செய்நன்றி

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

முப்பது லட்ச ரூபாய்க்கு வாங்கின வீடு. ஆனால் உள்ள போறதுக்கு பயமாயிருக்கு.

காரணம், ஒரு பேய்.

சென்னைக்கு மிக அருகில், தாம்பரம் தாண்டி இருபது கிலோமீட்டர் தொலைவில் அந்த வீட்டை வாங்கும் போதே யோசிச்சிருக்கணும். 'இரண்டு கிரவுண்ட் வீட்டை 30 லட்சத்துக்கு சல்லிசா கொடுக்கிறானே இந்த கண்ணாடிக்காரன்!'னு. 'அமெரிக்கா போய் செட்டிலாகப் போறேன். பணம் முக்கியமில்ல, மனுஷங்கதான் முக்கியம்'னு யோசிக்க விடாம பேசுனபோதே தயங்கியிருக்கணும். (வெள்ளையா இருக்கிறவன் மட்டுமில்ல கண்ணாடி போட்டவனும் பொய் சொல்ல மாட்டான்னு நம்ம ஊர்ல நம்புறது ரொம்ப தப்பு) பக்கத்துல டீக் கடைக்காரர் இஸ்திரிகாரர்களிடமாவது விசாரிச்சிருக்கணும். எவனுக்கும் தெரிஞ்சிடக்கூடாது, குறைஞ்ச விலைல வீடு கிடைக்குது, அடுத்தவன் தட்டிட்டுப் போய்டக் கூடாதுனு நெனச்ச அல்பத்தனம் இன்னைக்கு அழ வச்சிக்கிட்டு இருக்கு.

பேயைப் பத்தி சொல்றதுக்கு முன்னால பேயை ஓட்டுறதுக்கு பேயா திரிஞ்சிக்கிட்டு இருக்கிற என்னைப் பத்தி ரெண்டே ரெண்டு வார்த்தைல சொல்லிடறேன். சாஃப்ட்வேர் என்ஜினீயர். இதுவே உங்களுக்கு நிறைய சொல்லிடும்.

அங்க இங்க பாத்து, நாலு ஞாயித்துக் கிழமை சுத்துனதுல இந்த வீட்டைப் பாத்ததுமே கீதாவுக்கும் ஹரிக்கும் ரொம்ப பிடிச்சிடுச்சு. ரெண்டு பெட்ரூம்ல சின்னதா ஒரு வீடு. சுத்தி நிறைய இடம். காசு வந்தா மாடி கட்டலாம். தோட்டம் போடலாம்.முன்னாடி நிக்கிற வேப்ப மரத்துல ஊஞ்சல் கட்டலாம். ஆடலாம், பாடலாம், ஓடலாம், குதிக்கலாம், கத்தலாம்... இப்படி கணக்கற்ற..லாம்கள்.  ஃப்ளாட் மாதிரி யாரும் கேள்வி கேட்க முடியாது.

'ஃபுல் சைஸ் கண்ணாடி ஒண்ணு மாட்டணுங்க' என்றாள் கீதா. 'இந்த ரூம் தான் என் கம்ப்யூட்டர் ரூம்' என்றான் எட்டு வயது மகன் ஹரி,

பக்கத்துல அவ்வளவாக வீடுகள் இல்லை. காற்றில் சிமெண்ட் வாசனை, கட்டுமானங்கள். குறுக்குத் தெருக்களில் தெரிந்த வடக்கத்தி பணியாளர்களும் ஜல்லி மெஷின்களும் அந்தப் பகுதி விரைவில் டபுள் ரேட் ஆகப் போவதை ஜோசியம் சொன்னது.

எல்லாம் நல்லாதான் இருந்தது, அந்த வீட்டின் முதல் ராத்திரி வரை.

காலைல பூஜைலாம் சிறப்பா நடந்துச்சு. வந்தவங்களாம் ஒரு கட்டு கட்டிவிட்டு கிளம்பின பிறகு, நெருங்கின சொந்தக்காரங்க மட்டும் மிச்சம் இருந்தாங்க. சாயங்காலம் காபி, மிக்சர் சாப்ட்டுட்டு அவங்களும் கிளம்ப, வீட்டில் இருந்தது நான், மனைவி, மகன் மற்றும் மனைவியின் காலேஜ் தம்பி. டிவி, இன்டர்நெட் எதுவும் இன்னும் வரலைன்றதுனால முன்பக்க படிக்கட்டுல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். ஃப்ளாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஹரி இங்கே வேப்ப மரத்தை சுத்தி சுத்தி ஓடிக் கொண்டிருந்தான். இருட்டத் தொடங்கியது. தூரத்தில் கட்டுமான வேலைகளின் சத்தம் அடங்க ஆரம்பித்தது. தெருவில் வெளிச்சமும் இல்லை. ஆட்களும் இல்லை. எங்கள் மாருதி டிசையர் மட்டும் சிமெண்ட் தூசியுடன் கடுப்பாய் நின்று கொண்டிருந்தது.

