ஓவியம்
ஓவியம்ஜீவா

ஐ லவ் யூ

தேர்வு நடைபெறும் இடத்திற்கு எப்போதும் ஒரு மணி நேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்துவிடுவது கண்ணனின் வழக்கம். பேருந்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்தால், சிலுசிலுவென்று வீசும் காலை நேரக் காற்றில் மீண்டும் ஒரு முறை, இரவு தயாரித்த தாள்களை ஒரு பார்வை பார்த்தபடி போவான்.

தேர்வு மையங்கள் பெரும்பாலும் ஏதாவது கல்லூரி அல்லது பள்ளிக்கூடங்களாக இருக்கும்.

இந்த முறை வண்டலூர் கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, தேர்வு மையமாகப் போடப்பட்டு இருந்தது.

தேனாம்பேட்டையில் இருந்து வண்டலூர் போக எப்படியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதால், காலை சிற்றுண்டிகூட சாப்பிடாமல் சீக்கிரமே கிளம்பி வந்திருந்தான். பேருந்தை விட்டு இறங்கி, ஒரு அரை கிலோமீட்டர் தூரம் கல்லூரி வளாகத்துக்குள் நடக்க வேண்டி இருந்தது.

8.30 மணிக்கெல்லாம் வந்து
சேர்ந்து விட்டான். அங்கங்கே ஓரிருவர் மரத்தடிகளில், சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்தபடி படித்துக்கொண்டிருந்தனர்.

எல்லோரும் அநேகமாக கண்ணனைப் போலவே வேலை செய்து கொண்டே படிப்பவர்கள். தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தான். ஒருவருமில்லை.

காலியாயிருந்த மரத்தடியில் அமர்ந்து, இரவெல்லாம் தயாரித்த தாள்களை புரட்ட ஆரம்பித்தான். அது கண்ணன் வகுத்துக்கொண்ட முறை.

புத்தகங்களில், முக்கியமானது என்று தோன்றும் வினா விடைகளை முதலில் ஒரு பேப்பரில் எழுதுவான். பின் அதை வாசிப்பான். கொஞ்சம் வாய்விட்டே வாசிப்பான். எழுதும்போதே ஓரளவுக்கு மனதில் பதிந்ததோடு, வாசிக்கும்போது கூட பதிந்ததையும் இணைத்து, எதையும் பார்க்காமல் இன்னொரு பேப்பரில் எழுதிப் பார்ப்பான். முக்கால்வாசி அது சரியான விடையோடு ஒத்துப்போகும். இப்படிச் சேரும் பேப்பர்களோடு மறுநாள் தேர்வு நடக்கும் இடத்திற்குப் போவான்.

பேருந்தில் ஏறியவுடன் படிக்க ஆரம்பிப்பவன், தேர்வு மையம் போய்ச் சேர்ந்த பின்னும் படிப்பான்.

இன்னொரு முக்கியமான விஷயம், சரியாக அரைமணி நேரம் முன்னதாக படிப்பதை நிறுத்தி விட்டு, சுற்றிலும் படித்துக்கொண்டிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்.

கடைசி நிமிடம் வரை படிப்பது என்பதை பாலிடெக்னிக் இறுதி ஆண்டு தேர்விலிருந்தே நிறுத்தி இருந்தான். தேவையில்லாத குழப்பத்தை அது உண்டு பண்ணுவதாக அவன் உணர்ந்ததே அதற்குக் காரணம். ஆனால், அவன் பார்த்தவரை ஏறக்குறைய எல்லோருமே கடைசி நிமிடம் வரை படித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருந்தனர்.

அவர்களையும் குறை சொல்ல முடியாது. வேலையின் தன்மை, படிக்கக் கிடைக்கக்கூடிய நேரம் என்று ஒவ்வொருவரிடமும் காரணங்கள் பல இருக்கும், அவர்களின் இந்தக் கடைசி நேரம் வரையான படிப்புக்கு.

சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்ததில், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது சுந்தரைப் போல் இருந்தது. சுந்தரேதான். சுந்தரேசன். இதற்கு முன்னால் தேர்வு மையத்தில் பேசி அறிமுகமானவன். தலை நிமிராமல் படித்துக்கொண்டிருந்தான்.

