இப்படியாக சில...

இப்படியாக சில...

இயக்குநர் ரவிசென்ராயிடமிருந்து அலைபேசி வந்தபோது பரபரத்துப் போனேன். கோடிகளில் சம்பளம் வாங்குபவர்.

அவரின் எல்லா திரைக்கதைகளுக்குப் பின்னாலும் நானிருப்பேன். அவர்? என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டும் கெடு காலத்தின் இறுதி நாளில் பணம் தருவார். என் சித்திப் பெண்ணின் மஞ்சள் நீராட்டுக்கு ஆசிர்வாதம் செய்வார்.

ஜெய்பீம் நகருக்கு அவரின் வருகை கொண்டாட்டம். ரசிகர் மன்றத் தம்பிகள் கட்அவுட் வைத்து, கீழே- என் முகத்தின் கொஞ்சம் பெரிய ஸ்டேம்ப் சைஸ் ஃபோட்டோ போடுவார்கள்.

தலையைச் சொரிந்துக் கொண்டே, ‘ஏய் எரநூறு ரூபாய் கொடுடி. சார் டிஸ்கஷனுக்கு கூப்பிடுறார்.‘

விமலா, அரிசிப் பானையிலிருந்து ஐம்பது ரூபாய் எடுத்துக்கொண்டே ‘பெட்ரோல் போட துப்பு இல்ல. ஸ்ப்ளெண்டர் வேணும்னு எங்க அண்ணன் கிட்ட வாங்குன கடனை அடைக்க வழியைக் காணோம்.......'

இன்னும் நூற்றிஐம்பது ரூபாய்களை எங்கெங்கிருந்தெல்லாம் எடுக்கப் போகிறாளென்ற உளவுப் பார்வையை மறைக்க கொஞ்சம் சிரமப்பட்டேன்.

‘ஏங்க, நீங்க கொஞ்சம் வெளிய போங்க.'

அவளுடைய இரகசியப் பெட்டகங்களை நான் அறிந்துக் கொள்ளக் கூடாதாம்.

‘ டீ மானிடேஷசனப்போ ஏழு அய்நூறூ ரூபாயை அரிசி பானையில வெச்சு, மோடிக்கு மொய் வெச்ச. புருஷனுக்கு எறநூறு ரூபா கொடுக்கிறதுக்கு நோவுதா?'

கதவைத் திறந்துக் கொண்டு வந்து, ‘இதைப் பாருங்க நூத்திதொன்னுறுதான் இருக்கு'

புத்தர் முகபாவம் காட்டினாள். அவளுடைய அஞ்சரைகளில் இரண்டாயிரத்துக்கும் குறைவில்லாமல் இருக்கும். ஆனா இந்த நூத்திதொன்னுருல ஒரு மனையறம். அதை விரிச்சா இன்னொரு கதையாயிடும்.

இருக்கறதுலேயே மோசமான சட்டையொன்றை போட்டுக்கொண்டுப் போனேன்.

சக உதவி இயக்குநர்கள் வந்துவிட்டிருந்தார்கள் அவர்கள் என்னை விட படு கேவலமாக உடுத்தியிருந்தார்கள். ஹரி என் சட்டையையும் தனதையும் பார்த்து ஒரு கள்ளப் புன்னகைப் புரிந்தார். இத்தனைக்கும் நாங்கள் எல்லோரும் உடுப்புப் பிரியர்கள்.

இயக்குநருடன் இருக்கும்போது நேர்த்தியாக அணிவதில்லை. புதிதாக வருகிறவர்களுக்கு அஞ்சு பேர்ல யார் ஹீரோன்னு சந்தேகம் வந்துடக்கூடாதே. அவர் எங்களை விட ஆஜானுபாகுவா களையாவே இருப்பார். ஆனா உளவியல் தொந்தரவுகள் அழகு, தகுதிப் பார்த்தோ தொழிற்படுவது இல்லையே.

முந்தையப் படத்தில் ‘ஜோக்‘ நீர்வீழ்ச்சியைச் சுற்றி படபிடிப்பு. நயன்தாரா கதாநாயகி.

ஹரி, முதல் நாள் கிரோகோடைல் டீ-ஷர்ட்டும் லீ ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தார்.

அன்றைக்கு ஹரிக்கு என்ன நேர்ந்தது தெரியுமா? வேண்டாம். அது வேறு கதையாகிவிடும்.

