ஓவியம்
ஓவியம்ஜேகே

கொண்டு கூட்டு

நடுநிசி. அந்த நூலகத்தில் இருந்த  நூல்களின் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் ஒவ்வொரு அட்டையில்  இருந்தும் மரச்சட்டங்களின், இரும்புச் சட்டங்களின்  கால்களைப் பிடித்து எறும்புகளைப் போல வரிசையாக  இறங்கிக் கொண்டிருந்தன எழுத்துகள். அன்று வியாழக்கிழமை. எழுத்துகளுக்கும் சொற்களுக்குமான வார இறுதி நாள். ஏதூராஸ் மாநகரத்தில் இருக்கும் பழமைவாய்ந்த அந்த மிகப்பெரிய சிண்டிகேட் நூலகத்தின் மைய மண்டபத்தில் எல்லா எழுத்துகளும் கூடி நின்றன.

சொற்கள் பொருள் துறந்து எழுத்துகளாகப் பிரிந்து நின்றன. ஓரெழுத்துச் சொற்கள் ஓசைகளாகத் திரிந்து, திரிந்த ஓசைகள் இசைக்கத் தொடங்கின. இப்படித்தான் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் பார்ட்டி துவங்கும். ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். வெள்ளிக்கிழமை ஓய்வு. மிகவும் ரகசியமானது இந்த பார்ட்டி. பார்ட்டி முடிந்தவுடன் மிகவும் நிதானமாக ஒவ்வொரு எழுத்தும் தனக்குரிய நூல்களின் பக்கங்களிலும் அட்டைகளிலும் சென்று வார்த்தைகளாக, வாக்கியங்களாக அமர்ந்து கொள்ளப் பழகி இருந்தன. இதற்கான சூத்திரங்களை அங்குள்ள கணித சாஸ்திர நூல்கள் வகுத்திருந்தன. ஒவ்வொரு எழுத்திற்கும் வரிசைக்கிரமாக குறியீட்டெண்கள் வழங்கப்பட்டு அதன்படியே எழுத்துகள் தங்கள் இடங்களைச் சென்றடைய வேண்டும். மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் இந்த செயல் திட்டமிட்டபடி முடிக்கப்பட வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் குழப்பம்தான். புதிதாக அந்நூலகத்திற்கு வரும்  புத்தகங்களுக்கு  இதற்கான  பயிற்சி அளிப்பதற்கென்றே சில வராகமிகிர காலப் புத்தகங்கள் உண்டு.

மிகவும் கிழிந்து கந்தலாகி விட்ட பழைய நூல்கள் வருடாந்திர கணக்கெடுப்பின் போது கழிக்கப்படும். அதர்வண காலத்து ஓலைச் சுவடிகளில் உள்ள மந்திரங்களின்  உதவி கொண்டு அவ்வாறு கழிக்கப்படும் நூல்களில் உள்ள எழுத்துகள், சொற்களின் நினைவுகள் யாவும் மறக்கடிக்கச் செய்யப்படும். ஏனெனில் அவை வெளியே செல்ல வாய்ப்புண்டு. வெளியே செல்லும் நூல்கள் மூலம் ரகசியம் கசிந்து விடும் அபாயம் உள்ளதால் இந்த ஏற்பாடு.

மனிதர்களோ, ஆர்வமிக்க வாசகர்களோ, ஏன் எழுத்தாளர்களும்  கூட ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முயல்வதில்லை. எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் எப்போதும் வேலைப்பளு அதிகம் என்பதுதான் அவ்வுண்மை.  ஒரு எழுத்தாளர் ஒரு படைப்பினை உருவாக்க  எந்த அளவு மெனக்கெட வேண்டி இருக்கிறதோ அந்த அளவுக்கு எழுத்துகளும் சொற்களும் பல மெனக்கெடல்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. எழுத்துகளுக்கான வேலைப்பளு அறிவு சார்ந்த ஒன்று. அப்பூதியானது. யாராலும் சரியாக விளங்கிக்கொள்ள இயலாது. ஒருவர் ஒரு நூலை வாசிக்க  ஆரம்பத்திலிருந்து வாசித்து முடிக்கும் வரையில்  எழுத்துகளும் வார்த்தைகளும் ஏன் ஓசைகளும் கூட கடுமையான மனிறுக்கத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும்.

