துப்பறியும் மூர்!
பி.ஆர்.ராஜன்

துப்பறியும் மூர்!

நீங்கள் ஒவ்வொருவருமே விரும்பிய இரு தொழிலை செய்ய இயலாமல் வயிற்றுப்-பாட்டுக்காக வாழ்க்கை உங்களை வேறொரு தொழிலில் இறக்கியிருக்கும். நினைத்துப் பாருங்களேன். நீங்கள் இடுப்புவலியால் அவதியுறுகிறீர்கள் ஒரு வார காலமாக, என்று வைத்துக் கொண்டால் முதலாக உங்களின் இல்லத் துணைவியை இரவு படுக்கப்போகையில் தேங்கா-யெண்ணையையோ அல்லது முட்டிங் குளங்கரை எண்ணெயையோ படுக்கையில் உங்களின் கிழிந்துபோன லுங்கியை போட்டு அதன் மீது குப்புறடித்துப் படுத்து, ‘இடுப்பில் எண்ணெயை தேய்த்து விடு' என்று சொல்லி விடுகிறீர்கள்.

துணைவியும் அவரால் இயன்ற அளவு உங்கள் இடுப்பிலும், நடுமுதுகிலும் எண்ணெயைப் போட்டு கைகளால் இழுத்துத் தேய்த்து நீவி விடுகிறார். ‘எனக்கும் தான் இடுப்பு வலிக்குது. எனக்கு யாரு தேச்சி விடுவாங்க?' என்றும் புலம்புவார். தப்பித்தவறிக்கூட துணைவியாரின் இடுப்பில்

நீங்கள் எண்ணெயிட்டு நீவி விடமாட்டீர்கள். அதை கௌரவக்குறைச்சலாக எண்ணிக்கொள்வீர்கள். பின்பாக துணைவியார் அவராகவே எண்ணெய் தடவிக்கொண்டு படுக்கையில் வீழ்ந்து விடுவார்.

எலும்பு முறிவா கவலை வேண்டாம் எங்கள் வைத்தியரிடம் வைத்தியம் பாருங்கள், என்று குறுநகரின் எதாவது வீதியில் மனிதனுக்கு கைக்கட்டும் கால்கட்டும் போட்ட புகைப்படத்துடன் போர்டு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த வைத்தியரை நீங்கள் நாடிச் செல்கையில் வைத்தியசாலை நீக்கப்பட்டிருக்காது.

அருகில் விசாரிப்பீர்கள். அந்த வைத்தியர் தூர தேசத் திலிருந்து கெனடிக் ஹோண்டாவில் வருபவர் என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வருபவர் என்றும், எண்ணெயின் விலை அவரிடம் அதிகமென்றும், நன்றாக நீவி விடுபவர் தான், என்றும்

சொல்வார்கள் அப்படியான வைத்திய சிகாமணியாக உங்கள் துணைவி யாரை  எண்ணி-யிருப்பீர்கள் கையில் காசில்லாக் குறையால்.

என்னதான் நீங்கள் வேட்டியை கழற்றிவிட்டு கோவணம் கட்டி குப்புறப்படுத்து வைத்தியரிடம் வைத்தியம் பார்ப்பது போல் படுத்துக் கொண்டாலும் உங்களுக்கு இடுப்பு வலி குறைவதில்லை. வேறு ஏதாவது வழிகள் உண்டாவென நண்பர்களை விசாரிப்பீர்கள். அவர்களோ ‘ஆச்சுல்ல தல வயசு! இடுப்பு வலி கழுத்து வலி எல்லாம் வர்றது சகஜம் தான். முன்னமாதிரியே நினைச்சுட்டு இருக்காம பத்திரமாத்தான் இருந்துக்கணும்' என்று வயதைப்பற்றி குறிப்பிடுவார்கள்.

ஆக உங்கள் இடுப்பில் ஒரு கோணூசியை குத்தி வைத்தது போன்ற வலியானது வயது மூப்பின் காரணமாகத்தான் என்று பல்லை வெறுவிக் கொண்டு சித்தமருந்து கடைக்குச் சென்று விசாரித்தால் ‘பவுடர் ஒன்னு இருக்குது. பதினைஞ்சு நாளைக்கி காலை இரவு ஒரு பாக்கெட்ல பாதி பாதி அளவு மோர்ல கலந்து குடிங்க. இடுப்பு வலி போயிடும், நல்லா பசியெடுக்கும்' என்பார். விலையை நீங்கள் தான் கேட்கவேண்டும். முன்னூற்றி ஐம்பது ரூபாய், என்பாரவர். நீங்கள் வாயை சிறிது நேரம் பிளந்து நின்றிருப்பீர்கள். சித்த மருந்துக்கடையில் ஈக்கள் இருக்காது தான்.

