பிறந்த நாள்

பிறந்த நாள்

‘எனக்கும் சுரேசுக்கும் இன்னைக்கு பர்த் டே’ ஒருநாள் முன்னமே சொல்ல ஆரம்பித்திருந்தான் சின்னவன். பெரியவன் என்னைப் பார்த்து லேசாய் நகைத்தான். நான் கண்களாலேயே எதுவும் சொல்லாதே என்று ஜாடை செய்தேன். அது புரிந்து அவன் எதுவும் சொல்லாமல் தன் ஷூவைப் போடுவதில் முனைந்தான். பத்து வயதில் இந்த புரிதல்.

மறுநாள் மாலையில் நாங்கள் எல்லோரும் போவதாக இருந்த பிறந்த நாள் நிகழ்ச்சி என் நண்பர் ஒருவரின் மகனுடையது. அவனுக்கும் சின்னவன் வயதுதான். ஐந்து முடிந்து ஆறு.  பிறந்த நாள் நிகழ்ச்சி ‘பர்கர் கிங்’- ல் என்று நேற்று அலைபேசியில் அழைத்து சுரேஷின் அப்பா சொல்லியிருந்தார்.

அபுதாபியில், விழாக் கொண்டாட்டங்களை, பெரும்பாலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், நடத்துவது இந்த மாதிரி இடங்களில்தான்.  ‘பர்கர் கிங், மக்டானோல்ட், கே எஃப் சி, எஸ் எஃப் சி’ போன்ற உணவு விடுதிகளில் இதற்காகவே ‘விழா அரங்கு’ ஒன்று மாடிப்பகுதியில் இருந்தது. பத்தடி அகலம் இருபதடி

நீளத்தில். இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறும் கால அளவு. காலை நேரங்களில் கிடையாது. மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை, மாலை 7.30 மணி முதல் 9.30 வரை, இரவு 10 மணி முதல் 12 மணி வரை. 7.30 மணிப் பகுதிக்குத்‌தான் ஏகப்பட்ட கிராக்கி. ஒரு மாதம் முன்பே பதிவு செய்து விடுவார்கள். அதுவும் வாரக் கடைசி நாளான வியாழன் அல்லது வெள்ளியில் 7.30 மணிப் பகுதி கிடைப்பது குதிரைக் கொம்பு.

வியாழன் அல்லது வெள்ளியில் விழாக்களை வைப்பதில் ஒரு வசதி,  7.30 க்கு தொடங்கும் நிகழ்ச்சி பத்து மணிக்கு முடியும் பட்சத்தில் சாவகாசமாக தங்கியிருக்கும் அடுக்கக வீட்டிற்குப் போய் தூங்கலாம்.

இது மாதிரி உணவு விடுதிகளின் பிறந்த நாள் ஹால்களில் கொண்டாடுவதில் இன்னொரு வசதி, நாம் ஜாலியாக கையாட்டிக் கொண்டு போகலாம். சொன்ன நேரத்திற்கு ஹால் அலங்கரிப்பட்டு பலூன்கள் தொங்க விடப்பட்டு இருக்கும். மேலே ஏறி வரும் படிக்கட்டு முகப்பில் பிறந்த நாள் கொண்டாடும் சிறுவன்/

சிறுமியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருக்கும். நாம் செய்ய வேண்டியது பிறந்த நாள் கேக் ஆர்டர் செய்வது மட்டுமே. கேக் ஆர்டர் செய்யும்போதே எங்கே எத்தனை மணிக்குக் கொண்டு வந்து தர வேண்டுமென்று சொல்லி விட்டால் போதும். சொன்ன நேரத்திற்கு ஐந்து பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்து விடும்.

உணவு விடுதி சிப்பந்திகளில் இரண்டு பேர் (பிலிப்பினோ பெண்கள்) விழாவை சிறப்பாக நடத்தித் தருவார்கள். முதலில் ஒரு முக்கால் மணி நேரம் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்படும். குழந்தைகள் எல்லோரும் பிறந்த நாள் கொண்டாடும் சிறுவன்/சிறுமியின் கூடப் படிப்பவர்கள் அல்லது அவரது பெற்றோரின் நண்பர்களின் குழந்தைகள். எண்ணிக்கை இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள். குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் கொண்டு வந்து விட்டுவிட்டு, விழா முடியும்போது வந்து அழைத்துச் செல்வார்கள். அப்படி விட்டுச் சென்ற குழந்தைகளை, நிகழ்வு நடக்கும் இடத்தை விட்டு, வேறு எங்கும் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது விழா நடத்துவோரின் பொறுப்பு.

நாங்கள் போயிருந்த அன்று, விளையாட்டுகள் எல்லாம் முடிந்து, கேக் கட் பண்ணும் நேரம் வரை, சின்னவனின் ஆட்டமும் பாட்டும் வெகு அலாதியாக இருந்தது. பெரியவன் அவன் வயது நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தான். மனைவி சுரேஷின் அம்மாவுடனும் வந்திருந்ததில் தெரிந்தவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தாள். நான் அலைபேசியில் சுற்றிச் சுற்றி பெரியவனையும் சின்னவனையும் படமெடுத்துக் கொண்டிருந்தேன்.

