நீல நிறக் கனவு

ஓவியம்
ஓவியம்பி.ஆர்.ராஜன்
Published on

பஸ் கிளம்பி விட்டது! நல்ல கூட்டம்!

சிறுக சிறுகச் சேர்ந்து இப்போது பஸ்சே நிறைந்து விட்டது! நிறைந்து விட்டது என்றால் நிற்கவே இடமில்லை. ஒரு மணி நேரமாகப் பஸ்ஸை எடுக்காமல் போட்டு வைத்திருந்தான். கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும் நிற்கிறது.

மூச்சுவிட முடியவில்லை. அனல் காற்று ஒழுகிற்று! வெயில் தகதகவென்று இருந்தது. கண்ணைத் திறக்கவே முடியவில்லை. கூசிற்று. பஸ்ஸை எப்பத் தான் எடுப்பானோ என்றிருந்த போது, ஓட்டுநர் எங்கிருந்தோ ஓடிவந்து, ஒரே தாவாகத் தாவி ஏறி இஞ்சினுக்கு உயிர் ஊட்டி, உசுப்பி விட்டான். சில கணங்கள் கடமுடா கடமுடா என்று சத்தம் கொடுத்துவிட்டு, அடங்கியது. அக்கம் பக்கம் நின்றிருந்த கூட்டம் எல்லாம் பரபரவென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தது. பஸ் மெதுவாகப் பின்னோக்கி ஊர்ந்தது. பதட்டமும் பரபரப்புமாகக் கூட்டம் பஸ்ஸைத் தொற்றிக் கொண்டது!

பஸ் ஒரு மாதிரியாக ஒருக்களித்துக் கொண்டு, எங்கே சாய்ந்து விடுமோ என்று பயமாக வேறு இருந்தது!

இன்னைக்கு என்ன விசேஷம்! நல்ல நாளும் இல்லை. பொல்ல நாளும் இல்லை. எதுக்கு இப்படி? நாகவல்லிக்கு உசுருக்கு ஒரு வடியாக வந்தது. படபடவென்று நெஞ்சுத் துடிப்பு! நா வறண்டு விட்டது. உதடுகள் இரண்டும் ‘பசை' போட்டு ஒட்டினாற் போல் ஆகிவிட்டது! ஒரு பொட்டுக் காத்தைக் காணோம்! மூச்சுக் காற்று தான்! அவள் இடுப்பில் இருந்த குழந்தை கூட்ட நெரிசலைப் பார்த்து, மிரண்டு வீறிட்டது! அந்தக் குரலைக் கேட்டதும் மற்றொன்று. ஒரு நிமிடமோ, ரெண்டு நிமிடமோ தான், முன் பக்கத்தில் இருந்து ஒரு குழந்தை! ‘ஒட்டுவார் ஒட்டி போல!'

நாகவல்லிக்கு நிற்க முடியவில்லை! உடல் ஆட்டம் கண்டது. இடுப்பில் இருந்து குழந்தை சேலையோடு வழுக்கிக் கொண்டே வந்தது! ஒத்தைக் கையாலே குழந்தையை உடம்போடு சேர்த்து உயர்த்தி இடுப்பில் நிறுத்தினாள். கை கடுகடுவென்று வலித்தது. கால் இடுக்கில் ஒரு பையும், பக்கத்து சீட்டுக்கு அடியில் ஒரு பையுமாக வைத்திருந்தாள். ரொம்பச் சிரமமாக இருந்தது. நல்ல புழுக்கம். லேசாகக் காற்று வந்தால் கூட சிரமம் இல்லை. சேலை முந்தானையை எடுத்து, முகத்தைத் துடைக்கவும் வழி இல்லை. திடீர், திடீர் என்று கெட்ட நாற்றம்! குடலைப் புரட்டிக் கொண்டு வந்தது.

நாகவல்லிக்குச் சங்கடமாகத் தான் இருந்தது. அம்மா ‘நாளைக்கு கிளம்பு' என்று தான் சொன்னாள். இவள் தான் கேட்கவில்லை. ‘அவரு கஞ்சி தண்ணீக்குச் சிரமப்படுவார்'னு கிளம்பி விட்டாள். இன்னும் கொஞ்சம் வெள்ளனமா கிளம்பியிருக்கணும்... கோழி கூப்பிட எழுந்து புறப்பட்டிருக்கணும். ‘காலை ஆகாரத்தை முடிச்சுட்டுப் போ'னு அம்மாதான் நிறுத்திவிட்டாள். ‘அந்தா இந்தானு பஸ்டாப்பிற்கு வர பத்தரை ஆகிவிட்டது. ஒரு பஸ்ஸைக் கூடக் காணோம். இந்த ஒரு பஸ்தான்! இன்னைக்கு சந்தைக் கெடுவும் இல்லை. இந்தக் கூட்டத்தில் எப்படி ‘கொட்டாம்பட்டி' பிரிவைக் கண்டு இறங்குவேன்? பஸ்ஸில் ஒருவர் கூட தெரிந்த முகமாக இல்லை!

