செண்பகா

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

அவன் சொன்ன நகரத்தில், அவன் குறிப்பிட்டிருந்த ரயில் நிலையத்தில், அவன் கோடிட்டுக் காட்டின இடத்தில் நின்றாள்.  இதற்கு முன்பும் ஒரு தடவை இதே ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறாள். அவனும் அவளும் இணைந்து பயணித்திருக்கிறார்கள்.  எவரது சந்தேகத்துக்கும் இடம் தராமல், யார் கண்ணிலும் படாமல், மாலையில் நரை இருட்டு வருமுன் அமராவதியாட்டம் திரும்பி வீடு வந்திருக்கிறாள்.

இன்ன ‘லெக்கில்’ நிற்கிறேன் என்று தெரிவிக்க கைபேசியை அழுத்தினாள்.  வீட்டில் வெள்ளெனப் புறப்பட்டதிலிருந்து, அவனிடமிருந்து அழைப்பு எதுவும் இல்லை.  ரயில் நிலையம் வந்தடைந்தது முதலாக, அவனிடமிருந்து வரும் அழைப்பு ஒலியை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.  கால் மணி, அரை மணி என்று நீண்டு கடக்க, அவளே அழைத்தாள்.  அலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவனும் பயணத்திலிருக்கலாம்.

மூன்று நாட்கள் முன்னதாக அவளுக்கும் அம்மாவுக்குமிடையே சண்டை மூண்டதை செண்பகா நினைத்துப் பார்த்தாள்.  அது தாய் - மகள் சண்டையாக   நடக்கவில்லை.  ‘ஒருத்தரையொருத்தர் திங்கணும் போல  இருக்கு’ என்று எதிரிகள் மாதிரி சண்டை போட்டுக் கொண்டார்கள்.

இவள் செண்பகா, அம்மா மீனாட்சியுடன் சரிக்குச் சரி சண்டை கட்டுவாள்.  சில பொழுதுகளில் இந்தக் கொமட்டில குத்தி அந்தக் கொமட்டில எடுக்கிற மாதிரி கேட்டுவிடுவாள். தாயாய்ப் பிள்ளையாய் இல்லாமல் திகிடு முகிடாய் சண்டை போடுவதால் தெருவில்  சிலரும் கேலியடிக்கிற நிலை  வந்திருக்கிறது.   ’தாயும் பிள்ளையும் தலைகூடாமச் செய்திட்டானே’ என்கிறது போல் , அது ஊர்க்காரர்கள் கொம்பு சீவி விடுகிற விசயமாக மாறியிருந்தது.

“ஒன்னையிட்டு அம்மா எவ்வளவு கேவலத்துக்கு ஆளாகிட்டேன், பாத்தியா”

சுவரில் முதுகு சாத்தி, மோட்டு வளையை ஊடுருவித் துளைத்தது அம்மாவின் பார்வை .  மகளைப் பார்ப்பாள்.  பிறகு மோட்டு வளையைத் தவ்விப் பிடித்துத் தொங்கும் அந்தப்பார்வை.  மகளை நோக்கிய மன்றாட்டுத் தான் அது.

“நா இந்தக் கதிக்கு ஆளாகிருக்கேன்னா, நீ தான் ”

அம்மா கண்ணீரில் நிற்கிறாள்.அவள் மேனியை வைத்துக்கொண்டு ஊருக்குள் நடமாடினாலும், மனசுக்கு மூடாக்கு போட்டுக்கொண்டுதான் நடமாடுகிறாள். யாராவது தன் காதுபட, நேரெதிரில் கேட்டு விடுவார்களோ என்ற நடுக்கம். சிவகுருவுக்கும் செண்பகாவுக்குமான பிரியம் மெல்ல மெல்லக் கசிந்து ஊராருக்குள் உலவும் தீயாக ஆகியதும், அதைத் தீவட்டியாக அம்மா தூக்கிப் பிடித்திருந்தாள்.

“இப்ப என்ன பண்ணீட்டேன்னு, துடிக்கிறே?”

