என் செல்ல புஜ்ஜி

என் செல்ல புஜ்ஜி

வனிதா என்கிற நான் அவ்வப்போது பொய் சொல்வதை வழக்கமாகவே வைத்திருக்-கிறேன். இந்தப் பழக்கம் நான் பத்தாவது தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் மாத நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கையில் தொற்றிக்கொண்டது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடுமுறையில் பொழுதைக் கழிக்க இந்த பெருந்துறையில் எனக்கு மாத நாவல்கள் மட்டுமே துணை புரிந்தன.

அரசாங்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் என் அப்பாவுக்கு நான் மாத நாவல்களை இப்படி வாடகைக்கு எடுத்து வந்து குப்புற விழுந்து படிப்பது பிடித்திருந்ததா? பிடிக்கவில்லையா? என்பது தெரியவில்லை. டிவி பார்ப்பதை விடுத்து இப்படி புத்தகங்கள் வாசிப்பது அவருக்கு ஒருவேளை பிடித்திருக்கலாம் என்பதால் அவர் என்னை அர்ச்சனை எதுவும் செய்யவில்லை.

அப்பா எப்போதும் வாரம் தோறும் வரும் சமூக, அரசியல் இதழ்களையே வாசிப்பார். பள்ளியில் கண்டிப்புக்கு பெயர் பெற்ற தமிழ் ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த அவர் அதே பள்ளியில் பயின்ற எனக்கு மட்டும் தமிழ் ஆசிரியராக வராதது இன்றுவரை மேலே இருப்பவரின் ஏற்பாடு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

 ஆசிரியருக்கு பிள்ளையாய் இருப்பது எல்லோருக்குமே பெரும் துன்பம் தான், பள்ளியில் மாணவமணிகளை மிரட்டுவது போன்றே வீட்டிலும் அதை தொடாதே, இதை தொடாதே! இப்படி இருந்தால் நாளை எருமை மேய்க்கத்தான் செல்வாய்! என்று வீட்டிலும் ஆசிரியத் தன்மையுடனே நடந்து கொள்கிறார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் என்றால் அப்பாக்களுக்கு பாசம் பொத்துக்கொள்ளும் என்பதெல்லாம் என் விசயத்தில் பூஜ்யம் தான்.

 வீட்டில் ஓரியாகப் பிறந்த எனக்கே வீடு ஒரு வதை முகாம் போல இருந்து வந்ததை உங்களிடம் சொல்ல கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருக்கிறது. பிறந்த நாள்களை ஜெகஜோதியாய் கொண்டாடும் பெற்றோர்களை பெற்றிருந்த தோழிகள் என் அக்கம்பக்கத்து வீடுகளிலேயே இருக்கிறார்கள். என் அப்பாவிற்கு அது பிடிக்காது! ஒருவயசு குறைந்து போவதை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்? அதுவெல்லாம் வெளிநாட்டுப் பழக்க வழக்கம், என்று என் சார்பில் பேசிய அம்மாவின் வாயை அடைத்து விடுவார்.

அப்பாவிற்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது. அம்மாவும் நானும் விஷேச நாட்களில் சிங்காரித்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினால் முகம் அவருக்கு மாறிவிடும். தாடிக்காரர் பிறந்த மண் இது தெரியுமா? என்பார். அவர் யாரைச் சொல்கிறார் என்பது எனக்கு பத்தாவது காலாண்டுத் தேர்வு சமயத்தில் தான் தெரிந்தது. போகட்டும்!

‘அம்மா நான் பெரிய மனுஷி ஆயிட்டேன்’ என்று மகிழ்ச்சியாக வீட்டினுள் நுழைந்த சமயத்தில் தான் அம்மா பதை பதைப்போடு ஓடி வந்து ‘அங்கியே நில்லுடி! அப்புடி குதிச்சுட்டு வர்றே? அங்கியே ஆசாரத்துலயே நில்லு!’ என்றாள். கிட்டே வந்தவள் என்னை ஒரு சுற்று வந்து உற்றுப்பார்த்து விட்டு கேள்விக் குறி ஒன்றை முகத்தில் பெரிதாக ஒட்ட வைத்து நின்றாள்.

