ஓவியம்
ஓவியம்ரவி பேலட்

விடியும் முன்

மேற்கின் அடம், பகலை விழுங்கி கிழக்கையும் சேர்த்து இருட்டியிருந்தது. பட்டாசு ஆலை வேனிலிருந்திறங்கிய குமரிகள் மேலுக்கு ஊத்திக் கொண்டு வாசத் தெளித்து விட்டு, தத்தம் வேலைகளை நெருக்கி முடித்திருந்தனர்.. வழக்கமாக இந்நேரத்துக் கெல்லாம் பிடுங்கப்பட்டு விடும் மின்சாரத்தை எண்ணி, அன்றாட வேலைகளெல்லாம் எட்டு, எட்டரைக்குள்ளாக முடித்துவிடுவர். அதற்குமேல் முடிந்தவரை இருட்டும், அந்தந்த வீட்டு முற்றத்திலோடும் வாருகால் நாற்றமும் எட்டாத் தூரத்தில், நிலா வெளிச்சத்திலமர்ந்து உறவும் இரவும் பசியாறும்.

தேர்தல் பிரசாரக் காலமென்பதால் கடந்த ஒருவாரமாய் மின்வெட்டென்பதேயில்லை. இல்லாவிட்டால் வடக்கேயுள்ள

சொக்கன்குளத்து விளக்கு வெளிச்சமருந்திதான் தெக்கஞ்சேரி இரவுகள் தாகந்தணியும். இரண்டு ஊருக்குமிடையிலிருக்கும் கருவேலங்காட்டைப் பிளந்து கொண்டு, தெக்கஞ்சேரிக்குத் தெரியும் வெளிச்சம்

சொக்கன்குளமென்றால், சொக்கங்குளத்திற்கு வரும் நாற்றம் தெக்கஞ்சேரி. கிட்டத்தட்ட ரெண்டாள் கூப்பிடு தூரம்.

தெக்கஞ்சேரியின் சக்கம்மா கோயிலில் சேரிப் பெருசுகளின் ஆடுபுலியாட்டம் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது. தெருவிலிருந்த ஒருசில வீடுகளில் நிலாச்சோறு ஆரம்பமாகியிருந்தது. முச்சந்தியின் குறுக்கே வேப்பமரத்தடியில் கட்டமிட்டு, குழந்தைகளெல்லாம் பாண்டியாடிக் கொண்டிருந்தனர். அந்த ரெட்டை சடைக் குழந்தையின் ஒற்றைக் கால் தாவலில் அவர்களைக் கடந்து போன அந்தக் கருப்புத் தெருநாய் ஒருவிநாடி பயந்து ஒதுங்கியபடி தன் வழியே நடந்து போய் வேப்பமரத்தின் பக்கமாய் வைக்கப்பட்டிருந்த நாற்பதடி உயரக் கட்டவுட்டில், மண்பானைச் சின்னத் தோடு, 'வீட்டுக்கொரு கழிப்பறை, வீதிதோறும் குடிநீர்' என்றிருந்த வாக்குறுதியின் மேலே கையைத் தூக்கியபடி சிரித்தமுகமாய் நின்ற ஆளுங்கட்சி எம்எல்ஏவின் காலை முகர்ந்து பார்த்துவிட்டு காலைத் தூக்கிச் சிறுநீர் கழித்ததைப்

பார்த்ததும், வாசலில் முட்டியைக் கட்டியபடி அமர்ந்து அப்பாவுக்காகக் காத்துக் கொண்டிருந்த கனகுக்குச் சிரிப்பாயிருந்தது. அவள் அப்பா முனியன் இந்நேரம் இங்கு இருந்திருந்தால் அந்த நாயை உண்டு இல்லையெனச் செய்திருப்பாரென்று தோன்றியது அவளுக்கு.

கரண்ட் போகாததால் நேரமானதே தெரியவில்லை. அதற்குள் தெக்கஞ்சேரிக் குமர்களெல்லாம் சேர்ந்து கனகைத் தேடி வந்து விட்டிருந்தார்கள்... ‘என்னப்ள கனகு! போவோமா? வெரசாப் போயிட்டு வந்து எங்கம்மைக்கு மாவரைச்சுக் குடுக்கணுமாம்... அரிசிய ஊறவச்சிட்டு வாசல்லயே உக்காந்துட்டிருக்கா...'

