ஓவியம்: பி.ஆர். ராஜன்
ஓவியம்: பி.ஆர். ராஜன்

தத்துப்பா

சண்டைகள் நிறைய வகையில் உண்டு. அதில் எல்லா சண்டைகளிலும் ஜென்ம பகை கொள்வதில்லை. கடுமையான துரோகம், அடிப்படை தகர்ப்பு போன்ற காரணங்கள் உறுதியாகத் தெரிந்தால் ஜென்மப் பகைதான். பணப்பிரச்னைகளில் ஏற்பட்ட சண்டைகள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனால் நிகழ்ந்த சண்டைகள் இவற்றை நான் குறிப்பிட்ட கால இடைவெளியில் சரி செய்து விடுகிறேன்.

 அவை மீது நான் எப்போதும் விரோதம் கொள்வதில்லை. அதுபோலத்தான் சேதுவோடு ஆலுவா வீட்டில் வைத்து நிகழ்ந்த சண்டையின் பொருட்டு நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் பேசிக் கொள்ளவில்லை. அதெல்லாம் எந்த வகையான பிரச்னையுமல்ல சண்டை என்று எதுவுமில்லாமலே சிலரோடு ஆண்டுக்கணக்கில் பேசிக்கொள்ளாமலேயே இருந்திருக்கிறேன். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு விட்ட இடத்திலிருந்து எந்த தடையுமின்றி அப்படியே அதே மனநிலையில் பேசியிருக்கிறேன். எனவே சேதுவோடான மனஸ்தாபம் பெரிய விசயமாக இல்லை. ஒரு கதை சரியாக அமையவில்லை என்பதற்கான சண்டை. அதுவும் சேது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஏற்பட்டதுதான். சண்டை நிகழ்ந்துவிட்டாலும் கூட காசு விசயத்தில் அவன் என்னை மிக கண்ணியமாகவே நடத்தினான்.

இறுதிக்காட்சி தட்டச்சு செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் போதுதான் அதற்கு ஒருநாள் முன்னமே நந்தனா இம்மானுவேலோடு ஓடிப்போய்விட்டாள். நந்தனா ஓடிப்போனதில் சேது செம கடுப்பில் இருந்தான். அந்த பிள்ளைக்கு விவரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவள் என்னிடமோ சேதுவிடமோ நேராக வந்து இம்மானுவேலை காதலிப்பதாகவும் அவனைத் திருமணம் செய்ய வேண்டுமென சொல்லியிருந்தால் நாங்கள் இருவரும் நந்தனா மீதான தெய்வீகத்தின் தெய்வீகமான காதலை மறந்து அவளை நல்ல முறையில் நடத்தியிருப்போம். நாங்கள் தெய்வீகத்தின் தெய்வீகக் காதலை மறக்கவில்லை என்றால் எங்கள் மனைவிமார்கள் ஒரு மதிய உணவில் விசம் வைத்து எங்களைக் கொல்வதற்குகூட வாய்ப்பிருப்பதால் நாங்கள் அதில் வரம்பு கடந்து போயிருக்க மாட்டோம். அதுவுமில்லாமல் சேதுவின் வசதிக்கு அவளுக்கு எல்லா மேன்மைகளையும் கூட செய்து கொடுத்திருப்பான். அந்தப் பைத்தியக்காரி அவசரப்பட்டு ஓடிப்போய்விட்டாள் என்றுதான் நினைக்கிறேன். அவளுக்கு என்ன நிர்பந்தம் அல்லது அவர்களுக்குள்ளே முன்னமே ஏதேனும் பழக்கமிருந்ததா என எதுவும் தெரியாமல் அதுபற்றி நீண்ட நேரம் யோசிப்பதுகூட நல்ல விசயமல்ல. அவளின் தொலைபேசி எண் மட்டும்தான் இருந்தது அவளின் வீடும் தெரியாது. வீடு தெரிந்த இம்மானுவேல்தான் அவளைக் கொண்டுபோயிருக்கிறான்.

 பெரும்பாடு பட்டு சௌந்தரராஜனைப் பிடித்து நந்தனாவின் வீட்டைக் கண்டுபிடித்து நானும் சேதுவும் போய் நின்றபோது அங்கு சிலர் சேதுவின் மீது பாய்வதற்கு தயாரானார்கள். அவர்கள் உண்மையில் நந்தனா சேதுவோடு ஓடிப்போனதாக நம்பியிருக்கிறார்கள். பிறகு நான்தான் சமாதானமாகப் பேசி சேதுவை மீட்டுக்கொண்டு வந்தேன். நல்லவேளை நாங்கள் அன்று அங்கு போகாமல் இருந்திருந்தால் நந்தனாவின் உறவினர்கள் சேதுவின் மீது போலிஸில் புகார் அளித்திருப்பார்கள். புகாரானால் அன்று மாலை நாளிதழிலேயே சேதுவின் புகைப்படத்தைப் போட்டு பெண் கடத்தல்காரன் என செய்தி போட்டால் அசிங்கம்தானே. நம்முடைய நாளிதழ்கள் மிக மோசமான செய்திகளால் நிரம்பியது என்பதை சேதுவும் கூட ஒப்புக்கொண்டான்.