‘பக்கத்து வீட்டு ரேவதிக்கு பிரயாணி செய்ய கத்துக் குடுத்துட்டு வந்தேன்மா! சூப்பரா இருந்துச்சா! அதுக்கு அவ அம்மா எங்கிட்ட பெரிய மனுசி ஆயிட்டேடி வனிதா! நாளைக்கே உன்னை கட்டிக் கொடுத்தாலும் புருசனுக்கு ஆக்கிப் போட்டுடுவே! அப்படின்னு சொல்லுச்சும்மா!’ என்றதும் அம்மா, ‘இவ்ளோதானா? நாங்கூட உன் மாமங்காரனையும் சொந்தங்காரங்களையும் போனு போட்டு கூப்பிடணும்னு நினைச்சுட்டேன்! அததுக ஏழாவது எட்டாவது படிக்கிறப்பவே வந்துடுதுக.. இதுக்கு மட்டும் ஏன் தாமசமாயிட்டே போவுது?’ என்று முனகிக் கொண்டே சென்றது.

நான் பெரிய மனுஷி ஆயிட்டேன் என்கிற விசயத்தை பெரீய்ய்ய மனுஷி ஆயிட்டதாக அம்மா எடுத்துக் கொண்ட நாளிலிருந்து பொய் சொல்லும் பழக்கம் எனக்கு வேடிக்கையாக ஒட்டிக் கொண்டது. இது மூன்று வருடங்களாக தொடர்கிறது. பொய் சொல்வது எனக்கு அழகாகவும் பிடித்தமாகவும் இருக்கிறது! அதன் பிற்பாடு நான் உண்மையாக பெரியமனுஷி ஆவதற்கு ஒரு வருடமாகி விட்டது!

மற்ற என் தோழிகளுக்கு நடந்தது போல மண்டபத்தில் எல்லாம் என் நன்னீராட்டு விழா நடைபெறவில்லை! காசை நசுக்கி நசுக்கி செலவு செய்யும் அப்பா பவானியில் இருக்கும் என் அம்மாயி வீட்டில் நடத்தி மண்டபச் செலவை மிச்சப்படுத்திக் கொண்டார். அதனால் என் தோழிகளை அழைக்க முடியாமல் போன வருத்தம் என்னோடே போயிற்று!

ஈரோட்டில் பெண்கள் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி மேத்ஸ் எடுக்கவைத்து இப்போது முதலாமாண்டு செல்லவும் என் அப்பா காரணமாகிவிட்டார். நான் சிறந்த படிப்பாளினி அல்ல என்பது பெருந்துறையில் நான் படித்த அரசாங்கப்பள்ளிக்கே தெரியும்! பத்தாவதில் 330 மார்க்குகளும், ஹயர் செகண்டரியில் 750 மார்க்குமே அதற்கு சாட்சி! சென்னிமலையில் இருக்கும் பாலிடெக்னிக்கில் வாசிக்கப் பிரியப்பட்டேன். அங்கு ஆண்களும் பெண்களும் இணைந்து வாசிக்கலாம். அந்த ஆசையில் கல்லைத் தூக்கி போட்டார் அப்பா!

இந்த கல்லூரியில் வாடைக்குக் கூட ஆண்கள் இல்லை. எங்கும் பெண்கள்! கல்லூரியில் என்னை அமர்த்திச் செல்ல வந்த அப்பா ஜீன்ஸ் அணிந்த யுவதிகளைக் கண்டு மிரண்டுதான் போனார் என்று சொல்ல வேண்டும். அவருக்கு இந்த மண்ணின் போக்கு அவ்வளவு உவப்பாக இல்லை என்பது முகமே காட்டிற்று! எங்கேயேனும் புகை வந்தால் கூட மூக்கை நன்றாக நின்று உறிஞ்சிப் பார்த்தார் அது சிகரெட் வாசமோ என்று!

எப்படியிருப்பினும் என் அப்பா எனக்கு மகிழ்ச்சியான சில காரியங்களை செய்யத் தான் செய்தார். நான்கு செட் சுடிதாரும், ஒரு நோக்கியா அலைபேசியும் நசுக்கி எடுக்காமல் செய்தார். தினமும் பேருந்துப்பயணம் எனக்கு இனித்தது! அதில் ஒரே துன்பம் என்றால் ராமராஜன் பாடல்களை கல்லூரி வாசலில் இறங்கும் வரை பேருந்தில் கேட்டபடி வருவது தான். கல்லூரிச்சங்கு ஒலிக்கும் போதெல்லாம் ‘மாங்குயிலே! பூங்குயிலே! சேதி ஒன்னு கேளு’ என்றே எனக்கு கேட்பது தான்.