வழக்கம்போல நீங்கள் மேல்-பாக்கெட்டை நசுக்கிப் பார்த்து விட்டு நாளையோ நாளை மறுநாளோ வருவதாய் சொல்லி ‘காதலியோ, அப்பாவோ வீட்டை விட்டு வெளியில் போடா!' என்று துரத்தியடிக்க, ‘வாழ்ந்து காட்டுறேன்' என்று வசனம் எதுவும் பேசாமல் சோகமாய்த் திரும்பும் நாயகனாய் உங்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகையில் மெடிக்கல் கடை கடைசியாக பிரகாசமாய் தெரியும் உங்கள் கண்களுக்கு.

ஐம்பது ரூபாய் செலவீனத்தில் உங்களுக்கு ஆரஞ்சு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும். வில்லைகள் கிடைக்கும். இரண்டு நாட்கள் மாத்திரை வில்லைகளின் தயவால் நீங்கள் பழையபடி வீறுகொண்டெழுந்ததாய் நினைப்பீர். வில்லைகள் தீர்ந்த பின் கோணூசியை இடுப்பில் யாரோ மீண்டும் குத்தி வைத்திருக்கும் உணர்வையடைந்த நீங்கள் கடைசிக் கட்டமாக மருத்துவரை நாடுவீர்கள். மருத்துவரைப்பார்க்க நோயாளிகள் கூட்டம் இருக்கும். இத்தனைபேரை தினமும் டாக்டர் பார்க்கிறாரா? என்று யோசிப்பீர்கள்.

ஒருவழியாக டாக்ரைப்பார்த்து உங்களின் வியாதியை சொல்கிறீர்கள். அவர் முதலாக உயர்குருதி அழுத்தம் உங்களுக்கு உள்ளதாவென பார்க்கிறார். இருப்பதை உணர்ந்து உங்களிடம் தெரிவிக்கிறார். உங்களின் கண்களின் அளவு சற்று விரிவடைந்து வெளியே விழுந்து விடுமோவென பயம் கொள்கிறீர்கள்.

அடுத்ததாக காலையில் மருத்துவமனை வந்து ரத்தம் டெஸ்ட் எடுங்கள் அதையும் பார்த்து விடுவோமென சொல்கிறார். இடுப்பு வலியை பற்றி அவர் பேசவேயில்லை. பதிலாக இடுப்பைக் காட்டச் சொல்லி ஊசி ஒன்றைப் போட்டு ஏஃபோர் சைஸ் பேப்பர் முழுக்கவும் வில்லைகளை எழுதி ‘நம்ம மெடிக்கலில் போய் வாங்கிக்கங்க, நாளைக்கி ரத்த டெஸ்ட் எடுத்துட்டு வாங்க' என்று அடுத்த நோயாளிக்கு பெல் அடிக்கிறார்.

நீங்கள் மெடிக்கலில் வாங்கிய மாத்திரைகளை பார்த்தால் அவைகள் பதினைந்து நாளைக்கு மூன்று வேளையும் இருக்கின்றன. பணம் கேட்டபோது தான் உங்களுக்கு இடுப்பு வலியுடன் சேர்ந்து நெஞ்சு வலியும் இருப்பதாய் உணர்கிறீர்கள். ஆக இத்தனை நாட்கள் சென்னிமலை தோப்புப்பாளையத்தில் சைக்கிள் கடை வைத்து ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு பஞ்சர் போட்டும், கிளம்பாமல் மக்கர் செய்யும் இரு

சக்கர வாகனங்களை கிளம்ப வைத்தும் காசு பார்க்கும் நீங்கள், பேசாமல் டாக்டராகி இருக்கலாமென நினைக்கிறீர்கள்.

