’என்னிடம் இன்னும் செல்லமாக நடந்துகொள்ளுங்கள்!’ - வைரமுத்து நெகிழ்ச்சி

vairamuththiyam
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வைரமுத்தியம் தொகுப்பு நூல். ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்
Published on

கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் சார்ந்து ' வைர முத்தியம் 'என்கிற பெயரில் ஒரு முழு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.

கவிஞர் வைரமுத்து இதுவரை 12 கவிதை நூல்கள், 10 நாவல்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுப்பு, ஒரு வரலாறு, ஒரு சுயசரிதை, 2 கேள்வி பதில்கள் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு நூல், 2 பயணக் கட்டுரைகள், ஒரு பாடல் தொகுதி,ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று 39 நூல்களை எழுதி இருக்கிறார். ஒரு தொகுப்பாசிரியராகக் கலைஞரின் சொற்பொழிவுகளைத் தொகுத்து உருவாக்கிய நூலையும் சேர்த்தால் 40 நூல்கள்.

அவரது படைப்புகளை ஆய்வு நோக்கில் அணுகும் விதத்தில் 'வைரமுத்தியம் 'என்கிற ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி உருவாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள் 20 பேர் தங்களது கட்டுரையின் சுருக்க வடிவத்தைக் கருத்தரங்கில் வாசித்துப் பகிர்ந்து கொள்வதுதான் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கத் திட்டம்.

வைரமுத்து எப்போதும் தனது விழாக்களைத் திட்டமிட்டு நேர்த்தியாகத் தயாரிப்பார். இந்த விழாவும் குறித்த நேரத்தில் காலை 9:30 க்குத் தொடங்கியது.உத்ரா உன்னிகிருஷ்ணன் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினார். கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் .மகாதேவன் பேசினார்.

கம்பீரமான குரலில் தங்கு தடையில்லாத நடையில் அவர் பேசியது அவர் தொழில் ரீதியான இலக்கியப் பேச்சாளர் போன்று சரளமாக இருந்தது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அவர் வெளிப்படுத்திய மொழி மட்டுமல்ல உடல் மொழியும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

இந்தக் கருத்தரங்கில் கவிதை, நாவல், கட்டுரை, பாடல் என நான்கு பெருந் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

காலை 10 மணிக்கு கவிதை அரங்கு தொடங்கியது. 'மகாகவிதையில் திணை வெளி உலக வெளியாதல்' என்கிற தலைப்பில் புது டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் இரா. அறவேந்தன் கட்டுரையின் சுருக்கத்தை வாசித்தார்.

அடுத்து தஞ்சாவூர் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு ஆய்வு மைய இயக்குநர், முனைவர் நம் .சீனிவாசன் ' புதிய விடியல் தரும் வைரமுத்து கவிதைகள் 'என்ற தலைப்பில் தனது கட்டுரையின் கருத்துகளை வாசித்து வெளிப்படுத்தினார்.

முனைவர் அ ஜாஹிர் ஹுசைன் உரை
முனைவர் அ ஜாஹிர் ஹுசைன் உரை

கவிஞர் வைரமுத்து மற்றும் நிசார் கப்பானி கவிதைகளின் ஒப்பாய்வை 'காதலும் இயற்கையும் : ஓர் ஒப்பாய்வு 'என்ற தலைப்பில் நிகழ்த்தினார் சென்னை பல்கலைக்கழக அரபு ,பாரசீகம், உருதுத் துறைத் தலைவர் அ. ஜாகிர் உசைன் .

அடுத்து தன்னம்பிக்கைப் பேச்சாளரும் மரபுக் கவிஞருமான மரபின் மைந்தன் ம. முத்தையா 'மரபுக் கவிதைகளில் மகத்துவப் புதுமை' என்ற கட்டுரையாற்றினார்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன், 'மகாகவியின் மகாகவிதை' என்ற தலைப்பில் கட்டுரையைச் சரளமாக வாசித்தார்.

இதழாளர் ஆர்.சி. ஜெயந்தன் 'மகாகவி வைரமுத்துவின் கவிதைகளில் மானுடத்துக்கான அறிவியல்' என்ற கட்டுரையை வாசித்தார்.

நாவல் அரங்கு தொடங்கியதும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கல்லாறு சதீஷ் என்கிற முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா 'வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போரும் வையகத்தின் மூன்றாம் உலகப்போரும்' என்று உரையாற்றினார்.

அப்போது தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுடன் தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் தனது புலம்பெயர் அனுபவங்களை நினைவு கூர்ந்த போது அரங்கு நெகிழ்ந்து கைதட்டியது.