அன்று பெருந்துறை பேருந்து நிழற்குடைக்கு அருகில் நானும் விமலாவும் சென்று கொண்டிருக்கையில் ஒரு ஜாக்கிசான் அவனை விட திடகாத்திர உடலமைப்பைப் பெற்றிருந்தவனை பந்தாடிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் அங்கேயே ஆணியடித்துக் கொண்டோம். ஏதாவது குறும்பட சூட்டிங்காக இருக்கலாமென்று தான் நினைத்தேன். அப்படி யாரும் கையில் சின்னதான கேமராவை வைத்துக் கொண்டு அவர்கள் அருகில் இல்லை. ஆக இது நிஜ சண்டை தான்.

திடகாத்திரமானவன் கோபத்தின் விளிம்பில் இருந்தபடி கைகளை காற்றில் வீசிக் கொண்டிருக்க ஜாக்கிசான் அவன் வீச்சுகளுக்கு நிதானமாக சுளித்துக் கொடுத்து அவன் தாவாங்கட்டையை குறி பார்த்து அடித்துக் கொண்டிருந்தான். இது ரொம்ப நேரமாக நடக்கிறது போலிருக்கிறது! கடைசியாக ஜாக்கிசான் எதிராளியின் கையிலிருந்த அலைபேசியை அபகரித்துக் கொண்டதும் விட்டால் போதுமென எதிராளி சாலையில் ஓடத் துவங்கினான். விசயம் என்னவென்றால் நிழற்குடை இருக்கையில் அமர்ந்து பெண்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தானாம் அவன்.

ஜாக்கிசானின் தங்கை என்றறியப்பட்டவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் வடிந்த வண்ணமிருக்க ‘அழாதே’ சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக்கி. அந்தப்பெண் எங்கள் கல்லூரிக்குத்தான் பேருந்தில் வந்து கொண்டிருந்தது. ஜாக்கிசானை நான் அடிக்கடி இந்த குறுநகரில் பார்த்திருக்கிறேன் என்றாலும் சரியாக ஞாபகத்தில் வரமாட்டேன் என்கிறது. அவர் தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் பின்னால் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கேபிள் ஒயர்களை பார்த்தபோது தான் ஞாபகம் வந்தது! ஜாக்கி மாதா மாதம் என் அம்மாவிடம் கேபிள் காசு வாங்கிப் போக வருபவர் என்று!

பேருந்து நிலையத்தில் கல்லூரிப் பெண்களை வழியனுப்பி வைக்க ஒரு கூட்டம் தினமும் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது. காலையிலேயே கண்ணாடி போட்ட, காதில் கடுக்கன் போட்ட, தலைமுடியில் அங்கங்கு நீலவர்ண சாயம் பூசிய  ஆடவர்களையும், அவர்களின் சேஷ்ட்டைகளையும் கண்டு ரசிப்பது எல்லாருக்குமே இனிப்பான விசயம் தான். அவர்கள் வைத்திருக்கும் பைக்குகள் தான் எனக்கு வேடிக்கை! நீர்யானை மாதிரியான பைக்கில் வரும் ஆடவன் ஈக்குமாத்து குச்சி சைசில் இருந்ததால் ரசிக்க முடியவில்லை!

என்னோடு கல்லூரிக்கு வரும் பிள்ளைகள் எல்லோரும் ஈக்குமாத்து குச்சிகள் தான். அவர்களின் மதிய உணவு டப்பா எல்.கே.ஜி  பாப்பா ஸ்னேக்ஸ் கொண்டு போகும் டப்பா அளவு தான். அதிகம் உண்டால் குண்டாகி விடுவோமோ என்ற கவலை தான். என் அம்மா எனக்கு அடுக்கு கேரியரில் போட்டு அனுப்பி விடாதது ஒன்று தான் குறை.

இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் தங்களுக்கென காதலர்களை இந்த நிறுத்தத்தில் வைத்திருக்கிறார்கள். ஓரமாய் நின்று அவர்கள் உரசிக் கொள்ளாத குறையாக குசு குசுத்துக் கொள்வது முதலாமாண்டு செல்லும் எங்களுக்குள் பல சுரப்பிகளை இயங்கச் செய்து விடுகிறது! இத்தனைக்கும் நான் சண்டைப் படங்களின் ரசிகை. பறந்து பறந்து திரையில் விளாசும் எல்லா நடிகர்களும் என் காதலர்கள் தான். ’கராத்தே கிட்’ முதலாக நான் பார்த்த ஆங்கில மொழி டப்பிங் படம். அன்றிலிருந்து ஜாக்கி தான் என் காதலுக்கு கிரியா ஊக்கி!