 இந்த பிரச்சனை முடிந்த மறுநாள்தான் நாங்கள் கதை விசயத்தில் சண்டையிட்டுக் கொண்டோம். நாம் என்னதான் ஞானவான்களாக இருந்தாலும் அவரவர் கண்கள் வழியாக பார்க்கவும் அதையே ஸ்தாபிக்கவுமான கட்டமைப்பு கொண்ட மடையர்கள்தானே. அதுவும் மனிதர்கள் ஆத்திரப்படும் போது ஒன்றுக்கு நான்கு மடையர்களாக மாறிக் கொள்கின்றனர். நாங்கள் சண்டையிடும் போது இரண்டு மடையர்களும் எட்டு மடையர்களாக இருந்தோம் என்பதனால் அந்த புரதான நகரிலிருந்து நான் அவசரஅவசரமாக வெளியேறும்படி ஆகிவிட்டது. ஒரு நாடக மேடையில் இழுக்கப்படும் திரைகளைப்போல காலம் பளிச்சென ஓடுகிறது.

 நானும் சேதுவும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் நகரில் எந்த திட்டமிடுதலுமின்றி நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டு எந்த விரோதமுமில்லாமல் உரையாடினோம். நான் துங்கபத்திரா நதிக்கரையோரம் ஒரு வசிப்பிடத்துக்கு செல்வதற்காக பயணத்தினிடையே பெங்களூரில் ஓர் அறையில் தங்கியிருந்தேன். மறுநாள் மாலை எனக்கு அங்கிருந்து பயணம் இருந்தது. எனவே நான் இருக்கும் அறையின் விவரம் சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனதும் சேது என்னோடு சில விசயங்கள் பேசவேண்டுமென பின்னாலேயே அறைக்கு வந்தான். வந்தவன் தத்துப்பா பற்றி பேசினான். எனக்கு தத்துப்பா பற்றி தெரியாது நான் அப்படி யாரையும் கேள்விப்படவுமில்லை என்றபோது சேது விபரமாகப் பேசினான். கோவா அருகில் தத்துப்பா இருப்பதாகவும், அவரை சந்திக்க தனக்கு இன்னொரு ஞானமான மனிதர் சொன்னதாகவும் அதன் நிமித்தமான பிரயாணமாக இங்கு வந்திருப்பதாகவும் இடையில் இன்று என்னை சந்தித்தது தெய்வாதீனமான காரியமாகத் தனக்குத் தோன்றுவதாக சேது குறிப்பிட்டான். இப்போது சில மாதமாக எனது நினைவு அதிகமாக வந்ததாகவும் சேது பேச்சினிடையே சொன்னான்.

 ‘நினைவு வந்தால் என்னிடம் பேசியிருக்கலாமே...‘

‘இரண்டு மூன்று முறை போனை எடுத்துவிட்டு பிறகு விட்டுவிட்டேன்...ஆனால் இந்த நகரில் இன்று உங்களை சந்திப்பேன் என நான் நினைத்தேன்...'

‘எப்படி அவ்வளவு உறுதியாக நம்பினீர்கள்..'

‘சிலவற்றை நம்மால் விவரித்து சொல்ல முடியாது சார்.. நீங்கள் என்னோடு வரவேண்டும்...'

‘உங்களோடு வருவதில் எனக்கு ஆட்சோபனை இல்லை என்றாலும்.... நாளை மாலை நான் இங்கிருந்து புறப்பட வேண்டும்...'

‘மேலும் ஒருநாள் எடுத்துக் கொள்ளலாம்.... நான் பேசி எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்... எனக்கு மானசீகமாக சில பிரச்னைகள் இருக்கிறது....'

‘ஆலுவா வீட்டிலா...'

‘ஆலுவா வீட்டில் எந்த பிரச்னையுமில்லை... நான் கூட முன்பு அந்த வீட்டில் ஒரு தனித்துவமான சஞ்சாரத்தை உணர்ந்திருந்தேன்... நந்தனா வந்துபோன பிறகு அந்த சஞ்சாரம் அங்கில்லை...பிறகு என்னால் ஆலுவா வீட்டில் வாஸ்துபிரகாரம் எல்லாம் சரி செய்ய முடிந்தது... முன்புபோல யாதொரு தடையும் ஏற்படவில்லை என்பதால் நான் விரும்பிய எல்லாவற்றையும் ஆலுவா வீட்டில் செய்துவிட்டேன்... நான் புதிதாக இப்போது வாங்கியிருக்கிற ஒரு இடத்தின் புதிய பிரச்சனை...'

 ‘நீ ஏன் பிரச்னைக்குரிய சொத்துகளை வாங்குகிறாய்...'