ராத்திரி சாப்பாடு, நாலு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு ஓட்டல்ல. வீட்டின் மகிமைகளைப் பத்தி பேசிக் கொண்டே சாப்பிட்டோம்.

சொந்த வீட்டுக்காரன் என்று காலரை ஒரு இஞ்ச் தூக்கிவிட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து வாசல் கதவை திறந்தப்பதான் முதல் அதிர்ச்சி.

ஒரு சாம்பல் உருவம் சட்டென்று சமையல் கட்டுப் பக்கம் ஒதுங்குவது போல் எனக்கு தெரிந்தது. தெரிந்ததா தெரியலையா? ஆளா, அசைவா?  ஒரு மில்லி செகண்ட்தான். லைட்டைப் போட்டேன்.

ஒன்றுமில்லை.

சமையல் கட்டுப் பக்கம் எல்லாம் வச்சது போல் இருந்தது. மல்லிகை வாசம் மட்டும் கொஞ்சம் தூக்கலாக வந்தது. காலையில் பூஜை போட்ட வீடு. பெண்கள் பலர் பட்டுப் புடைவை மல்லிப் பூவுடன் வந்து
சென்ற வீட்டில் மல்லி வாசம் அடிக்காமல் இருக்குமா? சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

ஓவியம்
ஓவியம்ஜீவா

அதற்குள் வீட்டுக்குள் எல்லோரும் வர கவனம்
சிதறி, பிக் பாசுக்கு பேச்சு மாறி மல்லி வாசம் மறந்தது.

ராத்திரி ஹரியும் கீதாவும் உள்ளறையில் படுக்க, நானும் மச்சானும் ஹாலில் படுத்தோம். ஜன்னல்கள் திறந்து இருந்தன. பக்கத்தில் காலி மனைகள் என்பதால் இதமான காற்று சூழ்ந்திருந்தது. வாசல் விளக்கை மட்டும் எரிய விட்டிருந்தோம். களைப்பு.. காத்திருக்கத் தேவையில்லாமல் தூக்கம் உடனே வந்தது.

நடு ராத்திரி. மூளையின் நரம்புகளை விழித்தெழ வைத்த ஒரு சத்தம்.

'ஆஆஆஆஆஆஆ'

அலறியது என் மச்சான்.

சட்டென்று எழுந்தேன்.

'ஏய் என்னாச்சு' தூக்கத்திலிருந்தவனை உலுக்கினேன்.

'யாரோ என் மேல உக்காந்து அமுக்கினாங்க.'  அவனால் பேச முடியவில்லை. மூச்சு வாங்கியது. தொப்பலாய் நனைந்திருந்தான்.

அதற்குள் சத்தம் கேட்டு கீதா எழுந்து வந்துவிட்டாள். விளக்குகள் போடப்பட்டன.

'அமுக்குனாங்களா, என்ன சொல்ற? நான் பக்கத்துலதானே படுத்திருக்கேன்' என்று நான்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜன்னல் பக்கம் ஒரு சலனம். அதை உற்று பார்க்க, வெளியிலிருந்த வேப்ப மரம் அசைந்தது, அந்த நொடி நேரத்தில் வேப்ப மரத்தில் மெல்லிய வெண் புகை...புகையா அல்லது பிரமையா என்று யோசிப்பதற்குள் அறையில் ஒரு வினோத மணம் பரவி மறைந்தது. 

'ஆளை வெட்டுற, குத்துற கேம்ஸை கம்ப்யூட்டர்ல நாள் முழுசும் ஆட வேண்டியது. ராத்திரி பயந்து அலற வேண்டியது' தம்பியின் அலறலுக்கு காரணம் சொன்னாள் கீதா.