ஜாக்கியை என் துப்பட்டாவில் முடிந்து கொள்ள வேண்டுமானால் நான் பாஸ்போர்ட் எடுத்து கிளம்ப வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்பதால் என் வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் கேபிள் ஒயரை எலி கடித்தது மாதிரி கடித்து குதறி எறிந்தேன். உள்ளூர் ஜாக்கியே எனக்கு போதும்.

அம்மாவிற்கு நாடகங்கள் பார்க்கவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும். மின்சாரம் போய்விட்டாலே பக்கத்து வீடுகளிலெல்லாம் ஓடியோடி ‘உங்கூட்டுல மின்சாரமிருக்கா?’ என்று விசாரிக்கும். கேபிள் ஒயர் துண்டானால் விடுமா? வீட்டு போனில் அழைப்பை ஜாக்கிக்கு போட்டு விட்டு வாசலில் போய் நின்று கொண்டது. ஜாக்கி யமாஹாவில் வந்தார். மாடியேறிப்போய் வேறு ஒயர் மாற்றினார். ‘காபி கொடுக்கலாமா?’ என்ற என் கேள்விக்கு அம்மா முறைப்பு பயங்கரமாய் இருந்தது. வருங்கால மருமகனுக்கு ஒருவாய் தண்ணியாவது இந்த அம்மா கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லை. கடைசியாக எலிகளை கொல்லும் பிஸ்கட்டுகளை வாங்கி மாடியில் போடுமாறு சொல்லி விட்டு ஜாக்கி கிளம்பி விட்டார்.

ஜாக்கி என்னிடம் அன்று பத்து வார்த்தைகள் பேசினார். இல்லை நான் தான் அவரிடம் பேசினேன். அவர் பதில் பேசியவைகளை வைத்து பத்து பத்து இருபது வார்த்தைகள். எது எப்படியோ ஜாக்கி வரப் போக என் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தார். கொடுமை என்னவென்றால் எதிர் வீட்டுக்கு நான்கைந்து முறை எலித் தொந்தரவால் அவர் வரவு அதிகமாயிருந்தது.

என்னை விட விமலா புத்திசாலி என்ற நினைப்பாய் இருக்கிறாள் போலிருக்கிறதே! ஆடவர்களுக்கு என்னை மாதிரி கலகலப்பாயும் சூட்டிகையாயும் இருக்கும் பெண்களை விட உப்பின முகத்துடன் எந்த நேரமும் ஏதோ சோகத்தை மனதில் வைத்திருக்க கூடிய, குனிந்த தலை நிமிராத எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா குவாலிபிகேசன் கள் பெற்ற பெண்களைத்தான் பிடிக்கிறது போல! அவர்கள் தான் சொல்பேச்சு கேட்டு குடும்பத்தில் அனுசரணையாக நடந்து கொள்வார்கள் என்ற கணக்கு ஆடவர்களுக்கு இருக்கும் போல!அது நினைத்த மாதிரியே தான் ஆயிற்று!

