கதை சொல்லியின் கதை
பி.ஆர்.ராஜன்

கதை சொல்லியின் கதை

சொர்ணம் அமைதியாக மிக அமைதியாக சாப்பாட்டுத் தட்டை எடுத்து தரையில் வைத்தாள். அவளது உச்சந்தலையில் இருந்த குங்குமம் வியர்வையில் லேசாக வழிந்து நெற்றிப் பொட்டை பாதி அழித்திருந்தது. தான் போட்டிருந்த நைட்டியின் கையால் வியர்வையை துடைத்துக்கொண்டாள்.

முனியப்பன் என்கிற வெங்கடேஷ் பாத்ரூமுக்குள் கைகால் கழுவுவது வீட்டுக்குள்ளே மட்டுமின்றி, பக்கத்து வீடுகளுக்கும் தெளிவாகக் கேட்டது. ஊருக்குப் போயிருந்த வெங்கடேஷ் இன்று வந்துவிட்டான் என்று அந்த காம்பவுண்டில் இருப்பவர்களுக்குத் தனியே போய் சொர்ணம் சொல்லவேண்டியதில்லை. அந்த காம்பவுண்டில் பத்து வீடுகள் சின்ன சின்னதாக இருந்தன. ஒரு சின்ன அறை, இன்னொரு ரொம்ப சின்ன சமையலறை, அதைவிட மிகச் சிறிய பாத்ரூம் ஒன்று, அவ்வளவுதான் வீடு. அதற்கே இரண்டாயிரம் ரூபாய் வாடகை வாங்கினார்கள். வெங்கடேஷ் ஒவ்வொரு தடவை வாடகை தரும்போதும், நம்ம ஊர்ல இத்துனிக்கூண்டு வீட்டுக்கு இம்புட்டு வாடகைன்னா எவம் நம்புதான் என்று சொல்லிக்கொண்டேதான் தருவான். ஆனா இந்த வீடும் இல்லன்னா நம்ம கதி என்று சொர்ணம் பதிலுக்குக் கேட்பாள்.

வீட்டை விட்டுவிட்டுத் தனியே ஊருக்குப் போவதெல்லாம் வெங்கடேஷுக்கு சுத்தமாகப் பிடிக்காது. எட்டாம் வகுப்பு படிக்கும் மகனையும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகளையும் இழுத்துக்கொண்டு சொர்ணத்தையும் கூட்டிக்கொண்டு ஒரு தடவை பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் போய்விட்டு வந்தால்கூட ஐயாயிரம் செலவாகிவிடும் என்பதால், ஊருக்கே போகமாட்டான். எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் போனில் பேசுவதோடு சரி. எக்கா, வரணும்தான் மனசு கெடந்து அடிக்கி, எங்கங்கிய என்பதோடு இன்னும் நாலு வார்த்தையை நல்லது கெட்டதுக்கு ஏற்ற மாதிரி சொல்வான். அவன் பேசுவது

சொர்ணத்துக்கு ஆச்சரியமாக இருக்கும். அவளுக்கு நல்ல காரியத்துக்குப் பேசுவதில் தயக்கமில்லை. ஆனால் பெரிய காரியம் என்றால் அவர்களிடம் எப்படி துக்கம் விசாரிப்பது என்பதில் குழப்பம் வந்துவிடும். ஒருதடவை எக்கா நல்லா இருக்கியளா என்று கூட கேட்டுவிட்டாள். வெங்கடேஷ் அதைச் சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டிருந்தான். கருத்த உடலுடன் அவன் பளீர் எனச் சிரிக்கும்போது சொர்ணத்துக்கு அப்படியே அவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றும். அதற்காகவே அவன் அடிக்கடி சிரிக்கவும் செய்வான்.