பாருங்களேன். உங்களுக்கு விருப்பமான டாக்டர் தொழிலை செய்ய இயலாதபடிக்கு உங்களூரைச்

சார்ந்த மாரியாத்தாவே சதி செய்திருக்கிறது. நீங்கள் எத்தனை முறை மாரியாத்தாவுக்கு கெடா வெட்டி ஊருக்கே சாப்பாடு போட்டிருக்கிறீர்கள்! போக ஆத்தாவுக்கு வருட வரி கொடுத்திருக்கிறீர்கள். ஆத்தா உங்களுக்கு என்ன கைமாறு செய்தது? காலம் முழுக்க சைக்கிள் கடையே கதியாய் அமரு! என்று வைத்திருக்கிறது.

சைக்கிள் கடையில் பணியில்லா சமயங்களில் மட்டுமே உங்களின் டேப் ரிக்கார்டரில் பாடல் கேட்டு மகிழும் மனநிலையுடைய நீங்கள், விரும்பிக் கேட்கும் பாடல் ‘மச்சா னைப் பார்த்தீங்களா மலைவாழைத் தோப்புக்குள்ள!' அந்தப்பாடலை நீங்கள் முதன்முதலாக ரேடியோ பெட்டியில் கேட்டபோது நீங்கள் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தீர்கள். ரெக்கார்டு தட்டு வாங்கி அதை மேடையில் வைத்து சுழல விட்டு, அதன் மீது முள் வைத்து வீட்டினுள்ளேயே கொடை ரேடியோ வைத்து கேட்க, அந்த வயதிலேயே நீங்கள் ஆசைப்பட்டும் இருக்கிறீர்கள்.

திருவிழா சமயங்களில் அந்தப்பாடலையே ஒலிபரப்பு செய்யும்படி ஒலிபரப்பாளனிடம் கெஞ்சிக் கூத்தாடியிருக்கிறீகள். ‘லாலிலாலிலாலி' என்று பெண்ணின் குரல் எழும்புகையில் நீங்களே எழுச்சி பெறுவதாய் நினைத்தீர்கள், உங்கள் துணைவியாருடன் முதலிரவு கொண்டாடும் சமயத்தில் கூட ‘லாலிலாலிலாலி' குரல் கேட்டுத்தான் அவர்களும் எழுச்சியுற்று காரியத்திற்கு சம்மதித்தார்கள்.

பி.ஆர்.ராஜன்

பன்றியோடு சேர்ந்தால் பசுவும் டேஸ் சாப்பிட்டு பழகிவிடும் என்று சொல்வது போல உங்கள் துணைவியாரும் மூடு வரும் சமயங்களிலெல்லாம் ‘லாலிலாலிலாலி' பாடலை டேப்ரிக்கார்டரில் இயக்கி உங்களை உசுப்பேற்றி பகலென்றும் பாராமல் தன் காரியத்தை முடித்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வர கொடம் தூக்கிச் சென்று விடுவார். இப்படியாக உங்களுக்கு வாரிசுகள் இரண்டு. ஆண் ஒன்று பெண் ஒன்று என்று முடித்துக் கொண்டு துணைவியாருக்கு ஆப்ரேசனையும் முடித்து விட்டீர்கள்.

உங்களுக்கு இயல்பாகவே துப்பறியும் மூளை இருக்கிறது. உங்களின் சிறுவயதிலிருந்தே தமிழ்வாணனின் புத்தகங்களை நீங்கள் தொழிலுக்குச் செல்லும் சென்னிமலை கடைவீதியில் வாங்கி வந்து வாசிப்பீர்கள். உங்களை நீங்கள் சங்கர்லால் என்று சிலகாலம் நம்பி இயங்கினீர்கள்.

முதலில் தோப்புப்பாளையம் வீடுகளில் காணாமல் போன சில்வர் குண்டான், பித்தாளை குடம், இவற்றை துப்பறிந்து கண்டு பிடித்து கொண்டு போய் வீட்டாரிடம் கொடுத்து, அவர்கள் உங்களை வாழ்த்துவதைக் கேட்டு பைசா எதுவும் வாங்காமல் வீடு வந்து விடுகிறீர்கள். ‘பின்னாடி காலத்துல மாப்ளெ போலீஸ் வேலைக்கி போவாம் பாரு!' என்று அவர்கள் பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் உங்களை பாராட்டி அனுப்புவார்கள்.

