நெல்லை சென்ட்ரல் தியேட்டர்
பி.ஆர்.ராஜன்

நெல்லை சென்ட்ரல் தியேட்டர்

செல்வத்துக்கு சுகர் என்று டாக்டர்

சொன்னார்.

செல்வம் பேயறைந்தது போல் இருந்தான். தனக்கு சுகரா? செல்வத்தின் கருத்த முகம் வெளிறிப் போய் இருந்தது.

தலையில் கலக்கமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வெள்ளை மயிர்கள், டாக்டரின் அறையில் சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் காற்றில் ஆடின. செல்வம் தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, தலையில் இருந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். செல்வத்துக்கு நாற்பத்தைந்து வயது இருக்கலாமா அல்லது ஐம்பது இருக்குமா என்று டாக்டர் யோசித்துக்கொண்டிருக்கும்போதே செல்வம் சொன்னான்: ‘கொஞ்சம் குடிக்க தண்ணி வேணும் டாக்டர்.'

அந்த டாக்டருக்கு உதவியாள் என யாரும் தனியே இல்லை. அவரே எழுந்து போய் வெளியே வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப் போனார். செல்வம், ‘இல்ல டாக்டர், நானே எடுத்துக்கறேன்' என்று சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

செல்வம் டாக்டரையே பார்த்தான். நிச்சயம் அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் தன்னைவிட ஆரோக்கியமாக இருப்பதாக

செல்வத்துக்குத் தோன்றியது. கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தான் நிச்சயம் குண்டாக இல்லை என்பது செல்வத்துக்குத் தெரியும். ஆனால் டாக்டரைப் போல உடல் தனக்குக் கச்சிதமாக இல்லை என்று நினைத்துக்கொண்டான். தன் கையைத் தூக்கிப் பார்த்தான். சட்டையையும் மீறி சதை ஆடியது. ஒருவேளை  குண்டுதானோ? டாக்டர் கண்ணாடி போட்டிருக்கவில்லை. மருந்து எழுதும்போதும் சரி, தூரத்தில் பார்த்துப் பேசும்போதும் சரி, அவருக்குக் கண்ணாடி தேவைப்படவில்லை. செல்வம் இரண்டு கண்ணாடிகள் தனித்தனியே வைத்திருந்தான். சில சமயம் இரண்டையும் எடுத்துக்கொள்ள மறந்துவிடுவான். நல்லவேளை, இன்று தூரப் பார்வை கண்ணாடியை கையில் வைத்திருந்தான்.

டாக்டர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். மெல்லச் சிரித்தார். அவன் கண்களைப் பார்த்தவாறே சொன்னார், ‘எனக்கு எழுபது வயசு. சுகர் கிடையாது.' இதெல்லாம் தனக்கு எதுக்கு என்கிற பாவனையில் செல்வம் இருக்க முயன்றான். ஆனாலும் தன் கண்கள் காட்டிக்கொடுத்துவிட்டதைப் புரிந்துகொண்டான். டாக்டர் அவனைத் தேற்றும் விதமாகச் சொன்னார், ‘சுகர் இப்பல்லாம் வரலைன்னாதான் உடம்புல எதோ பிரச்சினைன்னு அர்த்தம். பயப்பட ஒண்ணுமில்லை. சியர் அப்.'

டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தார். கைகளில் கொஞ்சம் கூட நடுக்கமில்லை. தனக்கும் நடுக்கமில்லை என்பது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. டாக்டர் டயட் சொன்னார். இன்னும் என்னவெல்லாமோ சொன்னார். தூரத்தில் எங்கோ ஓடும் புகைவண்டியின் சத்தம் போல டாக்டரின் அறிவுரைகள் செல்வத்தின் காதில் விழுந்தன. தான் கண்ணாடி போட்டுக்கொண்டாகிவிட்டது. ஒன்றல்ல, இரண்டு. மறதி வர ஆரம்பித்துவிட்டது. கல்லூரியில் உடன் படித்த அழகான பெண்ணின் பெயரை எத்தனை போராடியும் நினைவுக்குக் கொண்டு வரவே முடியவில்லை. ரேடியோவிலோ டிவியிலோ ஏதேனும் பாட்டைக் கேட்டால் எரிச்சலாக வருகிறது. ‘பாட்டா போடுதானுவோ இப்ப?' தன் பையனோ பெண்ணோ எதாவது ஜோக்கடித்து சிரித்தால், அவனுக்குச் சிரிப்பு வருவதில்லை என்பது மட்டுமல்ல, எரிச்சல் வந்தது. ‘என்ன அர்த்தங்கெட்டத்தனமா சிரிப்பு வேண்டி கெடக்கு?' மொபைலில் காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்க மட்டுமே பிடித்தது. பிள்ளைகள் மொபைலையே நோண்டிக் கொண்டிருக்கும்போது, ‘மூதிய படிக்குவளாங்கு!' மனைவியை விட்டுவிட்டுத் தனியே மொட்டை மாடியில் படுத்துக் கொண்டால் நிம்மதியாக இருந்தது. வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது மிகவும் புதியதாகத் தோன்றியது. காலையில் நான்கு இட்லி சாப்பிட்டுவிட்டால் மதியம் பசிப்பதே இல்லை.

‘பசிக்கோ பசிக்கலையோ, சாப்ட்டு போய்ட்டியன்னா என் வேல ஆயிடும்லா!' வயது இன்னும் ஐம்பது கூட ஆகவில்லை என்பது செல்வத்துக்கு உறைத்தபோது ஏனோ பயமாக இருந்தது. இன்னும் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம், சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் தானாகக் கனவில் நடப்பது போலத் தோன்றியது.

யோசித்துக்கொண்டே லாலா சத்திர முக்கு பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிட்டோம் என்பது செல்வத்துக்கு உறைத்தது. ஐயோ பர்ஸ் எங்கே என்று பதறியபோது பர்ஸ் பேண்ட் பாக்கெட்டில்தான் இருந்தது. அதற்குள் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டு விட்டது. விசாகபவனில் ஒரு காப்பி குடிக்கலாமா என்று யோசித்தான். ஆடிட்டர் ஆஃபிஸில் மாடு போல உழைத்து வரும்  காசில் ஒரு இருபது ரூபாயை அப்படிச் சட்டென எடுத்துக் கொடுத்து குடிக்க  மனசு வரவில்லை. படிக்கும்போதே நன்றாகப் படித்திருந்தால் அமெரிக்கா போய் பிட்ஸா பர்கர் சாப்பிட்டிருக்கலாம். இப்படி லாலாசத்திர முக்கில் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது. ரொம்ப யோசிக்கிறோமோ என நினைத்துக்கொண்டான் செல்வம்.

பக்கத்தில் இருந்த ஒரு பெட்டிக் கடையின் முன்னே வைக்கப்பட்டிருந்த ஒரு பானையில் இருந்து நீரை எடுத்துக் குடித்தான். தொண்டைக்குக் குளிர்ச்சியாக இருந்தது. திருநவேலி தண்ணிய அடிச்சிக்க முடியாது என்று தோன்றியது. தாமிரபரணிக்குக் குளிக்கப் போய் எத்தனை நாள் ஆகிவிட்டது! இப்போதெல்லாம் நீரில் முன்பு போல் பயமில்லாமல் நிற்கமுடியுமா என்ற எண்ணம் வந்தபோது தாமிர பரணியை வம்படியாக மறந்தான். எப்போது ஏறினோம் என்று அவனுக்கே தெரியாத பஸ் கிளம்பிப் போகும்போது எதிர்க் காற்று முகத்தில் பட்ட வேகத்தில்தான் அவனுக்குத் தான் பஸ்ஸில் இருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. டிக்கெட் வாங்க கையில் ஒரு பத்து ரூபாய்த் தாளை பத்திரமாக வைத்துக்கொண்டான். ஏன் போயும் போயும் ஒரு பத்து ரூபாயை இத்தனை அழுத்திக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டே இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

பக்கத்து சீட்டில் இரண்டு பையன்கள் உட்கார்ந்து கொண்டு மொபைலில் என்னமோ பார்த்துக்கொண்டு வந்தார்கள். ரஜினியின் முகம் தெரிந்தது.