கண்டக்டர் தலையையே காண முடியவில்லை. வண்டியை மெல்ல உருட்டிக் கொண்டுதான் போகிறான். ‘டிக்கெட் போடத் தோது பண்ணிக் கொடுக்கிறானோ என்னவோ! இத்தனை ஜனக் காட்டுக்கும் எப்படித்தான் டிக்கெட் போடுவானோ தெரியவில்லை. ஊருக்கு வெளியே ஏதாவது மரத்தடியில் வண்டியை நிறுத்திப் போட்டாலும் போடுவான். உள்ளாடைக்குள் எல்லாம் புரு புருவென்று எறும்பு ஊர்கிறது மாதிரி வேர்வை. முத்து முத்தாக நீர் திரண்டு கோடு இழுத்தாற் போல் இறங்கிக் கொண்டிருந்தது!

நாகவல்லிக்குப் பக்கத்தில் ஒரு வயதானவர். பழுப்பு நிறத்தில் அழுக்கேறிய உடை! அவரின் வேட்டிக் கட்டே ஒரு தினுசாகத்தான் இருந்தது! தலையில் தலைப்பா கட்டியிருந்தார். பளீரென்ற கறுப்பு! பொதி மூட்டை மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அது சீட்டுக்கு அடியில் நுழையவில்லை! காலடியிலும் வைக்க முடியவில்லை. மற்றவர்களையும் அது தொந்தரவுபடுத்திக் கொண்டிருந்தது. அதில் யாருடைய காலும் பட்டுவிடக் கூடாது என்பதில் வெகு ஜாக்கிரதையாக இருந்தார். அதை இப்பாலும் அப்பாலும் நகட்டி வைத்துக் கொண்டு வேறு இருந்தார். கையில் ஆள் உயர மூங்கில் கம்பு வேறு! நாகவல்லி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கோ பார்த்த முகம் மாதிரியும், பழகிய முகம் மாதிரியும் இருந்தது. அவரும் அடிக்கடி இவளைப் பார்க்கிறார். அந்தக் கூட்ட நெரிசலில், எல்லாம் கண்களில் விழுகிறதே தவிர மனதில் உரைக்க வில்லை!

பஸ் சற்று தூரம் அனத்திக் கொண்டே சென்றது. ஏதோ ஒன்று மனதில் சட்டென்று படவும் மீண்டும் அந்தப் பெரியவரைப் பார்த்தாள். அவர் பாம்பாட்டி! அவர் கையில் வைத்திருக்கும் பொதியில் பாம்புக் கூடைகள். அடுக்கடுக்காய் நான்கு கூடைகள். எதுவும் வெளியே தெரியவில்லை. பொத்தி வைத்திருக்கிறார். வெளியே தெரிந்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை. ஆனால் நாகவல்லியின் கண்களுக்கு எல்லாம் தெரிந்தன. ஒவ்வொரு கூடையிலும் என்ன பாம்பு இருக்கிறது என்று தெரிந்தது. அதன் உருவம், உடலின் நிறம்; கண், கண்ணின் நிறம் எல்லாம் தெரிந்தன. தெரிந்தன என மனக்காட்சி தான்; அவள் மனதில் ஒவ்வொரு பாம்புகளும் ஒவ்வொரு விதமாகப் படம் எடுத்தன. அவளை அறியாமல் சற்று நகர்ந்து ஒதுங்கினாள். அவள் முதுகு வேறு ஒருவர் முதுகோடு உரசி நின்றது. நாகவல்லிக்கு உள்ளே நடுக்கம். மனம் பதறியது. வட்டமான அந்தப் பிரம்புப் பெட்டிகளுக்குள் எத்தனை பாம்புகள் இருக்கின்றனவோ! எப்படியும் ஒரு கட்டுவிரியன் இருக்கும். கண்ணாடி விரியனும் கூட இருக்கும். பனைவரியனும் இருக்கும். சாரைப் பாம்புக்கும் நல்ல பாம்புக்கும் தனித்தனிப் பெட்டிகள் இருக்கும். சிலர் கொம்பேறி மூக்கன் கூட வைத்திருப்பார்கள்!