‘இன்னும் இந்தாளு கடையடச்சிட்டு வரக்காணோம்ப்ள... வந்தா

சோத்த வச்சிக் குடுத்துட்டு போலாம்ணு இருந்தேன்... அவசரம்னா நீங்க வேணா போறீங்களா? நான் செத்த நேரம் இருந்து பாத்துட்டு வாரென்...!'

‘செத்த நேரம் பொறுத்து இருட்டுக்குள்ள எப்டிப்ள போவ? உங்கய்யா இப்பைக்குள்ள வராது... கவுன்சிலர் ரைஸ்மில்லுக்குப் போயி முழுசா ஏத்திட்டுதான் வரும்... வள்ளி வரும்போதே அவ டார்ச்ச கொண்டுக்கிட்டு போயிட்டு அதுக்குள்ள வந்துரலாம் வாப்ள...'

‘ஆமா கனகு! தேனு வேற ஆறு மணியிலயிருந்து அவசரம்னுகிட்டிருந்தா...வா பசக்குனு போயிட்டு பசக்குனு வந்துருவம்...' கனகுக்கும் அதுதான் சரியெனப்பட்டது...  வீட்டுக் கதவை ஒருச்சாய்த்துவிட்டு, வள்ளியின் டார்ச் வெளிச்சத்தில் குமர்களோடு குமராக நடக்க ஆரம்பித்தாள்.

சொக்கங்குளத்தின் ஊர் எல்லைக்கு வெளியில் சலூன் கடை வைத்திருக்கும் முனியன் வழக்கமாக கடையடைத்துவிட்டு எட்டுமணிக் கரண்டுக்கு முந்தி விடுவார். இப்போது தேர்தல் நெருங்குவதால் ஆளுங்கட்சிக்கு பேனரிலிருந்து, சீரியல் கட்டுவது வரைக்கும், போதாமைக்கு கவுன்சிலர் தணிகாச்சலத்துக்கு எடுப்பு வேலையெல்லாம் முடித்து

ஓசிக் குடி குடித்து விட்டு, வீடு சேற மணி பத்தாகிவிடுகிறது. நாளை எம்எல்ஏ ராஜாமணி வருவதால் காலையிலிருந்து முனியன் கடையைக் கூடத் திறக்காமல் கட்சி வேலையாக அலைந்து கொண்டிருக்கிறான். அதுவும் எம்எல்ஏ தெக்கஞ்சேரியில் இறங்கி ஏதோ ஒரு வீட்டில் அமர்ந்து காலை உணவு சாப்பிட இருக்கிறாராம். அந்த விருந்தோம்பலுக்கு தங்கள் வீட்டைத் தேர்வு செய்யச் சொல்லி இரண்டு நாட்களாய் கவுன்சிலரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான் முனியன்.

‘ஏன்டித் தேனு! அப்டியென்னடி அவசரம் ஒனக்கு? நீதான் கல்லுவீட்டாவுசுக் கக்கூசுல போயிக்குவேன்னு பவுத்தக் கொழிப்பியே என்னாச்சாம்?‘

‘அத ஏம்ப்ள கேக்க? கூரையில்லாத கக்கூசக் கட்டிவிட்டு யோக்கியனாட்டம் யா...ருக்கவசரம்னாலும் போயிக்கங்கன்னு சொல்லிட்டு, யா...ரு உள்ள போனாலும் எந்திருச்சுப் போயி கல்லுவீட்டு மெத்துல போயி நின்னுக்கிறான் பலவட்ரப்பய...'

‘அவங்கண்ணுல புத்துப் பெறப்பட, வௌக்கமாத்தெடுத்துச் சாத்தி விட்டுட்டு வரக்கூடாது நீ?'

‘என் வௌத்துக்கு அவன மேக்கட்ட உடயுந்தண்டியும் நொறுக்கிருப்பேன், சொக்கங்கொளத்தானாப் போயிட்டானே! இன்னுங் கொஞ்சப் பொம்பளைக அவசரத்துக்கு ஏலாம அசிங்கம் போய்த் தொலையுதான்னு போயிட்டுத் தண்ணியூத்திவிட்டுத்தான் வாராளுக... என்ன செய்ய? அவன் வீட்டுப் பொம்பளைகளுக்கு இப்பிடி வந்தாத்தான அவங்குண்டி காந்தும்..'

