ஓவியம்
ஓவியம்ஜீவா

கடல் மூச்சு

"இந்தச் சனியன சித்தநேரம் வாயக்கட்டிப்போடு. கால்காலுனு கத்திட்டே இருக்கு'' - மகாலிங்கம் தனது கைக்குள் அடக்கி வைத்திருந்த செல்போனை மனைவியிடம் நீட்டினார்.

 தொலைக்காட்சிப் பெட்டியில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சொர்ணம், கணவரது குறுக்கீட்டால் எரிச்சலுற்றார். ‘ஒர் நுமுசம் பொறுக்க மாட்டிகளா ...சும்மா நையினையினுட்டு'' முடியும் தறுவாயிலிருந்த காட்சியில் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாது தன்னையுமே முழுமையாக ஒப்படைத்திருந்தார்.

 இதற்குமேலும் கட்டாயப்படுத்தினால் கடுப்பாகிவிடுவாள், ‘ராத்திரிலதே எட்டுமணிக்கே ஒறங்கணும்னு கப்சிப்புனு கதவச் சாத்தீர்ரீக. பகல்லகூட பாக்கவிடாட்டி இது எதுக்கு? மொகம் பாத்து தலைசீவவா வச்சிருக்கீக . .!'' என்று பெட்டியை உடைத்துப் போடுகிறமாதரி கூவுவாள்.

ஆனாலும் போன் மறுபடி மறுபடி அழைத்துக்கொண்டே இருந்தது. அடங்க மாட்டேன் என்கிறது. ஐம்பது வயசாகி, பேரப்பிள்ளை பெத்தெடுத்து பெரிய குடும்பி எனப் பெயரெடுத்திருந்தாலும் இந்த கையகல போனில் ஒரு நடுக்கம் வந்துவிடுகிறது.

 கத்தினால் பச்சைப் பொத்தானை அமுக்கிப் பேசவும், நம்பர்போட்டு அதே பச்சையை அழுத்திக் கூப்பிடவும் மட்டுமே பழகி இருந்தார். இந்த சொர்ணம்கூட ‘சுச்சாப்' அது இதுஎன பலவும் தெரிந்து வைத்திருக்கிறாள்.

ஆனால் போனுக்குள் எத்தனை எண்கள் இருந்தாலும் இந்தநம்பர் இன்னார் என சொல்லிவிடும் கணிப்பு மட்டும் மகாலிங்கத்துக்கு வாய்த்திருந்தது. அந்தவகையில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கும் எண் புதியது அல்ல ராஸ்கல் சிவானந்தம் பயல்தான் கூப்பிடுகிறான்.

 உடன்பிறந்த தம்பி மகன்.

 மெட்ராசில் பெரியகம்பெனியில் வேலை பார்க்கிறான். பொண்டாட்டி புள்ளை என சொந்தமாக வீடெல்லாம் வாங்கி சம்சாரியாகி விட்டான். ஊரில் ஆடுமாடு வைத்து பாடு பார்த்த கதையெல்லாம் அவன் அப்பனோடும் தாத்தனோடும் மலையேறிப் போனது.

அய்யங்குளத்து தோட்டத்தில் கிணறுதோண்டி ஜெயிக்கமுடியாமல் வந்தவிலைக்கு சீதாபதி நாயக்கருக்கு எழுதிக்கொடுத்து வாங்கின பணத்திலேதான் சிவானந்தம், சிதம்பரம் காலேஜில் படிப்பை முடித்தான். வெளிநாடு போகவேணும் என்கிற ஆசையை அவனது ஆத்தா புவனேஸ்வரி புடுங்கி எறிந்தாள். படித்துக் கொண்டிருக்கும்போதே நிறைய கம்பெனியில் வேலை வருவதாக சொல்லிக் கொண்டிருந்தான். பெங்களூர், சென்னை மட்டுமல்லாது மாலத்தீவிலிருந்தும் அழைப்பு வந்ததாகச் சொன்னான். அதிகபட்சம் மெட்ராசைத் தாண்டக் கூடாது என்பது அவனது ஆத்தாளின் கட்டளை. அவனும் மீறவில்லை. சென்னைக்கே போனான் கொஞ்சநாள் கஷ்டப்பட்டாலும் கொழுகொம்பைப் பிடித்து மேலேறி வந்துவிட்டான். அவன் சேர்ந்த  கம்பெனியே ரெண்டொருதரம் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பியது. அதில். அவன் தாவமும் தீர்ந்தது. போய்வந்ததில் நாலுகாசு மிச்சப்படுத்தி ஊருக்கு வெளியே  வீடு ஒண்ணு சொந்தமாய் வாங்கிப் போட்டான். சின்னதாய் காரும் வச்சிருக்கான். ஆயிரமிருந்தாலும் ஆத்தான்னு கூப்புட, புள்ள பக்கத்தில இல்லியேன்ன ஏக்கம் புவனேஸ்வரிக்குத் தீரல.

