எஸ். எஸ். தென்னரசு
எஸ். எஸ். தென்னரசுரவி பேலட்

சிறப்புக் கட்டுரை: சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு!

திராவிட இயக்க எழுத்தாளர்களில் தனித்து நின்ற எஸ். எஸ். தென்னரசு நினைவு நாள் இன்று.

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் இவ்வளவு காலம் நீடித்திருக்கும் வகையில், இன்னும் இன்னுமாய் எதிர்காலத்துக்குமான அரசியல் பயிற்றுநர்கள் உருவாகும் வகையில் மிக வலுவான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.

சமூக நீதிக் கண்ணோட்டத்தில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கி, இந்த வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என திராவிட இயக்கத்தின் நீட்சியாக, எதிர்கால முகமாக அறியப்படும் உதயநிதி ஸ்டாலின் வரை எண்ணற்ற தலைவர்களை தமிழ் சமூகம் கண்டுள்ளது.

நீதிக்கட்சி முன்னோடிகள் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவரின் தொடர்ச்சியாக முத்தமிழறிஞர் கலைஞர் என தமிழ் நிலத்துக்கு அரசியல் ஊட்ட, எழுதியும் பேசியும் வளர்த்த வரலாற்றில், எண்ணற்ற முன்னோடிகளில் தனித்து அடையாளம் காட்டக் கூடியவர் எஸ் எஸ் தென்னரசு.

அரசியல் எல்லை

நூற்றாண்டு கண்ட சமூக சீர்திருத்தவாதியாக பெரியார் உயர்ந்து நிற்கிறார் எனில், அவரின் சிந்தனையை உள்வாங்கி தேர்தல் அரசியல் ஜனநாயகத்தை திராவிட சமுதாயத்தின் அரசியல் பாதையாக நிறுவியவர் அண்ணா. அந்த அரசியல் பாதையை அதிகாரத்தின் வழி நிலை நிறுத்தியவர் கலைஞர். அரசியல் அதிகாரத்தை நோக்கிய இந்த பயணத்தில், மக்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றிலும் மாற்றம் நிகழ்த்த திராவிட இயக்கத்தினர் மிகப்பெரிய மிக நுட்பமான வேலைகள் செய்தனர்.

பூகோள அமைப்பில், மொழி ரீதியிலான எல்லைக்குள் நின்று அரசியல் செய்த திராவிட இயக்கம், மொழி சார்ந்த பல்வேறு வகைப்பட்ட இலக்கிய வடிவங்களை கையில் எடுக்கிறது.

தெருக்கூத்து, நாடகம், பேச்சு, எழுத்து , வளர்ந்து வந்த திரை தொழில்நுட்பம் என எல்லா வடிவங்களிலும் அரசியல் பேச தொடங்கினர். அப்படியான நீண்ட மரபில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பங்களிப்புகள் அதற்கு முன்னர் இருந்த கலை வடிவங்களை உடைத்து எறிந்தது என்றால் , அந்த வரிசையில் எஸ். எஸ் தென்னரசு இடம் தனித்து தெரியக்கூடியது.

மறுப்பாளர்களும் ஏற்கும் எழுத்து

திராவிட இயக்க இலக்கியங்களை மறுக்கும் விமர்சகர்கள்கூட எஸ். எஸ் தென்னரசுவின் படைப்புகளை தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்கின்றனர் எனில் கலை நுட்பங்களில் அவர் தேர்ந்தவராக நிற்பதை கவனிக்க முடியும்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் அண்ணா , கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்க ஆளுமைகள் எழுதிய சிறுகதை, நாவல், புதினம் என்கிற வடிவங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதவை, பிரச்சாரத் தொனி தூக்கலாக இருப்பவை என்கிற விமர்சனத்தை கலை இலக்கிய விதந்தோதிகள் வைக்கலாம். வைக்கின்றனர். அதே காலகட்டத்தில் திராவிடச் சிந்தனையை அடியொற்றி இயங்கிய தென்னரசுவின் படைப்புகளுக்கு மட்டும் அவர்கள் வேறொரு அளவுகோல்களை வைப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் இன்றளவும் அவருக்கு வழங்கப்பட்ட சிறுகதை மன்னன் என்கிற அடைமொழி நிலைத்து நிற்கிறது.

திராவிட இயக்க கலை இலக்கிய மறுப்பாளர்கள், அதே திராவிட இயக்கத்தில் இருந்து உருவான ஒரு இலக்கியவாதியை சிறுகதை மன்னன் ஏற்றுக் கொள்வது விந்தையான போக்கு. அப்படியெனில் தென்னரசு எந்த இடத்தில் வேறுபடுகிறார் என பார்ப்பது அவசியம்.

மனிதர்களே கதைநாயகர்கள்

அவரின் எழுத்துப் பிரதிகள் அதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. தனது படைப்புலகத்தை தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களிடமிருந்து உருவாக்கிக் கொள்கிறார். அந்தப் படைப்புலகம் கிராமப்புற எளிய மக்களின் பின்னணியை கொண்டதாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியதாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்ட மக்களை பிரதி எடுக்கிறார்.

'பெண் இல்லாத ஊரிலே' போன்ற அரசியல் உள்ளடக்கம் சார்ந்தவை இல்லாமல், 'சுமங்கலி' போன்ற அன்றாட ஜீவனின் வாழ்க்கைப் பாடுகளையும் பேசினார். அவரின் படைப்புகள் வெகுசான ரசனை சார்ந்ததாக அமைந்தது. அதேநேரத்தில் அவை யாவும் பகுத்தறிவு கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட எல்லைகளுக்குச் சென்றதில்லை .

