"கலை கலைக்காகவே என்று சொல்லக்கூடியவர்கள், நாங்கள் எழுதுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்!’’

"கலை கலைக்காகவே என்று சொல்லக்கூடியவர்கள், நாங்கள்  எழுதுவதை
ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்!’’
Published on

செம்மலர் இதழின் ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எழுத்தாளர் ச. தமிழ்செல்வனுக்கு ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு இலக்கியத்தின் முகமாக அறியப்படும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டு கேள்விகளை முன்வைத்தோம்.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. விருதுப் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதாக தகவல் வெளியானது. அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் எந்த ஏமாற்றமும் எனக்கில்லை. விருது அறிவுப்பு நிறுத்தத்தை அரசியல் என்று தான் புரிந்து கொண்டேன். தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை ஒரு கொள்கை முடிவாக வைத்துள்ளது, ஒன்றிய அரசு. சாகித்ய அகாதமி, லலித் கலா அகாதமி, நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா போன்றவற்றின் தன்னாட்சித் தன்மையை நீக்கிவிட்டு, அவற்றை தங்களுடைய கைக்குள் கொண்டு வர நினைக்கிறது.

விருதுப் பட்டியலை முன்னரே அறிவிக்காமல் போனதென்பது 24 மொழிகளையும் சேர்ந்த எழுத்தாளர்களை அவமதித்ததற்குச் சமம். நானும் அவமதிக்கப்பட்டதாகவே உணர்ந்தேன். மற்றபடி விருது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. எதிர்பாராத விருது இது.

இந்த விருது அறிவிக்கப்படவில்லை என்று சொன்னதும், ‘இனி பாஜகவை ஆதரிப்பவர்களுத்தான் விருதுகளைக் கொடுப்பார்கள்’ என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த விமர்சனம் சரியானதா அல்லது மிகைப்படுத்தப்பட்டதா?

இனி பாஜகவை ஆதரிப்பவர்களுக்குத்தான் கொடுப்பார்கள் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இதை நான் வேறுமாதிரி பார்க்கிறேன். விமர்சனம் செய்யக்கூடியவர்களை ஒன்றிய பாஜக அரசு ஒடுக்குவதாகவே நினைக்கிறேன். விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பதில் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள்.

அரசியல் குறுக்கீடு இல்லாத சாகித்ய அகாதமி போன்ற தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம், பாஜக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகத்தான் பார்க்க வேண்டும்.

‘தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ நூலுக்குத்தான் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு நூலை எழுதுவதற்கான காரணம், தேவை என்ன?

தமிழ்ச் சிறுகதைக்கென்று செறிவான, வளமான பாரம்பரியம் உள்ளது. நானும் சிறுகதை எழுத்தாளன் என்பதாலும், சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிப்பவன் என்பதாலும் அதை இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென நினைத்தேன். ஒருமுறை, எழுத்தாளர் அருணன் “தமிழ்ச்சிறுகதைகள் பற்றி நமது பார்வையில் ஒரு புத்தகத்தை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?. நம்ம அமைப்பில் வேற யாராலும் இதை எழுத முடியாது. நீங்க தான் எழுதணும்னு” என்று சொன்னார். அவருடைய தூண்டுதலும் இப்படியொரு புத்தகம் எழுத காரணம்.

தற்செயலாக விகடன் இணையதளத்தில் ‘கதை சொல்லிகளின் கதை' என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதச் சொல்லி கேட்டார்கள். அதில் இருபது கட்டுரைகள் எழுதியிருப்பேன். பிறகு, பாரதி புத்தகாலயத்தின் ‘புக் டே' (Book Day) இதழில் தொடர்ந்து எழுதினேன். கொரோனா காலத்தில் எழுதிய எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, செழுமைப்படுத்தி புத்தகமாக கொண்டுவந்தேன்.