செல்வத்துக்கு ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. ரஜினி என்ற பெயரைக் கேட்டதும் மட்டும் தனக்கு அதே பரபரப்பு வருவதை நினைத்து ஆச்சரியப்பட்டான். மெல்ல அந்த மொபைலை எட்டிப் பார்த்தான். ரஜினியைக் கிண்டல் செய்து ஒரு மீம் வீடியோ ஓடியது. பையன்கள் சிரித்தார்கள். செல்வத்துக்கு என்னவோ போல் இருந்தது. எப்பேற்பட்ட நடிகன். என்ன உயரம்! இப்படிச் சிரிக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டான். அதில் ஒருவன், ‘என்ன, தாத்தா பாக்க?' என்றான். அது காதில் விழாதது போல முகத்தைத் திருப்பிக்கொண்ட செல்வத்தின் வாய் ‘சின்ன பசங்க' என்று முணுமுணுத்தது.

பஸ் ரத்னா தியேட்டரைத் தாண்டிப் போனது. பழக்க தோசம் போல செல்வம் குனிந்து தியேட்டரைப் பார்த்தான். என்ன படம் என்பது அவன் கண்ணில் படவில்லை. இன்னும் குனிந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக்கொள்ளுமோ என்று பயமாக இருந்தது. தான் காலேஜ் படிக்கும்போது ரத்னா தியேட்டரில் குணா படம் பார்த்ததை நினைத்துக் கொண்டான். அவனுக்கு கமல் என்றாலே பிடிக்காது. ரொம்ப நடிப்பான் என்பது அவனது எண்ணம்.

சென்ட்ரல் தியேட்டரில் மன்னன் பார்த்ததை நினைத்துக்கொண்டான் செல்வம்.

அப்போதெல்லாம் ரஜினி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி போகாவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவன் அப்படியெல்லாம் ரஜினி சினிமாவுக்குப் போவதில்லை. இன்னும் சொல்லப் போனால் சினிமாவுக்குப் போவதே எப்போதாவதுதான் என்றாகிவிட்டது. வீட்டில் டிவியில் போடும்போது பார்ப்பதுதான் சினிமா. தியேட்டரில் போய் பார்க்க என்ன நடிக்கிறான்கள் இந்த சின்ன பையன்கள் என்பதே செல்வத்தின் எண்ணம். டிவியில் பார்த்தால் போதாதா? அப்படிப் பார்க்கும்போது கூட, ரஜினி படம் எந்த சானலில் போடுகிறார்கள் என்று தேடி தேடிப் பார்ப்பான். வீட்டில் பையன்கள் கொஞ்சம் வளர்ந்ததும், ‘எப்பவும் ரஜினி படமா' என்று அலுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். மனைவியும் அவள் பங்குக்கு, ‘இதெல்லாம் இன்னும் எப்படித்தான் பாக்கீங்களோ' என்று  சொல்ல ஆரம்பித்தாள். சிம்புவை அவள் ரசித்துப் பார்ப்பதைப் பார்க்கும்போதெல்லாம் செல்வத்துக்கு சொல்ல முடியாத எரிச்சல் வரும். ஆனாலும் அமைதியாக மெல்ல விலகிக் கொண்டான். எல்லாரும் தூங்கிய பின்பு டிவியில் எதாவது ஒரு சானலில் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி' போட்டால் ரொம்ப உருகி உருகிப் பார்ப்பான். என்னவென்றே தெரியாமல் மனம் அப்படியே பாரமாகிவிடும். ஏன் இப்படி ஆகிறது என்று யோசிப்பான். தான் யாரையாவது காதலித்தோமா என்று துருவி துருவி தனக்குத்தானே கேட்டுக்கொள்வான். விடையே வராது. டிவியை அணைத்துவிட்டுத் தூங்கிவிடுவான்.