நாகவல்லிக்கு உடம்பெல்லாம் வெது வெதுவென்று சுடுதண்ணீரை ஊற்றிவிட்டாற் போல் பதட்டம்! உடம்பெல்லாம் வெட வெடவென்று வந்தது. இது வெயிலினாலோ இந்தப் புழுக்கத்தினாலோ இல்லை. தனக்கு மட்டும் ஏன் இந்தத் தொந்தரவு என்று நினைத்தாள். தன்னை மட்டுமே இந்த ‘நாகங்கள்' துரத்திக் கொண்டு வருகின்றன. அதுவும் இப்படி விடாமல்? எத்தனை கடிபட்டும், எவ்வளவு விஷம் குடித்தும் அது விடுவதாக இல்லை! என்ன பாவம் செய்தேன். இது என்ன தோஷம்? போன வாரம் இரண்டு மூன்று தடவைகள் பாம்பு கனவில் வந்தது. வீட்டுக் கூரையில் இருந்து எட்டிப் பார்த்தது. வரட்டுமா வரட்டுமா என்று கேட்டுக் கொண்டே இருந்தது. இவள் பதில் பேசவில்லை. அது விடுவதாக இல்லை. அனத்திக் கொண்டே இருந்தது. மெல்ல கண் அசந்தாள்; விழித்துப் பார்க்கின்ற போது அது பக்கத்தில் வந்து படுத்துக் கிடக்கிறது. வீல் என்று அலறிவிட்டாள். உடம்பெல்லாம் வேர்த்து, தொப்பலாக நனைந்து விட்டது! அம்மாவிடம் இதைச் சொல்லவில்லை. சொன்னால்  சங்கடப்படுவாள். ஊருக்குப் போகிறோம் என்ற உற்சாகம் அப்படியே வழிந்து ஒழுகிற்று!    

நாகவல்லி பிறந்த மறுவாரம்! அவள் அப்பாவை பாம்பு கொத்தி விட்டது! எப்படியும் தப்பித்து விடுவார் என்று தான்  சொன்னார்கள். இது அவருக்குப் புதிதில்லை. பாம்பின் பல் தடம் அவர் உடம்பில் மூன்று இடங்களில் உள்ளன. மேட்டு வயல் கதிர் அறுப்பின் போது, இரவில் களத்து மேட்டில் வைத்துத் தான் அது நடந்தது! அதற்குப் பிற்பாடு ஏழு வருடங்கள் கழித்து ஒருநாள், வயல் வரப்பில் எலி வளையைத் தோண்டும் போது, அப்புறம் வீட்டுக் கொல்லைப் பக்கமாக விறகு, தென்னை மட்டைகளை ஒதுக்கும் போது குதிங்காலில் எல்லாவற்றிலும் தப்பித்துவிட்டார். அப்பாவின் ஆயுசு கெட்டி என்றுதான் நினைத்தது. கடைசியாக வயலுக்கு தண்ணீர் கட்டப் போனவர். வெகுநேரம் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் திருக்கார்த்திகை. வீடு இருளில் தான் கிடந்தது. கை வைத்தியத்திற்குக் கட்டுப்படாமல் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். திரும்பவே இல்லை. அதை விடப் பெரிய வலி, அதற்குப் பிற்பாடு வீட்டில் ஒருவரும் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை!

ஜோசியக்காரன் வீட்டிற்கும் குறிகாரன் வீட்டிற்கும் வெற்றிலை பாக்கு காணிக்கை என்று கால் தேய்ந்தது தான் மிச்சம்! அம்மாவுக்கு ‘சர்ப்ப தோஷம்' என்றார்கள். அம்மா மனம் விழுந்துவிட்டது. அழுது கொண்டே இருந்தாள். திடீர் திடீர் என்று அழுகை. முதல் தடவை அப்பா ‘கடி' பட்டு வந்த போதும் அம்மா ‘நல்லது' தீண்டிவிட்டது என்று தான் சொன்னாள்; அதில் சுடு சொல் விழுந்து விடக் கூடாது என்று ‘பக்தி' சுடர் ஏற்றினாள். வீட்டு வாசலில் விளையாடும் சிறுசுகள் கூச்சலில் ‘பாம்பு... பாம்பு' என்று விளையாட்டுக்கு அலறும் போது கூட ‘பாம்பு' என்ற வார்த்தையைச் சொல்ல விடமாட்டாள். ‘நல்லது' என்று சொல்ல வேண்டும் எனத் திருத்துவாள்!