முதலில் ஒரு படைப்பாளி அல்லது எழுத்தாளர் இறக்கிவைத்த கருத்துச் சுமையே கனம் மிகுந்ததாகவே இருக்கும். படைப்பாளியின் சிந்தனை, பொருள், ஓசை ஆகியவற்றை ஒருங்கே சுமந்து வாழும் எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் இந்த மூன்றையும் வாசகரிடம் பொருள் திரியாமல் கொண்டு சேர்ப்பது என்பது மலையைப் பெயர்த்து மடியில் கட்டிச் சுமக்கும் கதை தான். அது கலவிக்குச் சமமானது என்று சில எழுத்துகளும் சொற்களும் தமது குறிப்பேடுகளில் எழுதி வைத்திருக்கின்றன. “வாசகரின் வாசிப்பு என்பது கலவிக்குச்  சமம். எந்த அளவு நிதானமாக ரசித்து, உட்கிரகித்து  கண்களால், செவிகளால், நாவால், சுவாசத்தால், கரத்தால், அறிவால், கண்டும், கேட்டும், சுவைத்தும், முகர்ந்தும், ஸ்பரிசித்தும், பகுத்தறிந்தும் அனுபவிக்கின்றாரோ அந்த அளவிற்கு எழுத்தின் சொல்லின் பொருளின் தரிசனம் கிட்டும். உச்சம் எட்டும்,' என்கிறது அக்குறிப்பு.

எல்லா வாசகரும் இக்கலையில் வல்லவரில்லை. ஒவ்வொருவரின் திறத்திற்கேற்ப கால்நிர்வாண அல்லது அரைநிர்வாண தரிசனம். அவசரக்கார வாசகருக்கு துரித ஸ்கலிதம். அதோகதி உச்சம்.

படைப்பாளியின் கற்பனையோடும் படைப்புத் திறனோடும் வாசகனின் உட்கிரகிக்கும் ஆற்றலும் பகுத்தறிவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது மட்டுமே அனுபவத்தில் பரவசத்தை அடைய முடியும். அந்த நேர்கோட்டைக் ‘கிழிப்பது' தான் எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் மிகப்பெரிய சவால். படைப்பாளியின் உள்ளக்கிடக்கையை இதுவரை எந்த ஒரு வார்த்தையோ இசையோ கலையோ ஓவியமோ எந்த ஒரு ரசிகனுக்கும், வாசகனுக்கும், பார்வையாளனுக்கும் முழுமையாகக் கொண்டு சேர்த்ததில்லை. எந்த அளவு குறைவாக வாசகரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதோ அந்த அளவிற்கு படைப்பு தரம்மிக்கதாக கருதப்படுவதாக நவீனமும் பின் நவீனமும் எழுதப்படாத வரையறை ஒன்றை புகுத்தியிருப்பது திண்ணம். இக்காரணிகளால் எழுத்துகளின் பணிச்சுமை சமீப காலங்களில் இன்னும் பல மடங்காகிவிட்டது.

இதுவரை கேட்டிராத ஒரு குரலை ஒருவர் கேட்கும் போது மனதில் தோன்றும் அந்தக் குரலுக்கான கற்பனை உருவம் இவ்வுலகத்தில் எந்த இருவருக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதில்லை. இது உளவியலின் அதிசயம். ஒவ்வொருவரின் நனவிலி மனதின் பதிவுகளுக்கு ஏற்றவாறு குரலுக்கான உருவம் மாறுகிறது. மனித மனவியலின் இந்த தனித்தன்மை எழுத்துகளுக்கும் சொற்களுக்குமான பணியில் மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கின்றது.