சாத்தூர், ஸ்ரீ ராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரி, இணைப் பேராசிரியர் முனைவர் வே. தனுஜா, 'கருவாச்சி காவியத்தில் நாட்டுப்புற மருத்துவம்' தலைப்பில் நாவலில் இடம் பெற்ற மருத்துவக் குறிப்புகளைப் பட்டியலிட்டுப் பேசி வியப்பூட்டினார்.

நீதிபதி ஆர் .மகாதேவன் உரை
நீதிபதி ஆர் .மகாதேவன் உரை

கேரளாவில் இருந்து வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் கே. எஸ். வெங்கிடாசலம் வைரமுத்து படைப்புகளின் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.அப்போது மலையாளப் படைப்பாளிகளுக்கும் வைரமுத்துவுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசினார்.

மலேசியா, எய்மிஸ்ட் பல்கலைக்கழக, மதிப்புறு பேராசிரியர் முனைவர் மு. இராசேந்திரன், 'கள்ளிக்காட்டு இதிகாசமும் புலம்பெயர் தமிழர்களும் 'என்கிற தலைப்பில் பேசும்போது மலேசிய நாட்டு நிலம் சார்ந்தும் புலம்பெயர் வாழ்வு சார்ந்தும் பேசினார்.

மதிய உணவுக்கு முன் மகாகவிதை ஆங்கில நூலை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ .எம் . சாவணன்பெற்றுக் கொண்டார்.

மறைமலை இலக்குவனார் உரை
மறைமலை இலக்குவனார் உரை

மகாகவிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முனைவர் மறைமலை இலக்குவனார் சுருக்கமாகக் தனது அனுபவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசும் போது, "பொதுவாக மொழிபெயர்ப்புகளில் தவறுகள் மலிந்து காணப்படும் . தவறின்றி மொழிபெயர்க்க முடியாது அது சிரமமான வேலை" என்றவர்," இதில் அந்தப் பணியை முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார்" என்றவர்,

மகாகவிதை தமிழ் நூலையும் ஆங்கில நூலையும் ஒப்பிட்டுச் சில கவிதைகளை அவர் உதாரணம் காட்டினார். அப்போது தமிழை ஆங்கிலம் தொட முடியாத இடங்களை அவர் தொட்டுப் பேசினார். அந்த வகையில் ஆங்கிலம் பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

மும்மொழி பிரச்சினை பற்றிப் பேசும்போது, " தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் நாம் சரளமாகப் பேச முடியவில்லை என்கிற நிலை இருக்கிறது. அது கற்பிக்கப்பட வேண்டும்.எல்லா மாநிலங்களிலும் தாய்மொழி முதல் மொழியாக இருக்கிறது; இருக்க வேண்டும்.ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக நாம் கற்க வேண்டும். இந்நிலையில் மூன்றாவது மொழி என்பது எங்கே வந்தது? என்றார்.

அடுத்து டத்தோஸ்ரீ .எம் . சரவணன் பேசும்போது, 'மூன்றாம் உலகப்போர்' நாவலில் குறிப்பிடப்பட்ட பூமி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு, தான் அமைச்சராக இருந்தபோது தனக்குக் கிடைத்து அதன் மூலம் மலேசிய நாட்டில் பல செயல் திட்டங்களைச் செயல்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனும் முனைவர் சங்கரசரவணனும்
விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனும் முனைவர் சங்கரசரவணனும்

மதிய உணவுக்குப் பின் கட்டுரை அரங்கு தொடங்கியதுமே 'சிற்பியே உன்னால் செதுக்கப்பட்டேன்' என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் பேசத் தொடங்கியதுமே உண்ட மயக்கம் கலைந்து சபை நிமிர்ந்து உட்கார்ந்தது.தமிழ் மொழி வழியில் படித்த தனது தாழ்வுணர்ச்சியை நீக்க வைரமுத்துவின் கவிதைகள் தனக்குப் பயன்பட்டது எப்படி என்பதையும் அவர் தனது கவிதைகள் மூலம் தன்னை எப்படிச் செதுக்கினார் என்பதையும் தனது வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு விளக்கினார்.அதுவே கட்டுரை வடிவாகி இருக்கிறது என்றார்.வைரமுத்து எழுத்து சாதித்தது என்ன என்பதற்கு வாழும் சாட்சியாக அவர் தன்னையே முன்னிறுத்தினார்.

அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், 'கவிதைச் சாயல் கொண்ட நாவலாசிரியர்' என்கிற தலைப்பில் பேசியவர், வைரமுத்துவைத் தங்கள் கரிசல் மண்ணுக்குச் சொந்தக்காரர் என்று பெருமையுடன் கூறினார்.அவர் பேசும்போது வைரமுத்து எழுதிய நாவல்களிலிருந்து ஆங்காங்கே தொட்டுக்காட்டிப் பேசினார்.

