குறுவாள்
ராஜன் பி.ஆர்.

குறுவாள்

கெளதம் மச்சையா செத்துப் போய்விட்டான் என்கிற குறுஞ்செய்தி  தொலைபேசியில் மின்னிய போது நானும் இளங்கோவும் மதுபான விடுதியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தோம். இளங்கோ என்னுடைய உதவியாளன். சினிமா பதாகைகள் வடிவமைத்துத் தரும் சின்ன நிறுவனம் ஒன்றை வைத்து நடத்துகிறேன். குடித்த போதை முற்றிலும், செய்தி வந்தவுடனேயே விலகி விட்டது. இன்னும் கொஞ்சம் குடிக்க வேண்டும் போல இருந்தது. இளங்கோ நிலவரத்தைப் புரிந்து கொண்டு, எழுந்து போய் வாங்கிக் கொண்டு வந்தான்.

கலக்கமான மனநிலை ஒன்று எனக்குள் இளம்கசப்பாய்ப் பரவுவதை உணர்ந்தேன். கண்கள் கலங்குவதற்கும் இல்லாததிற்கும் நடுவாந்திரத்தில் வெறித்துக் கிடந்தன. இளங்கோவிடம் மச்சையாவைப் பற்றிச் சொல்லத் துவங்கினேன். ஒருத்தன் வாழும் நாளினைவிட, அவன் உடல்  கிடத்தப்பட்டிருக்கிற அன்று அவன் குறித்துப் பேசப்படும் கதைகளுக்கு ஓர் அமானுஷ்ய சாயல் படிந்து விடுகிறது. மேசையில் வெள்ளை நிறத்தில் படபடத்துக் கொண்டிருந்த காகிதம், திடீரெனச் சாம்பல் நிறத்திற்கு மாறி விடுவதைப் போல.

மச்சையாவை முதன்முதலில் சோழா உயர்தர விடுதியின் இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் வைத்துத்தான் பார்த்தேன். அப்போது நான் மிகச் சிறிய வடிவமைப்பாளர். ஆனால் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் எல்லா துறைகளிலும் உயர் பொறுப்பில் இருந்தார்கள். நண்பர்கள் என வருகையில் எந்தப் பேதமும் எப்போதும் இல்லை. அவ்வாறுதான் மச்சையாவிற்கு ஏதாவது உதவி செய்து தரச் சொல்லி என்னை அனுப்பி இருந்தான் அரசுப் பணியில் இருக்கும் ஒருவன்.

அதற்கு முன்வரை நட்சத்திர விடுதிகளின் அறைகளுக்குப் போனதில்லை. வரவேற்புப் பகுதியிலேயே கைகொடுத்து விடை கொடுத்து விடுவார்கள். அதற்கே அரச தர்பாரில் நுழைந்து விட்டு வந்ததைப் போல மனம் குதூகலிக்கும். ஹைதராபாத்தில் தெலுங்கு சினிமா ஒன்றின் வேலைக்காகப் போயிருந்த போது, கொஞ்சம் தரமான விடுதியில் விசாலமான அறை தந்திருந்தார்கள். படுத்துக் கொண்டே குளிக்கிற  குளியல் தொட்டியில் எருமைமாடு ஏரியில் புரள்வதைப் போல, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அப்படியே கிடந்தேன். ஆனால் சோழா விடுதியின் பிரமாண்டம் என் கால்களைக் கூசச் செய்தது. சிகரெட் குடிக்க எங்கே போவது என யோசித்துத் தயங்கி நடந்து போனேன்.

அறையைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த மச்சையாவின் முகம் எப்போதும் நினைவில் இருந்து அகலவே செய்யாது. வெள்ளாட்டுக் குட்டி ஒன்று பால்வெண்மையில் கதவொன்றின் பின்னிருந்து எட்டிப் பார்த்ததைப் போலவிருந்தது. அவன் குடும்பத்தின் செழுமை அவன் மேனியில் தெரிந்தது. கழுத்தில் கொஞ்சம் தடிமனான தங்கச் சங்கிலி அணிந்து அதில் கரண்டி உருவத்தைப் பிரதி செய்து போட்டிருந்தான். மச்சையா கூர்க் மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவன், என்றாலும் இங்கே சென்னைக் கிறித்துவக் கல்லூரியில்தான் என் நண்பர்களோடு இணைந்து படித்தான் என்பதால் நன்றாகத் தமிழ் பேசுவான். எடுத்த எடுப்பில் உள்ளே நுழைந்ததும் சிகரெட் புகைக்க வேண்டும் என்று சைகையில் கேட்டேன். ‘இதென்ன கேள்வி? உங்க பிரெண்டோட ரூம் இது. பதவிசா நடந்துக்க தேவையில்லை. நாலைஞ்சு தடவை வந்து போனீங்கன்னா ஹோட்டல் சூழல் பழகிக்கும். எனக்கும் ஆரம்பத்தில அப்படித்தான் இருந்துச்சு. நான் மலை மேலதான் இருக்கேன். ஆனா இந்த மாதிரி மாளிகையில இல்லை' என்றான்.

மலங்க நின்ற என்னை அந்த அறைக்குள் அவனே பிறகு வழிநடத்தினான். குளியலறைக்குள் அழைத்துப் போய் தண்ணீர் வருவதற்கு எதைத் திருப்புவது என்று சொல்லித் தந்தான். இறுதியாய் வெளியே போகையில், ‘சும்மா திறந்து போட்டே எதையும் செய்ங்க. யாரு ரூம்குள்ளயும் நான் அத்துமீறி நுழையவே மாட்டேன்' என்றான். நிம்மதியாய்ச் சிறுநீர் பிரிந்த போது பதற்றம் அடங்கியிருப்பதை உணர்ந்தேன்.

வெளியில் எனக்காகத் தேநீர் தயாரித்து நின்று கொண்டிருந்தான் மச்சையா. கூர்க்கில் அவனுடைய அப்பா அவர்களுடைய தோட்டத்தில் மிளகும் ஏலமும் போட்டு எடுக்கிறார். பூர்வீகரீதியில் கொஞ்சம் அதிகமாகவே சொத்துகள் உண்டு. இவனை வைத்து அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறது அவனது வீடு. கொஞ்சம் வசதியான வீட்டில் அவனுடைய அம்மாவும் அப்பாவும் தனியாக இருக்கிறார்கள். மச்சையாவுடன் உடன் பிறந்தவர்கள் ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும். அக்கா அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கிறார். அண்ணன்களுமே சொல்லிக் கொள்கிற மாதிரி இடங்களில்தான் இருக்கிறார்கள்.

மச்சையாவிற்கு எழுபத்தைந்து வயதில் பாட்டி ஒருத்தி இருந்தாள். அவளோடு சமையலறையில் உருண்டு புரண்டு வளர்ந்திருக்கிறான் மச்சையா. அவளுக்குக் கறிகாய் வெட்டிக் கொடுப்பதில் துவங்கிய அவனது சமையல் ஆர்வம், சமையல் கலை நிபுணர் படிப்பைப் படிப்பதில் கொண்டு போய் விட்டது. அவனது பாட்டி பெயரில் நிறைய புதிய பதார்த்தங்களை பெங்களூர் சமையல்கலை வகுப்பில், போய்ச் சேர்ந்த அன்றைக்கே செய்து காட்டி அசத்தி இருக்கிறான்.

அவனது அக்காவிற்கு மட்டும் இவன் என்ன செய்தாலும், கனிந்த பேரிச்சம் பழம் சாப்பிடுகிற மாதிரி. மச்சையா கேட்டதற்கு மேலே அவனுக்குத் தொகை கொடுத்துக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் அவனை கூர்க்கில் உள்ள அந்தப் பெரிய மர வீட்டில் வைத்துப் பொம்மை விளையாட்டு ஆடவே பிரியம் வைத்தனர். அவனைப் பூச்சியாவதற்கு முன்பரிணாமத்தில் உள்ள மின்மினிப் புழுவைக் கையில் பொத்தி வைப்பதைப் போல வைத்து அவன் உமிழும் சிறுவெளிச்சத்திற்காகக் காத்திருந்தனர். ஆனால் அவன் முழுமையான மின்மினிப் பூச்சியாய்க் காடொன்றில் தனித்துத் தன்னை நிறைத்து உமிழவே விரும்பினான்.

