ஓவியம்: பி.ஆர்.ராஜன்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்

உளைந்தீ

நேரம் செல்லச் செல்ல அவனுக்கு தவிப்பு அதிகரித்தது. செல்போனில் மணி பார்த்தான். 11.40 ஆகியிருந்தது. இன்னும் இருபது நிமிடத்தில் இந்த நாளும் முடியப்போகிறது. அடுத்த நாளென்பது அவன் ஏற்றிருக்கும் தீராச்சுமையின் மீது இன்னொரு அடுக்காக அழுந்தும். கூடிக்கொண்டேயிருக்கும் கனத்தின் மீதான படபடப்பு நாளை இதே நேரம் இன்னொரு மடங்காகச் சேரும். ஜீப்பில் இருந்து இறங்கி நின்றான். டிரைவர் தேநீரோடு அருகில் வந்து அவனுக்கான கோப்பையை நீட்டினார்.

பனிக்காற்றின் நறுமணத்தை மீறி தேநீரின் சூடு நாசியை அதை நோக்கி ஈர்த்தது. தேநீரை அவ்வளவு அருகில் பார்த்ததும் மீண்டும் அம்மாவின் நினைவு வந்தது. அவள் போடும் தேநீருக்கு வீட்டிலிருக்கும் எல்லோரையுமே விசிறியாக மாற்றிவிடும் சக்தி இருந்தது. நறுக்கென மெலிதான சூடு நுனிநாக்கில் ஏற அடுத்தடுத்து தேயிலையின் ருசியும் சர்க்கரையின் மெல்லிய இனிப்பும் கலந்து உள்ளிறங்கும்போது யாருமே ஒருகணம் தன்னையறியாமல் கண்களை மூடித் திறப்பார்கள். தமையனூரில் அவர்கள் குடியிருந்தபோது மேற்குத் தெரு ராமு தாத்தா அவர் மாட்டையெல்லாம் பால் கறந்து ஊற்றிவிட்டு பத்து வீடுகள் தாண்டி தேநீருக்காக வந்துவிடுவார்.

'எங்க வூட்டு ஆளுங்க வைக்கிற டீலாம் உன் அளவுக்கு வர மாட்டேங்குது மருமவளே' என இரண்டு மடக்கு குடித்துவிட்டுச் சிரிப்பார்.

'அதுக்கென்ன மாமா.. நீங்க வந்து சாப்டுட்டுப் போங்க' என்பாள் அம்மா.

பெங்களூருவிலிருந்து வருகின்ற லாரிகளின் ஒலி இரவின் அமைதியை சீரான லயத்தில் அமிழ்த்தி விடுவித்துக் கொண்டிருந்தது. இருபுறமும் திரும்பித் திரும்பி சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியொரு வேலை தமிழ்நாட்டை தாண்டியிருந்தால் இந்தப் பாதை வழியாகத் தானே அம்மா சென்றிருப்பாள்? பேருந்து தவிர வேறு வாகனங்களில் அவளுக்கு ஏறிப் பழக்கமில்லை. நான் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்தை சன்னலோரமாய் அமர்ந்து பார்த்தபடியே சென்றிருக்கலாம் அல்லவா? கிருஷ்ணகிரி, ஓசூர் பக்கம் அவளுக்குத் தெரிந்தவர்களென யாருமேயில்லை. அப்படி வேறு மாநிலம் சென்றிருந்தால் என்ன செய்வாள்?

அம்மா எப்போதாவது வேறு மொழி பேசியிருக்கிறாளா என யோசித்துப் பார்த்தான். வாழப்பாடியில்  மளிகை வாங்கும் கடைக்கார அக்காவிடம் 'நீங்க தெலுங்கு பேசுறது அழகா இருக்கு எனக்கும் சொல்லித் தர்றீங்களா?' என விளையாட்டாக அவள் பேசிச் சிரித்தது நினைவுக்கு வந்துப்போனது.அப்படிப் பார்த்தாலும் பெங்களூருவில் கன்னடமும் ஹிந்தியும் தானே பேசுவார்கள்.. அங்கே போய் இவள் என்ன செய்வாள்?

தலையை உதறிக் கொண்டான். இரண்டொரு பொட்டு நீர் கைகளில் விழுந்து தெறிக்க கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் வாட்சைப் பார்த்தான். மணி ஒன்றை நெருங்கியிருந்தது.