அடுத்து 'தமிழாற்றுப்படைக்கு ஓர் ஆற்றுப்படை' என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை உதவிப் பேராசிரியர் வாணி அறிவாளன் பேசும்போது நீண்ட ஆய்வுரையாக நிகழ்த்தினார்.ஏராளமான உதாரணங்களுடன் தனது தலைப்புக்கு நியாயம் செய்தார்.

பெங்களூரு பிரசிடென்சி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கே .மலர்விழி 'வைரமுத்து படைப்புகள் : ஒரு சமுதாய கண்ணோட்டம்' என்கிற கன்னடத்தில் கட்டுரைகள் மொழிபெயர்த்தது சார்ந்து உரையாற்றினார்.

அவர் தமிழிலும் கன்னடத்திலும் மாறி மாறிப் பேசியதே புதுவிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.

'வள்ளுவரும் வைரமுத்துவும்' என்கிற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன் பேசும்போது இந்தக் கருத்தரங்கத்திலேயே ஒரு சாதனையைச் செய்தார். அனைவரும் தங்களது கால எல்லையைத் தாண்டிய போது அவர் மட்டும் தனது கால எல்லை தொடுவதற்குள் முடித்து நேரத்தை மிச்சப்படுத்தினார்.சுருக்கமான சுவையான உரையும் கூட.

பாடல் அரங்கு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. கால அட்டவணைப்படி உள்ள பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள் கடைசி நேர மாற்றங்களுடன் வரிசை முறை மாற்றப்பட்டுப் பேசினர்.

முனைவர் பி .எஸ் .கணேஷ் மூர்த்தி ஆந்திரா, திராவிட பல்கலைக்கழக தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் , 'வைரமுத்துவின் வாழ்வும் படைப்புகளும் ' குறித்து தெலுங்கில் எழுதிய கட்டுரையை வாசித்தார்.

'தமிழ் திரை இசைப் பாடல்களின் திருப்பு முனை' தலைப்பில் புதுவை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் பா. இரவிக்குமார் கருத்துகளை வெளிப்படுத்தினார்.பல திரைப் பாடல்களை மேற்கோள் காட்டினார்.

ப.சிதம்பரத்துடன் வைரமுத்து
ப.சிதம்பரத்துடன் வைரமுத்து

எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் 'தமிழர் வாழ்க்கையில் திரை இசைப் பாடல்கள் 'என்கிற தலைப்பில் வைரமுத்துவின் பாடல் வரிகளை முன்வைத்து பேசினார். அவர் கட்டுரை வாசிக்காமல் சொந்தமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் .அப்போது அவர் குறிப்பிட்டு விளக்கிய பாடல்களை எந்தப் பாடல் என்று சபையில் கேட்டபோது அனைவரும் வரிகளைப் பாடியது பார்வையாளர்களையும் பங்கேற்பாளராக உணர வைத்தது.

எழுத்தாளர் ஆத்மார்த்தி 'கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் பெருந்தொகுதி' யை முன்வைத்து 'உள்மன யாகம்' என்கிற தலைப்பில் ரசனை வெளிப்படப் பேசினார். அவரது கட்டுரையின் கருத்துக்கள் ஏராளமான திரைப் பாடல்களை அடையாளம் காட்டியது. அவரது உரை செறிவுடன் அமைந்திருந்தது.

அடுத்து பேராசிரியர் அருணன் 'பகுத்தறிவுப் பாவலர்' என்கிற தலைப்பில் திரைப்பாடல்களில் உள்ள புரட்சிக்கருத்துகளைப் பற்றிப் பேசினார் .

"கவிதைகளில் உணர்ச்சியைப் புகுத்துவது எளிது .கவிதைகளில் அறிவைப் புகுத்துவது கடினம். ஆனால் அதை வைரமுத்து செய்துள்ளார்" என்று தொடங்கிய அவர் பேச்சில் நகைச்சுவை ததும்ப கருத்துகள் வெளிப்பட்டன.அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார்.

கருத்தரங்கின் நிறைவு உரையாக சீனாவில் இருந்து நிறைமதி என்கிற தமிழ் பேராசிரியர், எழுதிய கட்டுரையைக் காணொலி வழியாக வாசித்தது ஒளிபரப்பப்பட்டது.

அடுத்ததாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

முதல்வர் மேடை
முதல்வர் மேடை

முதல்வர் மு. க .ஸ்டாலின் வைரமுத்துவின் கருத்தரங்க கட்டுரை நூலை வெளியிட பாரத் பல்கலைக்கழக வேந்தர் எஸ். ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.