திருவிழா சமயத்தில் ஆத்தாவுக்கு பூஜை செய்யவிருந்த மணியைக் காணோமென பூசாரி உங்களை அழைத்து கையில் ஒரு ரூபாய் கொடுத்து துப்பறியச் சொன்னார். முதலாக ஆத்தாளின் கருவறைக்குள்ளேயே நீங்கள் நுழைந்து அங்கிருந்து உங்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தீர்கள். பின்பாக பூசாரியை கோவில் திண்டில் அமர வைத்து விசாரணை மேற்கொண்டீர்கள்.

‘'எப்போதிலிருந்து மணியைக் காணோம்? எப்போது கடைசியாக மணி கோவிலில் இருந்தது?''

‘‘மணியை காலையிலிருந்து காணோம்.பொழுதோட பச்சை பூசை நடக்கையில் அதை அடித்துத் தானே பூஜை செய்தேன்!''

‘‘யாராவது சந்தேகப்படும் படி புதிய ஆள் நம்மூரில் நடமாடினானா?''

‘‘உள்ளூருக்கு ஒறம்பரைக்கி சில பேரு இப்ப வந்திருக்காங்கள்ல.. அவிங்க நேத்து பூஜையப்ப கோவிலுக்கு உள்ளார கூட வரலையே''

‘‘சரி அவிங்க கோவிலுக்குள்ள வரலை. நீ பேரீச்சம்பழக்காரனுக்கு போட்டு பழம் வாங்கித் தின்னுட்டியா?''

‘‘ஆமா அதை எடைக்கி போட்டுத்தான் நான் வயிறு ரொப்பிக்கணும் பாரு? கண்டு பிடிச்சிக் குடுடான்னு உன் கிட்ட சொன்னா, நீயி என்னையவே பேரிச்சம்பழம் தின்னவன்னு சொல்றியா?''

‘‘விசாரணைன்னா அப்படித்தான் இருக்கும்''

‘‘கோயில் மணியகாரரு கிட்டயே நான் மணி தொலைஞ்ச விசயத்தை சொல்லிக்கறேன். அவரு வேற வாங்கியாச்சும் குடுப்பாரு''

‘‘அதும் திருடு போயிடுச்சுன்னா? இப்ப இந்த மணியை தூக்குனவன் அதை தூக்க மாட்டான்னு என்ன நிச்சயமிருக்கு?''

‘‘என் இடுப்புலயே கட்டிக்கறேன் பத்திரமா!''

‘‘நீ விசாரணைக்கி ஒத்துழைக்க மாட்டீங்கறீன்னு நான் கோயல் மணியகாரரு கிட்ட ரிப்போர்ட்டை சப்மிட் பண்ணீடுவேன். இப்படி பூஜையறையில இருந்த மணி காணாமப் போற அளவுக்கு கேர்லெஸ்ஸா இருந்த உனக்கு தண்டனை தரச் சொல்லுவேன். போக மணியை நீ தான் சேல்ஸ் பண்டி காசு பாத்திருக்கேன்னும் சொல்வேன்!''

‘‘ஏப்பா கண்டுபிடிச்சு தரச்சொன்ன பாவத்துக்கு என்னையவே நீயி குத்தஞ் சொல்லுவியா? விளையாட்டுப் பிள்ளையிங்கறது சரியாத்தான் இருக்கு''

‘‘யாரு விளையாட்டு பிள்ளை? மணியை தொலைக்கிற நீயி தான் விளையாட்டு பிள்ளை. நீ மொதல்ல கோவில் பூசாரிங்கறது நினைப்புல வெச்சுக்கோ. மணி காணாமப் போச்சுன்னு ஊருக்கு தெரிஞ்சா உன் நிலைமை என்னாகும்னு யோசனை பண்ணு. கோவில் இந்த ஒரு வார காலத்துக்கு யாரு பொறுப்புல இருக்குது? இன்னிக்கி மணியைக் காணோம்னு சொல்றவன் நாளைக்கி சாமியக் காணோம்னு

சொல்ல மாட்டீன்னு என்ன நிச்சயமிருக்கு?''

‘‘ஐயோ! நீ கேள்வியக் கேளுப்பா நான் விசாரணைக்கி ஒத்துழைக்கிறேன்!''

