ஓவியம்
ஓவியம்பி.ஆர்.ராஜன்

வன்ம பேதம்

தண்ணி தவிக்குது. மதியம் கிளம்பும் போது, மவ பொன்னுத்தாயி கொடுத்து அனுப்பிய கூஜாத் தண்ணியும் பஸ்ஸிலேயே தீர்ந்துபோச்சு. நான் குடிக்கிறதையே தாக ஏக்கத்தோட பக்கத்திலேர்ந்து பார்த்தது அந்தப் பொண்ணு. ‘வேணுமா, இந்தா, குடிலன்னு கொடுக்கத்தானே செய்யுது மனசு. இப்படித்தான் காலியாச்சுது கூஜா. ஆனா, இப்போ எனக்குத் தண்ணி தவிக்குது.'

‘ ஈசனூரு வந்தாச்சு; இறங்குங்க பாட்டியம்மா! ‘ விசில் ஊதிக் குரல் கொடுக்கிறார் நடத்துனர். வேலம்மா எழுந்தார். ஓலைக் கூடையை ஒரு கையிலும் காக்கித் துணிப்பையை மறுகையிலும் பிடித்தவாறு மெதுவாகப் படி இறங்கி, சாலையோரமாக நிற்கிறார்.

இதமான காற்று முகத்தை லேசாக வருடி வரவேற்கிறது. அணில்களின் கீச் கீச் தவிர அங்கே முழுமையான பசும் அழகமைதி. இதைக் கேலி செய்வதுபோல் ‘புஸ் ‘ஸெனப் புகையையும் எஞ்ஜின் சத்தத்தையும் வீசிவிட்டுக் கிளம்புகிறது மங்களாம்பிகை ரோடுவேஸ் பேருந்து. சுமைதாங்கிக் கல்லில், வேலம்மா தமது கூடை, பைகளை வைத்து விட்டுப் புடவையைச் சரி செய்துகொள்கிறார்.

வலது பக்கம் வயக்காடு. இடது பக்கம் ஆலமரமும் ஈசனூருக்குள் நீளும் மண் தெருவும். கைகளை உதறியபடி தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறார். ‘ஹூம், ஆளரவமே இல்லை. பொதுவாகவே வெவசாயம் பொய்த்துப் போன பிறகு சனங்க அதது பொழைப்புத் தேடி, அக்கம்பக்கம் நூறுநாள் வேலைக்குப் போய் அதிலேயும் குளறுபடின்னு அலையிதுங்க... சிலபேரு பட்ணம் போய்க் கூலி வேலை செய்யுதுங்க...'

வேலம்மாவுக்கு ஐம்பது தான் சொல்லமுடியும்; எழுபது வயதென எவரும் கணிக்க இயலாது. மா நிறம். களையான வட்ட முகம். மாதுளை முத்துகளெனச் சிவப்புக் கற்கள் பதித்த தங்கத்தோடுகள் காதுகளில் பளிச்சென ஊஞ்சலாடுகின்றன. வெள்ளை ரவிக்கை. பாலும் பழமும் கட்டம் போட்ட தட்டுச் சுற்றுப் பின்கொசுவச் சேலை. சுற்றுமுற்றும் பார்க்கிறார். ‌மனித நடமாட்டமே இல்லை. இந்த ஈசனூர் வெறும் நாற்பது வீடுகள் மட்டுமே கொண்ட ஊர். ஊரென்ற பெயரில் காலனி! ஊர் எல்லையில் உயரத்தில் குடிநீர்த் தொட்டி. மற்றபடி பள்ளிக்கூடம், கோயில், கடை எதுவுமே இல்லை.

‘ஹூம்... முன்னே முப்பது வீடுங்க இருந்துது; இப்போ அதுக குட்டி போட்டு நாப்பது வீடுகளாகியிருக்கு. அதுவும் ரெண்டு பர்லாங் உள்ளே தள்ளிப் போனாதான்...' இவ்வூர்க்காரர்களுக்கு வேறெந்தத் தேவைக்கும் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளிப்புதூர்தான் அடைக்கலம்.

அடைக்கலமெல்லாமில்லை; இவர்கள் அவர்களுக்கு மனதளவில் வேண்டாத விருந்தாளிகள்தான்! விருந்தாளிகள் அல்ல - அவர்களது ஏவலுக்கு உட்பட்டு ஊழியம் செய்து அண்டி வாழும் ஒதுங்கியொடுங்கிய அடிமைகள்தான்.