விளையாட்டு நேரம் முடிந்தபின், அறையின் நடுவில் ஒரு சிறிய மேஜை போடப்பட்டு, கேக் உறை பிரிக்கப்பட்டு அதன் மேல் வைக்கப்பட்டது. கேக்கின் மேற்பரப்பில், விமானப்படம் ஒன்று, தரையிலிருந்து மேல் நோக்கி செல்வது போன்ற அமைப்பில், அச்சிடப்பட்டு அதற்குக் கீழே ‘ஹாப்பி பர்த்டே சுரேஷ்’ என்று போட்டிருந்தது. குழந்தைகள் அனைவரும் மேஜையைச் சுற்றி நிற்க வைக்கப்பட்டனர். சின்னவன் சுரேசுக்கு பக்கத்தில், சற்றே இடித்தபடி நின்றிருந்தான்.

அவன் உயரத்துக்கு, சற்று மேலாக இருந்த, கேக்கை எட்டிப் பார்த்து, ‘என் பேர் எங்கே?’ என்று அவன் கேட்டது, சுற்றியிருந்த குழந்தைகள் போட்ட சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை, என்னைத் தவிர. ஹாலின் மூலையில் இருந்த டேப் ரிக்கார்டரில், பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

‘பர்த் டே பாயோட பேரன்ட்ஸ் எங்கே’ என்று சத்தமாக அழைத்தாள் பிலிப்பினோ பெண்களில் ஒருத்தி. இன்னொருத்தி, சுற்றியுள்ள கும்பல், கேக் எல்லாம் தெரியும்படி, நாற்காலி ஒன்றின் மீதேறி, வீடியோ காமிராவில் கோணம் பார்த்துக் கொண்டிருந்தாள். விழா முழுவதையும் படம் பிடித்து, இரண்டு மணி நேர நிகழ்ச்சிகளை, ஒரு டிவிடியில் தருவார்கள்.

நான் சின்னவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் கூட நம்பிக்கையோடு, அந்தப் பெண்ணையும், கேக்கையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மாதங்கள் முன்புதான், பெரியவனின் பிறந்த நாள் விழாவை, இதே பர்கர் கிங்கில் நடத்தியிருந்தோம். அன்றைக்கும் இதே போல ஆரம்பித்த சின்னவன், பெரியவனோடு சேர்ந்து, கேக்கின் மீதிருந்த மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தான். நானும் மனைவியும் கேக்கில் சிறிது எடுத்து, இரண்டு பேருக்கும் ஊட்டினோம். விழா அமைதியாக நடந்து முடிந்தது.

இன்று, இதோ, சின்னவன் முன், சிறிய மெழுகுவர்த்திகள் வட்ட வடிவக் கேக்கின் மேல், செருகப்பட்டு, ஒளியூட்டப்பட்டு, ஊதக் காத்திருக்கும் இந்தக் கணம்.

‘எல்லோரும் கை தட்டுங்க, இப்போது சுரேஷ், மெழுகுவர்த்திகளை ஊதுவான்’ என்று அந்தப் பெண் அறிவிக்க, சுற்றிலும் ’ஓ’ வென்ற கோஷம், டேப் ரிக்கார்டரில் பாட்டு, எல்லோரின் கைதட்டல், கூடவே ‘ஹாப்பி பர்த் டே சுரேஷ்’ என்று வந்திருந்தவர்கள் பாட, சுரேஷ் மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தான். அப்பா அம்மாவால் அவனுக்கு கேக் ஊட்டப்பட்டது.

ஹாலுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த உணவு மேஜைகளில், முன்பே குறிப்பு எடுக்கப்பட்ட உணவு அயிட்டங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. பெரியவர்களுக்கு பர்கர், சிறுவர்களுக்கு சிக்கன் நகேட்ஸ். கூடவே ஒரு சிறிய பொம்மையும்.

ஒலித்துக் கொண்டிருந்த டேப் ரிக்கார்டர் நிறுத்தப்பட்டது. அப்போதுதான், லேசான அந்த விசும்பல் சப்தம் கேட்க ஆரம்பித்தது. நண்பன் ஒருவனோடு, ஒரு மேஜையில் உட்கார்ந்திருந்த சின்னவனின் அழுகைச்சத்தம்.

தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவனை நோக்கி, ஓடினேன்.

‘என்னாச்சுமா’ என்ற விசாரித்தேன், அவன் தலையை லேசாக தடவியபடியே.

‘நான் ஊதவே இல்லை’ என்றான் கேவலோடு.

