ஒரு குளுமையான நிழல்

ஒரு குளுமையான நிழல்

அந்தக் குடியிருப்புப் பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த தின்பண்டங்களான சாக்லேட், ரொட்டி, குர்க்குரே போன்றவற்றைக் கொண்டு வந்து டாமியின் வாய்க்கு எதிரே போட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒருவேளை டாமி அவற்றைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று பண்டங்களின் கவரைப் பிரித்து அதன் தலையை உலுக்கி வாய்க்குப் பக்கத்தில்  போட்டு விட்டுக் காத்திருந்தார்கள். தலையைத் திருப்பி பண்டத்தை முகர்ந்து பார்த்ததே தவிர எதையும் நாவால் வருடிக் கூடப் பார்க்கவில்லை டாமி. அதன் செம்பழுப்பு நிறமே மங்கிப் போயிருந்தது. கண்களில் பீழை கட்டி இருந்தது. அவற்றில் மினுக்கும் ஒளி திரை போட்டது போலிருந்தது.

காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வளர்ந்து படர்ந்த எலுமிச்சை மரம் கீழ்த் தெற்கு மூலையில் உள் பக்கமாக குளுமையான நிழல் பரப்பி இருந்தது. அந்த நிழலில் எந்தச் செடியும் வளராமல் மெத்தென்று இருந்த மண் படுகையில் படுத்த இடத்தை விட்டு நகராமலே இருந்தது டாமி. அதன் இருப்பு நாயினுடையதைப் போல இல்லாமல் ஏதோ ஒரு முடிவோடு காத்திருப்பது போல இருந்தது. 

மூன்று வயது வினித் முதல் பதினாறு வயது சுசி வரை பலரும் தங்கள் பெற்றோரிடம் டாமி குறித்து சோகம் கசிந்த குரலில் சொன்னதை யாரும் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. ''இங்க வந்து பாரேன்'' என்று அம்மாவின் நைட்டியைப் பிடித்து பலமுறை இழுத்தும் ‘‘இர்ரா இதோ அடுப்ப அணைச்சிட்டு வர்ரேன்'' ‘‘இரு சாப்பிட்டுட்டுப் போய்ப் பார்க்கலாம்'' ‘‘நீ சாப்ட்டாத்தான் நான் வந்து பார்ப்பேன்'' என்று வித விதமாகச் சொல்லிக் கழித்தார்களே தவிர யாரும் வந்து டாமியைப் பார்க்கவில்லை.

கரண்ட் கட்டாகும் மாலை நேரங்களில் காம்பவுண்ட் பெண்களின் சங்கமம் அவ்வப்போது வாசல் சரிவில் நடக்கும். அப்போதும் கூட டாமி குறித்துப் பேசிக் கொண்டார்களே தவிர யாரும் அருகில் சென்று பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பின்னர் அன்றைக்கும் லேசான நிலா வெளிச்சம் படரும் இரவு ஏழரை மணி சுமாருக்கு கரண்ட் கட் ஆகி இருந்தது. அது நகரத்தை ஒட்டிய கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையிலான குடியிருப்புப் பகுதி. கிராமத்து மின் இணைப்புப் பகிர்மானம் என்பதால் மின்தடை சர்வ இயல்பான ஒன்றாக இருந்தது. காங்கிரீட் சுவர்களின் வெப்பத்து அடைகாத்தலில் இருந்து விடுபட எட்டு வீட்டுப் பெண்களும், சிறுவர், சிறுமியரும் என பத்துப் பதினைந்து பேர் காம்புண்ட் வாசல் சரிவில் சுதந்திரமாகக் காலைக் கையை நீட்டி அமர்ந்திருந்தனர்.

வழக்கமாக மூன்று வீடு தள்ளி இருக்கும் டைலர் மகள் சாந்தினிக்கு இப்போது யாருடன் காதல், குண்டச்சி மீன்காரி தனக்கு நூறு ரூபாய்க்கு எத்தனை கவளை மீன் போட்டாள், என்னை நன்றாக ஏமாற்றி விட்டாள், நானெல்லாம் மீன் வாங்குனாலும் வாங்காட்டியும் ஒருவாக் காப்பித்தண்ணி வைச்சிக் கொடுத்திர்ரது. பாவம் தலைச் சுமையோட எவ்ளோ தூரம் சுத்தி வருது அந்தக்கா, என்ற விதமாக நீளும் பேச்சில் அன்று நேரடியாக பிள்ளைகளின் டாமி குறித்த வருத்தத்தை முதன்மைப் பேசு பொருளாக எடுத்துக் கொண்டனர்.