உள்ளே நுழையும்போதே இயக்குநர் மீது

உற்சாக‘ஆரா.' கையில் வைத்திருந்த பொதியை கொடுத்தார்.

 ‘எல்லோருக்கும் ஸ்வீட் கொடுப்பா'

ஊழியர் வினியோகிக்க,  இயக்குநரின் தொடுகை. கம்பு ஜாங்கிரி, கருப்பட்டி அதிரசம்.மகிழ்வான செய்தி சொல்லப் போகிறார். முகத்தையே ஆவலோடு பார்க்கவும், அவர் ஹரியை பார்த்துதான் ஆரம்பித்தார்.

‘ இப்போ ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடைச்சு இருக்கார். இவ்ளோ நாளும் நாம பட்ஜெட் படங்கள்தானே பண்ணிட்டு இருந்தோம். இப்ப பண்ண போறது மெகா.'

என்னைப் பார்த்தார்.

‘சார் ஆப்கானிஸ்தான் பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.'

எனக்கு ஆச்சரியம்.

தயாரிப்பாளர் யாரென கேட்பது எல்லை மீறல்.மௌனமாக இருந்தோம். இப்ப ஏன் ஆப்கானிஸ்தான்? கேட்கவும் தயங்குகிறோம். அவரே புரிந்துக்கொண்டு ‘சார் எனக்கு சஞ்சய் லீலா பன்சாலி மாரி ஒரு படம் பண்ணனும். இப்போ ஆப்கானிஸ்தான் தான் இன்டர்நேஷனல் மேட்டர். அதை பேஸ் பண்ணி ஒரு ஸ்டோரி பண்ணலாம். கொஞ்சம் சொல்லுங்க.'

எங்களுக்கு குழப்பம். ஆப்கானிஸ்தானை மையமா வச்சு எப்படி? சாரோட ஸ்பெஷாலிட்டியே பெண்கள்தான். ஆப்கானிஸ்தான்ல பெண்கள் வெளியே வர மாட்டாங்களே. மூஞ்சிய காட்ட மாட்டாங்களே!

நண்பர்கள் இது நான் ஆட வேண்டிய ஆட்டமென்று முகக் கவசத்தை இறுக்கிக் கொண்டார்கள்.

‘ சார், நேத்து தாலிபான்கள் முழு ஆப்கானிஸ்தானையும் பிடிச்சிட்டாங்கற நியூஸை பாத்துட்டு நீங்க கொஞ்சம் திரில்லாயிட்டீங்க. இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தலிபான்கள் ஜெயிச்சதுக்கு முக்கியமான காரணம், அதை சுத்தி இருக்கிற ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் இந்த அஞ்சும் இஸ்லாமிய நாடுகள். இன்னொரு பக்கம் இருக்கிற சைனா மட்டும்தான் இஸ்லாமிய நாடில்லை. அவங்களுக்கு ஏதோ வகையில வெளியில் இருந்து உதவிகள் வந்துட்டு இருக்கு. உதவி செய்றன்னு உள்ளே வந்த சோவியத் ரஷ்யா மூக்கு அறுபட்டது. இப்ப அமெரிக்க மூக்கு.'

இயக்குநர் திருப்தியுடன் தலையசைத்தார்.

‘ ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு போலாமா? ஆப்கானிஸ்தான் பற்றி எழுதப்பட்ட கதை எடுக்கப்பட்ட சினிமா இதெல்லாம் கொஞ்சம் சொல்லுங்க.'

எப்போதுமே கதை விவாதங்களில் பலான கிசுகிசுக் களில் சுற்றிச் சுழன்று கடைசியில் கொஞ்சம் கதை பேசுவோம். ஆனா இப்போது இயக்குநர் நல்ல ஃபார்ம்ல இருக்கிறார். ஒரு கதை கிடைச்சா நாளைக்கே ஷெட்யூல் போட்டுருவார்.

‘சார் எய்ட்டீஸ்ல வந்த நாவல். ‘லை டவுன் வித் லயன்ஸ் 'கென்பாலட் எழுதுனது.'