கீதா தைரியமானவள். அவள் அப்பாவுக்கு மத்திய அரசு வேலை என்பதால் இந்தியா முழுதும் ஊர் சுற்றி பல பல ஊர்களில் பல பல வீடுகளில் தங்கியவள். புது இடங்கள், புது முகங்கள், புது அனுபவங்கள் அவளைக் கலவரப்படுத்தியதே இல்லை. எனக்கு அப்படியில்லை. ராத்திரி இருட்டை ஜன்னல் வழியே பார்க்கவே தயக்கமாய் இருக்கும்.

'ஒண்ணுமில்லை. ஏதோ கனவு. லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்குங்க' என்று எங்கள் பயத்தை தள்ளுபடி செய்தாள்.

ஆனாலும் அதன் பிறகு யாருக்கும் தூக்கம் வரவில்லை. வீட்டை சுற்றி ஏதோ ஒரு அசைவை உணர்ந்துக் கொண்டே இருந்தோம்.

காலையில் பால் வாங்க மெயின் ரோடு கடைக்குச் சென்றபோது ஆர்வமாய் விசாரித்தார், கடைக்காரர்.

'நாலாவது தெரு வீட்டுக்கு புதுசா வந்திருக்கிங்களா?'

 'ஆமாம்'

 'விலை கம்மினதும் உடனே வாங்கிட்டிங்களோ?' கேள்வியில் 'ஏமாந்திட்டிங்க' தொனி.

'அப்படிலாம் இல்ல. வீடு பிடிச்சிருந்தது'

'ராத்திரி அங்கதான் தங்கினீங்களா? அந்த வீட்டுல இருந்தவங்க யாரும் நிம்மதியா தூங்குனதில்லனு சொல்லுவாங்க. அந்த வீட்டுல தூங்க முடியலனு நிறைய பேர் காலி பண்ணிட்டு போயிருக்காங்க' கடைக்காரர் பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டே வீட்டின் ஸ்தல புராணத்தை விவரித்தார்.

 'அப்படிலாம் தெரில' என்று பாலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்ததும் பால்காரர் சொன்னதை கீதாவிடம்
சொன்னேன். அவள் அதற்கெல்லாம் அசரவில்லை. 'வீட்டு விலையைக் குறைக்கிறதுக்காக புரோக்கர்கள் பண்ற தந்திரம் இது. பேயாவது கீயாவது. எந்த காலத்துல இருக்கிங்க?' என்று தெம்பாய்ப் பேசினாள். அதானே பே பால் பயன்படுத்தும் இந்தக் காலத்தில் பேயா? ச்சே!

'இன்னைக்கு ராத்திரியும் தங்கிப் பார்த்துரலாம் என்ன நடக்குதுனு' என்று கீதா அழுத்தமாய்ச் சொல்ல, நான் காலேஜுக்கு போகணும் என்று மச்சான் கிளம்பிவிட்டான். இந்தப் பேய் விவகாரத்தை விட ஸ்கூலுக்கு இன்னொரு நாள் லீவ் என்பது ஹரிக்கு சுவராசியமாய் இருந்தது.

ராத்திரி வந்தது. சாமி படத்துக்கு ஸ்பெஷல் பூஜை செய்தாள். உள் அறையில் படுக்காமல் ஹாலிலேயே படுத்துக் கொண்டோம். ஜீரோ வாட் பல்பை எரிய விட்டிருந்தோம். தலைக்கு அருகே துடைப்பத்தையும் செருப்பையும் வைத்திருந்தோம்.

பேயை நினைத்துக் கொண்டு படுத்ததில் தயங்கித் தயங்கி பயத்துடன் தான் தூக்கம் வந்து போய்க் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு நொடியில் தூங்கியவன் பக்கத்தில் அசைவு உணர்ந்து அரைக் கண் திறந்த போது கீதா உள் படுக்கையறையில் இருந்த பாத்ரூமூக்கு செல்வது தெரிந்தது. மீண்டும் வந்து படுத்ததும் தெரிந்தது.

கண்களை மூடத் தொடங்கினேன். முழுமையாக மூடவில்லை. அதற்குள்...

அது என்ன?

ஒரு உருவம். கருப்பா பழுப்பா வெளுப்பா என்று தெரியவில்லை. அறையின் மூலையில் நின்று கொண்டிருந்தது.. கண் சிமிட்டும் நேரத்தில் அங்கே அந்த உருவத்தைக் காணவில்லை. மிதமான வெப்பம் என்னைக் கடந்து சென்றது போல் இருந்தது.