முதல்வர் பேசும்போது வைரமுத்துவின் படைப்புகள், பெற்ற பாராட்டுகள், விருதுகள் எல்லாவற்றையும் வரிசையாக அடுக்கி அவருக்கும் கலைஞருக்குமான தொடர்பைப் பற்றியும் கலைஞர் கலந்து கொண்ட வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டு விரிவாகப் பேசியவர்,இந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மூலம் அவர் உலகக் கவிஞராகிவிட்டார் என்று கூறி வாழ்த்தினார்.

விழாவில் நிறைவுரையில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, " என் அடுத்த கட்ட பயணத்துக்கு ஆயத்தப்படுத்தும் இந்த விழா ஒரு பட்டாபிஷேகம் அல்ல. முத்தமிழ் எனக்கு முடிசூட்டும் விழா அல்ல. நீண்ட தூரம் ஓடி வந்தவனுக்கு ஒரு கோப்பை நெல்லிச்சாறு. அவ்வளவுதான்.

என் ஐம்பதாண்டு இலக்கியங்களுக்கு நான் பெற்ற பண்டித சம்மதம் இது. பண்டித சம்மதம் என்ற பதத்தை நான் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துகிறேன்.

இறக்கும் வரை பண்டித சம்மதம் பாரதிக்கு கிடைக்கவில்லை. பாவேந்தர் பாரதிதாசனுக்கும் செய்யுட் செப்பம் இருந்ததே தவிர கவிதை அமைதி இல்லை என்று ஒரு கூட்டம் கூவிக் கொண்டே இருந்தது. பெரும் படைப்பாளிகளுக்கும் அறிவுக் கூட்டத்தின் அங்கீகாரம் எளிதில் கிட்டிவிடவில்லை. காரணம் அவர்கள் கவிதை எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் உயிரோடு இல்லை. ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அதற்குள் ஆன்ம விசாரம் இருக்கிறதா? உண்மையின் உயிர்த்துடிப்பு கேட்கிறதா? Immortality என்று சொல்லக்கூடிய அமரத் தன்மையின் கூறு நிலவுகிறதா ?என்பதை அறிய கவிதைக்கும் கவிஞருக்கும் குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டு தேவைப்படுகிறது.

அத்தனையும் இருந்தாலும் பண்டிதக்கூட்டம் ஒற்றைக்கை தூக்கியே ஆசிர்வதிக்கும். அதுவும் இடக்கை தூக்கியே ஆசீர்வதிக்கும். நான் பண்டித சம்பந்தம் பெற்றவரா? தாவிக் குதித்து மக்கள் மன்றத்தை அடைந்தவரா ? என்பதை வைரமுத்தியம் என்ற இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் என்னை உரித்துக் கிழித்து மேய்ந்து இருக்கிறது. ஒரு படைப்பு என்பது சதைக்கூட்டில் கருவாகி, பிறப்புறுப்பின் வழியே பெயர்ந்து விழுவது அல்ல. ஒரு விதை, ஒரு அணு, ஒரு சூரியன், ஒரு துரும்பு, ஒரு நிலா, ஒரு நட்சத்திரம், ஒரு எறும்பு அல்லது ஒரு பேரண்டம் என்று எதில் வேண்டுமானாலும் கருவாகி உருவாகும் ஒரு கலைப் படைப்பு. அதற்குப் பல பருவங்கள் உண்டு.

 ‘என் விரல்களைக் கொளுத்தி நானே மெழுகுவர்த்தி ஏற்றிக் கொள்கிறேன்’
‘என் விரல்களைக் கொளுத்தி நானே மெழுகுவர்த்தி ஏற்றிக் கொள்கிறேன்’

நெல்மணி உருவாகவே அதற்குப் பல பருவங்கள் உண்டு. நெல்மணிகளுக்கும் சொல் மணிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தோழர்களே! நாற்றாக முளைப்பதிலிருந்து நிறைந்த கதிராக ஒரு நெல்மணி விளைவதற்கு நான்கு பருவங்கள் வேண்டும். ஒரு பனிக்காலம்,ஒரு கார்காலம், ஒரு குளிர்காலம்,ஒரு வெயில் காலம் என்று ஒரு நெல்மணிக்குள் நான்கு பருவங்கள் முண்டியடித்து படுத்துக்கிடக்கின்றன. ஒரு நெல் மணிக்கே நான்கு பருவங்கள் என்றால், சொல்மணிக்கு ?