அவரின் கவனத்தை கூர்மையாக்க முதல் வாக்கியத்தை இப்படிச் சொன்னேன். ‘சார் இந்த நாவல் ஒரு டிரை ஆங்கிள் லவ் ஸ்டோரி. கூடவே சென்டிமென்ட் திரில் ஆக்சன் எல்லாமே உண்டு.‘

இயக்குநர் உடம்பு முழுக்க காதுகளானார்.

‘சார், பிரான்ஸில் இருக்கிற மனித உரிமைப் போராளி 'ஜேன்.'மனசு நிறைய கருணை, உடம்பு முழுக்க அழகு. அவளோட அடிக்கடி டேட்டிங் போற எல்லீஸ் ஒரு இங்கிலீஷ் வாத்தியார். ஆனால் எல்லிஸ் ஒரு சிஐஏ உளவாளி. ஜேனின் நண்பர்கள் வளையத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அவன் வேவுப் பார்க்கிறான். நட்பு வளையத்திலுள்ள டாக்டர் ஜீன்பியரிக்கும் ஜேன் மீது காதல். ஆனால் எல்லிசிடம் ஜேனுக்கு இருக்கும் பிணைப்பு அவன் காதலுக்கு தடையாக இருக்கிறது.மூன்றாம் உலகநாடுகளில் மருத்துவச்சேவை என்ற பெயரில் டாக்டர் ஜீன்பியரி ஆப்கானிஸ்தானுக்கு ஆயத்தமாகிறான். ஜேனை தன்னோடு அழைக்கிறான். ‘ஒரு மாசம் நர்ஸ் ட்ரையினிங் எடுத்தா போதும்..'

மனித உரிமைப் போராளிகளை தீவிரவாதிகளென்று பிரான்ஸ் அரசாங்கம் கைது செய்ய,அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்யும் ஆயுத வியாபாரி ஒருவனும் கைதான செய்தி சூடாகிறது.

பிரான்சில் தன்னுடைய அசைன்மென்ட் முடிந்துவிட்டதால் ஜேனிடம் தன்னை வெளிப்படுத்தி ‘ப்ரொபோஸ்' பண்றதுக்கு ஒத்திகை பார்க்கிறான் எல்லிஸ். அதற்குள் ஜீன் பியரி ‘எல்லிஸ் ஒரு சிஐஏ உளவாளி என்ற தகவலை‘ ஜேனிடம் சொல்றான். அவள் நம்பவில்லை. எல்லீஸுடம் கேட்கிறாள். ஒப்புக்கொள்கிறான். ஜேன் மனமுடைந்து, ‘என்னுடைய தோழர்களை வேவு பார்க்கவே நீ என்னுடன் பழகினாயா?'  எல்லிஸ் சொல்லும் சமாதானங்கள் அவளுக்கு உவப்பானதாக இல்லை. ‘இனிமே மூஞ்சிலயே முழிக்காத'  எல்லிஸின் பிரிவு அவள் டாக்டர் ஜுன் பியரியுடன் ஆப்கானிஸ்தான் செல்ல காரணமாகிறது.

பாகிஸ்தான்வரை விமானப் பயணம். அங்கிருந்து பன்ச்ஷீருக்கு மலைப்பாதைகள் வழியாக நடை. கடுமையான பாதைகள். சாகசப் பயணங்கள். டாக்டரும் அவளும் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கிற்கு வருகிறார்கள். அங்கே பாண்டா என்னும் கிராமத்தில் கிளினிக் அமைக்கிறார்கள்.

இங்க தான் சார் அந்த கதையோட டர்னிங் ஆரம்பமாவுது. கிராமத்து முல்லாவோடு அவளுக்கு ஏற்படும் வில்லங்கம், கிராமத்து பெண்களோடும்

சிறுமிகளோடும் சிறுவர்களோடும் அவளுக்கு ஏற்படும் தோழமை. டாக்டருக்கும் ஜேனுக்கும் கோயிங்ஸ்டடி. கவனக் குறைவான இரவொன்றினால் குழந்தையும் பிறந்து விடுகிறது. குழந்தைக்கு 'சந்தல்' என்று பெயர்.  முக்கிய பிரதேசங்களை சோவியத்ரஷ்யா கைப்பற்றினாலும் கெரில்லா தாக்குதல்கள் தொடர்கின்றன. பல்வேறு இனக்குழுக்கள் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதங்கள் ஏந்துகின்றன. அகமத் மசூத் தலைமையிலான போராளிக்குழு, சர்வதேச சமூகத்தோடு இணைந்து பயணிப்பதே உகந்ததென தீர்மானமாக இருக்கிறது. ரஷ்ய விமானங்களின் குண்டு வீச்சில் காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜேன் ரஷ்யாவை வெறுக்கிறாள். போராளிகள் வென்று ஆட்சி அமைத்தாலும் அதுவும் ஆணாதிக்க

அரசாகத்தானேயிருக்கும் என்றும் கருதுகிறாள்.