ஜாக்கி பேருந்து நிறுத்தத்திற்கு தங்கையை கொண்டு வந்து விட்டதும் கிளம்புபவர் என்னையும் விமலாவையும் தாட்டி அனுப்பி விட்டு தான் கிளம்பினார். வாடி மவளே! வனிதா என்கிற நான் இந்த பூமியில் எதற்காக பிறந்தேன் என்று அன்று தான் தெரிந்தது! மறுநாள் என் வீட்டிலும் எலிகள் கேபிள் ஒயரை துண்டாக்கி விட்டன! நிசமாத் தான் நம்புங்கப்பா! அன்று ஜாக்கி என்னிடம் எதையோ கேட்பதற்கு தடுமாறிக் கோண்டிருந்தார். வாந்தி எடுப்பவர்கள் முகம் அதற்கு தயாராகும் போதே தெரியுமே! ‘விமலாவின் அலைபேசி எண் இருந்தால் தந்து உதவ முடியுங்களா?’ என்று திக்கித் திக்கி கேட்டார். வாடி மவளே! சொல்லி விட்டேன். பொக்கிசத்தை பெற்றவர் போல ‘என் செல்லம்! ஓ!ஓ!’ திரையில் கார்த்தி பாடலுக்கு நகருவது போலவே சீட்டியடித்துக் கொண்டு நகர்ந்த ஜாக்கியை அன்று வெறுப்பாய் பார்த்தேன். அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் ஆயிற்று ஜாக்கி எனக்கு போன் செய்து பேச! அதுவும் எதிர் வீட்டில் கேபிள் ஒயரை எலி கடித்த நாளின் இரவில்! பாருங்களேன் இந்த ஜாக்கியை! ‘ஹலோ! நான் கார்த்தி பேசுறேனுங்க! எந்தக் கார்த்தின்னு யோசிக்காதீங்க விமலா. கேபிள் கார்த்தி!’ மாட்டினார் ஜாக்கி என்னிடம். ‘சொல்லுங்க கார்த்தி, என்ன இந்த நேரத்துல? என் போன் நெம்பர் உங்களுக்கு எப்படி கெடைச்சுது?’ -சொல்லு ஜாக்கி சொல்லு! உன் நினைவால தூக்கம் போச்சு! சோறு உங்க முடியல! திரும்புன பக்கமெல்லாம் பாரதிராசா நாயகன் மாதிரியே சிரிக்கிறே! சொல்லு ஜாக்கி சொல்லு! ‘உங்க போன் நெம்பரை நான் வாங்கின கதையை சொன்னா நீங்க சொன்னவங்க துப்பட்டாவை கிழிச்சாலும் கிழிச்சுடுவீங்க விமலா! என்னால எதுக்கு சண்டை சச்சரவு?’ ‘சொல்லிட்டீங்களே! துப்பட்டான்னா எதிர் வீட்டு வனிதாவா என் நெம்பரை உங்களுக்கு கொடுத்தது? நான் தான் கேட்டால் கொடுக்கச் சொன்னேன் அவ கிட்ட’

‘என்னது? நீங்க தான் குடுக்கச் சொன்னீங்களா? என்ன கொடுமை மகாலட்சுமி இது’ ‘சரவணன்னு தான சொல்வாங்க! மாத்திட்டீங்களா புஜ்ஜி!’ ‘புஜ்ஜின்னா எதோ பூனைக்குட்டியை கூப்பிடறீங்களா விமலா?’ ‘நான் உங்களைத் தான் சொன்னேன், ஏன் பிடிக்கலையா புஜ்ஜி!’ ‘அப்ப நான் உங்களை உம்முனா மூஞ்சின்னு கூப்பிடவா?’ ‘போனை வச்சுடறேன் நான்!’ திமிரைப் பாருங்க ஜாக்கிக்கு! நான் என்ன கன்னத்தை வீங்க வச்சுட்டா இருக்கேன்? ‘சாரி! சாரி! சாரி! ஆமா இப்ப போன்ல நல்லா பேசுறீங்க, ஏன் வீட்டுல எனக்கு காபி கொடுத்தப்ப கூட கையை தொட்டதுக்கு பட்டுனு எடுத்துட்டீங்க? ஆமா உங்க வீட்டுல எப்பயும் அரை டம்ளர் தான் பால் காபி கொடுப்பீங்களா?’ என்னது கையை தொட்டியா? ராஸ்கோல்! பாருங்க இந்த ஜாக்கியை.. அதும் எங்கிட்டயே சொல்றாப்ல! அதுக்கும் மேல பேச முடியுங்களா என்னால? போனை ஆப் பண்ணிட்டு தூங்கிட்டேன்ல! அப்புறம் அடுத்த நாள் ராத்திரில தான் போன் வந்துச்சு எனக்கு. ‘என்னங்க நீங்க பாட்டுக்கு நேத்து சுட்ச் ஆப் பண்ணிட்டு போயிட்டீங்க விமலா! எப்படி தவிச்சுப்போயிட்டேன் தெரியுமா! பஸ்டாப்புல என் முகத்தை கூட பாக்காம நின்னிங்க இன்னிக்கி?’ ‘யாரு சொன்னாங்க பாக்கலின்னு? அதான் கொழந்தப்பிள்ளை கணக்கா எண்ணெய் வழிய நின்னுட்டு இருந்தீங்களே! ஆமா கேபிள் கேபிள்னு வீடு வீடா ஓட்டு மேலயும் மாடி மேலயும் ஓடறீங்களே.. தவறி எதாச்சிம் நடந்துட்டா?’ ‘இப்பத்தான் கட்டிக்கப்போறவ பயப்படறமாதிரியே பயப்படறீங்க விமலா! என்ன பண்றதுங்க.. அதான் என் பொழப்பு, பழகிப் போச்சுங்க! இனிமேல் கவனமா இருக்கேங்க!’ ‘என் செல்ல புஜ்ஜி! இப்பிடி பேசுனா நான் இனிச்சுக் கிடப்பேன்!’ ‘அப்படிங்களா? ஆனாலும் உங்க கூடவே இருக்குமே எதிர் வீட்டு பொண்ணு, அது தாங்க எந்த நேரமும் துருதுருன்னு சுறுசுறுப்பா இருக்கு! அது கேட்ட உடனே உங்க நெம்பரை படக்குன்னு குடுத்துச்சுங்க!