திடீரென்று சென்னைக்கு இரண்டு நாள் போகப் போவதாக வெங்கடேஷ் சொன்னபோது

சொர்ணத்தால் நம்பவே முடியவில்லை. அவன் இதுவரை சென்னைக்கே போனதில்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், சென்னையில் யாரும் இருப்பதாகவோ அவர்களுடன் பேசியதாகவோ கூட வெங்கடேஷ் கல்யாணம் ஆன இந்த பத்து வருசத்தில் தன்னிடம் சொன்னதாக சொர்ணத்துக்கு நினைவில்லை.

‘சென்னைக்கா?' என்று கேட்டவளின் வாயை தன் இரண்டு கையால் மூடி, ‘மூடுட்டி... ரெண்டு நாள் புருஷன் இல்லாம இருக்கமாட்டியா? கட்டிக்கிட்ட புதுசாட்டி?' என்றபடி அவளை அப்படியே சுவரோடு சேர்த்து தன் உடலால் அழுத்தினான். இந்த சமயத்தில் மட்டும் எப்படி இந்த ஒல்லியான உடலுக்குள் இருந்து இத்தனை வேகம் வந்துவிடுகிறது என்று அவள் எப்போதும் நினைத்துக்கொள்வாள். ‘விடுங்க. காலங்காத்தால..' என்றபடி அவனைத் தள்ளியபடி அடுப்படிக்குள் போனாள். ‘கொஞ்சம் பெரிய அடுப்பாங்கரையா இருந்துருக்கலாம்ட்டி?' என்றான் வெளியில் நின்றவாறே. சொர்ணம் சிரித்தவாறே அங்கிருந்து கத்தினாள், ‘தம்பி, அப்பா கூப்பிடுதாங்க பாருல.' வெங்கடேஷின் மகன் வெளியில் பக்கத்து வீட்டுக்காரப் பயலுடன் பேசிக்கொண்டிருந்தவன் அங்கிருந்தபடியே, ‘தோ, வாரம்மா' என்றான்.

இப்போது நடந்தது போல் இருக்கிறது எல்லாம். ஆனால் அவன் ஊருக்குப் போய் வந்து, ஜங்ஷனில் இருந்தபடியே நேரடியாக வேலைக்கும் போய்விட்டு, வீட்டுக்கு வந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கிறான். சொர்ணம் அமைதியாக சாப்பட்டுத் தட்டை எடுத்து தரையில் வைத்தாள். அவனுக்குப் பிடித்த சாம்பார் வைத்து, அப்பளம் பொரித்திருந்தாள். துண்டால் துடைத்துக்கொண்டபடியே கைலியில் வெளியே வந்தவன், ‘பிள்ளய எங்க காணம்?' என்றபடியே

சாப்பிட உட்கார்ந்தான். சொர்ணம் வீட்டு மாடத்தில் இருந்த திருநீற்று பேழையில் இருந்து திருநீறை எடுத்து அவனுக்கு வைத்தாள். அவன் மூக்கிலும் திறந்திருந்த கரிய மார்பிலும் கொஞ்சம் விபூதி சிந்தியது. தன் கையில் இருந்த மீதியை தன் வாயில் போட்டுக்கொண்டு, அவன் முன்னே பரிமாற உட்கார்ந்தபடி சொன்னாள், ‘பக்கத்து வீட்ல எல்லாம் சேந்து டிவி பாக்குதுவொ.' சொர்ணம் சோற்றையும் சாம்பாரையும் பரிமாற அதைப் பிசைந்தபடியே கேட்டான், ‘நைட் அங்கயே படுத்துக்கும்லா?'

சொர்ணம் அவனைப் பார்க்காமலேயே சொன்னாள், ‘ரெண்டு நாள் கழிச்சி ஆள பாத்ததும்தான் தேடுது என்னா?'

வெங்கடேஷ் சிரித்தபடி சோற்றை உண்டபடியே

சொன்னான், ‘ஊராட்டி அது? மனுஷன் இருப்பானா அங்க? ரெண்டு நாள்ல செத்து சுண்ணாம்பாயிட்டேம்ட்டி. என்னா வெயிலு அடிக்குங்க? கோமக்காவுக்காக போனேன்னு வெய்யி!'