எத்தனை பருவங்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஒரு நெல்மணி விளைவது தன்னைப் பெற்றுக்கொடுத்த நாற்று உண்பதற்கு அல்ல. மனிதர்களும் பறவைகளும் உண்பதற்கு. ஒரு படைப்பாளியின் படைப்பும் அவன் களிப்பதற்கல்ல. படைக்கப்பட்ட உலகத்தின் களிப்புக்கும், விழிப்புக்கும், செழிப்புக்கும், பிழைப்புக்கும் தான்.

நெற்பயிரைப் போல அழுகல் நோய் வந்து அழுகிப் போகாமலும், வாடல் நோய் வந்து வாடி விடாமலும். கதிராடும் போது பூச்சி அரிக்காமலும், கத்தும் பறவைகள் முற்றும் கொத்திச் சென்று விடாமலும் இந்த நெல்மணிகள் நான் விளைவித்திருக்கும் இந்த நெல்மணிகள், சொல் மணிகள்.

என் சொல் மணிகள் என் மண்ணையும் மக்களையும் சென்று சேர்ந்து இருக்கின்றனவா? என் மொழியின் பசிதீர பயன்பட்டிருக்கின்றன என்பதைத்தான் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நேர்மையோடு திருத்திச் சொல்லியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

என் படைப்புகள் எல்லாம் சிறந்தவை என்று நான் இதுவரை நம்பியதுமில்லை. சொன்னதுமில்லை. என் படைப்புகளெல்லாம் சிறந்தவை என்று இதுவரை நான் சொன்னதுமில்லை. நம்பியதுமில்லை.

சராசரிப் படைப்புகளும் எழுதியிருக்கிறேன். அது என் முதிர்ச்சியின்மையின் அடையாளமாகும். ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்குப் பிறகு நான் சராசரிப் படைப்பு எதையும் எழுதவில்லை என்று நீங்கள் கும்பிடுகிற கோயிலில் சத்தியம் செய்கிறேன்.

தமிழனாய் பிறந்தது என் மீது எனக்கு எவ்வளவு பெருமை சேர்த்து இருக்கிறதோ? என் படைப்பு தமிழில் பிறந்தது, அத்துணை சிறுமை சேர்த்திருக்கிறது என்று ஒரு சமூகம் கருதுகிறது.

தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே நாம் ததும்பிக் கூட விழுந்துவிடக்கூடாது என்று ஒரு கூட்டம். கட்டங்கட்டியும் கட்டியம் கட்டியும் நிற்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம் என் படைப்புகளின் உச்சம் என்று சொல்லுவதன் காரணம் சத்தியத்துக்குப் புறம்பாக அது ஒற்றைச் சொல்லைக்கூட எடுத்து வைக்கவில்லை. வைகை நதியை விட அதிகமான கண்ணீரை அந்தப் படைப்பு சந்தித்திருக்கிறது. இந்தியப் படைப்புகளில் நோபல் பரிசுக்குரிய தகுதியான படைப்புகளுள் ஒன்று என்று கள்ளிக்காட்டு இதிகாசத்தை நானே முன்மொழிவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.

எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'ஓல்டுமேன் அண்ட் த சீ' நோபல் பரிசு பெற்ற படைப்பு ஆகும். அதைக் 'கடலும் கிழவனும் 'என்று மொழி பெயர்த்தவர்கள் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை 'நிலமும் கிழவனும்' என்று மொழிபெயர்க்கலாம். கடலும் கிழவனும் என்ற நாவலுக்கு சற்றும் சளைத்ததல்ல கள்ளிக்காட்டு இதிகாசம். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே அதனை உயர்த்திப்பிடிக்கும் அமைப்புகள் இல்லை. எனக்கு வெளிச்சம் போட ஆளில்லை என்பதால் என் விரல்களைக் கொளுத்தி நானே மெழுகுவர்த்தி ஏற்றிக் கொள்கிறேன். நானே முன்வந்து, தானே முன்வந்து ஒரு இலக்கிய நிறுவனமோ, ஒரு பல்கலைக் கழகமோ என் படைப்புகளை 'காமம் செப்பாது கண்டது மொழிவதற்கு' மாறாய் தானே கூட்டம் கூட்டி தரம்பாடிக்கொள்வதே நடைமுறையாக இருக்கிறது. வெட்கத்துடன் என் கறுப்புக் கன்னம் முதன்முதலாய் சிவக்கிறது. வேறு வழியில்லை என்பதனால் வெட்கம் சினச்சிவப்பாகிறது.

என் படைப்புகளில் அரசியல் உண்டு. ஆனால் நான் அரசியலில் இல்லை. அரசியல் என்பது ஈடுபடக் கூடாத ஒன்று என்று ஒருநாளும் நான் எண்ணியதில்லை. ஆனால் என் படைப்புச் சுதந்திரத்தை எந்த அரசியலும் அனுமதிக்காது என்பதை மட்டும் அறிவார்ந்த முறையில் அறிந்திருக்கிறேன்.

