ரேணுகா

ரேணுகா

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை- யிலேயே அம்மா எழுப்புகிறாள். நல்லா தூங்கலாம், நல்லா சிக்கன் மட்டன்னு சாப்பிடலாம் என ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்தால், அம்மாவோ எழுப்புகிறாளே !

‘எந்திரி பாப்பா . டைம் ஆச்சு பாரு'

‘டைம் ஆச்சா? எதுக்கு டைம் ஆச்சு ? எங்க போக டைம் ஆச்சு?'

‘அதான் சொன்னேனே காலையிலேயே அம்மாச்சி வீட்டு குலசாமி கோவிலுக்கு போகணும்னு'

அதிர்ச்சியுடன் எழுந்து உட்காருகிறேன்.

‘யார்கிட்ட சொன்னீங்க? எப்போ சொன்னீங்க? முன்னவே சொல்லிருந்தா நான் ஹாஸ்டல்ல இருந்து வந்திருக்கவே மாட்டன்ல'

‘தெரியுமே. அதான் சொல்லல்ல. அதான் இப்போ சொல்லிட்டேன்ல. போய் ரெடியாகு போ'

வசமாக மாட்டிக் கொண்டேன். கிளம்புவதைத் தவிர வேறு வழியில்லை. எல்லோரும் தயாராகி காரில் ஏறினோம். அன்று அப்பாவே காரை

எடுத்தார். பெரும்பாலும் டிரைவர் வைத்துத் தான் போவது வழக்கம். அன்று என்னவோ அப்பாவே காரை எடுத்தார்.

எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர, கார் புறப்படுகிறது.

‘அம்மாச்சி வரலையாம்மா?'

‘மாமா கூட வருவாங்க'

‘என்னது மாமா வந்துருக்காரா ? இந்த வீட்ல ஏதாச்சும் எனக்கு சொல்றீங்களா?'

‘ஆமா பெரிய மனுஷி இவ. அதான் கார் புறப்பட்ட உடனே தூங்குவல்ல. பேசாம தூங்கு'

தங்கையும் அப்பாவும் சிரித்துக் கொண்டார்கள்.

‘ஹ்ம்ம், எல்லாம் என் நேரம்'

அம்மாச்சியின் குலசாமியிருந்த ஊர் ஒரு குக்கிராமம். வத்தலகுண்டுவிலிருந்து பிரிந்து உள்ளே செல்ல வேண்டும். சரியான சாலை வசதி கூட இல்லாத ஊர். மேடும் பள்ளமுமாக இருக்கும் சாலையில் பயணம் செய்து ஒரு வழியாக கோவிலுக்கு வந்து

சேர்ந்தோம். வெயில் ஏறத் தொடங்கியிருந்தது. அப்பா கோவிலருகில் சென்றுவிட, நாங்கள் மூவரும் நல்ல மர நிழல் பார்த்தமர்ந்து மாமாவும் அம்மாச்சியும் வர காத்திருக்கத் தொடங்கினோம்.

‘இங்கே வந்து வெய்ட் பண்றதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்'

முறைத்துக் கொண்டே அம்மா எழுந்து சென்றாள். நானும் தங்கையும் விறகு வெட்டும் பெண்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.

‘யக்கா ரெண்டாயிரத்துல இந்த ஒலகம் அழிய போவுதுனு சொன்னாங்கல்ல,  சொல்லி ஏழு வருசம் ஓடி போச்சு. அழியுமா அழியாதா?'

“ஏம்பிள ஒனக்கு இப்படி ஒரு ஆச. இப்போ என்ன நடந்து போச்சுனு ஒலகமே அழியணும்னு ஆசப்படறவ ?'

‘ஒண்ணுமில்லக்கா. எம்புட்டு பாடுபட்டாலும் இந்தா இங்கனையேதான் கிடக்குறோம். இங்கன இருக்க வத்தலக்குண்டுக்கு போக முடியுதா? போய் நல்ல சீலத் துணிமணி வாங்கியார முடியுதா?'

“அதும் சரிதாம்பிள்ள . எங்க,  நாம வாங்கி வந்த வரம் அப்டியிருக்கு. யார குத்தஞ் சொல்ல?'

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கையில் மாமாவின் கார் வந்துவிட்டது. கார் வரவும் இருவரும் எழுந்து கோவிலை நோக்கி நடக்கிறோம்.கோவிலில்  பூஜைக்காக தயார் செய்துக் கொண்டிருந்தார் பூசாரி. பூசாரி என்றால் ஐயர் எல்லாம் இல்லை. பங்காளிகளில் ஒருவரை பூசாரியாக நியமித்திருப்பார்கள். பூஜை முடியவும் தான் மதிய உணவு. அங்கு வேறு சிலர் கூட கூடியிருந்தார்கள். அவர்களெல்லாம் ஏதோ ஒரு வழியில் சொந்தமாகத்தான் இருந்தார்கள்.