மனைவியும் சுற்றியிருந்த பிறரும் அவனைச் சமாதானப்படுத்த, எதேதோ சொல்லிக் கொண்டிருக்கையில், நான் ஓடிப் போய், பெண் சிப்பந்தியிடம் ‘ஒரு சிறிய மெழுகுவர்த்தி இருக்குமா’ என்றேன்.  இருந்தது.

‘இப்போ உனக்குப் பிறந்த நாள், நீ ஊது‘ என்றபடி, கொண்டுவந்த மெழுகுவர்த்தியை இடது கையில் பிடித்தபடி, அவன் முகத்தருகே நீட்டி, வலது கையால் பற்ற வைத்தேன்.

சுற்றியிருந்த எல்லோரும் சேர்ந்து, ‘ஹாப்பி பர்த் டே’ என்று பாட, வாடிப் போயிருந்த முகம், சட்டென்று மலர்ந்தது.  மூச்சை இழுத்து ஊதினான்.

‘இன்னொரு வாட்டி’ என்றான். செய்தோம்.

ஐந்து வாட்டி செய்ய வேண்டி இருந்தது.

அதற்குப் பின், சக தோழர்களுடன் விளையாட்டு, இடையே கொஞ்சம் சாப்பிடுவது என்று சகஜமானான். மீதமிருந்த மெழுவர்த்தியை, நான் பத்திரமாக ஓரிடத்தில் ஒளித்து வைத்தேன். மறுபடி உபயோகிக்க வேண்டிய அவசியமில்லாமல் அதை அங்கேயே விட்டுவிட்டு, வீடு வந்து சேர்ந்தோம்.

நான் வேலை பார்க்கும் அலுவலகம், ஒரு பத்து நிமிட கார் பயணத்தில் இருந்ததால், மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து போவேன். அந்தப் பிறந்த நாள் விழா முடிந்த மறுநாள், மதியம் சாப்பிட்டபடி, முரசு டீ வியில் சிவாஜி பாடலொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரிமோட் கார் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்த சின்னவன், அருகில் ஓடி வந்து, ‘அன்னைக்கு நான் கேக் கட் பண்ணவே இல்லையே’ என்றான். இதென்னடா புது வம்பு என்று மனைவியைப் பார்த்தேன்.

‘காலையில இருந்து இதே பல்லவிதான். திருப்பித் திருப்பி அதையே கேட்டு கேட்டுக் காது புளிச்சுப் போச்சு. பேசாம சாயந்திரம் ஆபீஸ்ல இருந்து வரும்போது சின்னதா ஒரு கேக் வாங்கிட்டு வாங்க. வீட்ல வச்சு கட் பண்ணாத் தான் சரியாவும் போலிருக்கு’ என்றாள்.

சரியென்று சொல்லிவிட்டு வந்தவன், ஆபீஸ் வேலைகளில் மூழ்கிப் போனேன்.

மாலையில் வீட்டருகே வண்டியை நிறுத்தப் போனவன், ஒலித்த அலைபேசியில் மனைவி மெல்லிய குரலில், ‘கேக் வாங்கியாச்சா?’ என்றாள். பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறான் போலிருக்கிறது. வண்டியை அப்படியே பின்னோக்கி எடுத்து கேக் கடையை நோக்கிச் செலுத்தினேன்.

இருந்ததிலேயே சிறிய வட்ட வடிவக் கேக் ஒன்றோடு வீட்டிற்குள் நுழைந்தவுடன், பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான் சின்னவன். ஹால் நடுவில் ஒரு சின்ன மேஜையில், மறுபடி ‘ஹாப்பி பர்த் டே’ கொண்டாடினோம் அன்றும்.

ஒரு வாரம் போயிருக்கும்.

அன்று அதிசயமாய் அபுதாபியில் மழை பெய்தது. பள்ளிக் கூடங்களுக்கு எல்லாம் விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு மழை. அலுவலகத்தில் ஒவ்வொருவராய், காரிடார் ஜன்னலருகே போய், மழையைப் பார்த்துவிட்டு வந்து, வேலையையும் பார்த்தோம். மாலை அலுவலகம் விட்டு வரும்போது, சாலையில், மழை பெய்து விட்டுப் போன தடயமே இல்லாத அளவுக்கு, தண்ணீரெல்லாம் வடிந்திருந்தது.

காலிங் பெல்லை அமுக்கிவிட்டு காத்திருந்தேன். வழக்கம்போல பெரியவன் தான் கதவைத் திறந்தான். ஷூவைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்தேன். உடை மாற்றிக் கொண்டிருந்தவனை நோக்கி ஓடி வந்தான் சின்னவன்.

‘டாடி, நாளைக்கு பர்த் டேவாம்’ என்றான்.

‘அப்படியா...யாருக்கு?’ என்றபடியே அவனைத் தூக்கினேன்.

‘பிரியாவுக்கும் எனக்கும்’ என்றான் காதருகே.

பிரியா அவனுடன் பள்ளிப்பேருந்தில் போய்வரும் என் இன்னொரு நண்பரின் மகள்.

செப்டெம்பர், 2016.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com