'இந்நேரம் ஏதேனுமொரு உறவினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பாளா?

இல்லை ஏதேனுமொரு பஸ் ஸ்டாண்டில் உறங்க இடமின்றி அப்பாவை இழுத்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பாளா? உண்மையில் அப்பாவுக்கு ஒன்றுமே தெரியாது.நூல் மில்லுக்கு செல்லும் நேரம் தவிர அவருக்கு எல்லாமே அம்மா மட்டும்தான்‘ யோசிக்க யோசிக்க தலை வலித்தது.

இந்த அப்பாவுக்கும் கூட ஒரு போன் செய்ய வேண்டுமெனக் தோன்றவில்லையே. முதலில் இவனது எண் கூட அவருக்கு மனப்பாடமாகத் தெரியுமா என யோசித்துப் பார்த்தான். நிச்சயமாகத் தெரிந்திருக்க மாட்டார். இதுநாள் வரை தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் வந்ததில்லை.அவருக்கு பாக்கெட் டைரி வைத்துக்கொள்ளும் பழக்கமுமில்லை. ஆனால் இந்த அம்மாவுக்கு இவன் எண் நன்கு மனப்பாடமாகத் தெரியும். இந்த எண் வாங்கி பதினைந்து வருடங்கள் ஆகின்றன. முதன்முதலாக செல்போன் வாங்கும் போது கூடவே வாங்கியது. அதனை ஒரு துண்டு சீட்டில் எழுதி மனப்பாடம் செய்யச் சொல்லி அவள் பின்னாலேயே  நீட்டியபடி நடந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது.

'ஐயையையே.. ஏன்டா இப்படி தொல்ல பண்ற? நான் என்ன தொலைஞ்சா போய்டுவன்?'

'ஆமாம்.. தொலைஞ்சு தான் போய்டுவ.. மனப்பாடம் பண்ணு.'

'சரி சொல்றன் பாரு‌.. ஒம்போது ஏழு ரெண்டு எட்டு..'

'இல்ல இல்ல நீ எட்டு எட்டுனே சொல்லு..'

'ஐயோ சாமி முடியலடா உங்கிட்ட..'

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் எண்ணை சொல்லச் சொல்லி பிடிவாதம் பிடித்ததும் நினைவுக்கு வந்து போனது.

'இந்த அம்மாவுக்கு என்ன அவ்வளவு திமிர்? நான் இங்கே தனியாக தவித்துக் கொண்டிருப்பதை உணராத ஜென்மமா அவள்? ஒரு போன் செய்யாமல் அப்படியென்ன வைராக்கியம்?' அவனிடமிருந்து சிறுகுழந்தையின் கோபமும் தனிமையுணர்வும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது‌.

டோல்கேட்டில் இந்த நள்ளிரவிலும் வாகனங்களின் வரத்து கொஞ்சமும் குறையவில்லை.

'இப்படி வெளிச்சப்புள்ளிகளோடு கடக்கும் வாகனங்களில் கூட ஏதேனுமொன்றில் இப்போது, இந்த நொடியில் கூட இருவரும் தன்னை விட்டு விலகிக் கொண்டிருக்கக்கூடும்'

அப்படியே வாகனத்தின் மீது சாய்ந்தான்.டிரைவர் அருகில் வந்து ஆறுதலாய் நின்றார்.

‘சார் எல்லா ஸ்டேஷன்லயும் சொல்லிருக்கு.. கண்டிப்பா கண்டுபுடிச்சிடலாம் சார்..‘

‘தெரியுது குமாரு. நேரம் ஆக ஆக என்னமோ உறுத்துது. ஒண்ணுமே முடியல‘

‘புரியுது சார். இப்படி எந்நேரமும் திங்க் பண்ணிட்டே இருக்கீங்களே.. பேசாம வண்டியில போய் படுங்க சார். நான் பாத்துக்குறேன்‘ என்றவரை கூர்ந்துப் பார்த்தான். சின்ன வயது தான்.