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கொண்டு வரும் போராளிக் குழுக்கள் தொடர்ந்து ரஷ்ய விமான தாக்குதலில் சாகடிக்கப் படுகிறார்கள். எத்துணை இரகசியமாக திட்டமிட்டு செயல்பட்டாலும் ரஷ்ய படைகளுக்கு எப்படி தெரிந்து விடுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அப்போது ஜேன் தற்செயலாக, ரஷ்ய படைகளுக்கு துப்பு கொடுப்பவன் ஜூன்பியரி.என்பதை கண்டுபிடிக்கிறாள். எப்படியிருக்கும் ஜேனுக்கு.? காதலித்தவன் அமெரிக்க உளவாளி. கைப்பிடித்தவன் ரஷ்ய உளவாளி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போராளிக் குழு ஆயுதங்களோடு வரப்போகிறது அவர்கள் வரும் பாதையும் நேரமும் ஜுன் பியரிக்குத் தெரியும். நிகழ காத்திருக்கும் அழிவை எப்படியும் தடுத்தாக வேண்டுமென்று ஜேன் துடிக்கிறாள்..கணவன் ஒரு கேஜிபி ஏஜென்ட் எனத் தெரிந்தால் போராளிகள் கொன்று விடுவார்கள். கணவனையும் காப்பாற்ற வேண்டும். வருகின்ற குழுவையும் காப்பாற்ற வேண்டும். சமத்காரமாக யோசித்து அவர்கள் வருகின்ற பாதையை மாற்ற, போராளிக் குழுவிலுள்ள முகமதுவிடம் சொல்கிறாள். அவனும் பாதையில் மாற்றம் செய்கிறான். இந்த முறை ரஷ்ய தாக்குதல் இல்லாமல் போராளிக்குழு ஆயுதங்களோடு வந்து சேர்கிறது. பெரிய கொண்டாட்டம். ஆச்சரியம் என்னவென்றால் வந்த குழுவில் அமெரிக்க உளவாளி எல்லிஸ் இருக்கிறான். அமெரிக்காவின் ரகசிய தூதனாக வந்திருக்கிறான். பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்து சண்டையிடும் ஆப்கானிஸ்தான் போராளி குழுக்கள் ஒன்றிணைந்து போராடினால் அவர்களுக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் என்பது தூது.

திட்டமிட்ட தாக்குதல் எப்படி தோல்வி அடைந்தது? கடைசி நேரத்தில் குழுக்கள் பாதையை மாற்றிக் கொண்டது ஏன்?. கேஜிபி ஆராய்கிறது. உண்மையை கண்டுபிடிக்கிறார்கள். எல்லிசையும் ஜேனையும் வேட்டையாட முனைய,இதற்கிடையில் எல்லிஸின் அமெரிக்க முயற்சி வெற்றிப் பெற்று போராளி குழுக்களின் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கேஜிபி ஹெலிகாப்டர் ராணுவ வீரர்களோடு பாண்டா கிராமத்தில் இறங்கி ஒவ்வொரு வீடாக தேடுகிறது. சொல்ல மறுக்கிற உள்ளூர் மக்களை சுட்டுக் கொல்ல, எல்லிஸ் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவுச் செய்கிறான். கணவனை வெறுத்த ஜேனும் அவனுடன் சேர்ந்துக் கொள்கிறாள். அவர்கள் பாதைகளை ஆய்வு செய்கிறார்கள்.பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கு போகும் வழிகள் மூடப்பட்டுவிட்டன. இந்துகுஷ் மலையில் உள்ள நூரிஸ்டான் கணவாய் வழியாகச் செல்லும் பாதைதான் ஒரே மார்க்கம். போராளிகளே திகைக்கிறார்கள். மிகவும் உயரமான கடக்க முடியாத பனி மலைப் பாதையது.