‘‘அட ஆமக்கா... நேத்துத் தான் பின்வாசல் வழியாக் கடைக்கிப் போகும் போது பாத்தேன். சரி போய்ட்டு வந்து கொளம்ப எறக்கி வைச்சிட்டுப் பாக்கலான்னு நெனைச்சேன் அப்பிடியே மறந்து போய்ட்டேன். ரொம்பவும் சொணங்கிப் போய்க் கெடந்தது. பக்கத்தில கெடக்கிற திம்பண்டங்கள்ல எல்லாம் ஈ எறும்பு மொய்ச்சிக் கெடந்தது. அதுக்கப்பறந்தான் நெனப்பு வந்தது இந்தக் கௌரியக்கா நாலஞ்சி நாளாவே வெளிய தெம்படலையேன்னு''

‘‘நாளைஞ்சி நாளாவா.. அதாச்சி பத்து நாள் இருக்கும். இன்னக்கித் திங்களோட திங்கள் எட்டு நாள். அதுக்கு முன்னே ரெண்டுநாள் பத்து நாளாச்சிப் போயி. அன்னிக்கி வீட்டுக்காரர் கேம்புக்குப் போகணுன்னு சீக்கிரமா நாலு மணிக்கேக் கௌம்புனாரு. வாசத் தெளிச்சிக் கோலம் போட்டுட்டு இருக்கும் போது கார் வந்து நின்னது. அந்தக்கா ஒரு கருப்புப் பேக்கைத் தூக்க மாட்டாம தூக்கிட்டு வண்டியில ஏறுனாங்க. டாமி ஹீ ஹீன்னு முனகிக்கிட்டே பின்னாடியே வர, உக்காந்தவங்க எறங்கி வந்து அம்மா சீக்கிரமாவே வந்துர்றன்டான்னு சொல்லித் தடவிக் கொடுத்துட்டு மறுபடியும் ஏறுனாங்க. அதுக்கப்புறம் திரும்பி வந்த மாதிரி தெரியலை''

‘‘இல்லையே ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா தானே டாமிய விட்டுட்டுப் போவும் அந்தக்கா... அப்பிடியே போம் போது கூட அம்சாட்ட சொல்லி பால் பிஸ்கட் வைக்கச் சொல்லிட்டுப் போவுமே. இல்லேன்னா உள்ள விட்டுட்டு போவும்.  அந்த ஆயா வந்து அதுக்கு ரொட்டி போட்டுட்டு ராத்திரில இங்கயே படுத்துக்குமே''.

‘‘ஆமாண்டி செல்வி அந்த ஆயாவும் வந்து போன மாரி தெர்ல. நாய் மட்டும் தனியா இருக்கு. என்னவோ நடக்குது. அடிக்கடி நெறைய ஆட்கள் பரபரப்பா வந்து போனப்பவே நெனைச்சேன்''.

‘‘எனக்கு அவ இங்க குடிவந்தப்பவே தெரியுண்டி. நீங்க அக்கா அக்கான்னு வழியும் போது எது சொன்னாலும் ஏறாது இப்போன்னு விட்டுட்டேன்''. சொன்னது மூன்றாவது மாடியில் இருக்கும் சொர்ணம். கௌரியக்காவுக்கு நிகரான தாட்டிகம். வயதிலும் அந்தக் காம்பவுண்டில் சொர்ணம் தான் மூத்தவள். பையன் கட்டாரில் இருக்கிறான். மற்ற ஏழு குடும்பங்களிலும் கிட்டத்தட்ட ஒத்த வயதினர்.