 வருசம் ஒருதரம் சித்ராபௌர்ணமிக்கு குலசாமி கும்பிட தவறாமல் வந்திடுவான். சித்திரபுத்திர நாயனார் கும்பு. பொட்டிதூக்கறது மகாலிங்கமாக இருந்தாலும் ஆண்வாரிசு இல்லாததால சிவா பயலத்தான் தனக்குப் பின்ன நிக்கவச்சார். அவனும் பெரிய கம்யூட்டர் ஆபீசர்ங்கற ஜபர்தஸ்த்த எல்லாம் கழட்டிப்போட்டுட்டு சாமியார்ப் பயல் மாதிரி இருவத்தொருநாள் விரதம் இருந்து தாடியும் மீசையுமா கோயிலுக்கு வந்திருவான். மகாலிங்கம் களரியில் நிக்கிறப்போ அவனும் மேல்சட்டை இல்லாம, காவிவேட்டியோடதான் அவருக்கு தொணச்சாமியா பின்னுக்கு அலைவான்...

பிள்ளைகளும் சொர்ண அப்பத்தா, மகாலிங்கத் தாத்தா என்று பேர்சொல்லித்தான் கூப்பிட்டுப் பழகுவார்கள். மூப்பாய்ப் பிறந்த பொட்டைக்கு சொர்ண அப்பத்தா தலைசீவினால்தான் பிடிக்கும் வேறு யாரையும் தலையைத் தொடவிடாது. அந்தக் கழுதைகள் எதும் போனில் பேசக் காத்திருக்குதுகளோ என்னமோ ? திடுமென மகாலிங்கத்துக்கு பேரப்பிள்ளைப் பாசம் உதித்து விட்டது.

 என்னமோ மனசு ஒரேயடியாய் பேசவேணாம் என்றது.

 சுந்தரமகாலிங்கமும், மகாலிங்கமும் ரெட்டைப் பிறப்பு. அதுபோல ஒரேவீட்டில் கல்யாணமும் முடித்தார்கள் சொர்ணத்துக்கு புத்திர பாக்கியம் கொடுத்து வைக்கவில்லை. புவனேஸ்வரி தனது பிள்ளைகளில் ஒன்றை தத்துக்கொடுத்தாள். தத்துப்புத்திரன் நித்தியானந்தன் ஒருவருசம் கூட தங்கவில்லை. அடுத்த பிறந்தநாள் காணும் முன்னே கைலாயம் ஏகிவிட்டான். அன்றிலிருந்து சிறுபிள்ளைகளைத் தூக்கக்கூட அச்சப்பட்டாள் சொர்ணம். ஆனாலும் தெருவில் இருக்கும் பிள்ளைக்காடுகள் பூராவும் இவர்களது வீட்டில்தான் வந்து கும்மர்ச்சம் போடுவார்கள். இதில் அந்த ராஸ்கல் சிவானந்தம்தான் லீடர். எங்க அப்பாவீடு என கெம்பிரிக்கம் மாறாமல் கூச்சலிடுவான். வீட்டில் சமைத்து வைத்திருக்கும் பண்டங்களை கூசாமல் அடுக்களை நுழைந்து அள்ளி இறைப்பான். அந்தவகையில் சிவானந்தன் இன்னொரு கிருஷ்ண பரமாத்மாதான். அந்தக் கண்ணன் நண்பர்களுக்கு திருடித் தருவானென்றால் இவனோ நேரடியாய் கண்முன்னே எடுத்து வழங்குவான். 'பையப் பதறாம, சிந்தாமத்தேன் தின்னேன்டா' என்றுமட்டும் சொர்ணத்தின் குரல் எழும்பும். கூடவே பிள்ளைக்கு புரையேறிவிடும் என்ற கரிசனத்தில் கைச்செம்பில் தண்ணீரோடும் நிற்பாள். சின்னம்மா, பெரியம்மா, சித்தப்பு பெரியப்பு என்று யாரையும் பிரித்து அழைக்கிற வழக்கமில்லை. எல்லோருமே அப்பாதான், அம்மாதான்.; சுந்தரப்பா, மாலிங்கப்பா, சொர்ணம்மா, புவனாம்மா... அந்த வழக்கம்தான் இன்று, பேரப்பிள்ளைகளுக்கும்.

