துப்பறிவாளனின் செய்திக் குறிப்புகள்

துப்பறிவாளனின் செய்திக் குறிப்புகள்

எங்கு தேடியும் அகப்பட-வில்லை. அறையை முழுவதும் அலசியெடுத்தாயிற்று. புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் மரரேக்கின் இண்டு இடுக்குகளையும் விட்டு வைக்கவில்லை. எல்லா புத்தகங்களையும் விரித்து பக்கங்களை மேய்ந்தும் உதறியும் பார்த்தாயிற்று. துணி மணிகள் படுக்கை விரிப்பு போர்வை தலையணைகள் ஒன்றையும் விடவில்லை. பக்கத்து அறைகளையும் விட்டு வைக்கவில்லை. எங்கும் இல்லை. சும்மா விடக்கூடாது. எப்பாடுபட்டாவது கண்டுபிடித்துவிட வேண்டும்.

 ‘என்னன்னு சொன்னா நாங்களும் தேடுவோம்ல?' என்றான் மாதேஸ்.

 சொல்லலாமா வேண்டாமா என்று வேலன் யோசித்தான். எதுவும் கூறாமல் கைகளைப் பிசைந்துக்கொண்டும் கால்களை உதறிக்கொண்டும் இருந்தான். பக்கத்து அறை நண்பர்களும் படிப்பதை மூடிவைத்துவிட்டு வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர்.

 ‘ஏன்டா... அப்படி என்னத்தைதான் தேடறே?'

 ‘அழுத்தக்காரன்டா.. என்னன்னு சொன்னாத்தானே தெரியும்.'

 ‘டேய்.. சொல்றீயா... இல்லையா?'

 யாரையும் கண்டு

கொள்ளாமல் மறுபடியும் தேட ஆரம்பித்தான்.

 ‘லூசுப் பயல்டா... ஐயருகிட்டே சொல்லி கிளப்புனாத்தான் சரிப்படும்'

 மதுரா லாட்ஜின் இருபத்திரண்டு அறைகளில் பணிக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களும் தங்கியிருக்கின்றனர்.

 வேலன் வலக்கை சுட்டு விரலால் இரு புருவத்தையும் தேய்த்துக்கொண்டு தலையை ஆட்டியசைத்துக் கொண்டிருந்தான். திடீரென்று மாதேஸும் எதையோ தேடுவதைப்போல கலைத்துப் புரட்டிப்போட்டு பரபரப்பானான். வேலன் மாதேஸை திடுக்கிடலுடன் பார்த்தான்.

‘நீயென்னத்த தேடுறே?'

‘நீ தேடுறதைதான் நானும் தேடறேன்'

 வேலனுக்கு வெட்கம் பிடுங்கியது. மாதேஸின் தோளில் கையைப் போட்டு ‘மாதேஸ் நான் இரண்டு சொற்களைத் தொலைச்சிட்டேன்' என்றான்.

‘இரண்டு சொற்களையா?' திடுக்கிடலுடன் கேட்டான். வேலன் கண்கள் தவநிலையில் மூடியிருந்தன.

 ‘என்ன சொற்கள்டா?'

 ‘அதைத்தான்டா தேடறேன்'

 ‘என்னன்னு தெரியாம எப்படித் தேடறது?'

 உதடுகளைப் பிதுக்கினான்.

சுட்டுவிரலால் நெற்றியைத் தீட்டி, ‘எப்படியாவது கண்டுபிடிச்சாகணும்‘ என்பவனை வினோதமாகப் பார்த்தான்.

 ‘சொற்களை மறந்துட்டீயா?'

 ‘இல்லை தொலைச்சுட்டேன்'

 இவன் தேறாத கேஸ் என்று மாதேஸுக்கு உறைக்க ஆரம்பித்தது.

 ‘சரி வா சாப்பிடப் போகலாம். இன்னைக்கு காலேஜ் அசைன்மெண்ட் ஏதுமில்லையா?'

 ‘அதுக்குத்தான் தேடிகிட்டிருக்கிறேன்' என்றதும் படிகளில் இறங்காமல் நின்றான்.

 ‘எல்லாம் புரிஞ்சுதான் பேசிக் கிட்டு இருக்கீயா வேலு?'

 ‘பார்த்தியா அதான் நா சொல்லலை. நீ நம்ப மாட்டேன்றேல்லே?'

 லாட்ஜின் கீழே இருந்த ஓட்டலில் சாப்பிட்டனர். மாதேஸ் படிப்பது பிஇ இயந்திரப் பொறியியல். வேலன் படிப்பது பிஎஸ்ஸி

சுற்றுச்சூழல் அறிவியல். அறை நண்பர்களாக இருவரையும் மதுரா லாட்ஜ் இணைத்து வைத்திருந்தது. மாதேஸின் மூன்று மாத கால நட்பு, ஏதேனும் ஒருவிதத்தில் வேலனுக்கு உதவ எண்ணியது.