கௌரியக்கா இந்தக் காம்பவுண்டிற்குக் குடிவந்து சுமார் ஒன்றரை வருடங்கள் இருக்கும். வீட்டு உரிமையாளர் அவரை அழைத்து வந்து வீடு காட்டிய விதமும், குடிவந்த அன்று அவர் காட்டிய பணிவும் அங்கே குடியிருந்த சீனியர் குடியிருப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறை போலவே இருந்தது. யார் முதலில் சொன்னார்களோ அவளது பெயர் மற்ற வாசிகளின் பெயர் போல அம்சா என்றோ செல்வி என்றோ வெறும் பெயராக மட்டுமில்லாமல் கௌரியக்கா என்று அக்கா பொருத்தமாக ஒட்டிக் கொண்டது. அவளது அப்பா அம்மா வைத்த பெயரே கௌரியக்கா என்பது போல அது இருந்தது.

பெண்களின் சராசரிக்குச் சற்றுக் கூடுதலான உயரம். அதற்கேற்ற அகலம். திருத்தமான மலையாளச் சேச்சியினுடையதைப் போன்ற கண்கள். பளீரென்று இல்லாமல் மிதமான நிறம். ஆனால் செழுமையும், குளுமையும் எந்த நேரமும் உள்ளிருந்து கசிந்து கொண்டே இருக்கும்.

கௌரியக்கா அந்தக் காம்பவுண்டிற்குக் குடிவந்ததும் அந்தத் தெருவுக்கே ஏன் மூன்று நான்கு தெருக்கள் அடங்கிய வட்டாரத்திற்கே புதுக் கம்பீரம் ஏற்றியது போல  இருந்தது. செங்கழுநீரம்மன் கோயில் கிழக்குத் தெரு, மேற்குத் தெரு என்றிருந்த அந்தப் பகுதியின் அடையாளம் கௌரி குடிவந்த ஆறே மாதங்களில் கௌரியக்கா வீட்டுக்கு மேற்கே, வடக்கே என்று சொல்லும்படிக்கு ஆகி விட்டது.

எப்போதும் கௌரியக்கா வீட்டிற்குப் பொருட்கள், சமையலுக்குக் கீரை, கருப்புக் கவரில் இறைச்சி என்று ஏதாவது யாராவது ஆட்கள் கொண்டு வந்த வண்ணமாகவே இருப்பார்கள். பாத்திரம் விளக்க காலை அகட்டி அகட்டி வரும் ஆயா, கச்சிதமான உடலமைப்போடு நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி துணி துவைக்க, சமைப்பதற்கென்று தொந்தியும் தொப்பையுமாக சடை முடியோடு ஒருவன் எனப் பலரும் வந்து போய்க் கொண்டு இருப்பார்கள்.

இதுபோக சீர்காழியில் இருந்து ஒன்று விட்ட தங்கை, குடும்பத்தோடு வந்து வாரக் கணக்காக டேராப் போடுவார்கள். தங்கையின் ஏழு வயதுப் பையன் மற்ற காம்பவுண்ட் பிள்ளைகளோடு இங்கேயே பிறந்து வளர்ந்தவன் போல அவ்வளவு நெருக்கமாக இருப்பான். அப்புறம் சிதம்பரத்தில் ஓட்டல் வைத்திருக்கும் தம்பி என்றொருவன் வந்து மாதக்கணக்காக இருப்பான். வரும்போது காய்ந்து வத்தல் போல வருவான். நன்றாகச் செழிப்பாகத் தண்ணீர் குடித்த பயிர்போலத் திரும்புவான். ஓட்டலை சிதம்பரத்தில் வைத்துக் கொண்டு இங்கே என்ன செய்கிறான் என்று தெரியாது. அப்படி வந்து போகிறவர்கள் குறித்து கேள்வியை முகத்தில் வைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து கௌரியக்கா நம்ப முடியாத கதையை நம்பும்படியாகச் சொல்வது போல இருக்கும்.

கௌரியக்காவின் நடவடிக்கை எப்போதும் புதிர் போலவே இருக்கும். வாரத்தில் நான்கைந்து நாட்கள் சரசரக்கப் புடவை கட்டி ஏறுகிற கார் சாம்பல் நிறமாக இருக்கும். ஓரிரு நாட்களில் வந்து இறங்குவது கருப்பாக இருக்கும். ஆனால் ஏறும்போதும் இறங்கும் போதும் கௌரியக்கா மட்டும் அன்றலர்ந்த பூ போலவே பளிச்சென்று இருப்பாள். அந்தப் பாந்தத்தை வணங்கத் தோன்றும்.