நாங்கள் போய் அம்மாச்சியின் அருகில் அமர்ந்து கொண்டோம். ஏதாவது கதை சொல்லி, வம்பு வளர்த்து அந்த இடத்தை கல கல வென வைத்திருப்பார் எப்பவும்.

“இதோ . இவரு உங்க தாத்தாவோட சித்தப்பா வழி சொந்தம். அங்க இருக்கா பாரு , அவ உங்க தாத்தா கட்டிக்கற மொற. அதான் இன்னிக்கும் என்னப் பார்த்து மூஞ்ச திருப்பிட்டு போறா. உங்க தாத்தா மட்டும் இருந்துருந்தா அவ இங்க வந்து வாயெல்லாம் பல்லா பேசிருப்பா. இப்ப பாரு மூஞ்ச திருப்பிட்டு உக்காந்திருப்பத'

‘ஏய் தங்கவேலு, கண்ணு தெரியலையாக்கும் பாத்தும் பாக்காத மாதிரி இருக்கவ ?'

‘அக்கா... ராசம்மாக்கா நீங்களா? நான் கவனிக்கவேயில்லையே. எப்ப வந்தீங்க?'

ராஜலட்சுமியை ராசம்மாவாக மாற்றியி ருந்தார்கள் சொந்தங்கள்.

அம்மாச்சியின் கதைகளில் சுவாரஸ்யம் குறைந்ததே இல்லை. யாரும் பேசாமல் போனால் கூட தானாக சென்று பேசி சொந்தம் விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதில் கெட்டிக்காரி.

அம்மாச்சி எழுந்து செல்லவும், செய்வதறியாமல் மறுபடியும் கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு ஊரையும் சுற்றி வர புறப்பட்டோம்.ஓரிடத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களை பார்த்ததும் ஒரே குதூகலம் அவர்களிடம். நாங்கள் அவர்களிடம் சென்று பேச்சு குடுக்க ஆரம்பித்தோம்.

ஒவ்வொருவராய் பெயர் என்ன, என்ன படிக்கிறார்கள் என கேட்டு பேச்சைத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கேள்விகள்.

“ஏன்க்கா, நீங்க எந்த ஊரு ?'

‘நாங்க தேனி'

‘தேனின்னா , வத்தலகுண்டவிட பெரிய ஊராக்கா?'

‘ஹ்ம். கொஞ்சம் பெரிய ஊர்தான். ரொம்ப பெரிய ஊர்லாம் இல்ல'

‘நான் ரெண்டு வாட்டி வத்தலகுண்டுக்கு போனேன்கா. எம்மாம்பெரிய ஊரு. ஏன்க்கா ஒங்க வீடு மச்சு வீடா ?'

இந்த கேள்வியால் சிறிது தாக்கப்பட்டு சுற்றியும் அத்தெருவில் இருக்கும் வீடுகளைப் பார்க்கிறேன். பெரும்பாலானவை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள். ஒன்றிரண்டு வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்தன. எங்கும் ஏழ்மையே குடியிருந்தது.

‘ஏய் சும்மாரு புள்ள, மச்சு வீடாத்தான் இருக்கும். ப்ளசரு காருல்லாம் வச்சுருங்காங்கல்ல'

பேச்சை மாற்றுவதற்காக கேட்கிறேன்.

‘யாரு இங்க நல்லா படிப்பீங்க ?'

‘எங்கக்கா நல்லா படிக்கும்கா. எட்டாவது படிக்குது. விளாட கூப்டா வராது. எதாச்சும் படிச்சுட்டே இருக்கும். அக்கா, அத கூப்டு வரவா ?'

பதிலுக்கு காத்திராமல் அச்சிறுமி ஓடி விட்டாள்.

‘க்கா. இந்தா இதான் எங்கக்கா'

“கூட்டியாரச் சொன்னீங்களாக்கா ?'

“ஆமா. உன் பேரு என்ன. என்ன படிக்கற ?

“ரேணுகாக்கா . எட்டாவது படிக்கிறேன். விருவீடு கவர்மெண்டு ஸ்கூல்லதான் படிக்றேன்'

‘நல்லா படிப்பனு உந்தங்கச்சி சொல்லுச்சு. நல்லா படிப்பியா?'

