ஜெயவேலனின் கனவு!

ஜெயவேலனின் கனவு!

ஒரு ஜூஸ் போதும்ணே ..!'' வாங்கிய வேகத்தில் டம்ளரை  எச்சில் படுத்தினான் பூபதி.

‘‘ரண்டு போட்டாச்சு'' கடைக்காரர் இன்னொரு டம்ளரை உயர்த்திப் பிடித்தபடி சொன்னார். இரவு நேரத்திய விளக்கொளியில் கண்ணாடித் தம்ளர், உறைந்து போன ரத்தம் சுமப்பதாய் தெரிந்தது. மாசிக் கொடை விழாவின் கூட்டமும் கும்மாளமும் சாலை முழுவதும் படர்ந்திருந்தது. கோயில் முழுக்கவே சீரியல் பல்புகளால் சிங்காரிக்கப்பட்டிருந்தன. அதன் கலவையான வர்ண ஒளி தெருவில் போவோர் வருவோர்மீது கலைடாஸ்கோப்பின் வித்தியாசமான உருவங்களாய் படிந்திருந்தன.

‘‘அவென்ட்ட காஸ் இல்லிண்ணே .!'' தன் குரலில் எந்தப் பிசிறும் இல்லாமல் ஜெயவேலுவைக் காண்பித்து பதிலளித்தான் பூபதி. மிக்சர் ஜூசின் இனிப்பும், கூடுதல் குளிர்ச்சியும் வார்த்தைகளின் உச்சரிப்பினை உருமாற்றியது முதல் மிடறு விழுங்கிய பூபதி ,''பேண்ட் பாக்கட்ல வச்சிருந்த காச மணிப்பர்சோட காணாமப் போட்டான் ணே'' சொல்லிக்கொண்டே டம்ளரை உயரத்தில் தூக்கி ரசமட்டம் பார்த்தான்.

கண்களில் தேங்கியிருந்த கண்ணீரும், உடல் முழுசும் பதட்டமுமாய் மறுபடி மறுபடி சட்டை டவுசர் பாக்கட்களை துழாவிக்கொண்டே இருந்தான். ஜெயவேல்.

‘‘பேண்ட் பைல வச்சது எப்பிடா கீழ விழும்? ஓட்டச் சேப்பா?'' ஜெயவேலை அழைத்து நேரடியாகக் கேட்டார் கடைக்காரர். அவனது பரிதவிப்பு பச்சாதாபத்தை ஏற்படுத்தியது.

‘‘மணிப்பர்ஸ்க்குள்ல தாண்ணே வச்சிருந்தே. பர்சவே காணாம்'' கண்களில் தத்தளித்துக் கொண்டிருந்த கண்ணீர் மளுக்கென உருண்டு கன்னம்தொட்டு அவன் சட்டையை நனைத்தது. ஊரிலிருந்து வரும்போது உண்டியல் சில்லறையை பணமாக மாற்றிக்கொண்டு வந்திருந்தான். அப்பா கொடுத்த ஐந்து ரூபாய்க்கு தம்பியோடு சேர்ந்து குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டான்.

கோயில் வாசலில் பரப்பியிருந்த கடை ஒன்றில் பூபதியோடு சேர்ந்து தானும் ஒரு மணிபர்ஸ் வங்கினான். பதினஞ்சு ரூபாய். பூபதி கருப்பில் வாங்க ஜெயவேல் ப்ரௌன் நிறத்தில் எடுத்தான். மீதமிருந்த இருபது ரூபாயை  சில்லறையாய் மாற்றி  பர்சின் மூன்று அறைகளிலும் நிரவி வைத்திருந்தான். எல்லோரையும் போல பாண்ட்டின் பின்பக்கத்துப் பையில்தான் வைத்தான். பூக்குழி இறங்கி முடித்ததும், பூபதி, மிக்சர் ஜூஸ் சாப்பிட அழைத்தான்.