சமையலறையில் அவனுடைய பாட்டி, ஆரம்பத்திலேயே அடியுரம் போட்டு ஊக்கமாக நட்டு விட்டு விட்டார் செடியை. அவன் கைபட்டால் எந்தப் பொருளும் தித்தித்து விடும். ஊர்ப்பக்கமெல்லாம் நல்ல சமையல் கையாக மாற வேண்டுமெனில், பச்சைப் பாம்பைப் பிடித்து அதைக் கையால் தடவ வேண்டும் என்று சொல்வார்கள். ‘அப்படிப் பண்ணி இருக்கியா?' என மச்சையாவிடம் கேட்ட போது, ‘என் பாட்டி கையை அப்படித் தடவி இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு கண்களைச் சுருக்கிச் சிரித்தான். நான்கு வயதில் எப்படிக் கபடம் இல்லாமல் சிரிப்பானோ, அப்படிச் சிரித்தான் அன்றைக்கு.

எல்லா இந்தியக் குக்கிராமங்களில் இருக்கிற உணவு முறைகளையும் தேடித் தேடிப் போய்ச் சின்ன வயதில் இருந்தே அறிந்து கொண்டானாம். ஊர் திரும்பி வந்து பாட்டியோடு இணைந்து சமைப்பானாம். கடைசியாய் உப்பை மட்டும் பாட்டி போட்டுச் சமையலை முடித்து வைக்கிற போது, ‘உப்புதான் எல்லாமும். இந்தப் பூமியில அது இல்லாத இடமே இல்லை. உன் வாழ்நாளுக்குள்ள இந்தப் பூமியில கிடைக்கிற எல்லா உப்பையும் நுனி நாக்கில வச்சிப் பார்த்திரு' என்றாளாம்.

அவன் தன் பாட்டியின் கண்களில் படிந்திருந்த அந்த உப்பள வெண்மையைத் தேடிப் போகவும் செய்தான். எந்த மூலையில் இருந்தாலும் பாட்டிக்காக ஒரு கைப்பிடி உப்பையும் சேகரித்துக் கொள்வான். இமாலயத்தின் உச்சியில் ஒருதடவை கிடைப்பதற்கரிய பாறை உப்பைக் கையில் ஏந்தி நின்றதைச் சிலிர்ப்போடு சொன்னான். அழிந்து போகிற நிலையில் இருந்த பல கிராமிய உணவுகளை மீட்டெடுத்தான். அங்கேயே தங்கித் தூங்கி ஒரு குருகுல கற்றல் முறை போலப் பரவிக் கிடந்த மக்களிடம் இருந்து கற்று வந்தான். உணவென்பது எப்போதும் கூட்டு உழைப்பில்தான் ருசிகூடியதாக மிளிர்கிறது. அதனாலேயே அமைந்தடங்கிப் போகிறவர்களே சமையற்கட்டில் கற்றுக் கொள்ள இயலும். சமையல் என்பதே ஒருத்தன் மட்டுமே மன்னனாக இருக்கிற சபை. உறையான அந்த அறை ஒரே கத்தி வைப்பதைப் போலத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ராஜா உத்தரவிடுவதைச் செய்து தருவதற்குத்தான் ஆட்களே தவிர, கூட நின்று யோசனைகள் தருவதற்கல்ல. அந்த ஒட்டுமொத்த  சமையலும் ஒரே ஆளின் எண்ணத்தில் ஒட்டியிருக்கிற நாக்குச்சுவை என்று மச்சையா சொன்னான்.

‘நான் சமைக்கப் போறதோட சுவை என் மண்டைக்குள்ள இருக்கும். முதல் துளியை நுனி நாக்கில் வைக்கிறப்ப அதைக் கொண்டு வந்தா மட்டும்தான் இன்னொருத்தருக்கு குடுப்பேன். இல்லாட்டி மறுபடியும் அதை முதல்ல இருந்து சமைப்பேன். என் நாக்கு திருப்தி அடையாட்டி, அதை என்னை நம்பி சாப்பிட வர்றவங்களுக்கு தர மாட்டேன். அதை மாதிரி சமையல்ல கடைசி உப்பை நாந்தான் போடுவேன். நான் சாப்பிட்டுப் பார்க்காம எந்த உணவையும் வெளியே டேபிளுக்கு அனுப்ப மாட்டேன்' என்றான். அவன் இப்படி சமையல் கலையில் தனக்கென நிறையக் கொள்கைகள் வைத்திருந்தான்.