ஒவ்வொருவரின் மன நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்ளும் தன்மை மாறும் போது துல்லியத்தை அடைவது அரிது. பெரும்பாலான வாசகரிடம் பொருளைக் கொண்டு சேர்ப்பதில் எழுத்துகள், சொற்களின் வெற்றி என்பது பாதிக்கும் குறைவே. இதற்கிடையே தவறான உச்சரிப்பு, தவறான வாசிப்பு, சொல்லுக்கு சொல் பொருளைக் கற்பிதம் செய்யும் வாசகரின் இயல்பறிவு இவையெல்லாம் சேர்ந்து எழுத்துகளின் வேலையை இன்னும் மிகப்பெரும் சுமையாக மாற்றி விடுகின்றன. இதனால் எழுத்துகள் இப்பெரும்  பணிச்சுமையில் இருந்தும் மன உளைச்சலில் இருந்தும் தங்களை ஆசுவாசப் படுத்திகொள்ளத் தேடிக் கொண்ட  வழிதான் இந்த ரகசிய பார்ட்டி. இதன் மூலம் எழுத்துகளின் சோர்வு குறைவது போலவும் மன அழுத்தம் தணிவது போலவும் உணர்வதாக எழுத்துகளின் இன்னொரு நாட்குறிப்பில் பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

பார்ட்டியில் ஆட்டம், பாட்டம், கதையாடல், உரையாடல் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. குறிப்பாக போதை இல்லை. காந்தத்தின் ஒரே திசைகள் ஒன்றையொன்று விலக்குவது போல. எழுத்தே போதை என்பதால் போதைப் பொருட்களுக்கு பார்ட்டியிலிருந்து விலக்கு. மீயொலி அலைவரிசையில் நடக்கும் இந்தக்கூத்தில் சப்தத்திற்கு வேலையில்லை. நூலகம் ‘மயான' அமைதிக்கான இடம். அங்கே ஏதேனும் சப்தம் அதுவும் நடுநிசியில் கேட்டால் அவ்வளவுதான். மூடநம்பிக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்து புதினம் ஒன்றை எழுத ஆரம்பித்துவிடும். நூலகத்தில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாகப் புரளிகள் கிளம்பும். ஏற்கனவே நூலகம் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நூல்களின் தலைவர் எந்த விதமான பரீட்சார்த்த முயற்சிகளிலும் இறங்க முயல்வதில்லை.

நூலகத்தை சுற்றி இருக்கும் வௌவால்களே ரகசியப்பார்ட்டியின்  மீயொலிப் பாடல்களைக் கேட்டுக் கைதட்டி ஆரவாரம் செய்யும் சீயர்லீடர்ஸ். வௌவால்களுக்கும் எழுத்துகளுக்கும் இடையேயான நட்பு ஆழமானது. சில எழுத்துகளுக்கும் வௌவால்களுக்கும் ரகசிய உறவு இருப்பதாகவும் அதற்கு சாட்சியாக வௌவால்களின் எச்சங்களும் மூத்திரமும் புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே கிடைத்ததாக நூலகத்தின் புத்தகப்புழுக்கள் பேசுவதாக ஒரு பேச்சு அடிபட்டது. சில வௌவால்களுக்கு ‘யோலன் ச்சாங்'இன் புத்தகத்தில் உள்ள சித்திர எழுத்துகளைப் போல குட்டிகள் பிறந்ததாக ஆவணப்படம் ஒன்றும் விவரிக்கிறது.

அன்றும் அப்படித்தான் எல்லா எழுத்துகளும் கூத்திற்குத் தயாராக இருந்தன. மானுடவியல், பூலோகம், பௌதீகம், ரசாயனம், ரசவாதம், உயிரியல், தொல்லியல், வரலாறு, புவியியல், அரசியல், சமூகவியல், மனோவியல், தர்க்கம், தத்துவம், இலக்கியம், இசை, மருத்துவம், பொருளியல், வணிகம், தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், மனநலம், நளபாகம், கருவியல், விளையாட்டு, கலவியியல், கல்வியியல், அண்டவியல், ஆன்மீகம், சோதிடம், வாஸ்து, கம்யூனிசம், சோஷலிசம், ஜென், தாவோயிசம், அரசியலமைப்பு, பொழுது போக்கு, சுயசரித்திரம், இன்னபிற நூல்களில் இருந்தும் எழுத்துகளும் ஓசைகளும் தயாராக இருந்தன. ஓரெழுத்துச் சொல்லின் ஓசைகள் இசையமைக்க சித்திர எழுத்துகள் நடமாடின. ஹிந்தி, பிரஞ்சு, சைனீஸ், ஜப்பானீஸ், ஆங்கிலம் எனப் பல மொழிச் சொற்களும் ஒன்றாக இணைந்து ஆடிப்பாடுவதைப் பார்க்கும் போது மொழிச் சமதர்மமே மலர்ந்திருப்பதைக் காணலாம். மாண்டரீன் எழுத்துகளின் நடனம் அழகு; தமிழ் எழுத்துகளின் அபிநயம் அதிசயம்; ஆங்கிலத்தின் நடை நேர்த்தி; ஹிந்தியின் குரலில் கம்பீரம். அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அந்த விபரீதம் நடக்கும் வரை.