கேட்டுவிடத் துடித்த செண்பகா ,மனசில் கேட்டு, மனசில் மூடிக் கொண்டாள். ‘பல்லைக் கடி நெல்லைக் கடின்னு’ அமர்த்தியாய் இருக்கவேண்டிய நேரம் இது.  இந்த நேரம் தாழ்ந்து போகவேண்டும். அம்மாவுக்கு எப்படித் துப்புக் கிடைத்தது என்று தெரியவில்லை. சொல்வாளா என்று பார்க்கிறாள், துப்புக் கெட்ட மூதி சொல்லவே இல்லை. 

அம்மா பொத்தாம் பொதுவாகத்தான் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.  இப்போது குறிப்பாய் அந்தப் புள்ளியில் வந்து நின்றது.

“அங்ஙன கண்டேன், இங்ஙன கண்டேன்னு

சொல்றாங்க. அவனோட ஒனக்கென்ன பேச்சு?”

எந்தத் திரியும் போடாமல், எண்ணை விடாமல் ஆங்காரம் பற்றி எரிகிறதை, சொல் சொல்லாய் கட்டி அடுக்குகிறாள்.

“ஒன் அப்பன் தூர தேசத்துக்கு தொலைஞ்சு போனது ஒன் ஆட்டத்துக்குத் தோதா இருக்கு.  ஒன் அண்ணனுக்குத் தெரிஞ்சா, கொன்னு குழில வச்சிருவான்”

அம்மாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு   கிடக்கிறது.  பாவப்பட்ட எல்லா  சென்மங்கள் போலவும், கழுத்துக் கயிறு அவளுக்கும் ஒரு சுமை! எப்போதோ துபாய்க்குப் போன புருசனால் கால் காசுக்குப் பிரயோசனம் கிடையாது. எப்போதாவது ஒரு கால்க்கடுதாசு வீடுவரும்; ஏழு வருசமாய்  ஒரு செப்புக்காசு   இல்லை.  மஞ்சள் கயிற்றைக் கழற்றி வைத்து விட்டு, ஒத்தை சத்தையில் வெளியூர்களுக்குப் போய் நிற்க முடியாது. விசாரிப்பார்கள்.  புருசன் இருந்தும் இல்லை என்று

சொல்லியாக வேண்டிய கேவலம் வந்து சேருமே என்று தான்,கழுத்துக் கயிறைச் சுமந்துதிரிகிறாள். கணவன் எனப் பேர் கொண்டவனால் கனரும் நெருப்பு ஒரு பக்கம்.   இப்போது புது நெருப்பு படர்கிறது. “புருசனிருக்கும் போது, இந்தத் தப்பு நடக்குமா?பிள்ளைய வளர்க்கத் தெரியலே” என்று ஆவலாதி சொன்னார்கள். இரண்டு நெருப்புக்கிடையில் ஊர்ந்து தப்பும் ஒரு உயிர்போல் ஆகிவிட்டிருந்தாள்.

அப்பா துபாயில் இருக்கிறாரென்றால், அண்ணன் டெல்லியில் இராணுவத்தில் இருக்கிறான். எல்லா ஆண்பிள்ளைகளும் கல்யாணம் ஆனதும் காணாமல் போய் விடுகிறார்கள்.   மீனாட்சி தன் பேரிலும் குற்றமுண்டு என எண்ணினாள்.“குமரிருக்க நீதமில்ல” - என்று வீம்புக்கா சொல்வார்கள்?   நீண்டநாள் குமரிருக்கக் கூடாது.  ‘கொள்ளாக் குமரு, வில்லாச் சரக்கு’ என்பது  சொலவம்.  நீண்ட நாள் குமரு வைத்திருந்தால், அந்த கொள்ளாச் சரக்கு விற்பனையாகும் வழியைத்   தானே தேடிக்கொள்ளும்.  சட்டு, புட்டென்று ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பதற்கு ‘ஐவேஸீம்‘ இல்லை. “நா வேனுமின்னா செய்றேன்” என வெம்புகையில் மீனாட்சிக்கு உளைச்சலாகி ‘வெண்டாவி’  எடுத்து வருகிறது மனசு.   