அதுக் கொரு கோவிலை நல்ல எடம் பார்த்து கட்டணும் நான் பேசாமா சுறுசுறுப்பா இருக்குற அந்த வனிதாவையே நீங்க லவ் பண்ணி கோயில்ல கொண்டி உக்கார வச்சிடுங்க’ அலைபேசியை முதல் நாள் போலவே அணைத்து விட்டு சுருண்டு கொண்டேன். எல்லாம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பது போல இருந்தது. ஜாக்கி என்கிற கார்த்தி மீது நாளுக்கு நாள் எனக்கு பிரியம் கூடிக் கொண்டே போனது. இருந்தும் ஒரு பயம் உள்ளூர இருந்து கொண்டே தான் இருந்தது! வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத உருண்டை ஒன்று மேலும் கீழும் உருண்டபடி தான் இருந்தது. எத்தனை நாள் தான் இந்த விளையாட்டை ஜாக்கியுடன் போனில் விளையாடிக் கொண்டே இருப்பது? ஜாக்கியும் என்னை யாரென்று தெரிந்து அதன் பின்பாக விமலா மீது கொட்டும் மழையை என் மீது பொழிய வேண்டாமா? கல்லூரி விடுப்பு நாளொன்றில் ஜாக்கியை சந்தித்தேயாக வேண்டும் என்று பிடித்தேன் பிடிவாதத்தை! ஜாக்கி ஆவாலாய் தியேட்டரிலா? என்றார். புஜ்ஜி! அதெல்லாம் அப்புறம்! என்று பெருந்துறை அருகிலிருக்கும் பெரிய மருத்துவமனை வாயிலில் நின்றிருக்கும் புங்கை மர நிழலில் காத்திருப்பதாக சொல்லி விட்டேன். கடைசியாக ஜாக்கியிடம் கேட்டது, என்ன கலர் ட்ரஸில் வருவதெனத்தான்! கார்த்தி சொன்னது போல நீலவர்ண சுடிதார் அணிந்து சொன்ன நேரத்திற்கும் முன்பாகவே புங்கை மர நிழலில் சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து என் நகங்களை கொறித்து துப்பிக் கொண்டிருந்தேன். எனக்கே எனக்கான ஜாக்கியை நான் விமலாவுக்கெல்லாம் விட்டுத்தர முடியாது! காலில் கையில் விழுந்தாவது... சேச்சே! அந்தளவுக்கு போகாதெனத்தான் நினைக்கிறேன்! ஜாக்கி தன் யமாஹாவை ஸ்டேண்டில் போட்டு விட்டு வந்து என்னருகில் அமர்ந்தார். புதிய ட்ரஸ் போலுள்ளது! அப்படியே கட்டிக்கலாம் போல! தின்னுடலாம் போல! கார்த்தி இந்த இடத்தில் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது முகத்திலேயே தெரிந்தது. ‘விமலாவுக்கு ஒடம்புக்கு முடியலீங்களா? அதான் உங்களை அனுப்பி வச்சாங்களா? அதை போன்லயே சொல்லியிருக்கலாமே! உங்களை எதுக்கு வெட்டியா இங்க அனுப்பி வச்சாங்க?’ என்றார். என் மனது தடக் தடக்கென அடித்து எகிறிக்குதித்து விழுந்து விடுமோ என்றே இருந்தது! பேசணும்! ஏதாவது! ஆமாம்! ‘விமலாவை பத்தி என்கிட்ட இனி பேசாதீங்க புஜ்ஜி!’ அவ்வளவு தான் நான் சொன்னது! கார்த்தி என்னை திடீரென பார்த்த பார்வையில் காதல் தெரிந்தது என்று மட்டும் உங்களுக்காக சொல்லி முடிக்கிறேன்!

அக்டோபர், 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com