நூறாண்டுக்கு மேலான வரலாறு கொண்ட தமிழ்ச் சிறுகதை குறித்தும், சிறுகதை எழுத்தாளர்கள் குறித்தும் இந்த நூலில் எழுதியுள்ளீர்கள். தமிழின் முதல் சிறுகதை எது என்பதில் குழப்ப நிலை இருக்கிறது. அது குறித்து தெளிவுப்படுத்துங்களேன்.

தமிழின் முதல் சிறுகதை எது என்பதில் ஆய்வாளர்களுக்கே கருத்து வேறுபாடு உண்டு. வ.வே.சு. ஐயருடைய 'குளத்தங்கரை அரசமரம்' தான் முதல் சிறுகதை என்றும் சொல்லக்கூடியவர்களும், புதுமைப்பித்தன் தான் சிறுகதையினுடைய தொடக்கம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஒரு முறை தமுஎகச சார்பாக தமிழ் சிறுகதையின் நூற்றாண்டு விழா கொண்டாடினோம். அந்த அரங்கில் வ.வே.சு. ஐயருடைய படம் வைத்திருந்தோம். நிகழ்வுக்கு வந்த பிரபஞ்சன், “என்னப்பா இது… புதுமைப்பித்தன் தான் தொடக்கம். நீ இந்த ஆளைத்தூக்கி வச்சுட்டு இருக்க?” என்று என்னிடம் கேட்டார். இப்படி இரண்டு கருத்து இருக்கிறது. இதில்லாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த மக்தூன் சாகிப், சாமுவேல் பவுல் அய்யர் ஆகியோரின் பெயர்களையும் சொல்வார்கள். வ.வே.சு. ஐயருடைய குளத்தங்கரை அரசமரம் சமகாலப் பிரச்சினையைப் பேசியதால் அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அப்படியானால் குளத்தங்கரை அரசமரம் தான் தமிழின் முதல் சிறுகதை என்று அங்கீகரிக்கலாமா?

ஆம், அங்கீகரிக்கலாம்.

இந்த புத்தகம் எழுதுவதற்காக நிறைய வாசித்திருப்பீர்கள், தகவல்களை திரட்டியிருப்பீர்கள். உங்களை வியப்பில் ஆழ்த்திய படைப்பாளி, புத்தகம் குறித்து சொல்லுங்களேன்?

எனக்கு எப்போதும் ஆச்சரியம் தருபவர் கு.அழகிரிசாமிதான். இலக்கிய உலகில் அவர் தான் எனக்கு ஞானத்தகப்பன். இதை எப்போதும் சொல்லுவேன். அவரின் எளிமையும், ஆழமும், அழகும்தான் எனக்கு உத்வேகம். அவருடைய கதைகளை இப்போது படித்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அவரின் படைப்புகள் உங்களுக்கு நெருக்கமாக இருக்க காரணம், அவர் கரிசல் பகுதியை சேர்ந்தவர் என்பதாலா..?

இல்ல. அவர் கரிசல் என்பதை அடையாளப்படுத்தி எழுதியவர் கிடையாது. கி.ராஜநாராயணன் தான் அப்படி எழுதியவர். கரிசல் இலக்கியத்துக்கென்றே தன்னை முடிசூட்டிக் கொண்ட மகாராஜன் என்றால் அது கி.ரா.தான். கு.அழகிரிசாமி தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கரிசல் பகுதியின் வாழ்முறை வேண்டுமானால் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அது பிரதான காரணம் இல்லை. அதாவது புறவாழ்க்கையையும்ம், அகவாழ்க்கையையும் இணைத்து எழுதிய படைப்பாளி என்ற கோணத்தில் தான் எனக்கும் அவருக்கும் ரொம்ப நெருக்கம்.

இந்த நூலில் 51 எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கீங்க. கி.ரா.குறித்து மட்டும் கூடுதல் பக்கங்கள் உள்ளன...