குமரு என்பது ‘உசந்தகைப் பணியாரம்’. விநியோகிக்கையில், கூட்டத்திலிருக்கிற அத்தனை கைகளும் நீளும்.   சிவகுருவின் உசந்த கையில், தான் போய்ச் சேர்ந்தது எப்படி என்று செண்பகா தன்னைப் பற்றி யோசிக்கிறாள்.  தடயம் இல்லாமல் தாய் சடைவு கொள்ளமாட்டாள், சண்டைக்கு நிற்கமாட்டாள்.

 --இரண்டு--

மடத்துக்குளம் கண்மாய் வடமேற்கு முகணை மேட்டில் கோயில்;   ஊர் வெகு பின்னால் தென்பட்டது.  அத்துவானக் காடு.  அத்துவானக் காட்டில் தான் குடியேறுவோம்;  கோயில் வேண்டுமென்று பெரியாண்டவர், வீரபத்திரன், லாட சன்னாசி மூன்று தெய்வங்களும் யாருடைய கனவில் வந்து முரண்டு பிடித்தார்கள் எனத் தெரியவில்லை.  

முந்திய வருடங்கள் போலல்ல; நிறையப் பேர் காப்புக் கட்டி சாமியாகி விட்டிருந்தார்கள். சாமி கும்பிடும், பொங்கல் வைப்பும் வருசா வருசம் விமரிசகை கூடிக்கொண்டு போனது போல், இந்த வருடம் காப்புக் கட்டி சாமியானவரின் எண்ணிக்கையும் கூடியிருந்தது. 50 - பேர் வரை தேறும்.  சாமியாகிற எல்லோரும் பூசாரிகள்.  கல்யாணம் ஆகி பிள்ளை  பெற்றவன், வயசான பெரிசு என பேருக்கு ஒன்றிரண்டு  பூசாரிகள் தென்பட்டார்கள்.  மற்ற எல்லாச் சாமிகளும் கொஞ்ச வயசுக்காரர்கள்.

காப்புக் கட்டிவிட்டால் ஒருவாரம் வெளியூர் போய் வருவது கூடாது. காவித்துவராடை அணிந்து விரதம் இருக்க வேண்டும்.  காலை, மதியச் சாப்பாடு அத்துப் போக வேண்டும்.  சாயந்தரம் குளித்து, பூசையிட்டு, கோயிலில் போய் சாமி கும்பிட்டு , பிறகு வடை, பாயாசம், அப்பளத்துடன் விரதம் முறிக்க வேண்டும்.  அந்த ஒரு நேரச் சாப்பாடு தான்.  காப்புத் தடை என்று பெயர்.

உடல் பத்தியம் ஆணுக்கு மட்டுமல்ல. ஆணுக்குள்ள     கட்டுப்பாடு பெண்ணுக்கும் நீளுகிறது. விரதமிருப்பு நாட்களில் பெண்டிர், குறிப்பாக மனைவி கூந்தலில் பூச்சூடக் கூடாது.  இச்சையைத் தூண்டும் வண்ணத் தில் ‘பளிச்’  உடை கூடாது.    ஒருவாரமும் அனுசரணையாயிருப்பது என்று அவளும் சாமியாராகி விடுகிறாள்.  ஆணைக் காப்பவளாக ஆகிவிடும் பெண்களுக்கு  காப்புத்தடை உண்மையானதாகி விடுகிறது. காப்புத் தடை   நாட்களில், குடும்பத்தில் கல்யாணம், நிச்சயதார்த்தம், சடங்கு  என்று ஒரு விசேடமும் நடத்துவதில்லை; 

சொந்தக்காரியத்தில் கவனம் சிதறாமல்  பொதுக்காரியத்தில் குவிய வேண்டுமென்பது அதன் தாத்பரியம். மதியச் சாப்பாட்டுப் பந்தி முடித்திருந்தது.  சலவைத் தொழிலாளர் சமூகத்தின் விழாவென்றாலும் இனம், சாதி, ஊர் வேறுபாடில்லாமல், எல்லோரும் ஒன்னுமன்னாய் சாப்பிட்டுப் போனார்கள்.  தாழ்த்தப்பட்ட மக்கள் வந்தாலும் வரிசையில் ஒன்னாய் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அவர்களை எழுந்திரு என்று சொன்னது இல்லை. சமபந்திச் சாப்பாடு சோலை சாமி கோயிலில்தான் நடைமுறையில் இருக்கிறது.