அருகில் போய்ப் பேசலாமா என்று கண்ணன்
யோசித்துக்கொண்டிருக்கும்போதே, எதற்கோ தலை நிமிர்ந்தவன், கண்ணனைப் பார்த்துவிட்டு 'ஹலோ கண்ணன்'என்று கையசைத்தபடி அவன் இருக்கும் இடம் நோக்கி வந்தான்.

''என்ன பாஸ்...எப்படிப் படிச்சிருக்கீங்க..?''

''ஏதோ பரவால்ல சுந்தர்...''

''இப்படிச் சொல்லிட்டே நாலு பேப்பர் முடிச்சுட்டீங்க...என்னைப் பாருங்க...எவ்ளோ முட்டினாலும் இந்த மேத்ஸ் வரமாட்டிங்குது...''

'போன முறை எழுதினீங்களே என்னாச்சு..?''

''அதே 49&ல மறுபடி பெயில்...'' (பாஸுக்கு 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்)

''ஒரு மார்க் போடாம இருக்கானுங்களே...எப்படித்தான் இப்படி இருக்கானுங்களோ?''

''நாம ஒண்ணும் பண்ண முடியாது பாஸ்..பேப்பர் கரக்ஷன் ஆல் இந்தியாவில எங்க போவுதுன்னு யாருக்குத் தெரியும்.''

மூன்று முறை கணிதத்தில் 49 மதிப்பெண்களில் பெயிலாவது என்பது எவ்வளவு கொடுமை! இதோ நான்காவது முறை விடாமுயற்சியுடன் சுந்தர்.

நமக்கு ஏதாவது ஒரு பேப்பரில் இப்படி நடந்திருந்தால் இது போல் நான்காவது முறை மனம் தளராமல் வந்திருப்போமா? நினைக்கவே பயமாய் இருந்தது கண்ணனுக்கு.

'ஓகே...சுந்தர்...டைமாயிடிச்சி... ஆல் த பெஸ்ட்' என்று சுந்தரின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு, எக்ஸாம் ஹால் நோக்கி நடந்தான், கண்ணன்.

கேள்வித்தாளை வாங்கி மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்ததில், அந்த முறை எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் சுலபமாகவே இருந்தது கேள்விகள். அதாவது கண்ணன் படித்தவற்றிலிருந்து கணிசமாக வந்திருந்தது.

டிப்ளமோ முடித்தபின், டிகிரி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் பெரும்போலோர், ஏதாவது கல்லூரியில் பகுதி நேரப் படிப்பில் B.E சேருவது வழக்கம். A.M.I.E - ஐ தேர்ந்தெடுப்போர் சதவிகிதம் ரொம்பக் குறைவு. காரணம் A.M.I.E படிப்பது
சிரமம் என்றில்லை. தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எங்கிருந்து வரும் என்பதே தெரியாது. அந்தந்தப் பரீட்சைக்கு தொடர்புடைய கேள்விகளாகத்தான் இருக்கும்.

மார்க்கெட்டில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் இரண்டு மூன்று பேர் எழுதிய புத்தகங்கள் இருந்தன. ஏதாவது ஒன்றிலிருந்து கேள்விகள் வரலாம். மூன்றிலிருந்தும் எடுக்கப்பட்டு கதம்பமாக வரலாம். ஒரு சப்ஜெக்ட்டுக்கு மூன்று புத்தகங்களையும் ஒருவர் படிப்பதென்பது
சிரமம். சிரமமென்ன, முடியாத காரியம்.

ஓவியம்
ஓவியம்ஜீவா

இதைக் கருத்தில் வைத்து, கடந்த பத்து வருடத் தேர்வுகளில் வந்த கேள்விகளை தொகுத்து நூல்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் மார்க்கெட்டில் உலா வந்தன. நிறைய பேர், கண்ணன் உட்பட, அதை வாங்கிப் படிப்பதே வழக்கம். தடிதடியான புத்தகங்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை என்பது ஒன்று.

பெரும்பாலும் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னால் மட்டுமே படிக்கும் நிறைய பேருக்கு இந்தத் தொகுப்பு நூல்கள் பேருதவியாக இருந்தன.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தொகுப்பு நூல்களில் (பத்து வருடக் கேள்விகள்!) இல்லாத புதுக் கேள்விகள் ஒவ்வொரு முறையும் வருவதுதான். அதுமாதிரி கேள்விகள் நிறைய வரும் சமயத்தில், கேள்விகளை பார்த்தவுடனே தெரிந்து போகும், நிச்சயம் அடுத்த முறைதான் என்று.