மன்னன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குப் போனது இன்னும் அவனுக்கு நினைவிருக்கிறது. தளபதி பேரின்பவிலாஸில் ஓடிக்கொண்டிருக்கும்போதே மன்னன்  சென்ட்ரல் தியேட்டரில் ரிலீசானது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாகிப் போனது. பஸ் போக முடியாத அளவுக்குக் கூட்டம் நின்றது. போலிஸ் வந்து தடியடி செய்து விரட்டினார்கள்.

சென்ட்ரல் தியேட்டரின் டிக்கட் தரும் சந்து போன்ற கம்பிப் பாதைக்குள் நின்று கொண்டு, போலிஸ் மற்றவர்களை அடித்ததையே வேர்க்க விறுவிறுக்க பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம். அப்போது அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவனிடம் வந்து தனக்கும் ஒரு டிக்கெட் வாங்கித் தருமாறு கெஞ்சினார். அவன் மறுத்துவிட்டான். நீயெல்லாம் ரஜினி ரசிகனாடா என்று திட்டிக்கொண்டே அந்த ஆள் இன்னொருவரிடம் ஓடினார். அவர் தன் கனத்த உடலைத் தூக்கிக்கொண்டு ஓடியதை இப்போது நினைத்துக்கொண்டான் செல்வம். தன் கையைத் தூக்கிப் பார்த்தான். சட்டையை மீறி சதை தொங்கியது. பஸ் சென்ட்ரல் தியேட்டர் வந்து நின்றது.

செல்வம் குனிந்து ஜன்னல் வழியே தியேட்டரைப் பார்த்தான். பாழடைந்த ஒரு மண்டபம் போல, பயன்படுத்தப்படாத ஒரு திரை ஓவியம் போல, கைவிடப்பட்ட ஒரு அபலைப் பெண்ணைப் போல, யாருமற்ற அனாதையைப் போல, அழுது அழுது இனியும் அழ திராணியற்ற ஒரு கிழவியைப் போல, அழிக்கப்பட்ட ஒரு கோலத்தைப் போல, பட்டுப் போன ஒரு பெரிய மரத்தைப் போல நின்றுகொண்டிருந்தது சென்ட்ரல் தியேட்டர். ‘மன்னன் சிவாஜி ப்ரொடக்சன்ஸ் படம்லா. அதான் இவம் எடுத்துட்டான்.' யாரோ கூட்டத்தில் சொன்னார்கள். செல்வத்துக்குத் தலை சுற்றியது. சுற்றுமுற்றும் பார்த்தான். பஸ்ஸில் எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாக இருந்தார்கள். அதற்கு மேல் யோசிக்காமல் செல்வம் சட்டென அந்த நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டான். அவன் இறங்குவதற்குள் பஸ்ஸை டிரைவர் எடுத்துவிட, தட்டுத் தடுமாறி செல்வம் இறங்க வேண்டியதாகிப் போனது. கண்டக்டர் தலையில் அடித்துக்கொள்வது செல்வத்துக்குத் தெரிந்தது.