‘அதைத்தானே அடிமாட்டு விலைக்கு வாங்க முடியும்...'

நாங்கள் இருவரும் அறையில் சத்தமாகச் சிரித்தோம்.

‘ம்ம் பிறகு...'

‘அங்கு ஒரு சாமியார் இருக்கிறார்.. எல்லாவற்றிற்கும் அவரிடம்தான் போவேன்... நிறைய பேசுவான்... சில பரிகாரங்கள் சொல்லுவான்... பணமும் பயமும் சேர்ந்துதான் வருகிறது தெரியுமா... என்னைப் போன்றவர்களுக்கு இவ்வாறு சில துணை தேவைப்படுகிறது. அந்த சாமியார்தான் தத்துப்பா பற்றி சொன்னார்... எதற்கும் ஒருமுறை போய் பார்த்துவிட்டு வா என்று... ‘

நான் மேலும் சிரித்தேன்.

 ‘சேது எனக்கு இதிலெல்லாம் பெரிய விசுவாசமில்லை... ஆனால் வித்தியாசமான அனுபவம் கருதி உன்னோடு வர விருப்பம்தான்... ஆனால் இந்த நம்பரில் இருப்பவனிடம் நான் வந்துசேர இரண்டுநாளாகும் என்பதை நீதான் பேசி முடிவு செய்ய வேண்டும்...'

‘இது சாதாரணம் நான் பார்த்துக் கொள்கிறேன்...' நம்பரை வாங்கிக் கொண்டு வெளியே போன சேது பேசி சரி செய்துவிட்டான். சேதுவோடு ஐந்தாறு பேர் இருந்தார்கள். அவர்களிடம் இரண்டு உயர்தரமான கார் இருந்தது. ஒன்றில் நானும் சேதுவும் மற்ற காரில் சேதுவின் ஆட்களுமாக மாலையே பயணம் துவங்கினோம். அதிகாலையில் கோவாவில் தங்கிக்கொண்டு அந்த மாலைதான் தத்துப்பாவை பார்க்கும் அவகாசம் கிடைத்திருந்தது. மாலை ஐந்தரை மணிக்குப் போனால் ஆறுமணிக்கு சந்திக்கலாம் என எல்லா ஏற்பாடும் முன்னமே செய்யப்பட்டிருந்தது.

நானும் சேதுவும் பேசி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் நிறைய பேசிக்கொள்ள இருந்தது. ஆனாலும் நிறைய மௌனமே துலங்கி நின்றது. எந்த காரியங்களும் சீரான தொடர்பில்லை என்றால் இடையில் ஒரு சுணக்கம் தோன்றிவிடுகிறது. இரண்டு வருடங்களில் அவனின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருக்கும் போல. அவனைச் சுற்றிலும் ஆட்கள் சார் மற்றும் பாஸ் போன்ற வார்த்தைகளோடும் உடலை பெண்டாக்கியும் அவ்வளவு பவ்யமாக இருந்தனர். எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. நான் நீ வா போ என்று சர்வ நிசாரமாகத்தான் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் ஒரு சலிப்பும் போதையுமிருக்கிறது. அதிகமான மதிப்புகளில் தன்னை மூடிக்கொள்ளும் போது மதிப்பற்ற ஒரு நிலையை அவன் ரசிக்கத்தான் செய்கிறான். என்னை ஒரு வாகன ஓட்டி மிகமோசமான கெட்ட வார்த்தையால் அழைத்துவிட்டு வேகமாகப் போய்விட்டான். எனக்குச் சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. காரில் பயணித்திருக்கும் போதே நான் சேதுவின் தோளில் இடித்துக் கொண்டே வாழ்க்கை எப்படி போகிறது என்றதும், நன்றாகப் போவதாகச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தபோது நான் மெல்லமாக கேட்டேன் ‘இப்போது தெய்வீகத்தின் தெய்வீகமான காதல் ஏதேனும் இருக்கிறதா..'

ஓவியம்: பி.ஆர்.ராஜன்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்

சேது சத்தமாகச் சிரித்துக் கொண்டே ‘ம்ம் ஒன்றிரெண்டு இருக்கிறது...' என்றான்.

‘ம்ம் விடாதே ... எல்லா ஆண் உயிர்களுக்கும் எதிரே பெண் உயிர்தான் இருக்கிறது...உயிரினங்களில் மனிதர்கள் மட்டுந்தான் இயற்கையாக வாழத் தெரியாதவர்கள் ... நமக்கு அறிவு வந்துவிடுகிறது எனவே நாம் வளர்ந்து கெட்ட முட்டாளாகிவிடுகிறோம்... நானாவது கலைஞன்... நீ நகரில் ஒரு தேர்ந்த வியாபாரி... எல்லாவற்றிலும் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டவன்... நீ தெய்வீகத்தின் தெய்வீகமான காதல் புரிவது ஒரு முரண்தான்... நான் நந்தனா விசயத்தில் நீ ஒரு பூத்த மரம் போல இருந்ததை அவதானமாகப் பார்த்தேன்... '