‘‘கோயிலுக்கு வந்தீகளாக்கும்?'' கடைக்காரர் கேட்டார்.

மாசிமாதம் மகா சிவராத்திரியன்று இரண்டுநாள் பெரியகும்பிடு. தமிழ்நாடு முழுசுமிருந்து பங்காளிகள் வந்து ஒன்றுகூடுவார்கள். தங்கியிருந்து முதல்நாள் அம்மன் கரகமும் நாளை காவல் தெய்வம் முத்தால் ராவுத்தருக்கு பல்லயம் இட்டு குறி கேட்டுச் செல்வார்கள். ஜெயவேலுக்கு ராவுத்தர் சாமியைப் பிடிக்கும்.. தாத்தாமேல் வந்து ஆடுவார். தார்ப்பாய்ச்சிய வேட்டியைக் கட்டிக்கொண்டு கையில் நீண்ட வாளுடன் களரி இறங்கும் தாத்தா ஜெயவேலுக்கு ரெம்பவே சினேகம். தாத்தா இருக்கிறவரைக்கும் களரியில் அவருடனேயே விபூதிச் சம்படத்துடன் அலைவான். ரெண்டு  வர்சத்துக்கு முன்னே அப்பாயி, தாத்தா ரெண்டுபேருமே செத்துப்போனார்கள்.

‘‘கூட்டாளிக்கு கொஞ்சங்கூடத் தராம நிய்யா குடிக்கிற!'' பூபதியிடம் கடைக்காரர் சொன்னார். அதற்குள் ஜூஸ் கால் டம்ளராகக் குறைந்து விட்டது. கன்னம் புடைக்க ஜூஸை வாயில் அடக்கியிருந்த பூபதி, கடக்கென விழுங்கிவிட்டு ‘‘எச்சலாயிருச்சே'' என்றான்.

பூபதி தனக்கு ஜூஸ் கொடுக்காதது, தான் கடையில் நிற்பது, இவை எதுவும் ஜெயவேலுக்கு உறுத்த வில்லை. சிந்தனை முழுசும் தொலைந்துபோன அழகான பர்சும், அதற்குள்ளிருக்கும் பணமும் மட்டுமே பூபதி ஜூஸ் குடித்ததும் தொலைத்த இடத்தில் அவனோடு போய்த் தேடவேண்டும். முத்தால் ராவுத்தரையும் சீலக்காரி அம்மனையும் வேண்டிக் கொண்டான். 'தன்னுடைய பர்ஸ் தொலைந்த இடத்திலேயே கிடக்க வேண்டும். யார்கண்ணிலும் பட்டுவிடக்கூடாது. அப்படிக் கிடைத்தால் உடனடியாக ரெண்டு ரூபாய்க்கு சூடம் வாங்கிக் கொளுத்துவேன்.'' என்றான். ஏற்கனவே பள்ளிக் கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யாமல் போனபோது ‘இன்னிக்கி வாத்தியார் வரக்கூடாது' எனக் கேட்டிருந்தான். அந்தக் கடனைச் செய்யவில்லை. ‘நம்புங்க - இன்னிக்கு ரெண்டுக்கும் சேர்த்துச் செய்துவிடுவேன்'' என நெஞ்சை அழுத்திப் பிடித்து வேண்டிக் கொண்டான். வீட்டில் அம்மாவும் ஜெயவேலும் சாமிக்கு ரெம்பவும் நெருக்கமானவர்கள். ஜெயவேலின் கனாவில் ராவுத்தர் தாத்தா அடிக்கடி வருவார். பேசுவார்.