 ‘எங்கே போறோம்?'

 ‘புகார் கொடுக்க?!' என்றான் மாதேஸ்.

 ‘போலீஸ் ஸ்டேசனுக்கா... நான் வரலை'

 ‘அங்கே சொன்னோம்னா... கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிடுவாங்க... அங்கே போகலை'

 வேலனுக்கு மாதேஸின் செய்கை புரியவில்லை.

 ‘துப்பறிவாளர் நிலையம்‘ என்று போர்டு மாட்டியிருந்த இடத்தை இப்போதுதான் கவனித்தான். பழமையான பில்டிங் விசித்திரமான வாசனையுடன் குண்டு பல்பின் வெளிச்சத்தில் சுற்றுப்புற இரைச்சல்களுக்கிடையே பயங்கர அமைதியில் இருந்தது. காலிங்பெல்லை அழுத்தினர். கதவு திறந்தது. டியூப்லைட்டுகளின் வெளிச்சம். ரிசப்ஷனிஸ்ட் விவரங்களைக் கேட்க ஆரம்பித்தாள். டிடெக்டிவ்கிட்டே கண்டுபிடிக்கச் சொல்லி அழைத்து வந்திருக்கிறான். வேலன் கருணை பொங்க மாதேஸைப் பார்த்தான்.

 ‘என்ன?' ரிசப்ஷனிஸ்ட் திடுக்கிட்டாள்.

 ‘இரண்டுச் சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும்' மறுபடியும் மாதேஸ் சொன்னான்.

 ரிசப்ஷனிஸ்ட் அவர்கள் செல்ல வேண்டிய அறையைக் காட்டினாள்.

 அறைக் கதவைத் தட்டினர். ‘திறந்துதான்யா இருக்கு வாங்கய்யா' கரடுமுரடான குரலைக்கேட்டு லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளினர். முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தவர் சுழல் நாற்காலியில் திரும்பினார். சந்தனம் விபூதி குங்குமம் ருத்திராட்சை மாலையுடன் கண்கள் மூடிய நிலையிலிருந்தார். கம்ப்யூட்டர், பைல்கள், பேனா பென்சில்கள் இருந்த மேசையில் பெயர்ப் பலகை கவிழ்ந்து கிடந்தது. ‘திகம்பர சாமியார்‘

 ‘என்னடா சாமியார்ட்ட கூட்டிட்டு வந்திருக்கே?'

 ‘எனக்கென்ன தெரியும்?!'

 ‘சொல்லுங்கப்பா... என்ன பிரச்னை?'

அவர்கள் சொன்னதும் திகம்பர சாமியாரின் புருவங்கள் நெரிந்தன. கொலைக்கேஸ், கள்ளக்கேஸ், கொள்ளைக்கேஸ், புருசன் பொஞ்சாதி சந்தேககேஸ், கோயில் நகைத்திருட்டு என பல தினுசுகளில் சந்தித்த துப்பறிவாள வாழ்க்கையில் இது என்ன விநோத கேஸ். ‘கவலைப்படாதீர்கள் கண்டுபிடித்துவிடலாம்‘ என்றதும் வேலனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

மதுரா லாட்ஜ் ஒரு சாமியாரின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை. மற்ற அறைகளில் இருந்தவர்கள் துளைத்தெடுத்தனர். அவர் ஒரு துப்பறிவாளர் என்பதை நம்ப மறுத்தனர்.  அறையை அலசினார். தேவையான விவரங்களைக் கேட்டு ஒலிப்பதிவு செய்துக்கொண்டார். ஃபேன் தடதடத்து ஓடி அனல் காற்றைப் பரப்பியது. அவரும் அறையைப் புரட்டிப் போட்டார். ஒட்டப்பட்டிருந்த நடிகை நடிகர்கள் கிரிக்கெட் பிளேயர்களின் நிறம் மங்கிய போஸ்டர்களை சுரண்டிப் பிய்த்து எடுத்தார். சுண்ணாம்புப் பற்றோடு வந்திருந்த போஸ்டரின் பின்புறம் கோணல்மாணலாக எழுதியிருந்த இரண்டு சொற்களைக் காட்டினார். வேலன் பார்த்துவிட்டு உதடுகளைப் பிதுக்கி மறுத்தான். மாதேஸ் எட்டிப் பார்த்தான். ‘சூரிய மின்சாரம்' என்றிருந்தது. அவர் அந்த போஸ்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அறை நண்பர்கள் மொய்த்துக் கொண்டனர்.

 ‘ஏண்டா உங்க லூசுத்தனத்தை அந்தாளு காசாக்கப் பாக்கிறான். எவ்வளவுடா பீஸ்?'