‘‘அப்படி வா வழிக்கி. சொல்லு பச்சை பூசைக்கி இருந்த மணியை இப்ப விடிஞ்சு காணோம். அப்ப நைட்டு ஆத்தாவுக்கு மத்தாளம் கொட்டுனவங்கெல்லாம் எங்க?''

‘‘இதென்ன அந்தப்பக்கம் கல்லுக்கட்டு மேல தூங்கீட்டு இருக்கானுங்க!''

‘‘நம்மூரு ஆளுங்க யாரு யாரு கோயல்லயே ராத்திரில படுத்தது?''

‘‘ரெண்டு பேரு! ஒருத்தன கோயில் மணியகாரரு தம்பி, இன்னொருத்தன் முப்பாட்டுக்காரன் பையன்''

‘‘சரி காலையில நீ எங்கெங்கெல்லாம் போனே?''

‘‘நான் தூங்கி விழிச்சதும் இசிக்காட்டுக்கு தெக்கெ போனேன்! நேரா ஊடு வந்து தலைக்கி குளியல் போட்டுட்டு, ஆத்தாளை குளிப்பாட்ட கொடத்துல தண்ணி எடுத்துட்டு கோயலுக்கு வந்தவன் ஒரு மணி நேரமா இங்கயேதான் இருக்கேன். மணி காலு மொளச்சு ஓடியா போயிருக்கும்.''

‘‘நீ போறப்ப தூங்கீட்டு இருந்தவங்க கோயல்ல இருந்தாங்களா?''

‘‘அவிங்களை இப்பத்தான் எழுப்பி விட்டு ஊட்டுக்கு தாட்டி வுட்டேன்''

‘‘இசிக்காட்டுக்கு போறப்ப வெறுங்கையை

வீசிட்டு போனியா? எதாச்சிம் தூக்கீட்டு போனியா?''

‘‘சொம்புல தண்ணி கொண்டு போனேன்''

‘‘சொம்பு எங்கிருந்து எடுத்தே?''

‘‘கோயல் சொம்பு தான்''

‘‘என்ன பூசாரி நீயி? கோயல் சொம்பை தீர்த்தம் குடுக்க வச்சிருப்பாங்களா இல்ல உன்னையாட்டம் இசிக்காட்டுக்கு தூக்கீட்டு போவாங்களா?''

‘‘ஏப்பா இன்னிக்கி தட்டுல உழுவுற காசு பூராத்தியும் வேணா உனக்கே குடுத்துடறனப்பா! வெளிய

சொல்லிடாதே!''

‘‘உம்மட காசு எனக்கு வேண்டாம் செரி நட,

இசிகாடுக்கு போலாம்!''

‘‘அங்க போயி என்ன பண்றது நாம?''

‘‘நட போலாம். தெக்க முள்ளுக்காட்டுக்கு தான போனே வா!''

நீங்கள் நடக்க பூசாரி உங்கள் பின்னால் வந்தார். பூசாரியிடம் ‘எந்த இடத்துல உட்கார்ந்தே? போயி பார்த்துட்டு வா!' என்றீர்கள், அவன் உள்ளார நுழைந்து போய் அங்கிருந்த மணியை பார்த்தான். அதை எடுத்து 'டிங் டிங்'கென மணியை ஆட்டிக் கொண்டே டில்லி முள்ளுக்காக குனிந்தபடி வந்தான்.

‘‘எப்படி இங்க வந்துச்சின்னே தெரியலப்பா!''

‘‘நீயே சொம்பையும் மணியையும் தூக்கீட்டு வந்துட்டு தெரியலைங்கறே? சொம்பை எடுத்துட்டு வந்தவன் மணியை ஏன் உட்டுட்டு வந்தே?''

‘‘ஆத்தாவோட மகிமையே மகிமை! இப்பத்தான் மணியை கண்டுபிடிச்சு கையில குடுப்பியா மாட்டியான்னு ஆத்தாவை மிரட்டிக் கும்பிட்டேன்! ஆத்தா தான் துப்பறியும் சங்கர்லாலைப் போயிப்பாருன்னு

சொல்லுச்சி! மகிமையோ மகிமை!'' என்று அள்ளி வீச, நீங்கள் வழக்கம் போல புகழ் பாட்டில் மயங்கி அவனோடு கோவிலுக்கு வருகிறீர்கள்.