‘என்னா வேணும்?'' தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து  விடுபட்டு எழுந்துவந்த சொர்ணம் தனது நூல்ச் சேலையால் வியர்த்திருந்த முகத்தைத் துடைத்தபடி கணவரின் முன்னல் வந்து நின்றாள்.

 கையிலிருந்த செல்போனைப் பார்த்தார். அழுதழுது கண்ணுறங்கிய குழந்தைபோல கிறங்கிப் போய்க் கிடந்தது. ‘ஒண்ணுமில்ல !

 '' சொர்ணம் நம்பவில்லை. மகாலிங்கத்தின் அருகில்வந்து நின்றாள். ‘ஒண்ணுமில்லாததுக்கா ஒம்பத்துரண்டுதடவ தொயங் கட்டுனீக ? என்னாச்சு?'' அவரது கையிலிருந்த போனை வாங்கினாள். ‘யார் கூப்ட்டது ?'' போனை ஒளிரச் செய்து பார்த்தாள். அந்த எண்ணில் யாருடைய முகமும் அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்களை மேலும்கீழுமாய் ஏற்றி இறக்கி அறிய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

 அவளது அந்த அக்கறையும் கரிசனமும் மகாலிங்கத்தை பரவசப்படுத்தின. அவர் அடிக்கடி பாடுகிற ‘உன்கண்ணில் நீர்வழிந்தால்'' பாடலை கரகரத்த குரலில் பாடியபடி சொர்ணத்தின் முகத்தில் இடதுகன்னத்தின் கீழாக பச்சையோடிப் போயிருந்த பரு ஒன்றினை விரலால் வருடினார்.

 மகாலிங்கத்திடம் இது ஒரு தொல்லை. இந்தவயசிலும் ஆளரவம் பார்த்துக் கொஞ்சத் துவங்கிவிடுவார். வெக்கங்கெட்ட செம்மம் !

 ‘ச்சூ ... கைய எடுங்க''  கணவரது கையைத் தட்டிவிட்டு சற்றுத் தள்ளி நின்றுகொண்டாள். 

 ஒரு ஐந்தாறு வருசத்துக்கு முன்பே இந்தப்பருவை ஆசிட் வைத்து எடுத்துவிடலாமென கானாவிலக்கு பெரிய ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் அல்லியக்கா மகள் சொன்னாள். தலைமுடியால் இறுகக்கட்டிவிட்டால் முடியே அறுத்துவிடும் என, சின்னவயசில் யாரோ சொன்னதை நம்பி பலமுறை மெனக்கிட்டு செய்துபார்த்து சோர்ந்துபோனாள். அப்புறம் அதுவே அவளுக்கு அடையாளமாகவும் ஆகிப்போனது 'கன்னத்துல பருவு வச்ச பிள்ள'.

ஆசிட் என்றதும் சொர்ணம் பயந்துவிட்டாள். ‘ஒண்ணுஞ் செய்யாது சித்தி. பத்து செக்கண்டுல உதுந்துரும்.'' என செய்முறை விளக்கமெல்லாம் சொல்லிப்பார்த்தாள். அல்லியக்காமகள். ‘அது பரு இல்லமா, திருஷ்டிப் பொட்டு. ஒங்க சித்தியோட அழகுல யார்கண்ணும் படக்குடாதுனு பொறப்புலயே வந்த மச்சம். அதுபாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டுமே.'' என மகாலிங்கம் அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 ‘சிவாவா . .?'' எப்படியோ கண்டுகொண்டாள் சொர்ணம். கண்ணுக்குக் கண் பார்த்துக் கேட்டாள். மகாலிங்கம் பதில் சொல்லமுடியாமல் வெட்கப்பட்டார். புன்முறுவலில் ஆமெனும் பதிலை வாங்கிக் கொண்டவள், ‘இப்பிடியே பேசாமயே இருந்துடுவீகளா ? போனு வந்ததும் கள்ளப்பய கணக்கா ஒளியறீக ?'' என்றாள்.