 இருவரும் அமைதியாக இருக்க ‘டேய் மாதேஸு புத்தியா பொழைச்சுக்கடா' என்று வேலனைக்காட்டி எச்சரிக்கும் விதமாக கூறிவிட்டுக் கிளம்பினர்.

 ‘உனக்கு சிரமமாக இருந்தால் வேறு அறைக்குப் போயிடு மாதேஸ்'

 வேலன் தலையை குனிந்தபடி மெல்லமாகச் சொன்னான். மாதேஸ் அவனருகில் உட்கார்ந்து தோள்களில் கைகளைப்போட்டு அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

 காலையில் கல்லூரிக்குச் செல்ல மாடிப்படிகளில் இறங்கியபோது ஒருவர் வேலனை நெருங்கினார். ‘நான் ஆனந்த் சிங்,துப்பறிவாளர் நிலையத்தில் இருந்து வருகிறேன்'

 ‘நேற்று இரவு வந்தவர்...?' இழுத்தான் வேலன்.

 ‘துப்பறிவாளர் நிலையத்தில் பத்துப் பனிரெண்டுப் பேர் உள்ளோம். டியூட்டியில் உள்ளவர்கள் வருவார்கள். இன்று எனது ஷிப்ட். உங்கள் கல்லூரிக்குப் போகவேண்டும்' ஆனந்த்சிங்கின் முகம் இறுகியிருந்தது.

 ‘ஒருவரே ஒருவிஷயத்தை ஆராய்ந்தால்தானே கண்டு

பிடிக்கமுடியும்?'

 ‘அந்தக் கவலை அநாவசியமானது. தொலைத்த வார்த்தைகளைக் கண்டுபிடித்துத் தருவது எங்கள் பொறுப்பு. நாம் கிளம்பலாமா?'

 அவரின் இருசக்கர வாகனத்திலேயே கிளம்பினர்.

 கல்லூரி அமைதியாக இருந்தது. வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே வந்துவிட்டிருந்தனர். ஆனந்த்சிங், வேலனின் வகுப்பறையை அலசினார். சுவர்கள் ஜன்னல்கள் போர்டு பேராசிரியரின் மேசை நாற்காலி இருபத்தியொரு இரும்பு டெஸ்க்குகளின் இண்டு இடுக்குகளெனப் பூதக் கண்ணாடியில் விழிகளை விரித்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். வகுப்பில் மாணவர்கள் வர ஆரம்பிக்க வேலனுக்கு வியர்த்தது. தெரிந்தால் கிண்டலுக்கு ஆளாவோம். மனதின் தடதடப்பு.

சிங் வேலனைப் பார்வையால் அழைத்து குறிப்பிட்ட இடத்தை டெஸ்கில் காண்பித்தார். காம்பஸால் கீறப்பட்ட தினுசில் கிறுக்கல் எழுத்துகள். ‘காட்டுத் தீ'

 மரத்தடியில் ஆனந்த்சிங் அவனிடம் செல்போன் பதிவில் கையொப்பம் வாங்கிக்கொண்டார். எடுத்த கீறல் எழுத்துக்களின் போட்டோவை அவன் வாட்சப் எண்ணிற்கு அனுப்பினார். காலை வெயில் சுள்ளென்று அடித்தது. கர்ச்சீப்பால் வியர்க்கும் நெற்றியைத் துடைத்தபடி ஆனந்த்சிங் இறுக்கத்துடன் இரு

சக்கரவாகனத்தை முறுக்கினார். அவர் காட்டிய

சொற்களை வேலன் மறுத்திருந்தான்.

 மதியம் மெஸ்ஸில் அளவுச் சாப்பாட்டை சாம்பாரில் பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டிருப்பான். அருகில் வந்தமர்ந்த இளைஞன் ‘வழக்கமாக இங்கேதான்

சாப்பிடறதா?' என்றான். அறிமுகமற்றவனை கேள்விக்குறியோடு ஏறிட்டான். ‘நான் திருவல்லிக்கேணி கோவிந்தன்' என்றவன் சாப்பாட்டு இலையை சற்று மேலே உயர்த்தச் சொன்னான். மேசையில் வாடாமல்லி வண்ணத்தில் பசைத்தீற்றல்கள் இருந்தன. இலையில் பதிந்தவை மேசையில் கண்ணாடிப்பிம்ப எழுத்துக்களாக இருந்தன. ‘உருகும் பனிப்பாறைகள்‘

சிரமத்துடன் படித்துவிட்டு நிமிர்ந்தபோது திருவல்லிக்கேணி கோவிந்தன் எழுந்து சென்று கொண்டிருந்தான். துப்பறிவாளர் நிலையத்தைச் சேர்ந்தவன்தான். சாப்பிட்ட கையோடு ‘மிஸ்டர் கோவிந்தன்' என்று

சத்தமிட்டுக் கூப்பிட்டபடி வாசலை நோக்கி ஓடினான் வேலன்.