கீதாவை எழுப்பலாமா என்று நினைத்த நொடியில்...

'வீஈஈஈஈஈஈஈல்'

கீதா அலறினாள்.

'யாரோ அமுக்குறாங்க, அமுக்குறாங்க' அவளால் பேச முடியவில்லை. நைட்டியில் மூச்சு வாங்கினாள். ஜன்னல் பக்கம் ஏதோ சலனத்தை இருவருமே உணர்ந்தோம். ஜன்னல் கதவு லேசாய் அசைந்தது. ஜீரோ வாட்டில் எதுவும் தெளிவாய்த் தெரியவில்லை.

சட்டென்று விளக்கைப் போட்டேன். கீதா அமர்ந்திருந்தாள். வேர்த்திருந்தாள். வெளுத்திருந்தாள்.

ஜன்னல் வழியே யாரோ எங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு. அருகே
சென்று மூடுவதற்கு அச்சமாய் இருந்தது.

'வேணாம். இந்த வீடு வேணாம்.' நடுங்கிக் கொண்டே சொன்னாள்.

அதன்பிறகு இருவரும் தூங்கவில்லை. விளக்குகளை எரியவிட்டு விடியலுக்காகக் காத்திருந்தோம்.

மறுநாளே பழைய வீட்டுக்கே சென்று விட்டோம். காலி செய்யாமல் வைத்திருந்தது வசதியாய் இருந்தது. ஹரிக்கு ஸ்கூல் முடிந்ததும் புது வீட்டுக்கு மே மாதம் மாறலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம்.

அதன் பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது. என் ஃபேஸ்புக் நட்பு பட்டியலில் ஜோசியர்கள், பூசாரிகள், சாமியார்கள் புதிதாய் இணைந்தார்கள். புது வீட்டில் பேய் ஓட்டும் பூஜைகள் தொடர்ந்து செய்யப்பட்டது. விதவிதமான
 சாமியார்கள், விதவிதமான பூஜைப் பொருட்கள். ஆனால் வீட்டில்  பேய் ஆட்டம் நிற்கவில்லை. ஒவ்வொரு பூஜை முடிந்ததும் பேய் இருக்கா ஓடிப் போய்விட்டதா என்று இரவு தங்கி டெஸ்ட் செய்வது வாடிக்கையாகிவிட்டது. மல்லி வாசம், சலனம், அமுக்கல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

முப்பது லட்ச ரூபாய். லோனுக்கே மாதம் முப்பதாயிரம் கட்ட வேண்டியிருந்தது.

ஏதாவது செய் என்று மனசு அலற, என் நினைவுக்கு வந்தான் சீனி. 

நான் படித்த திருச்சி கல்லூரி ஹாஸ்டல் அறை ஒன்றில் நிரந்தரமாய் ஒரு பேய் தங்கியிருந்தது. அந்த அறையில் யார் தங்கினாலும் வெளியே இழுத்துப் போட்டுவிடுமாம். நான் பார்த்ததில்லை. ராத்திரி உள்ளே படுப்பவர்கள், நடு இரவு கடந்ததும் அறை வாசலில் வந்து விழுவார்களாம். என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாது. இந்த அனுபவக் கதை காலம் காலமாகப் பேசப்பட்டு, அந்த அறைப் பக்கம் யாரும் போக மாட்டோம். முக்கியமாய் இருட்டு வந்த பிறகு. பேய் இருந்தது என்னவோ ஒரு அறையில்தான். ஆனால் அந்த அறை இருந்த வரிசையிலேயே யாரும் தங்கியதில்லை.

அங்கே ஒருத்தன் தங்கினான். சீனி.

என் வகுப்புதான். காலேஜுக்கு ரொம்ப வர மாட்டான். வந்தாலும் வகுப்புக்குள் வர மாட்டான். நிறைய அரியர். அதுக் காகக் கவலைப்படமாட்டான். ஒருநாள் நெற்றியில் பட்டையடித்திருப்பான். இன்னொரு நாள் கழுத்தில் பெரிய
சங்கிலி சிலுவையுடன் திரிவான். ஒரு நாள் ஜோல்னா பை. ஒருநாள் பேக்பாக். இப்படிதான் இவன் என்று கணிக்க முடியாத இளைஞனாய் இருந்தான். சட்டை பாக்கெட்டில் ஒரு பெண் மறைந்தும் மறையாமலும் தெரிவாள். உற்றுப் பார்த்தால் ' நான் கல்யாணம் பண்ணப் போற பொண்ணு. ஊர்ல இருக்கு' என்பான்.