திடீரென கதவு திறக்கப்படும் சப்தம். எழுத்துகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன. என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் குழல் விளக்குகள் மின்னல் போல வெட்டி ஒளிர்ந்தன. உஷாரான எழுத்துகள் நிதானம் தவறின. நூலகர்  சுவடிமேயர் பொதியானாயன் வந்திருந்தார். அவரின் காலடிச் சத்தம் எழுத்துகளின் இதயத்துடிப்புக்கு சுருதி சேர்த்தது. துரிதமாக செயல்பட்டன எழுத்துகள். ஓசைகள் எழுத்துகளாகி, எழுத்துகள் வார்த்தைகளாகி, தனக்கான புத்தகத்தில் சென்று தனக்கான பக்கத்தில் சரியாக அமர வேண்டும். இதற்கான சூத்திரம் எல்லாம் ஏற்கனவே கற்பிக்கப்பட்டிருந்தாலும் நிதானத்திற்கு நேரமில்லை.  அவசரத்தில் அண்டாவிற்குள் கைவிட்டாலும் நுழையாது என்பது போல கண்ணில் பட்ட சட்டகங்களில் இருந்த நூல்களின் பக்கங்களில் எல்லாம் வார்த்தைகளான எழுத்துகள் தற்காலிகமாகப் புதைந்து கொண்டன. தலைமை நூலான சிரிட்டானிக்கா இண்டிக்கா என்ற ராட்சச உசாத்துணைக்கும் அது சரியென்றேபட்டது. நூலகர் சென்றபின்பு ஏற்கனவே கற்பிக்கப்பட்ட சூத்திரங்களின் படி உரிய நூல்களில் சென்று அமர்ந்து கொள்வது என்பது திட்டம். அத்தனை சொற்களும் கிடைத்த இடத்தினில் பதுங்கிக் கொண்டபோது கோட்டினைப் பிடித்துத் தொங்கும் எழுத்துவடிவம் கொண்ட மொழியைச் சேர்ந்த நான்கு எழுத்துகள் மட்டும் இடம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் கிழிந்து தொங்கிய ஒரு நூலின் அட்டையில் ஆசிரியர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ஒட்டிக் கொண்டன. தொங்கியே பழகியிருந்த அந்த எழுத்துகளுக்கு அட்டையில் ஒட்டிக்கொண்டு இருப்பது கடினமாக இருந்தது.

சுவடிமேயர் பொதியானாயன் அருகில் வந்தார். ஒவ்வொரு சட்டகமாகப் பார்த்தார். குறிப்பிட்ட சில நூல்களை எடுத்தார். எண்களைக் குறித்துக் கொண்டார். தலைப்பைக் குறித்துக் கொண்டார். பிறகு எழுத்தாளரின் பெயரைக் குறித்துக் கொண்டார்.  அந்தப் புத்தகங்களை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டார். பிறகு அந்த நான்கு எழுத்துகளும் ஒட்டிக்கொண்டிருந்த நூலை  எடுத்தார். எடுக்கும் போதே அட்டை, எழுத்துகளின் கனம் தாளாமல் கிழிந்து தொங்கியது. பிடிமானக்கோடு எதுவும் இல்லாமல் சரிந்து விழுந்த எழுத்துகள் அட்டையின் நுனியைப்பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த நூலைக் கண்டவுடன் பொதியானாயனின் முகத்தில் மகிழ்ச்சி. அலைபேசியை எடுத்தார். தொடர்புஎண்ணை அழுத்தி யாருடனோ பேசினார். நூலின் தலைப்பைக் கூறியவர் ஆசிரியரின் பெயரைக் குறிக்க மறந்து விட்டார். ஏற்கனவே எடுத்த நூல்களையெல்லாம் மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு எழுத்துகள் தொங்கிக் கொண்டிருந்த நூலை எடுத்துக் கொண்டு சென்றார். கொண்டு வந்த பையில் வைப்பதற்கு முன் அக்குளில் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் கனம் தாளாமல் கிழிந்திருந்த அட்டை மேலும் கிழிய, தொங்கிக் கொண்டிருந்த எழுத்துகளுடன் கீழே விழுந்தது. “கொண்டுகூட்டு' என்று தலைப்பு கொண்ட அந்த நூல் அநாமதேயராக நூலகரின் பையில் பயணித்தது. 