 அதில் ஒரு பெண் எப்படி போக முடியும்? கைக்குழந்தையோடு. அவங்க புறப்படுறாங்க.கூட முகம்மது துணைக்கு வருகிறான். இப்பத்தான் சார் கிளைமாக்ஸ். அவங்கள வேட்டையாட ஆப்கானிஸ்தானில் இருக்கிற ரஷ்ய ராணுவத் தளத்திலிருந்து ஐநூறு ஹெலிகாப்டர்கள் புறப்படுது.

பஞ்ச்ஷீரிலிருந்து பாகிஸ்தானுக்கு போகும் எல்லாப் பாதைகளிலும் தேடுதல் வேட்டை. அபாயங்கள் நிறைந்த நூரிஸ்டான் பாதைகளில், தங்கள் வாழ்நாளில் அந்த கிராமத்து எல்லையை விட்டு வெளியேறவே முடியாத சாதாரண எளிய மனிதர்களின் மானுட நேயம் ஒரு மணம் மிக்க மலரென்றால் இழந்துவிட்ட ஜேனின் காதலை எல்லிஸ் மீட்டெடுப்பது இன்னொரு அற்புத மலர்.

இயக்குநர் வெள்ளை வெளேரென்று தெரியும் டிரேடு மார்க் சிரிப்போடு கை தட்டினார். பாராட்டினாரா கேலி செய்கிறாரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

‘ சார் அந்த நூரிஸ்டான் காட்டில்......'

‘ கொஞ்சம் இருங்க கிரீன் டீ சாப்பிட்டுட்டு அப்புறம் பேசலாம்.'

இன்றைக்கு இயக்குநரிடமிருந்து அழைப்பு. ஒரு வாரமாக தூக்கமில்லை. நான் சொன்ன நாவலின் கதைக் கருவில் இன்ஸ்பிரேஷனாகி இயக்குநர் புதிதாக என்ன கதை உருவாக்கியிருப்பார்?

தலிபான்களின் ஆட்சி இந்தியாவுக்கு உபத்திரவம். எனவே இந்தியாவிலிருந்து ரா அமைப்பின் உளவாளியான ஹீரோ ஆப்கனுக்குள் நுழைந்து தலிபான் ஆட்சியாளர்களுக்கிடையே மித்ர பேதம் செய்வதாக கதை செய்திருப்பாரோ?

கிளைமாக்ஸ் காட்சியில் ஐநூறு ஹெலிகாப்டர்கள் என்ற நாவல் காட்சியை அப்படியே மாற்றாமல் ஏதாவது யோசித்திருப்பாரோ? வானத்திலிருந்து ஐநூறு எந்திர வண்ணத்துப்பூச்சிகள் பறந்து பரவும் காட்சி கண்களுக்கான விருந்தல்லவா? அத சிஜி ல கூட பண்ணலாம். சும்மா தியேட்டர்ல கிளாப்ஸ் பறக்கும்.

இதுவரை ஆப்கானிஸ்தானுக்குள் படமாக்கப்பட்டுள்ள சினிமாக்கள் விவரங்களையும் சேகரித்தேன்.

1975 இல் பெரோஷ்கானோட ‘தர்மாத்மா‘ அங்கே சூட் பண்ணி இருக்காங்க .ஆப்கானிஸ்தானுக்கும்  அந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுக்கப்புறம் அமிதாபோட ‘குதாகுவா'  1991 ல ஆப்கானுகுள்ளே படமாக்கியிருக்கிறாங்க அப்போ ஆப்கான் ஜனாதிபதியாக இருந்த முகமது நஜிபுல்லா அமிதாப்புக்கு விமானப்படையின் மூலமா சிறப்பு பாதுகாப்பு கொடுத்திருக்காரு. ஜனாதிபதி தீவிரமான அமிதாப்பச்சன் ரசிகர். இப்போ போன வருஷம் 2020ல சஞ்சய் தத் நர்கிஸ்பக்ரி நடிச்ச டோர்பாஸ் ங்கற படம் ஆப்கானிஸ்தானை களமாக்கி எழுதப்பட்ட கதை. ஆனால் பாதுகாப்பு காரணங்களால ஆப்கானிஸ்தானில் ஷூட்டிங் நடத்தல. தஜிகிஸ்தான்லயும் நம்ம நாட்டுக்குள்ள செட்டு போட்டும் எடுத்தாங்க. சஞ்சய்தத் ஒரு டாக்டர். காபூலில் இந்திய தூதரகத்தில் வேலை பாக்கிறார். அவருடைய மனைவியும் மகனும் அங்கே காணாமல் போகிறார்கள். கூOகீஆஅஅஙூ ன்னா கருப்பு பருந்துன்னு அர்த்தமாம். ஆப்கனில் சிறுவர்களை தற்கொலை படையாளர்களாக மூளைச்சலவை செய்வதை அடிப்படையாகக் கொண்ட கதை.