ஒரு நாள், சினிமாவுக்கு வர்றீயா என்று கேட்பது போல் 'இன்னைக்கு ராத்திரி சுடுகாட்டுக்கு போறேன். நீ வர்றியா?' என்று கேன்டீனில் டீ குடித்துக் கொண்டிருந்த என்னை சீனி கேட்டான்.

'சுடுகாடா?'

'பயமா இருக்கா? ஒண்ணும் ஆகாது. கயிறு ஒண்ணை டெஸ்ட் பண்ணப் போறேன்'

'கயிறா?'

பாக்கெட்டிலிருந்து பல வண்ணங்கள் பூசிய கயிறை எடுத்தான். நாட்டு மருந்து கடை வாசனை அடித்தது. ஒரு முனையில் கறுப்பாய் ஒரு மரத் துண்டு கட்டி மறு முனையில் ஒரு நகம்.

' இது நேபாளத்துல ஒரு சாமியார்கிட்ட வாங்கினது. இதைக் கழுத்துல கட்டிக்கிட்டு பாத்தா பேய் தெரியும். பாக்கலாம் வர்றீயா?'

சரி என்று சும்மாங்காட்டியும் தலையாட்டினேன். ஆனால் ராத்திரி அவனும் வரவில்லை. நானும் அவனைத் தேடவில்லை.

மறுநாள் கேன்டீனில் கூட்டமாய்க் கதை பேசிக் கொண்டிருந்தபோது வந்தான். ராத்திரி சுடுகாட்டில் பேய்களுடன் பழகிப் பார்த்ததாய்ச் சொன்னான்.
பாக்கெட்டில் சாம்பல் வைத்திருந்தான்.

'சும்மா கதை விடாத சீனி. அடுப்பு சாம்பலை எடுத்துட்டு வந்துட்டு பிலிம் காட்டறியா?' சீனியை சீண்டினான் ரகு.

சீனிக்கு கோபம் வந்து விட்டது. 'மோந்து பார். அடுப்புக் கரி வாசமா வருது' என்று மூக்குகளுக்கு நேராக நீட்ட, சத்தியமாய் அடுப்பு வாசம் வரவில்லை. கருகிய முடி நாற்றம். அவசரமாய் விலகினோம்.

ரகு விடவில்லை. 'இவ்வளவு பண்றியே, நம்ம ஹாஸ்டல் ரூம்ல இருக்கிற பேய்கிட்ட பழகி அதை அங்கிருந்து போகச் சொல்லேன்' என்றான்.

ஹாஸ்டல் பேய் விஷயம் சீனிக்கு தெரிந்திருக்கவில்லை. புதிதாய் கேட்டுக் கொண்டு அன்று இரவே பேயை துரத்தி விடுவதாக
 சொன்னான்.

சொன்னபடியே ராத்திரி ஹாஸ்டலுக்கு ஒரு பையுடன் வந்தான். பைக்குள் என்ன என்று யாரும் கேட்கவில்லை.

ராத்திரி அந்த அறையில் தங்கினான். காலையில் சிரித்துக் கொண்டே வெளியில் வந்தான்.

'பேயை போகச் சொல்லிட்டேன். இனிமே அங்க வர மாட்டான். அவனுக்கு வேற இடம் பாத்துக் கொடுத்துட்டேன். பாவம். பக்கத்து டிராக்ல
செத்திருக்கான். இருக்க இடம் கிடைக்காம இந்த ரூமுக்கு வந்திருக்கான். பேரு என்ன தெரியுமா, மணி' என்று அலட்சியமாய் சீனி சொன்னதை ஹாஸ்டலே ஆச்சர்யமாய்ப் பார்த்தது. அதன் பிறகு கொஞ்சம் தைரியமான பையன்கள் அங்கே தங்கிப் பார்த்தார்கள். அந்த அறையில் எந்த அட்டகாசமும் இல்லை என்று ரிப்போர்ட் கொடுக்க, அதன்பிறகு சீனியை  திகில் கலந்தே எல்லோரும் பார்த்தோம்.