‘அதெல்லாம் காத்துல விட்டுட்டு போயிருவான்த்தா, ஈனப் பிறப்புப் பொறந்த அவனெல்லாம்... அவன் பேச்ச விடுங்க எனக்குப் பத்திக்கிட்டு வருது...'

‘ஆமாண்டி! இவ பாட்டுக்க குத்த வச்சிட்டு வேலியப் பத்த வச்சிறாம...' குளிர்காற்றில் வேலிக்காட்டு இருட்டும் அவர்களோடு சேர்ந்து குலுங்கிச் சிரித்தது. 

‘ஏன்டி தேனு! அந்த கல்லுவீட்டுக்காரன் மகளுக்குப் பாத்த மாப்ள வீட்ல மொத்தம்

அஞ்சு கக்கூசாமே? நெசமாவாடீ?'

‘நானா அங்க போயி கழுவி விட்டு வாரென்? எனக் கென்னடி தெரியும்?'

‘அந்த வேல கெடச்சாக் கூட தேவலதாம்ப்ள... கழுவுற சாக்குல நாமளும் அங்கயே போய்க்கலாம்...'

‘அந்தக் .....மயன்  அங்கயும் கேமரா வச்சு வாட்ச் பண்ணப் போறான்டீ'  மீண்டும் சிரித்து தேனு கூறியதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.

‘அத விடுங்கடீ! ஏம்ப்ள கனகு! நாளைக்கு எம்எல்ஏ ஒங்க வீட்டுக்குத் தான் சாப்பிட வாராராம்? பொழுதிருட்ட எங்கய்யா வீட்டுல

சொல்லிட்டிருந்தாரு? ஆமாவா?'

‘ஆமா! நாம ஆக்கி போடறதத்தான் சப்புக் கொட்டித் தின்னுட்டு போவப் போறாரு... இவ ஒருத்தி...  சாப்டறதுன்னா அவருக்கான

சாப்பாடு, தட்டு, டம்ளர், தண்ணி மொதக்கொண்டு அவுங்காளுங்களே எடுத்தாந்துருவாங்க. எல்லாம் மண்சட்டியாத்தான் இருக்கணுமாம்... அவர் சின்னம் அதுதான...! பெறவு தலைவர் வாரதுக்கு ஒரு மந்நேரம் முன்ன, தெருக் கூட்டி குப்பையள்ளுறவுக யாராது வந்து அந்த வீட்டை சுத்தப்படுத்தி சென்டுல்லாம் அடிச்சி ரெடி பண்ணி வச்சிருவாங்க. எம்எல்ஏ நடந்து வந்து நிக்கிற தரை மொதக்கொண்டு தரைவிரிப்பு விரிச்சு விட்ருவாங்களாம். அவர் வந்து இவங்களோட சாப்பிட உக்காந்த மாரி ஒரு போட்டா, நம்ம வூருலயே கருத்த பொம்பள மண்சட்டியில இருந்து பரிமாறினாப்ல ஒரு போட்டா, வீட்டாம்பள தோள்ல கைபோட்டுச் சிரிச்சு பேசின மாதிரி ஒரு போட்டா மட்டும் எடுத்துக்குவாரு. அடுத்த ஒரு வாரத்துக்கு எல்லா பேப்பர், நீஸ்லயும் இதான் செய்தியாயிருக்கும்...'

‘இவனுங்க பண்ணுற எல்லாம் வௌம்பரத்துக் குத்தாம்ப்ள...  இப்பிடிப் பலபொறப்புப் பொறந்த பயலுக்கு முன்ன நம்ம பொறப்புல்லாம் தேவலதாம் போல...‘

‘அட அதில்லப்ள... நாளைக்கு வீட்டுக்கு வந்து எம்எல்ஏ கிட்ட அறிமுகமாயிட்டா, நாளப்பின்ன இவ கலியாணத்துக்குப் போயி பத்திரிக்க குடுத்து கூட்டியாந்துரணும்னு கனகவுகய்யா சொல்லிக்கிடாராமே!‘

‘சமஞ்ச குமர் வீட்ல ஒத்தியில இருக்காளே, இப்டிக் குடிச்சிட்டு இன்னும் வீடடையாம இருக்கமேன்ற நெனப்புக் கூட இல்லாம, கச்சி, தலைவருன்னு சுத்திக்கிருக்கவரு, அந்தத் தலைவரக் கூட்டியாந்து அவர் முன்ன இவளச் சீராட்டிக் கலியாணம் பண்ணிக் குடுத்து அரம்மனைக்கா அனுப்பிரப்போறாரு?