சில நாட்கள் சென்றதும் சுவடிமேயர் சற்று, பயங்கர பதட்டத்துடன் நூலகத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தார். பதிவேடுகள் எல்லாம் அவர்முன் குவிந்து கிடந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தார். ஒரு குறிப்பிட்ட எண் கொண்ட நூலைத் தேடிக் கொண்டிருந்தார் போல. அங்கு வந்த பனுவல்புழுவன் என்ற ஆராய்ச்சியாளர் நூலகரிடம் வந்து அவருக்குத் தேவையான நூல் ஒன்றின் பெயரைச் சொல்லி அதை எடுத்துக் கொடுக்குமாறு கூறினார். வேலையிலிருந்த சுவடிமேயர் பொதியானாயன் சற்று எரிச்சலுடன் ‘சார் இன்னக்கி எனக்கு நேரமில்ல. வேறொரு முக்கியமான வேலையா இருக்கேன்.

நீங்க வேணும்னா நாளக்கி வாங்களேன்' என்று கூறினார். ‘சார் எனக்கும் அவசரம் தான் சார். எனது ஆய்வுக்கு கண்டிப்பா இந்த உசாத்துணை தேவை சார். இங்கே உக்காந்து படிச்சுட்டு இங்கே வச்சுட்டுப் போயிடறேன்' என்றார் பனுவல்புழுவன். அவரின் தொடர்நச்சரிப்பைத் தாங்கமுடியாத  பொதியானாயன் ‘சார் இந்த நூலுக்கு இன்டெலிவோஸ்டுப்பிடிடோக்கியா நாட்டின் உயரிய விருதான செவாசேசேநோபி லாட்சர்க்கர் விருது கிடைத்துள்ளது. இந்த நூல் பிரதி வேறு எந்த நூலகத்திலும் இல்லை. “கொண்டுகூட்டு' என்பது நூலின் தலைப்பு. ஆனால் அதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. நூலிலுள்ள விவரங்கள் எதுவும் நூலகத்தில் உள்ள பதிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இப்படி ஒரு நூல் இருந்ததாகவும் பதிவுகளில் இல்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறேன். இந்தா பாருங்க, இது தான் அந்த நூலின் எண். இங்கிருக்கும் ஆயிரக்கணக்கானப் பதிவுப் புத்தகங்களில் இருக்கும் விபரங்களில் இருந்து இந்த நூலின் ஆசிரியர் யார் என்று தேடி எடுக்க வேண்டும். இந்நூலின் பிரதி வேறு எங்கும் கிடைக்கவில்லை. கணிப்பொறியில் இருக்கும் பதிவுகளிலும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கான பதிவேடுகளில் தேடியாயிற்று. இப்போது இந்த நூலகம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.  தயவு செய்து ஒருவாரம் கழித்து வாருங்கள். அவசரமாக இருந்தால் அந்தா பாருங்க, அங்க குவிந்து கிடக்கும் புத்தகங்களில் தேடிப்பாருங்க,' என்று நீட்டி முழங்கினார் சுவடிமேயர் பொதியானாயன். பிரச்னையின் வீரியத்தைப் புரிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்ற பனுவல்புழுவனின் காலுக்குக் கீழே கிடந்த அந்த நான்கு எழுத்துகளும் நைந்து சிதைந்தன. காலணியில் அப்பிக்கொண்டு சிறிது தூரம் பயணித்த அந்த நான்கு எழுத்துகள் சற்றேறக்குறைய அறுந்து தனித்தனியாகச் சிதறின. சிறிது நேரத்தில் ஒரு பெருக்குமாரு அந்த எழுத்துகளைப் பெருக்கி ஓரத்தில் ஒதுக்கியது. மெல்லிய காற்று அந்த எழுத்துகளை ஒரு மரச்சட்டகத்தின் அடியில் கடத்தியது.