 உண்மைதான். பேசாமல் இருந்திட முடியாது. ஏன், அந்த குட்டிப்பயல் & பேரன் & ஊருக்கு வந்தானானால் வீதியில் வேலைசெய்து கொண்டிருந்தாலும் ‘மாலிங் தாத்தா'' என விளித்து வேட்டியைப் பிடித்து இழுப்பானே ... மடியில் ஏறி உட்கார்ந்து கண்ணை நோண்டுவான். மூக்கினுள் தன்பிஞ்சு விரல் நுழைத்து கிள்ளிவைப்பான். மௌனமாய் இருக்கக் கண்டால் உதட்டைப்பிரித்து வாயினுள் விரலைவிட்டு ஆட்டி பேச்சச் செய்வான். எப்படிப் பேசாமலிருப்பது ? 'சும்மாதே இரேன்டா' என ஒருவார்த்தையாவது பேசித்தான் ஆகவேண்டும்.

‘கோவத்தக் காட்ட வேற எடங் கெடைக்கலியாக்கும்; எதுக்க நிக்கிற பிள்ளிகமேலதே எரிஞ்சு விழணுமா. என்ன ஒரு ஏலாத்தனம் !'' வழக்கம்போல் கன்னத்தில் குத்தினாள். வெட்கம் மேவியது மகாலிங்கத்துக்கு.

சொர்ணம் சொல்லுவதுபோல கோபமென்றில்லை. சின்ன மனத்தாங்கல். ஆழமாக யோசித்தால் இவள் சொன்னதுபோல இயலாமைதானோ?

 நடந்ததென்னவோ இதுதான்.

 டெய்லர் ஆனந்தன் மகாலிங்கத்தைப் போலவே கிணத்துத் தவளை. இங்கன இருக்கிற மதுரைக்கு சித்திரைத் திருவிழா பாக்கக்கூட போகாத ஆசாமி, அவெம் பொண்டாட்டி ரத்தினம் அதுக்கும் மேல! அசவீட்டுக்கு ஆண்டவனே வந்து நிண்டாலும் ஆகான்னு ஓடிப்போய் பாக்காத ஒரு செம்மம். இப்பிடியாப்பட்ட ஆள்களுக்கு மருமக்கமாரு பூராம் அசலூருல அமஞ்சு போச்சு.. ரெண்டாவது மகனுக்கு சென்னைல பொண்ணு. கலியாணங்காச்சியெல்லா இங்கதே. ஆனா, மறுவீடு அங்கதான போகணும். வேன் பிடிச்சிப் போனபோது மகாலிங்கத்துக்கும் ஒருஎடம் ஒதுக்கிட்டான். நல்லவேள சொர்ணத்தையும் வம்பு பண்ண,. அவ, வல்லிசா & மாட்டேன்னு ஒரேதா தலையக்குலுக்கி விட்டாள்.  

 மகாலிங்கத்துக்கு சென்னை என்றதும் ஒரு சின்ன நப்பாசை. முதலில் மெரினா பீச். ‘அத்தாம் பெரிய நீப்பரப்பு. அலைகள் அடித்துப்புரளும் கும்மரிச்சம். கரைமேல் ஓடிப்பிடித்து விளையாடும் வெள்ளலைகள். பேரப்பிள்ளைகளது பிஞ்சுவிரல் தீண்டல் போல கால்பாதங்களைத் தடவிக் கிச்சுகிச்சு மூட்டும் குறுமணல்களின் சீண்டல்கள். பெருத்த உடல்கொண்ட சீவாத்தியின் பெருமூச்சுப்போல கடலின் பேரோசை. ஆயிரக்கணக்கில் திரளும் சனங்களின் வெக்கை சிறிதுமில்லாமல் உடல்குளிரச் செய்யும் குளுமை. என அணுஅணுவாக ரசிக்கும் பீச்சின் ஞாபகம் ஒருபுறமிருந்தாலும். இந்த ராஸ்கலையும் அவனது குட்டிபயலையும் சத்தமில்லாமல் போய் திடீரென அவனது வீட்டில் குதித்து திகைக்க வைக்க வேண்டுமென ஒரு திட்டம் தீட்டி இருந்தார் மகாலிங்கம்.