இவருக்கு இத்தனை பக்கங்கள் என்ற முன்முடிவோடு எழுதவில்லை. படித்துக் கொண்டே இருந்தேன், எழுதிக்கொண்டே இருந்தேன். கி.ரா.வுக்கு இத்தனை பக்கங்கள் வந்தது தற்செயலானது. அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைத்து அதிக பக்கங்கள் எழுதவில்லை. நான் கொண்டாடும் கு.அழகிரிசாமி, கி.ரா.வை தெய்வமாக நினைத்திருந்தார். அவர்கள் இருவருமே ஒரே ஊரில் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். நான் பார்த்து வியக்கும் அழகிரிசாமி, கி.ரா. வைப் பார்த்து வியந்திருந்திருக்கிறார். அதனால், கி.ரா. மீது கூடுதலான அக்கறை வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இருவருமே சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் இல்லையா...?

ஆமாம். ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது எங்கும் நிகழ்ந்திராத ஒன்று.

கி.ரா. வசதியானவர். கு. அழகிரிசாமி கஷ்டத்தில் வாழ்ந்தவர். சாப்பாட்டுக்கே கஷ்டம். ‘பத்து ரூபாய் அனுப்பி வைப்பான்னு…’ அழகிரிசாமி கேட்டு, அதை அனுப்பி வைத்தவர் கி.ரா. அப்படி ஒரு வாழ்க்கை தான் அழகிரிசாமியுடையது. அதனாலேயே எனக்கு அழகிரிசாமி மீது ஈர்ப்பு வந்திருக்கலாம். வறுமையின் பிடியிலிருந்தாலும் இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கிறாரே என்ற ஆச்சரியம் உண்டு.

கு. அழகிரிசாமிக்கு அடுத்தது உங்களுக்குப் பிடித்த படைப்பாளி யார்?

நிறைய பேர் இருக்கிறார்கள். இருந்தாலும் புதுமைப்பித்தனை யாராலும் தாண்ட முடியாது. புதுமைப்பித்தன் கறாரான தகப்பன் என்றால், கு. அழகிரிசாமியிடம் நாம் கொஞ்சி பேசலாம்.

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாம் சுத்தமானவை. அவ்வளவு சோதனை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறார். உலகத்தரத்துக்கு தமிழ் சிறுகதைகளை கொண்டு சென்றவர். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள அவ்வளவு விஷங்கள் இருக்கிறது. அவருடைய செல்லம்மாள் கதைக்கு ஈடான ஒரு காதல் காவியம் உலகத்திலேயே கிடையாது.

1910லிருந்து 1970வரையிலான எழுத்தாளர்களை பதிவு செய்துள்ளீர்கள். அப்போது, பெண் படைப்பாளிகள் குறைவாக இருந்ததற்கு என்ன காரணம்?

பெண் படைப்பாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். 1920-களிலேயே வை.மு. கோதைநாயகி அம்மாள் எழுத வந்துவிட்டார். ஜகன்மோகினி என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அதில், 200 பெண்களை எழுத்த வைத்திருக்கிறார். அதேமாதிரி இன்னும் சில பத்திரிகைகள் வந்துள்ளன. ஆனால், இலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் அதை மறைத்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி எழுதவே இல்லை. பதிவே இல்லை. அதனால், பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவு என்ற தோற்றம் இருக்கிறது. உண்மையிலேயே பெண்கள் எல்லா காலத்திலும் ஆண் எழுத்தாளருக்கு இணையாகவே எழுதி இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மனைவி கதை எழுதி இருக்கிறார். அவர் வெளியிட்ட ‘காசுமாலை' என்ற தொகுப்பை அவரின் மகள் தினகரி சொக்கலிங்கம் இப்போதுதான் மறுபதிப்பு கொண்டு வந்திருக்கிறார். இன்றைக்கு பெண் படைப்பாளிகள் பிரமாதமாக எழுதுகிறார்கள்.