அவனுக்கு மாந்திரீகம் தெரியும், சூனியம் வைத்து விடுவான், ஏவல், செய்வினைக்காரன் என்று ஏகப்பட்ட கதைகள் அவனைச் சுற்றி உலவத் துவங்கின. அவன் வந்தாலே பையன்கள் ஒதுங்கத் துவங்கினார்கள். பட்டும் படாமலும் அவனுடன் பழகியது நான் மட்டும்தான். பரீட்சை பாடங்களுக்கு நோட்ஸ் கொடுப்பேன். டீக்கடைக்கு கம்பெனி கொடுப்பேன். அவன் சொல்லும் மாயஜால கதைகளையெல்லாம் சுவாரசியமாய்க் கேட்பேன். அவனிடமிருந்த மர்மங்களும் அமானுஷ்ய சாகசங்களும் எனக்குப் பிடித்திருந்தது.

ஓவியம்
ஓவியம்ஜீவா

நான் ஒருவன் தான் நண்பன் என்று உண்மையாகவே நம்பினான். 'உன்னை மறக்கவே மாட்டேன்' என்பான் அடிக்கடி.

நிற்க.

ஹாஸ்டல் பேயைவிட்டுவிட்டு வீட்டுப் பேய்க்கு வருவோம்.

ஹாஸ்டல் பேயை துரத்திய சீனியால் வீட்டுப் பேயைத் துரத்த முடியாதா?

சீனியை எங்கே தேடுவது?

அவனிடம் தொடர்பு விட்டுப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஃபேஸ்புக்கில் அவன் பெயரை தேடிப் பார்த்தேன். பேய் சீனியைத் தவிர மற்ற அத்தனை சீனிக்களும் கிடைத்தார்கள். யாருக்கும் சீனியின் இருப்பிடம் தெரியவில்லை. நம்பிக்கை போய்விட்ட சமயத்தில் ஒரு ஞாபகம்.

ஈமெயில் புழக்கத்துக்கு வந்த புதிதில் அவனுக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். அந்த ஐடிக்கு ஒரு மெயில் அனுப்பினால்... அந்த ஐடியை இன்னும் பயன்படுத்துவானா?

ஜிமெயில் வராத ஹாட் மெயில் காலம் அது. ஹாட் மெயிலில் தேடினேன். கிடைத்தது. சீனிஅருள்வாக்குஹாட்மெயில்டாட்காம்.

'டியர் சீனி, என்னை நினைவிருக்கிறதா? எப்படி இருக்கிறாய். உன் உதவி தேவைப்படுகிறது. இங்குதான் இருக்கிறாயா?' இரண்டே வரிகள்தான். அடுத்த நாளே பதில் வந்துவிட்டது.

'உன்னை மறக்க முடியுமா? செமஸ்டர் தேர்வுகளில் நீ செய்த உதவியை மறக்க முடியுமா? நீயில்லாமல் என்னால் பாஸே ஆகியிருக்க முடியாது. என்ன உதவி வேண்டும்?' தெளிவான ஆங்கிலத்தில் இரண்டு வரி பதில்.

என் சோகக் கதையைச் சொல்லி அவனால் பேயைத் துரத்த இயலுமா என்று பரிதாபமாய் மறு கடிதம் போட்டேன்.

அதற்கும் பதில் வந்தது.

'ஒரு வாரம் பொறுத்துக் கொள். அடுத்த வெள்ளி சென்னை வருகிறேன். மாலை ஆறு மணிக்கு சந்திக்கலாம். உன் பேய் வீட்டு விலாசம் அனுப்பு வந்துவிடுகிறேன்'

ஆகா. இதற்கு மேல் என்ன வேண்டும். என் பேய்த் தொல்லை அடுத்த வாரத்துடன் முடியப் போகிறது. சீனியின் மீது எனக்கு அப்படியொரு நம்பிக்கை.

சீனி வரும் நாள் வந்தது. ஆறு மணியிலிருந்து புது வீட்டுத் தெருவில் காத்திருந்தேன். ஆளைக் காணவில்லை.

'இன்னைக்கு யாராவது சாமியார் வராறா சார்' என்று கேட்டார் பக்கத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்த மேஸ்திரி.

'கேரளாவுல ஒரு சாமியார் இருக்காரு. நம்ம ஆடிட்டர் வூட்ல இருந்த பேயை அவர் துரத்துனாரு. அவரைக் கேட்டுப் பாரேன் சார்'

மேஸ்திரிக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லை. மேஸ்திரியும் பேச்சை நிறுத்தவில்லை.