சோலைசாமி கோயிலுக்குப் பிறகு சரிக்குச் சரி உட்கார்ந்து சாப்பிடுவது  இந்த மடத்துக்குளம் தான்.

கோயிலுக்குக் ‘கெடாய்’ நேர்ந்து விடுவதுண்டு.  போனவருசம் 17 கெடா: இந்த வருசம் நாலு எண்ணம் குறைவு. ‘கெடா’ நேர்ந்து விட்டவனும் ஆளோடு ஆளாய் உட்கார்ந்து சாப்பிட்டுப் போக வேண்டியது.  அவனுக்கென்று தனிப்பாத்தியதை கொண்டாட முடியாது.  ஒரு தோல் கூடக் கிடையாது.  உரிக்கப்பட்ட ஆட்டுத் தோலெல்லாம் அந்த இடத்திலேயே விலையாகி,வியாபாரி எடுத்துக் கொண்டு போக, தொகை கோயில் கணக்கில்  வைக்கப்படும்.

உணர்ந்து போயிருந்த மரங்களுக்குக் கீழே, உண்ட களைப்பில் மயங்கியிருந்தது கூட்டம்.  இரவுப் பந்தி ஆரம்பிக்க எட்டுமணி எடுக்கும்.  அதற்கு முன்னுள்ள,

சாயந்தரம்  இழந்த நேரம்.  சில கைக்குழந்தைக்காரிகள் இடுப்பில் இடுக்கிய குழந்தைகளுக்கு  ‘அன்னம்’ வாங்கிப் போனார்கள்.    புதிதாய் வந்த சிலர் அவ்வப்போது வந்து உட்கார்ந்து சாப்பிட்டுப் போனார்கள்.  ஒன்னு, இரண்டு சாமிகள் எந்த நேரமும் பறிமாறக் காத்திருந்தார்கள். வருகிறவர்கள் அருந்தலாக இருந்ததால், கொத, கொதவென்று ஆட்டுக்கறி, புளிக்கறி, சோறு  என்று  எடுத்துப் பரிமாற ஒரேயொரு சாமி அலைந்து கொண்டு இருந்தார்.  பெரிசாய் சன நெரிசலோ, எனக்குப் போடு, ஒனக்குப் போடு  சத்தக்காடோ இல்லாததால், அந்த ஒரு சாமி நிதானமாய்ப் பரிமாறினார்.

நிறையப் பேர் சாமியாகிவிட்டிருந்த சூழலில், சிவகுரு மட்டும் தனியாகக் கிடைக்க வாய்ப்பில்லை.  தட்டித் தட்டிப் போனது.  கூட்டத்தில் ஆளோடு ஆளாய்ப் பம்மிக் கிடந்து, ஓணான் போல் தலையை மட்டும் நீட்டிப் பார்த்தாள் செண்பகா.  யாராவது ஒரு சாமி அவனுடன் சேர்ந்தே காணப்பட்டார்கள்.  நாள் முழுக்க, காலம் முழுக்க, பொழுதா பொழுதன்னைக்கும் அவனுக்காகக் காத்திருக்கத் தயார்.  அந்தப் பக்கமாய் லாந்திக் கொண்டிருந்த அவன் முன்   ‘சக்’ கென்று   போய் நின்றாள் செண்பகா.

பெரியாண்டவர், வீரபத்திரன், லாட சன்னாசி - மூன்று தெய்வங்களும் குதிரையில் ஆரோகணித்திருக்தார்கள்.  வாளை உருவி சண்டைக்குப் பாய எத்தனித்தார்கள்.  வீரபத்திரன் கண்களை உருட்டி விழித்தபடி - இவர்களிரண்டு பேரையும் குறி வைத்து நின்றான்.  கை வாளேந்தி, கண்கள் திரட்டி நிற்பதை இவர்களிருவரும் சட்டை செய்யவில்லை.  “சாமி, பயமே அத்துப் போச்சா” என்று சொளக்கென்று தெய்வ உருவங்கள் ஒடிந்து விழுந்து விட்டன போல் தோன்றின.