அவன் தேடித் தேடிச் சேகரித்த இந்திய கிராமிய உணவுகளை வைத்து நட்சத்திர விடுதிகளில் உணவுத் திருவிழா நடத்துகிறான். வரும் இலாபத்தில் உணவகம் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறது. உப்புப் புளி மிளகாய் கணக்கில் அவன் பெரிய ஆள்தான் என்றாலும் இலாபம் என்கிற கணக்கு அப்போது அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் சென்னையில் பெயர் பெற்று விட வேண்டும் என்கிற எண்ணத்தில் விடாமல் இந்த உணவுத் திருவிழாக்களைப் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் நடத்துகிறான். அந்த அடிப்படையிலேயே அந்த உணவு விழாவுக்கு நான் போயிருந்தேன். அந்த விழாவைப் பற்றி பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் செய்தியாக வரவழைக்க வேண்டும் என்கிற உதவிக்காகவே என்னை நாடியிருந்தான். குடிக்காமல் சாப்பிட முடியாது என்கிற நிலையில் உடலைப் பழக்கியிருந்தேன் அப்போது.

அடுத்த முறை நண்பர்களை அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களித்து விட்டு அவனது அறையில் இருந்து வெளியேறினேன். உண்மையாகவே எனக்கு அவனுக்கு எதையாவது செய்து தர வேண்டும் என்று தோன்றியது. கள்ளம் எதுவுமே இல்லாமல், என்னை நோக்கி அவன் சகோதரத்துவத்துடன் சிரித்த காட்சி என்னை அவன் குறித்த நல்லவித உணர்வு மாற்றத்திற்குத் தள்ளியது. அவனுடனான தொடர்பு கௌரவமாக இருக்கும் எனத் தோன்றியது. உடனேயே என் தொடர்புகளைத் துணையாக வைத்து மிகப் பெரிய தொலைக்காட்சி ஒன்றில் அவனது பேட்டியை வரவழைத்தேன். உச்சகட்ட மகிழ்ச்சியில் இரவு என்னை அழைத்து நன்றி சொன்னான்.

அதற்கடுத்து அவனைப் பற்றிப் பல பத்திரிகைகளில் செய்தி வர வைத்தேன். எந்த இலாபநோக்கமும் இல்லாமல் இதை அவனுக்குச் செய்து தந்த வகையில் எதையாவது கைம்மாறைச் செய்து தர விரும்பினான். அதைப் பற்றித் தொலைபேசியில் சொல்லும் போதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு அதுமாதிரியான விழாக்களுக்குச் செல்வதற்கு நேரம் அமைந்து வரவில்லையே தவிர, என் தொடர்பில் இருந்தசெல்வாக்கானவர்களைச் சிபாரிசு செய்து விருந்திற்கு அனுப்புவேன். என் நண்பர்கள் குடும்பம் குடும்பமாக என் சிபாரிசின் அடிப்படையில் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தார்கள். யாரிடமும் பணம் என்று எதையுமே மச்சையா வாங்கவில்லை.

விருந்தினர்கள் சாப்பிட்ட உணவுக்கான தொகையை அவனது லாபத்தில் கழித்துக் கொள்வார்கள் என்பது தெரிந்தும் நான் ஆட்களை அனுப்புவதை நிறுத்தவில்லை. ஏனெனில் அந்த உணவுத் திருவிழாவில் மெய்மறந்தவர்கள் அப்புறம் என்னை அவர்களது நெருக்கமான வளையத்திற்குள் வைத்துக் கொண்டனர். சமையலறைக்குள் நுழைந்துவிட்டால் மேல்மட்டத்தில் சகலமும் நடந்து விடும். மச்சையாவைச் சில உயர் செல்வாக்கான திருமணங்களுக்குச் சமைத்துத் தருவதற்கு என்னிடம் சிபாரிசுக்கு வந்தார்கள். அப்படி நான் கோரிய உதவிகள் எல்லாவற்றையும் முகம் சுளிக்காமல் செய்து கொடுத்தான். என் விருந்தினர்கள் என்றால் அந்த மேசையையே அவன் சுற்றி வருவதாக என்னுடைய ஆட்களே உறுதிப்படுத்தினார்கள். ‘நிறையச் செய்யணும் உங்களுக்கு. இன்னைக்கு கிடைச்ச இந்த இடத்துக்கெல்லாம் நீங்கதான் காரணம். வெளிமேடையில அங்கீகாரம் வாங்கித் தந்தீங்க. ஆனா நீங்க வந்து இன்னமும் சாப்பிடலங்கறதுதான் ஒரு குறை' என்றான் தொலைபேசியில் பேசுகையில்.