‘‘போலாமா!'' கடேசிச் சொட்டை விழுங்கிவிட்டு புறங்கையால் வாயைத் துடைத்துக் கொண்டு தயாரானான் பூபதி. பாதி டம்ளர் ஜூஸ் ஜெயவேலுக்கு ஓசியாய்க் கொடுத்தார் கடைக்காரர். ‘‘காசு பணத்த சூதானமா வக்கெணுண்டா''

கடைக்காரர் ஜூஸ் கொடுத்ததோ, அதை வாங்கி தான் குடித்ததோ எதுவுமே ஜெயவேலுவின் நினைவில் இல்லை. பூபதியை இழுத்துக் கொண்டு பூக்குழி இறங்குமிடம் போனான். அம்மன் கோயிலின் வலதுபுறமிருந்த திடலில் கயிறுகட்டி வேலிபோட்டு அதற்குள் பூக்குழி அமைத்திருந்தார்கள். கரகம் சுமந்து வரும் அம்மன் கொண்டாடியும், முத்தால்ராவுத்தரும் அவர்களுடன் வீரபத்ரன், மதுரைவீரன், வீமன், நகுலன், சகாதேவன், பரதேவதைகள் உள்ளிட்ட பெண்தெய்வங்கள் என பதினெட்டுக்கும் மேற்பட்டவர்கள் தத்தம் அடையாளத்தையும் ஆயுதங்களையும் ஏந்திக்கொண்டு கரகத்தோடு ஆடிவருவார்கள். சன்னதிக்குள் காலடி எடுத்து வைக்கும் முன் அனைவரும் பூக்குழியில் இறங்கியே சன்னதி மிதிப்பார்கள்.

அன்று காலையில் இருந்தே குழி அமைக்க, குண்டத்தில் நெருப்பு வளர்க்க என தனியாக சிலர் விரதமிருந்து வேலை செய்தார்கள். கிட்டத்தட்ட ஒரு ட்ராக்டர் விறகு காலியானது.

தகதகவென மினுங்கும் நெருப்புக்குழிக்குள் பதனமாய்க் கால்பதித்து நடக்கும் காட்சியைக் காண கூட்டம் தள்ளிச்சாயும். வராக நதிக்கரையில் கரகம்  சோடித்து சாமியாடி வீதியுலா வந்து பூக்குழி இறங்குவர். சாமிகூடவே வந்தால் கூட்டத்தில் பூக்குழி இறங்குவதைப் பார்க்கவே முடியாதென்பதால். ஊர்வலத்தில் கலக்காமல் தப்பிவந்து பூக்குழியை காவல்காத்துக் கொள்வார்கள். இன்றைக்கும் அதுபோலவேதான் பூபதியோடு வேலிக்காலில் சாய்ந்து நின்றுகொண்டான். சாமிகள் வந்து பூக்குழியில் கால்வைத்ததும் பூபதியின்  செல்லில் ஜெயவேல் படம் பிடித்தான் அந்த சமயத்தில் நடந்த தள்ளுமுள்ளில்தான் பர்ஸ் கீழே விழுந்து விட்டது.

கோயில் சன்னதிக்குள் குலவைச் சத்தம் கேட்டது. ரேடியோ நிறுத்தப்பட்டிருந்தது. அனேகமாய் அம்மன் கரகம் கருவறைக்குள் இறக்கிவைக்கப்படுகிறது போலிருக்கிறது.

ஹே, ஹ்ஹே, ஹ்ஹே, ஹ்ஹே!

சாமியாடிகளின் அதட்டல் சத்தமும், சாமிகள் மலையேறும் அரற்றலும், அமட்டலுமாய் கலவையாய் ஒலித்தன.   

பங்காளிகள் கூட்டம் முட்டிமோதிக் கொண்டிருந்தது. கிடைத்த இடத்தில் அப்படி அப்படியே உட்கார்வதும் சாய்வதும், சிலர் கோயிலின் வெக்கைக்குப் பயந்து வெளியில் வந்து ரோட்டோர கடைகளின் வாசல்களில் சாய்ந்தனர். கூட்டம் கண்டு கடைக்காரர்களும் தத்தம் கடைகளை அடைத்துக் கிளம்பியது இன்னும் வசதியாகவும் போயிற்று.