செல்வம் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றைக் காட்டியது. இன்னும் அரை மணி நேரத்தில் படம் போட்டுவிடுவார்கள். வேகவேகமாகப் போனான். தியேட்டரின் பெரிய இரும்புக் கதவு மூடி இருந்தது. சுற்று முற்றும் பார்த்தான். ஈ காக்கா இல்லை. என்ன படம் போட்டிருக்கிறான்? ஏன் கூட்டமே இல்லை? கொஞ்சம் தள்ளி நின்று தியேட்டரை அண்ணாந்து பார்த்தான். மேலே எதோ ஒரு போஸ்டர் ஒட்டி இருந்தது கண்ணில் பட்டது. பாதி கிழிந்து தொங்கிய அந்த போஸ்டரில் உள்ள எழுத்துக்களை அவனால் வாசிக்க முடியவில்லை. கண்ணாடி போட்டிருக்கிறோமா என்று கண்களைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். கண்ணாடி இருந்தது. ஆனாலும் அவனால் படிக்க முடியவில்லை. காற்றில் படபடத்த மீதி போஸ்டரில் விஜயசாந்தியின் முகம் கண்ணில் பட்டது. மன்னன்! அவன் வாயை விட்டு ஆஹா என்று கத்திவிட்டான்.

இன்று இந்தப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான். இன்னும் அரை மணி நேரம் காத்திருந்தால் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டே, பக்கத்தில் இருக்கும் கடையில் போய் ஒரு டீ வாங்கிக் குடித்தான். டீயில் சர்க்கரை கூடுதலாகப் போடச் சொல்லிக் கேட்டபோது

ஆசுவாசமாக இருந்தது. வேறு நல்ல இளமையான டாக்டரைப் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பின்னர் டீ மாஸ்டரிடம் பேச்சுவாக்கில் கேட்பது போல, ‘அந்த போஸ்டர் மன்னன் பட போஸ்டர்தான' என்று கேட்டான். அந்த டீ மாஸ்டருக்கு முப்பது வயது கூட இருக்காது. அவன் ஆம் என்பது போலல் தலையாட்டிவிட்டு, தனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்பது போல, அடுத்த டீயைப் போடுவதில் கவனமானான். செல்வத்துக்கு வேறு யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. அவன் மதித்துக் காதுகொடுத்துக் கேட்காவிட்டால்தான் என்ன, அவனுடன் சம்பந்தமா செய்யப் போகிறோம், நாமே பேசுவோம் என்று அவனிடம் வம்படியாகப் பேச ஆரம்பித்தான்.

‘உங்கள பாத்தா முப்பது வயசு தெரியுது. நான் இருபது வயசு இருக்கப்ப இதே சென்ட்ரல் தியேட்டர்ல இதே மன்னன் படம். என்னா கூட்டம்ங்கிய? அப்பல்லாம் நெல்லை சென்ட்ரலில்னு ஒட்டுவான். என்னமோ நூறு  சென்ட்ரல் இருக்க மாதிரி. அவனுக்கு அதுல ஒரு ராசி. அப்பல்லாம் இங்க கட கெடயாது. கட வைக்கவும் முடியாது. கூட்டம் அம்மும். கட வெச்சா விட்ருவுமா? ரஜினி படம்னா கடய உண்டு இல்லைன்னா ஆக்கிருவானுவொ. மதியம் ரெண்டு மணி படத்துக்கு காலைல எட்டு மணிக்கு டிக்கெட் குடுத்து உள்ள அடச்சி போட்ருவான். அந்த டிக்கெட் வாங்க காலைல ஆறு மணிக்கி பல்லு வௌக்காம பாய் கடைல ஒரு காப்பி குடிச்சிட்டு வந்து இங்கன நிப்போம் தெரியுமா. நைட்டு பன்னெண்டு மணிக்கு முதல் ஷோ போடுவான். இப்பல்லாம் யார் படம் அப்படி ஓடுதுங்க?'

அவன் அவரையே பார்த்தான். பின்பு சொன்னான், ‘இப்பத்தான் ரஜினி படம் கூட ஓட மாட்டங்கே தாத்தா. அதுக்கு என்னங்கிய?'

தாத்தாவா? முப்பது வயதுக்காரனுக்குமா?