என்ன செய்கிறாள்? என்ன வருமானம்? யாருக்கும் தெரியாது. யாருக்கும் இப்படியான சம்சயங்கள் எழும் என்பதால் பெரிய பெரிய ஆட்களிடம் சீட்டுப் பிடிப்பதாக ஒரு நேரத்தில் சொல்லுவாள். ஒரு நேரத்திற்குக் கணக்கில் காட்ட முடியாத பணம் வைத்திருக்கும் நபர்களிடம் அதைப் பெற்று தொழில் செய்வோருக்கு தரும் நம்பகமான தரகராக இருப்பதாகச் சொல்லிக் கொள்வாள். ஒவ்வொரு நாட்களுக்கு ஆட்கள் வந்து போன வண்ணம் இருப்பார்கள். பின் ஒரு வாரத்திற்கு ஒரு ஈ காக்கா வராமல் இருக்கும். அதுபோன்ற நாட்களில் தான் கௌரியக்கா அரிதாக வெளியே தலை காட்டி காம்பவுண்ட் வாசிகளிடம் ஒன்றிரண்டு பேச்சுகள் கொடுப்பாள்.

அவளுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன் எதைப் பற்றியும் யாருக்கும் ஒன்றும் தெரியாது. ஒருமுறை நான்கு இளம் பையன்களும், பெண்களும் வந்து நான்கைந்து நாட்களாகத் தங்கி இருந்தனர். வீட்டில் படுக்க இடம் பற்றாமல் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்குப் போய் விட்டு வந்து காம்பவுண்ட் வாசிகளின் வண்டிகளை ஒதுங்க வைத்தும் மாடிப்படிகளுக்கு அருகில் கிடந்த தட்டுமுட்டுச் சாமான்களை ஒதுக்கி வைத்தும் படுத்தெழுந்தும் கொண்டிருந்தனர்.  இப்போது டாமி படுத்துக் கிடக்கும் இடத்தில் கூடி அமர்ந்து குசு குசுவென்று சதா பேசிக் கொண்டே இருப்பார்கள். காம்பவுண்ட் குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்ததில் இருந்து புரிந்து கொண்டது கம்ப்யூட்டர் எஞ்சினியர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக தலா நான்கு லட்சம் பெற்றிருப்பதாகத் தெரிய வந்தது. விசா இதோ வந்து விடும் இதோ வந்து விடும் என்று தள்ளிப் போனதில் பொறுமை இழந்து கௌரியக்காவின் வீட்டோடு வந்து தங்கி இருக்கிறார்கள். அந்தப் பையன்களும் பெண்களும் கவலையோடும், அழுது வீங்கும்படியான முகத்தோடும் சதா போனில் பேசிக் கொண்டிருப்பது காம்பவுண்ட் வாசிகளுக்கு துக்க வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது.

மாதத்தின் முதல் வாரமாக இருந்ததால் வாடகை வசூலிக்க வந்த வீட்டு உரிமையாளர் குடியிருப்போரிடம் ‘‘யாராம் இந்தப் பசங்கள். எத்தினி நாளா இருக்கானுக. இங்க என்ன சத்திரமா கட்டி விட்டிருக்கோம்'' என்று கௌரியக்காவிடம் கேட்பது போன்ற தோரணையில் வாடகை வாசிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கௌரி வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்ததும் கௌரி ‘‘என்ன ஏழுமலை, வந்ததும் நேரா மேல போய்ட்ட. இங்க வந்து என்ன ஏது? எப்பிடி இருக்க கௌரியக்கான்னு கேட்டுட்டுப் போக மாட்டியா?'' என்று உறவுக்காரர்களிடம் பேசும் உரிமையோடு கேட்டார்.

இந்நேரம் வரை பொடு பொடுவென்று பொறுமிக் கொண்டிருந்தவர் வெடிக்கப் போகிறார் வேடிக்கை பார்க்கலாம் என்று காத்திருந்த குடியிருப்பு வாசிகளை மொத்தமாக ஏமாற்றி விட்டு ‘‘அதில்ல கௌரியக்கா. உங்க கிட்ட பேச ஆரம்பிச்சா ரொம்ப நேரம் ஆயிரும். அப்பறம் வந்த வேலைய மறந்து லேட்டாயிரும் வீட்டம்மாட்ட பாட்டு வாங்க வேண்டியிருக்கும். அதான் மொதல்ல மேல போய்ட்டு வந்திரலாமேன்னு போய்ட்டேன்'' உண்மையில் ஏழுமலை கௌரியை விட வயதில் மூத்தவர் தான். ஆனால் மரியாதை நிமித்தமாக அப்படி அழைப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நகரத்தில் இருக்கும் வீட்டில் இடம் தொடர்பாக எழுந்த பிரச்சனையை கௌரி தான் சிக்கல் இல்லாமல் முடித்து வைத்தாராம். அதனால் அவர் மீது மரியாதை கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பார். ஆனாலும் அவ்வப்போது கௌரியின் காது படாமல் அவள் இவள் என்று ஏக வசனத்தை உதிர்க்கவும் செய்வார்.