‘அதோ, அங்கே ஊரெல்லையிலே தெரியுதே தண்ணித்தொட்டி! அட, பாரேன் - தண்ணித்தொட்டியப் பாத்ததும் எனக்குத் தாகங் கூடுதே! தவிக்குதே!' வேலம்மாவின் நடை வேகம் முன்னேயும் நினைவுகள் பின்னேயும் நீள்கின்றன...

‘ம்... அம்பது வருஷம் முன்னாடி இந்த ஈசனூர்க் காலனி கருப்பாயி தான் எனக்கு ரெண்டு பிரசவமும் பார்த்தாங்க. பிறகு ஒருக்கா, மவன் ராமையா சிறு பிள்ளையா இருந்தப்போ சீக்கு வந்து  கவுருமெண்ட்டு ஆஸ்பத்திரியிலே ஆபரேஷன் நடந்துச்சு. அப்பவும் இதே ஈசனூர் கோவிந்தன்தான் ஓடிவந்து ரத்தங் குடுத்தான். ஆனா அப்பவே மவராசன் எம் புருஷன் பல்லைக் கடிச்சுக்கிட்டு என்னமா சாமியாட்டம் ஆடினாரு! ‘இந்த சனங்ககிட்டே ரத்தம் வாங்குறதா? நாம யாரு, அவுங்க யாரு? கூடாது'ன்னு பேயாட்டம் போட்டாரே!' அட, எம்புள்ள உசிருதான் எனக்குப் பெரிசு! மனுஷனுக்கு மனுஷன் என்னய்யா வித்தியாசம்'ன்னு அவரை அடக்கினேன். ஹம்... இப்போ அந்த மனுஷன் பேரோட செல்வாக்கிலேயே மவன் ராமையா அரசியல்ல புகுந்து புறப்பட்டுத் தொடர்ந்து ஜெயிக்கிறான். சினிமாக்கொட்டாய்,  வீடு, காரு, தோட்டம், பூமின்னு பளபளப்பான பசையான வாழ்க்கைதான் இப்போ. ராமையாவைச் சுத்தி ஏவலுக்குங் காவலுக்கும் அடியாளுங்க மாதிரி எப்பவும் ஆறேழு பேரு கக்கத்திலே துண்டோட சுத்துறானுங்க...'

க்கீ! க்கீ! கூடடையும் கிளிகளின் கூக்குரல். அண்ணாந்து பார்த்துச் சிரிக்கிறார் வேலம்மா. ‘இந்த முறை எலக்க்ஷன்ல ராமையா தோத்துப் போனான். தன் தோல்விக்கு இந்த ஈசனூர்க்காரவுங்கதான் காரணம்; ஓட்டுப் போடாமக் கெடுத்துப்புட்டாங்கன்னு வன்மம் வளர்த்துக்கிட்டானே ராமையா! பிறகென்ன - இந்த சனங்க வேறென்ன பொன்னும் பொருளுமா கேட்டாங்க? தெருவிளக்கு வையுங்க, வெள்ளிப் புதூர் -

ஈசனூர் வழியா மினி பஸ் விடுங்கன்னு இந்த மாதிரி நாயமான தேவையைத்தானே அவுங்க கேட்டாங்க! பதவியிலிருந்தப்போ ராமையா இதையெல்லாங் காதிலயே போட்டுக்கல; காத்துலபறந்து மறைஞ்சு போச்சு ஈசனூர்க்காரவுங்க கோரிக்கையெல்லாம்! ராமையா மறந்ததைத் தேர்தல் வந்தப்போ இந்த மக்கள் மறக்கலையே! அவ்ளவுதான் – வேற கட்சிக்காரன் ஜெயிச்சுட்டான்! ஒரு வாரம், பத்து நாள் வீட்டுக்குள்ளே ஒரே கோபாவேசம்! மிளகாயக் கடிச்சவன் போல குதிச்சான். ‘இவங்களாலதான் நான் தோத்துப் போனேன். என்னோட

செல்வாக்கெல்லாம் மேலிடத்திலே நசுங்கிப் போச்சு.' - இந்தக் கோபந்தான் அவன் நெஞ்சில பாசியாப் படிஞ்சிடுச்சு பாவி மவனுக்கு!'

...