பூசாரி அத்தனை தெய்வங்களுக்கும் படையல் போட்டு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி முடிக்க ஒருமணி நேரத்திற்குமேல் ஆகிவிடும். அதன்பிறகுதான், புட்டுமாவும், பச்சைப் பயறும் பிரசாதமாகக் கிடைக்கும்.

சாமியாடிகள் இறங்கிய பூக்குழியில் மணலைப்போட்டு மூடிக்கொண்டிருந்தனர். அதையும் மீறி அனல் தகிக்கவே செய்தது. கூடுதலாய் வெளிச்சத்திற்காக வேலிக்கால்களில் கட்டியிருந்த போகஸ் மின்விளக்குகளின் வெப்பமும் தகதகவென கானல் அலைகளை உருவாக்கிப் பரப்பியது.

நின்றிருந்த இடத்தின் தரையை குனிந்து கைவிரலால் கிளறிப் பார்த்தான் ஜெயவேல். தரையும் மணலும் சுட்டன. பூபதி காயப்போட்ட நெல்லைக் கிண்டுவது போல காலால் பூக்குழி வரையிலும் தேய்த்துக் கொண்டே போனான். ‘‘ஏண்டா ஜெயா, ஓங்கிட்ட பர்ச எடுத்தவெ ஓடும்போது  கீழ விழுந்திருந்தா?'' பூபதியின் அந்த சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய குழியை மூன்றுமுறை சுற்றிசுற்றித் தேடினார்கள்.

‘‘ஏண்டா வேண்டுதலா.? மூடுன குழிய இப்பிடிக் கிண்டுறீக, குழிக்குள்ள விழுந்திடப் போறீக'' வயசாளி ஒருத்தர் விரட்டினார். ‘‘கோயிலுக்கு வந்தமா, சாமியக் கும்புட்டமா, பயற வாங்கித் தின்னுபுட்டு வீட்ல போயி நொடக்குனமான்னு இருப்பானுகளா . ஆராச்சி பண்ணீட்டு இருக்காங்கெ''

‘‘இவெம் பர்சக் காணாம் தாத்தா''

‘‘மணிப் பர்சா''

‘‘ஆமா!'' அவரது கேள்வியில் ஜெயவேலுவுக்கு வெளிச்சம் தெரிந்தது. ‘‘செகப்பு பர்சு. ப்ரௌன்கலர்'' ஆவலாய் அடையாளம் சொன்னான்.

‘‘உள்ள கருப்பு ஜிப் இருக்கும். ஏண்டா'' பூபதி.

‘‘காணாப்போனா போனதுதே. கோயில் தளத்துல காணாச்சின்னா, அது சாமி எடுத்துச்சுன்னு  நெனச்சிக்கறணும். போய் வேற வேலயப்பாருங்க''

சாமி எடுத்துக்கிருச்சா!

பூபதியை அங்கேயே விட்டுவிட்டு கோயிலுக்குக் கிளம்பினான் ஜெயவேல். அம்மன் கரகம் நடந்த பாதையிலேயே அடிவைத்து நடந்தான். ஜெயவேலின் அப்பாயிக்கும் அவ்வபோது சாமி வந்திறங்கும். சொந்தபந்தங்கள் குழுமி இருக்கிற தருணம். குடும்பத்தில் ஏதாவது முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம் .. அவ்வாறான சமயத்தில் ‘‘கெக்கே கெக்கே'' என வினோதமய்ச் சிரித்து கைகளை ‘‘தட் தட்டென தட்டி ஞைஞைஞை'' என ஓசையும் ஒலிகளுமாய் ஒலித்து கண்களை உருட்டி கைகளைக் கோர்த்து உடம்பைத் திருகி ஆடினால், கொண்டைமுடி அவிழ்ந்து விடும். உஸ்ஸு உஸ்ஸு என சேக்கர் மிசினாய் ஆடுவார்.