சூசாண்டு வாப்ள'

‘அதென்னப்ள அப்படிச் சொல்லிட்ட?  அவுகய்யா முடி வெட்டும் போதே, நரையில்லாத, ஏறாத நெத்தியிருக்குற ஆளுங்க பேரெல்லாம் சிட்ட போட்டு எழுதி வச்சிருக்காராம்.. கண்டிப்பா அதுல ஒண்ணு குலுக்கல் போட்டுதான் இவளக் கட்டிக் குடுப்பாரு பாரு...' எல்லோரும் கொல்லெனச் சிரித்தபடி ஓடையை அடைந்ததும் ஒவ்வொருவராய் எட்டிப் போய் இருளுக்கும் தெரிந்திடாமலமர்ந்து கொண்டதும் வள்ளி டார்ச்சை அணைத்துக் கொண்டாள்.

தெக்கஞ்சேரிக்கான கழிவறைக்கு இதுவரை

விடியவேயில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் உறுதிசெய்யப்பட்ட இந்த வாக்குறுதி இலவசங்களின் எண்ணிக்கையின் இடையே மறைந்து போய்விடும். மறந்துபோய் ஒப்புதல் கிடைத்தாலும் அது கதர்சட்டைப் பைகளை நிரப்பத்தான் ஆகும். ஊரையொட்டிய சேரி சேரியாகவேயிருப்பதில்தான் ஊருக்கு அத்தனை பிரியம் போலும்... அதுபோகத் தீராத பிரச்சனைகளிருப்பதால் தான் அந்தந்த பகுதியில் அரசியல் வியாபாரம் அமர்க்களப்படுகிறது. நாமும் பல்லாண்டு காலமாய்த் தீராத பிரச்னைகளைத் தீர்ப்பவர்களைத் தானே தலைவர்களாய்க் கொண்டாடுகிறோம்! அத்தனையாண்டுகளாய் அதைத் தீர்க்காமல் ஏமாற்றியவர்களை மறந்துவிடுகிறோமே!

தெக்கஞ்சேரிப்பெண்கள் எத்தனை அவசரமானாலும் விடியும் முன்னும் இருட்டும் வரையும் காத்திருந்துதானாக வேண்டும். பெண்களின் அவசரம்தானென்பதால் ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆண்கள் அலட்டிக் கொள்ளாததால் வழக்கம்போல் பெண்களும் அடக்கிக்கொள்ளப் பழகிவிட்டிருந்தனர்.

‘என்னடி! எவ சத்தத்தயுங்காணும்? இருக்கீங்களா இல்ல நாலுநா முன்ன பேசி வச்சு விட்டுட்டு ஓடின மாதிரி ஓடிட்டீங்களா?'

‘ம்ம்ம்... இருக்கோம் இருக்கோம்... வந்து உக்காந்த எடத்துல என்னடி பேசச் சொல்ற? அரவம்போடாம முடிச்சிட்டு எந்திடீ...'

‘இருட்டுல பேச்சுச் சத்தமுங் கேக்காம பயத்துல வர மாட்டிக்குப்ள... '

‘சுமதிக்கா இப்படி இருட்டுல வந்து பாம்பு கடிச்சு செத்ததுலயிருந்து எனக்குங் கூட இங்குட்டு வந்து ஒக்காரவே பயந்துதாம்ப்ள வருது...'

‘ரொம்பப் பயமாயிருந்தா முத்துமதினியாட்டம் செஞ்சிரேண்டி...'

‘ஏன் என்ன செஞ்சாளாம், முத்துச் சித்தி?'