அன்றைக்கு கண்ணன் கேள்வித்தாளை கையில் வாங்கிப் பார்த்தபொழுது, தொகுப்பு நூலில் இருந்து கணிசமான அளவில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

முந்தைய இரவு தயாரித்த தாள்களில் இருந்த விடைகள் கண் முன்னால் அப்படியே திரையில் ஓடுவதுபோல் ஓடின. மூன்று மணி நேரத் தேர்வை ஒன்றரை மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டு, ஹாலை விட்டு வெளியே வந்தான்.

மெயின் ரோட்டுக்கு வந்து, வயிற்றைக் கிள்ளிய பசிக்கு பஸ் நிறுத்தம் அருகே இருந்த சிறிய ஹோட்டலில், இருந்ததை ஆர்டர் செய்து
சாப்பிட்டான்.

அலுவலகத்தில் அன்றைக்கே போயாக வேண்டிய ரிப்போர்ட் ஒன்று ஞாபகம் வந்ததில், உடனே பேருந்து ஏறினான்.  கண்டக்டர் சீட்டைத் தாண்டிப் போக முடியாத அளவு கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தது.

பயணச்சீட்டு எடுத்துவிட்டு, தோளில் மாட்டியிருந்த பையில் இருந்து அன்றைய கேள்வித்தாளை எடுத்து, எவ்வளவு மதிப்பெண்கள் தேறும் என்று அந்த நெரிசலிலும் கணக்குப் போட்டுப் பார்த்தான்.

பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்று பின் கிளம்பி வேகமெடுத்தது.

அப்போது ஓடி வந்து பேருந்தின் கடைசிப்படியில் தொத்திக் கொண்ட ஒருவனை ''யோவ்...சாவுகிராக்கி...விழுந்து கிழுந்து தொலைக்கப் போறயா...மேல வா...'' என்று கத்திய கண்டக்டர் ''எங்க போற...மேல வா...'' என்றார் மறுபடியும்.

அவனுக்கு இதெல்லாம் பழக்கம் போலிருக்கிறது. முதல் படிக்கட்டில் கொஞ்சமாய் தன்னைத் திணித்துக் கொண்டவன் நூறு ருபாய் தாள் ஒன்றை நீட்டி 'சைதாப்பேட்' என்றான்.

''ஏறுறது ரன்னிங்கில...இதுல நூறு ரூபா நீட்டறே...சில்லறை குடுயா'' என்ற கண்டக்டரிடம், 'கியா?' என்றான் அவன்.

''இதுல பாஷை பிரச்சனை வேறயா...நம்மளுக்குனு வருதுங்க பாரு...'' என்று புலம்பிக்கொண்டே நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு, பயணச்சீட்டையும் மீதி சில்லரையும் கொடுத்தார் கண்டக்டர்.

கண்ணன் அவனையே பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஆட்கள் இறங்கியபோது, கொஞ்சம் முயன்றால் உள்ளே அவன் வந்திருக்க முடியும். ஆனால் அதிகபட்சம் இரண்டாவது படிக்கட்டுக்கு வருவதும் பின் கீழ்ப் படிக்கட்டுக்குப் போவதுமாகவே பயணப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.

சைதாப்பேட்டையை பேருந்து நெருங்கிக் கொண்டிருந்தது.

யாரென்றே தெரியாவிட்டாலும் சிலரை, ஏதோ ஒரு காரணத்துக்காக வெகுநாட்கள் கழித்தும் நாம் நினைவு கொள்கிறோம். அப்படி ஒரு செயலை அப்போது செய்தான், அவன்.

 பேருந்து நிறுத்தத்தில் அநேகமாக நிற்கப் போகும் சமயம், கண்டக்டரை அவரது வலது கை புஜத்தில் லேசாகத் தட்டி 'வரட்டா...?' என்று தமிழில்
சொல்லிவிட்டு, வண்டியில் இருந்து கீழே குதித்து மறைந்து போனான்.

''அட சாவுகிராக்கி...'' என்று கண்டக்டர் கத்தினாலும், வந்த சிரிப்பை  அவராலும் அடக்க முடியவில்லை.