 ‘அந்தச் சொற்கள் இல்லையென்று உனது முகமே சொல்லி விட்டது. சீக்கிரம் கண்டுபிடிச்சடலாம். நான் நான்கு இடங்களுக்கு போக வேண்டியிருக்கிறது' துப்பறிவாளன் கிளம்பிவிட்டான். நீர்பட்டு மேசையில் பதிந்த பசை எழுத்துகளை

 சட்டென்று கண்டுபிடித்தது எப்படி?

 ‘இலைக்காரங்க வீட்டுப் பிள்ளைக விளையாட்டா செஞ்சிருக்கலாம்' என்றான் மெஸ் பணியாள்.

 ‘தூணிலும் துரும்பிலும் இருப்பது கடவுள் மட்டுமில்லை.. துப்பறிவாளர்களும்தான்...' கல்லூரி விட்டு பஸ் நிலையத்திற்கு வந்தான். சட்டென்று அவனருகில் உட்கார்ந்த நபர் வேலனை இடித்துக் கொண்டு ‘அப்பாடி... சாயங்காலம் ஆயிட்டாலும் என்ன வெயிலு' என்று வியர்த்து வழியும் முகத்தைத் துடைத்தார். ‘அப்புறம் வேலன் ஏதும் ஞாபகத்துக்கு வரலையா?' என்றார். தனது பெயரைச் சொல்லும் நபரிடம் ‘எது??' என்றான். ‘இரண்டு சொற்கள்' என்றவர் விசிட்டிங் கார்டை

நீட்டினார். ‘துப்பறியும் சாம்பு. துப்பறிவாளர் நிலையம்‘

 ‘இல்லை சார்.' என்றவன் மனதில் நிமிசத்துக்கு ஒருவன் மாறி பூதமென வருகிறார்களே என்றிருந்தது.

 பேருந்தின் முன்புற இருக்கைப் பின்புற பகுதியில் ஏதேதோ கிறுக்கப்பட்டு கொசகொசவென கிடந்தன. காம்பஸ் கீறல்கள், பேனா கிறுக்கல்கள், மார்க்கர் பேனாவின் பட்டைத்தீட்டல்கள், லிப்ஸிடிக்கால் எழுதப்பட்ட கிறுக்கல்கள். ‘பார்த்தாயா உன்

சொற்களை?‘ என்று மௌனத்துடன் புருவங்களை அசைத்தார் சாம்பு. ‘ஐ லவ்யூ சம்யுக்தா.. அருண் வி.எஸ் சுதா.. மாரியம்மன் துணை.. விமலன் என் காதலன்.. பாலையாகும் ஆறுகள்.. மனதில் விழுந்த மணி.. ஸ்டார் கபாடிக் குழு.. என்னவளே இனியவளே.. ஆண்ட பரம்பரைடா.. கனவுப் பெண்ணே..‘ எக்கச்

சக்க கிறுக்கல்களில் எதைச் சொல்கிறார்? துப்பறியும் சாம்பு தனது சுட்டுவிரலால் ‘பாலையாகும் ஆறுகள்‘ எனும் முள் பேனாவால் நடுங்கும் எழுத்துக்களாக எழுதப்பட்டிருந்ததை நீள்வட்டமிட்டுக் காண்பித்தார். வேலன் உதடுகளைப் பிதுக்கினான். பஸ் நிறுத்தம் வரும்வரை சாம்பு அவனை உற்றுப் பார்த்தபடியே வந்தார்.

 அறைக்கு வந்தபோது மனதில் வெறுமை படிந்திருப்பதை உணர்ந்தான். துவைக்கச் சட்டை பேண்டுகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான். இருவர் துவைக்கும் அளவிற்கான பொது இடத்தில் மூன்று பேர் அரட்டைப் பேச்சுக்களோடு துணிகளுக்கு

சோப்பிட்டபடியும் அடித்து துவைத்தபடியும் இருந்தனர்.

 ‘இதோ இங்கேயிருக்கார் பாருங்க... எல்லாம் காளைகள் கூட்டம்'

 குரலைக்கேட்டு திரும்பினான் வேலன். இருவர் கணேஷ் வசந்த் என்று அறிமுகப்படுத்திக் கைகுலுக்கினர்.

 ‘ஏன் இங்கே லைட் இல்லையா?'

 ‘எல்லாம் ஆம்பளைங்கதான்யா இருக்கீங்க.. என்ன வெட்கம்'

 ‘வசந்த் வந்த வேலையை மட்டும் பார்'

 கணேஷின் பார்வை நீர்பட்டு ஒதுங்கியிருந்த துணி துவைப்பதற்கான டிடர்ஜெண்ட்

சோப்பின் கவரைப் பார்த்தது. எடுத்து நீரை உதறிப் படித்தான் வசந்த். ‘விமானம் – அவமானம்'

 கணேஷ் வேலனைப் பார்த்தான். அவன் சலனமற்று இருந்தான். சோப்புப் பேப்பரை வாங்கி தூரத்திலிருந்து கசிந்த குண்டு பல்பின் வெளிச்சத்தில் இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் பார்த்தான். பொடி பொடியான எழுத்துக்களாக ‘திடீர் வெள்ளம்' புலப்பட்டது.