எதிரில் இருக்கும் யாரையாவது தனது அகலமான உள்ளங்கையால் அவரது தலையை அடக்கி, முன்னும் பின்னுமாய் இழுத்துப் போட்டு குறி சொல்லுவார். ‘‘என்ன மறந்திட்டெ! என்றோ, கவலப்படாத.. ஆத்தா நா இருக்கேன்! எம்புள்ளீகள நா பரிதவிக்க விடுவனா!'' என்பதாகவோ அப்பாயினது களரி நிறைவுறும்.

தாத்தாவின் மீது ராவுத்தர் வந்து ஆடுவார். நிக்கல் முலாம் பூசிய இரும்பு வாளைத் தூக்கிக்கொண்டு சிலம்பம் ஆடுவதுபோல சுழற்றிச் சுழற்றி ஆடுவார். கம்பீரமாய் இருக்கும். ஊரேவந்து நின்று குறி கேட்கும். அத்தனை பேருக்கும் ஏற்ற இறக்கங்களுடனான வார்த்தைகளில் பதில் சொல்லுவார்.

சிறு பிள்ளைகளுக்கு ராவுத்தரைத்தான் அதிகம் பிடிக்கும். அதேபோல ராவுத்தர்  சாமிக்கும் சிறுகுழந்தைகள் மேல் பாசம் அதிகம். ஆடிக்கொண்டிருக்கும் போதே படையலில் வைத்திருக்கும் நாட்டுச் சர்க்கரையினை அள்ளி , வழியில் நிற்கும் அல்லது அப்பா அம்மா கரங்களில் இருக்கும் பிள்ளைகளுக்கு வாயில் ஊட்டிவிடுவார்.

தன்னுடைய பிரச்சனைகளைப் பூராவும் முத்தால் ராவுத்தரிடம்தான் ஒப்பிப்பான் ஜெயவேல். பள்ளிக்கூடம் விட்டு வீட்டுப்பாடம் எழுதி முடித்ததும் தாத்தாவின் வீட்டுக்குப் போவான். இவன் போகும் நேரமெல்லாம் தாத்தா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.  பள்ளிக்கூடத்தில் காணாமல் போன நோட்டு, அதிகமாக தன்னை அடிக்கும் லீடர், மறந்து மறந்து போகின்ற பாடங்கள்.! குறைகளை எல்லாம் தாத்தாவின் தோள்மீது சாய்ந்து கொண்டேதான் சொல்வான்.

சாப்பிட்டு முடித்ததும் தாத்தா மாடக்குழியிலிருந்து விபூதியும், வீரகாந்தமும் (பச்சரிசியும், விரலி மஞ்சளும் சேர்த்து இடித்த பிரசாதம்) எடுத்து முத்தால் ராவுத்தரைக் கும்பிட்டு நெற்றியில் பூசிவிட்டு கொஞ்சம் பேப்பரில் மடித்துத் தருவார். ஸ்கூல் பையில் போட்டுக் கொள்வான். அடுத்தநாள் லீடர் தட்டிக்கொடுத்துப் பேசுவான். பாடங்கள் கச்சிதமாய் நினைவுக்கு வரும்.

அவரும் அப்பாயியும் இறந்தபிறகு ஜெயவேலுவுக்கு திண்டாட்டம்தான். இப்போது பெரியப்பா மேல் ராவுத்தர் இறங்குகிறார். ஆதலால், தானே கோயில் வீட்டுக்குப் போய் விபூதியும் வீரகாந்தமும் எடுத்துக் கொள்வான்.

‘‘எங்குட்றா போன?'' கோயிலுக்குள் இருந்த அத்தனை கும்பலில் ஜெயவேலுவை அடையாளம் கண்டு திட்டியது அம்மா. ‘‘ஊருவிட்டு ஊரு வந்தா ஒரு எடத்தில நிக்க மாட்டியா?''

பர்ஸ் வாங்கியதும் அது காணாமல் போனதும் வீட்டில் யாருக்கும் தெரியாது.