இடுப்பில் துவராடையுடன் திறந்த மேனியனாக நின்ற சிவகுரு பாலைப் பாக்குறதா, பானையைப் பாக்குறதா என்பது போல செண்பகாவையும் பின்னாலிருந்த தெய்வங்களையும் மாறிமாறிப் பார்த்தான்.  குதிரைமேல் ஆரோகணித்து வீரபத்திர சுவாமி நடுவிலிருந்தார்.  இடது பக்கம் லாட சன்னாசி. வலதில் பெரியாண்டவர். இப்போது இழந்த நேரம்.  சாமிகும்பிட என்று எவரும் வரவில்லை.  முன்னாலிருந்த பெரிய திரையை இழுத்து தெய்வங்களை மறைத்தான் சிவகுரு.

அரிந்து வைத்த இலைக்  குவியலிருந்து செண்பகா ஒரு இலையை எடுத்து வந்து போட்டு உட்கார்ந்தாள்.

“சட்டியைக் கழுவிக் கவிழ்த்து வச்சாச்சி”  சிவகுரு சிரித்தான். 

செண்பகா எழுந்து போய்ப்பார்த்தாள்.  எல்லா அடுப்புக்களிலும், அடி அனல் மண்டிக் கிடக்க  அண்டாக்களில்  சூடு குமிழியிட்டுக் கொண்டிருந்தது.  அடுத்த பந்திக்கு  அண்டாக்களில் ஆட்டுக் கறி மீதியிருந்தது.

அவள் அப்படி நாலெட்டு போய் எட்டிப் பார்த்தது சாமிக்கு ஏற்கவில்லை.

“கொடுக்கறதுக்குள்ள என்ன பறப்பு?”

செண்பகா குறுஞ்சிரிப்பை உதிர்த்தாள்.

விரதமிருப்பில் மினுமினுப்பு ஏறியிருந்த உடலில் கண்களை ஓடவிட்டாள்.  தொப்புளின் மேலாய் லேசாய் சதைமேடு.  இளந்தொந்தி முண்ட ஆரம்பித்திருந்தது.  ஆனாலும்  வயிறு அளவெடுத்தது போல் வாளிப்பாயிருந்தது.

சுயநிலைக்கு வந்தவளாய் “நா என்னமோ நெனச்சன் யா” என்றாள்.

“நீ புராணம் பேச வேண்டாம், சாப்பிடு”  அதட்டினான்.

“ அதான, சாமிகளுக்குக் கோபம்  வருமா”

இது செண்பகாவின் நேரம். சீமையை வித்தாவது இந்த நேரத்தைத் தனதாக்கிக் கொள்ள நினைத்தாள்.            காப்புத் தடை அவனிடம் நன்றாகவே வேலை செய்திருந்தது.  ஒரு வாரக் கணக்குக்கு, அந்த இளஞ்சாமி யின் முகத்தில் வேறொரு புதிய முகத்தைச் சேர்த்திருந்தது. “ஆள் ரொம்ப மகுட்டமா இருக்கிறே. எனக்கு  மாறாட்டமாத் தெரியுது”

செண்பகா சிரித்தாள்.  அவள் ஒருத்திக்கு, சிவகுரு ஒருத்தனாய்ப் பரிமாறினான்.  அந்த ஒத்தச் சாமியே அவளுக்குப் பரிமாறியது எனச் சொன்னால் அது அவச் சொல்லாகி விடும். வேற யாரும் புதிதாய் வந்து சாப்பிட உட்கார்ந்தவேளை, அங்க என்று ஏற்கனவே பறிமாறிக் கொண்டிருந்தவரின் அந்தப்பக்கம் காட்டினான். அது தனக்குப் பிரியமானவளை தனக்கென ஒதுக்கிக் கொள்வதற்கு தோதாக அமைந்தது.அவர்களிருவரும் என்ற எல்லைக்குள் தற்செயலாய்க் கூட எவரும் வரமுடியாதபடிக்கு ஆக்கிக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்து எழுந்து அவன் முன் போய் நின்றாள்.