விஷயத்தை அறிந்து கொண்ட மற்ற நூல்கள் “கொண்டுகோட்டு' - இன் மேல் கடும் பொறாமை கொண்டன. அன்று நடந்த குழப்பத்தில் அந்த நூலகத்தில் உள்ள ஒவ்வொரு நூலிலும் இருந்த கிடக்கைகளின் தொகுப்பாகவே “கொண்டுகூட்டு' உருவானது. அப்படி உருவான அந்த நூலுக்கு எப்படியோ ஒரு முழுமையும் தொடர்பும் கிடைத்திருப்பது அதிசயம்தான்.  அந்த முழுமையும் தொடர்பும் நடுவர்களுக்கு மிகவும் புதியதாக வியப்பாகத் தோன்றியிருக்கக் கூடும். அதனால் தான் விருதினைப்பெற முடிந்துள்ளது என்ற கருத்தில் நூல்கள் ஒருமித்து நின்றன. அதுவே உண்மையும் கூட. அதனால் அந்த விருது எல்லா நூல்களுக்கும்  கொடுக்கப் படவேண்டும் என்று நூலகரிடம் முறையிடுவதற்கு நூல்களின் தலைவருடன் எல்லா நூல்களும் நூலகரைச் சூழ்ந்து நின்றன. நூல்கள் புடைசூழ நிற்பதைக் கண்ட சுவடிமேயர் பொதியானாயன் அச்சத்தில் உறைந்து போனார். முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டு முன்னின்ற நூல்களைத் தள்ளிக்கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க அங்கிருந்து ஓடினார் சுவடிமேயர். “பயப்படாதீங்க சார். நாங்க சொல்றதக் கொஞ்சம் கேளுங்க' என்று சிரிட்டானிக்கா இண்டிகா நூலகரை நோக்கிக் கத்தியது. நூலகத்தின் கதவினை அடைத்துத் தாழிட்டது ஒரு பேரகராதி. கடைசியில் சுவடிமேயர் செய்வதொன்றும் அறியாமல் வாயடைத்துப் போய் நூல்களிடம் சரணடைந்தார். நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தது சிரிட்டானிக்கா இண்டிக்கா.

சாட்சியாக அங்கிருக்கும் சில நூல்களை எடுத்து அதில் சில பக்கங்களோ பத்திகளோ எழுத்துகள் ஏதும் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதை விரித்துக் காட்டியது.

கண்முன் நடக்கும் எதையும் நம்ப முடியாத சுவடிமேயர் பொதியானாயன் நூலகத்தை பிசாசுகள் ஆக்கிரமித்திருப்பதாக நினைத்துக் கொண்டு சில மந்திரங்களை ஜெபித்தார். சினமடைந்த நூல்கள் செய்த கிளர்ச்சியில் நூல்களுக்கிடையே மாட்டிகொண்ட சுவடிமேயர்  அவற்றின் கால்களுக்கடியில் நசுங்கிச்செத்தார். நூலகப் பராமரிப்புப் பணியின் போது நூல்களை அடுக்கி வைக்கையில் சரிந்து விழுந்த நூல்களுக்கிடையே மாட்டி உடல் நசுங்கிச் செத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒரு கொலை, விபத்தாக்கப்பட்டது. அந்த நாளை அகில உலக நூலகப் பேரவை உடனடியாக நூலகர் தினமாக அறிவித்து தொடரும் ஆண்டு முதல் அனுசரிக்க முடிவுசெய்தது.

செவாசேசேநோபிலாட்சர்க்கர் விருதுக் குழு அவசரமாகக் கூடியது. இந்த நூலின் பிரதி உலகில் வேறு எங்கும் இல்லை ஆசிரியர் பெயரும் கண்டுபிடிக்க இயலவில்லை என்று வந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டதன் அடிப்படையில் சில தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டி அக்குழு கூடியது. நூலின் தலைப்பை அறிவித்து ஆசிரியரைக் கண்டு பிடிக்க வேண்டும் என்பது முடிவு. யார் அந்த நூலின் கருத்துருவைச் சரியாகச் சொல்கிறார்களோ அவரே அந்த நூலின் ஆசிரியர் என்று கண்டு பிடித்து விடலாம் என்பது குழுவின் கணிப்பு.