‘படிப்பேன்க்கா. எப்படியாச்சும் க்ளாஸ் ஃபர்ஸ்ட் வந்துடுவேன்.'

‘வாவ் சூப்பர். நல்லா படிக்கிறியே. என்னவாக ஆசை உனக்கு?'

‘தெரியலையேக்கா. எனக்கு படிக்க பிடிச்சுருக்கு. இப்போ வரை என்ன படிக்கணும்னு எல்லாம் யோசிச்சது இல்லையே.'

‘ஏய் ரேணுகா. இங்க வா'

அவளது அம்மாவின் குரல். விறகு வெட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி.

‘என்னம்மா ?'

‘போய் சாருக்கு டீ வாங்கியா. இந்தா காசும் தூக்கும். சீக்கிரம் வேணும்னு

சொல்லி வாங்கியா.'

‘ஆமா நான் சொன்ன ஒடனே குடுத்துருவார். போம்மா நீ வேற.

அக்கா நான் போயிட்டு வந்துடறேன்.'

‘இரு இரு, நானும் உன்கூட வரேன்'

தங்கை மற்ற சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்க , நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே நடக்கலானோம். பள்ளிக்கூட வாத்தியாரவர். அவருக்காகத்தான் அவள் அம்மா டீ வாங்கி வர சொல்லியிருக்கிறாள் என அவளுடன் பேசியதில் தெரிந்து கொண்டேன்.

இரண்டு தெருக்களைக் கடந்து டீக்கடை இருக்கும் தெருவருகே வந்தோம். தெருவிற்குள் நுழைவதற்கு முன் மிக இயல்பாக தனது காலணிகளை ஒரு கல்லின் அருகே கழற்றி விடுகிறாள். அவளது இந்த செய்கை என்னை குழப்பியது. குழப்பத்துடன்

“எதுக்கு ரேணுகா செப்பல்ல இங்க கழட்டி விடற?'

‘பெரிய ஆளுங்க இருக்க தெருக்கா இது. இங்க செப்பல் எல்லாம் போட்டு வரக்கூடாது.'

‘நான் எல்லாம் போட்டுத்தானே இருக்கேன்.?'

‘நீங்கல்லாம் போட்டுகலாம்க்கா . நாங்க தான் போட கூடாது.'

‘ஹ்ம். எதுக்கு இப்படி கழட்டிட்டு வரணும்னு நீ யார்கிட்டையும்கேட்டதில்லையா?'

‘எங்கப்பாட்ட கேட்ருக்கேன் . இவுக எல்லாம் நமக்கு சாமி மாதிரி, நமக்கு வேல குடுத்துருக்காங்க, துணிமணி எல்லாம் தர்றாங்க. அவுங்க செருப்பு போட்டு வரக் கூடாதுனு சொன்னா நம்ம அப்படியே செய்யனும்னு அப்பா சொல்லுச்சு.'

“அப்பா என்ன வேலைக்கு போறாங்க?'

‘அது காட்டு வேலைக்கு போகும்க்கா. பெரியாளுங்க என்ன வேல சொன்னாலும் செய்யும்.'

பேசிக்கொண்டே டீக்கடையின் அருகில் வந்துவிட்டோம்.

‘அண்ணே. அண்ணே.'

‘என்ன புள்ள வேணும் ?'

‘ரெண்டு டீ பார்சல் அண்ணே'

‘தூக்கு கொண்டாந்தியா ? தூக்கு இல்லனா பார்சல் எல்லாம் இல்லனு சொல்லிருக்கேன்ல'

“கொண்டாந்துருக்கேன்ணே. இங்கன வைக்கவா?'

‘வையி. எடுத்துக்குறேன்.'

நாங்கள் டீக்கடைக்குள் செல்லவேயில்லை.

‘அக்கா நீ வேணா உள்ள போக்கா , நாங்கதான் போகக்கூடாது'

‘இல்ல இருக்கட்டும். உன் கூடவே  நிக்கிறேன்.'

நாங்கள் நின்றுக் கொண்டிருக்கையில் காலியாக இருந்த டீக்கடையில் இருவர் நுழைகிறார்கள். கடைக்காரர் அவர்களை கவனிக்கிறார்.

“அண்ணே லேட் ஆச்சு ணே. கொஞ்சம் சீக்கிரம் தர்றீங்களா?'

‘பொறு. என்ன அவசரம். அப்டியே கவர்மெண்டு வேலைக்கு போறவ மாதிரித்தான். காச குடு'

‘இல்லண்ணே . ஸ்கூல் சார் வந்துருக்கார். அவுருக்காகத்தான்.'

‘சரி சரி . இந்தா  கிளம்பு. ஆமாஇது யாரு?'