‘‘சாமி கும்பிட்டியா?'' சன்னதிக்குள் நின்றிருந்த கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு அம்மா, ஜெயவேலை இழுத்துப் போனது.

ஆண், பெண் இரண்டு வரிசைகளுக்கு மத்தியில் இருந்த கம்பிக் கூண்டுக்குள் நிறுத்தி ஜெயவேலை தரையில் விழுந்து கும்பிடச் சொன்னது. ‘‘நல்ல புத்தியக் குடுக்கணும், நல்லா படிப்பு வரணும்னு விழுந்து கும்பிட்டுக்க''

அம்மாவின் சொல்படி நெடுஞ்சாண்கிடையாய் குப்புற விழுந்தான். ‘‘எம் மணிப்பர்ச எப்பிடியாச்சும் கண்டுபிடிச்சுக் குடுத்துரு ஆத்தா.. ப்ளீஸ்.. அழகான பர்சு. வேற எங்கிட்ட எதுவுமே இல்ல. ப்ளீஸ் ப்ளீஸ். நிஜமாவே நான் சொன்னபடிக்கு சூடம் ஏத்தறேன். ப்ளீஸ். அப்பாயி, தாத்தா நீங்கதான் காப்பாத்தணும்.'' மறுபடி மறுபடி அதே வாசகத்தை சொல்லிச் சொல்லி மன்றாடினான்.

பூசாரி சூடத்தட்டோடு வந்து நின்றார். வழியை மறித்துக் கிடந்தவனை அம்மாதான் தூக்கி நிறுத்தினார். ‘‘போதும் எந்திரி''

பூசாரியே அவனது நெற்றியில் விபூதி குங்குமம் பூசி விட்டார். வீரகாந்தத்தை வாயிலும் தலையிலும் இட்டார்.

அம்மன் சன்னதிக்கு எதிரே முத்தால் ராவுத்தர் ஸ்தலம். சமாதி போல திண்டு அமைத்து அதன் மேல் பச்சைப் பட்டு போர்த்தியிருந்தனர். அங்கே பத்தி புகை காட்டி, நாட்டுச் சர்க்கரை பிரசாதம் தந்தார்கள். அதை வாயில் போடாமல் கைக்குள் அடக்கி வைத்துக் கொண்டான்.

‘‘எங்கிட்டும் போகாம இங்கனேயே இரு. பயறு வாங்கியதும் ஊருக்குப் போகணும்''

அரைமணி நேரப் பயணத்தில் வீடு இருப்பதால் கோயிலில் தங்கி இருக்க வேண்டிய தேவை இல்லை. காலையில் பொங்கல் வைத்து தேங்காய்பழம் அபிசேகம் பண்ணவேண்டும். மதியம் கோயிலில் அனைவருக்குமான அன்னதானம் இருக்கும்.

அம்மா நகர்ந்ததும் முத்தால் ராவுத்தருக்கு எதிரே குத்தவைத்து உட்கார்ந்து கொண்டான். கூட்டம் நெருக்கத்தான் செய்தது. அவனுக்கு ராவுத்தரோடு பேசவேண்டும். அதுதவிர கூட்டத்தின் சத்தமோ, பூஜை மணியோசையோ எதுவுமே அவனது கவனத்தில் இல்லை.

முத்தால் ராவுத்தரின் வாளையும், திண்டையும் வெறித்தபடி இருந்தான். மெள்ள மெள்ள கண்களை தாத்தாவைப்போல உட்புறமாய்ச் சொருகிக்கொண்டான். மனசுக்குள் ராவுத்தரை அழைத்தான்.

உதட்டசைவில் மட்டுமே சொற்கள் உருண்டன. ‘‘ப்ளீஸ் தாத்தா, ப்ளீஸ் பர்ச எடுத்துத் தந்துருங்க. நான் பாவம். முப்பது ரூவா.. ப்ளீஸ்''. கண்களோரம் நீர் திரளுவதுபோல் இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்துவிடுவார். அவருக்குத் தெரிஞ்சால் அவ்வளவுதான்.