ராஜன் பி.ஆர்.

நான் போகவில்லையே தவிர என்னால் அவனுக்கு நிறைய இலாபம் கிடைக்கிற மாதிரித் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தேன். அதில் இருந்து வருகிற பணம் என்னுடைய கண்ணை உறுத்தவில்லை. அவனுமே தொலைபேசியில் பேசும்போதோ, அல்லது என்னுடைய விருந்தினர்களுக்குச் சுக போகங்களைச் செய்து தருவதிலோ எந்த மரியாதைக் குறைவையும் காட்டவில்லை. ஒரு பாரம்பரிய அக்கி ரொட்டியைப் போல என் உறவைக் கையில் ஏந்தி இருந்தான்.

எனக்குத் தெரிந்த சினிமா ஆட்களிடம் புகழ்பெற்ற சமையல்காரனாக இருக்கும் அவன் என் நண்பன் எனச் சொல்லி இருந்தேன். ஒருநாள் எல்லோரும் குடித்துக் கொண்டிருந்த போது, உணவுத் திருவிழாவிற்குச் சாப்பிடப் போகலாம் என்றார்கள். மச்சையாவைத் தொலைபேசியில் அழைத்த போது, ‘இந்தா நான் சமையல்கட்டுக்குள்ள நுழைஞ்சிர் றேன்' என்றான் ஆர்வமாக.

மேசையில் அவன் பலவற்றை அழகாகப் பரப்பி இருந்தான். எனக்கு உண்ணத் தோன்றவில்லை அப்போது. என்னுடன் இருந்தவர் வாய்விட்டே குடிக்க விஸ்கி கிடைக்குமா என்று கேட்டு விட்டார். அதே புன்முறுவலுடன் ஓடிய மச்சைய்யா மதுபான மேடையில் இருப்பவரிடம் ஏதோ பேசினான். எங்களை நோக்கி தம்ளர்கள் வந்தன. நிலைகொள்ள முடியாதளவிற்கு அன்றைக்குக் குடிக்கத் துவங்கினேன். மேசையில் அவன் பரப்பி இருந்த எந்த உணவையும் தொடவில்லை. அவை என்னென்ன என்பதே எனக்குத் தெரியவில்லை. என்னோடு இருப்பவர்கள் சாப்பிட்டார்களா என்பதுகூட என் நினைவில் இல்லை. கடைசியாய் கிளம்பும் போது அவன் சொன்னது மட்டும் நினைவில் இருந்தது.

‘அடிப்படையில நீங்க சாப்பிடறதுக்கே இலாயக்கு இல்லை. அதோட பண மதிப்பை விடுங்க. ஒவ்வொரு பொருளையும் ரசிச்சுக் கோர்த்திருக்கோம். என்னோட சுவைமொட்டு கெட்டுற கூடாதுங்கறதால நான் குடிக்கிறதே இல்லை. ஒரு தவமா நினைச்சு இதைச் செய்றேன். புது வீடு கட்டின மாதிரி. அப்படி நடக்கிற விழாவில நீங்க முதல்தடவையா வர்றீங்க. எப்படி நடந்துகிட்டீங்கன்னு பாருங்க' என்றான். அதைச் சொல்லும் போது என் நண்பர்கள் உடன் இருந்தார்கள் என்பதால் அப்போதே எனக்குச் சுருக்கென்று இருந்ததால் அது மட்டும் நினைவில் இருந்து அகலவில்லை

அசிங்கப்பட்டுக் கொண்டு கொஞ்சநாள் அவனை அழைக்காமல் இருந்தேன். என்னை அழைக்கமுடியாத அளவிற்கு அவன் பணியில் பலப்பல உயரங்களை நோக்கி நகர்ந்து போவதை அறிந்த போது, மகிழ்ச்சியும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்கிற கோட்டில் நின்றேன். அவன் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி செய்தான். அது குறித்த புகழ்மாலைகள் என் காதிலும் விழும். செல்வாக்கான மனிதர் ஒருத்தரின் மனைவி அவனிடம் பேச விரும்பியதால் தயங்கித் தயங்கிப் பல மாதங்களுக்குப் பிறகு அவனை அழைத்தேன்.