சொர்ணம் எதுவும் அவளாகக் கேட்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தாள். இரண்டு நாளாக போன் செய்யும்போதெல்லாம் யாரோ ஒரு கோமக்காவைப் பற்றியே வெங்கடேஷ் சொல்லிக்கொண்டிருந்ததில் சொர்ணம் கொஞ்சம் எரிச்சலாகித்தான் போனாள். ‘பிள்ளயள பத்தி கூட கேக்கலியே‘ என்ற ஏக்கம் இந்த நிமிடம் வரை அவளுக்குத் தீரவில்லை. இன்று காலையில் ஜங்க்ஷனில் இறங்கி அங்கிருந்தபடியே வேலைக்குப் போகப் போவதாகச் சொன்னபோதுகூட அந்த கோமக்காவின் புராணம்தான். ஒருத்தியைப் பார்க்காமலேயே, அவளைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே சொர்ணத்துக்கு கோமக்காவை சுத்தமாகப் பிடிக்காமல் போனது.

‘இன்னும் கொஞ்சம் சோறு வைக்கட்டா?'

‘நீ சோற வெச்சிட்டே இரி. அங்க கோமக்கா என்னல்லாம் ஆக்கிப் போட்டா தெரியுமாட்டி?'

‘ரெண்டு நாள் தோச சுட்டாலே சோத்தையும்

சாம்பாரையும் ஆக்கிப் போடாம கொல்லுதாங்கியோ. இப்ப அவுக வேற என்னலாமோ செஞ்சாகன்னா, சாம்பார் புளிக்கா?' என்றாள். வெங்கடேஷ் சிரித்துக்கொண்டே, ‘ஏட்டி, நீ வைக்க சாம்பாருதான் எப்பவும் இருக்கே.. கோமக்காவும் இந்த ஊர்க்காரிதாண்ட்டி. ஆனா இப்ப என்னலாம் செய்தாங்க? ஃப்ரைங்கா, ரைஸுங்கா, நம்ம ஊரு ஜானகிராம் ஹோட்டல்ல எப்பமோ சாப்டதெல்லாம் வீட்லய சமைக்காட்டி அவ' என்று சந்தோஷமாகச் சொன்னான். ‘நீ வெப்பியா? முடியாதுல்லா?'

‘வைக்க முடியாம என்னா? யூ ட்யூப்லா பாத்தா எவ வேணா செய்வா. நீங்க இப்ப தட்ட பாத்து

சாப்பிடுங்கொ' என்று சொல்லிவிட்டு, அடுப்படிக்குள் போய் மோரைக் கொண்டு வந்தாள்.

‘என்னட்டி, அதுக்குள்ள மோருக்கு போயிட்ட? இன்னும் கொஞ்சம் சாம்பார ஊத்துட்டி' என்றவன், இன்னொரு முறை சாம்பாரைப் போட்டு சோற்றைப் பிசைந்து அதில் அப்பளத்தைப் போட்டுப் பொடித்துத் தின்றுவிட்டு, மோரை ஊற்றித் இன்னும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிக்கொண்டு, அப்படியே ஓரமாகப் படுத்தான். ‘புள்ளையல வரச்

சொல்லிட்டி. ஒருவாட்டி பாத்து பேசிட்டு அனுப்பிட்டா அங்கனயே படுத்துக்கட்டும்' என்றான். சொர்ணம் ஒரு தட்டில் கொஞ்சம் சோற்றையும் சாம்பாரையும் ஊற்றி பிணைந்துகொண்டு சாப்பிட்டபடியே கத்தினாள், ‘தம்பீ! தங்கச்சிய கூட்டிட்டு வால.'