 ‘என்னை மரம் என்பது எனக்கு இனிமையாக இருக்கிறது... அதுவும் பூத்த மரம் என்பது இன்னும் இனிமையான சொல்... இப்படியான வார்த்தைகளை நீங்கள் சொல்லிக் கேட்பதில் ஒரு காட்டருவியில் நீராடுவதுபோல இருக்கிறது... நான் இரண்டு ஆண்டுகள் உங்களை விட்டிருக்க கூடாது... எனக்கது உண்மையில் இழப்புதான்... நான் ஆத்திரத்தில் சில வார்த்தைகளை விட்டேன் என்பதை தவிர உங்கள் மீதான அன்பில் எனக்கு குறையில்லை...நான் இன்னொரு உண்மை சொல்கிறேன்..'

‘ம்ம்..'

‘நந்தனாவோடு பீச்சுக்கு நாம் போன சமயத்தில் அங்கிருந்து நான் உங்களை சும்மாதான் ஆலுவா வீட்டுக்கு போனைக் காரணம் காட்டி அனுப்பி வைத்தேன்...'

நான் வியந்து சிரித்தேன். எனக்கது தெரியும் என்பதை இப்போதும் நான் சொல்லிக் கொள்ளவில்லை.

சகமனிதன் மனரீதியாக வெல்வதற்கு நீங்கள் தோற்றுக் கொடுப்பது அன்பின் மிக அரிய காரியமாகும்.

ஓ அப்படியா சங்கதி என்பதைப்போல சேதுவைப் பார்த்ததும் ‘நந்தனாவிடம் நான் பொதுவாக அன்று ஒருமணி நேரம் பேசியிருப்பேன்... அவர் உங்களைத்தான் அதிசயமான மனிதராகச் சொன்னாள்... நான் என்னைப் பற்றி அவளிடம் பேச முயல முயல... அவள் அன்று பெரும்பாலும் உங்களைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தாள்...'

நான் காரில் சேதுவின் தோளில் கைபோட்டபடி அவனை ஆச்சரியமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். சேது மேலும் பேச முற்பட்டபோது நான் குறுக்கிட்டேன்.

‘ஆக ஒரு வாரம்தான் அவள் நம்மோடு பயணித்தது. பாருங்கள் ஒரு பெண் ஒரு வாரத்தில் நம்முடைய எவ்வளவு கவனங்களை ஈர்த்துவிடுகிறாள்... இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இந்த பயணத்தில் நாம் அவளைப்பற்றி பேசும்படியாக இருக்கிறது... இது என்ன வகையான விநோதம் என்பதுதான் புரியவில்லை...'

‘இதில் விநோதம் ஒன்றுமில்லை... இது உயிர் இயற்கைதான்... உயிர்கள் காதலையும் காதல் செய்த இடங்களையும் ஒருபோதும் மறக்காது.... நான் இன்னொன்று சொல்கிறேன். ஆலுவா வீடு எனக்கு ஐம்பது மடங்கு லாபத்துக்கு விலைபேசி ஆட்கள் வந்தார்கள்... ஆனால் நான் விற்க விரும்பவில்லை... நந்தனா அந்த வீட்டில் கால் வைத்த நேரத்திலிருந்து எனக்கு அந்த வீட்டின் முந்தைய எல்லா கெடுதல்களும் ஒவ்வொன்றாக மாறியது...ஒரு பூதம் புதையலைக் கொண்டு போட்டது போல. ஆனால் பாருங்கள் இம்மானுவேல் அந்த தேவதையை நகர்த்திக் கொண்டு போய்விட்டான்...'

 ‘நீங்கள் பிறகு போனில் தொடர்பு கொள்ளவே முயலவில்லையா...'

 ‘யார் சொன்னது... நீங்கள் போய்விட்டீர்கள்... நான் வியாபாரத்தில் களைப்புறும் எல்லா நேரங்களிலும் அவளுக்கு தொடர்ந்து போன் பண்ணிக்கொண்டே இருந்தேன்... சுவிட்ச்ஆஃப் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. அவனின் எண்ணும்கூட அப்படித்தான் சொன்னது... பிறகு தெரிந்த ஒரு அதிகாரியை வைத்து அந்த நம்பரைத் தேடியபோது அவர்கள் அந்த எண்ணை இந்த நகரிலேயே தொலைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டுவிட்டேன்...அவள் வீட்டில் கூட பிறகும் ஆட்களை அனுப்பி ஏதேனும் தகவல் இருக்குமா என்று விசாரித்தேன்... எதுவும் பெற முடியவில்லை... என் மனைவியும் கூட ஆத்திரமாய் என்னிடம் பெரிய மனிதனைப் போல நடந்து கொள்ளுங்கள் என்று கத்தினாள்...'