அந்த முதல் சந்திப்பில் எப்படி ஆதுரமாகப் பேசினானோ அப்படித்தான் துவங்கினான் உரையாடலை. உடனடியாக அந்த அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசி விட்டு என்னிடம் வந்து அது குறித்துச் சொன்னான். கடைசியாய் இணைப்பை அணைப்பதற்கு முன்பு, ‘சமையல்ங்கறது என் உசுரு. அங்க என் நாக்கு தப்பு பண்ணிச்சுன்னாகூட அதை தயங்காம வெட்டிருவேன். நீங்க சாப்பாட்டுக்கு உரிய மரியாதையை தரலைங்கறதுக்காகத்தான் கோபப்பட்டேன். மத்தபடி மனசில ஒண்ணுமே இல்லை' என்றான். அதை அவன் சொன்னதைக்கூட நான் விரும்பவில்லை. எதுவுமே நடக்காததைப் போல இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

குடிக்காமல்தான் அவனது உணவை உண்ண வேண்டும் என அந்த நேரத்தில் முடிவெடுத்தேன். ஆனால் ஏனோ ஒரு தர்மசங்கடமான உணர்வு எனக்குள் எழுந்தது. என் ஆத்ம நண்பர் ஒருத்தர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்க எண்ணினார். அவனையே அதற்குச் சமையல் பொறுப்பாக்க வேண்டும் என்று விரும்பினார். அவரை அழைத்துக் கொண்டு அவனிடம் போனேன். வியாபாரத்தில் கறாராகப் பேச எப்படியோ கற்றுக் கொண்டான் என்பதையே அந்தச் சந்திப்பு எனக்கு உணர்த்தியது. ஆனால் அவனை வைத்துத்தான் உணவகத்தைத் துவங்குவேன் என உரிமையாளர் உறுதியாக இருந்தார்.

ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உணவகமும் துவங்கியது. வடகிழக்கு உணவு வகைகளைப் பிரத்தியேகமாகப் பரிமாறும் உணவகம். அதன் அழைப்பு விழா அறிமுக உணவு விருந்திற்கு என்னையும் அழைத்தார்கள். அன்றைக்கு மதியத்திலேயே பியர் அருந்தி இருந்ததால், போகவில்லை. மச்சையாவுமே அதைப் புரிந்து கொண்டிருப்பான் என்பதும் எனக்குத் தெரியும். போய்வந்த நண்பர்கள் எல்லாம் நாக்கால் ஆபரணம் செய்து சூடினார்கள் அவனது உணவிற்கு. ஆட்கள் காத்திருந்து சாப்பிடுகிற மாதிரி வியாபாரம் ஆரம்பத்தில் நன்றாக ஓடத் துவங்கியது.

ஆனால் உரிமையாளரின் கண்களைச் சுற்றிக் கருவளையம் போர்த்தியது. மச்சையா செய்யும் தொந்தரவுகள் அளவுக்கு மீறி இருப்பதாகச் சொன்னார். செலவுகளை அவன் தரத்தைக் காரணம் காட்டி ஏற்றிக் கொண்டே இருப்பதாகவும் அதுவெல்லாம் தன்னுடைய கவலையே இல்லை என்று சொன்னதாகவும் தெரிவித்தார். வெளியே இருந்துதான் அந்தப் பளபளப்பான உணவகத்தைப் பார்த்தேன் என்பதால் உள்ளே நடப்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. மேலும் மேலும் செலவுகள் அதிகரித்தபடியே இருந்ததால் உணவகத்தை நடத்திய நண்பர் வட்டிக்குக் கடன் வாங்கியபோது நானும் உடனிருந்தேன்.