 படிகளைவிட்டு கணேஷும் வசந்தும் இறங்கும்போது ‘இவன் நாடகமாடறான் பாஸ். நீங்க ஏன் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் கேஸா செலக்ட் பண்ணியிருக்கக் கூடாது' தொணதொணத்தபடி வந்தான் வசந்த்.

 இருள் கவ்வியிருந்து. மொட்டை மாடியில் துணிகளை காயப்போட்டுவிட்டு நகர்ந்தான். குள்ளமான உருவம் மோத இருளில் தடுமாறினான். படிகளைவிட்டு வெளிச்சப்பகுதிக்கு வந்தான். ‘ஐ ஆம் கத்தரிக்கா' என்றது குள்ள உருவம். அறை வாசலில் முன் நெற்றியில் சுருளாக தவழ்ந்த முடியை ஒதுக்கியபடி நின்றிருந்தவரை ‘என் குரு சங்கர்லால்' என்றான் கத்தரிக்காய்.

 சங்கர்லால் வேலனை விநோதமாக பார்த்தார். மாடிக்கு வந்தனர். செல்போன் டார்ச்சில் வெளிச்

சத்தைப் பரப்பினார். குப்பைக் கூளங்களாக இடமே நசநசப்பாக இருந்தது. பேப்பர் உறைகள் பட்டாணிச் சிதறல்கள் கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த துணிகள். சாக்பீஸ் கிறுக்கலில் தாயக்கட்டங்கள் தீட்டப்பட்டிருக்க அதனருகில் ‘பூவுலகு எரிகிறது' என எழுதப்பட்டு மத்தியில் நெருப்பு எரிவதுபோல் படம் வரையப்பட்டிருந்தது.

 ‘இல்லை சார்' என்றான் உணர்ச்சியற்ற குரலில். முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு கத்தரிக்காயோடு கிளம்பினார். வேலனுக்கு ஆயாசமாக இருந்தது. இவர்கள் கண்டுபிடிக்கும் முன் நாம் கண்டுபிடித்துவிடவேண்டும். இவர்களின் புலனாய்வும் தோரணையும் மண்ணாங்கட்டித்தனமாக இருக்கிறது. மாதேஸால் வந்த வினை. மனதில் எரிச்சல் புகைச்சலாக மண்டியது. வேலன் கீழே வந்தான். மதுரா லாட்ஜ் ஓனர் பசுபதி அய்யர் ‘துப்பறிவாளர் நிலையத்திலிருந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வராங்களே என்ன காரணம்?' என்று கேட்டார். சொல்லாலாமா வேண்டாமா? நம்புவாரா? கிண்டல் பண்ணுவாரா?

 ‘இரண்டுச் சொற்களைத் தொலைச்சிட்டேன் சாமி'

 ஒருகணம் திடுக்கிட்டாலும் பின் சுதாரிப்பாக ‘கண்டுபிடிச்சிடலாம்டா அம்பி.. தெம்பா சாப்பிடப்போ' என்றார்.

 மேசையின் எதிர்ப்புறம் இளஞ்சோடி. பரத்&சுசிலா என்றனர். சாப்பிடும் இடத்திலும் விடாத தொந்தரவு.

 ‘சொல்லுங்க வேலன்... உங்களுக்குப் பிடிச்ச தமிழ் எழுத்து என்ன?'

 மின்சாரம் தடைபட இருள் சூழ்ந்தது. ‘டேய்.. ஜெனரேட்டரை ஆன் பண்ணிவிடு' பசுபதி அய்யரின் குரல் இருளைக் கிழித்தது.

 ‘உலுக்கும் புயல்கள் அடிக்கும் அனல் காற்றில்...' பரத் மெல்லமாக இழுத்தான்.

 ‘வெயிட் வெயிட்.. காணாமல் போன சொற்கள் இரண்டிரண்டாகக் குதித்து வந்துவிட்டது.. வேலன் கவனித்தாயா சொற்களை.. பரத் செல் டார்ச்சை ஆன் பண்ணு..'

 ஜெனரேட்டர் வழியே சத்தத்துடன் ஓட்டலில் வெளிச்சம் பரவியது. வேலன் அங்கில்லை. அப்போதே சென்று விட்டான்.

காற்றுப் புழுக்கமாக இருந்தது. அனல் வீசும் இரவாக தேக எரிதலோடு காற்று அணைத்தது.