‘சுடலகோயில் திருவிழா கெடாவெட்டுல போயி,

சட்டிக் கறியத் தின்னுட்டு விடிய விடியத் தூங்காம கூத்து பாத்துட்டு வந்ததுல சூட்டக் கௌப்பி விட்டிருச்சு போல... விடியுமுன்னமே ரெண்டு மூணுதரம் போயிட்டு வந்துட்டாளாம்... நிக்காம போவுது... விடிஞ்சு ஊரெல்லாம் கௌம்பி பாடு சோலிக்குப் போவுது, இவளுக்குத் தன்னால அடக்க முடியல..'

‘பெறவு???'

‘பெறகென்ன செய்ய? அண்டவும் முடியாம ஒண்டவும் முடியாம, வீட்டுலயிருந்த பழைய மண்சட்டியில போயி, சட்டிவாயில துணியக் கட்டி ஒடமரம்

தாண்டிக் கொண்டுபோய் வச்சிட்டு வந்துட்டா...'

‘ச்சீய்... கருமம் கருமம்...'

‘அதோட விட்டதா அந்தக் கருமம்? பெத்து வச்சிருக்காளே ஊருக்கடங்காத வானரம் சின்னு.... கவட்டையுங் கையுமா ஊரெல்லாஞ்சுத்தி வரையில, நம்ம வீட்டுச் சட்டி இங்க கெடக்கேன்னு கையோட எடுத்துட்டு, முச்சந்திக்கு வரும்போதே, 'எம்மா நம்ம சட்டி'னு கத்திகிட்டே ஓடியாந்து வாருகா தடுக்கிக் கீழ விழுந்து சட்டி நொறுங்கிப் போச்சி...' சொல்லிக் கொண்டே குத்தவச்சபடியே தேனும் மற்ற குமர்களும் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்ததில் தூரமாய்க் கேட்ட காலடிச் சத்தம் நெருங்கி வரும் மட்டும் கவனியாதிருந்துவிட்டனர்.

தடதடவென அவர்களை நெருங்கிய கூட்டம், கையில் வைத்திருந்த டார்ச் லைட்டுகளை அடித்ததும் பதறிப்போய், கத்தியபடியே எழுந்து நிமிரமாட்டாமல் குனிந்தபடியே ஒவ்வோர் வேலிமரத்தில் மறைய முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

சொக்கன்குளத்திலிருந்து வெள்ளையுஞ் சொள்ளையுமாய் வந்தோரின் கையிலிருந்த டார்ச் லைட்டுகள் ஏற்கனவே அந்தந்தக் கருவேலங்களை அடையாளங்கண்டு வெளிச்சமிட்டிருந்தன. சத்தங் கேட்டதும், என்னவோ ஏதோவென தெக்கஞ்சேரிக்காரர்களும் ஓடையை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தனர். அரைப் போதையில் முனியனும் வந்து சேர்ந்தான்.

‘ஏண்டி பலவட்ர முண்டைகளா! நாளைக்கு எம்எல்ஏ ஊருக்கு வாராருன்னு தெரியும்ல... இன்னிக்கு ஒரு ரவைக்கு அடக்கிட்டிருக்க முடியாதோ ஒங்களுக்குலாம்? வம்பாடு பட்டு கூலிக்கு ஆளப் போட்டு இந்தப் பீக்காட்ட சுத்தம்பண்ணி வைக்க, நீங்க நைட்டோட நைட்டா வந்து தண்ணி தெளிச்சிக் கோலம் போட்டுட்டு இருக்கீகளோ?' கவுன்சிலர் தணிகா பொறிந்து தள்ளினான்.

‘ஐயா! ஐயா! அம்ம புள்ளைகதான் சாமி... வழக்கமா ஒதுங்குற எடந்தானேன்னு வந்துருச்சுக போல... அதுகளும் அவசரத்துக்கு வேறெங்க ஒதுங்குங்க?' கட்சிப் பழக்கத்தில் வக்காளத்து பேசினான் முனியன்...

‘எது நம்ம புள்ளைகளா? அம்ம புள்ளைகதான்னு அவசரத்துக்கு நானும் உன் வீட்டுக்குள்ள ஒதுங்கிக்கவா? நீ வேணா ஒருநாளைக்கு வெளிய படுத்துக்க...'

‘என்னய்யா இப்டி பேசுதீக...'

‘பெறவு எப்டி பேசுறது? விடிஞ்சா தலைவர் சேரிக்குள்ள வராருனு தெரியுமில்லடா... இருட்டுக்குள்ள இந்த அவுசாரி முண்டைக பேண்டுட்டு போனத காலையில வந்து நான் அள்ளிப் போட்டுட்டிருக்கணுமோ...?'