‘அதோ! குடிநீர்த் தொட்டியின் கீழே

சற்றுத் தொலைவில் குழாய்! கூடை, பையை மரத்தடியில் வைத்துவிட்டு கூஜாவை மட்டும் எடுத்துக் கொள்கிறார் வேலம்மா. குழாயைத் திறக்கிறார். முடியவில்லை. மீண்டும் இரு கைகளாலும் அழுத்தித் திறக்கிறார். பாம்புச் சீற்றத்துடன் புஸ்ஸெனப் பாய்கிறது தண்ணீர். கை, கால், முகம் கழுவிக் கொள்கிறார். இரு கைக் குழியமைத்து நீர் பிடித்து வாய் கொப்பளிக்கிறார். ஆறேழு கை குடித்த பிறகு கூஜாவைக் கழுவி அதிலும் நீர் பிடித்துக் கொள்கிறார். ‘ஹம்... தண்ணியென்னமோ நாத்தமெடுக்குதே!'

மரத்தடிக்குச் சென்று பையையும் கூடையையும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். நடையில் வேகம் கூடுகிறது . காலையிலேயே மருமகள் மரகதம் போனில் சொல்லிவிட்டாள் : ‘அத்தை! உங்க மகன் ப்ளஷரை எடுத்துக்கிட்டு ஆளுங்களோட மெட்ராஸ் போயிட்டாரு. நீங்க ஈசனூரில் இறங்கியதும் மெயின் ரோடு‘கொஞ்ச நேரம் நின்னு எதாவது ஆட்டோ கண்ணிலபட்டா,' கூடக் காசு தாறேன்'னு சொல்லிப் புடிச்சு நீங்களாகவே வீடு வந்துடுங்க.'

‘அட, மரகதம்! நான் நடக்காத நடையா? நான் வந்துருவேன். நீ உன் வேலையைப் பாரும்மா' என்று முற்றுப்புள்ளி வைத்தார். ‘ஹம்... தண்ணி குடிச்சும் தொண்டை கரகரங்குதே?' வேலம்மா இடுப்புச் சுருக்குப் பையிலிருந்து வெற்றிலையை எடுக்கிறார்.

காம்பும் கீழ்நுனியும் கிள்ளியெறிந்து, துண்டு போடப்பட்ட களிப்பாக்கில் சிறிது எடுத்து வெற்றிலையின் நடுவே வைத்து மடித்து வாயில் திணிக்கிறார். சிறிது சுண்ணாம்பை எடுத்து மிளகளவு உருட்டி, பந்து போலாக்கி வாயினுள் போடுகிறார். வெற்றிலை அதக்கல் பழசையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. கணவர் நல்லுசாமிதான் இந்த வெற்றிலைப் பழக்கத்தையே ஏற்படுத்திவிட்டவர்.

‘ரெண்டு பக்கமுமே பெரிய வசதியெல்லாம் கிடையாது. கையக ‘நிலத்தில் தான் மாடா உழைச்சாரு எம் புருஷன். பிறகு சிறுகச் சிறுக நிலம் நீச்சுன்னு வளர்ந்தாரு. கூடவே ஊர்ப்பஞ்சாயத்து,  கட்சி,  அரசியல்ன்னு புதுப் பகட்டுக்குப் பாதை மாறிப் போனாரு.

சொந்த உழைப்பு மறந்துபோய் பிறத்தியாரை அதட்டி, உருட்டி வேலைவாங்கக் கத்துக்கிட்டாரு. இல்லாத கெட்ட பழக்கமெல்லாம் வந்துடுச்சு. அத்தோட சாதி வித்தியாசம்கிற பேய் அவரைப் புடிச்சுகிச்சு. எதுத்துக் கேட்டா, ‘அரசியல்ன்னா எல்லாம்தான்'னு என் வாயை அடைச்சுடுவாரு. ஹம்... கொஞ்சம் வளப்பம் வந்துடுச்சுன்னா மனுஷனுங்க எப்பிடியெல்லாம் மாறிப் போறாங்க! காலம் உருவத்தை மட்டுமா மாத்துது; குணத்தையுங் கூடத்தானே...?'

         ...

சற்றுத் தொலைவில் முடிச்சு முடிச்சாக முந்திரிக் காடு வரவேற்கிறது. பச்சை விரிப்பு நடுவே வகிடெடுத்தது போல் செம்மண் ஊடுபாதையில் வேகநடை போடுகிறார் வேலம்மா. மனசும் வயிறும் கனத்துக்கிடக்கிறது. இனம் புரியாத மயான அமைதி புதிதாய்த் தோன்றி மனசில் சுழல்கிறது. இதோ, சந்தைப்பேட்டை திடலைத் தாண்டி அம்மன் கோவிலை ஒட்டித் திரும்பினால் சிறிது தொலைவில் வீடு. வந்தாயிற்று.