இப்படியாக சிறு வயதிலிருந்து துப்பறிவதிலும் பொருள்களை கண்டு பிடித்து உரியோரிடம்

சேர்ப்பிப்பதிலும் ஆர்வமுடையவராக இருந்த நீங்கள் வயதுக்கு வந்த பிறகு திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் நடித்த படங்களை மொழி புரியாவிட்டாலும் பார்த்து தன்னை ஜேம்ஸ்பாண்டாக தகவமைத்துக் கொண்டீர்கள். அதன்பிறகு நீங்கள் வீட்டினுள் காணாமல் அல்லது திருடு போகும் சிறுபொருட்களை கண்டறிவதில் ஆர்வம் குன்றி சிலகாலம் அவற்றை ஒதுக்கினீர்கள்.

தோப்புப்பாளையத்தில் ஒருமுறை தன் மனைவியைக்காணவில்லை என்ற கேஸ் உங்களிடம் வந்தது. காணாமல் போன உள்ளூர்காரரின் மனைவியை நீங்கள் ஒரு வாரத்தில் வெள்ளோட்டில் ஆண்டிகாட்டில் வைத்து பிடித்தீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை வீடு கொண்டு வந்து சேர்த்து அவரின் கணவரிடம் நல்வார்த்தைகளை அவர் வாயாறச் சொல்ல நீங்கள் காதாறகேட்கத்தான் இயலவில்லை.

அந்தப்பெண் புதிய கணவனோடு வெள்ளோட்டில் குப்பை கொட்ட ஆரம்பித்து விட்டாள். இதற்காக நீங்கள் செய்த முழுச் செலவீனமும் உங்கள் தொகை தான். இதனால் உங்கள் துணைவியாரின் கோபத்துக்கும் ஆளானீர்கள். ‘இனிமேல் மணியைக்காணோம் டேசைக் காணோமென்று நீங்கள் புறப்பாடு செய்தால் கால்களில் ஒன்றை இழக்க நேரிடும்' என்று

 சொல்லி விட்டார் உங்கள் துணைவி. அதனால், வரும் கேஸ்களை ஒதுக்கி விட்டு கடையில் அமர்ந்து பொறுப்பாய் பஞ்சர் ஒட்டுவதில் கவனமானீர்கள்.

பிள்ளைகள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை தாண்டுகையில் திருட்டுப் பழக்கத்தை கற்றுக் கொண்டார்கள். தினமும் ஏதேனுமொரு பொருளை திருடி வந்து அவர்கள் தங்கள் அம்மாவிடம் காட்ட வேண்டும். விடுமுறை நாட்களில் யாராவது வீட்டினுள் நுழைந்தும் திருடி வர வேண்டும். அவர்களுக்கும் திருடவில்லையென்றால் கைகளில் அரிப்பு நோய் வந்தது போன்று உள்ளங்கையை சொறியத்துவங்கும் சமயத்தில் உங்களுக்கு விசயம் தெரிய வந்தது.

துப்பறியும் மூர் வீட்டினுள் திருட்டுக்கும்பலா? துக்கத்தில் சாணிப்பவுடரைக் குடித்து, உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் கிடந்தீர்கள், தன் இரு பிள்ளைகளும் தன் கையில் அடித்து ‘இனிமேல் திருடமாட்டோம்' என சத்தியம் செய்தால் மட்டுமே துணைவியாரோடு குடும்ப உறவே நீடிக்குமென சொல்லி சத்தியம் வாங்கிக் கொண்டீர்கள். நீங்கள் துப்பறிவாளர் என்று ஊர் மறந்து கொண்டிருந்தது. நாற்பது வயதை தாண்டி மூப்படைந்தீர்கள்.

யாரேனும் உங்களது பழைய செயல்களை பாராட்டி சைக்கிள் கடையில் அமர்ந்து பேச துவங்குகையில் தனக்கு ஒரு கொலைக்கேசைக் கூட துப்பறிய முடியா சோகத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள். இப்போதெல்லாம் குடிக்கும் அடிமையாகிக் கொண்டிருந்தீர்கள். ஆறேழு கிலோ மீட்டர் பயணப்பட்டு மேற்கே எல்லைக்காட்டில் கோட்டர் வாங்கி அங்கேயே அமர்ந்து குடித்து முடித்து வருவது உங்களது மாலை நேரப் பணியாயிற்று.