கார் ரொம்ப நேரம் அமைதியாகப் பிரயாணித்துக் கொண்டிருந்தது. டிரைவர் எங்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே கவனிக்காதவன் போல காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 ‘இந்த தெய்வீகத்தின் தெய்வீகமான காதலை விட்டு விட்டு நாம் வேறு எதாவது பேசலாம்' என்றேன். பிறகு எங்கள் பேச்சு வேறு பக்கங்களில் ஒரு சுற்றுப் போய்வந்து மீண்டும் நந்தனாவிடம் போய்விட்டது. ஆண்களுக்கு பெண்கள் பற்றிய பேச்சு ஒருபோதும் தீராது. திடீரென சேது நந்தனாவுக்கு வாங்கிக்கொடுத்த பரிசுகள் பற்றிப் பேசினான். ‘கடைசியாக அவளுக்கு வாங்கிய விலை உயர்ந்த அபூர்வமான வலம்புரி

சங்கொன்று இன்னும் ஆலுவா வீட்டில் நினைவாகவே இருக்கிறது' மேலும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த சேது பிறகு ‘எப்போதாவது இனி இந்த வாழ்வில் அவளை சந்தித்தால் அந்த வலம்புரி

சங்கை அவளுக்கு பரிசளிக்கலாம்..'

 எனக்கு இந்த காரை ஓட்டிக் கொண்டிருக்கும் டிரைவர் எங்களை என்ன நினைப்பானோ என்கிற சங்கோஜம் இருந்தது எனவே நான் தொடர்ந்து பயணத்தில் பட்டும்படாமலும் பேசிக்கொண்டிருந்தேன். எவ்வளவுதான் மனம்திறந்த உரையாடலாக இருந்தாலும், கடுமையான போதையிலும் கூட மனிதன் சிலவிசயங்களைப் பேசக்கூடாது என மனதின் ஆழத்தில் தீர்மானித்திருந்தால் அவன் அதனை வெளிப்படுத்துவதில்லை. ஆலுவா வீட்டில் வைத்து நந்தனா தந்த செல்ல முத்தத்தைப் பற்றியும் கனவில் வந்த சுருட்டுப் புகைத்த உறுமா கெட்டுக் காரன் தான் ஒரு ஜின் எனக் கூறியதையும் நான் எந்த பேச்சினிடையேயும் சேதுவோடு பகிரவில்லை. கனவில் அவன் தன்னை ஜின் எனச் சொன்னதோடு ஏன் கனவு முற்றுப் பெற்றது என்பதைக் குறித்து இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பலமுறை

யோசித்திருக்கிறேன். நான் சில கனவுகளை வேறு வேறு தருணங்களில் அதன் அளவை நீட்டிச்

செல்லும் மனதைப் பெற்றிருக்கிறேன். சில கனவுகளை பின்னோக்கி நகர்த்தி அதன் சிலபக்கங்களில் நான் மாற்றங்களும் கூட செய்த அனுபவமிருக்கிறது. இந்த அனுபவத்திலிருந்து கனவில் அந்த ஜின்னை மீண்டும் சந்தித்து அதன் பூர்வீகம் கேட்கும் எனது எல்லா முயற்சிகளும் இரண்டாண்டுகளாகத் தோற்றுப் போய்விட்டன. எல்லாவற்றிலும் மனிதன் வெல்வதும் கூட துரதிர்ஷ்டமானதுதான். நிறைய தோற்று போவது போன்ற ரசனைகள் இந்த வாழ்வில் முக்கியமானது. வெற்றி என்பது ஒரு வெறுமையில் கொண்டுபோய் விடுகிறது எனவேதான் பல வெற்றியாளர்கள் ஒரு பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்கின்றனர். ஆலுவா வீட்டில் இரண்டாம் கனவில் ஜின்னின் வருகை அச்சப்படுத்தவில்லை. சுருட்டும் புகைத்து உறுமாகெட்டின் குஞ்சலம் அசைய அப்படியொரு யௌவனமிருந்தது. அந்த பிம்பம் இன்னதுதான் என உறுதிபட என்னால் சொல்ல இயலவில்லை என்றாலும் அதன் வசீகரம் ஒன்றைக் கண்டடைந்த ஏக திருப்தி சூடியிருந்ததை நான் உணர்ந்தேன். கோவாவில் மாலை ஐந்தரை மணிக்குத்தான் தத்துப்பாவை சந்திக்க போகவேண்டிய நேரம் என்பதால் அங்கு புதிய இடம் ஏதேனும் பார்க்கலாம் என்று நகரில் நடந்து கொண்டிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதியில்கூட தத்துப்பா பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்தனர்.

