நைசாப் பேசி பணம் கேட்பா. ஏமாந்து தந்திடாதீங்க..‘

 மகனின் குரல் மனதிற்குள் எதிரொலித்தது. எத்தனை சரியாக அவளை கணித்திருக்கிறான். அவன் சொன்ன மாதிரியே வந்து விட்டாளே!

‘அம்மா நல்லா இருக்கீங்களா..' புன்னகைத்தபடியே நெருங்கி வந்து கை பிடித்துக் கொண்டாள்.

 எல்லாம் நடிப்பு..

 வைதேகியும் போலியாக புன்னகைத்தாள்.‘நல்லாயிருக்கியா சினேகா..'

‘எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து!' கைப் பையில் இருந்து களாக்காய், சீனிப் புளியங்காய், வெள்ளரிப் பழங்கள் எல்லாம் எடுத்து வைத்தாள்.‘உங்களுக்குப் பிடிக்கும்ன்னு இதெல்லாம் வாங்கி வந்தேன்.'

 எப்படி ஐஸ் வைக்கிறாள்! நான் மயங்க மாட்டேன்டி மருமகளே.

‘அப்பா எங்கேம்மா..? வெளியே போயிருக்காரா.'

 கொஞ்ச நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 நெருங்கின உறவுகளின் விசேசம், ஊர்களின் காலநிலை, வீட்டு விசயங்கள்..

 என்ன இவள் இன்னும் விசயத்துக்கு வரலையே. ஒருவேளை அவர் வரட்டும் எனக் காத்திருக்கிறாளா. என்ன இந்த மனுசனை இன்னும் காணோம். சரி, அவர் இல்லாததும் ஒருவிதத்தில் நல்லதுக்குத் தான். இவள் பேச்சில், கண்ணீரில் மயங்கி பணம் தந்தாலும் தந்துவிடுவார். உணர்வுகளில் வாழும் மனிதர்.

 வைதேகியின் மனதிற்குள் எண்ணங்களின் அலைமோதல்!

‘அம்மா உங்க கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு. ரெண்டு தோசை ஊத்திக் கொடுங்கம்மா..'

 ஊற்றிக் கொடுத்தாள். இட்லிப் பொடி தூவி ஒரு தோசை, கேரட் துருவி ஒரு தோசை, அங்கங்கே முந்திரிப் பருப்பினை உடைத்துப் போட்டு ஒரு தோசை..

‘சூப்பரா இருக்குங்கம்மா..'

இரவு மணி எட்டாகி விட்டது. வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்கள்.

‘என்னம்மா இன்னும் அப்பாவைக் காணோம்.'

‘அதான் எனக்கும் புரியலை. யாருக்கோ விபத்து, பார்க்கப் போறேன்னாரு..'

மணி பார்த்தாள். கொட்டாவியை வேகமாக முழுங்கினவாறே‘சரி, நான் கிளம்பறேன்ம்மா. அப்பா வந்தா கேட்டதா சொல்லுங்க.. அவரை சந்திக்க முடியாதது தான் வருத்தம்!'

 அவ்வளவு தானா என்பது போலப் பார்த்தாள் வைதேகி.

 சினேகா நெருங்கி வந்து கை பிடித்துக் கொண்டாள்.‘மனசு சரியில்லைம்மா.. அதான் ஒரு ஆறுதலுக்கு உங்க எல்லோரையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். வேற ஒண்ணும் இல்லைங்கம்மா. நான் இங்கே வந்தது அவருக்குக் கூடத் தெரியாது!'

மருமகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நல்லதோ கெட்டதோ யார்கிட்ட சொல்லுவேன், எங்கே போவேன், எனக்கு உங்களை விட்டா யாரு இருக்கா.?' திடீரென குரல் இடறியது.‘இவரை லவ் பண்ணி என் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாச்சு. எல்லோரும் விரோதம்!' கண்ணீரினை உதடு கடித்து அடக்கிக் கொண்டாள்.

‘திடீர்ன்னு என்னமோ தோணுச்சு, உங்க எல்லோரையும் பார்க்கனும்ன்னு.. வந்தேன். அவ்வளவு தான். வேற ஒண்ணும் இல்லைங்கம்மா. இப்போ மனசு கொஞ்சம் லேசாகிடுச்சு. அப்பா வந்தா விசாரிச்சதா சொல்லுங்க, நான் கிளம்பறேன்..'

 பேக் எடுத்து மாட்டிக் கொண்டாள். தலையாட்டினாள்.

‘இரு வெள்ளிக் கிழமை நாள். குங்குமம் எடுத்துட்டுப் போ.'

 உள்ளே போனவள் குங்குமக் கிண்ணத்துடன் வந்தாள். எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டாள் சினேகா. வைதேகிக்கும் வைத்து விட்டாள்.

‘எங்கே உன் கையைக் காட்டு..' என்றாள் வைதேகி.

‘ம்.?' புரியாமல் நீட்டினாள். மறைத்து வைத்திருந்த வளையல்களை எடுத்து அவள் கைகளுக்கு போட்டு விட்டாள் வைதேகி.

‘அம்மா..'

‘பாரு.. இந்த வளையல்களை தீபாவளிக்குத் தரலாம்ன்னு உனக்காக எடுத்து வெச்சிருந்தேன். பரவாயில்லை, முன்னதாகவே கொடுத்தா ஏதாவது ஒருவகையில உனக்கு இது உதவலாம். அதான் கொடுத்தேன்.'

 புரியாமல் பார்த்தாள்.

‘விழுகறது அவமானமல்ல. விழுந்தே கிடக்கிறது தான் அவமானம். உன் மனசுக்கு எது நியாயம்ன்னு படுதோ அத செய். உன் மனசு தான் உனக்கு எஜமான். துணைக்கு யாருமில்லைன்னு நினைச்சு கலங்காதே. தடைகள் தாண்டி நீ ஜெயிக்கணும். உன்னைப் பார்த்து இன்னும் நாலு பெண்கள் துணிஞ்சு மேலே வரனும்.. அந்த நாலு நானூறு ஆகணும்.. தாமதமானாலும் அது கண்டிப்பா நடக்கும்.! உனக்கான நேரம் வருகிற வரை போராடிக்கிட்டே இரு. நான் உன்னை நம்பறேன்.. நீ சாதிப்பே..! தைரியமா போய்ட்டு வா!'

‘அ..ம்..மா..' உடைந்து அழுதாள் சினேகா. மருமகளை.. அல்ல தன் இன்னொரு மகளை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டாள், வைதேகி.

பிப்ரவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com