வட்டிக்கு மேல் வட்டி, செலவுக்கு மேல் செலவு என ஓடிக் கொண்டிருந்த நிறுவனம் ஒருகட்டத்தில் தடுமாறத் துவங்கியது. வெளியில் செழிப்புடன் காட்சி தந்தாலும் உள்ளே சிவந்த தக்காளியை எலி கரும்பிக் கொண்டிருந்தது. மச்சையாவின் பெயர் காரணமாக அந்த உணவகத்திற்கு மேல்மட்ட ஆட்களிடம் மையல் இருந்தது. மச்சைய்யா அந்தப் புகழை விட விரும்பவில்லை என்பதால், என்னுடைய நண்பரிடம் பணத்தைக் கொஞ்சம் பொறுத்து வாங்கிக் கொண்டான். ஆனாலும் நச்சரிப்பதையும் கோபத்தை விசிறுவதையும் விடவில்லை.

அந்த நேரத்தில் மேலும் இரண்டு உணவங்களுக்கு அவன் தலைமைச் சமையல் ஆலோசகராக ஆனான். தொடர்பு கொள்ள முடியாத எல்லைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டான். நண்பரின் உணவகத்தை நல்ல விலைக்குக் கேட்டு வந்தார் ஒருத்தர். ஆனால் அவர் மச்சையாவிடம் உணவகத்தின் தலைமை மாறுவதைத் தெரிவித்து எழுத்துப் பூர்வமான உறுதிப் பத்திரத்தைக் கேட்டார். என் நண்பரை அழைத்துக் கொண்டு மச்சையாவைப் பார்க்கப் போனேன்.

அப்படி எழுதித் தரவேண்டுமெனில் ஒரு பெருந்தொகை தனக்குத் தனிப்பட்ட வகையில் தர வேண்டும் என்றும் தவிர அவற்றைக் காசோலையாகத்தான் ஏற்பேன் என்றும் சொன்னான். கூடவே புதிய ஆளிடம் தனக்கு பெறுமதியான ஆலோசனைத் தொகையைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகவும், அதில் நீங்கள் தலையிடக் கூடாது என்றும் சொன்னான். அவன் சொன்ன தொகை அதிகமாக இருந்ததால் கொஞ்சம் பேரம் பேசத் துவங்கினார் என்னுடைய நண்பர். ஒரு வார்த்தை பேசக்கூடாது எனச்சைகையில் சொன்ன மச்சையா காசோலை புத்தகத்தை நோக்கிக் கைகாட்டினான்.

ஆறு காசோலைகளாக அவனுக்குத் தர வேண்டிய தொகையை எழுதத் துவங்கினார். ஒன்றை எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்ப்பார் அவனை. கை நீட்டி வாங்கி விட்டு அடுத்து என்பதைப் போலச் சைகை காட்டுவான். என்னை அவன் அந்த நேரத்தில் ஏறிட்டும் பார்க்கவில்லை. கடைசிக் காசோ லையை நிரப்பி அவர் அவனிடம் கொடுத்த போது, அமைதியாக யோசித்தவன், ‘இவருக்காக இதை விட்டுக் கொடுக்கிறேன். அவருக்குச் செய்ற கடமை எனக்கு இருக்கு. கைமுதல் போட்டு தொழில் பண்ண முடியாட்டி ஏதாவது தட்டுக் கடை வச்சிருக்கலாம்ல. அதுலயும் காசு இருக்கு. தப்பா சொல்லலை. எதுக்கு செலிபரிட்டி செஃப் வச்சு தொழில் செய்யணும்னு நெனைக்குறீங்க. இப்ப அதில எங்களை குற்றவாளியா வேற ஆக்கறீங்க' என்றான். நான் அந்தக் காசோ லையை எனக்காக விட்டுத் தராதே எனச் சொல்வதற்குள் என்னுடைய நண்பர் அதைத் திருப்பி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

அவனிடம் என்னுடைய கோபத்தை உடல்மொழியில் காட்டிவிட்டு வெளியே வந்தேன். அதற்கடுத்து அவனை அழைக்கிற மாதிரி, உதவி கோரல்கள் வந்தபோதுகூடத் தட்டிக் கழித்தேன். அவனைப் பற்றிய செய்திகள் எதுவும் காதில் வராதது போல என்னை வைத்துக் கொண்டேன். இடையில் ஒருதடவை ஓர் உணவக உரிமையாளரைச் சந்திக்கச் செல்கையில், அது மச்சையா ஆலோசனையில் இருப்பது என்பது தெரியாமல் நுழைந்துவிட்டேன்.