‘அப்ப இத்தன வருசத்துல ஊருக்கு ஒரு பொதுக்கக்கூஸ் கட்டிவிட்டிருந்தா இந்தப் பிரச்னையே இருந்துருக்காதுல்ல?'

‘எவன்டா அது ஆம்பள, கூட்டத்துக்குள்ள இருந்து? தெம்பிருந்தா மொகத்துக்கு முன்ன வந்த பேசுடா...'

எந்த பதிலும் வரவில்லை...

‘அத்துவானக் காட்டுக்குள்ள வெளிக்குப் போவும் போதே பொட்டச்சிக சிரிப்புச் சத்தம் சொக்கங்குளம் வரக் கேக்குது... இதுல மற..வா கட்டடங் கட்டிக் குடுத்துட்டா இவளுக அடிக்குற கூத்த ஊருக்குள்ள உக்காந்து நாங்க கேட்டுட்டிருக்கவா?'

ஒதுங்கி நின்றிருந்த பெண்களுக்கு ஒவ்வொரு வார்த்தையைக் கேட்டும் உடம்பெல்லாம் கூசியது...

‘நல்லா கேட்டுக்கோங்க! இங்குள்ள அசிங்கத்தப் பேண்டவளுக அள்ளுவாளுகளோ, இல்ல வக்காளத்து வாங்கிட்டு வந்த ஆம்பளைக அள்ளுவீங்களோ தெரியாது... விடியுங்குள்ளயும் எடம் சுத்தமாகல...! என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...'

பதிலுக்குக் காத்திராமல் உடன் வந்த கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு திரும்பினான் கவுன்சிலர் தணிகா...

தூக்கமில்லா இரவின் இருளை யோசித்தே  விடித்தார்கள் தெக்கஞ்சேரியார்.. அவர்களது காலை விடிந்ததும் முனியனுக்குத்தான் போன் வந்தது... ஓடை நிலவரத்தைக் கேட்டுவிட்டு, முனியன் ஏற்கெனவே கேட்டிருந்தபடி  தலைவர் அவன் வீட்டில்தான்  சாப்பிடுவதாக முடிவாகியிருந்தது. முனியனும் ஆக வேண்டியதைக் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தான்.

அடுத்த ஒரு வாரத்திற்கான தேர்தல் செய்தியைப் படம்பிடிக்க, செய்தியாளர்கள் கேமிரா, மைக் சகிதம் தெக்கஞ்சேரியைப் படையெடுத்திருந்தனர். வழக்கம் போல் சொன்ன நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாகத்தான் தலைவர் வந்து  சேர்ந்தார். காரிலிருந்து இறங்கி ஓடை, வேலிக்காடைத் தாண்டி தெக்கஞ்சேரியினுள் நுழைந்தார். முச்சந்தியில் வரிசையாக துணியால் வாய் கட்டப்பட்ட மண்பானைகள் வைக்கப்பட்டிருந்தன.  எம்எல்ஏ, கவுன்சிலர் போன்றே அந்தக் கருப்புத் தெருநாயும் சந்தேகத்தோடு வந்து மண்பானைகளை மோப்பமிட்டுவிட்டு பக்கத்தில் கட்டவுட்டிலிருந்த தலைவர் காலில் சிறுநீர் கழித்தது. அதைப் பார்த்து விட்டு ‘ஹேய்.... ‘ என்ற முனியனின் சிக்னல் கிடைத்ததும் சின்னுவின் கவட்டையிலிருந்து வெளியேறிய கல் குறி தவறாமல் தலைவர் காலடிப் பானையில் பட்டு உடைந்தது.

ஒட்டுமொத்த மீடியா முன்னிலையில் கவுன்சிலர் மற்றும் எம்எல்ஏவின் வேட்டிக்கறை கழுவப்பட்ட செய்தி நாடெங்கும் தீயாய்ப் பரவியதும் அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்ட தொகுதியாக அறிவிக்கப்பட்டது...

ராஜேஷ் ராதாகிருஷ்ணன் (சு9), ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. கருப்பட்டி மிட்டாய், கிடா வெட்டு  ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com