நிச்சயமாக தன்னைக் கண்டதும் கிய்யோ மிய்யோ கத்துவார்கள். அதிலும் பேராண்டியின் சந்தோசம் வித்தியாசமாய் இருக்கும். கையில் என்ன இருக்கிறதோ, அது, விளையாட்டுப் பொருளா, விலையொசந்த சாமானா, சாப்பாடா, தண்ணியா எதுவாக இருந்தாலும் முகத்தைக் குறிபாத்துத்தான் வீசிக் களி கொள்ளுவான். பேத்தி சாது.

 அந்தத் தருணத்திற்காகவே தனது சென்னை வருகையை சிவாவுக்குத் தெரிவிக்கவில்லை. வீட்டிலும் சொல்லவேண்டாமெனச் சொல்லிவிட்டார். ‘போற எடத்தில என்னமாதிரி சூழ்நிலை அமையும்னு சொல்லமுடியாது. அதென்னா தெக்குத்தெருவும் வடக்குத்தெருவும் வச்ச ஊரா டக்குன்னு போய்ப்பாத்துட்டுவர, தோதுப்படி பாத்துக்கறேன். முன்னக்கூட்டியே சொல்லி போகமுடியாமப் போச்சின்னா பிள்ளைக ஏமாந்து போவாக'' என சாதுர்யமாக வார்த்தைகளைப் போட்டிருந்தார்.

 ஆனாலும் வண்டி சென்னைக்குள் நுழைந்ததுமே குறுகுறுப்பு எழும்பியது. முன்னக்கூட்டியே ஆனந்தனிடம் பேசியிருந்தார். ‘திரும்புகால்ல வரமுடியுமான்னு சொல்லமுடியாது ஆனந்தா, பேரப்பிள்ளைகளப் பாத்துவரலாம்ணு இருக்கேன் !''

 ‘ஆமா, இம்புட்டுத்தொலவு வந்திட்டு புள்ளயப் பாக்காட்டி நல்லாருக்குமா ? முடிஞ்சா நானும் வாரனப்பா'' என்ற ஆனந்தனோடு ரத்தினமும் வர விருப்பம் தெரிவித்தாள். வந்தால் தனது பிள்ளைகளையும் சிவானந்தனோடு பழக்கிவிட்டு ஒரு ஊர்க்காரர்கள் என்கிற பந்தத்தை அவர்களுக்குள் ஏற்படுத்திவிடலாம் என்று இருவரும் நினைத்திருந்தார்கள்.

 கிண்டிக்குப் பக்கத்தில் வீடு என ஆனந்தன் சொல்லியிருந்தான். வேன் அங்கேதான் போய் இறக்கிவிட்டது. அங்கிருந்து சிவாவின் வீட்டுக்கு ஒரு அடையாளம் வைத்திருந்தார் மகாலிங்கம். ஆனால் குளித்து முடித்ததும் அனைவரையும் அள்ளிக்கொண்டு எங்கெங்கோ சுற்றி, ஏதோ ஒரு பெரிய ஓட்டலில் இறக்கிவிட்டனர். மறுவீடு எதிர்வீடெல்லாம் சொந்த வீட்டில் செய்யமாட்டார்களாம். எல்லாமே ஓட்டல்தானாம். உள்ளே நுழைந்ததும் கதவை திறந்துவிடக்கூட ஒரு ஆள் போட்டிருந்தார்கள். தட்டு எடுத்துக்குடுக்க, தண்ணிமோந்து குடுக்க, சாப்பாடு எடுத்துவைக்க, வெஞ்சனம் எடுத்துப்போட ... நல்லவேளை, மடியில் உக்காரவைத்து ஊட்டிவிடவும் , கைகழுவி வாய் துடைத்துவிடவும்தான் ஆள்போடவில்லை. வேலை செய்த எல்லோரும் கலெக்டர் ஆபீசில் நிற்கும் டாவாளிபோல ஒரேமாதரி உடுப்பு போட்டிருந்தார்கள்.