பொம்பளைங்க ‘வெளிக்கு' போகும் மந்தைக்கு பக்கம் இருக்கும் புற்றுக்கு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பாலும் முட்டையும் வைப்பாள். அம்மா இவ்வளவு பக்தி சிரத்தையோடு செய்வதைப் பார்த்து, அதில் ஏதோ ‘சங்கதி' இருக்கு என்று அவர்களும் பால் செம்பைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இதில் விசயம் என்ன வென்றால் அம்மா பிறக்கும் போதே ‘சர்ப்ப தோஷத்தில்' பிறந்தவளாம், அதற்கான பரிகாரங்களை முறையாகச் செய்யவில்லையாம். அந்த நாகம்மாள் மூன்று வாய்ப்பு தந்தும், அலட்சியமாக விட்டு விட்டாளாம். அதான் அவள் தாலியைப் பலி கொண்டு விட்டதாம். ‘நான் மனசு அறிஞ்சு எந்தத் தெய்வத் துக்கும் ஒரு குத்தமும் செய்யலையே சாமீ' என்று குறிகாரரிடம் ஒப்புவித்து அழுதாள். அவள் கண்ணீரை அவன் அலட்சியம் செய்தான். ‘ஆண் நாகமும் பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அதற்கு கெடுதல் செய்திருக்க வேண்டும் என்று கோடாங்கிபட்டிக் குறிகாரன் கோடாங்கி அடித்துக் கொண்டே குறி சொன்னான். அதைக் கேட்ட மாத்திரதில் அம்மா நெஞ்சில் ‘மடேர் மடேர்' என்று அடித்துக் கொண்டு அழுதாள். அவள் வாய் எதை எதையோ குழறியது; குரல் உடைந்து சிதறிற்று. சித்தம் கலைந்தாற்போல் புலம்பினாள். கோடாங்கியின் உக்கிரத்தில் நரம்பு புடைக்க, பல்லை இறுகக் கடித்துக் கொண்டு, அருள் வந்து ஆடுவது போல ஆடி மயங்கி தரையில் சரிந்தாள். அந்தக் காட்சியை எல்லாம் பார்க்கின்ற போது நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது!

அப்பாவைப் பலி கொடுத்துவிட்டு அம்மா எப்போதும் பதட்டத்தோடும், ஒரு விதமான பரபரப்போடும் தான் இருந்தாள். அவள் மனம் அலுங்கிக் கொண்டு தான் இருந்தது. அப்போது நாகவல்லி கைக் குழந்தை. பிறந்ததும் அப்பாவைப் பலி கொண்டவள் என்று ஊர் பேசுமே என்ற அச்சம்! அது தான் அவளைக் கொன்று கொண்டிருந்தது. அம்மா திடீர் திடீர் என்று நாகவல்லியைக் கட்டிக் கொண்டு ஆவேசமாக அழுவாள். அவள் முகத்தைப் பார்த்து, பார்த்து விம்முவாள். நாகவல்லியின் தாத்தா முத்துச்சாமி, ஆச்சி மாரியம்மன் இவர்கள் இருவர் பெயரையும் சேர்த்து ‘முத்துமாரி' என்று தான் அவளுக்குப் பேர் விடுவதாக நேர்ந்து இருந்தாள். இப்படி ஆகவும் ‘நாகவல்லி' என்று பேர் விட்டு தோஷத்தைக் கழிக்க முற்பட்டாள். ‘தோஷம்' நீங்க பல யோசனைகள் சொன்னார்கள். அத்தனையையும் பழுதில்லாமல் செய்தாள். ‘ஆண் பாம்பும் - பெண்பாம்பும், நாகப்பாம்பும் - சாரைப் பாம்பும் இணைந்து இருப்பது போல முழங்கால் அளவு பட்டியக் கல்லில் செய்து, மந்தைக்குப் பக்கமாக, அரசும் வேம்பும் சேர்ந்து இருக்கும் மந்தை மேட்டில் ‘நாகப்பிரதிஷ்டம்' செய்தாள்.