உங்களின் சிந்தனையெல்லாம் போதையில் இருக்கையில் டிப் டாப்பாக உடையணிந்து சீனா, ஜப்பான் என்று விமானத்தில் பயணப்பட்டு மாபியா கும்பலின் தலைவனை புறட்டியெடுத்து இந்தியாவுக்கு இழுத்து வருவது தான். ஆனால் உங்களால் சுத்துப்பட்டு கிராமங்களுக்குத்தான் இன்வஸ்டிக்கேசனுக்காக செல்ல முடிந்தது. மூர்த்தி என்கிற உங்களின் பெயரை ரோஜர்மூரின் பெயரைப் போன்று துப்பறியும் மூர் என்றாக்கிக் கொண்டீர்கள்.

கேட்போரிடமெல்லாம் துப்பறியும் மூர் 006 என்றீர்கள். அது என்ன 006? என்று யாரேனும் விசாரித்தால் ரோஜர்மூர் 007. அவர் இண்டர்நேசனல் இன்வஸ்டிகேட்டர். நான் லோக்கல் இன்வஸ்டிக்கேட்டர். எங்களுக்கெல்லாம் மத்திய புலனாய்வுத்துறை 006 தான் குடுத்திருக்கு, என்று அள்ளி வீசுவீர்கள்.

மனைவியின் விருப்பத்தின் பேரில் துப்பறியும் கலையை கவலையுடன் இழந்திருந்த உங்களுக்கு கடைசி கேஸ் ஒன்றை பார்த்து விட்டு மொத்தமாக முடித்துக் கொள்ளலாமென்ற சிந்தனையும் இருந்தது. அரிப்பெடுத்தவன் கை சும்மாயிராதாம். அல்லது ஆடின காலும் பாடின வாயும் சும்மாயிராதாம்.

உங்களுக்கு அன்று காலையிலேயே உள்ளூர் சுப்பிரமணியின் மனைவி கேஸ் கொண்டு வந்து விட்டாள். ‘அப்புறமேத்திக்கி வீட்டுக்கே வர்றேன் போ' என்று அவளைத் தாட்டி விட்ட நீங்கள், மதிய நேரத்தில் அவளின் வீடு சென்றீர்கள். வீட்டில் சுப்பிரமணி சோகமே வடிவாக திண்ணையில் அமர்ந்திருந்தான்.

மனைவியிடம் பலமாக தாக்குண்டிருக்கிறான் போல. அவன் மனைவியிடம் சம்பவம் என்ன? என்று விசாரித்தீர்கள். உங்கள் மனதில் இதுவே கடைசி கேஸ் என்றும், இனி ரிட்டயர் ஆகிவிடலாமென்ற எண்ணமும் உதித்திருந்தது. பயனாளிகளின் பாராட்டு மழையில் இனி காலம் முழுதும் நனைந்தபடி இருக்கமுடியாது.

‘‘இந்தாளு நேத்து மேற்கே எல்லைக்காட்டுக்கு டிவிஎஸ்சை எடுத்துட்டு போச்சுங்க! திரும்பி வர்றப்ப நடந்து வந்துச்சு! வண்டியெங்கேன்னு கேட்டா இன்னொருத்தரு வண்டீல போனேன். குடிச்சுட்டு அங்கிருந்து இன்னொருத்தரு வண்டில வந்தேன்னு சொல்றாப்ல! வண்டி போச்சுங்க மூர் 006!'' சங்கர்லால் என்ற தன் பட்டப்பெயர் மாறி மூர் என்றாகிவிட்டது என்று அதற்காக தனியே மகிழ்ந்தீர்கள்.

மேலும் சில விசாரணையை அவ்விடத்தில் முடித்துக் கொண்டு, மாலையில் உங்கள் டிவிஎஸ்ஸில் எல்லைக்காடு டாஸ்மார்க் வந்தீர்கள். கோட்டர் வாங்கிக் கொண்ட நீங்கள் பாரில் அமர்ந்தவாறு சக குடிவிரும்பிகளிடம் தன் செல்போனில் எடுத்து வந்த சுப்பிரமணியின் முகத்தைக் காட்டி ‘நேற்று இவரை பாரில் வைத்துப் பார்த்தவர் யாரேனும் உண்டா?' என்று விசாரணையை ஆரம்பித்தீர்கள்.