இப்போதுதான் அவன் அவளை அளந்தான். இல்லை, இல்லை, சிவகுரு என்ற சாமி அளந்து பார்த்தது.

ஊழிமீன் போல் திரட்சியாக இருந்தாள். அதே மீனின் செந்தூர வண்ணம்.  பதின்மவயதுக்கும் குடும்பப்பெண்ணுக்கும் இடைப்பட்ட பருவம். பக்கப் பிதுங்கல் இல்லாத அளவான உடல்;   முன்னால் நடக்கவிட்டு  பின்னே பார்க்கத் தூண்டும் லாவண்யத்தில் அவன்  லயித்திருந்த வேளையில்,  அந்தப் பக்கம், போக  வர இருந்தவர்களின் பார்வைகள் அவர்கள் மேல் லாவிப் பறந்தன. “எல்லாரும் பாக்கிறாங்க” லேசாய் முணுமுணுப்பு புரண்டது. அவனும் அதைக் கவனித்திருந்தான்.

அது கரிசல் காட்டில் உள்ளது போல் கண்மாய் அல்ல.  கரிசல் கண்மாயில் ‘அளி’ நிறைந்திருக்கும்.வழுக்கையுள்ள இளநீர்ச் சுவை  போல், அளி நிறைந்த கரையில் மோதி மோதி தண்ணீர் சுவையேறிக் கிடக்கும்.  மடத்துக் குளம்

செஞ்சரளும் செம்பாறையுமான கண்மாய்.  முந்தா நாள் பெய்த ஒரு பாட்ட மழைக்கு குண்டும் குழியுமான கிடங்குகளில் தண்ணீர் நிரம்பியிருந்தது. சாயந்தர மஞ்சள் வெயிலில் புதுத்தண்ணியென்றும் பாராமல் சில பெண்கள் குளிப்பதும்  துணி துவைத்து உலர வைப்பதுமாக  திரிந்தார்கள்.  நடமாட்டத்தைப் பார்த்தால், உள்ளூர் வாசிகளாய்  இருக்க நியாயமில்லை. வெளியூர்களிலிருந்து சாமி கும்பிட வந்தவர்கள் அவர்கள்.

கண்மாயின் பின்னுள்ள ஒடை மரத்துக்குக் கீழாக இறங்கி   இளவட்டங்கள் கலுங்குக்குள்( மதகு) மறைந்துபோனார்கள்.  ஒடை மரத்தை ஒட்டிய கம்மங்காட்டில் பயிர்கள் பீட்டை விட்டிருந்தன.  பால்கட்டிப் மேப்பருவமாயிருந்த    ஒன்றிரண்டு கருதுகளில் பிசின் மாதிரி  ‘பிசுக்கொட்டி’ நோய் பிடித்திருந்தது.    சாப்பிட சாப்பிட இனித்தூக் கிடப்பவை அந்தப் பிசின் ஒட்டின கருதுகள்.அன்னம் பிடிப்பதற்கு முன் பொட்டுக் கட்டிய கம்மங்காட்டில், பொட்டை உதிர்த்தபடி அந்த இளவட்டங்கள்  மறைந்தார்கள்.  கோயில் கொடைக்கு  கோடித்துணி உடுத்தி லட்சணமாய் வந்திருந்த அவர்கள், லட்சணம் கெட்டு தரையெல்லாம் மிதித்துத் திரும்பியபோது, கம்மம்பொட்டுகள்  புதுத் துணிகளின் மேல் ஒட்டியிருந்தன

“அச்சலாத்தியா, இல்லையா?”  அவர்களைப் பார்த்த செண்பகா  கேட்டாள்.

“நீ ஏன் அங்க கண்டுக்கிறே?

சாமி கும்பிட வந்தமா, போனமான்னு இல்லாம.”