இதைச் செய்ய, நல்ல வடிவாகச் செய்ய கல்தச்சனைத் தேடி அலைந்த அலைச்சலும், அதைச் சேதாரம் இல்லாமல் கோணிச்சாக்கில் சுற்றிக் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட பாடும் யப்பா சொன்னால் தீராது! அதற்குப் பிற்பாடு ‘விசேஷ' தொந்தரவுகள் ஒன்றும் நேரவில்லை, என்றாலும் மனம் தொந்தரவுபட்டுக் கொண்டுதான் இருந்தது. அம்மாவுக்குத் தான் என்றில்லை. நாகவல்லிக்கும் தான்!

ஓவியம்
ஓவியம்பி.ஆர்.ராஜன்

அந்தப் பாம்பாட்டியின் பார்வை நாகவல்லியின் பக்கம் திரும்பியது! அவள் பார்வையைத் திருப்பினாலும் அவர் பார்த்துக் கொண்டே தான் இருந்தார். அவர் கண்கள் தான் அவளுக்கு அச்சமூட்டியது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு கனவில் வந்த பாம்பின் கண்கள் போலவே அவரின் கண்கள் இருந்தன. அந்தக் கனவில் வந்தது விரியன் தான். மூர்க்கமான விரியன். கட்டுவிரியனா, கண்ணாடி விரியனா என நினைவில்லை. கரு நீல நிறம். அது சற்று ஊர்ந்து அருகில் வந்த போது நீலம் கலந்த சாம்பல் நிறமாகத் தெரிந்தது.

 செதிள்களில் வெண்ணிறப் பட்டை தெரிந்தது.

தடித்த உடல் கருவிழி செங்குத்தாக இருந்தது. பயமுறுத்துவது போல நெருங்கி வந்தது. ஒரே ஒரு கணம் தான். உடல் நடுங்கத் தொடங்கவும் அது பளீரென்று ஒரு சிரிப்பு சிரித்தது. ஒளி சிந்தும் சிரிப்பு. இந்தப் பாம்பாட்டியின் சிரிப்பும் அப்படித் தான் இருந்தது!

பஸ் நின்றுவிட்டது! இது எந்த இடம் என்று தெரியவில்லை. தார்ரோட்டை விட்டு, சற்று இறங்கி ஒரு புளிய மரத்தடியில் நின்றுவிட்டது. டிக்கெட் போடத் தோதான இடம்! டிரைவர் படீரென்று கதவைத் திறந்து கீழே குதித்தான். குதித்த மாத்திரத்தில் ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்கத் தொடங்கி விட்டான். கண்டக்டரின் குரல் ஓங்கியது. ‘‘டிக்கெட்... டிக்கெட்...' என்று கூட்டத்தைப் பிளந்து கொண்டு நீந்தி வருவது தெரிந்தது. இடது கையில் ஐந்து விரல் இடுக்குகளிலும் டிக்கெட்! ரோஸ், பச்சை, வெள்ளை, மஞ்சள், ஊதா என்று வண்ண வண்ண டிக்கெட்! சுண்டு விரலில் ஒரு வளையத்தோடு விசில்! காதில் மூடியில்லாத ரீபிள் பேனா. அழுக்கும் வேர்வையும் நிறைந்த காவி உடை! ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் சரிசமமாக இருவரையும் தொட்டு, மிதித்து நீந்திக் கடந்து கொண்டிருந்தான். அத்தனை ஜனக் காட்டிற்கு மத்தியிலும் அந்தப் பாம்பாட்டியின் முகம் தான் அவனை இடறிவிட்டது!

‘‘இந்த தொந்தரவுலெ நீ வேறயா?'

‘சாமீ!''

‘‘எறங்கு! அடுத்த வண்டியிலே வா...'

‘‘...........''

‘‘ந்தா... சொல்றேன்லெ. மூட்டைய நகட்டு...''

‘எட காட்டுலெ எறங்குனா?''

‘‘யாரைக் கேட்டு ஏறுனே?'

‘இப்படிப் பேசுனா?'

‘நாலு ஆளு எடத்தைப் பிடிச்சுக்கிட்டு. மத்தவங்களுக்குத் தொந்தரவு. எறங்குனா எறங்கீடு...''

‘டிக்கெட்... டிக்கெட்...'

‘காதுலெ விழலை!''

‘இப்ப எறங்குறீயா என்ன?'

‘வேகாத வெயில்லெ, எறங்குனா. என்ன செய்வேன் சாமீ!'

‘பின்னாடி பச்சை கலர் பஸ் வரும்'

‘சித்த நேரம் தானே! இப்படியே நின்னுகிடுறேன்.''