இந்த நூலுக்கு நீங்கள் வாசித்த புத்தகங்கள், கதைகளின் எண்ணிக்கை எவ்வளவு... நினைவிருக்கா?

கணக்கு பார்த்து செய்யக் கூடிய வேலை இல்லை இது. தோராயமாக 6000 கதைகளும், 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை இதற்காக படித்திருப்பேன். இதைக் கூட நான் சொல்லவில்லை. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் சொன்ன கணக்கு இது.

இந்த நூலில் சில படைப்பாளிகள் விடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறதே… ஏன் அந்த விடுபடல்?

சில இல்லை; பல. எனக்கே தெரியும், பலபேரை விட்டிருக்கிறேன். இதை ஒரு ஓர் ஆய்வு நூலாக எழுத நினைக்கவில்லை. தமிழ் சிறுகதையின் மீது இளம் தலைமுறைக்கு ஆர்வத்தை உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த புத்தகத்தை எழுதினேன். படித்ததை, பிடித்த எழுத்தாளர்களை மட்டும் தான் எழுதியுள்ளேன். யாரையும் விட்டுவிடக் கூடாது என்பது என்னுடைய நோக்கம் இல்லை.

இந்த புத்தகத்தை தேர்வு செய்த விருது குழு, இந்த நூலை Unbiased, Impartial portrayal of history of short story என்று சொல்லியிருக்கிறது. அதுதான் என்னுடைய கருத்தும்.

நான் ஓர் இடதுசாரி. தமுஎகசவில் மாநிலத் தலைவராக இருந்துள்ளேன். எனக்கு ஒரு அரசியல் சார்பு இருக்கிறது. கலை கலைக்காகவே என்று சொல்லக்கூடியவர்கள், நாங்கள் எழுதுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், நான் அவர்களுடைய படைப்புகளை படித்துவிட்டு நிறை குறைகளை இந்த நூலில் எழுதியுள்ளேன். சார்புடன் இந்த நூலை எழுதவில்லை.

ராஜாஜி, திராவிட இயக்க எழுத்தாளர்கள் என பலதரப்பையும் எழுதியுள்ளேன். ஓர் ஆய்வாளருக்குரிய தன்மையோடு இந்த நூலை அணுக வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து.

ராஜாஜி, அண்ணா ஆகியோர் குறித்தும் எழுதியுள்ளீர்கள். பொதுவாக தீவிர இலக்கியம் பேசக்கூடியவர்கள், இவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இந்த இரண்டு பேரின் கதைகளில் அதிகம் ஈர்த்த கதை என்றால் எதைச் சொல்லுவீர்கள்?

ராஜாஜி 'சபேசன் காப்பி' என்ற ஒரு கதை எழுதியிருப்பார். அது ஒரு முக்கியமான கதை. அண்ணாவினுடைய கதைகள் பிரச்சாரத்தன்மையுடையது என்பார்கள். ஆனால், அவரின் ‘செவ்வாழை' என்ற கதை ரொம்ப முக்கியமான கதை. அது ஒரு மலையாளக் கவிதையினுடைய தழுவல் என்று பின்னர் ஆய்வாளர்கள் எழுதினார்கள். ஆனால், அதை முதன்மைப்படுத்த முடியாது. ‘கருப்பண்ணசாமி யோசிக்கிறார்' என்ற மற்றொரு கதையும் முக்கியமானது. ஜெயமோகன் எழுதிய ‘மாடன் மோட்சம்' கதையில் இதன் தாக்கம் இருக்கும். ஆசைத்தம்பி, எஸ்.எஸ். தென்னரசு, கலைஞர் ஆகியோரின் சில சிறுகதைகளில் சம கால பிரச்னை பேசப்பட்டிருக்கும். சில கதைகளில் அழகியல் குறைவாக இருக்கும். அழகியலை விட, எதை எழுதுகிறார்கள் என்பது தான் மிக முக்கியம். அந்த வகையில், எதை எழுதுவது என்பதில் முற்போக்கு எழுத்தாளர்களும் திராவிட இயக்க எழுத்தாளர்களும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பார்கள். நமக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் என்று தான் நினைக்கிறேன்.