விசாரணையில் சுப்பிரமணியை தெரியும் என்றார்கள். ஆனால் நேற்றுப் பார்த்ததாய் ஞாபகமில்லை என்றே குடிவிரும்பிகள் பதில் அளித்தார்கள். நீங்கள் அடுத்ததாக மளிகைக் கடைகளில் விசாரிக்கலாமென வண்டிக்கு வந்தீர்கள். அப்போது இருவர், ‘இந்த வண்டி சேல்ஸ்க்கு வருதுங்களா? உங்குளுதா?

அஞ்சாயிரம்னா இப்பவே கையில காசை வாங்கிக்கங்க!' என்று நின்றார்கள்.

நீங்கள் அவர்களை போதையில் கண்டமானிக்கு திட்டி விட்டு, மளிகைக் கடைகளில் விசாரித்து சலித்து போதையும் இறங்கி விட மேலும் ஒரு கோட்டரை வாங்கி உங்கள் வண்டிக்கவரில் திணித்தீர்கள். அப்போது உங்களிடமிருந்து அரைக் கட்டிங்கை அன்போடு பெற்றுக் கொண்ட குடிவிரும்பி, நீங்கள் எதிர்பார்த்த துப்பை அந்த கேஸில் கொடுத்தார். அவர் சொன்ன தகவலின்படி மூராகிய நீங்கள் மேலும் இரண்டு கிலோ மீட்டர் அந்த நபரையும் ஏற்றிக் கொண்டு பயணப்பட்டு சுப்பிரமணி அவ்வப்போது தொடர்பில் இருந்த மல்லிகாவின் வீடடைந்தீர்கள்.

அங்கே வாசலில் உங்களிடம் வண்டியை விலை கேட்ட நபர்கள் ஒரு டிவிஎஸ்ஸை உதைத்து ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் இருக்க மல்லிகா அருகில் நின்றிருந்தாள். பார்த்தவுடன் உங்களுக்கு அது மூர்த்தியின் வண்டிதானென்று நெம்பரை பார்த்து கண்டு கொண்டீர்கள். கொஞ்சம் பிந்திப் போயிருந்தால் மல்லிகா அதை நான்காயிரத்திற்கு தள்ளி விட்டு காசு பார்த்திருப்பாள்.

பின்பாக டாஸ்மார்க் வரை துப்புச் சொன்னவர் அந்த டிவிஎஸ்ஸை முறுக்கி வர டாஸ்மார்க் வந்து  சேர்ந்தீர்கள். உள்ளூர் நபர்கள் இருவர் ஒரு வண்டியில் வர, அவர்களில் ஒருவரை வைத்து எப்படியோ டிவிஎஸை ஊர் கொண்டு வந்து சேர்த்த நீங்கள் சுப்பிரமணியின் வண்டியோடு அவன் வீடடைந்தீர்கள்.

‘‘மூர் இறங்கினார்னா காரியம் வெற்றின்னு தான் உலகத்துக்கே தெரியுமே!'' என்று வரவேற்ற சுப்பிரமணியின் மனைவிக்கு உங்களைப்பற்றி முழுமையாக தெரியும் போலிருக்கிறது! நீங்கள் அவளது பாராட்டு மழையில் நனைந்து மகிழ்ந்தீர்கள். 'இந்த வண்டி எங்க நின்னுதுங்க மூர்?' என்று அவள் கேட்க, நீங்கள் உண்மையை சொல்லவில்லை. அதைச்சொன்னால் குடும்பத்தில் மேலும் பல விபரீதங்கள் அரங்கேறிவிடலாம்.

வணக்கம்! வைத்து விட்டு நகர உங்களைப் பின் தொடர்ந்த சுப்பிரமணி ‘சரக்கிருக்கா மூர்? இருந்தா குடேன் துளி நனைச்சிக்கறேன். காத்தால இருந்து ஒடியாந்து ஒடியாந்து உதைச்சிட்டே இருக்கா! உடம்பெல்லாம் வலி!' என்று கேட்டவனுக்கு பாக்கெட்டில் இருந்த பாதி கோட்டர் பாட்டிலைக் கொடுத்து விட்டு கிளம்பினீர்கள். உங்களின் கடைசி கேஸ் அத்தோடு முடிந்துவிட்டது.

பிப்ரவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com