'பேசாம வூட்டை எவன் தலையிலாவது கட்டிடு. எத்தனை நாள்தான் இப்படி அல்லாடுவே' மேஸ்திரி பேசிக் கொண்டிருக்கும்போதே துரத்தில் ஒரு உருவம்.

சீனியேதான். அதிகம் மாறவில்லை. மெலிந்திருந்தான். ஜிப்பா போன்ற உடையில்
சாமியார் சீடன் போல் தோன்றினான். தோளில் ஒரு பை.

'சீனி, எப்படி இருக்க? எங்க இருக்க? வந்ததுக்கு ரொம்ப தேங்ஸ்'

'என்ன ராம், தேங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு... இந்த வீடுதானா?'

'ஆமாம் சீனி, வீடு வாங்கி ரெண்டு மாசமாச்சு. நிம்மதியே போச்சு. நீதான் அந்தப் பேயை விரட்டணும்'

சீனி சிரித்தான். இருள் மங்கிய தெருவில் அவன் சிரிப்பில் அமானுஷ்யம் தெரிந்தது.

'ஒண்ணும் பிரச்சனையில்ல. இன்னைக்கு ராத்திரி அனுப்பி வச்சிடறேன். நீ வீட்டுக்குப் போய்ட்டு காலைல வா. நான் இங்க தங்குறேன்'

'நான் இருக்க வேண்டாமா? உதவிக்கு?'  உள்ளுக்குள் உதறல்தான். ஆனாலும் சும்மா கேட்டு வைத்தேன்.

''வேணாம் வேணாம். அதெல்லாம் உனக்கு
செட்டாகாது''

அவன் சொன்னது நிம்மதியாக இருந்தது.

'ரொம்ப தேங்க்ஸ் சீனி. சரி வா ஒட்டல் போய்
சாப்பிட்டு வரலாம்'

'வேணாம். நான் சாப்பிட்டுட்டேன். ஒரு பூஜை செய்யணும். மணியாச்சு. நீ கிளம்பு'

'அப்படியா சொல்ற? சரி. ரொம்ப தேங்க்ஸ். நான் காலைல வந்துடறேன்'

டிசையரை கிளப்பினேன். மனமெல்லாம் மகிழ்ச்சி.

மறுநாள் காலை நான் திரும்பி வர பத்து மணியாகிவிட்டது. வீட்டில் சீனி இல்லை. இரண்டு வரி கடிதம் மட்டும் கதவில் ஒட்டி இருந்தது.

'ராம், மன்னிக்கவும். நீ வரும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. வேறு ஒரு அவசர வேலை வந்துவிட்டது. இனி உனக்கு இந்த வீட்டில் தொந்தரவு இருக்காது.& ப்ரியத்துடன் சீனி'

சீனியிடம் மொபைல் எண்ணைக் கூட வாங்கவில்லை. பரவாயில்லை. அவன் போனதைவிட பேய் போயிருக்குமா என்பதுதான் எனக்கு முக்கியமாய் இருந்தது.

அன்றிரவு புது வீட்டில் சில உறவினர்களோடு தங்கினோம். மல்லி வாசம் இல்லை. சலனங்கள் இல்லை. வெப்பம் ஏறவில்லை. வேப்ப மர அசைவுகளில் மர்மம் இல்லை. நிம்மதியாய் இருந்தது.

அன்று மட்டுமல்ல, ஒரு மாதமாய் அங்குதான் தங்குகிறோம். இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. நிம்மதியாய்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது,  நேற்று என் மற்றொரு கல்லூரி நண்பனை மிகவும் தற்செயலாய் சந்திக்கும் வரை.

ஐந்து நிமிட விசாரிப்புகளுக்குப் பிறகு சீனியை சந்தித்தது பற்றி சொன்னேன்.

'எந்த சீனி?'

'சீனியை மறந்துட்டியா, ஹாஸ்டல்ல பேய் ஓட்டு னான்ல அவன்தான்'

'அவனா?'

'ஏன்?'

''எப்ப பாத்த?''

''போன மாசம்தான். இங்க வந்திருந்தான்''

' என்னது போன மாசமா? அவன் செத்து
அஞ்சாறு வருஷம் இருக்குமே!காதலிச்ச பொண்ணு கிடைக்கலனு தற்கொலை பண்ணிக்கிட்டானே!'

logo
Andhimazhai
www.andhimazhai.com