இன்றைய சிறுகதைகள் குறித்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் உலகளாவிய பிரச்னைகள் குறித்தெல்லாம் எழுதுகிறார்கள். குறிப்பாக பெண்கள், ரொம்ப நல்லா எழுதுறாங்க. ஜெயராணியின் இரண்டு தொகுப்புகள் வந்திருக்கிறது. 'செந்நிலம்', 'கருப்பு வானம்'. ரெண்டுமே ரொம்ப முக்கியமான தொகுப்பு. மனதை உலுக்கும் கதைகளை எழுதியுள்ளார். இன்னும் நிறைய பெண் படைப்பாளிகள் எழுதுகிறார்கள். என் மருமகள் கூட ஒரு தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார்.

2025இல் நான் ரொம்ப மகிழ்வோடு உற்சாகத்தோடு பார்க்கக்கூடிய விஷயம், பெண் படைப்பாளிகள் நிறையப் பேர் சிறுகதைகள், நாவல்கள் எழுதுகிறார்கள் என்பதுதான்.

சாகித்ய அகாதமி விருது சர்ச்சைக்குள்ளானதும் ‘செம்மொழி இலக்கிய விருது’ என்ற பெயரில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது ஞான பீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனும் Living Tamil Award for World Literature என்ற பெயரில் விருது வழங்கப்படும் பரிசுத் தொகையாக ரூ. 1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழ்நாடு அரசு செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில் தேசிய அளவிலான விருதாக அறிவித்திருக்கிறது. சாகித்ய அகாதமி விருது டிசம்பர் மாதமே அறிவித்திருக்க வேண்டியது. இப்போது தாமதமானாலும் கூட, அதே பட்டியல் திருத்தப்படாமல் வெளியிட்டப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், தமிழ்நாடு அரசின் விருது அறிவிப்பே. ஏனென்றால், தமிழ்நாடு அரசு 7 மொழிகளுக்கும் விருது கொடுத்தால் ஒன்றிய அரசு என்ன செய்யும்?

அதேபோல், விருதுக்கு தொகை ஒரு விஷயமே கிடையாது. விருதுடன் 1 கோடி வழங்கப்படும் என்பது ஓர் அரசியல். தொகையை வைத்து விருதுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. என்ன விருது? யார் கொடுக்கிறார்? என்பதைப் பொறுத்துதான் மதிப்பு.

சாகித்ய அகாடமி விருது அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு வாழ்த்துக்களும் வசைகளும் வருகிறது? ஏனெனில் இந்த விருதுக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதனால், 10 கோடி கொடுத்தாலும் அந்த கோடிக்கு மதிப்பு கிடையாது என்பது என்னுடைய கருத்து.

இன்றைய தமிழ்நாட்டின் கல்விச் சூழலோடு ஒப்பிட்டு உங்களுடைய அறிவொளி கால நினைவுகளைப் பகிர்ந்துக்க முடியுமா?

இன்றைய கல்வி முறை சமூகத்தோடு தொடர்பு இல்லாததாக இருக்கிறது. கல்வி என்பது ஒரு தனித்த ஏற்பாடு என்ற புரிதல் உள்ளது. அது தவறு. சமூகத்துடன் ஜீவனுள்ள உறவை கொண்டிருத்தலே உண்மையான கல்வி. மக்களை கேள்வி கேட்க வைப்பது, சிந்திக்க வைப்பது என்ற நோக்கத்தோடுதான் நாங்கள் அறிவொளி இயக்கத்தில் வேலைப் பார்க்க சென்றோம். ஆனால், நடந்தது என்னவோ, நாங்கள் தான் மக்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com