‘எப்பவும் மூடியிராத இரட்டைக் கேட்டுக் கதவு' சாத்தியிருக்கே? ப்ச... ராமையா பட்ணம் போயிருக்கிறார் காரு, மேலாளுங்க பொழக்கம் இருக்காதில்ல; அதான், மரகதம் வாசக் கதவைச் சாத்தி வைச்சிருக்கா போலருக்கு!' கதவைத் திறந்து உள்ளே செல்கிறார் வேலம்மா. ‘மரகதம்! இந்தா இதையெல்லாம் வாங்கி உள்ளே வை. பொன்னுத்தாயி பலகாரமும் ஊறுகாயும் குடுத்தனுப்பியிருக்கா.'

 ‘வாங்க அத்தை! பலகாரம், காபி கொண்டு வாறேன். சித்த அமருங்க' என்று கூடத்தில் தூணருகே பாய் விரிக்கிறாள். ‘ஊர்ல பொன்னுத்தாயி, புள்ளைங்கள்லாம் நல்லாருக்காங்களா?' - கேட்டபடியே சொம்பு நிறைய பானைத் தண்ணீர் தருகிறாள். காராசேவும் காப்பியும் கொண்டு வந்து வைக்கிறாள்.

 ‘பலகாரம்லாம் வேண்டாம்மா. காப்பித்தண்ணி மட்டும் குடு, போதும்; வயிறு எதோ கடாமுடாங்குது.'

காப்பி குடித்து டம்பளரைக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறார் வேலம்மா. மெதுவாக எழுந்து மாட்டுத் தொழுவத்திற்குச் செல்கிறார். கட்டிப் போட்டிருந்த செல்லாயி, வேலம்மாவைக் கண்டதும் வாலைச் சுழற்றித் தாவிக் குதித்து வரத் துடித்தது. ‘இந்தா வாறேன்' என்று மடியில் இருந்து வாழைப்பழத்தை எடுத்துத் தருகிறார். தாய்ப்பசு லட்சுமியோ தன் பங்குக்குப் ‘புஸ்... புஸ்' எனப் பெருமூச்சோடு வேலம்மாவை அமைதியாய்ப் பார்க்கிறது. கை நிறையக் கடலை உருண்டைகளை இரு ஜீவன்களுக்கும் தருகிறார். செல்லாயி தன் சிறிய வாலைச் சுழற்றி வீசியபடி வேலம்மாவின் கால்களைப் பாசத்துடன் முட்டுகிறது.

‘இரு இரு செல்லம், தோட்டத்துக்குக் கூட்டிப் போறேன்' என்றபடி முளைக்கம்பிலிருந்து கயிற்றை அவிழ்க்கிறார். பாய்ந்தோடித் தன் தாயின் மடியில் முட்டி முட்டிப் பாலருந்த முயல்கிறது. ‘ஏய் , போதும் வா! ‘ அவ்வளவுதான், செல்லாயி வேலம்மாவின் கால்களை ஒட்டிக் குதித்து நடக்க ஆரம்பித்தது. ஒரு வாரமாக இந்தப் பாசப்பிணைப்பின் இல்லாமையை இன்று செல்லமாய்த் தீர்த்துக் கொள்ள முயலும் செல்லாயியின் கழுத்தில் வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கிறார் வேலம்மா. வீட்டினை ஒட்டிப் பின்பக்க வேலியை அடுத்து காய்கறித் தோட்டம். தினமும் மாலை கன்றுக்குட்டியோடு ஒரு நடை தோட்டத்திற்குச் சென்று சுற்றி நடந்து திரும்புவார்.

வேலித் தட்டிக் கதவைத் திறக்க முயல்கிறார். தோட்டத்தில் சற்றுத் தொலைவில் புடலைப் படல் அருகே தோட்டக்கார சண்முகம் குடி போதையில் தன் மனைவியிடம் உரத்துப் பேசிச் சண்டையிட்டுக் கொள்வதைக் கேட்டதும் வேலம்மா அதிர்கிறார். அப்படியே நின்றுவிடுகிறார். ‘ஏய் மங்கா, நீ சொல்றதை நான் கேட்கணுமா? என்ன நீ சொல்றது? ஹம்... தெரியுமில்ல சேதி? சொல்லிவச்ச மாதிரி ஒட்டுமொத்தமா அந்த ஈசனூர் சனங்க அத்தினி பேரும் நம்ம ஐயாவுக்கு ஓட்டுப்போடாம ஏமாத்தினானுங்கள்லே... ஹம்... அவனுங்களும் அவங்க சாதியும்... த்தூ! அதான், அதான்... நாங்க போயி அவுங்க ஊரு குடிதண்ணித் தொட்டியிலே நரகலைக் கொட்டிக் கலந்துட்டு வந்தோம்...'