‘‘ப்ளீஸ்  முத்தால் ராவுத்தர் . தாத்தா, அப்பாயி. ப்ளீஸ்'' கண்களைத் திறக்காமலேயே கெஞ்சினான்.

‘‘கெடைக்கலியாடா ‘‘ பூபதி அவனது காதுப்பக்கம் வந்து மெதுவாகக் கேட்டான். திடுக்கிட்டு விழித்த ஜெயவேலின் பார்வையில் கருப்பையாவும் இருந்தான்.

‘‘எங்கனடா போட்ட?'' கருப்பையா.

‘‘பூக்குழிப் பக்கம்'' பூபதி.

‘‘திய்யில வெந்திருக்கும்டா'' கருப்பையா பூசைமுடிந்து பிரசாதம் விளம்பப்பட்டது. ஜெயவேல் வாங்கவில்லை. அப்பாவும் அம்மாவும் தம்பியும் வந்தனர். கூடவே அப்பாவுடன் வேலைசெய்யும் பாலுமாமா.

‘‘பயறு வாங்கலியா?'' அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. ‘‘வாங்கித் தின்னுருப்பான்'' அப்பா பதில் சொன்னார். ‘‘அதுங்குள்ளயா?'' எனச் சந்தேகப்பட்ட அம்மா தன்னிடம் இருந்த பயறை ஜெயவேலுக்குத் தந்தது. ‘வேணாமென்று தலையாட்டினான்.

‘‘இந்து கோயில்ல அதென்ன ராவுத்தர் சாமி?'' பாலு மாமா கேட்டார்.

‘‘அது ஒரு பழங்கதை. எங்க அம்மன், கானகத்துல வசிக்கிறப்ப ஒரு சமயம் இந்த ராவுத்தருக்கு அடைக்கலம் தந்தாராம். அதுக்கு நன்றிக்கடனா அம்மனுக்கு எல்லாப் பிறவிக் காலமும் காவல் ஆளா நிப்பேன்னு வாக்குக் குடுத்தாராம். அதனால அம்மா எப்பவெல்லாம் அருள் இறங்கி வாறாங்களோ அப்பவெல்லாம் முன்னால இவர்தான் வாள் பிடிச்சு ஆடிவருவார்.''

‘‘கௌம்புங்க. மணி பன்னண்டாகப் போகுது''

‘‘வாடா'' அம்மா ஜெயவேலின் கைப்பிடித்து எழுப்பியது.

அவனால் எழமுடியவில்லை. அப்பாவும் தம்பியும் பாலுமாமாவோடு முன்னால் நடந்தனர்.

அம்மா அலுப்போடு அவனை இழுத்தது. ஜெயவேலின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. அம்மாவின் இழுவையால் இமையிலிருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டது. அம்மாவுக்கு விளங்கவில்லை. மாறாக பயம் வந்தது.

‘‘என்னாடா, என்னாச்சி?''

பதில் சொல்ல முடியவில்லை. கூடுதலாய் கேவலும் அழுகையுமே வந்தது.

‘‘விடு கமலம், இருந்துட்டு காலம்பற வரட்டும். கூட்டத்தோட கூட்டமா கோயில் ஸ்தலத்தில ஒருநா இருந்திட்டுப் போறான்'' உட்கார்ந்திருந்த ஒரு பெரியம்மா சொன்னது.

‘‘அதேன் விடிய வந்திருவம்ல. இதென்னா புதுப் பழக்கம்.? சின்ன நொட்ட மாதரி அழுக!''

அம்மாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கண்ணீர் விட்டபடி நடந்தான்.  கோயில் வாசலில் கையில் வைத்திருந்த சர்க்கரையை கீழேபோட்டான்.

அன்று இரவு தாத்தா ஜெயவேலின் கனவில் தோன்றினார்.

செப்டெம்பர், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com