‘அவங்ககோவிலுக்கு வந்துருக்காங்க. கார்ல வந்துருக்காங்க.'

‘ஓ. உள்ள வாம்மா . உனக்கு ஏதாச்சும் வேணுமாம்மா ?'

‘இல்ல ஒண்ணும் வேண்டாம். நாங்க கிளம்புறோம்.'

திரும்பி வருகையில் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. போகிற போது கவனிக்காத அத்தெருவை இப்போது கவனிக்கிறேன். மாடி வீடுகள், கான்கிரீட் வீடுகள், சிமெண்ட் ரோடு என நன்றாக இருந்தது. கோவிலருகில் வந்ததும், என்னிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டாள்.

அதன் பிறகு பூஜை, மதிய உணவுஎன எதுவுமே மனதில் பதியவில்லை. ரேணுகாவின் முகமும் பேச்சுமே மனதெல்லாம் நிறைந்திருந்தது. எல்லாம் முடித்து கிளம்புகையில் கண்கள் அவளைத் தேடியது. கூட்டத்தில் எங்கு தேடியும் அவள் மட்டும் கண்களுக்கு அகப்படவேயில்லை.

ஆச்சு . இது நடந்து பல வருடங்கள் உருண்டோடி விட்டன. அதற்குபிறகு அவளை பார்க்கவேயில்லை. அவ்வப்போது அவளது முகமும் அவளது பேச்சும் மனத்திரையில் வந்து போகும்.

வங்கியில்சில வேலைகள் இருந்ததால் அலுவகத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுத்து விட்டுசென்னை அண்ணா சாலையிலிருக்கும் இந்தியன் வங்கிக்கு வந்திருந்தேன். அன்று புதன் கிழமையாதலால் வங்கியிலும் பெரிய கூட்டமில்லை. வந்த வேலையும் சீக்கிரம் முடிந்து விட்டது. நேரமும் இருந்தது. ஹிக்கின்பாதம்ஸில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என முடிவு செய்து , மொபைல் எடுத்து கணவரை அழைத்தேன்.

‘ஏங்க , வந்த வேலை முடிஞ்சுடுச்சு. நான் அப்படியே ஹிக்கின்பாதம்ஸ் போயிட்டு வீட்டுக்கு போறேன். அம்மு ஸ்கூல்ல இருந்து வரதுக்குள்ள வீட்டுக்கு போயிடுவேன்.'

“சரி. பாத்து போ.'

வெளி வந்து டிரைவரிடம் சொல்லிவிட்டு காரில் அமர்கிறேன்

ஹிக்கின்பாதம்ஸ் வாசலில் இறங்கி உள்ளே

செல்கையில் யாரோ அழைப்பது போல் தோன்றி திரும்பிப் பார்க்கிறேன் ஆட்டோவிலிருந்து ஒரு பெண் இறங்கி என்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக

கையசைத்துக் கொண்டே வருகிறாள்.

‘அக்கா. என்னைத் தெரியுதா?'

‘இல்லையே . இதுக்கு முன்ன நம்ம மீட் பண்ணிருக்கோமா? “

‘ரேணுகா...க்கா நான்'

அடிக்கடி நினைவில் வரும் ரேணுகா இன்று நேரில். ஆச்சரியமாக,

‘ரேணுகா !! நீயா . எவ்ளோ வருஷம் ஆச்சு. எப்படியிருக்க. தங்கை எப்படியிருக்கா? அம்மா அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா ? சரி வா . பக்கதுல எங்கையாச்சும் காபி சாப்டுட்டே பேசலாம்.'

அவளையும் அமரச் சொல்லி, காரை பக்கத்தில் இருக்கும் நல்ல ரெஸ்டாரண்டிற்கு போக சொல்கிறேன். போகும் வழியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை  அவளைப் பார்க்கிறேன். நல்ல படித்த பெண் எனவும், நல்ல

உத்தியோகத்தில் இருக்கிறாள் எனவும் அவள் நேர்த்தியாய் உடை அணிந்திருந்ததிலிருந்து யூகித்திருந்தேன்.

‘காபி டே வருது. காரை நிறுத்தவா மா ?'

‘சரிண்ணா. நிறுத்துங்க'

இரண்டு காபி ஆர்டர் செய்துவிட்டு பேச்சை தொடங்கினோம். அவள் பேசினாள்.

‘நல்லா இருக்கேன் அக்கா. இண்டியன் பாங்கில்

அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக இருக்கேன். நீங்க வந்த அண்ணா சாலை ப்ரான்ச்ல தான் இருக்கேன்க்கா.'