செல்வத்துக்கு சப்பென்று ஆகிவிட்டது. ஒனக்கு தெரியுமா ரஜினி படம் ஓடலைன்னு என்று கேட்க நினைத்தான். ஆனால் தனக்குமே அது பற்றி சரியாகத் தெரியாது என்பதால் அமைதியாக இருந்தான். முன்பென்றால் நூறு நாள் ஓடும். ஆனால் இப்போது எல்லாமே அவனுக்கு ஒரு மர்மமாக இருந்ததோடு, அவன் அதைப் பற்றி அதிகம் யோசித்திருக்கவும் இல்லை. அதேசமயம் ஒரு டீக்காரன் இப்படிப் படக்கென்று சொல்லிவிட்டானே என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. பதிலுக்கு எதாவது சொல்லத்தான் வேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.

‘என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? ஆளு வயசு என்ன? எழுவதுல்லா? எனக்கு என்ன வயசுங்க? சொல்லு பாப்போம்? ஐம்பது கூட ஆவல. இந்தோ பஸ் ஏறி வந்து ஒரு டீ குடிக்கக்குள்ள மூச்சி வாங்குதுல்லா. அவன் எப்படி நடிக்கான் பாத்தியா? தர்பார் பாத்தியாடே நீ?'

அவன் இவன் என்று பேசத் துவங்கிவிட்டோம் என்பது செல்வம் நினைத்துக்கொண்டு, அவன் தப்பாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக, ‘ஒங்கள சொல்லல. பொதுவா சொல்லுதேன். இதோ பஸ்ல வாரேன், அங்க ரெண்டு பேரு என்னமோ மொபைல்ல ரஜினிய பாத்து சிரிச்சிக்கிட்டு வாரானுவொ. வயசு என்ன இருக்குங்கிய? ரெண்டு பேருக்கும் பதினஞ்சி கூட இருக்காது. அவனுவளுக்கு என்ன தெரியும் ரஜினிய பத்தி? எழுபது வயசுல ஒருத்தன் தன் படத்துல நடிக்கமாட்டானான்னு காத்திருக்கானுவன்னா காரியம் இல்லாமயா சொல்வானுவ? அதச்  சொன்னேன்'' என்று பொதுவாகச்  சொல்லி வைத்தான்.

டீ மாஸ்டர் டீயை ஆற்றிக்கொண்டே முடிவாகச் சொல்வது போலச் சொன்னான், ‘நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான். ஆனா தர்பார்லாம் கூட வசூல் சரியில்லைங்காவளே அண்ணாச்சி' என்றான். அண்ணாச்சி என்ற வார்த்தை கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனால் தர்பாரின் வசூல் சரியில்லை என்பதற்கு பதிலாக என்ன சொல்வது என்று சட்டென செல்வத்துக்குப் பிடிபடவில்லை. டீ ஆற்றுபவனுக்கு எப்படி வசூல் பற்றித் தெரியும்? அதற்கு மேல் பேசாமல் டீ கிளாஸை வைத்துவிட்டு, டீக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு தியேட்டர் நோக்கிப் போகத் துவங்கியவன், எதோ நினைவு வந்தவனாக மீண்டும் டீக்காரன் பக்கம் போய், ‘நீ விக்கிபீடியாவுல நல்லா பாருடே. எறநூறு கோடி போட்ருக்கான். வயசு எத்தன? எழுபது!

புரிஞ்சிதா?' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தியேட்டரைப் பார்த்துப் போனான்.

தியேட்டரில் இன்னும் ஆள் அரவம் இல்லை. யாரும் வரும் அறிகுறியும் தெரியவில்லை. இப்போதெல்லாம் யாரும் தியேட்டருக்கு வருவதே இல்லையோ என்று யோசித்தான் செல்வம். தியேட்டரைத் திரும்பிப் பார்த்தான். அழிக்கப்பட்ட ஒரு கரிக் கோடைப் போல நின்றுகொண்டிருந்தது சென்ட்ரல் தியேட்டர். வெயில் ஏறிக்கொண்டே போனது.