சட்டைப் பட்டன்கள் அனைத்தையும் கழட்டி விட்டு தெப்பக்குளம் பக்கம் வந்தான். தள்ளு

வண்டிக் கடைகளில் பேட்டரி வெளிச்சத்தில் வியாபாரம் நடந்துக் கொண்டிருந்தது. படிக்

கட்டுகளில் உட்கார்ந்தான். தெப்பக்குளத்தில் தண்ணீர் அவ்வளவாக இல்லை. இதமான காற்று எங்கிருந்தோ வந்து அவனைத் தழுவிச் சென்றது. மறுபடியும் புழுக்கம் சுற்றிவளைக்க, வார விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.

 மினி பஸ் பயணிகளின் நெருக்குதலோடு கசகசத்துச் சென்றுக் கொண்டிருந்தது. இளம் பெண் அருகில் வந்து ‘ஹாய்‘ என்றாள். நெற்றியில் வியர்வை வழிந்தது. பிஸ்கெட் சென்ட் வாசம் வீசியது.

 ‘இன்னும் எவ்வளவு தூரம்னு கேளு' தள்ளி நின்றிருந்த ஆண் குரல்.

 ‘அவசரப்படாதே... நரேன். பஸ் நிற்கும் வரை தகிப்பை அனுபவிப்போம்'

 ‘துப்பறிவாளர் நிலையத்திலிருந்து வறீங்களா?'

 ‘எங்களையே துப்பறியற நீங்க அந்த இரண்டு  சொற்களையும் கண்டுபிடிச்சிருக்கலாமே' என்றாள் வைஜயந்தி.

 வேலன் தங்களது ஏரிக்கரைத் தோட்டத்திற்கு அழைத்து இளநீர் கொடுத்தான். கிராமத்து வீடுகளையும் தோட்டம் துரவுகளையும் அலசி ஆராய வந்திருப்பதாக நரேந்திரன் சொன்னான்.

 செல்போன் வீடியோ பதிவுகளாக கிராமத்தையே ரவுண்டு கட்டினர், துப்பறியும் ஜோடிகள். பஸ்ஸில் ஏறி கிளம்பும் வரை கண்டுபிடித்ததைச் சொல்வர் என எதிர்பார்த்தான், வேலன்.

 ‘நாம் எதுவும் கண்டுபிடிக்கலைன்னு அவனிடம் எப்படி சொல்வது?'

 ‘கண்டுபிடிக்கலைன்னு யார் சொன்னது?' என்றான் நரேந்திரன்.

 ‘தடியா... என்ன சொற்கள்?'

 தினசரி பேப்பரை ஒரு பெரியவர் படித்துவருவதைச் சுட்டிக்காட்டினான்.

 ‘தகிக்கும் பூமி... துருவக்கரடிகள் பசிக்கொடுமை‘ கொட்டை எழுத்துகள் வைஜயந்தியை முறைத்தன. அவள் நரேனை முறைத்தாள்.

 வேலன் ஊரிலிருந்து அறைக்குச் செல்லாமல் நேரிடையாக கல்லுரிக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினான்.

 ‘தம்பி அலுவலகம் வரை வந்து செல்லுங்கள்' ஜன்னல் வழியே திகம்பர சாமியாரின் கடுமைக்குரல்.

 வேறு வழியின்றி பஸ்ஸை விட்டு இறங்கி அவர் பின்னே சென்றான். ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் குரல்கள் சலசலத்துக் கொண்டிருந்தன. அறைக்குள் நுழைந்ததும் ‘துப்பறிவாளனின் செய்திக் குறிப்புகள்' என எழுதப்பட்டிருந்த பைலை நீட்டினார். புரட்டினான். இதுவரை நடந்தவை தேதி நேரம் சந்தித்த இடம் கண்டுபிடித்து மறுக்கப்பட்டச்  சொற்கள் என விலாவாரியாக கம்ப்யூட்டர் பிரிண்டில் விரிந்தன.

 செல்வாவும் முருகேசனும் வேலனின் இருபுறமும் அணைவாக நெருக்கி உரசியபடி வந்தனர். திகம்பரர் அனுப்பிய இருவர்.

 ‘எங்கே போறோம்?'

 ‘கண்டுபிடிக்கிற சொற்களையெல்லாம் மறுக்கிறது எதனால?' என்றான் செல்வா.

 ‘எனக்கான இரண்டுச் சொற்களை கண்டுபிடித்துவிட்டால் ஏன் மறுக்கப் போகிறேன்?'