இப்போ நம்ம டைரக்டர் என்ன கதை பண்ணி இருப்பார்? லொகேஷன் பிக்ஸ் பண்ணனும். இந்தியாவில் ஆப்கானிஸ்தான் நிலவியல் போல இருக்கிற இடங்கள் என்னென்ன? லடாக், இமாசலப்பிரதேசம் மகாராஷ்டிராவின் கொங்கன மலைப்பகுதி.. கொலாஜ் ஓவியங்களாக துயில் தின்ற எட்டு இரவுகள்.

இன்று இயக்குநர் எள்ளுருண்டைகளும் கருப்பட்டி அதிரசங்களும் கொண்டு வந்தார்.

‘தயாரிப்பாளர் இந்த ப்ராஜெக்ட் வேணாம்னு சொல்லிட்டார். இப்போ வேற தயாரிப்பாளர். வழக்கம்போல லோ பட்ஜெட் படம். கதையை நானே பண்ணிட்டேன்.(நானே என்பதை கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னார்) கதையை சொல்றேன். கேளுங்க.'

( சினிமா உலகில் இயக்குநரே கதை சொல்கிறார் என்றால் சும்மா ஒரு காட்சி சொல்வார்கள். உதாரணமாக,‘இதோ பாருங்கப்பா சாமி ஆட்ற பொண்ணுக்கும் சாவுக்கு ஆடறபையனுக்கும் காதல். இதுதான் கதை.'

அதன் பின்னர் ஏன் காதல்? எப்படி காதல்.?அந்த காதல் என்ன ஆனது? என்பதையெல்லாம் உதவி இயக்குநர்கள் தீர்மானிக்க வேண்டும்.

அதுக்கு பேரு தான் ஸ்டோரி டிஸ்கஷன். ஆனா இயக்குநர் விலாவாரியாவே சொல்வார்.)

இயக்குநர் ஆரம்பிச்சார்.

லைன் வீடு. பத்து குடித்தனங்கள் இருக்கிற வீட்டை டாப் ஆங்கிள்ல காட்டுறோம். நடுவுல இருக்குற கொஞ்சம் பெரிய வீட்ல ஹீரோவும் அவன் அம்மாவும் மட்டும் தான். அதுக்கு ரெண்டு பக்கமும் இருக்குற வீடுகள்ள பலவிதமான குடும்பங்கள். கிருத்துவர்கள் முஸ்லிம்கள் முதலியார்கள் நாயுடுகள் வன்னியர்கள் இப்படி. ஹீரோ வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற வீட்ல ஒரு பிராமின் பொண்ணு கைக்குழந்தையோடு இருக்கிறா. சிங்கிள் மதர் ஹீரோ ஐடி கம்பெனில வேலை செய்றான். இப்போ கொரானா லாக் டவுன் பீரியட் .அதனால வொர்க் அட் ஹோம். ஹீரோயின் ஒரு ஸ்கூல் டீச்சர். ஆனா ஸ்கூல் மூடியாச்சு.

அவளோட குழந்தையை குளிப்பாட்டி பவுடர் பூசி கண்ணுக்கு மையும் கன்னத்துல திருஷ்டி பொட்டும் வச்சு பக்கத்து வீட்டுல ஹீரோவோட அம்மா கிட்ட கொடுத்துட்டு கொஞ்சம் வெளியில போயிட்டு வருவா.

ஹீரோ அவள அப்பப்ப லுக் விடுவான்.