தத்துப்பாவுக்கு நிறைய ஆராதகர்கள் இருக்கிறார்கள் போலும். அங்குபோய் முன்னால் கொஞ்ச நேரம் இருந்தால் போதும் மனம் அவ்வளவு சாந்தமாகிவிடுகிறது என ஒருவன் சொன்னான். இருப்பவன் இல்லாதவன் என எல்லா மனிதர்களுக்கும் எவ்வகையிலாவது சாந்தம் அவசியப்படுகிறது. சாந்தத்தைத் தேடி அலைகிறார்கள். என்னிடமிருக்கிறது என்று நான் சொன்னால் எவன் நம்புவான். நான் சாந்தம் வழங்குவதோடு அவர்களிடமிருக்கும் சாந்தத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துவிடுவேன். நான் இதை ஒருவரிடம் சொன்னபோது அவர்களிடமிருப்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டால் பிறகு உனக்கு என்ன வேலை. இரகசியப்படுத்து, இரகசியப்படுத்துவதுதான் ஞானத்தில் பிரதானம் என்றபடி அவர் கடந்து போய்விட்டார்.

 நேற்றிரவு சேதுவோடான பிரயாணத்தில் நாங்கள் பலவாறு பேசிக்கொண்டே வந்தாலும் இடையிடையே எனக்கு நிறைய யோசனைகள் ஊடாடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாகத்தானோ என்னவோ சேது பேச்சினிடையே சரிதானா சரிதானா என்று பலமுறை சொல்லிக் கொண்டே வந்ததான். நான் துங்கபத்ரா நதிக்கரைக்குப் போகவேண்டியவன். விதான்சௌதா முன்பாக நான் ஒரு தேநீர் அருந்த நின்றிருக்கவில்லை என்றால் என்னை சேது சந்தித்திருக்க முடியாது. யாரோ எவரோ தெரியவில்லை என்னை அந்த கடையில்தான் தேநீர் பருகவேண்டுமென தலையிலடித்துக் கொண்டுபோய் விட்டது போல இருந்தது. என்னமோ ஒன்று பின்னேயும் முன்னேயும் நிகழ்கிறது. நான் இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆலுவா வீட்டிலிருந்து சேதுவோடு வாக்குவாதம் முற்றி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேறியபிறகு நான் என் வாழ்வில் அதுபோன்ற சுருட்டுப்புகையின் வாசனையை உணரவே இல்லை.

 யோசித்துப் பார்த்தால் அது ஒரு பிரத்தியேக மணம். நான் இப்போது மணம் என்று சொல்கிறேன் ஆனால் முன்பு அது எனக்கு நாற்றமாக இருந்தது. நிறைய விசயங்கள் இந்த வாழ்வில் இப்படித்தான் நடக்கிறது. நடக்கும் போது ஒன்றாகவும் பிறகு நடந்தவற்றின் நினைவுகள் வேறொன்றாகவும் பதிகிறது. நாம் உடனடியாக உணர்வதற்கும் உணர்ந்ததை நமக்குள் அசையவிட்டு பின்னர் அந்த அசைவை அவதானிக்கும் போது மேலும் ஓர் உண்மையைக் கண்டடைகிறோம். ஆலுவா வீட்டிலிருந்து வெளியேறிய போது எனக்கு இம்மானுவேலைக் கொலை செய்தால் என்ன என்றுகூட தோன்றிய

துண்டு. பிற்பாடு எனக்கு இம்மானுவேல்மீது கருணை சுரந்தது. நான் அவனுக்காக பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனைகள் சாதாரணமானதல்ல நான் எனக்குள்ளே உருகி பிரார்த்திப்பேன். எப்போதாவது என் காதில் நந்தனாவின் ‘அன்பே சார்‘ ஒலி கேட்கும். அப்போதெல்லாம் பிரார்த்திப்பேன். பழகிய காலத்தில் எனது பிரார்த்தனையின் வீரியத்தை உணர்ந்தவர்களில் ஒருவனாக சேது இருந்தான். இதன் காரணமாகத்தான் அவன் என்னை பெங்களூரில் பார்த்த உடனே இந்த பயணத்தில் என்னை இணைத்திருக்கிறான்.

 எப்படியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், உண்மையில் இப்போது எனக்கு கோவாவில் தத்துப்பாவை பார்க்கும் ஆவல் அதிகப்பட்டிருந்தது. உப்பா என்றால் தாத்தாவைக் குறிக்கும் தத்துப்பா என்பதுதான் எனக்கு புரியவில்லை. ஒருவேளை தத்துவுப்பா என்பது மருவி தத்துப்பாவாக இருக்கிறதோ என்னமோ. எல்லா உயிர்களிடத்திலும் ஒரு வழிமுறை இருக்கிறது. அது ஒன்றை ஒன்று மிகைத்தும் இருக்கிறது. சுலைமான் நபியின் அவையில் ஜின்னை மிகைத்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.