அடுத்த நொடி வெங்கடேஷின் மகனும் மகளும் காம்பவுண்ட்டில் ஓடி வரும் சத்தம் கேட்டது. மகள் ஓடி வந்து அப்படியே வெங்கடேஷின் மீது தாவ, மகன் வீட்டுக்குள் வந்து ஓரமாக நின்றுகொண்டான். வெங்கடேஷ் மகளை முத்தம் கொஞ்சியபடியே மகனைக் கேட்டான், ‘ஸ்கூலுக்கு போனியால?' மகன் சொன்னான், ‘அம்மாகிட்ட நீ போன்ல ஒழுங்காவே பேசலன்னு அவ சொல்லிட்டிருந்தாளே.'

சொர்ணம் சாப்பிட்டுவிட்டு தட்டைக் கொண்டு போய் கழுவப் போட்டுவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டு வர, இரண்டு பிள்ளைகளும் மீண்டும் பக்கத்து வீட்டுக்கு ஓடினார்கள். சொர்ணம்

சொன்னாள், ‘சாயங்காலமே ரெண்டும் சாப்ட்ருச்சுதுக.' வெங்கடேஷ், ‘சரி, கதவ அடச்சிட்டு, லைட்ட அமத்திட்டு வெரசா வாட்டி.'

சொர்ணம் கதவை அடைத்துவிட்டு, வெங்கடேஷுக்கு ஒரு தலைகாணியைக் கொடுத்துவிட்டு, தனக்கு ஒரு தலை-காணியைத் தரையில் போட்டுவிட்டு, நைட்டியை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு, வெறும் தரையில் அப்படியே படுத்தாள். அவள் படுக்கவும் வெங்கடேஷ் அவளை சட்டென தன் பக்கம் திருப்பி தன் காலை அவள் மேல் போட்டுத் தன் பக்கம் இழுத்து இறுக்கியபடியே கேட்டேன்,

‘சென்னைக்கு போயிட்டு வந்திருக்கேன், அத பத்தி ஒண்ணும் கேக்கமாட்

டெங்கியே?' என்றான். அவள் அவனுக்கு நெருக்க-மாகப் படுத்துக்கொண்டு

சொன்னாள், ‘எல்லாம் போன்ல

சொல்லிட்டியல்லா? இன்னும் என்ன இருக்க கேக்க?'

வெங்கடேஷ் சொன்னான், ‘போன்ல என்னட்டி சொன்னேன்?  எவ்ளோ இருக்கு சொல்ல! ஒன்னயும் ஒரு வாட்டி கூட்டிட்டு போறேண்ட்டி. ஏஸி ட்ரைன்ல கூட்டிட்டு போனாட்டி கோமக்கா. நம்ம கள்ளத்தி முடுக்கு தெருவுல தண்ணி பிடிக்க வார கோமக்காவா இப்படின்னு நெனச்சி நெனச்சி மாளலட்டி' என்றபடியே அவள் இடுப்பில் கைகளைப் பரவவிட்டான். ‘இப்ப உங்க மெட்ராஸ் கத

சொல்லப் போறியளா இல்ல இதுவா?' என்றபடியே அவன் கையைத் தட்டிவிட்டாள்.

‘கோமக்கா சென்னைல இருந்துக்கிட்டு எப்படித்தான் என் நம்பர கண்டுபிடிச்சாளோட்டி. முந்தா நாள் கூப்டுதா பாத்துக்கொ. நான் யாரோன்னுட்டு பேசினா கோமக்கா. கொரலு அப்படியே இருக்குட்டி. அவ கொரல மறக்க முடியுங்க? என்ன தெரியுதாலங்க. அடுத்த செகண்டு சொன்னேம்லா கோமக்காவான்னு? நேர்ல பாத்தப்போ நாலஞ்சுவாட்டி கேட்டுட்டா எப்படில அப்படி சட்டுன்னு கண்டுபிடிச்சன்னு. ஒங்கொரலாக்கா மறக்கும்னு சொன்னேன்னு வெய்யி.'