அந்த நேரத்துக்கு இந்த வாசகம் அவனிடம் வெகு சோபையை உண்டாக்கியிருந்தது.“நம்ம காலடியை நம்ம சுத்தமா   வச்சிக்கிற வேண்டியது தான்”

 கண்மாய்க் கலுங்குக்குள்ளும், கிழக்கு முகணை ஒடைமரக் கம்பங்காட்டுக்குள்ளும் மறைந்து போய்த் திரும்பினவர்களின் அணிவகுப்பில் அவனில்லை.  செண்பகாவின் புளகாங்கிதம்  கொண்டு அவனை நோக்கினாள்.  ஒரு  வேளை ‘காப்புத் தடை’ நீங்கியதும் அது வந்து ஒட்டிக் கொள்ளுமோ என நினைத்த போது, உள்ளுக்குள் கமறல் எடுத்தது.

“காலத்துக்கும் காப்பாத்தனும், தாயே”

அவள் முணுமுணுப்பு.  அவளுக்குத் தெரியாமலே அவன் காதுகளைத் தொட்டிருந்தது.

“காப்பாத்தத் தானே, இருக்கேன்” என்றான் உள்ளார்த்தத்துடன்.

இப்போதுதான் செண்பகா  சுயநிலை அடைந்தாள்.  மெதுவாக, வேறயாருக்கும் கேட்டு விடக்கூடாது என்ற கவலை மேலெழ, எங்கோ பராக்குப் பார்ப்பது போல்

சொன்னாள் “வீட்டில நெருக்கடியாயிருக்கு”   

  மன உளைச்சல் உழப்பி எடுத்த நாக்கில் சொல் புரளவில்லை. 

 அவள் சொன்ன சேதியால்  அவன் மருளவில்லை; திடுக்கிட்டுப் போகவுமில்லை;  “சரி, நாளை மறு நா பேசுவம்” என்று  திட்டமாகச் சொன்னான்.

“நாளைக்கு”  அவசரம் காட்டினாள் செண்பகா.

அவன், தான் போட்டிருந்த வேஷத்தைக் காட்டினான் “இதெல்லாம் கலைக்கனுமில்லே” என்றான்.

எந்த இடம் என்று செண்பகா கேட்கவில்லை . சாத்தூர் நகரத்தில் சிவகுரு சிறு அளவில் ‘ஃபேன்சி’ கடை நடத்திக் கொண்டிருந்தான்.  ஒத்தை ஆளாய்க் கடையை நடத்துகிறான்.   ஃபேன்சி கடைக்கு அவள் பல தடவை போய் வந்திருக்கிறாள்.

செண்பகாவுக்கு அவன் மனதை, அவனை இறுகப் பற்றியதான பிடிமானம் கிடைத்தது.  இரு உயிர்களும் ஒன்றினை நோக்கி மற்றொன்று நகரத் தொடங்கிய அசைவை உணர்ந்தாள்.

--மூன்று--

 மீனாட்சி கண்விழித்துப் பார்த்த போது மகள் இல்லை.    உள்ளில் தேடிய போது, மகள்  வெளியேறியதற்கான தடயங்கள் இருந்தன. வேலைக்குப் போகும் பிள்ளை முதலில் கையில் எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸ் வீட்டிலிருந்தது.  இரண்டாவதாய் பெரிய ‘வயர் பேக்’ . தேடியபோது  சில துணிமணிகளும் குறைந்திருந்தன.

வழக்கமாய் வேலைக்குச் செல்லும் திசையில் அல்லாமல், வேறு திசையில் அவள்மகள் போனதைக் கண்டதாக எதிர்ப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

செண்பகா , அவன் சொன்ன   இடத்துக்கு தான் வந்து நிற்பதாகத் தெரிவிக்க, சிவகுருவின் தொலைபேசி எண்ணை மீண்டும் அழுத்தினாள்.  பல முறை அழுத்தியாயிற்று.  மறு முனையில் தொடர்பில்லை. நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து பதில் வந்தது.  முன்னர் ஒருமுறை இந்த ரயில் நிலையம் வந்திருந்தாலும்.  தடம் காணமுடியாத காடாய்த் தெரிந்தது. தெரிந்த ஒரு முகமும் எதிர்வரவில்லை.  எதிர் வந்து நின்று என்ன, ஏது என்று வரும் கணக்கில்லாக் கேள்விகளுக்கும் அவளிடம் விடையில்லை; நெடுநேரம் நிற்கிற அவளை, போகிற வருகிறவர்கள் ஒரு மாதிரிப் பார்ப்பது போல் பட்டது.   சந்தேகக் கண்களைத் தவிர்க்க, ரயில் நிலையத்தில் ஒரு திக்கிலிருந்து மறு திக்கு வரை போய் வந்தாள்.  கொஞ்சம் அலைந்து விட்டு வந்து மறுபடி கைபேசியைத் தட்டினாள்.  தொடர்பு கிடைக்கவில்லை.