ஹீரோ வீட்ல ஒரு பெரிய சைஸ் பிளாக் அண்ட் வொயிட் போட்டோ. போட்டோல இருக்கற மனுஷன் தடித்த மீசையோடும் ஊடுருவும் பார்வையோடும் இருக்காரு. அந்த போட்டோவில் இருக்கிற வீரத் தோற்றம் ஹீரோயினை கவருது. அவள் ஹீரோவின் அம்மாவிடம் இது யார்? என்று கேட்கிறாள். அம்மா, ‘இது யாரோ தலைவர் போட்டோ'  ‘தலைவரா?'

 உள் அறையிலிருந்து எட்டி பார்க்கிற ஹீரோ சொல்கிறான். ‘அவர் எம்.சி ராஜா.'  ‘எம்சி ராஜாவா அவர் யாரு?'

 ஹீரோ கொஞ்சம் குறும்பு பார்வையுடன், அவள் பார்ப்பனப் பெண் என்பதால் அவளுக்கு புரிய வேண்டுமென்று அவளிடம், ‘உங்களுக்கு சங்கராச்சா ரியார் மாரி இவர் எங்களுக்கு'  என்கிறான்.

‘சங்கராச்சாரியாரா? அவன் யாரு?‘ என்கிறாள் ஹீரோயின்.

ஹீரோவுக்கு அதிர்ச்சி. அதுதான் ஹீரோவின் கண்களும் ஹீரோயின் கண்களும் மோதிக்கொண்ட ஃபர்ஸ்ட்லுக்.

லாக் டவுன் பீரியட். குழந்தைக்கு டயப்பர் கிடைக்கல. அதனால அவள் பழைய சேலையை கிழிச்சி குழந்தைக்கு டயப்பரா கட்டி விடுறாள். ஒரு ஹீரோகிட்ட குழந்தையை விட்டுட்டு ஹீரோவோட அம்மாவும் ஹீரோயினும் ஒரு மணி நேர மார்க்கெட்டுக்கு போகிறார்கள். கடையில கூட்டம். திரும்பி வர லேட்டாயிடுச்சு. வந்தால் குழந்தையின் இடுப்பில் கட்டியிருந்த சேலைத் துண்டுத் துவைத்து காயப் போட பட்டிருக்கிறது. ஹீரோவின் புதிய பனியன் அழகாக வெட்டப்பட்டு குழந்தையின் இடுப்பில் அணியப்பட்டு இருக்கிறது.

ஹீரோயின் ஹீரோவ செகண்ட் லுக்.

ஹீரோயின் ரெண்டு மாசமா வீட்டு வாடகை கொடுக்கல. வீட்டுக்கு சொந்தக்காரன் வந்து  சத்தம் போடறான்.

குடித்தனக்காரர்கள் ஹீரோயினுக்கு உதவ வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனா அவள் இலவசமாக எதையும் ஏற்றுக் கொள்பவள் அல்ல. அந்த லைன் வீட்ல இருக்கிற பதினஞ்சி குழந்தைகளுக்கும் வீட்டுக்குள்ளேயே கிளாஸ் நடத்துறேன் என்கிறாள்.

குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது பேரழகு.பாட்டும் டான்ஸுமாக புதிய புதிய விளையாட்டுகள் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. பாரதியார் பாடல்களை அவள் நாடகமாகவே நடத்துகிறாள். குயில் பாட்டை பிள்ளைகளை வைத்து அரங்கேற்றுகிறாள். லைன் வீடு களை கட்டுது.

ஹீரோயின் பின்னணி என்ன? ஹீரோவின் அம்மாவை குடைகின்றன கேள்விகள். அவள் கணவனை இழந்தவளா அல்லது பிரிந்தவளா? எதுவானா இருக்கட்டும். என் மவனுக்கு ஏத்த மனைவி இவதான் என்று ஹீரோவின் அம்மா முடிவு செய்கிறாள்.மகனிடம் பேசுகிறாள். அப்போது அங்கு ஹீரோயினைத் தேடிக்கொண்டு ஒருவன் வருகிறான். யார் என்று விசாரிக்கின்றனர். அவன்தான் குழந்தையின் அப்பா.

இன்டர்வெல் பிளாக்.