மயிலாடும்பாறை, தங்கச்சிமடம், செம்மாதுளை, சுமங்கலியின் சுய சரிதம், ஆனந்த பைரவி, சந்தனத்தேவன், நகமும் சதையும் என அவரது நாவல்களும் வெகுசன ரசனை கொண்டவையாக இருந்தன.

கலைஞருடன் எஸ்.எஸ்.தென்னரசு
கலைஞருடன் எஸ்.எஸ்.தென்னரசு

யாரைச் சென்றடைந்தன?

பகுத்தறிவு வரம்புகுட்பட்ட படைப்பிலக்கியங்களைத் தந்த, அண்ணா, கலைஞர், டி .கே சீனிவாசன் ஆகியோருக்கு கொடுக்கப்படாத இடம், தென்னரசுக்கு மறுக்கமுடியாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக, அவரின் நூல்கள் யாரைச் சென்றடைந்தன என்பதைப் பார்க்கலாம்.

அந்தக் காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அல்லது பகுத்தறிவு சிந்தனை நூல்களை, திராவிட இயக்கத்தினர் எல்லோரும் அண்ணா உருவாக்கிய 'திராவிட பண்ணை' வழி அச்சிடப்பட வேண்டும் என முனைப்பு காட்டினர். ஆனால் தென்னரசு நூல்கள் பெரும்பாலும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பதிப்பகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பாக வானதி பதிப்புகத்தில் இருந்து அவருடைய பெரும்பாலான நூல்கள் வந்துள்ளன. அந்த வகையில் அவர் திராவிட சிந்தனை கொண்ட இலக்கிய நூல்களை வெகுசன தளத்துக்கு நகர்த்தியவராக பார்க்க முடியும். அதற்கு முக்கியமானக் காரணம் அவரது பிறந்த ஊர் திருக்கோஷ்டியூர் சிவகங்கை மாவட்டத்தில் அமைகிறது. தொடக்கக் கால நண்பர்களும் அப்படியாக அமைகின்றனர்.

அவரின் எழுத்துக்கள் , அவரை கண்ணதாசன் நடத்திக் கொண்டிருந்த தென்றல் பத்திரிகைக்கு கொண்டு சென்றது. அங்குதான் தனது இலக்கிய உலகத்தை கட்டமைத்துக் கொள்கிறார். அங்கிருந்து கலைஞர் அறிமுகம் கிடைக்க தீவிர அரசியலுக்குள் நுழைகிறார்.

அரசியலும் இலக்கியமும்

படைப்பிலக்கியவாதியான அவர் தீவிர அரசியலில் நீர்த்துப் போகக்கூடிய சிக்கலானச் சூழலில் சாமர்த்தியமாக இயங்கியது தான் ஆளுமை. 1950 ஆம் ஆண்டுகளிலேயே அரசியல் களத்திலும் தீவிரத் தன்மையுடன் இயங்கிய தென்னரசு 1957 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக திமு கழகத்தில் உயர்கிறார். அதன் பின்னர் தீவிர அரசியலுக்கே உரிய பண்புகளாக தேர்தல் வெற்றி தோல்விகள் என்கிற ஓட்டம்.

சமூக நீதி போராட்டப் பங்களிப்புகள் , ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்வது, சட்டமன்ற பிரதிநிதி என அவரது தொடர் ஓட்டம் அமைகிறது. இந்த தொடர் ஓட்டங்களினூடே தனது படைப்பிலக்கிய உயிரோட்டத்தையும் அவர் விட்டுவிடவில்லை. அதே காலகட்டத்தில்தான் தென்னரசு என்கிற பத்திரிக்கையை தொடங்கி நடத்துகிறார் . அதே காலகட்டத்தில் தான் புதினங்களை படைக்கிறார். அதே காலகட்டத்தில் தான் வரலாற்று ஆவணங்களை உருவாக்குகிறார் . குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் 'சேது நாடு "என குறிப்பிடப்படுகிற இன்றைய சிவகங்கை சீமையின் பல்வேறு வாழ்க்கைப் பாடுகளை தனது எழுத்துகளில் பதிவு செய்கிறார். அவரது 'சேது நாட்டு செல்லக்கிளி ' குறிப்பிட்டத்தகுந்த புதினம் . ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அந்த தொடரை முடிக்கும் பொழுது தான் அவரது இறுதி நாட்கள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் அவரது இறப்பு எதிர்பாராதது. படைப்பிலக்கியவாதியாக , தீவிர அரசியல்வாதியாக தனது 60 வது வயதில், அனுபவ வீச்சுடன் இயங்க வேண்டிய நேரத்தில் அவரது மரணம் திராவிட இலக்கிய உலகத்துக்கும் திராவிட இயக்க அரசியலுக்கும் பேரிழப்பாக அமைந்தது . 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி இதய அடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் அரசியல் பயின்று , அவர்கள் வழித்தடத்தில் இயங்கிய எஸ் .எஸ் .தென்னரசு அவரது கலை இலக்கிய பங்களிப்புகள், அரசியல் பங்களிப்புகளுக்காக என்றும் நினைவு கூறப்படுவார் .

நீரை. மகேந்திரன், எழுத்தாளர்- பத்திரிகையாளர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com