‘ஏன் குமாரு உன் வீட்டுலலாம் இந்த மாதிரி

சண்ட வந்ததில்லையா? ‘

‘எல்லா வீட்டுலயும் இதே லோலாயி தான் சார். மனுசன் டியூட்டி முடிஞ்சிப் போனா ரெண்டு பேருகிட்டயும் மாறி மாறி நியாயம் கேட்க முடியாது. இதுக்கு டியூட்டியே தேவலான்னு திரும்ப ஓடிவந்துடலாம்னு இருக்கும். என்னவோ நாறப் பொழப்பு சார்‘  நிமிர்ந்து மேலே ஆகாயத்தைப் பார்த்தான். மழை மேகங்கள் திரண்டிருந்தன.

'அவள் வெளியே போ எனச் சொன்னால் நீ உடனே போய்விடுவதா? நீ வெளிய போடி எனச் சொல்ல வேண்டியது தானே?' இவ்வளவு ரோஷமாக இருந்ததாக அம்மாவை ஒருநாளும் அவன் பார்த்ததில்லை. வீட்டில் அவளது இடம் நினைவுக்கு வந்தது. கயிற்றுக் கட்டிலை நிமிர்த்தி வைத்து போர்வைகளை நேர்த்தியாக மடித்து அதன்மீது அடுக்கிவிட்டுப் போயிருக்கிறாள். வெளியேறும்போதும் இந்த நிதானத்தை அவள் எங்கிருந்து பெற்றிருப்பாளெனத் தெரியவில்லை. ஆனால் இதய மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படாமல் ஸ்டூலில் அப்படியே இருந்தன.

இந்நேரம் எல்லா உறவினர்களுக்கும் தெரிந்திருக்கும். மாலையிலிருந்தே மாற்றி மாற்றி அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.

அக்கா வேறு நான்கு முறை அழைத்துவிட்டாள். அவள் அழைப்பையும் எடுக்கக் கைவரவில்லை. அங்கேயாவது போய் இருவரும் தங்கியிருக்கலாம். இப்படித் தவிக்கவிட்டு பயத்தையும், நீங்காத குற்ற உணர்வையும் தந்திருக்கத் தேவையில்லை. அதே குற்ற உணர்வில் தான் அவன் மனைவியும் வீட்டில் நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரும்போரில் படையெடுத்து நின்று சண்டையிட்டு திடீரென தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகிப் போகும் எதிரியின் மாற்றம் கண்டதும் சடாரெனத் தடுமாறும் மனநிலை இருக்கிறதே.. அதை இப்போது அவள் கொண்டு பயந்திருக்கிறாள் என்பது இதுவரை வந்தத் தவறிய அழைப்புகளின் எண்ணிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

இருக்கும் வரை குரோதத்தை வளர்த்தெடுத்து அதன் விஸ்வரூப நிழலுக்கு தன்னையே தின்னக் கொடுத்து  மல்லுகட்டியவர்கள் இழப்பின் போதுதான் தன்னை காணாமல் தேடத் தொடங்குகிறார்கள். நேற்றிரவு அவள் தம்பியின் பைக்கிலேறி ஸ்டேஷனுக்கே வந்துவிட்டாள். இவ்வளவு துயரத்துக்குமான காரணம் நாமாகிவிட்டோமென்ற அச்சத்தின் சுவடு அவள் முகத்தில் அடர்த்தியாகப் படிந்திருந்தது. எவ்வளவோ கெஞ்சியும் இவன் பேச மறுத்துவிட்டான். அங்கிருந்து கிளம்பிப் போனவள் பெருநகரப் பேருந்து நிலையத்திலேயே உட்கார்ந்தும் அலைந்து திரிந்தும் தேடி அவதிப்படுவதை இரண்டொருவர் போனில் அழைத்துச் சொன்னபிறகு தான் இவனுக்கு அவள்மீதிருந்த வெறுப்பு கொஞ்சமாய் குறைந்தது. மைத்துனனுக்கு போன் செய்து தானே தேடிக் கண்டுபிடித்துக் கொள்வதாகவும், அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படியும் உத்தரவிட்டான்.