 கோவாவில் மதிய உணவு உண்ணும் போதும், உரையாடும் போதும் நானும் சேதுவும் கூட்டத்திலும் தனித்தே இருந்தோம். சேது தத்துப்பாவை சந்திக்க வந்திருக்கும் பிரச்சனையின் தனித்தன்மை பற்றியோ அதன் உள்ளார்ந்த இரகசியம் பற்றியோ நான் எதுவும் சிரத்தையாகக் கேட்கவில்லை. மனிதன் தன் மனங்களில் எல்லையற்ற வேடதாரியக உலவக்கூடியவன் எனவே அவன் ஏழு அடுக்குகள் கொண்ட விநோத வடிகட்டியை உள்ளுக்குள் பதுக்கியிருக்கிறான். அவற்றில் வடிந்து வெளியேறுவதுதான் ஒரு மனதிலிருந்து பிற மனதுக்குக் கிடைக்கிறது. நாம் ஒருபோதும் கண்களில் போய் இருக்க விரும்புவதில்லை. மாறாக நாம் இதயத்திலும் மூளையிலும் போய் அமர்ந்து கொள்வதில் நிறைய சவுரியங்கள் இருக்கிறது. இதன் காரணமாக நான் எப்போதும் அப்படித்தான் சொல்லாத வரையிலும் கேட்க விரும்புவதில்லை. என்னிடம் சேதுவுக்குப் பிடித்த விசயமும் அதுவாகத்தான் இருக்கும். அவன் மதிய சாப்பாடுக்குப் பிறகு மெல்லிய அலைபாவிய கடற்கரையின் ஒரு குடிலில் அமர்ந்து ஓரளவுக்கு விசயத்தைப் பேசினான். அந்த பேச்சு முழுமையானதல்ல என்பதையும் அதற்குள்ளே என்னிடம் மறைத்துக்கொள்ளும் ஒரு இரகசியம் கிடப்பதையும் நான் புரிந்திருந்தாலும் நான் அதுபற்றி கேள்விகளால் துளைக்கும் விருப்பமற்றவன். எனவே அவன், பொய்யோ புரட்டோ என்னச் சொல்லிக் கொண்டாலும் அவன் சொல்வது எனக்குப் போதுமானது. சேதுவுக்கு ஒரு மலை பிரதேசத்திலுள்ள மனிதனிடமோ மனுசியிடமோ இருக்கிற ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்து மாடலில் உள்ள கார் ஒன்றை வாங்க விரும்புகிறான். விரும்புகிறவன் போய் நேராகப் பேசி வாங்க வேண்டியதுதானே இவ்வளவு மெனக்கெட்டு பயணப்பட்டு இங்கு வருவானேன் என்ற கேள்வி சாதாரண மடையனின் மனதில் கூட எழும்தானே. எனக்கு அது தோன்றாதா என்ன? ஏன் நீ அந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி அறுபத்தி ஐந்து மாடலில் உள்ள குறிப்பிட்ட வாகனத்தை வாங்க விரும்புகிறாய், அங்கு அப்படி ஒரு வாகனம் இருப்பதை யார் சொன்னார்கள் எனத் துவங்கி நூறு கேள்விகள் கேட்கலாம்தானே. கேள்விகளுக்கு விடைகள் என்று எதுவுமில்லை. வேண்டுமானால் ஒரு அல்லது பல பதில்கள் சொல்லலாம். சேது பதில் சொல்வதில் ஒன்றும் குறைவானவனுமல்ல.

 நாங்கள் கோவாவில் தங்கியிருந்த இடத்திலிருந்து தத்துப்பாவின் இடத்திற்கு போவதற்கு அதிகபட்சமாக ஒரு இருபதுநிமிடம் ஆகும் எனவே மாலை ஐந்துமணிக்கு இங்கிருந்து புறப்பட்டால் அங்கு போய் பத்திருபது நிமிடம் காத்திருந்து மாலை ஆறுமணிக்கெல்லாம் சரியாக சந்தித்துவிடலாம். நானும் சேதுவும் ஒரு காரில் முன்னமே போய்விட்டோம். உண்மையில் நான் நினைத்ததுபோல இல்லை. ஒரு பெரிய மைதானம். அதையொட்டி நீண்ட தோட்டம். கோயில் போலவும் இல்லாமல் மசூதி போலவும் இல்லாமல் இரண்டின் கலவையாக ஒரு முகப்பு இருந்தது. நிறைய கூட்டம் நிறைய வாகனங்கள் இருந்தன. எல்லாம் பெரிய பெரிய மனிதர்கள். எல்லோருக்கும் சாந்தம் வேண்டும் போல. கிட்டினால் கிட்டட்டும் நமக்கென்ன வந்தது என்பதுபோல நாங்கள் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். எங்களை அங்கு ஒருவன் வழிநடத்திக் கொண்டிருந்தான். நாங்கள் மெயின் வாசலைக் கடந்து போகையில் ஜவ்வாது கலந்த ஊது வாசனை காற்றில் பரவி நின்றிருந்தது அதோடு அங்கு சில்லிடும் இசையும் கலந்து ஒரு மெல்லிய அதிர்வு உள்ளும்வெளியுமாக வியாபித்திருந்தது. நிறைய மனித மனுசிகள் ஆனந்தம் பொங்கி மலரும் முகத்தோடு நடனத்தின் அசைவு போல ஆடாமல் நடமாடிக் கொண்டிருந்தனர். ஒரு நீண்ட ஹாலின் கடைசி முனையில் தத்துப்பா சிலர் புடைசூழ இருந்தார். தூரத்திலிருந்தே வழிநடத்தியவன் காட்டித்தந்தான். தத்துப்பாவைச் சுற்றிலும் புகை பரவியிருந்தது. அவர் சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தார். தத்துப்பாவின் உடல் அமைப்பை அவதானித்துப் பார்த்தபோது அவர் ஆண் அல்ல பெண் என்பதைப் புரிந்து கொண்டே ஒரு தத்தும்மாவை ஏன் தத்துப்பா என்கிறார்கள் என்கிற குழப்பமிருந்தது.