மங்கம்மா பொங்கி எழுந்து அலறுகிறாள்: ‘அடப் பாவி! நாசமாப் போறவனே! நீ இந்த அக்குருமம் செய்யலாமா?' வேலம்மாவுக்கு அடிவயிற்றில் நெருப்பாய்க் கொதிக்கிறது. சடாரென தட்டிக் கதவைத் திறந்து, சண்முகத்தை நோக்கி ஓடி வருகிறார். இரு கரங்களாலும் சண்முகத்தைப் பிடித்துத் தரையில் தள்ளுகிறார். அவனது கழுத்தில் தொங்கிய சிகப்புக் காசித் துண்டால் அவனது கழுத்தைச் சுற்றி இறுக்குகிறார்.

‘அடப் பாவி! குடிதண்ணியிலே மலமா? என்னடா சொல்ற? மனுஷனாடா நீ?' கொஞ்சமும் இறுமாப்புக் குறையாமல் சொல்கிறான்: ‘ஆமாந் தாயி! நாங்க நாலு பேரும் சேர்ந்துதான் இதைச் செஞ்சோம். என்ன தப்பு இதிலே?'

‘நாயே! யார் சொல்லி இதைச் செஞ்சீங்க?'

‘வந்து... வந்து... நாங்களேதாம்மா...'

‘பொய் சொல்லாதடா! ராமையா சொன்னானா?'

‘ஐயோ! வந்து... இல்லம்மா... வந்து...'

‘சே! அநியாயம்! அக்கிரமம்... நீயெல்லாம் மனுஷனாடா?'

சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து மரகதம் ஓடி வருகிறாள்.

மரகதத்திடம் மங்கம்மா சண்முகம் சொன்னதைப் பிளந்து கூறி அழுதாள்.

‘அத்தை,. உள்ள வாங்களேன்... சம்முவம்! நீங்க போய்க் கிணத்து மோட்டார் போடுங்க!'

வேலம்மாவை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் செல்லமுயல்கிறாள் மரகதம். நகர மறுத்த வேலம்மா மரகதத்தை வேதனையுடன் பார்க்கிறார்.

‘அத்தை, என்னமோ தப்புத்தண்டா நடந்திருக்கு. உங்க மகனும் சேர்ந்துதான் எதோ செஞ்சிருக்கணும். முதல்ல உங்களை ஊருக்கு அனுப்பி வைச்சுட்டார். ஒரு வாரமாகவே வீட்டில எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாரு. மொட்ட மாடியிலே அப்பப்ப ஆளுங்களோட கூடிக் கூடிப் பேசினாங்க. ரெண்டு நாள் முன்னாடி திடீர்னு மெட்ராஸ் போய்ட்டாங்க. இப்ப என்னடான்னா சம்முவம் இப்பிடிச் சொல்றான்... ஐயோ! என்ன கேடு காலமோ?'

‘என்ன சொல்றே மரகதம்? அந்த மக்க என்ன தப்பு செஞ்சாங்க? என்ன பாவம் செஞ்சுதுங்க அதுங்க? மனுஷனுக்கு மனுஷன் பேதம் பாக்கலாமா? ஒரு விஷயம் சொல்லட்டுமா? நான் சாயங்காலம் அந்த ஊரு குடிநீர்த் தொட்டித் தண்ணியைத்தான் குடிச்சேன். வயிறே சரியில்லே எனக்கு...'

கலவரத்துடன் அரற்றுகிறாள் மரகதம்: ‘ஐயோ! அத்தை! ஒண்ணுமே புரியலையே!'

 ‘எப்பிடி மரகதம் என் வயித்திலே இப்பிடி ஒரு கேடுகெட்ட பய பொறந்தான்? வன்மமே வடிவானவனா இருக்கானே ராமையா? மனுஷனுக்கு மனுஷன் என்னடா பேதம்? அவங்க மேலே ஏன்டா உனக்கிந்த வன்மம்? ஏனிந்தக் குரோதம்?'  பொங்கியெழுந்த வேலம்மா திடீரெனத் தன் அடிவயிற்றைப் பிடித்துக் குமட்டிக் கொண்டு வாந்தியெடுத்துத் தரையில் சரிந்தார்.

‘அம்மா! ம்மா!' தொழுவத்திலிருந்து லட்சுமியும் செல்லாயியும் கலங்கியபடி உரத்துக் குரல் கொடுக்கின்றன. 

                ...

மறுநாள் விடிகாலை. ராமையா வீட்டு வாசலில் சங்கும் சேகண்டியும் சோகமாய் ஒலிக்கின்றன.   

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com