அம்மாவிடமிருந்து, மீண்டும் மீண்டும் வந்த  அழைப்புகளைக் கவனமாக   நிறுத்தியிருந்தாள்.    அது வேண்டாத பக்கம்;   எல்லா அழைப்புகளும் ஒலித்த போதும், வேண்டிய பக்கமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை.  துவளும் உயிரைத் தட்டியெழுப்பும் ஒரு அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

மூன்று மணி நேரத்தின் பின் செண்பகா ரயில் நிலையத்திலிருந்து வெளியேறினாள்.  தனது ஊர் செல்லும் பேருந்தில் ஏறினாள்.  சாத்தூரில் இறங்கி, அவன் நடத்தும் பேன்சி கடைக்குப் போனாள்.  பத்து நாட்களாய் கடை சாத்தியிருக்கிறது என்றார்கள் பக்கத்துக் கடையிலிருந்தவர்கள்.கோயிலுக்கு அவன் காப்புக்கட்டிய காலத்தையும் சேர்த்துக் கணக்குப் போட்டாள்.

 செண்பகாவுக்கு அவன் சொன்னதான வாசகம் நினைவுக்கு வந்து, ஈரல்குலையில் குத்தியது.“ நம்ம காலடியை நம்ம   சுத்தப்படுத்தி வச்சிக்கிற வேண்டியது தான்”. அப்படியானால் அவன் அவளிடமிருந்து தனியாகி, அதன் மூலம் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டானோ?குமட்டியது. இதுவரை அவன் கொண்டிருந்தது பொய்யான வேஷம். இப்போது அவன் புனைந்ததுதான்  உண்மையான வேஷம் என்று கணிக்கமுடிந்தது.

ஆங்காரம் பொங்கி அடங்கியது.  வேலைக்குப் போய்த் திரும்பும் நேரமாகியிருந்தது. முக்காடு நனைந்த பிறகு, முங்கக் குளிச்சிர வேண்டியது தான்.  இனி என்ன இருக்கிறது. வேலைத் தலத்துக்கும் போய் விசாரித்துத் திரும்பியிருப்பாள் அம்மா.

வேலைக்குப் போய்த் திரும்புவது போல் வீட்டிற்குள் காலடி வைத்தாள்.  அம்மா சுருண்டு படுத்திருந்தாள்.  தாய்க்கும் மகளுக்குமிடையில், ஒரு பேச்சுவார்த்தையும் மூன்று நாட்களாய் இல்லை.  அந்தக் கணக்கிலேயே இருக்கட்டும் என்று அம்மாவை அழைக்காமல் சோர்ந்து வாடி உட்கார்ந்தாள். அவளுடைய வருகையை அறிந்த பிறகும் அம்மாவிடமிருந்து கண்ணீரோ, புலப்பமோ, கொதிப்போ, கூச்சலோ எதுவும் தட்டுப்படக் காணோம்.பசித்தது;  ஒரு துளியும் மத்தியானம் உள்ளே போடவில்லை.  ஏனத்தில் இருந்ததை எடுத்துப் போட்டுச் சாப்பிட்டாள்.

இனி இந்த மனதினில் சிறு கனவுமில்லை; களிப்பில்லை;  காதல் இல்லை;  மனிதன் கற்றுக் கொடுத்த பாடம் மட்டும் உடன் இருந்தது.

செண்பகா சமனப்பட்டிருந்தாள்.

மனசை சுத்தமாகத் துடைத்து விட்டு கண்ணயர்ந்தாள்.

ஜூலை, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com