 பூங்கா வாசலில் நின்றனர். காலை வெயில் சுள்ளென்று இருந்தது. பூங்கா நீரூற்றுப் பக்கம் இருந்த சிமெண்ட் பெஞ்சினருகில் வந்தனர். சில சமயங்களில் வேலன் அங்கு வந்து படிப்பான். அதை யூகமாக கண்டுபிடித்து இழுத்து வந்திருப்பதாக உணர்ந்தான். இன்னும்

சற்று நெருங்கி ஏதோ ஒரு நாள் வேலன் கிறுக்கி வைத்திருந்ததை முருகேசன் காட்டி பற்கள் தெரிய சிரித்தான். ‘புதை படிவ எரிபொருட்கள்'

 வேலனின் மனம் தகித்துக் கொண்டிருந்தது. கண்டுபிடிக்க முடியாத தனக்கான இரண்டு சொற்களை விட கண்டுபிடித்த சொற்களாக துப்பறிவாளர் நிலையம் கொட்டியவற்றை நினைத்தால்தான் மனம் பதறுகிறது. திகம்பர சாமியார் வைஜயந்தி ஜோடி கண்டுபிடித்ததாகச் சொன்ன துருவக்கரடிகள் தன் முன் பரிதாபமாக நிற்பதாக உணர்ந்து திடுக்கிட்டான். உலுக்கும் புயலில் அடிக்கும் கனமழையில் கொதிக்கும் பூமி பற்றி எரிந்து அவன் மீது கவிழ்ந்தது. தேகத்தின் ஒவ்வொரு துளைகளிலும் வெப்பம் அனலை ரத்த நாளங்களில் நுழைத்து புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. மனமும் உடலும் பார்வைநரம்புகளும் ஒன்றோடொன்று முட்டி மோதித்தள்ளி உருகி வழிந்து பாதங்களில் இடறியது. தலையை சிலுப்பிக்கொண்டான். இந்த இம்சைகளிலிருந்து விடுபட வேண்டும். மாதேஸ் வந்திருக்கவில்லை.

 அறையில் பேன் காற்று வெப்பத்தை பரப்பிக் கொண்டிருந்தது. உறக்கம் வேலனை சுழற்றியடித்து இழுத்துச்  சென்றது. பாழ்வெளியில் நீலப்புள்ளிகள் மினுங்கிக் கொண்டிருந்தன. குறிப்பிட்ட புள்ளிமட்டும் சிறிது சிறிதாக பெருத்து கார்ட்டூன் உருவமாக சிவந்த கண்களுடன் உற்றுப்பார்த்தது. அவனும் அசராமல் வைத்த கண் விலகாது பார்த்தான். சிமிட்டாத இமைகள். ‘வெற்று வார்த்தைகளைத் தெளித்து எங்களது குழந்தைப் பருவத்தினையும் கனவுகளையும் திருடித்தின்று கொழுத்துவிட்டு எங்களிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்களா? எவ்வளவு நெஞ்சழுத்தம்.' அவன் முகத்தில் பஞ்சு போன்ற கைகளால் ஒரு குத்து விழுந்தது. ‘பூவுலகில் உயிர்பிழைக்கப் போராடும் உயிரினங்கள் என்ன பாவம் செய்தன?' மறுபடியும் ஒரு குத்து விழுந்தது. சில்லுமூக்கு உடைந்தது. ‘கற்பனைக் கதைகளைப் பேசிக்கொண்டு நெருக்கடியின் தீவிரத்தை உணராமல் எவ்வளவு தைரியம் உங்களுக்கு?!' இந்த முறை உதடுகள் கிழியுமளவுக்கு குத்து ரத்தச்சுவையோடு இருந்தது. ‘இப் பூவுலகை ஆள்வது பசுங்குடில் வாயுக்களின் சைத்தான்கள். அவற்றை உருவாக்கியது யார்? நீங்கள்தான் மடையர்களே. யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?' குத்த வந்த கரங்களைப் பற்றி முறுக்கினான். பஞ்சுபோல் மெதுமெதுவென்று இருந்தது. ‘கிரெட்டாவை விடுடா' என்றபடி இன்னொரு கார்ட்டூன் உருவம் எங்கிருந்தோ வந்து குதித்து விழுந்து இருவரையும் விலக்க முயன்றது. நீலப்புள்ளிகள் விலகியும் இணைந்தும் விலகியும் போக்குக் காட்டிக் கொண்டிருக்க அவற்றின் மேல் கருமை திடுமெனப் படர்ந்தது. இரு மெத்தென்ற உருவங்களையும் சமாளிக்கமுடியாமல் கட்டிப் புரண்டான். ‘அய்யோ‘ என்ற அலறலுடன் திடுக்கிட்டான். கீழே விழ இருந்தவனை மாதேஸ் ‘டேய்ய்...' என்ற கத்தலுடன் ஓடி வந்து தாங்கிப் பிடித்தான். சுத்தமாகத் தூக்கம் கலைந்து வியர்க்க ஆரம்பித்தது. விடிந்து மணி ஏழரை ஆகியிருந்தது. தலை வலி பின்னியெடுத்தது.