உரிமையாளரின் அறைக்குப் பதிலாக இன்னொரு அறைக் கதவைத் திறந்தேன். அங்கே மச்சையாவின் மேசை மீது விஸ்கி பாட்டில் இருந்தது. இலையில் பல்வேறு அசைவ அயிட்டங்கள் தாறுமாறாகப் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. மச்சையா ஒருபோதும் இப்படி அழகற்று இருக்க மாட்டான். நாசூக்காக ஒவ்வொன்றாய்த்தான் அவனது உணவு மேசைக்கு எடுத்துக் கொண்டு வருவான். அவனது முகம் வீக்கம் கண்டிருந்தது. கால்களை விரித்து அமர்ந்திருந்ததால் கால்களைப் பார்த்தேன். மினுமினுங்கிச் சற்று வீங்கியிருந்தன அவை. என்னை அவன் உணர்வதற்குள் அறையைச் சாத்திவிட்டு வேறு ஒரு அறைக்குள் போனேன்.

ஆட்டுக்குட்டியைப் போல அறைக்குள் இருந்து வெளியே காட்சி தந்தவனா இவன்? வெம்பிப் போயிருந்த பழத்தைப் போல அவன் இருந்ததை மீண்டும் யோசித்துப் பார்த்தேன் பிறகு. அவனை முற்றிலும் நினைவு எல்லைக்கு அப்பால் நிறுத்தி இருந்த போதுதான் அவன் செத்துவிட்டதாக அந்தச் செய்தி வந்தது. நிறைய நண்பர்களுக்கு அவனது சாவுச் செய்தியை அழைத்துச் சொன்ன போது, ஒவ்வொருத்தராக அவரவர்க்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லத் துவங்கினார்கள்.

‘அவன் வீட்டுலயே ஒருதடவை பொத்துன்னு மயங்கி விழுந்திருக்கான். தூக்கிட்டு ஓடிப் பார்த்திருக்காங்க. சாப்பாட்டுல ஒரு துளி உப்பைக் கூட சேர்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க' என்றான் ஒருத்தன்.‘அவன்ட்ட இது சம்பந்தமா கேட்டப்ப. உப்பை நாக்கில வைக்க விடாத இந்த உயிர் எதுக்கு? அப்புறம் எதுக்கு எனக்கு நாக்கைப் படைச்சான் கடவுள்? இல்லை என்னைப் படைச்சான்? கடைசி உப்பா இமாலயத்தில இருந்து எடுத்துட்டு வந்ததை எனக்கு வச்சு விட்டிருங்க. சந்தோஷமா செத்துப் போயிருவேன்' என விட்டேத்தியாய்ச் சிரித்ததாக இன்னொரு நண்பன் சொன்னான்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் நண்பர்கள் குவிந்து கிடந்தார்கள். மேல்மட்டத்துப் பெண்கள் நிறையப் பேர் நின்றிருந்தனர். அவனுக்கு அடக்கமான வண்டி ஒன்றினுள் அவனை வைத்திருந்தார்கள். நாவல் மரத்தின் அடியில் இருந்த அந்தக் கறுப்பு வண்டியை நோக்கி எல்லோரும் போய்க் கடைசியாய் அவனது முகத்தைப் பார்த்துவிட்டு வந்தனர். என்னை அழைத்த போது நான் வரவில்லை என மறுத்தேன். இளங்கோ பார்க்க விரும்பி என்னிடம் இருந்து விலகி வண்டியை நோக்கிப் போனான்.

திரும்பி வந்த அவன், ‘ஆட்டுக்குட்டி மாதிரி சாந்தமா செத்துக் கிடக்கறாரு' என்றான்.‘ஆமா அவரு செலிபரிட்டி செஃப் இல்லையா அப்படித்தான் சாவாரு' என அதை வீசினேன் அவனை நோக்கி.

என்னை அறியாமல் குறுநகையொன்று என் உதட்டில் தவழ்ந்தது.

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com