கிரீன் டீ வந்தது எல்லோரிடமும் அமைதி. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு.ஆச்சர்யமாக இருந்தது. போன வாரம் நாவலை இயக்குநரிடம் விவரித்தபோது கிரீன் டீ வர அந்த நேரத்தில் நான் சொல்ல நினைச்சதை சொல்ல முயன்ற போது முதல்ல டீ குடிக்கலாம். அப்புறம் பேசலாம்னு சொன்னார். ஆனா அன்னைக்கு அதுக்கப்புறம் வேற ஏதேதோ பேசினோம். நான் சொல்ல நினைச்ச காட்சியை சொல்லவேயில்லை. அந்த காட்சி இதுதான். எல்லிஸ் ஜேன் ரெண்டு பேரும் நூரிசன் காட்டுக்குள்ள பயணிக்கும் போது  ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு அந்த காட்டுக்குள்ளேயே ஒரு இடிந்த வீட்டுக்குள்ள தங்குறாங்க. அங்க ஜேனுக்கு களைப்பு. பசியும்,குளிரும், அலைச்சலும், அச்சமும். குளிர்காய நெருப்பு மூட்டி இருக்கிறது. அந்த அனலின் வெப்பம் அவளின் உடலுக்கு இதமாக தூக்கத்தை வரவழைத்து விடுகிறது. தூக்கம் கலைந்த போது தான் பார்க்கிறாள். குழந்தை சந்தலின் டயாபர் துவைத்து கணப்பின் மீது காயப்போட்டு இருக்கிறான் எல்லிஸ் அதைப் பார்க்கும் போது தான் அவளுக்கு எல்லிஸ் மீது மீண்டும் காதல் பிறக்கிறது. இந்த காட்சியை நான் சொல்ல நினைத்தேன். ஆனா நான் சொல்லல.இப்போ வேற கதை ஆனா இந்த கதையிலயும் டயப்பர் வருது. எப்படி? இயக்குநர் நாவலை படிச்சி இருப்பாரா? ஆனா இவருக்கு இங்கிலீஷ் படிக்க வராதே.

டீ குடித்து முடிக்கும்போது ஆவலை அடக்க மாட்டாமல் ஹரி கேட்டார். ‘சார் செகண்ட் ஆஃப் எப்படி?'

இயக்குநர் சொன்னார். அந்த குழந்தை ஹீரோயினோட குழந்தையில்லை. அவளோட அக்கா குழந்தை.( அதுதானே! நம்ம தமிழ் பார்முலா படி ஹீரோ வாழாவெட்டியாக இருக்கலாம். அவனுக்கு மறுபடியும் காதல் வரும். ஆனா ஹீரோயின் அப்படி இருக்கக்கூடாதே. அப்புறம் நம்ம  கலாச்சாரம் என்னாவறது?)

அவளோட அக்காவை ,அவ புருஷன்- ரொம்ப டார்ச்சர் பண்ணதால அவள் தற்கொலை பண்ணிகிட்டாள். அவன் ஒரு சாமியார்கிட்ட பிஆர்ஓ. அவனுக்கு ஹீரோயின ரெண்டாம் தாரமா சாமியார் சிபாரிசு பண்ணி இருக்காரு. அவளுடைய பேரன்ட்ஸ்ம் சாமியாரோட பக்தாஸ். அவங்களும் சாமியார் பேச்சை மீறக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு முயற்சி பண்றாங்க. கல்யாணத்துக்கு முந்திய ராத்திரி ஹீரோயின் குழந்தையைத் தூக்கிட்டு வீட்டை விட்டு ஓடி வந்துட்டா. கிளைமாக்ஸை நாளைக்கு பேசலாம்.'

மதி சொன்னார், ‘சார். ஆப்கானிஸ்தான் கிடக்கட்டும். இதுதான் சார் சரியான மேட்டர். சும்மா ஹதம் பன்னிடலாம். எல்லாமே கரண்ட்..கொரானா. லாக் டவுன். ஒர்க் அட் ஹோம்.

சிவ சங்கர் பாபா. தூள் கௌப்பிடலாம் சார்.'

இயக்குநர் ஆமோதிப்பு புன்னகையுடன், என்னைப் பார்த்து, ‘என்ன சார் நாளைக்கு கிளைமாக்ஸ் புடிச்சிடலாமா?' தலையாட்டினேன். எனக்கு இயக்குநர்

சொன்ன கதையின் கிளைமாக்ஸை விட இயக்குநருக்கு இங்கிலீஷ் வசிக்க முடியுமா என்ற கேள்விதான் கிளைமாக்ஸ் போல மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

ஆகஸ்ட், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com