எல்லாக் கட்சிகளும் தான் விரும்பியதை எழுத வைக்கும். ஆனால் நான் விரும்பியதை எழுத வைக்கும் கட்சி உண்டா என்று எண்ணிப் பார்க்கிறேன். அதனால் என் சிந்தனை, சுவரில் முட்டிய பந்தைப்போல் திரும்பி வந்துவிடவே வாய்ப்பிருக்கிறது. இதை இந்தக் கருத்தரங்கின் ஆசான்கள் எனக்கு அறிவுப்படுத்தி இருக்கிறார்கள். என்னைத் திருத்திக் கொள்ளவும், நல்ல வழியில் என்னை நிறுத்திக் கொள்ளவும் இந்த அறிவுக்கூட்டத்தின் ஒளிவிளக்குகள் எனக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

என் அன்புச் சகோதரர், முப்பதாண்டு கால நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் வருகைக்கு நன்றி. நான் அழைக்கும் எந்த விழாவுக்கும் மறுவார்த்தை சொல்லாமல் மகிழ்வோடு பங்கு பெறுகிறார். அந்த சம்மதம் என் தமிழ் ஆசான் கலைஞர் என் கையைப் பிடித்து அழுத்துவது போல் கதகதப்பாக இருக்கிறது. அவருடைய நெருப்பு நிமிடங்களுக்கு மத்தியில் அன்னைத் தமிழ் என்ற ஆலமர நிழல் தேடி வந்திருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞரோடும் தளபதி ஸ்டாலின் அவர்களோடும் அருமைத் தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோடும் என் பயணம் தொடர்வது அதிகாரத்தின் மீது கொண்ட அன்பினால் அல்ல. நன்றி உணர்ச்சியின் நீட்சியால். முன்னோர்களோடு பழகும் போதும், உரையாடும் போதும் தமிழ்நாட்டுக்கும் எனக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வை நான் பெறுகிறேன். ஒரு கோழியின் சிறகுக்குள் குஞ்சுகள் கதகதப்பாய் இருப்பது போல் தளபதியின் ஆட்சியில் தமிழ்நாடு காப்புறுதியோடு இருப்பதாய் என்னால் கருத முடிகிறது. தொடர்ச்சியான முதலமைச்சராய் நீங்கள் திகழ வேண்டுமென்று இந்த அறிவுத் திரு மன்றத்தின் சார்பில் உங்களை வாழ்த்துகிறேன்.

நான் முன்பே சொன்னது போல் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒரு சிறு உலகத் தமிழ் மாநாடு. இதை நடத்துவதற்கு எனக்குத் துணை இருந்த நண்பர்களுக்கெல்லாம் உள்ளங்கை பற்றி முத்தமிட்டு நன்றி சொல்கிறேன்.

ஏனென்றால் தனி ஒரு ஆளாய் இந்த கருத்தரங்கத்தைக் கரை சேர்த்திருக்க முடியாது. இந்தக் கருத்தரங்கத்தின் மிகப்பெரிய விளைவு என்று நான் கருதுவது அற்றுப் போகாத மரபுகளோடு தொடர்ச்சியான உச்சப் படைப்பாளிகளை உடையது தமிழ் என்பதை உலகிற்குச் சொல்லத்தான்.

ஏனென்றால் பல தேசிய இனங்கள் இந்தி மொழியின் புழக்கத்தால் அந்தந்த தாய்மொழிகள் அழிவுக்கு ஆட்பட்டு விட்டன.

தாய்மொழி சிதைந்து போன மாநிலங்களின் தனிப்பெரும் படைப்பாளிகள் என்று பெயர் சொல்லத் தக்கவர்கள் அருகி வருகிறார்கள் அல்லது அற்றே போகிறார்கள்.

ஆனால் செம்மொழியாம் தமிழ் மொழியில் வீறு கொண்ட படைப்பாளிகள் களிறு போல் நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதை இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களுக்கும் எடுத்துச்எடுத்துச் செல்லும். இந்தியாவிற்கு வெளியிலும் எழுதிச் சொல்லும்.

இரை உண்ட முதலை கரையேறி வரும். கரையேறிய முதலை தன் உடலைத் தண்ணீருக்குள் ஆழ்த்திவிட்டு திறந்த வாயை கரையில் வைத்து இளைப்பாறும் .அதன் பற்களின் இடுக்குகளில் சிக்கி இருக்கும் உணவுத் துண்டுகளைப் பறவைகள் கொத்திக் கொத்திப் பசியாறிக் கொள்ளும்.பற்களைச் சுத்திகரித்துக் கொண்ட முதலை மீண்டும் ஆழநீரில் சென்று அமிழ்ந்து விடும்.முதலைகளின் பற்களைச் சுத்தப்படுத்தும் பறவைகளைப் போல என் சொற்களைச் சுத்தப்படுத்தி உள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள் .