வண்டிக்குள் சலசலப்பு கூடிற்று! புழுக்கம் தாங்காமல் தலைக்குத் தலை அனத்திற்று! பெண்கள் முந்தானையால் முகத்தைத் துடைப்பதும் விசிறுவதுமாக இருந்தார்கள். சிறுசுகளின் குரல் வீல் வீல் என்று சீறி எழும்பிக் கொண்டிருந்தது! கண்டக்டர் பின் வாசல் வழி இறங்கி முன் வாசல் வழி ஏறி மீண்டும் ஒருமுறை ‘டிக்கெட்... டிக்கெட்...' என்று முட்டிக் கொண்டு வந்தான்!

‘யோய்! பெரிசு. உன்னாலெ பாத்தியா?'

‘நான் என்ன செஞ்சேன்?'

‘டிக்கெட் வாங்குனா..''

‘மாட்டேனா சொல்றன் சாமீ!'

‘லக்கேஜ்?'

‘ஒரு டிக்கெட் போடு...''

‘இது ஜோலிக்கு ஆவாது. நீ எறங்கு?'

‘இந்தா சாமீ துட்டு!''

‘உசிர வாங்கதெ. ஒங்கூட விளையாட நேரமில்லை.'

‘இல்லை சாமீ; வெச்சுக்கிட்டா?'

‘எம்புட்டுதான் வெச்சிருக்கீயாம்!'

அவர் பஸ்ஸின் ஓட்டத்திற்கேற்ப ஆடிக் கொண்டே ‘இடுப்பு முடி'யில் இருந்து, கசங்கித் துவண்ட பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.

‘இன்னும் நாலு ரூபா எடு.'

‘லக்கேஜ் எல்லாம் வேண்டாம் சாமீ...!'

நாகவல்லி அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். அந்தப் பாம்பாட்டியின் பக்கத்தில் இருந்து பார்க்கின்ற போது, அவரின் பதட்டமும் பரபரப்பும் அவளை வாட்டிற்று! எத்தனை விசப் பாம்புகளைப் பார்த்தவர். அச்சமின்றி பாம்புகளோடு விளையாடக் கூடியவர். இப்போது, இப்படி ‘பெட்டிப் பாம்பாகப் பம்மிக் கிடப்பதைக் காண என்னவோ போல் இருந்தது. சட்டென்று இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கித் தன் கால் இடுக்கில் கவ்விக் கொண்டு ஜாக்கெட்டுக்குள் போட்டு வைத்திருந்த, குட்டி மணிபர்ஸை எடுத்துப் பிரித்து, பத்துரூபாயை எடுத்துக் கண்டக்டரிடம் நீட்டினாள். கண்டக்டர் ஒரு கணம் திகைத்து, ஏதோ முனங்கிக் கொண்டே ஒரு டிக்கெட்டைக் கிழித்து, நாகவல்லியின் உள்ளங்கையில் கோபமாகத் திணித்துவிட்டு, கூட்டத்திற்குள் கரைந்து விட்டான்.

நாகவல்லி அந்த டிக்கெட்டைக் கிழவரிடம் நீட்டினாள். அவர் முகத்தை ஒரு ‘வடியாக'வைத்துக் கொண்டு வாங்கிக் கொண்டார். பஸ் நகர்ந்து! புழுக்கம் சற்று தணிந்தது. காற்று வந்தது.

சற்று நிம்மதியாக இருந்தது. சற்று தூரம் பஸ் கடந்ததும் அந்தப் பாம்பாட்டிக் கிழவர் நாகவல்லியைப் பார்த்து, கோணலாக ஒரு புன்னகை காட்டினார். இவளும் சோகையாகச் சிரித்து வைத்தார்.

‘எந்தூரு தாயீ?'

‘கொட்டாம் பட்டிப் பிரிவுலெ எறங்கி, அங்கிட்டுப் போவணும்'

‘தேவனாம்பட்டியா தாயீ?'

‘பக்கத்துலெ கொசப்பாளையம்.''

‘நீ நல்லா இருப்ப தாயீ!

சிரித்தாள்.

‘இதுக்கெல்லாம்' டிக்கெட் போட மாட்டாங்க. வீம்பா புடுங்கிப் போட்டாரு. ஒங்களுக்குச் செரமம்.''

‘இருக்கட்டும். அதனாலெ என்ன!'

‘நானும் கொட்டாம்பட்டி பிரிவுலெ தான் எறங்குவேன். மேக்க வண்டித்தோப்புக்கு போவணும்.''