ஒரு பக்கம் சென்னையில் நடந்ததைச் சொல்லியவாறே நிலைகொள்ளாமல் சொர்ணம் உடலில் அலைந்தான் வெங்கடேஷ். சொர்ணத்துக்கு ஒரு பக்கம் அவனை நினைக்கப் பாவமாகவும், இன்னொரு பக்கம் அவனது கோமக்காவின் விவரணை எரிச்சலாகவும் இருந்தது. இரண்டு நாள் ஊரில் இல்லாத வெங்கடேஷை மனமும் உடலும் தேடியதை அவள் உணர்ந்தே இருந்தாள். அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

‘கோமக்கான்னு திடீர்னு போனியளே, அவுக வீட்டுக்காரவுக எல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாவளா?'

‘அவரும் நம்மூருதாண்ட்டி. ரொம்ப பிஸியா இருந்தாரு. வந்தாரு, சாப்ட்டாரு, நீங்க

பேசுங்கன்னு போயிட்டாரு. கோமக்கா சொன்னா, பெரிய பிஸினஸ் பண்ணுதாராம். கோடிக்கணக்குல சொத்தாம்ட்டி. வீட்ல நாலு காரு நிக்கி. ஆனா என்னத்த சொல்ல... கோமக்கா கண்ணுல உசிரே இல்லட்டி.'

சொர்ணத்துக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. மெல்ல ஆர்வமானாள். ‘கோடிக் கணக்குல சொத்துங்கிய, அவங்களுக்கு என்னவாம்?' என்ற-படியே அவனை விட்டு விலக்கி எழுந்து உட்கார்ந்துகொண்டாள். அவன் அவளைத் தன் பக்கம் இழுத்துச் சாய்த்துக்கொண்டு

சொன்னான், ‘காசு இருந்துட்டா போதுமாட்டி? நிம்மதி இல்லைங்கா கோமக்கா' என்றவன், அவனும் எழுந்து உட்கார்ந்துகொண்டான்.

‘சின்ன வயசுல எங்க வீட்டுப் பக்கத்து வீடுதாண்ட்டி கோமக்காவுக்கு. நாங்க வீட்ல நாலு பிள்ளையளு. அவ வீட்ல அவ ஒருத்திதான் பாத்துக்கோ. எங்க வீட்லயேதான் கெடப்பா. எங்க நாலு பேருக்கும் மூத்தவ. ராயல் தியேட்டர், பாப்புலர் தியேட்டர், ரத்னா தியேட்டர்னு ஒரு படம் விடமாட்டா. நாங்க ஸ்கூலுக்கு போகவும் அவ தியேட்டருக்கு போயிருவா. தனியாவே போயிருவா.'

அவன் மீண்டும் மிக ஆர்வமாக கோமக்கா பற்றிச் சொல்லத் துவங்கினான். இவளுக்கு அவனை நிறுத்தவும் முடியவில்லை. ஆர்வமாகக் கேட்கவும் முடியவில்லை. ஒரு பக்கம் தூக்கம் வந்தது. இத்தனை ஆர்வமாகச் சொல்பவன் முன்னால் கொட்டாவி விட்டால் என்ன நினைப்பான் என்று மிக சிரமப்பட்டு கொட்டாவியை அடக்கிக்கொண்டாள். நைட்டியை இன்னும் கொஞ்சம் தளர்த்திக்கொண்டாள். மற்ற சமயமாக இருந்தால் அவனது வேகத்தை இவளால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் இன்று அவன் இதையெல்லாம் கவனிக்காமல் கோமக்கா பற்றிச் சொல்வதிலேயே குறியாக இருந்தான்.

‘வீட்ல இருந்தவாக்லயே ஷேர் பிசினஸ் செய்தாளாம்ட்டி. என்னால நம்பவே முடியல. எங்க கூடவே படுத்து எங்களுக்கு கத சொன்ன கோமக்காவான்னு ஆச்சரியப்பட்டு மாளலட்டி! ஆளு அப்படியே இருக்கா. கொஞ்சம் கூட ஒடம்பு வைக்கல. அதிசயம்தான். அவ கூட படிச்சவளையெல்லாம் நாந்தான் நம்ம தெருவுல பாக்கெனே. ஒவ்வொருத்தியும் எத்தாந்தண்டி ஆயிட்டா! இவ முடி ஒண்ணு ரெண்டு நெறச்சிருக்குட்டி. மத்தபடி ஆளு அம்சம் அப்படியே இருக்கா.'