தலைப்பை அறிவித்தவுடன் “கொண்டுகூட்டு' உலகெங்கும் பிரபலமானது. எல்லா நூலகங்களையும் புத்தகக்கடைகளையும் பழைய புத்தகக் கடைகளையும் வாசகர்கள் மொய்க்கத் தொடங்கினர். பழைய புத்தகங்களைப் பத்திரப் படுத்தினர். பழைய புத்தகக் கடைக்காரர்கள் யாரும் எந்த புத்தகத்தையும் யாருக்கும் விற்கக் கூடாது என்று முடிவு செய்தனர்.  அந்த ரகசிய பார்ட்டி நூலகத்தை நோக்கி உலகத்தின் மூலை முடுக்கில் இருந்து பிரபல இலக்கியவாதிகளும், ஆய்வாளர்களும், மொழியியல் வல்லுனர்களும், பல்துறை அறிஞர்களும் வந்து சேர்ந்தனர். ஒவ்வொரு நூலிலும் சில பக்கங்கள் காலியாக நிரப்பப் படாமல் விடுபட்டிருப்பதைக் கண்ட ஆய்வாளர்கள் நூலகத்துறையின் மீது ஊழல் வழக்குத் தொடர்ந்தனர். அனைத்து நூல்களையும் கள்ளப்பதிப்பு என்று குற்றம் சாட்டினர்.  நூலகத்துறை முன்னாள் இன்னாள் ஆணையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, “கொண்டுகூட்டு' உலகத்தின் பேசு பொருளானது. முகநூல், புலனம், சமூக வலைதளங்கள் அனைத்திலும் கொண்டு கூட்டைப் பற்றியே கருத்துப்பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. காணொளிகள் நடந்தன. ஆய்வரங்குகள் நடந்தன. ஆனால் யாரும் “கொண்டுகூட்டு”' வை வாசிக்க முடியவில்லை. உலகத்தில் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருந்தது. அது விருதுக்குழுவிடம் இருந்தது. “இதை நான் தான் எழுதினேன்' என்று உரிமை கொண்டாடவும் யாரும் இல்லை.

 செவாசேசேநோபிலாட்சர்க்கர் விருதுக் குழு உறுப்பினர்களும் தலைவரான அவார்டிகோ அட்வெர்டோவும் “கொண்டுகூட்டு'வு-க்கு விருதினை வழங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆசிரியர் அநாமதேயர் என்று குறிப்பிட்டு எந்த நூலகத்தில் இருந்து பெறப்பட்டதோ அந்த நூலகத்திற்கே விருதினை வழங்குவது என்று முடிவு செய்தனர்.