இதற்கு முன் சிறுவனாக இருந்தபோது மேச்சேரியில் உறவினர் வீட்டுக் காரியத்துக்குச் சென்று வருவதாகக் கூறி இவனை வீட்டுக்குள் விட்டு பூட்டிவிட்டு இருவரும் போனார்கள். மஞ்சள் குண்டு பல்பின் சுமாரான வெளிச்சத்தில் அந்த இரவு இவனை நோக்கி எந்நேரமும் வந்து அணைத்துக் கொள்வதைப் போல பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. பத்து மணிக்குள் திரும்ப வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றவர்கள் அடித்துப் பெய்த பேய்மழையின் காரணமாக வரத் தாமதித்தார்கள். இவனுக்கு அழுகை தொடங்கும் போது சன்னலின் வழியாய் உள்நுழைந்த கருவண்டு பயத்தை இன்னும் அதிகரித்து வைத்தது.

அச்சிறுவயதில் அதன் உருவம் பிரமாண்டமான ஒரு அசுரனை அறைக்குள் இருத்தியிருந்தது. இவன் தலைக்கு மேல் பறப்பதும் அருகில்  வருவதுபோல போக்கு காட்டுவதுமாய் அது ஏற்படுத்திய மிரட்சியில் அவன் வியர்த்து அலறி உடல் நடுங்கி அறையின் மூலைகளுக்கெல்லாம் ஓடி ஒருகட்டத்தில் மூர்ச்சையாகும் நிலைக்கு வந்தபிறகு அம்மா வந்து'தம்பி ..தோ அம்மா வந்துட்டேன்' என  கதவைத் தட்டினாள். நினைவிலிருந்து மீண்டு திரும்பிப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் ஜீப்பின் உருவம் கருவண்டாகத் தெரிந்தது.

ஏறும்போதே தளர்ந்திருந்த அவர்களை கண்டக்டர் விநோதமாகப் பார்த்தார். கடந்த மூன்று தினங்களாக அவர்கள் திருச்சியிலிருந்து ஓசூர் வரை ஏதேனுமொரு இடத்தில் அவரது கண்களில் விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். வருத்தும் உடல்நலிவு அப்பெண்மணியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. கூட கைத்தாங்கலாக அவளைப் பிடித்திருந்த ஆண் கணவனாக இருக்கக்கூடும். அவர் அப்பெண்மணியை விடவும் அதிகம் களைத்திருந்தார். பேருந்தின் நடு இருக்கையைத் தேடி அவர்கள் அமர்ந்ததும் அருகில் சென்றார்.

‘எங்க போவணும்?’  என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏதேனுமொன்றை பதிலாக சொல்லியாக வேண்டிய தடுமாற்றம் அவர்களின் முகத்தில் நிழலாடியது.

அந்த ஆண்  நடுங்கும் குரலில் கேட்டார்.

‘பஸ் தர்மபுரி உள்ள போவும் தானே?’

கண்டக்டர் பதில் சொல்லாமல் இரண்டு

டிக்கெட்களை கிழித்துக் கொடுத்து ஐநூறு ரூபாய் தாளை வாங்கிக் கொண்டார்.

‘சில்லறை இல்லையா?’

மௌனத்தில் கனத்துக் கிடந்தவர்களிடம் மீதியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

பாலாமணி நேற்று திருச்சி பேருந்து நிலையத்தில் டீ அருந்தும்போது அவர்களை சுட்டிக்காட்டினான்.

'இவங்க ரெண்டு பேரும் என்னன்னு தெரியலண்ணா... நேத்துல இருந்து தடுமாறிக்கிட்டே இருக்காங்க'

'வயசானா அப்படிதான்... எங்கயாவது ஹாஸ்பிடல் போவாங்க'

'இல்லண்ணா... முந்தாநாள் நைட்டு என் ரூட்டுல ஏறுனாங்க... சேலத்துல இருந்து திருச்சிக்கு தூங்கிட்டே வந்து மறுபடியும் தூங்கிட்டே போனாங்க. அந்தம்மா நெனச்சி நெனச்சி அழுதுட்டே இருந்துச்சு. அந்தாளு சமாதானம் பண்ணுவாருன்னு பாத்தா அவரும் முசுக் முசுக்குனு கேவுறாரு. அடுத்த நாள் பாத்தா

தஞ்சாவூரு பஸ்ல உக்காந்துருக்காங்க. இப்ப திரும்பவும் இங்க..'

'என்னாச்சுனு கேட்க வேண்டியது தான?'