அவர்கள் அனைவருக்கும் நன்றி. என் உயிர், உடல் , சமூகம் என்ற முக்கூட்டு வாழ்வில் கவனமாகத் தேடி வருகிறேன்.

மனிதர்கள் வாழாத வாழ்க்கையையும் கேளாத கானங்களையும் மீட்டுக் கொடுக்கும் கலை இலக்கியத்தைச் செழுமைப் படுத்துவதே பிறந்த பயன் என்று பெரும்பயணம் சென்று கொண்டிருக்கிறேன்.

உங்கள் அன்பை யாசிக்கிறேன். என்னிடம் இன்னும் செல்லமாய் நடந்து கொள்ளுங்கள் என்று வெட்கத்தை விட்டுக் கெஞ்சுகிறேன். என்னை உங்கள் வீட்டுத் தேநீருக்கு அழையுங்கள். உங்கள் செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்யுங்கள். உங்கள் தோட்டச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேளையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பூரண வாழ்க்கை வாழ்வதும் மனிதக் கூட்டத்தை வாசிப்பதும் என் கவிதையின் கடப்பாடு . விடைபெறுகிறேன். நன்றி" இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

தமிழச்சி தங்கபாண்டியனுடன்
தமிழச்சி தங்கபாண்டியனுடன்

விழாத் துளிகள்!

பொதுவாக கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கும் போது பார்வையாளர் நெளிவதுண்டு; அசைவற்று அமைதியாக இருந்து கவனிக்கும்போது உறக்கத்தில் கண்கள் செருகுவதுண்டு. இதில் கவனத்தொடர்பு அறுந்து விடாமல் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் வாசிப்பாளர்களின் உரைகள் புது அனுபவமாக இருந்தன.அது மட்டுமல்ல பேசப்பட்ட படைப்புகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்ததும்கூட தங்களைப் பேசுபொருளுடன் தொடர்பு படுத்திக் கொண்டு ரசிப்பதற்குக் காரணமாக இருந்தது எனலாம் .

பொதுவாக ஆய்வுக் கட்டுரை என்பது கறார் தன்மையுடன் இருக்கும் .அதில் அலங்காரச் வார்த்தைகளுக்கு அனுமதி இல்லை.உபரிச் சொற்களுக்கும் உள்ளே இடம் தராது. இங்கே கட்டுரை வாசிக்க வந்தவர்களில் சிலர்,கவிஞர் பற்றிப் புகழ் மொழிகளைப் பேசிக் கட்டுரையை விட்டு வெளியே சென்று வந்தார்கள்.

நேர மேலாண்மை!

வைரமுத்து எப்போதும் நேர மேலாண்மையில் குறியாக இருப்பவர். அதை இந்த விழாவிலும் காண முடிந்தது. ஒரு பேச்சாளர் - கட்டுரையாளர் பேசி முடித்த அடுத்த வினாடிக்குள் பேசியவருக்கு நன்றி கூறி விட்டு அடுத்த அறிவிப்பு வந்துவிடும்.சில விழாக்களில் பேசியவர் விடைபெற்றுப் போய் தனது இருக்கையில் அமரும் வரை நேரத்தை அமைதியாக இருந்து வீணடிப்பார்கள். அப்போது நம்ம கவனத்தில் தொடர்புச் சங்கிலி அறுந்துவிடும். இவ்விழாவில் அது இல்லை.

அந்த அளவிற்குக் கண் கொத்திப் பாம்பாக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தனது கம்பீரக் குரலில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் பேபி சாய்ராமுக்கும் பாராட்டு தெரிவிக்கலாம்.நேரத்தை விரயம் செய்யாமல் அறிவிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தது நல்ல திட்டமிடலின் அடையாளமாகத் தெரிந்தது.

உணவும் உணர்வும்!

மதிய உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆற அமரச் சாப்பிடும் வகையில் ஒரு மணி நேர இடைவேளை. பொதுவாக உணவு பரிமாறும் இடங்களில் மனிதர்களுக்குள் எங்கிருந்து வருகிறதோ அப்படி ஒரு அவசரம், பதற்றம் வந்து விடும், முண்டியடிப்பார்கள். ஆனால் அது அங்கே இல்லை.பதற்றமின்றி வரிசை பேணப்பட்டது. அது மட்டுமல்ல அனைவரும் தாராள உணவு உண்ட பிறகும் கூட தாராளமாக மீதம் இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னணி முகங்களைப் பங்கேற்பாளர்களுக்குப் பரிசளிக்க வைத்து அவர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக்கினார் வைரமுத்து.