சொர்ணம் தலைகாணியில் மெல்ல சாய்ந்துகொள்ள, வெங்கடேஷ் அவள் மேல் காலைப் போட்டுக்கொண்டு சொல்லத் துவங்கினான்.

‘ஒரு படம் விடாம பாத்துட்டு வந்து அந்த படத்தோட கதையெல்லாம் அப்படியெ வரிவிடாம சொல்லுவாட்டி கோமக்கா. எங்க வீட்ல எங்க காசு? எப்பவாச்சும் சாமி படம் வந்தா கூட்டிட்டு போவாவொ. இவ சொல்ற கதைய வாய பொளந்துட்டு கேப்போம். சில கசமுசா சீனையெல்லாம் நேக்கா சொல்லி விட்ருவா. திடீர்னு ஒரு சீன சொல்ல மறந்துட்டேன், முன்னாடி சிவாஜி அழுதாம்லா, அப்ப வர்ற சீன் இதுன்னு சொல்லுவா. நாங்கள்லாம், ஆமாக்கா, சரிக்கான்னு என்னத்தயாவது சொல்வோம்.'

சொர்ணம் கொட்டாவி விட்டாள். அதைப் பார்த்த வெங்கடேஷ் அவள் கழுத்தில் தன் முகத்தைப் பதித்து, ‘தூங்காதட்டி! மத்தியானம்லாம் வீட்ல வெட்டியாத்தான கெடந்த? தூங்கிருப்பேல்லா? அதுக்குள்ள இப்ப என்ன ஒறக்கம் வருது ஒனக்கு?' என்றவாறே அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவள் ஒருக்களித்துப் படித்துக்கொண்டு, ‘ம்

சொல்லுங்க' என்றாள்.

‘இப்ப சொன்ன மாரி இருக்குட்டி. தீபம்னு ஒரு

சிவாஜி படம் பாத்துக்கொ. அப்படியே வெலாவரியா சொன்னாட்டி. எனக்கெல்லாம் படத்துல சிவாஜிய பாத்த மாதிரியே இருந்துச்சு பாத்துக்கொ. அதுல கடேசில சிவாஜி மெழுகுவர்த்தி எரிகின்றதுன்னு பாடுவான்னு சொன்னப்போ, இவளா சொன்னா, சிவாஜி சாகப் போறான், அதான் மெழுகுவர்த்தி உருகுதுன்னு. அப்புறமா படத்த பாத்தா அப்படியெல்லாம் இல்ல. இவளா சொல்லிருக்கான்னு அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது.'

‘பெரிய ஆளுதான் உங்க கோமக்கா.'

‘ஆமாட்டி. இந்த ரெண்டு நாள்ல ஒரு கத

சொல்லட்டான்னு அவளே கேட்டா. எனக்கு ஒரு மாதிரி ஆயிட்டு. இப்ப என்ன கதய சொல்லி நான் கேட்டு..?'

சொர்ணம் அவனை விலக்கி அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். ‘இப்பமா?'

‘ஆமாங்கென்! அவ புருஷங்காரன் ஒக்காந்து என்னமோ படிச்சிட்டிருக்கான். நான் சேர்ல ஒக்காந்திருக்கேன். என்னமோ கத சொல்லவாங்கா. நான் என்னன்னு சொல்ல. சும்மா அப்படியே இருந்தேன். பேச்ச மாத்தவும் முடியல. அவளா ஆரம்பிச்சிட்டா கத சொல்ல.'

சொர்ணம் ஆச்சரியம் தாங்காமல் கேட்டாள். ‘நெஜமாவா சொல்லுதீங்க?'