''என்னா தெளிவா இருக்கானுங்க...'' என்று சொல்லியபடி, காதில் இருந்த பேனாவை எடுத்து டிக்கெட் எண்களை கையடக்கப் பேப்பரில் எழுதத் தொடங்கினார்.

அவனது சாமர்த்தியமான செய்கையை நினைத்தபடியே, தேனாம்பேட்டையில் இறங்கிய கண்ணன், வேகமாக நடந்து அலுவலக கட்டடத்துக்குள் நுழைந்து லிஃப்டை அழுத்தினான்.

திறந்த லிஃப்டில் இருந்து அவன் அலுவலக சகாக்கள் வெளியே வந்தனர். மணி பார்த்தான். ஒன்று பத்து. அலுவலக உணவு இடைவேளை.

காலியான லிஃப்டுக்குள் நுழைந்து நான்கை அழுத்தி, நான்காவது தளத்தில் வெளிவந்து, அலுவலகத்துக்குள் நுழையும்போது , ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். கொஞ்சம் தலை குனிந்தாற்போல் உட்கார்ந்திருந்தவள், ரெட்டை ஜடை போட்டிருந்தாள்.

இருக்கையில் போய் அமர்ந்ததும், ரெட்டை ஜடை முகத்தைப் பார்த்திருக்கலாமே என்றிருந்தது.

எழுந்து ரிஸப்ஷனைத் தாண்டி, காரிடாரில் இருந்த கூலரில் தண்ணீர் பிடித்துக் குடித்துவிட்டுத் திரும்பியவன் பக்கத்தில் அவள் நின்றிருந்தாள்.

''எக்ஸ்கியூஸ்மீ ...ரிஷப்ஷன்ல யாரும் காணுமே'' என்று கேட்டாள், கண்ணனிடம்.

''ஒன் டு டூ லன்ச் டைம்... ரெண்டு மணிக்குத்தான் வருவாங்க...என்ன விஷயமா பாக்கணூங்க...'' என்று கண்ணனின் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது என்னவோ, அவள் பேசும்போது இப்படியும் அப்படியும் அசைந்து கொண்டிருந்த, அந்த தடிமனான ரெட்டை ஜடைகளைத்தான்.

''இண்டர்வியூவுக்கு வரச் சொல்லி யிருந்தாங்க...''என்றவள் கைகளில் இருந்த பைலை அப்போதுதான் பார்த்தான் கண்ணன்.

''ஓ...ஐ..சி...ஜஸ்ட் வெய்ட் பார் ஹாப் அன் அவர்...'' என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு வந்தான்.

திடீரென்று ஏன் தான் ஆங்கிலத்தில் கதைத்தோம் என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்.

அன்றைக்குப் போக வேண்டிய ரிப்போர்ட்டை எடுத்து சரி பார்க்க ஆரம்பித்தான். (பெயர் என்னவாக இருக்கும்). திருத்த வேண்டிய பகுதிகளில், சிவப்பு மையால் திருத்தி, மஞ்சள் கலர் ஹைலைட்டரில் மார்க் செய்தான். (ரெட்டை ஜடை கனகாவா இருக்குமோ). ரிஷப்ஷன் பக்கம் பார்வையைச் செலுத்தினான். 'ட' வடிவ ரிஷப்ஷனில் அந்தப் பக்கம் இருந்தவள் தெரியவில்லை.

ரிப்போர்ட்டில் கவனம் போகாமல் அதை மூடி
வைத்தான்.

இரவெல்லாம் கண் விழித்துப் படித்ததில் கண்கள் செருகி தூங்கு என்றன.

அன்றைக்கு சந்தித்த மனிதர்கள் கண்ணெதிரே வந்து போனார்கள்.

மூன்று முறை தவறியும் முயற்சியை கைவிடாத சுந்தர், சமயோசிதமாக சூழலை சமாளித்த பஸ் பயணி, வாழ்வின் இன்னொரு பகுதியைத் தொடங்கும் நம்பிக்கையுடன் ரிசப்ஷனில் காத்திருக்கும் ரெட்டை ஜடை பெண்...

'ஐ லவ் யூ மை ஜாப்' என்று  உற்சாகமாக மேஜையில் இருந்த ரிப்போர்ட்டைக்  கையில் எடுத்தான், கண்ணன்.

மே, 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com