அங்கே முடித்து, இன்னொரு & மடம்போல இருந்த & பெரிய ஓட்டலுக்கு கூட்டிவந்தார்கள். ரிசப்சனாம். பொண்ணும் மாப்பிள்ளையும் பூசெண்டுகொடுத்து நிற்கவைத்து பாட்டுக்கச்சேரி நடந்தது. பாடிக்கொண்டே ஆடவும் செய்தார்கள்.

 மதியச்சாப்பாடு முடிந்ததும் சாயங்காலம் பீச்சுக்குப் போய்விட்டு அங்கிருந்தபடி சிவாப்பயல் வீட்டுக்குப் போகலாமெனப் போட்டிருந்த மகாலிங்கத்தின் திட்டம் முற்றிலுமாய் குலைந்து போனது. தவிர, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இப்போது தான் எங்கே இருக்கிறோம் தான் போகவேண்டிய திசை எது எனவும் புரியவில்லை.

 ‘மெட்ராஸ்குள்ள நீங்களா தனியா போகமுடியாது. அதும் இந்த சாயங்கால நேரத்தில போக்குவரத்து இடஞ்சல் கூடுதலா இருக்கும். எந்த நேரம் போவீங்கன்னும் சொல்லமுடியாது. பஸ் ரூட்டும் அடிக்கடி மாத்துவாங்க. உள்ளூர்க்காரங்களே திணறிப்போகணும்.'' என்ற ஆனந்தனின் சம்பந்தி ஒரு யோசனை சொன்னார், ‘பேசாம அவங்கள வந்து அழச்சிட்டுப் போகச் சொல்லுங்க அதான் ஸேஃப்ட்டி''

 ‘இப்பிடி பொழுது விழுந்த நேரத்தில போகாட்டி என்னாப்பா? ராத்திரிச் சாப்பாட்ட முடிச்சு ரெஸ்ட்டு எடுப்பா, விடிய எந்திரிச்சு நிதானமாக்கூடப் போகலாம்'' என்றான் ஆனந்தன்.

 மகாலிங்கத்தால் அதனை ஏற்க முடியவில்லை. என்னா ஊர் இது. நொழஞ்சதிலிருந்து ஒரே இரைச்சல். காதுக்குள் ஊதுகுச்சிய வச்சி ஊதிக்கிட்டிருக்க மாதரி. நிம்மதியா கடற்கரைக்குப் போய் கொஞ்சநேரம் கால நனச்சி, காத்து வாங்கிட்டு, அப்பிடியே பேரனோட ரெண்டுவார்த்தை பேசினாத்தான் நல்லா இருக்கும் எனத் தோன்றியது.

 யோசிக்காமல் சிவாவுக்கு போன் போட்டார். நேரங்கழித்துத்தான் பதில் வந்தது.

 ‘ஹலோ மாமாவா?'' மருமகள் பேசியதில் கொஞ்சம் திணறிப்போனார். நம்பர மாத்திப் போட்டுட்டோமோ. அப்பிடியும் அந்தப்பிள்ள நம்பர் நம்மகிட்ட இல்லியே ! என யோசித்தார். ‘ஹலோ ஹலோ, மாகாலிங்கம் மாமாதான ?'' என மறுபடியும் மருமகளின் அழைப்பு, ‘க்கும்'' என செருமியவர், ‘ஆமாம்மா ஆமா, மாமாதே ! எப்பிடிம்மா, நல்லாருக்கிகளா ?''

 ‘ம் ! சூப்பரா இருக்கம் மாமா'' என்ற பரஸ்பர விசாரிப்பின் பிறகு, தாங்கள் ஏதோ ஒரு பங்சனுக்கு வந்திருப்பதாகவும். சிவா, பங்சன்காரரோடு பேசி கொண்டிருப்பதாகவும் பதில் சொன்ன மருமகளிடம் தானும் சென்னை வந்திருப்பதாக மகாலிங்கம் தெரிவித்தார், உடனே ‘ஜோக்கடிக்காதீங்க மாமா'' எனச் சிரித்த அடுத்தகணம் ,‘நிஜமாவா மாமா,'' என நிதானித்தவள், ''இப்ப எங்க இருக்கீங்க'' என பதட்டமானாள்.

மகாலிங்கத்தால் தான் இருக்குமிடத்தைப் பற்றி சட்டெனச் சொல்ல முடியவில்லை. ஆனந்தனைத் தேடினார். அதற்குள் சிவா லைனுக்கு வந்தான் இடையில் பேரன் 'ஹாய்'  சொன்னான்.