‘ஆமாண்ட்டிங்கேன். ஆனா ஆரம்பிச்சவொ, நாலு வரி சொல்லவும் அழுதுக்கிட்டே ரூமுக்குள்ள போயிட்டாட்டி. புருஷங்காரன் அத பாத்தானா என்னமோ தெரியல.. ஆனா பாத்தான்னுதான் நெனைக்கேன். அவன்பாட்டி புக்கு படிக்காண்ட்டி.'

‘இதெல்லாம் நீங்க போன்ல சொல்லவே இல்லியே?'

‘அங்க இருந்துட்டு எப்படிட்டி இதெல்லாம் போன்ல சொல்ல? நேர்ல சொல்லலாம்னு நெனச்சிக்கிட்டேன். மறுநாள் காலேல ஒண்ணுமே நடக்காத மாதிரி

பேசினா. நானும் ஒண்ணும் கேட்டுக்கலட்டி. ரொம்ப வருஷம் கழிச்சி பாக்கோம், என்னத்த கேக்க? பிள்ளையில்ல அவளுக்கு. அதானோ என்னமோன்னு நெனச்சிக்கிட்டேன்!'

சொர்ணம் என்னவோ யோசனையில் இருந்தாள். வெங்கடேஷ் சொன்னான், ‘ட்ரைன் ஏத்திவிட வாந்தாட்டி. அவளே சொல்லுதா. கத சொல்லி சிரிச்சதெல்லாம் மறக்கமுடியுமால முனியப்பான்னு. என்ன முனியப்பான்னு கூப்பிட இன்னும் ஆளிருக்கின்னு தோணிச்சி. ஒரு கதயாவது திரும்ப எனக்கு சொல்லிரணும்னே சிவாஜி படம் பேசும் தெய்வம் பாத்தாளாம். ஆனா  சொல்ல முடியல முனியப்பான்னு

சிரிச்சிக்கிட்டே சொன்னா. ஆனா பாவம்ட்டி. அவ மொகத்துல அருளே இல்லட்டி.'

‘வேற எதாச்சிம் சொன்னாளா கோமக்கா?'

‘என்னத்தட்டி கேக்க?' என்றவாறே, ‘சரி, நாளைக்கி பேசிக்கலாம்' என்று சொல்லிவிட்டு அவள் மீது படர்ந்தான். அவள் அவன் முகத்தைத் தூக்கி, ‘புருஷன பத்தி சொன்னாளாங்கென்?' அவன் சொன்னான், ‘இவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு எதுவும் கேட்டுக்க மாட்டாம் போல அவ புருஷங்காரன். என்ன கேட்டாலும் உன்னிஷ்டம், என்கிட்ட

சொல்லவே வேணாங்கான். இவ ஒவ்வொண்ணையும் அவன்கிட்ட கேட்டு செய்யணும்னு நெனைக்கா.. என்னவோ போ' என்றான். ‘இன்னொரு விஷயம்ட்டி, கோமக்கா கத சொன்னாள்லா? அன்னைக்கு புருஷங்காரன் சொல்லுதாம், இப்படில்லாம் கத சொன்னதா என்கிட்ட சொல்லவே இல்லியேன்னு! கோமக்கா விரக்தியா சிரிச்ச மாதிரி தோணுச்சிட்டி.'

அவன் அதற்கு மேல் பொறுமையில்லாமல் அவள் நைட்டியை விலக்க, சொர்ணம் என்னவோ நினைவில் அவனிடம், ‘நானும் சின்ன வயசுல பக்கத்து வீட்டுப் பசங்களுக்கு இப்படி கதையெல்லாம்

சொல்வேங்க' என்று ஆர்வமாகச் சொல்லும்போது, அதைக் காதில் வாங்காமல், அவள் உதட்டோடு சேர்த்து வெறியுடன் முத்தம் கொடுத்து அவள் மீது ஆவேசமாகப் படர்ந்தான் வெங்கடேஷ்.

செப்டம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com