கரண்ட் வரும்போது முற்றாக இருட்டி விட்டது. அன்றைய மாநாட்டின் பேசு பொருள் முழுவதும் டாமி பற்றியும், கௌரியக்கா பற்றியுமே இருந்தது. கௌரி என்னவாகவும் இருக்கட்டும். இந்த வாயில்லா ஜீவனை இப்பிடி விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. பாவம் அதுக்கு இனி நாம பொறுப்பேத்துக்கணும் என்று மாநாடு ஏக மனதாகத் தீர்மானித்தது.

டாமியை ஒருவரும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்ட குற்ற உணர்வில் எப்போதாவது போடும் பின்வாசல் லைட்டைப் போட்டு காம்பவுண்ட் மாதரசிகள் அனைவரும் டாமியைச் சென்று பார்த்தனர். ‘‘என்னடா டாமி உங்க அம்மாவக் காணோமா? நாங்க இருக்கோம்டா. பாலு, ரொட்டி, மீன் சோறு, கறிச்சோறு போட்றோம். சாப்பிட்டு பிள்ளைங்களோட சந்தோசமா விளையாடிட்டு இருக்கணும்'' என்று டாமியின் தலையை ஆறுதலாகக் கோதி விட்டனர். ஒருவர் மாற்றி ஒருவர் டாமியின் காதை நீவி விடுவது, காலைப் பிடிப்பது முதுகைத் தட்டிக் கொடுப்பது என கௌரியக்காவின் அன்பைக் கொட்டிக் கொண்டிருந்தனர். பிள்ளைகளுக்கு டாமியை நோக்கி அம்மாக்களின் கவனத்தைத் திருப்பி விட்ட குதூகலம்.

அடுத்த நாள் காலையிலேயே டாமி தனக்குத் தானே சிறைக் கொண்டிருந்த எலுமிச்சை மர நிழலை விட்டு எழுந்து நடமாடத் தொடங்கியது. அன்றைக்கு கேனில் பால் வாங்கிய காம்பவுண்ட் வாசிகள் பலரும் டாமிக்காகக் கால் லிட்டர் பால் சேர்த்தே வாங்கினார்கள்.

அன்று மாலை வீட்டு உரிமையாளர் மென் பச்சைக் காக்கி உடுப்பணிந்த ஒருவருடன் வந்திறங்கினார். தன்னுடன் வந்த உதவியாளரை அனுப்பி குடியிருப்பாளர்கள் அனைவரையும் முன் வெளிக்கு வரச் செய்தார். ‘‘இதோ பாருங்க டிஎஸ்பி வந்திருக்காரு'' அந்த நெடிதுயர்ந்த சீருடைக்காரர் கையுயர்த்தி ஏதோ சொல்ல வர அவரைக் கையமர்த்தி ‘‘இவங்க எல்லார்ட்டயும் முன்னாடியே கேட்டுப் பார்த்திட்டேன் சார். கௌரியோட போன் நம்பர் யார்ட்டயும் இல்லேன்னுட்டாங்க. ஒருத்தருக்கும் அவங்களப் பத்திய தகவல் தெரியலைன்னு சொல்றாங்க.