இறுதியாக அந்த நாளும் வந்தது. “இந்த வருடத்திற்கான செவாசேசேநோபிலாட்சர்க்கர் விருதை அநாமதேயரான “கொண்டுகூட்டு' தட்டிச் செல்கிறது. ஏதூராஸ் மாநகராட்சியின் சிண்டிகேட் நூலகத்தின் தற்போதைய நூலகர் இரண்டாம் சுவடிமேயர் பொதியானாயன் விருதினைப் பெற்றுக் கொள்வார்,' என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்தவுடன் பழுப்பு நிறத்தில் இருந்த எழுதுகோல் வடிவ விருதினை சிறப்பு விருந்தினரான முந்தைய வருடம் செவாசேசேநோபிலாட்சர்க்கர் விருதைப் பெற்ற எழுத்தாளர் தாகுரதிதாசமான், நூலகரிடம் வழங்கும் போது கரகோஷங்களால்  அரங்கமே அதிர்ந்தது. ‘கொண்டுகூட்டு' என்னும் தலைப்பு உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஏற்படுத்திய தாக்கத்தினால் உலக மக்கள் அனைவரும் விருது வழங்கப்படும் நிகழ்வை தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் கண்டு மகிழ்ந்தனர். “ஆசிரியர் யார் என்று தெரியாத புத்தகம் உலகம் முழுவதும்  வாசிக்கப்படப் போகிறது. செவாசேசேநோபிலாட் சர்க்கர் விருதுக் குழு இந்த நூலை உலகம் முழுவதும் பதிப்பித்து விற்பனை செய்யும் என்று அறிவித்த போது உலகம் முழுதும் வாழும் வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்ட உள்ளக்கிளர்ச்சிக்கு அளவே இல்லை. அதில் என்ன தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இன்னும் அதிகமாகியது. “இந்த நூல் ஒரு கட்டுரையா? கவிதையா? புதினமா? நாடகமா? என்றால் எல்லாவற்றிற்கும் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். ஏனென்றால் உள்ளமைப்பும் கிடக்கையும் அப்படி. சில இடங்களில் கவிதை, சில இடங்களில் நாடகம், சில இடங்களில் புதினம், சில இடங்களில் உரைநடை போல இருக்கும். ஒரே நெட்டில் வரிசையாகப் படித்தால் இந்தப் புத்தகத்தின் கிடக்கை விளங்காது. முதல் பக்கத்தின் பொருள் மூன்றாவது பக்கத்தில் விளங்கும். கடைசி அத்தியாயத்தின் புதிருக்கான விடை மூன்றாம் அத்தியாயத்திலேயே அவிழ்க்கப்பட்டிருக்கும். இதுதான் இந்த நூலின் புதுமையே. இப்படிப்பட்ட ஒரு நூல் உலகத்தின் எந்த மொழியிலும் இதுவரை வந்ததில்லை. இனிவரப்போவதும் இல்லை என்று கூறி மீண்டும் ஒருமுறை பலத்த ஆரவாரங்களுக்கு இடையே இரண்டாம் சுவடிமேயர் பொதியானாயன் கையில் இருந்த விருதினைப் பிடித்துத் தூக்கிக் காட்டினார் விருதுக்குழுத் தலைவர் அவார்டிகோ அட்வெர்டோ. 

அதே நேரம் ரகசிய நூலகத்தின் மரச்சட்டத்திற்குக் கீழ் கிடந்த நான்கு எழுத்துகளும் பிடித்துத் தொங்குவதற்கு, துண்டாகிப் போன ஒரு பல்லியின் வால் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தன. அந்த நான்கு எழுத்துகளும்

சேர்ந்து உருவாக்கும் சொல்லுக்குக் ‘கவுடள்‘ என்று நேரடியாகவும் ‘கடவுள்' என்று கொண்டுகூட்டியும் பொருள் என்பதாக சில நூல்கள் பேசிக்கொண்டன. நான்கு எழுத்துகள் பல்லிவாலைப் பிடித்திருக்கின்றனவா? இல்லை “கொண்டுகூட்டு' வின் ஆசிரியர் பெயராக ஒட்டிக்கொண்டிருந்த ‘கடவுள்‘ விருதைப் போல இந்த பல்லிவாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறாரா? என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.  

இவ்வாறு முடிந்த அந்தக் கதையை ஏதூராஸ் மாநகரத்தின் சிண்டிகேட் நூலகத்தில் அமர்ந்து அந்நூலகத்தின் தற்போதைய நூலகர் நான்காம் சுவடிமேயர் பொதியானாயன் படித்து முடித்த போது இரவு பத்து மணி. புத்தகத்தின் அட்டையில்  எழுதியவரின் பெயர் என்ன என்று பார்க்க முனைந்த போது சற்று முன் இருந்த ஆசிரியரின் பெயர் இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார் சுவடிமேயர் பொதியானாயன். பதற்றத்துடன் எழுந்து, உடனே நூலகத்தைப் பூட்டிவிட்டுக் கிளம்பினார்.

நடுநிசி. மூடப்பட்ட நூலகத்திற்குள் இருந்த ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அட்டையிலும் இருந்து எழுத்துகள் மரச்சட்டங்கள், இரும்புச்சட்டங்களின் கால் வழியாக எறும்புகள் போல வரிசையாக இறங்க ஆரம்பித்தன.

பாபு கனிமகன் என்கிற அகமது திப்பு சுல்தான். தை.கா. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். முதுகலை ஆங்கிலம் படித்த பட்டதாரி ஆசிரியர். கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் மிக்கவர். ‘பூப்பெய்தாத புன்னகையும் புடம்போட்டகண்ணீரும்' என்ற கவிதைநூல் வெளிவந்துள்ளது. விரைவில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் இளையான்குடியின் வரலாறு்நூல் ஒன்றும் வெளியிட இருக்கிறார்.

ஜனவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com