 அவரின் அருகில் போய் அமர முடியாது ஒரு நாலைந்தடி இடைவெளியில் அமரலாம். அந்த கடாட்சமே போதுமென்று சேது விரும்பியிருந்தான். எனவே சேது ஐந்தடி இடைவெளியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியபடி கிடந்தான். நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். தத்துப்பாவின் பார்வை நின்று கொண்டிருக்கும் என்மேல் விழுந்தது. தத்துப்பா தலையில் நல்ல பவிசான உறுமா கெட்டியிருந்தார். அதன் குஞ்சலம் அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தது. நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகிடந்த சேது எழுந்து அமர்ந்தான். தத்துப்பா சைகையால் சேதுவை இன்னும் நெருங்கிவரச் செய்தார். பிறகு என்னை தத்துப்பாவின் முகம் புன்னகையுடன் பார்த்தது. என்னை அருகே அழைத்தார். இசையும் வாசனையும் புகையுமாகக் கிடந்த அந்த இருக்கையின் அருகே என்னை தத்துப்பா நெருக்கமாக அழைத்தபோது நான் அமர்ந்த நிலையிலேயே நரங்கிநரங்கி கிட்டே போனேன். சேதுவும் கூட என்னை மலைப்பாகத்தான் பார்க்கிறான்.

சேதுவை நோக்கி தத்துப்பா ‘அந்த மலைப்பிரதேசத்திலுள்ள கார் இப்போது நடக்காது... அது வேறு விபரீதங்களில் கொண்டு விடும் உனக்கு இங்கு இன்னொருமுறை வர எண்ணம் உருவாகும் அப்போது வந்தால் எல்லாம் சரியாகும்...காலம் கனியும் சேது' என்று பெயரோடு சொன்னதிலும்கூட வியப்பில்தான் அவன் இருந்தான். நான் பைனாக்குலரில் பார்ப்பவனைப் போல தத்துப்பாவைக் கூர்ந்து பார்த்தேன் ஆலுவா வீட்டில் கனவில் கண்ட உறுமா கெட்டுக் காரனின் சாயல் அப்படியே அச்சு அசலாகத் தெரிகிறது. தத்துப்பா ஒரு சுருட்டைப் பற்றி குபுகுபுவென விட்ட புகை வெண்பஞ்சுபோல தலைக்குமேலே எழும்பியது. என்னை மேலும் நெருக்கமாக அழைத்து காதில் ‘அன்பே சார்‘ என்ற குரல் கசிந்தபோது நான் புன்னகைத்தேன். தத்துப்பா முன்னால் நான் நந்தனாவுக்கு வணிகவளாகத்தில் பரிசாக வாங்கிக் கொடுத்த ஆஷ்ட்ரே இருந்தது. அவள் சுருட்டின் சாம்பலை அதில் தட்டிவிட்டு புன்னகைத்தாள். வழித்துணைவன் என்னை எழுப்பிவிட்டான். நான் கூட்டத்தில் கலந்து நடக்க நடக்க தத்துப்பாவாக அமர்ந்திருந்த நந்தனா என்மீதான பார்வையை மாற்றவில்லை. நாங்கள் சிலரால் தள்ளப்பட்டு தள்ளப்பட்டு ஓரளவுக்கு வெளியே வந்துவிட்டோம். நான் சேதுவிடம் சொன்னேன் ‘நந்தனாவை ஆலுவா வீட்டிலிருந்து கொண்டுபோனது இம்மானுவேல் இல்லை.'

‘அவள் அவனோடுதானே போனாள்...அவனல்லாது வேறு யார்...'

‘ஆலுவா வீட்டிலிருந்த ஜின்...'

சேது புரியாமலும் பயத்தோடும் பார்த்தான்.

‘நீ இங்கு நந்தனாவைப் பார்க்கவில்லையா...?'

‘நந்தனாவா... இங்கேயா... '

‘நீ நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாயே தத்துப்பா... அந்த தத்துப்பா நந்தனாதான்...'

‘அப்போ இம்மானுவேல் என்னவானான்?'

கதை இன்னும் முடியவில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com