இருந்தாலும் அரசாங்க அதிகாரி உங்க முன்னாடி ஒரு முறை எச்சரிக்க பண்ணனுன்னு தான் கூட்டிட்டு வந்தேன். கௌரி பத்திய தகவல் தெரிஞ்சாலோ இல்லே வீட்டுக்கு வந்தாலோ வந்து பொருட்கள எடுத்துட்டுப் போக முயற்சி பண்ணாலோ உடனடியா எனக்குப் போன் பண்ணிச் சொல்லணும். அந்தக் கைகாரி ஏகப்பட்ட பண மோசடி பண்ணி இருக்கான்னு ஒவ்வொரு நாளும் புதுசுபுதுசா தோண்டத் தோண்ட வந்துட்டே இருக்கு. உங்களக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். கௌரியப் பத்தி என்ன விவரம் தெரிஞ்சாலும் எனக்கு உடனே போன் பண்ணிச் சொல்லுங்க. போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இனியும் வேடிக்கை பாத்துட்டு இருக்காது. சம்பந்தப்பட்ட எடத்தில எல்லாம் தேடப் போறாங்க. தேவைப்பட்டா அந்த நாயையும். எங்க அதக் காணோம்?''

டாமி எலுமிச்சை மர நிழல்படும் மல்லிகைப் புதருக்குள் திட்டமிட்டே பதுங்குவது போலப் பதுங்கி இருந்தது. எல்லோரும் சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்டனர்.

‘‘சொன்னது ஞாபகம் இருக்கட்டும் நான் வர்ரேன். வாங்க சார் போகலாம்'' என்றபோது சீருடைக்காரர் தனது புலனாய்வுக் கண்களால் அனைவரையும் ஊடுருவிப் பார்த்து சுற்றுப் புறத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். காம்பவுண்ட் வாசிகள் பலருக்கும் அவர் சீருடை இல்லாமல் கௌரி வீட்டிற்கு வந்து போனதாக மங்கலான நினைவு. யாரும் எதுவும் பேசவில்லை.

இது நடந்த ஓரிரு நாட்களில் டாமி இயல்புக்குத் திரும்பி விட்டது. முன்னைப் போல பிள்ளைகளுடன் துள்ளிக் குதித்து விளையாடவும் பந்து விளையாட்டில் குறுக்கு மறுக்கே ஓடவும் ஆரம்பித்து விட்டது. அதற்கென்று வைக்கப்பட்ட சில்வர் பேசினில் போட்ட பால் சோற்றினை உவந்து சாப்பிட்டுக் கொண்டது. தனது தூங்கும் இடத்தை மாடிப்படிக்குக் கீழ் மாற்றிக் கொண்டது.

அடுத்த சில நாட்களில் கூர்க்கா வந்து போகும் முதல் கோழி கூவும் நேரத்தில் தெருவின் செங்கழுநீரம்மன் கோவில் முன்புள்ள வெளியில் கார் ஒன்று வந்து நின்றது. கார் ஓசை படாமல் நின்றாலும் தெரு நாய்கள் விழித்துக் கொண்டன. சில அடிக்குரல் எடுத்துக் குரைக்கவும், சில ஹீ... ஹீங் என்று முனகவும் செய்தன. காம்பவுண்டிற்குப் பின் வாசல் புறம் நான்கு வீடுகள் மட்டுமே உண்டு. அவற்றில் உள்ள அனைவரும் வயசாளிகள்.

யாரது கௌரியக்கா மாதிரி தெரியுது என்று ஏதோ ஒரு வயசாளியின் நடுங்கும் குரல் கேட்டது. குரலை சட்டை செய்யாமல் பின்புறக் கேட்டை நெருங்கும் முன்னரே தகரக் கதவை டாமி தனது கால் நகங்களால் பிறாண்டிக் கொண்டிருந்தது. அடிக்கடி திறக்கப்படாமல் துருவேறிய கொண்டியின் கீச்

கீச்சென்ற ஈனக் கூவலோடு நீக்கியதும் துடித்தேறிய டாமி மாருக்கும் கழுத்துக்கும் இடையில் சரிந்து முன் கால்களால் தோளைப் பற்றிக் கொண்டது.

‘‘அம்மா உன்ன விட்டு எங்கேயும் போயிற மாட்டேன்டா'' என்றபடி விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தது எப்போதும் போலான அந்த விடைப்பான நடை. தெரு நாய்கள் வாலை சடசடவென்று ஆட்டி ஹீங்.... ஹீங் என்று குரல் எழுப்பியபடி கார் வரை

சென்றன.  கார்க் கதவு அறைந்து சாத்தப்பட்டதும் கார் எஞ்சின் உயிர்ப் பிராணி போல நயமாகச் சிணுங்கி நகர்ந்தது.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com