'கேட்டனே... அந்தம்மா சீறுது.. நாங்க எங்கயோ போறோம் வரோம்.. பிரம்மன் விதிச்சிருக்கான்.. போறோம் வரோம்.. ஓசிலயா போறோம்னு கத்துது. அப்புறம் கேட்கல. வுட்டுட்டேன்'

பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவரை யாரோ உலுக்கினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் பெருஞ்சலனம். வாந்தியெடுத்தபடி அப்பெண்மணி மயங்கி கீழே சரிந்திருந்தார். அருகிலிருந்தோர் தூக்கி அமர வைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

‘தண்ணி குடுங்கப்பா...’

‘ஒரு அசைவும் தெரியலையே... ஆம்புலன்ஸுக்கு கூப்பிடணும்’

‘பஸ்ஸுல யாராவது டாக்டர் இருக்கீங்களா?’

யாரோ ஓடிவந்து நாடி பிடித்துப் பார்த்து ‘ஷி ஈஸ் டோட்டலி அன்கான்ஷியஸ்‘ என முணுமுணுத்தார். வெறித்த பார்வையோடு இருக்கையிலிருந்து இறங்கி கீழே அமர்ந்து, வியர்த்து நனைந்த தோள்களைப் பற்றியபடியிருந்த அந்த ஆணின் கண்களில் துயரத்தை முந்தும் மிரட்சியின் சாயல் அந்த இரவிலும் தெளிவாக மிளிர்ந்து கொண்டிருந்தது.

பதட்டக் குரல்களுக்கு நடுவே என்ன செய்வதெனத் தெரியாமல் கண்டக்டர் டிரைவரிடம் ஓடினார்.

நள்ளிரவு கடந்து வெகு நேரமாகியும் உறக்கம் வரவில்லை. டிரைவர் குமார் மீண்டும் ஒருமுறை அருகில் வந்து ஜீப்பிலேயே உறங்குமாறு கூறினார். இவனால் அது முடியாதென்பது அவருக்கும் நன்கு தெரியும். தொலைத்த ஒன்றை கண்டுபிடித்திட முடியாத இயலாமையும் தன்வெறுப்பும் சேர்ந்து அவனை உறக்கமற்றவனாக ஏன் விழிப்புமற்றவனாக தனிமை தகிக்கும் வெளியில் உலாத்திக் கொண்டிருக்கச் செய்திருக்கின்றன. அடுத்த நிமிடமே கண் முன் வந்து நின்று 'தம்பி டேய் கண்ணா அம்மா

 வந்துட்டேன் பாரு' எனச் சொல்லிச் சிரிக்கப் போவதும், கடைசி வரையிலும் வராமலே போய்விடுவதுமான அவஸ்தை தொனிக்கும் நிமிடங்களும்  இனி வரும் நாட்களில் தான் நடந்தேறப் போகின்றன என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்போது மரணம் நிகழுமென முன்கூட்டியே தெரிந்து ஆசுவாசித்துக் கொள்ளுமொரு வாதையுற்றவனின் இறுதி நிலையையாவது தரச் சொல்லித் தான் இந்த நான்கு நாட்களாக அவன் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான்.

ஓரிரு தவறிய அழைப்புகளை மீள அழைத்து ஏமாற்றத்துடன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டவனை நோக்கி வாகன வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டே வந்து இஞ்சின் அணைந்து நின்றதில் திரும்பிப் பார்த்தான். அது சேலத்திலிருந்து பெங்களூரு செல்லும் அரசுப் பேருந்து. அதன் கதவைத் திறந்து கொண்டு இறங்கி வந்தவரின் சீருடையின்வழி கண்டக்டரென உணர்ந்து எதிர்பார்ப்போடு பார்த்தான்.

கண்டக்டர் கிட்டத்தட்ட ஓடிவந்தவாறே ‘சார்.. பஸ்ஸுல ஒரு அம்மா அன்கான்ஷியஸ் ஆகிடுச்சுங்க. அதான் ஓரங்கட்டிட்டோம்.கொஞ்சம் வந்து பாருங்க‘ என்று சொல்லி முடிக்கும் முன்பே பேருந்தை நோக்கி ஓடினான். மிகைபதட்டத்தில் நெஞ்சு தாறுமாறாக அடித்துக் கொண்டிருக்க பேருந்திலேறி என்ன என்பதுபோல் உள்ளே நகர்ந்தவனுக்கு பயணிகள் வழி விட்டு நின்றார்கள்‌.