‘அப்படியா? நான் கவனிக்கவேயில்லையே.'

“நானும் பாக்கலக்கா. நீங்க ஹிக்கின்பாதம்ஸ் போறேன்னு போன்ல பேசிட்டே வெளிய போறப்பதான் பாத்தேன். கூப்டேன், நீங்க கவனிக்காம கார் ஏறிட்டீங்க..எப்படியும் உங்கக்கிட்ட பேசிடணும்னு ஃபாலோ பண்ணிட்டே வந்துட்டேன்.'

ஆர்டர் செய்த காபி வந்தது. விரல்களால் காபி கப்பை கீறிக் கொண்டிருக்கிறாள். அமைதியாய் ஏதோ யோசித்தவாறு இருக்கிறாள். அவளாக பேசட்டும் எனக் காத்திருக்கிறேன்.

‘அன்னிக்கு கோவில்ல இருந்து கிளம்பறப்போ  நீங்க என்னை தேடுனத நான் பாத்தேன்க்கா. ஒளிஞ்சு இருந்து நீங்க கிளம்பறத பாத்துட்டே இருந்தேன். உங்க முன்னாடி வர வெக்கமா இருந்தது. ஆனா உங்க கார் கிளம்பி கண்ல இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.'

மறுபடியும் அமைதியானாள். சிறு மிடறு பருகிய பின் தொடர்கிறாள்.

‘படிச்சேன்க்கா. என்னால எவ்ளோ முடியுமோ படிச்சேன். எதையாச்சும் பிடிச்சு மேல வந்துடமாட்டோமானு படிச்சேன்க்கா. இல்லனா நானும் எங்கூர்ல விறகு தான் வெட்டிட்டு இருந்திருப்பேன்.'

சிரித்துக் கொள்கிறாள்.

'கவர்மெண்ட்ல தான் போகணும்னு எல்லா எக்ஸாமும் எழுதி ரெண்டு வருஷ போரட்டத்துக்கு அப்றம் பாஸ் ஆகி பாங்க்ல ஜாயின் பண்ணிட்டேன்.'

பேசப்பேச அவள் கண்கள் மின்னின.

‘புது வீடு கட்டிருக்கோம்க்கா. லோன்தான், ஆனாலும் சொந்த வீடு. கான்கிரீட் வீடு.'

புன்னகைத்துக் கொண்டாள்.

‘ரொம்ப சந்தோஷம் ரேணுகா. எங்க கட்டியிருக்கீங்க?'

‘எங்கூர்லவீடு கட்ட பெரியாளுங்க விடலக்கா. வத்தலகுண்டுல கட்டிட்டு அங்கே போயிட்டோம்க்கா. தங்கச்சியும் பெதஸ்டா ஹாஸ்பிட்டல்ல தான் நர்ஸா இருக்கா. அதான் வத்தலக்குண்டே  வசதியா போச்சு. அம்மா அப்பா அங்க தங்கச்சி கூடத்தான் இருக்காங்க. அவுங்க இப்போலாம் எந்த வேலைக்கும் போறதில்ல.'

புன்னகை மாறாமல் கூறுகிறாள்.

அவள் என்னவோ புன்னகைகிறாள். எனக்குத்தான் முள் தைத்தது போலிருக்கிறது.

இருவரும் எழுந்து காரருகில் வந்தோம். அவள் வேலை பார்க்கும் வங்கிக்கு அழைத்துச்  செல்கிறேன் எனக் கூறி வற்புறுத்திய பிறகே காரில் ஏற சம்மதித்தாள். மொபைல் எண்களை மாற்றிக் கொண்டோம். வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். இன்னொரு நாள் வருகிறேன் என கூறினாள். அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது.

விடை பெற்றுக் கொண்டு இறங்கி, புன்னகைத்து. கொண்டே

‘சொந்த ஊர் தவிர எல்லா ஊர்லயும் செப்பல் போடமுடியுதுக்கா.' புன்னகையில் வலியை மறைக்க கற்றிருந்தாள்.

ஸ்வர்ணா, வயது 35. எம்.டெக் படித்து வேலையில் இருந்தவர், குழந்தைக்காக வேலையை விட்டுவிட்டு முழு நேர அம்மாவாக மாறிவிட்டதாகச் சொல்கிறார். சில மாதங்களாகவே எழுத ஆரம்பித்துள்ள இவரது முதல் சிறுகதை இணையதளம் ஒன்று நடத்திய சிறுகதை போட்டியில் சிறந்த சு5 கதைகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றொரு சிறுகதை, இணைய இதழொன்றில் வெளியாகி உள்ளது.

ஜனவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com