‘‘ம்'

‘நீ நல்லா இருப்ப தாயீ' என்று அவருடைய வாய் குழறிக் கொண்டே இருந்தது. நாகவல்லி சங்கடத்தோடு நெளித்தாள்.

‘இருளர் தெய்வம் துடியானது. எங்க வாக்கு அப்படியே பலிக்கும் தாயீ...'

‘வண்டித் தோப்புலெ, புத்துக்கோயில் இருக்கே?'

‘நாங்க, அங்கு எல்லாம் போறதில்லை'

‘ம்'

‘குலதெய்வம் கொடுக்கிறது தான் நமக்கு வாக்கு'

‘ம்'

‘இதா தெய்வங்களே நம்ம கூட தானே இருக்கு' என்று அவர் தன்னுடைய ‘பொதியை' கண்களால் காட்டினார். நாகவல்லிக்கு சுளீரென்று இருந்தது. அவளை அறியாமலே அவள் கால்கள் விலகி நகர்ந்தன.

‘‘பயப்படாதீக...''

அதற்குப் பிற்பாடு நாகவல்லி பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பஸ் சற்று வேகம் எடுத்தாற் போல் தோன்றியது. சிறிது தூரம் கடக்கும் வரை அவரும் ஒன்றும் பேசவில்லை. மேலம்பட்டி திருப்பம் வந்ததும் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். நாகவல்லி அதைத் தவிர்க்கும் விதமாக எங்கோ திரும்பினாள். அடுத்து பல்லத் தூக்கு பஸ் டாப்பில் பஸ் நின்றது. ஆட்கள் ஏறி இறங்கினார்கள். பாம்பாட்டி நாகவல்லியின் பக்கம் திரும்பி, ‘‘எறங்குனதும் ஒரு தாயத்து தர்றேன் தாயீ.. பூச்சி பொட்டைக அண்டாது..'' தலையை அசைத்து வைத்தாள். அவளிடம் இப்பவே இரண்டு தாயத்துகள் இருந்தன. தாலி சரட்டில் ஒன்றும், கையில் ஒன்றும். நாகராசாவின் இடுப்புக் கையிற்றிலும் கழுத்திலும் கூட ஒன்று தொங்குகின்றன. போதாது என்று வீட்டின் நிலை வாசலில் தாமிரத் தகட்டில் எழுதிய ‘யந்திரம்' ஒன்றும் கண்ணாடி போட்டுத் தொங்குகிறது. இத்தனை இருந்தும் ‘நல்லதுக' கனவில் வந்து கொண்டு தானே இருக்கின்றன; அந்தத் தொந்தரவுகளில் இருந்து விடுபடவா முடிகிறது?

கொட்டம்பட்டி பிரிவுக்கு முன்பாகவே பஸ் நின்றுவிட்டது. அத்தனை கூட்டத்தையும் விலக்கிக் கொண்டு, இறங்குவதற்குள் அவள் பட்ட பாடு ‘அப்பாடா' என்று ஆகிவிட்டது. சேலை, துணிமணி எல்லாம் கசங்கி கலைந்து விட்டது. தலைமுடி ‘பப்பரப்பானு' ஆகிடுச்சு. இறங்கியதும் இதை எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொண்டு, சற்று நடந்து வலது பக்கம் போகும் சாலையை நோக்கி நகர்ந்தாள்.

‘தாயீ...'

பாம்பாட்டி தான். இவளுக்குப் பின்னாடியே வருகிறார்.

‘மவராசீயா இருப்ப தாயீ!'

நாகவல்லிக்கு கூச்சமாகிவிட்டது. போகிறவர்கள் - வருகிறவர்கள் எல்லாம் பார்ப்பார்களே என்று அந்த இடத்தை விட்டு நகரும் அவசரத்தில் இருந்தாள்.

‘தாயத்து வாங்கீக்க தாயீ?'

‘இருக்கு. கட்டீருக்கன்''

‘இது வேற. விஷ முறிவு மூலிகை.'

‘இருக்கட்டும், அடுத்தவாட்டி பாப்போம்!‘

‘துட்டெல்லாம் வேணாம்''

‘அதுக்கில்லை'

‘‘ஒனக்கு ஒரு சங்கடம் இருக்கு தாயீ! அது தெளிஞ்சிடும்'

சட்டென்று அவள் நடை தளர்ந்தது!

‘விஷரோகம் தீரும். விஷ ஜந்துகள் அண்டாது!'