இருக்கையின் இருமருங்கிலும் சூழ்ந்திருந்தவர்களை விலக்கிவிட்டுப் பார்த்தான். செல்போன் ஒளிகளின் கீழே சாய்ந்துக் கிடந்தவர்கள் பார்வைக்கு கிடைத்தனர். கண்கள் மேலே செருகிக் கிடந்தவளுக்கு அம்மாவின் சாயல்‌. மூக்குத்தி அணியாத அம்மாவைப் போலிருந்தவளின் அருகில் எதுவும் பேசாமல் மருள மருள விழித்திருந்த ஆணைப் பார்த்தான். நீரிழிவால் சொடுங்கிய முகம்.

‘அவரு எதுவுமே பேச மாட்டேங்குறாரு சார்’

‘அந்தம்மா டெத்னு நினைக்கிறேன்’

பின்னால் நின்றிருந்தவர்கள் நூற்றியெட்டுக்கு சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். இவன் தொட்டதும் அந்த அம்மாளிடம் அசைவு தெரிந்தது. கொஞ்சம் நம்பிக்கையுடன் தூக்கி அமர வைத்தான். அந்தத் தொடுகை அவனுக்கு இதமாக இருந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் ஏற்றி அனுப்பிவிட்டு அவரிடம் ஜீப்பில் போகலாம் என்றான். எந்தச் சலனமுமற்று பேசாமல் ஜீப்பில் ஏறிக் கொண்டார்.

மருத்துவமனைக்குள் நுழையும் முன் வழியில் நிறுத்தி தேநீர் வாங்கிக் கொடுத்தவனை வெற்றுப் பார்வை பார்த்தார். வாங்கி இரண்டு முறை உறிஞ்சியவரின் கைகளை  சமாதானமாய் பற்றி ‘ஒண்ணும் ஆகாது பெரியவரே.. வெறும் மயக்கம் தான்‘ என்றான். ஆர்வமாக அவர் தேநீர் உறிஞ்சுவதில் கவனமாக இருந்தார்.

‘நல்லா சாப்பிடணும் பெரியவரே... இந்த வயசுல சாப்பிடாம ரெண்டு பேரும் சுத்துனா அப்புறம் உடம்பு என்னத்துக்கு ஆகும்? வீட்டுல ஏதாவது பிரச்னையா?‘ என்றான் மீண்டும். அவர் கடைசி மிடறையும் அண்ணாந்து குடித்து குவளையை வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

‘நான் மிலிட்டரி ரிட்டையர்டு தம்பி. பாத்தா அப்படியா தெரியறேன்? எனக்கு ரெண்டு மவனுங்க.. எல்லாம் நல்லா படிக்க வச்சி வேல வாங்கி குடுத்து செட்டில் பண்ணி வச்சிட்டேன். ஆனா இப்ப எங்கள சீந்தத்தான் யாரும் இல்ல‘ என நிறுத்திக் கொண்டவரை அதற்கு மேல் கேட்க கூச்சமாக இருந்தது.

இவன் கனிவாகப் பார்த்தான். ‘ஒண்ணும் கவலப்படாதீங்க ஐயா. நான் வேணும்னா உங்க பசங்ககிட்ட பேசுறேன்‌. மாசம் ஆனா ஹாஸ்பிடல் செலவு வீட்டு செலவுக்குன்னு இவ்வளவு பணம் தரணும்னு வார்ன் பண்ணிடலாம். தைரியமா இருங்க‘

அவர் பாக்கெட்டிலிருந்து கைநிறைய ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துக் காட்டினார்.

‘காசுலாம் பெரிய விஷயமே இல்ல தம்பி.

சாப்பிட்டியான்னு கேட்கத்தான் யாரும் இல்ல‘ என்றபடியே மருத்துவமனை நோக்கி நடந்தார். இவன் மீதமிருக்கும் தேநீரை உறிஞ்சினான். அம்மாவின் தேநீர் ருசி அதில் ஏறியிருந்தது போலத் தோன்றியது. 'நீ தேநீர் குடித்தாயா?' என என்றாவது அவளைக் கேட்டிருக்கிறோமா என யோசித்தான். அப்படி எதுவும் நினைவிலில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com