அந்த வகையில் தொழில் அதிபர்கள் நல்லி குப்புசாமி, ராம்ராஜ் காட்டன் ராம்ராஜ்,வசந்த பவன் ரவி, ரஞ்சித் குமார்,சங்கர மாரிமுத்து,தஞ்சாவூர் மகாராஜா ஆசிப் அலி,வெற்றிவேல்,வெற்றித் தமிழ் பேரவை வி. பி. குமார்,பாண்டிச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து,ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன்,நீதிபதி நாகமுத்து,துணைவேந்தர் திருவாசகம், ஒளவை அருள் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

கருத்தரங்கத்தில்
கருத்தரங்கத்தில்

திரையில் ஒளிர்ந்த ஓவியங்கள்!

கிடைத்த தேநீர், உணவு இடைவேளைகளில் பங்கேற்பாளருடன் பார்வையாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது 'உவப்பத் தலைக்கூடிய' அனுபவம். கால மாற்றத்தை தனது படைப்புகளில் மட்டுமல்ல விழாக்களிலும் வெளிப்படுத்துபவர் வைரமுத்து .அதை இதில் நேரடி சாட்சியாக உணர முடிந்தது.

ஒவ்வொரு தலைப்பிற்கான கட்டுரை வாசிக்கும் போதும் அந்தத் தலைப்புகளுக்கு ஏற்ற வகையில் மேடையின் பெரிய திரையில் சார்ந்த ஓவியங்கள், பெரும்பாலும் ஏ ஐ ஓவியங்கள் வந்து கொண்டே இருந்தது நல்ல காட்சி அனுபவம் மட்டுமல்ல, நல் தொழில்நுட்ப நேர்த்தியும் கூட.அது மட்டுமல்ல இந்த விழாவில் பங்கேற்பாளர்கள் ப்ராம்ப்டிங் முறையில் எதிரே தெரியும் மின் திரையில் வரும் வரிகளை பார்த்துக் கட்டுரை வாசிப்பது இருவர் மூலம் மட்டும் சாத்தியப்படுத்தப்பட்டது. பிறருக்கு அந்த தொழில்நுட்பம் ஒத்திசையின் மீது பரிச்சயம் இல்லாததால் அவரவரும் தாங்களாகவே வந்து வாசித்தார்கள். எதிரே கணினித் திரை பார்த்துப் பேசுவதால் பார்வையாளர்களுடன் நேரடித் தொடர்பு அற்றுப் போய்விடும் என்று சிலருக்கு தயக்கம் இருந்திருக்கக் கூடும்.அதற்கான முன் தயாரிப்பும் முன் அனுபவமும் ஒத்திகையும் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பரிசுப் பைகள்!

விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள அழைக்கப் பட்டவர்களுக்கு, அணிந்து கொள்ள முறையாகப் பெயர் அச்சிடப்பட்ட உரிய அடையாள அட்டையுடன் அன்பளிப்பாக அழகானதொரு பையும் வழங்கப்பட்டது. அந்த பையில் குறிப்புகள் எடுக்கும் வகையிலான குறிப்பேடு, பேனா, வைரமுத்துவின் ஒரு படைப்பு நூல் போன்றவை இருந்தன.

இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் வடிவமைப்பு,பங்கேற்பு, வெளிப்பாடு, விளம்பர வெளிச்சம் ,எதிர்வினைகள் என்று தோற்றத்தின் அளவில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் .இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்ம் பூரணத்துவம் கொண்டதாக முழுமை பெற்றுள்ளதா? அரங்கில் வைரமுத்துவின் படைப்புகள் அனைத்தும் அலசப்பட்டனவா? படைப்புகள் அனைத்தும் அவற்றின் அடியாழம் வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த வகையில் இது முழுமையானது என்று கூற முடியாது.இந்த நோக்கில் பார்த்தால் தொடர் செயல்பாட்டுக்கான ஒரு முன்னெடுப்பு முயற்சி என்ற அளவில் நிற்கிறது.

இந்தக் கருத்தரங்கத்தில் இடம்பெறாத படைப்புகளும் உண்டு; இடம்பெறாத தலைப்புகளும் உண்டு;இடம் பெறாத கோணங்களும் ஏராளம் உண்டு;நோக்க விரும்பும் பார்வைகளும் உண்டு. இந்தக் கூற்றைக் கூட கவிஞரின் படைப்புலக விசாலத்தைக் குறிப்பதாக நேர்நிலையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விழாவினை கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் மு. வேடியப்பன் ஒருங்கிணைத்து இருந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com