பாம்பாட்டி பொதியைத் தோளில் இருந்து இறக்கினார். அதில் இருந்து ஒரு டப்பாவை எடுத்தார். தாயத்துகளும், மருந்துக் குப்பிகளும், வேறு சில மூலிகைப் பொட்டலங்களும் இருந்தன. அதை இப்படியும் அப்படியும் துளாவி கரு நிறத்தில் இருந்த இரண்டு தாயத்துகளை எடுத்து அவளிடம் நீட்டினார். அவள் சற்று தயங்கி, பின் வாங்கிக் கொண்டாள். அதை வாங்கும் போது அவள் கை நடுங்கிற்று. ‘வெள்ளிக் கிழமை தலைக்கு குளிச்சுட்டு, கிழக்குத் திசை பார்த்துக் கட்டிக்க தாயீ...' ‘ம்' என்று தலையாட்டிக் கொண்டே அதை உள்ளங்கையில் வைத்து உருட்டிப் பார்த்தாள்.

‘இனி ஒரு சங்கடமும் இருக்காது! பெத்த தகப்பன் வாக்கா, இதை எடுத்துக்க தாயீ!'

நாகவல்லி பாம்பாட்டியின் கண்களைப் பார்த்தாள். நீலம் ஜொலித்தது! ஒரு விதமான ஈரப் பிசுபிசுப்பும் ஒளியும் மிதந்தது. அவர் சென்று விட்டார். அவர் கண்களும் அந்த ஜொலிப்பும் இவள் நெஞ்சில் அப்படியே நின்று விட்டது! ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பாள். ‘கைச் சுமையை விட அந்த தாயத்து சுமை தான் அதிகம்!' ‘ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆச்சுனா? ‘இல்லை, ஏதாவது வசீயம் கிசியம் வெச்சிருப்பானோ! இதற்கு முன் இவரைப் பார்த்ததில்லை. திடீரென்று இப்படி வந்து என்னிடம் ஏன் இந்த தாயத்தை நீட்ட வேண்டும்? அவளுக்கு உள் நடுக்கம்! அவரைப் பார்க்க அப்படித் தெரியவில்லை. அந்த பார்வையில் பயம் தெரிந்ததே தவிர கபடம் தெரியவில்லை.''

சிந்தித்துத் கொண்டே நடந்தாள். குப்பன்குளம் ஏரிக்கரையோரமாகவே நடந்தாள். தூரத்தில் வீடு தெரிந்தது. மனம் குழம்பியது. தாலிச் சரட்டிலும், கையிலும் இருந்த தாயத்துகளை எல்லாம் உருவி குளத்தில் வீசி எறிந்தாள். ஒரு கணம் யோசித்து விட்டு தற்போது பாம்பாட்டி கொடுத்த அந்தத் தாயத்தையும் குளத்தில் தூக்கி எறிந்தாள். இப்போது நிம்மதி! பாரம் குறைந்தது போல இருந்தது. வேகமாக நடந்தாள். குளக்கரையை விட்டு இறங்கவும் அந்தப் பாம்பாட்டியின் முகம் நிழலாடிற்று. வார்த்தைக்கு வார்த்தை ‘தாயீ.... தாயீ...! அந்த வார்த்தையில்தான் எத்தனை குழைவு. நாகவல்லியின் அப்பா உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை இப்படித்தான் அழைத்திருப்பார். அந்தப் பாம்பாட்டியின் முகமும் கண்களும் திரும்பத் திரும்ப நெஞ்சில் வந்து மோதிற்று! அத்தனை அன்பாய்.... பிரியமாய் நெஞ்சுருகிய அவரைத் தான் நாம் குளத்தில் விட்டெறிந்து விட்டு வந்து விட்டமோ! என்று கூட நினைத்தாள். ‘பெத்த தகப்பனா நெனச்சு வாங்கிக்கோ...' இவ்வளவு பெரிய வார்த்தையை எப்படி அவரால் இயல்பாகச் சொல்ல முடிந்தது! நாகவல்லியின் மனதில் அந்த வார்த்தை தங்கிவிட்டது. அந்த வார்த்தை மட்டுமல்ல; அவர் முகமும், நீல நிறக் கண்களும் அதில் கசியும் ஈரமும் நிலையாக நெஞ்சில் நின்று விட்டது! அதற்குப் பிற்பாடு நாகவல்லிக்கு பாம்புகள் கனவில் வந்து தொந்தரவு செய்வதே இல்லை. ஆனால் அந்த பாம்பாட்டியின் கனிந்த முகமும் ஜொலிக்கும் கண்களும் கனவில் வரத் தொடங்கி விட்டது!

டிசம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com