 குளித்து முடித்துவிட்டு பேன்ட் சர்ட்டுக்கு மாறிச் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தபோது ஆணும் பெண்ணுமாக இருவர் நின்றிருந்தனர். மாதேஸ் கிளம்பிவிட்டான் போலிருக்கிறது.

 ‘யாரைப் பாக்கணும்?'

 ‘சொற்களைக் கண்டுபிடிக்க வந்தவர்கள்'

 குறைந்திருந்த தலைவலி மீண்டும் தலைமீது ஏறி உட்கார்ந்துக் கொண்டது. வேலன் வெளியே நின்றிருக்க அவர்கள் அறைக்குள் சென்றனர். அறையின் வெளிப்புற ஜன்னலில் இருந்த புத்தகம் வேலனுக்கு புருவத்தை நெரிக்க வைத்தது. எடுத்தான். பைண்டிங் எடுத்து புத்தக அட்டை மட்டும் தனியே வர இரண்டு சிறு உருண்டைத் துணுக்குகள் அதிலிருந்து உருண்டு வர அவை கீழே விழாமல் இருக்க துள்ளலுடன் சுதாரித்து குனிந்து பிடித்தான்.

 ‘விவேக் அனைத்து நோட்டுப் புத்தகங்களையும் அலசிவிடுவோம்'

 ‘அதற்குமுன் வேலனிடம் கல்லூரிக்கு இன்று விடுமுறை எடுக்கமுடியுமா என்று கேள் ரூபலா?'

 அவள் வெளியே வந்தாள். ரூபலா வருவதை அறிந்து பிடித்திருந்த உருண்டைத் துணுக்குகளை கைகளுக்குள் ஒன்றாக மூடிப் பிடித்துக்கொண்டு வேகமாக நகர்ந்து படிகளைவிட்டு இறங்கினான். அறைக்கு வெளியே அவனைக் காணாது கேள்விக் குறியோடு ரூபலா உள்ளே சென்றாள். ‘ஓசோன்படல மெலிவு‘ என்பதை விவேக் தனது குறிப்பு நோட்டில் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

 வேலன் வாசலுக்கு வந்தபோது ஒருவன் இடிக்காத குறையாக மோதி நின்றான். ‘இங்கே விவேக் ரூபலா வந்தாங்களா?' என்று கேட்க, வேலன் ‘நீங்க என்ன கோகுல்நாத்தா?' என்றான் கேலியுடன். ‘இல்லை, விஷ்ணு' என்ற பதிலைக் கண்டு கொள்ளாமல் விலகி வேலன் ஆண்டாள் வீதிக்கு வந்தான். விஷ்ணு ‘விசித்திரமான பிறவி' என்று வேலனைப் பார்த்து முணுமுணுத்தவாறு மாடிப்படிகளில் ஏறினான்.

 காலை வெயில் உக்கிரமாக இருக்க மூடியிருந்த கரங்களை லேசாக விரித்தான் வேலன். உருண்டைத் துணுக்குகள். இடது உள்ளங்கைக்குள் ‘மாற்றம்‘ அவனைப் பார்த்தது. வலது உள்ளங்கை ரேகைக்குள் ‘காலநிலை' நசுங்கலுடன் படிந்திருந்தது. இரண்டையும் பின்னோக்கிப் படித்துவிட்டு பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். நாகநாதர் டீக் கடையைத் தாண்டியபோது தினசரி பேப்பர் வார இதழ்களின் வால் போஸ்டர்கள் காலை வெயிலில் அசைந்து கொண்டிருந்தன. ‘கொதிக்கும் தமிழகம் - நேற்றைய வெப்பம் 132 டிகிரி‘ உணர்ச்சியற்ற பார்வையை அந்த சொற்களின் மீது வீசியபடி நகர்ந்தான். துப்பறிவாளர் நிலையத்தை திரும்பிப் பார்க்காமல் தாண்டிச் சென்றான். அவன் முன் நெற்றியில் வியர்வைத் துளிகள் காலை வெயிலில் சுள்ளென்று பளபளக்க பேன்ட் பாக்கெட்டில் போட்டிருந்த நசுங்கிய சொற்கள் கொதிக்க ஆரம்பித்தன.

பிரகாஷ் சுந்தரம், 1985இல் பிறந்தவர். திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். பள்ளிக்காலங்களில் நாடகம் எழுதி ஆண்டு விழாக்களில் நடித்துள்ளார். ‘துப்பறிவாளனின் செய்திக்குறிப்புகள்’ பிரசுரமாகும் முதல் கதை. பெற்றோர் சுந்தரம் - சரோஜா. காலமான தந்தை சுந்தரத்திற்கு இக்கதை சமர்ப்பணம். மனைவி: சாரதா. மகள்: யாழினி பிரகாஷ். பிரபல ஹோட்டல் குழுமத்தில் ‘செஃப்' ஆக பணி புரிகிறார். 

ஜனவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com