 ‘எப்பப்பா வந்த, இப்ப எங்க இருக்க?'' சிவாவின் பேச்சில் கடுமை தென்பட மகாலிங்கம் வாயடைத்துப் போனர். ஆனந்தனின் சம்பந்திதான் இருக்குமிடத்தை விவரித்தார். அவரிடம் சிவா, தான் வந்திருக்கும் இடத்தையும் இனி தனது பங்சன் முடிந்து வந்து அவரை பிக்கப் செய்வதில் உள்ள நெருக்கடியையும் சம்பந்தியிடம் சொல்ல அவரோ, ‘நீங்க ஒங்க வேலையப் பாருங்க சார். நாளைக்கு அப்பாவ நானே அனுப்பிச்சு வக்கிறேன். நீங்க சிரமப்பட வேண்டாம்'' என்றார். ‘சென்னைக்கு வந்தா முன்கூட்டியே தகவல் சொல்லீட்டு வாப்பா.'' என்றவன், ‘நாளைக்கு என்ன புரொகிராம். எப்ப வருவ'' எனக்கேட்டான். ‘தெரியல'' என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் மகாலிங்கம்.

 ‘எப்ப வந்தாலும் ஒருபோன் பண்ணிட்டு வா'' என்றான். அவ்வளவுதான். மகாலிங்கத்துக்கு சொரேலெனெ சூட்டுக்கம்பியால் சூடு இழுத்தாற்போல் வலித்தது. இந்த மயிராண்டியப் பாக்க நாலுநாளைக்கு மிந்தியே தாக்கல் சொல்லிட்டுப் போகணுமாம். போடா  ...! ஏதோ ஒரு வேகாளம் மனசுக்குள் வேதாளமாய்ப் புகுந்து கொள்ள, இறுகிப்போனார். மறுநாள் புறப்பட்டவேனில் உடம்பு சரியில்லை ஊருக்குப் போகணும் எனச் சொல்லி சென்னையை விட்டுக் கிளம்பி ஊருக்குவந்து விட்டார்.

 நேற்றிலிருந்து ரெண்டுநாளாய் போன் ஒலித்தவண்ணம் இருக்கிறது.

அவன் பிறந்தது வளர்ந்தது, படித்தது இங்கேயே கிடையாய்க் கிடந்து சொந்த ஆத்தாளையும் அப்பனையும் விட்டுவிட்டு தன்னோடு கைப்பிடிச்சு ஊரெல்லாம் சுத்தியடிச்சு அப்பா அப்பான்னு அலஞ்சு திரிஞ்சது. இப்பயும் ஊருக்குள் நொழஞ்சதும் பேரப்பிள்ளைகள் 'மாலிங்தாத்தா வீட்டுல போ' எனதள்ளிமுள்ளி ஓடிவருவது. என ஏதேதோ படம் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘ஒரெட்டு ஓடிப்போய்ப் பாத்துட்டு வந்திருந்தா இத்தன அலக்கலிப்பு வேணாம்ல' என சொர்ணம் தொடர்ந்து போதித்தவண்ணமிருந்தாள். ‘போன் பண்ணிட்டு வா ந்னு சொல்லிட்டானே !''

 ‘சுண்டுவெரலப் பிடிச்சு நடந்த நாயி''

 ‘இவெம் பெரிய ஆபீசருல்ல . பாக்கணும் பேசணும்னா முன்னக்கூட்டியே போன் பண்ணனுமாம். இனியொரு வார்த்த அவென்ட்ட பேச ஆகுமா ...?''

 ‘இத அமத்தித் தூக்கி பரண்மேல போடு. எப்பிடிப் பேசறான்னு பாப்பம்'' சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண்ணைமூடினார் மகாலிங்கம்.

 ‘யம்மா, சொர்ணம், என்னாடி இது ! ஒம்பேரெ எதோ தாத்தாட்டப் பேசணும்னு மல்லுகட்டிட்டு நிக்கிறான். இங்கபாரு'' என்றபடி எதிர்த்த வீட்டிலிருந்து புவனேஸ்வரி வீடியோகால் ஒளிர்ந்த செல்போனுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

 சாய்வு நாற்காலி நிமிரும் ஓசை கேட்டது.

ஜனவரி, 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com