இருபது வயதில் மன்னன் படம் பார்த்தபோது ரஜினி முதல் காட்சியில் வரும்போது அனைவரும் சீட்டில் எழுந்து நின்று கத்தியது நினைவுக்கு வந்தது

செல்வத்துக்கு. தன்னிடம் டிக்கெட் கேட்ட வயதான தாத்தா தன் வயதுக்கு சம்பந்தமே இல்லாமல் விசில் அடித்து கை தட்டி ஆரவாரம் செய்து குதித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த

செல்வத்துக்கு, அவருக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. விஜயசாந்தி ரஜினியை அறையும்போது வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளைத் திட்டிய கூட்டம், ரஜினி மீண்டும் விஜயசாந்தியை ஒன்றுக்கு நான்காக அறையும்போது இன்னும் அதிகம் கெட்ட வார்த்தை போட்டு ‘இன்னும் அவளை நல்லா அடி' என்று கூவியது. அந்தக் காட்சியில் புல்லரித்துப் போயிருந்தான் செல்வம். ஆனால் அவன் வாழ்வில் அவனை அவன் மனைவி அடித்ததே இல்லை என்பதோடு அவனும் அவன் மனைவியை அடிக்க நினைத்ததே இல்லை. அது மட்டுமல்ல, அவளை அடிக்க முடியும் என்று கூட அவனுக்குத் தோன்றியதில்லை.

தியேட்டரை நோக்கி யாரோ ஒருவர் வரவும் அவரிடம் போய் மெல்லப் பேசினான் செல்வம். படம் எப்ப போடுவாங்க என்று கேட்டது அவ்வளவு பெரிய குத்தமா என்று செல்வம் நினைக்கும் அளவுக்கு அவன் முறைத்துவிட்டுச் சொன்னான், ‘தியேட்டரை மூடி நாலு வருஷம் ஆவுது. என்ன கிண்டலாவே?' சொல்லிவிட்டு அவன் செல்வத்தின் பதிலுக்குக் காத்திருக்காமல் போய்க்கொண்டே இருந்தான்.

செல்வத்துக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. மீண்டும் தியேட்டரைத் திரும்பிப் பார்த்தான். திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல யாராவது தன்னைத் தழுவித் தூக்கிக்கொள்ள மாட்டார்களா என்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தது நெல்லை சென்ட்ரல் தியேட்டர். சென்ட்ரல் தியேட்டர் மூடியாகிவிட்டது என்ற செய்தி தனக்கு முன்பே தெரியுமா தெரியாதா என்று யோசித்தான். தெரிந்தேதான் இங்கு நின்றிருக்கிறோமா? இதற்கும் ஒரு நல்ல டாக்டரிடம் காட்டவேண்டுமா?

வெய்யில் ஏறிக்கொண்டே போனதால் தலை வலிப்பது போல இருந்தது செல்வத்துக்கு.

சென்ட்ரல் தியேட்டரின் நிழலில் நின்று கொண்டான். காற்றில் படபடத்துக்கொண்டிருந்த விஜயசாந்தியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கேதான் யாரும் இல்லையே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அப்படியே பார்த்தாலும்தான் என்ன? வெயில் திடீரெனக் குறைய இருள் சூழ்ந்தது. ரஜினி திரையில் வந்து நிற்கவும், அருகே கிடந்த ஒரு கல் மேல் ஏறி நின்று கை தட்டிக் குதித்தான் செல்வம். தன் பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து தலைக்கு மேலே சுற்றினான். அவன் காதுக்குள் தியேட்டரின் விசில் சத்தமும் ரஜினியின் வசனமும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தன. தியேட்டர் வாசலில் கிடந்த ஒரு கல்லில் ஏறி முப்பது வருடம் அந்தப் பக்கம் போய்விட்டான் செல்வம்.

ஜூலை, 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com